Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   22  பிப்ரவரி 2019  
     பொதுக்காலம் 6ம் வாரம் வெள்ளிக்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நாம் இறங்கிப்போய், அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 11: 1-9

அந்நாள்களில் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர்.

அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, "வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்" என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்.

பின், அவர்கள் "வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலைநாட்டுவோம்" என்றனர். மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.

அப்பொழுது ஆண்டவர், "இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லாரும் ஒரே மொழி பேசுகின்ற னர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித் தடுத்து நிறுத்த முடியாது. வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்" என்றார்.

ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர். ஆகவே அது "பாபேல்" என்று வழங்கப்பட்டது.

ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:33: 10-11. 12-13. 14-15 (பல்லவி: 12b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார். 11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். பல்லவி

12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். 13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். பல்லவி

14 தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15 அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழப்பவர், அதைக் காத்துக்கொள்வர்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 34 - 9: 1

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்" என்றார்.

மேலும் அவர் அவர்களிடம், "இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  தொடக்க நூல் 11: 1-9

ஆணவம் அழிவின் தொடக்கம்

நிகழ்வு

ஏழை விவசாயி ஒருவர், ஒருநாள் அருகிலிருந்த ஒரு கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்தது; பசி வேறு வயிற்றைக் கிள்ளியது; வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. இதனால் சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த ஒரு மரத்தடி நிழலில் ஒதுங்கினார்.

அப்பொழுது அங்கு ஓர் இளைஞன் வந்தான். அவன் மெத்தப்படித்த மேதாவி. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். அப்படிப்பட்டவன் தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித்தனத்தையும் மேதமையையும் பெரிதாகக் காட்டிக் கொள்வான். மேலும் தனக்கு தெரியாதது என்று எதுவும் இல்லை என்ற ஆணவச் செருக்கோடு இருந்தான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தயுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கியிருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவன் அவரிடம், "ஐயா! நான் நிறைய படித்திருக்கிறேன்; எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை என்னிடம் கூறுங்கள் பார்க்கலாம்" என்று ஆனவத்துடன் பேசினான். அந்த இளைஞனின் ஆணவம் குறித்து விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி அமைதி காத்தார். இந்நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப் பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், 'கொஞ்சம் உணவு கிடைக்காதா?' என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அவன் விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயியிடம், "ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன்... ஆனால், எனக்கு தெரியாத, நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும்" என்றான். விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால்தான் அடங்குவான் என்று கருதி, அந்த இளைஞன் நோக்கி, "படித்த முட்டாள்தான் பெருமை பேசித்திரிவான். இதுதான் இதுவரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம்" என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்த அந்த இளைஞன் தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரோடு பங்கிட்டுக்கொண்டான்.

கந்தையால்கூட எதாவது பயனிருக்கும், அகந்தையால் ஒரு பயனுமில்லை. அதனால் அழிவு மட்டுமே மிஞ்சம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

கடவுளின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்ட மக்கள்

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள், வானளாவிய கோபுரம் கொண்ட நகரைக் கட்டியெழுப்பி, தங்களுடைய பெயரை நிலைநாட்ட விரும்பிய மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களைச் சிதறடிக்கிறார். ஏன் கடவுள் இவ்வாறு செய்தார் என்பதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லுகின்ற முதலாவது பதில், அவர்கள் கடவுளின் விரும்பமான பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள் (தொநூ 9:1) என்பதற்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பதாகும். பலுகிப் பெருக வேண்டும் என்பது கடவுளின் விரும்பமாக இருக்கும்போது, சிதறுண்டு போகாதவாறு இருக்க அவர்கள் கோபுரம் கொண்ட நகரைக் கட்டி எழுப்பியதால்தான் இவ்வாறு சிதறுண்டு போகிறார்கள்.

ஆணவத்தின் அடையாளம் பாபேல் கோபுரம்

கடவுள் மக்களைச் சிதறுண்டு போகச் செய்ததற்கு மற்றுமொரு காரண விவிலிய அறிஞர்கள் சொல்வது: "மக்களுடைய ஆணவம்". மக்கள் தங்களுடைய பெயர் விளங்குவதற்காகக் Ziggurat வடிவில் கோபுரத்தைக் கட்டினார்கள். இதில் கடவுள் மேலிருந்து கீழே இறங்கிவரவேண்டும் என்று நினைத்தார்கள். கடவுளை நோக்கி நாம்தான் செல்லவேண்டும். அப்படியிருக்கும்போது இவர்கள் அதற்கு எதிராக ஆணவத்தோடு செயல்பட்டதால் கடவுள் அவர்களைச் சிதறடிக்கின்றார். இதன்மூலம் மனிதர் மனதில் எழும் எண்ணங்கள் ஏராளம். ஆனால், ஆண்டவரது திட்டமே நிலைத்து நிற்கும் என்ற இறைவார்த்தையானது நிரூபணமாகின்றது (நீமொ 19:21)

சிந்தனை


'அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை' என்கிறது இறைவார்த்தை (நீமொ). ஆகையால், நம்மிடத்தில் உள்ள ஆணவத்தை அகற்றிவிட்டு, தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 8: 34 9: 1

இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எவரும்...

நிகழ்வு

ஒரு சமயம் மாவீரன் நெப்போலியன் எதிரிநாட்டுப் படையோடு போர்தொடுக்க தன் நாட்டுப் படையைத் திரட்டிக்கொண்டு சென்றான். எதிரிநாட்டுப் படை ஒருபக்கமாகவும் அவனுடைய படையானது இன்னொரு பக்கமாகவும் இருந்தது. இடையில் ஒரு பாலம் இருந்தது. அதுதான் இரண்டு படைக்கும் நடுவில் இருந்தது.

சிறிது நேரத்தில் போர் ஆரம்பமானது. மாவீரன் நெப்போலியனுடைய படையானது பாலத்தைக் கடந்து எதிரி நாட்டுப் படையைத் தாக்கத் தொடங்கியது. ஆனால், எதிரி நாட்டுப் படையில் அவருடைய படையில் இருந்ததைவிடவும் பல மடங்கு வீரர்கள் இருந்ததைக் கண்டு நெப்போலியனுடைய படை பாலத்தின் வழியாக பின்வாங்கத் தொடங்கியது. இதனால் அன்றைய நாளில் நெப்போலியனுடைய படைக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதைக் கண்டு வருத்தமடைந்த நெப்போலியன், படைவீரர்களை ஒன்றுதிரட்டி, "வீரர்களே! போரில் எண்ணிக்கை முக்கியமல்ல... நம்முடைய மனவலிமையும் நம்பிக்கையும்தான் முக்கியம். ஆதலால், மனந்தளராமல் போராடுங்கள்... வெற்றி நமதே" என்று அவர்களுக்குத் தைரியமூட்டி, போருக்குத் தயார்படுத்தினான்.

நெப்போலியனுடைய வார்த்தைகளால் உறுதிபெற்ற அவனுடைய படைவீரர்கள் மறுநாள் போர் ஆரம்பித்ததும் பாலத்தைக் கடந்து வீறுகொண்டு முன்னேறினார்கள். ஆனால், ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த ஒருவிதமான அச்ச உணர்வு, அவர்களை எதிரி நாட்டுப் படையோடு போரிடவிடாமல் தடுத்தது. அதனால் பாலத்தின் வழியாகப் பின்வாங்கத் தொடங்கினார்கள். தன் நாட்டுப் படைவீரர்கள் இரண்டாம் முறையும் இப்படிச் செய்ததை நினைத்து மிகவும் மனவருத்தமடைந்த மாவீரன் நெப்போலியன் தன்னுடைய படையை மீண்டும் ஒன்று திரட்டி, அவர்களுக்கு அறிவுரை சொல்லத் தொடங்கினான். "எனக்கு அன்பான படைவீரர்களே! எதிரி நாட்டவரின் படை மிகப் பெரியது என்று கலங்காதீர்கள்... உங்களுடைய வீரத்திற்கு முன்னால் அதெல்லாம் ஒன்றுமில்லை. அதனால் மனவுறுதியோடு போராடுங்கள்... வெற்றி நமதே."

நெப்போலியனுனுடைய வார்த்தைகளால் தைரியமடைந்த படைவீரர்கள் மறுநாள் போர் ஆரம்பமானதும், பாலத்தைக் கடந்து சென்று எதிரி நாட்டுப் படையோடு மிகத் தைரியமாக போரிட்டார்கள். ஒருகட்டத்தில் எதிரிநாட்டுப் படைவீரர்கள் எவ்வளவு தாக்கியும் வந்துகொண்டே இருந்ததால், இனிமேலும் நிலைமையைச் சமாளிக்க முடியாது என்றெண்ணி பாலத்தின் வழியாக வழக்கம்போல் பின்வாங்க நினைத்தார்கள். ஆனால், ஏற்கனவே அந்த பாலமானது நெப்போலியனால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருந்ததனால், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று, தொடர்ந்து எதிரி நாட்டுப் படைவீரர்களோடு போரிட்டார்கள். இதனால் அவர்களை எதிர்த்து நிற்க முடியாமல் எதிரிநாட்டுப் படை கடைசியில் தோல்வியைத் தழுவியது.

நெப்போலியனின் படை உயிருக்குப் பயந்து எப்பொழுதெல்லாம் பின்வாங்கியதோ அப்பொழுதெல்லாம் அது தோல்வியைத் தழுவியது. மாறாக, அவனுடைய படை எப்பொழுது என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று மனவுறுதியோடு போராடியதோ அப்பொழுது அது வெற்றியைத் தழுவியது. எதிர்வரும் பிரச்சினைகளை மனவுறுதியோடு எதிர்கொண்டால் வெற்றிபெறலாம் என்ற இந்தத் தத்துவம் போர்க்களத்தில் மட்டுமல்லாது, சீடத்துவ வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது

இயேசுவின் சீடராக இருப்பதற்குத் தகுதியென்ன?


நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரையறைத் தருகின்றார். சீடத்துவ வாழ்வு என்பது அவ்வளவு எளிதான வாழ்வு கிடையாது, அது மிகவும் சவால் நிறைந்த வாழ்வு என்பதை தன்னுடைய சீடர்களுக்கு எடுத்துக் கூற விரும்பிய இயேசு, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்கின்றார்.

சீடத்துவ வாழ்வு நிறைய சிலுவைகள் நிறைந்த வாழ்வு, அதற்கெல்லாம் ஒருவர் தயாராக இருக்கவேண்டும். பிரச்சினைகள் வருகின்றனவே... உயிரை இழப்பதற்கான சூழ்நிலைகள் வருகின்றவே... என்று பயந்துகொண்டிருந்தால் ஒருபோதும் இயேசுவின் சீடராக இருக்கவேண்டும். ஆகையால், இயேசுவின் சீடராக இருக்கவிரும்புகின்றவர் பிரச்சினைகளையும் சவால்களையும் தாங்கிக்கொள்ளும் மனதைரியம் உடையவராக இருப்பது மிகவும் நல்லது.Plerinage des tamouls Lourdes

சிந்தனை

'சவால்களைச் சந்திப்போரால் மட்டுமே சரித்திரத்தில் இடம்பிடிக்க முடியும்' என்பது சான்றோர் வாக்கு. சீடத்துவ வாழ்விற்கும் இது பொருந்தும். இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் எதிர்வரும் சவால்களையும் பிரச்சினைகளையும் மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு, தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டும். அப்பொழுதுதான் இயேசுவின் உண்மைச் சீடராக மாறமுடியும்.

நாம் சீடத்துவ வாழ்வில் வரும் சவால்களையும் சிலுவைகளையும் மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு, தொடர்ந்து முன்னேறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!