Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   03  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 4 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++தப்பி ஓடுவோம்; இல்லையேல் அப்சலோமிடமிருந்து தப்ப முடியாது.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 15: 13-14, 30;16: 5-13a

அந்நாள்களில் தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, "அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்" என்று கூறினான். தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், "வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்" என்றார். தாவீது அழுதுகொண்டே ஒலிவ மலை ஏறிச் சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடு இருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச்சென்றனர். தாவீது பகூரிம் வந்தபோது, சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான் . அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும், எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள் மீதும் கல்லெறிந்தான். சிமயி பழித்துக் கூறியது: ``இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ! நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்." அப்போது செரூயாவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, "இச்செத்த நாய் என் தலைவராம் அரசரைப் பழிப்பதா? இதோ நான் சென்று அவனது தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதி தாரும்" என்றான். அதற்கு அரசர், "செரூயாவின் மக்களே! இதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒருவேளை "தாவீதைப் பழி!" என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், "இவ்வாறு நீ ஏன் செய்தாய்?" என்று யார் சொல்ல முடியும்" என்றார். மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: "இதோ! எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார். ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தைக் காண்பார். இன்று அவன் பழித்துப் பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்." தாவீது தன் ஆள்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 3: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 7a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எழுந்தருளும்; என்னை மீட்டருளும்.

1ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்!

2"கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்" என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். - பல்லவி

3ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலை நிமிரச் செய்பவரும் நீரே.

4நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். - பல்லவி

5நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.

6என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.

7aஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 7: 16)

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ. 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20


அக்காலத்தில் இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார். அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, ``இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்'' என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், ``தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ'' என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், ``உம் பெயர் என்ன?'' என்று கேட்க அவர், ``என் பெயர் `இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்'' என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார். அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. ``நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்'' என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, ``உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்'' என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 சாமுவேல் 15: 13-14, 30, 16: 5-13a

அரசியலில் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்


நிகழ்வு


சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கால்நடையாகவே அமெரிக்காவைச் சுற்றி வந்தான். இத்தகையதோர் அரிய சாதனை அவன் நிகழ்த்தி முடித்ததும், ஒருசில செய்தியாளர்கள் அவனிடம் சென்று, அவனை நேர்காணல் செய்தார்கள். அப்பொழுது ஒரு செய்தியாளர் அவனிடம், "அமெரிக்காவைக் கால்நடையாகவே சுற்றி வந்திருக்கின்றீர்கள். இவ்வளவு பெரிய சாதனை செய்திருக்கும் உங்களுக்கு உங்களுடைய இந்த பயணத்தின்பொழுது எது சவாலாக இருந்தது? ஆற்றைக் கடந்து சென்றதா...? அல்லது தங்குவதற்கான இடமா...?" என்றார்.

"என்னுடைய இந்தப் பயணத்தின்போது ஆற்றைக் கடந்து செல்வது எனக்குச் சவாலாக இல்லை. ஏனென்றால் ஆங்காங்கே பாலங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றின் வழியாக நான் ஆற்றைக் கடந்து சென்றேன். என்னுடைய பயணத்தின்போது தங்குவதற்கான இடம்கூட எனக்குச் சவாலாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆங்காங்கே தங்குவதற்கான இடம் இருந்தது. அதில் நான் தங்கி என்னுடைய பயணத்தைத் தொடர்ந்தேன். ஆனால், என்னுடைய இந்தப் பயணத்தின்பொழுது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, என்னுடைய காலணிக்குள் மாட்டிக்கொண்ட மணல்துகள்கள்தான்" என்றான் அந்த இளைஞன்.

"என்ன...! மணல்துகள்கள்தான் உங்களுடைய பயணத்தின்போது உங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததா...? மிகச்சிறிய மணல்துகள்கள் எப்படி உங்களுடைய பயணத்தின்போது உங்களுக்குச் சவாலாக இருந்தன என்று சொல்ல முடியுமா...?" என்றார் ஒரு செய்தியாளர். உடனே அந்த இளைஞன் பேசத் தொடங்கினான். "மணல்துகள்கள் அளவில் சிறியதுதானே...! அது எப்படி என்னுடைய பயணத்தின்பொழுது மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அந்தச் சிறிய மணல்துகள் என்னுடைய காலணிக்குள் புகுந்து, நான் தொடர்ந்து செல்ல முடியாமல், உள்ளே இருந்து என்னுடைய கால்களைப் காயப்படுத்திக்கொண்டே இருந்தன. அதனால்தான் என்னுடைய காலணிக்குள் புகுந்த மணல்துகள்கள் என்னுடைய பயணத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தன என்று சொன்னேன்" என்றான்.

நாம் செய்யக்கூடிய ஒருசில செயல்கள் - தவறுகள் சிறியவைதானே... இதனால் என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால், அந்தச் சிறிய செயல்கள், தவறுகள் நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தாவீது உரியாவின் மனைவியான பெத்செபாவோடு தவறு செய்தார். அவர் அந்தத் தவற்றினைச் செய்யும்பொழுது, இதெல்லாம் ஒரு தவறா என்று நினைக்கக்கூடும். ஆனால், அந்தத் தவறே அவருடைய வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இன்றைய முதல் வாசகம், தவறு செய்த தாவீதுக்கு என்ன நடக்கின்றது என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எருசலேமிலிருந்து தப்பியோடிய தாவீது

தாவீது உரியாவின் மனைவி பத்சேபாவோடு தவறு செய்த பிறகு, அவருக்கு என்னவெல்லாமோ நடக்கின்றது. குறிப்பாக அவருடைய மகனாலேயே அவருக்கு ஆபத்து வருகின்றது. தாவீதின் மகன் அம்சலோம் அவரைக் கொல்வதற்கு வழிதேடியதும், அவர் எருசலேமிலிருந்த அனைத்து அலுவலரோடு சேர்ந்து, எருசலேமை விட்டு தப்பி ஓடுகின்றார். மிகப்பெரிய அரக்கனாகிய கோலியாத்தை "ஒரு கை பார்த்தவர்", போர்களத்தில் எதிரிகளைக் கொன்று குவித்தவர், தன்னுடைய மகனுக்கு அஞ்சி, எருசலேமை விட்டுத் தப்பி ஓடுவது நமக்கு மிகவும் வியப்பாக இருக்கின்றது. என்ன செய்வது...! உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடித்துத்தானே ஆகவேண்டும்!

சிமயியால் பழித்துப் பேசப்பட்ட தாவீது

தன்னைக் கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்த அப்சலோமிடமிருந்து தப்பி ஓடிவரும் தாவீதையும் அவரோடு இருந்தவர்களையும் சவுலின் குடும்பத்தைச் சார்ந்த சியமி பழைத்துரைக்கின்றான். மட்டுமல்லமால், அவன் அவர்கள்மீது கற்களை எறிகின்றான். இவ்வாறு செய்கின்ற சியமி என்பவனை தாவீது எதுவுமே செய்யாமல், "ஆண்டவர் அவனைத் தூண்டியுள்ளார்" என்று அவன் சொல்வதையும் செய்வதையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். இவையெல்லாம் நமக்கு வியப்பாக இருக்கின்றது. ஆம், ஓர் அரசர் சாதாரண ஒரு மனிதன் தன்னைப் பழித்துரைப்பதையும் தன்மீது கற்களை எறிவதையும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா...? இருக்க மாட்டார்தானே...? ஆனால், தாவீது எதுவும் செய்யாமல் இருந்தார். அவர் செய்த பாவம் அவரைத் துன்பங்களுக்கு மேல் துன்பங்களை அனுபவிக்க வைத்தது.

"அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்" என்று சிலப்பதிகாரத்தில் ஒரு வரி வரும். இதனுடைய பொருள் அரசர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு அறமே தண்டனை தரும் என்பதாகும். மிகப்பெரிய பொறுப்பில் இருந்த தாவீது தவறு செய்தார். அதற்கான தண்டனையை தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்தார். ஆகவே, நாம் யாராக இருந்தாலும் சிறு தவறு தானே என்று தவறு செய்யாமல், இறைவனுக்கு உகந்த வழியில் வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"உங்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பேன்" (திவெ 2: 23) என்பார் ஆண்டவர். ஆகையால், தீயவற்றை நாடித் தேடாமல், நல்லவற்றை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 5: 1-20

மறுவாழ்வு தரும் இயேசு

நிகழ்வு


அது ஒரு நகர்புறப் பங்கு. அப்பங்கில் இருந்த பங்குத்தந்தை ஒருநாள் தன்னுடைய பங்கு மக்களில் ஒருவர் புதிதாகக் கட்டியிருந்த வீட்டை மந்திரிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தார். அவ்வாறு செல்லும் வழியில், ஒரு மளிகைக்கடை இருக்கக் கண்டார். அம்மளிகைக்கடையை நடத்தி வந்தவரும் ஒரு கிறிஸ்தவர்தான். மளிகை;கடை வழியாக பங்குத்தந்தை பலமுறை சென்றிருந்தாலும் அதனுள் சென்றதுமில்லை; கடைக்காரரிடம் பேசியதுமில்லை. அன்றைக்கு அவருக்கு மளிகைக்கடைக்கு உள்ளே சென்று, கடைக்காரரிடம் பேசவேண்டும் என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. ஆதலால் அவர் கடைக்கு உள்ளே சென்று கடைக்காரிடம் பேசத் தொடங்கினார். முதலில் வழக்கமான விசாரிப்புகளோடு தொடங்கிய பங்குத்தந்தையின் பேச்சு அப்படியே கடவுளின் அன்பு, இரக்கம், மீட்பு ஆகியவற்றிற்குத் தாவியது. பங்குத்தந்தை திருவிவிலியத்திலிருந்து பல இறைவார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசியதைக் கேட்டதும் அந்த மளிகைக் கடைக்காரர் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.

"சுமாமி! எங்களுடைய முன்னோர் என்ன பாவம் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை இந்தப் பங்கிற்கு வரக்கூடிய பங்குத்தந்தையர்கள் யாரும் எங்களுடைய குடும்பத்தோடு பேசுவதுமில்லை; உறவு வைத்துக்கொள்வதுமில்லை. எனக்கு இப்பொழுது அறுபது வயதாகின்றது. எனக்கு விவரம் தெரிந்து இந்தப் பங்கிற்கு வந்த எந்தப் பங்குத்தந்தையும் எங்கள் குடும்பத்திலிருக்கின்ற யாரோடும் பேசியதில்லை; உறவும் வைத்துக்கொண்டதுமில்லை. முதன்முதலாக நீங்கள்தான் என்னோடு பேசியிருக்கின்றர்கள். அதுவும் திருவிவிலியத்திலிருந்து நீங்கள் அளித்த விளக்கம் என்னுடைய உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது. அது என்னுடைய வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்தது போன்று இருக்கின்றது. இனிமேல் நான் என்னுடைய குடும்பத்தாரோடு சேர்ந்து கோயிலுக்கு வருவேன். யார் என்ன சொன்னாலும் அது பற்றிக் கவலைப்படமாட்டேன்" என்றார்.

அந்த மளிகைக் கடைக்காரர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்துபோன பங்குத்தந்தை, "ஓர் ஆன்மாவை ஆண்டவருக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட்டோம்" என்ற மகிழ்ச்சியில் புதிய வீட்டை மந்திரிக்கக் கிளம்பிச் சென்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற பங்குத்தந்தை எப்படி ஓர் ஆன்மாவை மீட்டு ஆண்டவருக்குள் கொண்டுவந்து சேர்த்து, அதன்மூலம் அவருக்கு மறுவாழ்வு அளித்தாரோ, அதுபோன்று இன்றைய நற்செய்தியில் இயேசு ஒருவருக்கு புது வாழ்வு அளிக்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கல்லறைகளில் வாழ்ந்த வந்த மனிதர்

நற்செய்தியில் இயேசுவும் அவருடைய சீடரும் அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வருகின்றபொழுது, தீய ஆவிகள் பிடித்திருந்த ஒருவரைச் சந்திக்கின்றார்கள். மாற்கு நற்செய்தியாளர் அந்த மனிதரைப் பற்றி விவரிக்கின்றபொழுது, அவர் எந்த மனிதராலும் அடக்க முடியாதவராய், சங்கிலியால் கட்டிவைக்கப்பட முடியாதவராய், தீய ஆவிகளின் பிடிக்கு உட்பட்டவராய், கல்லறைகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்தார் என்று குறிப்பிடுகின்றார். அப்படியானால் அவர் மனிதத்தன்மையே இல்லாதவராய் வாழ்ந்து வந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்டவர் இயேசுவைச் சந்தித்ததும், "என்னை வதைக்க வேண்டாம்" என்கிறார். இதன்பிறகு என்ன நடந்தது என்பதைத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தீய ஆவிகள் விரட்டியடிக்கப்படல்

தன்னை வதைக்கவேண்டாம் என்ற சொன்ன அந்த மனிதரைப் பார்த்து இயேசு, "தீய ஆவியே இந்த மனிதரை விட்டுப் போ" என்கின்றார். இதற்குப் பின்னர் தீய ஆவிகள் இயேசுவைக் கெஞ்சிக் கேட்டதன் படி அவர் அவற்றைப் பன்றிக்கூட்டத்தினுள்ளே அனுப்பி வைக்கின்றார். அவையோ பன்றிகளுக்குள் புகுந்து செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் விழுந்து மூழ்கி இறந்துபோகின்றன. இங்கு நமக்கு முன் ஒரு கேள்வி எழலாம். அது என்னவெனில், ஒரு மனிதருக்காக இயேசு ஏன் இரண்டாயிரம் பன்றிகள் இறக்கக் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி. இயேசுவுக்கு விலங்குகளை விடவும் மனிதர் பெரிதாகப்பட்டார். அதனாலேயே அவர் அப்படிச் செய்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

தீய ஆவிகள் பிடித்திருந்தவர் புது மனிதராய் மாறுதல்

இயேசு, தீய ஆவிகள் பிடித்திருந்த மனிதரிடமிருந்து அத்தீய ஆவிகளை பன்றிகளுக்குள் அனுப்ப, அவை செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் விழுந்து இறந்துபோனத் தொடர்ந்து, அவற்றிற்குச் சொந்தக்காரர்கள் ஊர்களுக்குச் சென்று மக்களைக் கூட்டி வரும்பொழுது, தீய ஆவிகள் பிடித்திருந்த மனிதர் ஆடையணிந்து அறிவுத் தெளிவுவுடன் இருப்பதைக் கண்டு அச்சமுறுகின்றார்கள். இதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை அங்கிருந்து போகச் சொன்னாலும்கூட, இயேசு அந்த மனிதருக்குத் தந்த புது வாழ்வு நமக்கு கவனத்திற்கு உரியது. ஆம், இயேசு தீய ஆவிகள் பிடித்திருந்த மனிதருக்கு எப்படிப் புது வாழ்வினை அளித்தாரோ அதுபோன்று நம் ஒவ்வொருவருக்கும் புது வாழ்வு அளிக்க வருகின்றார். நாம் அவரிடம் நம்மை ஒப்படைத்து வாழ்ந்தோமெனில் புது வாழ்வினைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது உறுதி.

சிந்தனை

"நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" (யோவா 10:10) என்பார் இயேசு. ஆகையால், இயேசு தரும் வாழ்வினைப் பெற்றவர்களாய், புதுவாழ்வு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!