Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       29  டிசம்பர் 2017  
                                        கிறிஸ்து பிறப்புக்காலம்  (வெள்ளி்)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 3-11

என் பிள்ளைகளே, இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். அவரை எனக்குத் தெரியும்'' எனச் சொல்லிக்கொண்டு, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம். அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள். அன்பிற்குரியவர்களே! நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளை அல்ல; நீங்கள் தொடக்கத்திலிருந்தே பெற்றிருந்த பழைய கட்டளைதான் அது. நீங்கள் கேட்டறிந்த வார்த்தையே அப்பழைய கட்டளை. இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளையே. அது புதியது என்பது கிறிஸ்துவின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் விளங்குகிறது. ஏனெனில் இருள் அகன்று போகிறது; உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது. ஒளியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்புகொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்; இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை. தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்; இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டது.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா: 96: 1-2. 2-3. 5-6
=================================================================================
பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி

5b ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.
6 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன;
ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன. - பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 + லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-35

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, இயேசுவின் பெற்றோர் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க, எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்'' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை'' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்யவேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை'' என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

இயேசுவின் பிறப்பு தரும் செய்தி

இயேசுவைக் குழந்தையாக பார்த்த சிமியோன் இறைவாக்குரைக்கிறார். அவருடைய இறைவாக்கு என்ன? "இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும்" என்கிற செய்தி அவரால் இறைவாக்காகச் சொல்லப்படுகிறது. யாருடைய எழுச்சி? யாருடைய வீழ்ச்சி?

இதுவரை மக்களை சட்டங்களால், ஒழுங்குகளால் சிறைப்படுத்தியிருந்த அதிகாரவர்க்கத்தினரிடமிருந்து இயேசு விடுதலையைக் கொண்டு வர இருக்கிறார். இது அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கான வீழ்ச்சி. இனிமேல் அவர்கள் அடிமைப்படுத்த முடியாது. அதேபோல, ஏழைகள், எளியவர்கள், சட்டங்களினால் வீணாக சிறைப்பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் எழுச்சி. ஏனென்றால், அவர்களுக்கும் மீட்பு இருக்கிறது என்கிற செய்தி, மிகச்சிறப்பான செய்தி. இத்தகைய இறைவாக்கு தான், சிமியோனால் உரைக்கப்படுகிறது.

இயேசுவின் பிறப்பு இந்த உலகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சரிவரக் கொண்டு வர இருக்கிறது. அது சமத்துவத்தையும், சமநீதியையும் எதிர்பார்க்கிறவர்களின் வெற்றி. அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ணுகிறவர்களின் வெற்றி. அந்த வெற்றி, இயேசுவின் பிறப்பினால், இந்த மண்ணில் மலரட்டும்.


கடவுளுக்கு உரியவர்கள்

ஒரு யூத ஆண்குழந்தை பிறந்த பிறகு மூன்று சடங்குகளை பெற்றோர் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். 1. விருத்தசேதனம். குழந்தை பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதன சடங்கு நிறைவேற்றப்பட்டது. இந்த ஒரு புனிதமான சடங்காக கருதப்பட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒருவேளை எட்டாம் நாள், ஓய்வுநாளாக இருந்தால், இதனை நிறைவேற்றுவதற்கு எந்த தடையும் இல்லை. சாதாரண வேலையே செய்வதில் அதிக அக்கறை காட்டுகிற ஓய்வுநாளில், விருத்தசேதனம் செய்வதற்கு அனுமதி உண்டு என்பதில் இருந்து, இது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

2. தலைப்பேறு ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுதல். எகிப்திலே இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்களை விடுவிக்காமல் பார்வோன் மன்னன் இறுகிய மனத்தோடு இருந்தான். அந்த சமயத்தில், ஆண்டவர் எகிப்தில் இருந்த கால்நடைகள் முதல் மனிதர்கள் வரையிலான தலைப்பேறுகளை சாகடித்தார். ஆனால், இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகள் காப்பாற்றப்பட்டன. அதை நினைவுகூறும் வகையில், தலைப்பேறுகள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இதனை மீட்பதுதான் இந்த சடங்கு. எண்ணிக்கை 18: 15 முதல் பார்க்கிறோம்: "மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப் படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது. ஆயினும், மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக் கொள்ளலாம். தீட்டான விலங்கின் தலையீற்றையும் நீ மீட்க வேண்டும். ஒரு மாத காலத்தில் நீ அவற்றை மீட்கும்போது அவற்றின் மீட்புத்தொகை தூயகச் செக்கேல் நிறைப்படி ஐந்து வெள்ளிக்காசுகள் என்று குறிப்பாய். அது பனிரெண்டு கிராம் ஆகும். இது ஏறக்குறைய ஒரு மாதத்தின் கூலியாகும்.

3. தூய்மைச்சடங்கு. ஆண்குழந்தை பிறந்தால், குழந்தையைப் பெற்றெடுத்த தாய் நாற்பது நாட்களுக்கு தீட்டும், பெண்குழந்தையைப் பெற்றெடுத்தால் எண்பது நாட்களுக்கு தீட்டாகவும் இருப்பாள். அவளுடைய அன்றாட வேலைகளைச் செய்வதற்கு தடையில்லை. ஆனால், அவள் ஆலயத்திற்குள் நுழைய முடியாது. லேவியர் 12 ம் அதிகாரத்தில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை நீக்குவதற்கு செம்மறி ஆடு எரிபலியாகவும், புறா பாவம் போக்கும் பலியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். இது அதிகம் செலவாகும் என்பதால் இதற்கு மாற்றாக, இரண்டு மாடப்புறாக்களை ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தலாம். எனவே, புறாக்கள் ஏழைகளின் காணிக்கையாகப் பார்க்கப்பட்டது. இந்த மூன்று சடங்குகளுமே, பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் கடவுளுடையது என்பதையும், கடவுளுக்கு உரியது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நாம் நமது வாழ்வில், நாம் கடவுளுக்கு உரியவர்கள் என்பதை உணர்வோம்.


இயேசுவின் நிலைப்பாடு

"சிமியோன் குழந்தை இயேசுவைப் பார்த்து இறைவாக்கு உரைக்கிறார். "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்". இயேசு பலருடைய வீழ்ச்சிக்கு எப்படிக் காரணமாக இருக்க முடியும்? நாம் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு எதிராக இருந்தால், நமது வாழ்வில் மதிப்பீடுகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் வாழ்ந்தால், நமது வாழ்க்கைமுறையே நமது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிடும். இறையாட்சியின் மதிப்பீடுகளை இயேசு உயர்த்திப்பிடிக்கிறபோது நிச்சயம் அது பலரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும்.

இயேசுவின் வருகை பலரின் எழுச்சிக்கும் காரணமான இருக்கும். இந்த சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்டவர்கள், ஏழைகள், வறியவர்கள், அடிமைப்படுத்தப்பட்டவர்கள், மீட்பே கிடையாது என்று முத்திரைக்குத்தப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும். இயேசுவின் வார்த்தைகள் எழுச்சியைக்கொடுப்பதாக இருக்கும். அவர் அவர்களுக்காகவே இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார் என்பதை அவா்கள் உணர்ந்து கொள்வார்கள். முடங்கிப்போயிருந்த அவர்களுக்கு புதிய வாழ்வு தருவதன் மூலமாக, இயேசு அவர்களுக்கு எழுச்சி ஊட்டுகிறார்.

இயேசு எப்படி எதிர்க்கப்படும் அடையாளமாக இருப்பார்? எப்போதும் நாம் உண்மைக்காக, நீதிக்காக உழைக்கும்போது நிச்சயம் எதிர்ப்புகள் இருக்கும். நாம் நடுநிலையாக இருக்க முடியாது. இயேசுவின் பக்கம் இல்லையென்றால், அவருக்கு எதிரானவர்கள் தான் நாம். ஆக, இயேசு எதிர்க்கப்படும் அடையாளமாக இருப்பார் என்பது, அவரின் நீதியை, உண்மையை, நேர்மையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. எனவே, நாமும், இயேசுவைப்போல விழுமியங்களின் சார்பிலே இருந்து, அவருக்கு உறுதுணையாக குரல் கொடுப்போம்.


தலைப் பேறு ஆண்டவருக்கு அர்ப்பணம் !

ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் என்னும் திருச்சட்டத்தின்படி இயேசுவின் பெற்றோர், குழந்தை இயேசுவைக் கோவிலுக்கு எடுத்துச்சென்று அர்ப்பணித்த நிகழ்ச்சியை இன்று நற்செய்தியில் வாசிக்கிறோம். நமது குழந்தைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த நிகழ்வு நமக்குத் தருகிறது. பாரசீகச் சிந்தனையாளர் கலீல் கிப்ரான் குழந்தைகளைப் பற்றிக் கூறிய பின்வரும் சிந்தனை நம் கவனத்தை ஈர்க்கிறது. "உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர். அவர்கள் கடவுளின் குழந்தைகள். உங்கள் வழியாக இறைவனால் உலகிற்குத் தரப்பட்டவர்கள்." எனவே, பெற்றோர் தம் குழந்தைகளை தமக்கென்று வளர்க்காமல், இறைவனுக்கு உரியவர்களாக, இந்த சமூகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும். அன்னை மரி தம் தலைப்பேறான குழந்தையை ஆலயத்தில் அர்ப்பணித்து, இந்த உலகம் உய்வதற்காக அவரை ஈகம் செய்தார். அதுபோலவே, ஒவ்வொரு தாயும் தம் பிள்ளைகளை ஆன்மீக ரீதியில் மட்டுமல்ல, சமூக ரீதியிலும் அர்ப்பணிப்பு செய்யவேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி வாசகம் விடுக்கும் அழைப்பு.

மன்றாடுவோம்: அனைவருக்கும் தந்தையாம் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற குழந்தைச் செல்வங்களுக்காக நன்றி கூறுகிறோம். இந்தக் குழந்தைகள் உமது கொடைகள், உமக்கே உரியவர்கள் என்று உணர்ந்து உம்மிடம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கென்று நீர் என்ன திட்டம் வைத்திருக்கிறீரோ, அதன்படியே அவர்கள் வாழ அருள் தாரும். குழந்தைகளை எங்களுக்கென்று சொந்தம் கொண்டாடாமல், அவர்கள் உமக்கும், இந்த சமூகத்துக்கும் உரியவர்கள் என்ற உணர்வில் அவர்களை வளர்க்க எமக்கு வரம் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
-----------------------------------------------
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவை ஆண்டவருடைய குழந்தைகள்


ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒருநாள் தனது பத்து வயது மகனை அழைத்துக்கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார். பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக்கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.

மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். "நாம அப்புறம் பேசிக்கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுகின்ற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்" என்றார். பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான். அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். "அப்பா, அப்பா" என்றான் பையன். "என்னடா?" என்று கோபத்துடன் கேட்டார் அப்பா. "இந்தக் காட்டாறு எங்கே போகுது?" என்றான் பையன். அப்பா மிகுந்த கோபத்துடன், "நம்ம வீட்டுக்குத்தான்" என்றார். பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை.

மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின், "வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலை எல்லாம் எங்கே அடுக்கி வைத்திருக்கின்றாய்?" என்று கேட்டார். பையன் மிகவும் சாதாரணமாகச் சொன்னான், "நீங்கள் வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுவிட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்" என்று பதில் சொன்னான். அப்பாவால் ஒன்றும் பேச முடியவில்லை.

குழந்தைகளுக்கு அறிவுரையோ வேறு எதுவோ சொன்னாலும் திருந்தச் சொல்லவேண்டும், இல்லையென்றால் அது நமக்கே மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது. குழந்தைகள் வெற்றுத் தாள்கள். சிறு  வயதில் அவர்களை எப்படி நாம் வளர்கின்றோமோ அதன்படியே அவர்களுடைய வாழ்க்கை இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர்களான யோசேப்பும் மரியாவும் எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கின்றார்கள்; அவரை இறைவழியில் வளர்த்தெடுக்கின்றார்கள். அதனாலேயே அவர் கடவுளுக்கு உகந்ததாய் மாறுகின்றார் (லூக் 2:40). ஆகையால் இயேசுவின் பெற்றோர்கள் அவரை இறைவனுக்கு உகந்த வழியில் வளர்த்தெடுத்ததால், அவர் அப்படியே நடக்கத் தொடங்கினார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

இங்கே இன்னொரு செய்தியையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால் இயேசு இறைமகனாக இருந்தபோதும், அவர் யூத சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தார் என்பதாகும். இயேசுவின் பெற்றோர் அவரை எருசலேம் திருக்கோவில் அர்ப்பணித்தபோது மூன்றுவிதமான சட்டங்களை நிறைவேற்றுகின்றார்.

முதலாவது சட்டம் எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்துகொள்வதாகும். ஆண்டவர் இயேசுவுக்கு எட்டாம் நாளில் விருத்த சேதனம் நடைபெற்றது என்று நற்செய்தி நூல் சான்று பகர்கின்றது. இரண்டாவது சட்டம் ஆண் தலைப்பேறினை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பது. இச்சட்டத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெற்றோர் அவருக்கு நிறைவேற்றினார்கள் என்று இன்றைய நற்செய்தி வாசகம் சான்று பகர்கின்றது. ஆண்டவரின் தூதர் எகிப்தியரின் வீதிகளில் கடந்து சென்றபோது நிலைகளில் இரத்தம் தோயக்கப்பட்ட வீடுகளில் இருந்த ஆண் தலைப்பேறினை கொல்லாமல் விட்டுவிட்டு, நிலைகளில் இரத்தம் தோயக்கப்படாத  வீடுகளில் இருந்த ஆண் மக்களைக் கொன்று போட்டார். அதன் நிமித்தமாக ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம் என்ற நியதியைக் கொண்டுவந்தார்கள் (விப 13: 2, எண் 18:16). இச்சடங்கில் வசதி படைத்தவர்கள் செம்மறியாட்டினை காணிக்கையாகக் கொடுப்பார்கள். ஆனால் இயேசுவின் பெற்றோர் இரு மாடப் புறாக்களை காணிக்கையாகக் கொடுத்ததை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் ஏழைகள் என்று புரிகின்றது. ஏனென்றால் ஏழைகள்தான் அப்படிப்பட்ட காணிக்கையை வழங்குவார்கள்.

இயேசு நிறைவேற்றிய மூன்றாவது சடங்கு தூய்மைச் சடங்கு. யூத சட்டத்தின்படி ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு தாய் நாற்பது நாட்களுக்கும், பெண் குழந்தையைப் பெற்றெடுப்பவர் 80 நாட்களுக்கும் தீட்டுப் பட்டவர்கள் என்று கருதப்பட்டார்கள். நாற்பதாம் நாளில் ஆண்டவர் இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதைப் பார்க்கும்போது அவருக்கு தூயமைச் சடங்கு நிறைவேற்றப்பட்டது என்று நாம் அறிந்து கொள்ளலாம் (லேவி 12:8).

இவ்வாறு இயேசுவின் பெற்றோர் அவரைக் கடவுளுக்கு அர்ப்பணித்து, கடவுளுக்கு உகந்த வழியில் நடத்தியதால் அவர் கடவுளுக்கு உகந்தவராகவே மாறிவிடுகின்றார்.

இன்றைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை (தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என்று சொல்வதே சரியானது) எப்படி வளர்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அடிமைகள் போன்று நடத்துவதும், அவர்களுடைய சுய வெறுப்புகளுக்கு மதிப்பதிக்காமல், தங்களுடைய எண்ணங்களை அவர்கள்மீது சுமத்தி, அவர்களை அடிமைப்படுத்துவதையும் பார்க்கமுடிகின்றது. இது சரியான வழிமுறை ஆகாது. ஆண்டவரிடமிருந்து பெற்ற குழந்தைகளை ஆண்டவருடைய வழியில் வளர்த்தெடுப்பதுதான் சரியான காரியமாகும்.

எனவே, ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததைக் குறித்து சிந்தித்த நாம், அனைவரும் ஆண்டவருடைய மக்கள் என்பதை உணர்வோம், அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!