Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   06  பிப்ரவரி 2019  
             பொதுக்காலம் 4ம் வாரம் - புதன்கிழமை - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 ஆண்டவர் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-7,11-15

சகோதரர் சகோதரிகளே, பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: "பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்." திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும்.

ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்."

அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும். அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார். உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப் போகாதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:103: 1-2. 13-14. 17-18 (பல்லவி: 17 காண்க)
=================================================================================
 பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் மீது அவரது பேரன்பு நிலைத்திருக்கும்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். 14 அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவில் உள்ளது. பல்லவி

17 ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீது இருக்கும். 18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர்.

அவர்கள், "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

கண்டித்து தண்டித்து திருத்தப்படுவது திருத்தப்படுபவருக்கு நரம் பயக்கக் கூடியது. இவர் மீது யார் அன்பு கொண்டிருக்காரோ அவரே இத்தகைய முயற்சியில் ஈடுபடுவார்.

இதனை உணர மறுக்கின்ற போதே மாற்றுக் கருத்துக்கள் எழுந்து மனத்தை வருத்தப்படுத்துகின்றன.

இன்றைய சூழலில் கண்டிப்பதும் தவறு, தண்டிப்பது அதனைவிட பெரிய தவறு என்ற நிலை உருவாகி வருவது சமூக சீர்க்கேட்டினையே உருவாக்கி விடுகின்றது என்பதனை நாம் உணர்ந்திட வேண்டும்.

தவறு இழைப்பவர்களை கண்டிப்பதும், தண்டிப்பதும் அவசியமானது. தவறு செய்பவர்களும் இதற்கு அனுமதித்து ஏற்றுக் கொள்ள முன்வரும் போதே தங்களை திருத்திக் கொள்ள முடியும். நல்லதொரு மாற்றத்தை தங்களில் உருவாக்கிட முடியும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மாற்கு 6: 1-6

அவர்களது நம்பிக்கையின்மைக் கண்டு அவர் வியந்தார்

நிகழ்வு

மக்கள் வந்து போகக்கூடிய ஒரு நகரின் முக்கியமான சாலையோரத்தில் நாத்திகர்கள் மாநாடு நடந்துகொண்டிருந்தது. மேடையேறிய இரத்தினம் மிக ஆவேசமாகப் பேசத் தொடங்கினார்.

"நான் வானத்திலிருக்கின்ற சூரியனை நம்புகிறேன். ஏனென்றால், அதை என்னால் பார்க்க முடிகின்றது; தொலைவில் தெரிகின்ற மலையை நம்புகிறேன். ஏனென்றால், என்னால் அதைப் பார்க்கமுடிகின்றது. அருகில் ஓடுகின்ற நதியையும் நம்புகிறேன். ஏனென்றால், அதையும் என்னால் பார்க்க முடிகின்றது. ஆனால், கடவுள் என்ற ஒருவரை நம்பவே மாட்டேன். ஏனென்றால், அவரை என்னால் பார்க்க முடியவில்லை. பார்க்க முடியாத ஒருவரை எப்படி நம்புவது?... உங்களில் யாராவது கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?... அப்படிப் பார்த்திருந்தீர்கள் என்றால், எனக்கு அவரைக் காட்டுங்கள். நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருகிறேன்"

இப்படிப் பேசிவிட்டு இரத்தினம் மேடையிலிருந்து கீழே இறங்கினார். அவர் கீழே இறங்கியவுடன், அவருடைய பேச்சை ஓரமாக நின்று கேட்டுக்கொண்டிருந்த பார்வையற்ற ஒருவர், மெதுவாக மேடையேறி, "யாராவது இரத்தினம் என்ற ஒருவரை எனக்குக் காட்ட முடியுமா?" என்றார். எல்லாரையும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். கீழே இருந்த இரத்தினமோ, "பார்வையற்ற உனக்கு நான் எப்படித் தெரிவேன்... அதெல்லாம் முடியவே முடியாது" என்றார். இதைத் தொடர்ந்து பேசிய பார்வையற்ற அந்த மனிதர், "நான் பார்வையற்றவன் என்றால், நீங்களும் பார்வையற்றவர்தான், ஆன்மீகப் பாரவையற்றவர். அப்படிப்பட்ட உங்களுக்கு கடவுள் தெரியப் போவதுமில்லை, நீங்கள் அவரை நம்பப் போவதுமில்லை" என்று முடித்தார்

இந்நிகழ்வில் வரும் இரத்தினத்தைப் போன்றுதான் பலர் கடவுளைக் கண்கூடாகக் கண்டால்தான் நம்புவேன் என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இன்னும் ஒருசிலர் கடவுள் கண்முன்னால் வந்தால்கூட அவரை நம்புவதற்குத் தயாரில்லாதவர்களாக இருக்கின்றார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் கடவுள்மீது/இயேசுமீது நம்பிக்கை கொள்ளாத மக்களைப் பற்றியும் அவர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததால் எத்தகைய இழப்பினைச் சந்தித்தார்கள் என்பதையும் எடுத்துக் கூறுகின்றது. எனவே, அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை புறக்கணித்த/ அவர்மீது நம்பிக்கை கொள்ளத் தயங்கிய மக்கள்

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சொந்த ஊருக்கு வந்து, தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்குகின்றார். அது ஓர் ஓய்வுநாள். அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்த மக்கள் சிறிதுநேரத்தில், 'இவர் தச்சர் அல்லவா! 'இவர் மரியாவின் மகன்தானே' என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார்கள். இயேசுவை அவருடைய சொந்த ஊர் மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்மீது அவர்கள் ஏன் நம்பிக்கை கொள்ளவில்லை என்று தொடர்ந்து பார்ப்போம்.

இயேசுவைக் குறித்து தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்த மக்கள்

இயேசுவை அவருடைய சொந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாததற்கும் மிக முக்கியமான காரணம், இயேசுவைக் குறித்து தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்கள் நினைத்ததால்தான். 'Familiarity breeds contempt' என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. இதனை 'அறிமுகமானவற்றின் அல்லது அருகாமையில் இருப்பவற்றின் மதிப்பு ஒருபோதும் உணரப்படுவதில்லை' என்று இன்றைய நற்செய்தியின் சூழலுக்கு ஏற்றவாறு பொருள் எடுத்துக் கொள்ளலாம். 'இவர் நம்மோடு இருந்தவர், நம்மோடு வளர்ந்தவர், இவருடைய பெற்றோர் நமக்கு அறிமுகமானவர்கள். அப்படிப்பட்ட இவரை நமக்குத் தெரியாதா?' என்று இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவும் அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் தயங்கினார்கள்.

இயேசுவைக் குறித்து தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நினைத்த மக்கள், அவர் இறைமகன் என்று அறிந்துகொள்ளாதது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இயேசுவிடம் வெளிப்பட்ட ஞானத்தை வியப்போடு பார்த்த மக்கள்

இயேசுவை அவருடைய ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாததற்கும் இரண்டாவது முக்கியக் காரணம், அவரிடம் வெளிப்பட்ட ஞானமும் அவருடைய கைகளால் ஆன வல்லசெயல்களும்தான். இயேசுவை ஒரு சாதாரண தச்சராகவே பார்த்துப் பழகிய அவருடைய ஊர் மக்கள், அவரிடமிருந்து இப்படியொரு ஞானம் வெளிப்பட்டதைத் தொடர்ந்து அவர்களால் அவரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இயேசுவின் சொந்த ஊர் மக்களுக்குத் திறந்த மனதில்லை, அதனால்தான் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, நம்பிக்கை கொள்ளவுமில்லை. இயேசுவும் அவர்களிடத்தில் நம்பிக்கை இல்லாததைக் கண்டு அவர்களிடத்தில் புதுமைகள் செய்யவில்லை.

சிந்தனை

நாசரேத்தைச் சார்ந்த மக்களுக்கு இயேசுவை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனமோ நம்பிக்கையோ இல்லை. அதனால் அவர்கள் இயேசுவிடமிருந்து ஆசி பெற முடியாமல் போனார்கள். நாம் அவர்களைப் போன்று இல்லாமல், இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எபிரேயர் 12: 4-7, 11-15

கண்டிக்கும் இறைவன்

நிகழ்வு

தந்தை, தாய், அவர்களுடைய ஒரே ஒரு செல்ல மகன் என்றிருந்த குடும்பத்தில் ஒருநாள், பள்ளிக்கூடம் விட்டு மாலையில் வீடுதிரும்பிய மகனிடத்தில், அவனுடைய தாயும் தந்தையும் அன்றைய நாளில் எதிர்பாராத விதமாகப் போக நேர்ந்த பறவைகள் சாரனாலயத்தையும் அங்கு அவர்கள் கண்ட விதவிதமான பறவைகளையும் பற்றிப் பேசினார்கள். அது மட்டுமல்லாமல், அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து அலைப்பேசியில் எடுத்துக்கொண்ட நிழற்படங்களையும் அவனுக்குக் காட்டினார்கள்.

இருவருடைய நிழற்படங்களையும் பார்த்த மகனுக்கு, 'தன்னுடைய பெற்றோர் தன்னை விட்டுவிட்டு பறவைகள் சரனாலயத்திற்குச் சென்று வந்திருக்கிறார்களே' என்று கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அமைதியாக இருந்தான். சிறுதுநேரம் கழித்து இருவரும் நிழற்படங்கள் இருந்த அலைப்பேசியை அப்படியே மேசையில் வைத்துவிட்டு, தங்களுடைய வேலையைப் பார்க்கப் போனார்கள்.

இதுதான் தக்க தருணம் என்று மகன், அலைப்பேசியில் இருந்த எல்லா நிகழ்படங்களையும் அழித்துவிட்டு ஒன்றும் தெரியாமல்போல் இருந்தான். வேலையை முடித்துவிட்டு அலைப்பேசியைப் பார்த்த தந்தை, அதில் நிழற்படங்கள் எதுவும் இல்லாதது கண்டு அதிர்ந்துபோனார். மகன்தான் இப்படியொரு செயலைச் செய்திருக்கவேண்டும் என்று உறுதிசெய்த தந்தை அவனைத் தன்னிடம் அழைத்தார். அவனும் மிகவும் பாவமாக அவரருகே வந்தான். அப்பொழுது தந்தை அவனிடம், "மகனே! நாங்கள் இருவரும் உன்னைப் பறவைகள் சரணாலயத்திற்குக் கூட்டிக்கொண்டு போகவில்லை என்ற உன்னுடைய கோபம் நியாயமானதுதான்... அதேநேரத்தில் நீ செய்த செயல் அநியாயம்... இனிமேலும் இப்படியொரு செயலைச் செய்யாதே" என்று கண்டித்தார். மகனும் இனிமேல் இப்படியொரு செயலைச் செய்யமாட்டேன் என்று உறுதியேற்றுக்கொண்டு நல்வழியில் நடக்கத் தொடங்கினான்.

தவறு செய்யும் பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்துவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அப்படிக் கண்டித்துத் திருத்தவில்லை என்றால், அவர்களுடைய பிள்ளைகளின் அழிவு அவர்களே காரணம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு மிகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

கண்டிப்பது இறைவனின் அன்புச் செயல்களில் ஒன்று

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், இறைவனின் கண்டிக்கும் குணத்தைப் பற்றி அழகாக எடுத்துச் சொல்கின்றார். "பிள்ளைகளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் என்று தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே" என்ற நீதிமொழிகள் புத்தகத்தில் இடம்பெறும் இறைவார்த்தையை (நீமொ 3; 11-12) மேற்கோள் காட்டிப் பேசும் ஆசிரியர், இறைவனின் கண்டிக்கும் குணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வழியை மறந்து, பாவ வழியில் நடந்தார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் இறைவன் அவர்களைக் கண்டித்தார். அவர்களும் திருந்தி, இறைவனின் வழியில் நடக்கத் தொடங்கினார்கள். இறைவனின் கண்டிப்பு சிறிதுநேரத்திற்கு வருத்தத்தைத் தரலாம், எப்படி பெற்றோர் பிள்ளையைக் கண்டிக்கின்றபோது, அது அவருக்கு அப்போது வருத்தத் தந்தாலும் பின்னாளில் அவர் நல்லவனாய் வாழ்வதற்கு வழிசெய்வதுபோல், இறைவன் கண்டிக்கின்றபோது வருத்தங்கள் ஏற்படலாம். ஆனாலும் அது நீடித்த பயனைத் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இறைவனின் கண்டிப்பினால் நாம் பெறும் நன்மைகள்

தவறான வழியில் நடக்கின்ற ஒருவரை இறைவன் கண்டிக்கின்றபோது அவர் மனம்திரும்பி நேர்வழியில் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், என்னவேண்டுமானாலும் செய்யலாம், யாரும் என்னைத் தட்டிக்கேட்கப் போகவதில்லை என்ற தவறான எண்ணம் அடியோடு மறைவதற்கான வாய்ப்பிருக்கின்றது. இன்றைக்குப் பலர் ஊதாரித்தனமாகவும் தான்தோன்றித்தனமாகவும் வாழ்கிறார்கள் எனில், அவர்கள் தங்களைக் கண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ ஆளில்லை என்ற தைரியத்தில்தான். ஒருவேளை அவர்கள் தவறு செய்கின்றபோது அவருடைய பெற்றோர் கண்டித்துத் திருத்தியிருந்தால், இப்படிப்பட்ட எண்ணமே அவர்களுடைய உள்ளத்தில் தோன்றியிருக்காது. அதனால்தான் கண்டிப்பு எவ்வளவு அவசியம் என்பதை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் அழகாக எடுத்துச் சொல்கிறார்.

சிந்தனை

"பிரம்பைப் கையாளதவர் தன் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிக்கிறவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்" என்கிறது நீதிமொழிகள் புத்தகம் (13:24). இவ்வார்த்தைகள் ஒரு தந்தைக்கு மட்டுமல்ல, நம் விண்ணகத் தந்தைக்கும் பொருத்தும். இறைவன் நம்மைக் கண்டிக்கின்றார் எனில், அவர் நம்மீது அன்புகொண்டிருக்கின்றார் என்பதே உண்மை. எனவே, அவர் கண்டிக்கின்றபோது, அதை நினைத்து வருத்தப்படாமல், அது நல்லதுக்குத்தான் என எடுத்துக்கொண்டு நல்வழியில் நடக்க முற்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!