Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       27  டிசம்பர் 2017  
                                        கிறிஸ்து பிறப்புக்காலம்  (புதன்)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நிலைவாழ்வு பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம் 

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1: 1-4)

சகோதரர் சகோதரிகளே, தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த "நிலைவாழ்வு" பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா:  (97: 1-2. 5-6. 11-12)
=================================================================================
பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள். 

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.
-பல்லவி 

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.
-பல்லவி 

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.
-பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (20: 2-8)

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"அன்பாலே அழகாகும் வாழ்க்கை"

அந்தப் பொண்ணுக்கு நடுத்தர வயது. வாழ்வில் எதிலுமே பிடிப்பின்றி இருந்தார். வீடு முழுவதும் இருளடைந்து தூசு படிந்து கிடந்தது. யாரும் அவளுடன் பேசமாட்டார்கள்.

இந்த நேரத்தில் பக்கத்துக்கு வீட்டிற்குப் புதிதாக ஒரு குடும்பம் வந்தது. அந்தக் குடும்பத்தில் ஓர் அழகிய பெண் சிறுமி இருந்தாள். யாரும் பழகாத அந்தப் பெண்ணிடம் சிறுமி அன்பாய் பழகினாள்.

ஒருநாள் அந்தச் சிறுமி ஓர் அழகிய ரோஜாவினைக் கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் அன்போடு தந்தாள். அந்தப் பெண்ணிற்கு பல காலமாக யாரும் எந்தப் பரிசுமே கொடுத்ததில்லை. சிறுமி ரோஜா கொடுத்ததில் மிகவும் மகிழ்ந்த அந்தப் பெண், ரோஜாவை வைக்க பூ ஜாடியை எடுத்தார். அதன் தூசியைத் துடைந்து மேசையில் வைத்தார். மேசை குப்பையாய் இருந்தது. எனவே மேசையைத் தூய்மை செய்தார்.

பின்னர் அந்த அறை இருளாய் இருப்பதை உணர்ந்து திரைச் சீலை விலக்கி விளக்கு பொருத்தினார். பிறகு வீட்டுக்கே வண்ணம் பூசினார். கலகலப்பு நிறைந்த மனிதராய் மாறினார். இவையெல்லாம் நிகழ்ந்தது அந்தச் சிறுகுழந்தை கொடுத்த அன்பான ஒரு சின்ன அன்பளிப்பினால்தான்.

அன்புடன் கொடுக்கும்/ அன்புடன் செய்யும் எதுவும் அபாரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

திருச்சபை இன்று அன்பின் அப்போஸ்தலரான திருத்தூதர் யோவானின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. திருத்தூதர் தூய யோவான் ஆண்டவர் இயேசுவின் அன்பிற்கு உரியவரானார். அது மட்டுமல்லாமல் அவருடைய அன்பிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், அவருடைய வாழ்வும் போதனையும், இன்றைய இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன  என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், கல்லறையில் அடக்கம் செய்துவைக்கப்பட்ட இயேசுவின் திருவுடலுக்கு அடக்கச் சடங்குகளைச் செய்யும் பொருட்டு மகதலா மரியா இயேசுவின் உடல் அடக்கம் செய்துவைக்கப்பட்ட கல்லறைக்கு வருகின்றார். ஆனால் அங்கே இயேசுவின் உடலை அடக்கம் செய்துவைக்கப்பட்ட கல்லறையின் முன்பாக இருந்த கல்லானது  அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு, அவர் அதிர்ச்சிக்குள்ளாகி நிற்கின்றார். உடனே அவர் இச்செய்தியை திருத்தூதர்களிடம் சொல்வதற்கு விரைந்து செல்கின்றார். திருதூதர்களின் தலைவரான பேதுருவும் இயேசுவின் அன்புச் சீடருமான யோவானும் மகதலா மரியா தங்களுக்குச் சொன்ன செய்தியைக் கேட்டு கல்லறைக்கு விரைந்து வருகின்றார்கள். அங்கே பேதுரு முதலில் கல்லறைக்குள் நுழைகின்றார். அவர் இயேசுவின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்திய துணி அப்படியேயும், அவருடைய தலையை மூடியிருந்த துண்டு தனியாக இருப்பதையும் காண்கின்றார். அவருக்குப் பின்னால் யோவானோ இவற்றையெல்லாம் காண்கின்றார். கண்டதும் நம்பிக்கை கொள்கிறார்.

விவிலிய அறிஞர்கள் இந்நிகழ்ச்சியைக் குறித்து சொல்லும்போது, கல்லறைக்குள் முதலில் நுழைந்த பேதுருவுக்கு துணிகள் அப்படிக் கிடப்பதைக் கண்டு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் இயேசுவின் அன்புச் சீடரான யோவானுக்கு இயேசுவின் உடலை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட துணி அப்படியேயும், அவருடைய தலையை மூடியிருந்த துண்டு தனியே இருப்பதைக் கண்டு, ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்து விட்டார் என்று நம்பத் தொடங்குகின்றார். ஆகவே, யோவான்தான் முதலில் ஆண்டவர் இயேசு உயிர்த்துவிட்டார் என நம்பத் தொடங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தகைய ஒரு வெளிப்பாடு ஆண்டவர் இயேசுவை யோவான் முழுமையாக அன்பு செய்ததனால் மட்டுமே சாத்தியமானது. நாம் எதையும் அன்போடு செய்யும்போது அளப்பெரிய காரியங்கள் நடந்தேறச் செய்யலாம் என்பதை இதன்வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் சொல்வது போன்று, "அனைத்தையும் அன்போடு செய்கின்றோமா?" (1 கொரி 16:14) என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உள்ளத்தில் பகைமையையும் வெறுப்பையும் வைத்துக்கொண்டுதான் ஒரு காரியத்தைச் செய்கின்றோம். இதனால் ஒரு அதிசயம் நடக்காது என்பதே உண்மை.

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "எனக்கு முன்பாக அன்பு வழி, வெறுப்பின் வழி என இரண்டு வழிகள் இருந்தன. நான் அன்பு வழியைத் தேர்ந்தெடுத்தேன். அதுவே என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது". ஆம், இது முற்றிலும் உண்மை. நாம் எதையும் அன்போடு செய்யும்போது அதனால் விளையும் அதிசயங்கள் ஏராளம்.

எனவே அன்பின் அப்போஸ்தலரான யோவானின் வழியில் நடந்து, அடுத்தவரை, ஆண்டவரை அன்பு செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தூய யோவான் (டிசம்பர் 27)

நிகழ்வு

யோவான் எபேசு நகரில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் போதித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் அடைந்த பேரையும் புகழையும் கண்டு பிற தெய்வங்களை வழிபடுகின்ற குரு ஒருவர் அவர்மீது பொறாமைப்பட்டு அவரை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று நினைத்தார். எனவே அவர், யோவானிடத்தில் நல்லவர் போன்று பேசி, அவர் சாப்பிடும் உணவில் விஷம் கலந்துகொடுத்தார். ஆனால், யோவானோ அதனைத் தூய ஆவியின் வல்லமையால் உணர்ந்து, அந்த உணவின் மேல் சிலுவை அடையாளம் வரைந்து உண்ண, அது அவரை ஒன்றுமே செய்யவில்லை. இறுதியில் அந்த குருவின் தீச்செயல் கண்டுபிடிக்கப்பட அவர் யோவானின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். யோவானும் அவரைப் பெருந்தன்மையோடு மன்னித்தார்.

அன்பின் அப்போஸ்தலராக வலம்வந்த யோவான் தனக்குத் தீமை செய்தவருக்கும் மன்னிப்பை வழங்கி அன்பைப் பொழிந்தார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

வாழ்க்கை வரலாறு

யோவான் கலிலேயாவில் உள்ள பெத்சாய்தாவில் செபதேயு, சலேமி ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். இவருடைய சகோதரர்தான் யாக்கோபு. யோவானின் தாய் சலோமி, இயேசுவின் அன்னை மரியாவின் சகோதரி என்கிறது மரபு. தொடக்கத்தில் யோவான் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனோடு மீன்பிடி தொழிலைச் செய்துவந்தார். திருமுழுக்கு யோவான், "மனம் திரும்புங்கள்" என அறைகூவல் விடுத்தபோது, யோவான் அவர் போதனைகளால் கவரப்பட்டார். பின்னர் திருமுழுக்கு யோவான் இயேசுவை மீட்பராக அடையாளம் காட்டியபோது இவரும் இயேசுவின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். இயேசு அழைத்தபோது தனது மீன்பிடித் தொழிலை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார். அதன்பின் இயேசுவின் அன்புக்குரிய சீடர் எனும் பெயரைப் பெற்றார்.

சீமோன் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் என்னும் இம்மூன்று பேர்தான் இயேசுவின் மிகநெருக்கமான சீடர்களாக இருந்தனர். ஒரு முறை தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் இறந்துபோக இயேசு, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மூவரை மட்டும் தன்னோடு அழைத்துக்கொண்டு சென்று இறந்த சிறுமியை உயிரோடு எழுப்பினார். இன்னொரு முறை இவர்கள் மூவருடனும் ஒரு உயர்ந்த மலைக்குச் சென்று இயேசு உருமாறினார். அவரது முகம் கதிரவனின் முகம் போல ஒளிவீசியது. மோசேயும், எலியாவும் அங்கே தோன்றி அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். இயேசுவின் இறப்புக்கு முந்தையநாள் இரவில் அவர் விண்ணகத் தந்தையிடம் இறைவேண்டலில் ஈடுபட்டபோதும் இதே மூவர் கூட்டணியைத் தான் அவர் தன்னுடன் வைத்திருந்தார். இப்படி இயேசுவின் பயணத்தின் முக்கியமான இடங்களிலெல்லாம் கூடவே இருந்தவர் எனும் பெயர் யோவானுக்கு உண்டு.

இன்னொரு சமயம் யோவானும், யாக்கோபும் "நீர் அரியணையில் இருக்கும் போது எங்களை உமது இரு பக்கமும் அமர வையுங்கள் என்று கேட்டார்கள். இயேசுவோ "அது தனது தந்தையின் விருப்பப்படி நடக்கும் என்றார். இயேசுவின் பணி வாழ்வில் கூடவே நடந்த யோவான், இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கையிலும் அருகே நின்றிருந்தார். இயேசுவின் சீடர் என அடையாளப்படுத்திக் கொண்டால் படுகொலை செய்யப்படவும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் யோவான் பயப்படாமல் சிலுவை அருகே நின்றார். இயேசுவின் மீது தனக்கு இருந்த அன்பை வெளிப்படுத்தினார். எனவே தான் பின்னர் "அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும்" என தனது நூலில் எழுதினார். இயேசு தனது அன்னையை இவருடைய பொறுப்பில் தான் விட்டுச் சென்றார்.

இயேசு இறந்தபின் யோவானும், பேதுருவும் மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலுக்குத் திரும்பினர். ஒரு நாள் இரவு முழுவதும் வலை வீசியும் எந்த மீனும் கிடைக்கவில்லை. காலையில் இயேசு கரையில் தோன்றி நின்று, "வலப்புறமாய் வலையை வீசுங்கள" என்றார். மீன்கள் ஏராளமாய்ச் சிக்கின. இயேசுவை அடையாளம் கண்டு கொண்ட யோவான், பரவசத்துடன் படகிலிருந்து குதித்து ஓடி வந்தார். பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் "இடி முழக்கமாய் இருந்த யோவான், மென்மையாகவும், தெளிவாகவும் பணியாற்றும் திருத்தூதராக உருமாறினார். கிறிஸ்தவம் வளர முக்கியப் பங்காற்றினார்; எபேசு நகரில் பணியாற்றினார். சின்ன ஆசியாவில் இருந்த ஏழு திருச்சபைகளும் இவரது கண்காணிப்பின் கீழ் இருந்தது. இவர் "திருச்சபையின் தூண்களில் ஒருவர் என இவரைப்பற்றி பவுல் குறிப்பிடுகிறார்.

விவிலியத்தில் உள்ள யோவான் நற்செய்தி, யோவான் 1, 2, 3 நூல்கள் மற்றும் திருவெளிப்பாடு போன்றவை இவர் எழுதிய நூல்கள்தான். விவிலியத்தில் இடம்பெறாத பாரம்பரியத் தகவல்களின் அடிப்படையில் இவர் ரோம பேரரசர் தொமிசியன் காலத்தில் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானார்; கொதிக்கும் எண்ணெய்த் தொட்டியில் வீசப்பட்டார். ஆனாலும் இறைவன் அவரைக் காப்பாற்றினார். பத்மூ தீவில் சிறைவாசம் பெற்றார். அங்கிருக்கும் போதுதான் விவிலியத்தின் மிக முக்கியமான நூல்களின் ஒன்றான "திருவெளிப்பாடு நூலை எழுதினார். பின்பு பேரரசர் நெர்வா காலத்தில் விடுதலையானார். தொடர்ந்து இறைபணி செய்தார். வயது மூத்தவராக, எழுந்து நடக்க வலுவில்லாமல் இருந்த போதும் தன்னைச் சந்திக்கும் அனைவரிடமும், "குழந்தைகளே ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள்" என்பார். கடைசியில் பேரரசர் டிரோஜன் காலத்தில் இயற்கை மரணம் எய்தினார். இயேசுவின் சீடர்களில் படுகொலை செய்யப்படாமல் நீண்டநாட்கள் வாழ்ந்த ஒரே சீடர் இவர்தான்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

அன்பின் திருத்தூதர் என அழைக்கப்படும் தூய யோவானின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


ஒருவர் மற்றவரிடம் அன்பு


யோவான் நமக்கு விட்டுச் சென்ற மிக முக்கியமான செய்தி ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பதுதான். "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகின்றது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளனர். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கின்றார்"(1 4:7-8) என்று சொல்லி கடவுளும் அன்பும் வேறு வேறு அல்ல சுட்டிக்காட்டுகின்றார் யோவான். ஆகவே, தூய யோவானின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் அவர் போதித்த அன்பை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பலநேரங்களில் நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்களிடத்தில், ஏன் உயிர்களிடத்தில்கூட அன்பில்லாமல் இருக்கின்றோம். விவேகானந்தர் ஒருமுறை குறிப்பிட்டார், "கடவுளை அடைய எளிய வழி, சக மனிதர்களை அன்பு செய்வது" என்று. இது முற்றிலும் உண்மை. நாம் நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்கள், உயிர்களை அன்பு செய்யும்போது இறைவன் அருளும் விண்ணக மகிமையைப் பெறுவது உறுதி.

ஒரு மனிதன் தன் நாயுடன் ஒரு நீண்ட சாலையில் நடந்துகொண்டிருந்தான். அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே சென்றுகொண்டிருந்தான். அப்போது திடீரென அவன் உணர்ந்தான், தான் இறந்துவிட்டோம் என்பதை!. தன் இறப்பும், அதற்கு முன்பே நிகழ்ந்த அவன் நாயின் இறப்பும் அவனுக்கு நினைவு வந்தது. அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச் சிந்தித்தான். கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில் உயரமான சலவை கல்லாலான மதிற்சுவரைக் கண்டான். சிறிது தூரத்தில் மலைமேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான். அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதையும், அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை தங்கத்தால் போடப்பட்டிருப்பதையும் கண்டான். அந்த வாயிலை நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான். அருகில் செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின் முன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம் கேட்டான், "இந்த இடத்தின் பெயர் என்ன?" அந்த மனிதன் சொன்னான் "சொர்க்கம்". அவன் கேட்டான் "குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?" "நிச்சயமாக! உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்" சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்!

வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான் "என் நண்பனும் என்னோடு வரலாம் அல்லவா?", "மன்னிக்கவும்! நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை" வழிப் போக்கன் யோசித்தான். பின் தன் வந்த பாதையில் சாலையை நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான். நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு வாயிலைக் கண்டான். துருப்பிடித்த கதவு. அதை நோக்கி ஒரு மண்பாதை சென்று கொண்டிருந்தது. அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனிடம் கேட்டான் "குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?" "உள்ளே ஒரு குழாய் இருக்கிறது, வாருங்கள்" "நாயைக் காட்டிக் கேட்டான் "என் தோழனுக்கும் நீர் வேண்டும்". அந்த மனிதன் சொன்னான் "குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது .எடுத்துக் கொள்ளலாம்".

அவன் உள்ளே சென்றான். குழாயையும் குவளையையும் கண்டான். தண்ணீர் எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான். தாகம் தீர்ந்தது. மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான் "இந்த இடத்தின் பெயர் என்ன?" அவன் சொன்னான் "சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது" . வழிப் போக்கன் திகைத்தான், "குழப்பமாயிருக்கிறதே! நான் வரும் வழியில் ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!" " ஓ! இந்த ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா? அது நரகம்!". "அப்படியென்றால் சுவர்க்கம் என்று அவர்கள் சொல்லிக்கொள்வது உங்களுக்கு எரிச்சலாக இல்லையா?" "இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம் -தங்கள் தாகம் தீர்க்கத் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு நிறுத்துவதற்காக!". எல்லவாற்றையும் கேட்ட அந்த வழிப்போக்கன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

நம்மோடு இருப்பவர்களை, உயிர்களை அன்பு செய்யும்போது விண்ணகத்தில் சொர்க்கத்தில் இடமுண்டு என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய யோவானின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் ஒருவர் மற்றவரை அன்புசெய்ய கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைக் கொடையாகப் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
''கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; 
கண்டார்; நம்பினார்'' (யோவான் 20:8)

 இயேசுவின் சாவு அவர்தம் சீடர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. அவர்களுடைய கனவுக்கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் சுக்கு நூறாயின. இயேசு மிகுந்த அதிகாரத்தோடும் வல்லமையோடும் எதிரிகளை முறியடித்து, கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் ஏற்படுத்துவார் என்றும் அந்த ஆட்சியில் தங்களுக்கு முக்கிய பதவிகள் தரப்படும் என்றும் அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதால் அவர்கள் உள்ளம் உடைந்த நிலையில் நம்பிக்கை இழந்தவர்களாய் இருந்தார்கள். மண்ணுலக மெசியாவை எதிர்பார்த்த சீடர்கள் இயேசுவின் உண்மையான மெசியாப் பண்பை உணர்ந்து ஏற்றிட நாள் பிடித்தது. இயேசு இவ்வுலக மன்னர்களைப் போல, ஆட்சியாளர்களைப் போல ஓர் அரசையோ ஆட்சியையோ நிறுவுவதற்கு மாறாக, கடவுளின் ஆட்சிக்குப் புதியதொரு பொருள் கொடுத்ததை அவர்கள் படிப்படியாகத்தான் உணர்ந்து ஏற்றனர். சிலுவையில் இறந்து கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசு கடவுளின் ஆட்சியைப் புதியதொரு முறையில் நிலை நாட்டினார்.
இயேசு சாவின் ஆட்சியை முறியடிக்கிறார். சாவு அவருடைய வாழ்வுக்கு முற்றுப் புள்ளியல்ல, மாறாக, அவருடைய புதிய வாழ்வுக்கு ஒரு தொடக்கம். இதை நாம் உளமார ஏற்று உள்வாங்குவதையே ''நம்பிக்கை'' என அழைக்கிறோம். மகதலா மரியா சீமோனையும் ''மற்றச் சீடரையும்'' அணுகி, கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை என்றதும் ''மற்றச் சீடர்'' ஒடோடிச் சென்று ''கல்லறையின் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார்'' (யோவான் 20:8). இங்குக் குறிக்கப்படுகின்ற ''மற்றச் சீடர்'' யார்? ''இயேசு தனி அன்பு கொண்டிருந்த'' இச்சீடர் யோவான் ஆவார் என்பது மரபுச் செய்தி (காண்க: யோவா 20:2). ஆயினும் நாம் ஒவ்வொருவரும் அந்த ''மற்றச் சீடரின்'' இடத்தில் நம்மை நிறுத்திப் பார்க்கலாம். அப்போது நாமும் நமக்காக வாழ்ந்து இறந்த இயேசு சாவின் ஆட்சியை முறியடித்துவிட்டார் என்பதைக் கல்லறையின் ''உள்ளே சென்று'', ''கண்டு'' ''நம்புவோம்''. இந்த நம்பிக்கை நம்மில் வளரும்போது நாம் இறையாட்சியின் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!