Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   04  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 4 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே!

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 18: 9-10,14b,24-25a,30-19: 3

அந்நாள்களில் அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதைமீது ஏறி வந்து கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது. இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று, "இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன்" என்று கூறினான். யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார். அப்போது தாவீது இரு வாயில்களுக்கும் இடையே அமர்ந்து கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச் சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடிவருவதைக் கண்டான். காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், "தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது" என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துகொண்டிருந்தான். அரசர் அவனை நோக்கி, "விலகி, அங்கே நில்" என்று கூற, அவனும் விலகி நின்றான். அப்போது கூசியனும் வந்து, "என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்" என்று கூறினான். "இளைஞன் அப்சலோம் நலமா?" என்று அரசர் வினவ, கூசியன், "என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உமக்கு எதிராகத் தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப்போல் ஆவார்களாக!" என்றான். அப்போது அவர் அதிர்ச்சியுற்று, "என் மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே!" என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார். அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. "அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்" என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று. போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப் போன்று, அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: திபா 86:11a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்.

1ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.
2என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். - பல்லவி

3என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
4உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். - பல்லவி

5ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
6ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (மத் 8: 17)

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்

++சிறுமியே! உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு. 


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், `என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!'' என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்'' என்றார். அதற்கு, `சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது'' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 சாமுவேல் 18: 9-10, 14b, 24-25a, 319:3

"அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக்கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான்"


நிகழ்வு


அமெரிக்காவைச் சார்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி. ஒருமுறை இவர் வானூர்தியில் பயணம் செய்ய நேர்ந்தது. அவ்வாறு இவர் பயணம் செய்ய நேர்ந்தபொழுது சீட் பெல்ட் அணியாமல் இருந்தார். அதைப் பார்த்துவிட்டு அந்த வானூர்தியில் இருந்த பணிப்பெண் ஒருவர் இவரிடம், "தயவுசெய்து சீட்பெல்ட் அணிந்துகொள்ளுங்கள்" என்றார்.

உடனே முகம்மது அலி அவரிடம், "நான் ஒரு சூப்பர்மேன். என்னால் சீட்பெல்ட் எல்லாம் அணிந்துகொள்ள முடியாது" என்றார். அதற்குக் அந்தப் பணிப்பெண், "நீங்கள் சூப்பர்மேனாக இருக்காலம். ஆனால், நீங்கள் சீட்பெல்ட் அணியாவிட்டால், உங்களால் இந்த வானூர்தியில் பயணம் செய்ய முடியாது" என்று கட்டிப்பாய்க் கூறினார். அதன்பிறகே முகம்மது அலி சீட்பெல்ட் அணிந்துகொண்டு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.

பல நேரங்களில் நாம் "எவ்வளவு பெரிய ஆள் நான்", "எல்லாம் தெரிந்தவன் நான்" என்று ஆணவத்தோடு அகங்காரத்தோடும் இறுமாப்போடும் இருக்கின்றோம். ஆனால் அந்த ஆணவமும் அகங்காரமும் இறுமாப்பும் தலைக்கனமுமே நம்முடைய அழிவுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது என்பதை நாம் மறந்துவிடுகின்றோம். இன்றைய முதல் வாசகம் தலைக்கனத்தால் அழிந்துபோன அப்சலோமைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தலைக்கனத்தோடு அலைந்த அப்சலோம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அப்சலோம் தன் தந்தையான தாவீது அரசரைக் கொல்வதற்கு வழி தேடியலைந்து கொண்டிருப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த அப்சலோம் எப்படிப்பட்டவன் என்பதை 2 சாமுவேல் 14: 25-26 மிக அழகாகப் பதிவு செய்கின்றது. இஸ்ரயேலில் புகழ்பெற்ற அழகனாக... உச்சி முதல் உள்ளங்கால் வரை எந்தவொரு குறையுமில்லாதவனாக அப்சலோன் விளங்கினான். இது அவனுடைய உள்ளத்தில் ஒருவிதமான இறுமாப்பை, தலைக்கனத்தை ஏற்படுத்தியிருக்கும். இதனால்தான் என்னவோ அவன் தன்னுடைய தந்தை தாவீதை அரச பதவியிலிருந்து தூக்கிவிட்டு, தன்னை அரசனாக்கிக் கொள்கின்றேன். ஏன் தன்னுடைய தந்தையையே கொல்வதற்கு வழிதேடுகின்றான்.

இன்றைய முதல் வாசகத்திலோ அவன் தன் தந்தையைக் கொல்வதற்காக ஒரு கோவேறுக் கழுதைமீது அமர்ந்துகொண்டு, அடர்த்தியான கிளைகளைக் கொண்ட கருவாலி மரத்தின் அடியில் வந்துகொண்டிருக்கின்றான். அப்பொழுது ந்தக் கருவாலி மரத்தின் கிளைகளுக்குள் சிக்கிக்கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் தொங்குகின்றான். இதைப் பார்க்கின்ற வீரன் ஒருவன், செய்தியை யோவாபிடம் சொல்ல, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் மார்பில் மூன்று ஈட்டிகளைப் பாய்ச்சி அவனைக் கொன்றுபோடுகின்றான்.

இங்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே அப்சலோம் தொங்கிக்கொண்டிருந்ததை ஓர் உருவகமாகக் கொள்ளலாம். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அப்சலோம் கருவாலி மரத்தின் கிளைகளுக்கு இடையே தலைமாட்டிக் கொண்டு உயிர்துறந்ததை அவன் தன்னுடைய ஆணவத்தால் உயிர்துறந்தான் என்று சொல்லலாம். திருவிவிலியம், மரத்தில் தொங்கியவனை கடவுளால் சபிக்கப்பட்டவன் (இச 21: 22-23) என்று கூறுகின்றது. அப்சலோம் தன்னுடைய ஆணவத்தால், கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்ட தாவீதைக் கொல்ல நினைத்தான். அதனால்தான் அவனுக்கு இப்படியோர் அழிவு ஏற்படுகின்றது.

அப்சலோமுக்காக வருந்திய தாவீது

அப்சலோம் கொல்லப்பட்ட பிறகு, அவன் கொல்லப்பட்ட அல்லது இறந்துபோன செய்தி தாவீதிடம் சொல்லப்படுகின்றது. தாவீது தன்னைக் கொல்ல நினைத்த அப்சலோம் இறந்துபோன செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடையவில்லை. மாறாக வருந்தி அழுகின்றார். "புத்திர சோகம் மிகக் கொடியது" என்று சொல்வார்களே, அதுதான் தாவீதின் வாழ்க்கையிலும் நடக்கின்றது. தாவீது தன் மகன் அப்சலோம் இறந்துபோன செய்தியைக் கேள்விப்பட்டு, தனக்கு வெற்றி கிடைத்துவிட்டது என எண்ணாமல் அவனுக்காக வருந்தி அழுகின்றார். இதனால் வெற்றி துக்கமான ஒரு நிகழ்வாக அமைந்துவிடுகின்றது.

அப்சலோம் யோவாபால் கொல்லப்பட்டது, நாத்தான் தாவீது அரசரிடம் கூறிய வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. தாவீது அரசர் உரியாவின் மனைவியோடு தவறுசெய்ததால், உரியாவுக்கும் தாவீதுக்கும் இடையே பிறக்கும் குழந்தை இறந்துபோகும் என்றும் அவருடைய மகன்கள் கொல்லப்படுவார்கள் என்று நாத்தான் இறைவாக்கினரால் சொல்லப்பட்டது. அதுபோன்றே தாவீது அரசருடைய வாழ்வில் நடக்கின்றது. ஆம், தினை விதைத்தால், தினையை அறுவடை செய்யலாம். வினையை விதைத்தால், வினையைத்தானே அறுவடை செய்தாக வேண்டும்.

சிந்தனை

"இறுமாப்போடு இருப்பவன் தமதிருத்துவத்திலும் இடம் கேட்பான்" என்பார் மார்க் ட்வைன் என்ற எழுத்தாளர். ஆம், இறுமாப்போடு இருக்கின்றவன் தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தோடு இருந்து இறுதியில் அப்சலோமைப் போன்று அழிந்து போவான். ஆகையால், நாம் நம்மிடமிருந்து இறுமாப்பினை அகற்றி, இறைவனுக்கு முதன்மையான இடம் தந்து, மனத்தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 5: 21-43

"அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர்"

நிகழ்வு

நகரில் இருந்த பிரபலமான கல்லூரி அது. புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் அந்தக் கல்லூரில் மாணவர்களின் சேர்க்கை மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. பலர் சமூகத்தில் பெரிய பெரிய பதவிகளில் இருந்தவர்களிடமிருந்து சிபாரிசுக் கடிதங்களை வாங்கிக்கொண்டு அந்தக் கல்லூரி முதல்வரைப் பார்க்கச் சென்றார்கள். அவர்களிடமிருந்து அந்த சிபாரிசுக் கடிதங்களை வாங்கிக்கொண்ட கல்லூரி முதல்வர், அவர்கள் போனபின்பு அவற்றையெல்லாம் கிழித்துக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டார்.

இதற்கு நடுவில் அந்தக் கல்லூரி முதல்வரைச் சந்திக்க ஏழை மாணவன் ஒருவன் வந்தான். அவன் யாரிடமிருந்தும் எந்தவொரு சிபாரிசுக் கடிதமும் வாங்கி வரவில்லை. மாறாக, அவன் தன்னைப் பற்றி ஒரு குறிப்பினை மட்டும் எழுதிக்கொண்டு வந்து, அதைக் கல்லூரி முதல்வரிடம் கொடுத்தான். அதை வாங்கிப்படித்த கல்லூரி முதல்வர் மிகவும் வியந்துபோனார்.

பின்னர் அவர் அந்த மாணவனை சிறிதுநேரம் வெளியே இருக்குமாறு சொல்லிவிட்டு, தனக்கு முன்பாக அமர்ந்திருந்த தன்னுடைய நெருங்கிய நண்பரிடம், "நண்பா! இந்த மாணவனை இரண்டு காரணங்களுக்காகக் கல்லூரில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்று, இவன் சிபாரிசுக் கடிதத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தன்மீது நம்பிக்கை வைத்து வந்திருக்கின்றான். இரண்டு, இவன் "திறமையான மாணவர்களுக்கு இந்தக் கல்லூரி நிர்வாகம் மதிப்பளிக்கும்" என்று இந்தக் கல்லூரி நிர்வாகத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றான். இந்த இரண்டு காரணங்களுக்காக இவனை இந்தக் கல்லூரியில் எடுத்துக்கொள்ளவேண்டும்" என்றார்.

இதற்கு கல்லூரியின் முதல்வருடைய நண்பர், "நீங்கள் சொல்வது மிகச் சரி. கட்டாயம் இந்த மாணவனை கல்லூரியில் சேர்த்துக்கொள்ளவேண்டும்" என்றார். உடனே வெளியே இருந்த மாணவன் உள்ளே வரவழைக்கப்பட்டு, கல்லூரில் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

இந்த நிகழ்வில் வரும் ஏழை மாணவன் தன்மீதும் தனக்குக் கல்வியளிக்கவிருந்த கல்லூரி நிர்வாகத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான். அந்த நம்பிக்கையே அவன் அந்தப் பிரபலமான கல்லூரியில் படிப்பதற்குக் காரணமாக அமைந்தது. நற்செய்தியில் நம்பிக்கையினால் நலம்பெற்ற இருவரைக் குறித்துப் படிக்கின்றோம். அவர்களுடைய நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தது? அந்த நம்பிக்கை இயேசுவிடமிருந்து எப்படி ஆசியைப் பெற்றுத்தந்தது? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யாயிர் மற்றும் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கை

மாற்கு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் இரண்டு மனிதர்களைக் குறித்து வாசிக்கின்றோம். ஒருவர் தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவராகிய யாயிர், இன்னொருவர் பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இந்த இரண்டு பேரிடமும் இருந்த ஆழமான நம்பிக்கையைக் குறித்து நாம் நிச்சயம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

யூத சமூகத்தில் தொழுகைக்கூடத் தலைவர் என்றால், ஓர் உயரிய பதவி. அப்படிப்பட்ட பதவியில் இருந்தவர் இயேசுவிடம் வந்து, அவருடைய காலில் விழுந்து, சாகும் தருவாயில் இருக்கும் தன் மகள்மீது கையை வைத்தால், அவள் பிழைத்துக்கொள்வாள் என்று சொல்வதெல்லாம் நம்பிக்கையின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கடுத்து, அவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவருடைய மகள் இறந்துவிட்ட செய்தியைச் சொன்னபோது, இயேசு அவரிடம், "நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று சொல்கின்றபொழுதும் அவர் நம்பிக்கையோடு இருக்கின்றார்.

நற்செய்தியில் நாம் சந்திக்கின்ற இரண்டாவது மனிதர் அல்லது மனுஷி இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, இவர் "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்ற நம்பிக்கையோடு தொடுகின்றார். இயேசுவின் ஆடையைத் தொட்டால் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் நடுவில் இருந்தது (மாற் 6: 56; திப 19: 11-12). இதை அறிந்தவராய் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, இயேசுவின் மேலுடையைத் தொடுக்கின்றார். நலம் பெறுகின்றார்.

நம்பினோருக்கு நலமளிக்கும் இயேசு

யாயிர் மற்றும் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணியின் நம்பிக்கையைக் கண்டு இயேசு யாயிரின் மகளை உயிர்த்தெழச் செய்கிறார்; இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நலமளிக்கின்றார். இறந்த ஒருவரைத் தொடுவதாலும் இரத்தப்போக்கோடு இருக்கின்ற ஒரு பெண்மணியைத் தொடுவதாலும் ஒருவர் தீட்டுப்பட்டவராகின்றார் (லேவி 15: 19-28) என்று மோசேயின் சட்டம் கூறியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இயேசு நம்பிக்கையோடு இருப்பவர்கள் நலம்பெறவேண்டும் என்பதையே பெரிதாகக் கருதி அவர்களுக்கு நலமளிக்கின்றார்.

நற்செய்தியில் வருகின்ற இந்த இரண்டு மனிதர்களின் நம்பிக்கையைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்த நாம், நம்முடைய நம்பிக்கை எப்படிப்பட்தாக இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக இருக்கமுடியாது" (எபி 11: 6) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!