Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   01  பிப்ரவரி 2020  
    பொதுக்காலம் 3 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7a.10b-17

அந்நாள்களில் ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: "ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்." உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார். அப்போது நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வரவழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப்பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்" என்று கூறினார். அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்" என்று சொன்னார். பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது. தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக் கிடந்தார். அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பம் இல்லை. அவர்களோடு அவர் உண்ணவும் இல்லை.


ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 51: 12-13. 14-15. 16-17 (பல்லவி: 10a) Mp3
=================================================================================
பல்லவி: தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே, கடவுளே! படைத்தருளும்.

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். - பல்லவி

14கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.

15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 3: 16)

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41


அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ""அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, ""ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 சாமுவேல் 12: 1-7a, 10b-17

"நீயே அம்மனிதன்"

நிகழ்வு

ஒருநாள் மாவீரன் அலெக்சாண்டரிடம், படைவீரன் ஒருவன் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக புகார் ஒன்று வந்தது. அவர் அதை விசாரித்துப் பார்த்தபொழுது அது உண்மையெனவும் தெரிந்தது.

உடனே அவர் குறிப்பிட்ட அந்தப் படைவீரனை அழைத்து விசாரணை நடத்தத் தொடங்கினார். "உன்மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்தக் குற்றச்சாட்டை ஒத்துக்கொள்கின்றாயா...?" என்றார் அலெக்சாண்டர். "ஆம். நான்தான் இந்தக் குற்றத்தைச் செய்தேன் என்று ஏற்றுக்கொள்கின்றேன்" என்றான் படைவீரன். சிறிதுநேரம் அமைதியாக இருந்த அலெக்சாண்டர் மீண்டுமாக அவனிடம், "உன்னுடைய பெயர் என்ன?" என்றார். "அலெக்சாண்டர்" என்று அந்தப் படைவீரன் சொன்னதும், ஒரு வினாடி ஆடிப் போய்விட்டார் அலெக்சாண்டர்.

பின்னர் அவர் அந்தப் படைவீரனிடம், "ஒன்று, "அலெக்சாண்டர்"என்ற உன்னுடைய பெயரை மாற்றி வேறொரு பெயர் வை. இல்லையென்றால் இதுபோன்ற தவற்றினைச் செய்யாதே! அலெக்சாண்டர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இப்படித் தவறு செய்வது எனக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றது" என்று சொல்லி அவனை எச்சரித்து அனுப்பி வைத்தார்.


இந்த நிகழ்வில் வருகின்ற படைவீரனைப் போன்று நாமும் கிறிஸ்தவன்/கிறிஸ்தவள் என்ற பெயருக்கு ஏற்ப வாழாமல், பாவத்தில் உழன்றுகொண்டிருக்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில், பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழாமல், பாவம் செய்த தாவீது அரசரைக் குறித்து வாசிக்கின்றோம். தாவீது செய்த தவறு என்ன? அவர் எப்படித் தன்னுடைய தவற்றை உணர்ந்து மனம்வருந்தினார்? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


தாவீதின் தவற்றைச் சுட்டக்காட்டிய நாத்தான்


தாவீது அரசர் உரியாவின் மனைவியான பத்சேபாவோடு தவறு செய்கின்றார். அந்தத் தவற்றினைச் செய்த பிறகு அவர் ஆறு மாதங்கள் எதுவுமே நடக்காது போல் காட்டிக்கொள்கின்றார் அல்லது அந்த தவற்றினை மறைப்பதற்கு முயற்சி செய்கின்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாத்தான் இறைவாக்கினர் அவரிடம் வந்து, மிகவும் நேர்த்தியாகப் பேசி, அவர் செய்த தவற்றினை அவரிடம் சுட்டிக்காட்டி, அவருடைய குற்றத்தை உணர வைக்கின்றார்.


நாத்தான் இறைவாக்கினர் ஏற்கெனவே, தாவீது அரசர் ஆண்டவருக்காகக் கோயில் கட்ட நினைத்தபொழுது, ஆண்டவரின் விருப்பத்தை அவரிடம் எடுத்துச் சொல்வார் (2 சாமு 7). இப்பொழுது அவர் தாவீது உரியாவின் மனைவியோடு தவறு செய்தபொழுது, அந்த தவற்றினை மிகவும் நேர்த்தியாக அவரிடம் எடுத்துக்கூறுகின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது செய்த தவற்றினை அவரிடம் சுட்டிக்காட்டிவதற்குப் பயன்படுத்துகின்ற செல்வந்தர், ஏழை, அந்த ஏழையிடம் இருந்த ஆட்டுக்குட்டி பற்றிய உவமைக் கதை மிகவும் கவனிக்கத்தக்கது. ஒரு காலத்தில் தாவீது ஆடுமேய்த்துக்கொண்டிருந்தவர் என்பதால், அவருடைய தவற்றினைச் சுட்டிக்காட்டுவதற்கு நாத்தான் இறைவாக்கினர் ஓர் ஆட்டினை உருவகமாகப் பயன்படுத்துகின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசரிடம் உவமைக் கதையைச் சொல்லி முடித்ததும், "இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்..." என்கின்றார் தாவீது அரசர். உடனே நாத்தான் இறைவாக்கினர், "நீயே அம்மனிதன்..." என்கின்றார்.


தொடர்ந்து அவர் தாவீது அரசரிடம், அவருக்கு நேரப்போகிற கேடுகளையும் எடுத்துச் சொல்கின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசருக்கு நான்குவிதமான கேடுகள் நேரப்போவதாகச் சொல்கின்றார். ஒன்று, அவருக்கும் பத்சேபாவிற்கும் பிறந்த குழந்தை இறக்கும். இரண்டு, அவருடைய மகன்களான அம்னோன், அப்சலோம்... ஆகியோர் கொல்லப்படுவர். மூன்று, அவருடைய மகள் "சூறையாடப்படுவாள். நான்கு, அவருடைய வைப்பாட்டிகளும் "சூறையாடப்படுவார்கள். இதை நாத்தான் இறைவாக்கினர் தாவீதிடம் சொல்லி முடித்ததும், அவர் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதைத் தொடர்ந்து நாம் சிதித்துப் பார்ப்போம்.


தவற்றுக்காக மனம்வருந்திய தாவீது


நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசரிடம் அவர் செய்த தவற்றினைச் சுட்டிக்காட்டியதும், தாவீது "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என்று மனம்வருந்தி அழுகின்றார். உடனே நாத்தான் இறைவாக்கினர் அவரிடம், "ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்" என்கின்றார்.


புனித யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: "நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்." (1 யோவா 1: 9). தாவீது அரசர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதும், ஆண்டவர் அவரை மன்னிக்கின்றார். அப்படியானால், நாம் கடவுளுக்கு எதிராகவும் சக மனிதர்களுக்கு எதிராகவும் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்கின்றபொழுது, கடவுள் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்குப் புது வாழ்வு தருவார் என்பது உறுதி.


சிந்தனை


"நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை இறைவன் அவமதிப்பதில்லை" (திபா 51: 17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், மனிதர்களாகிய நாம் தவறு செய்யலாம். அப்படித் தவறு செய்கின்றபொழுது, அதை ஒத்துக்கொண்டு இறைவனின் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 

மாற்கு 4: 35-41

ஏன் அஞ்சுகிறீர்கள்?

நிகழ்வு

 
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த மிகப்பெரிய கவிஞர் வில்லியம் காப்பர். இவருக்கு முப்பத்து இரண்டு வயது நடந்துகொண்டிருக்கும்போது, தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தார். இதனால் இவர் தற்கொலை செய்து இறந்துபோய்விடலாம் என்ற முடிவுக்கு செய்தார். இதன் பொருட்டு இவர் நஞ்சுண்டு இறக்க முயற்சி செய்தார். அம்முயற்சி தோல்வியில் முடியவே தேம்ஸ் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து இறக்க முயற்சி செய்தார். இதுவும் தோல்வியில் முடிந்தது.


இதற்குப் பின்பு இவர் கத்தியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இவர் கத்தியில் விழ முயற்சித்தபொழுது, இவருடைய எடை தாங்காமல் கத்தி முறிந்துபோனது. பின்னர் தூக்கிப் போட்டு இறக்க முயற்சி செய்தார். இதுவும் தோல்வியில் முடிந்ததால், வாழ்க்கையை வெறுத்துப் போனார். இந்நிலையில் இவர் ஒருநாள் திருவிவிலியத்தை எடுத்து வாசிக்கையில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் இவருடைய  உள்ளத்தில் நம்பிக்கையையும் துணிவையும் ஊட்டன. இதற்குப் பின்பு இவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, கடவுள் தனக்குக் கொடுத்த திறமைகளைக் கொண்டு, கவிதைகளைப் புனையவும் கிறிஸ்தவப் பக்திப் பாடல்களை இயற்றவும் தொடங்கினார்.

 
தற்கொலை செய்துகொண்டு வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த வில்லியம் காப்பருக்கு ஆண்டவருடைய வார்த்தை நம்பிக்கையையும் துணிவையும் ஊட்டின. அதுபோன்று இன்றைய நற்செய்தி வாசகத்தில், கடலில் ஏற்பட்ட பெரும் புயலைக் கண்டு அஞ்சி நடுங்கிய சீடர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளிப்பவையாக இருக்கின்றன. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


புயற்காற்றை அடக்கிய இயேசு


நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களோடு கடலில் பயணம் செய்கின்றபோது வீசுகின்ற புயற்காற்றை அடக்குவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இந்த வல்ல செயல் நமக்கு உண்மைகளை எடுத்து எடுத்துக்கூறுகிறது. ஒன்று, இயேசு இறைமகன். இரண்டு, அவர் நம்மோடு இருந்து நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார். இந்த இரண்டையும் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்ப்பாம்.

திருப்பாடல் 107:29 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்;. கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன." அதைப்போன்று திருப்பாடல் 65:7 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்." இந்த இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளும் ஆண்டவராகிய கடவுளுக்கு எல்லாமும் கட்டுப்படும் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றன. இயேசு கடலில் ஏற்பட்ட புயல் காற்றை "இரையாதே, அமைதியாய் இரு" என்ற வார்த்தைகளைச் சொல்லி அடக்குவதன் மூலம் அவர் ஆண்டவர், இறைமகன் என் உண்மையை மாற்கு நற்செய்தியாளர் எடுத்துக் கூறுகின்றார்.

 
நம்மோடு இருந்து, நம்பிக்கையூட்டும் இயேசு

 
இயேசு கிறிஸ்து சாதாரணமான ஒருவர் அல்லர்; அவர் இறைமகன் என்று எடுத்துக் கூறிய மாற்கு நற்செய்தியாளர், அவர் நம்மோடு இருந்து, நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார் என்ற உண்மையையும் எடுத்துக் கூறுகிறார். அது எவ்வாறு என்று பார்ப்போம்.

 
இன்றைய நற்செய்திப் பகுதியை, கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலத் திருஅவையோடு ஒப்பிடலாம். தொடக்கக் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஏராளமான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நடைபெற்றன. இவற்றிற்கு அஞ்சி ஒருசிலர் கிறிஸ்துவை மறுதலிக்கத் தொடங்கினார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இயேசு கூறுகின்ற, "ஏன் அஞ்சுகிறீர்கள். உங்களுக்கு இன்னும் நம்பிக்கையில்லையா?" என்ற வார்த்தைகள் இருக்கின்றன. இயேசுவின் இவ்வார்த்தைகள் இயேசுவின் சீடர்களுக்கும் தொடக்கக்கால கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமல்லாது, நமக்கும் நம்பிக்கையளிக்கக் கூடியவையாக இருக்கின்றன்.

 
ஆம். வாழ்க்கை என்ற கடலில் பயணிக்கின்றபோது எதிர்வரும் சவால்கள், குழப்பங்கள், துன்பங்கள் ஆகியவற்றால நம்முடைய வாழ்க்கையே முடிந்துபோய்விட்டதென நினைத்து அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இறைவன் நம் அருகில் இருந்து நம்மைத் தேற்றியும் திடப்படுத்திக்கொண்டும் இருக்கின்றார். எனவே நாம் இறைவனின் உடனிருப்பிலும் அவருடைய பராமரிப்பிலும் முழுமையான நம்பிக்கை வைத்து, நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதே சிறந்தது.

 
சிந்தனை


"அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்"(எசா 43:5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இறைவனின் உடனிருப்பிலும் பாதுகாப்பிலும் நம்பிக்கை வைத்து, நம்பிக்கையோடு நம் வாழ்க்கையை எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!