Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       26  டிசம்பர் 2017  
                                 கிறிஸ்து பிறப்புக்காலம்  (செவ்வாய்க் கிழமை)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ, வானம் திறந்திருப்பதைக் காண்கிறேன். 

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-10; 7: 54-60

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, "இதோ, வானம் திறந்து இருப்பதையும், மானிடமகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்" என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல் எறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான் மீது கல் எறிந்தபோது அவர், "ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக் கொண்டார்.பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா: 31: 2-3. 5,7. 15-16
=================================================================================
பல்லவி ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன். 

எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி 

5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். 7யb உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். பல்லவி 

15b என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். 16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். பல்லவி 

================================================================================
இரண்டாம் வாசகம்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். அல்லேலூயா 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 தூயமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: "எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, "என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும், தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்."



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பேசுவது நீங்களல்ல, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய் பேசுவார்.

தி டெய்லர் பாமிலி (The Taylor Family Foundation ) என்றொரு அறக்கட்டளை உள்ளது. இதனை நிறுவியவர் டெய்லர் என்பவர்.

டெய்லருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒருநாள் டெய்லர் அவர்கள் இருவரையும் அழைத்து, "எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு மூத்தவன், "நான் என்னுடைய குடும்பத்திற்கு பேரையும் புகழையும் சம்பாதித்துத்தர ஆசை கொண்டிருக்கின்றேன். அதனால் நான் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவேன்" என்றான்.

பின்னர் டெய்லர் இளையவனிடம் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன், "எதிர்காலத்தில் நான் ஒரு குருவாக மாறி, சீனாவில் நற்செய்திப் பணி செய்து, என்னுடைய உயிரையும் தியகமாகத் தருவேன்" என்றான். இளையவன் இவ்வாறு சொன்னதைக் கேட்ட மூத்தவன் அவனை ஏளனமாகப் பார்த்தான். ஆனால் அவர்கள் இருவரையும் டெய்லர் தட்டிக்கொடுத்துக்கொண்டே, "உங்களுடைய இலட்சியத்திலிருந்து நீங்கள் ஒருபோதும் மனந்தளர்ந்து போய்விடாதீர்கள்" என்று சொல்லி வாழ்த்தினார்.

ஆண்டுகள் பல உருண்டோடின. மூத்தவன் தான் சொன்னதுபோன்றே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, இறுதியில் வெற்றியும் பேரையும் புகழையும் சம்பாதித்தான். ஆனால் அவன் சம்பாதித்த பேரும் புகழும் அவர் பதவியில் இருந்தபோது மட்டுமே இருந்தது, எப்போது அவன் பதவியிலிருந்து இறங்கி வந்தானோ அப்போதே அவனுக்கு இருந்த பேரும் புகழும் மறைந்து போயின. மாறாக, இளையவனோ குருவாக மாறி சீனாவிற்குச் சென்று, அங்கு நற்செய்தி அறிவிக்கின்றபோது எதிரிகளால் கொல்லப்பட்டு மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் துறந்தான். அவன் (ஹட்சன் டெய்லர்). ஹட்சன் டெய்லர் இறந்து பல ஆண்டுகள் ஆனபின்பும் சீனாவில் இருக்கின்ற மக்களாலும், ஏன் உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களாலும் அன்போடு நினைவு கூறப்படுகின்றார்.

ஆம், இதுதான் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்பவருக்கும், இறைவனுக்கு பணிவிடை செய்து வாழ்பவருக்கும் உள்ள வித்தியாசம். உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்பவர் சிறுது காலத்திற்குள்ளாகவே மக்களுடைய மனதில் இருந்து மறைந்து போய்விடுவார். ஆனால் ஆண்டவருக்கு ஊழியம் செய்பவர் அப்படியல்ல, அவர் இந்த மண்ணக வாழ்வில் துன்பங்களை அனுபவித்தாலும் என்றைக்கும் மக்களால் நினைவுகூரப்படுவார். இன்று நாம் நினைவு கூறும் திருத்தொண்டரான தூய ஸ்தேவானும் அப்படியே. அவர் இந்த மண்ணுலக வாழ்வில் வேதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்தாலும் மக்களால் இன்றைக்கும் அன்போடு நினைவுகூரப்படுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வரக்கூடியவர்களுக்கு எத்தகைய துன்பமும், இடர்பாடும் வரும் என்பதை எடுத்துக்கூறுகின்றார். இயேசு கிறிஸ்து ஏனைய ஆன்மீகத் தலைவர்களைப் போன்று தன்னைப் பின்தொடர்ந்து வந்தால் எப்போதும் சந்தோசம் மட்டுமே கிடைக்கும் என்று சொல்லவில்லை. மாறாக, பாடுகளும் அவமானங்களும் அதிகமாகக் கிடைக்கும் என்று அவர் எடுத்துக்கூறுகின்றார். இதன்வழியாக இயேசு தன்னுடைய  வார்த்தைகளில் மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கின்றார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பலவிதமான துன்பங்கள் வரும் என்று சொல்லும் இயேசு, அந்தத் துன்பங்களின் மத்தியில் தூய ஆவியானவரின் உடனிருப்பும் பாதுகாப்பும் எப்போதும் இருக்கும் என்று எடுத்துச் சொல்கின்றார். "உங்களை அவர்கள் ஆட்சியாளர்கள் முன்பாக ஒப்புவிக்கும்பொழுது என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் பேசுவர் நீங்கள் அல்ல, மாறாக உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய் பேசுவார்" என்கிறார் இயேசு.

இயேசுவின் இவ்வார்த்தைகள் பொய்யில்லாமல், அவை நூற்றுக்கு நூறு உண்மை. இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய ஸ்தேவானோடு சிரேன், அலெக்ஸாண்ட்ரியா, சிசிலியா, ஆசியா ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள் வாதாடத் தொடங்குகின்றார்கள். ஆனால் ஸ்தேவானோடு அவரால் வாதாட முடியவில்லை. காரணம் அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டவராய் இருந்தார். ஆகவே, யாரெல்லாம் இறைப்பணியை, ஆண்டவருடைய பணியைச் செய்கின்றார்களோ அவர்களை ஆண்டவர் ஒருபோதும் கைவிடுவதில்லை, மாறாக ஆண்டவர் அவர்களோடு இருந்து அவர்களை என்றும் வழிநடத்துவார் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பல நேரங்களில் நாம் துன்பங்களுக்கும் சவால்களுக்கும் பயந்து வாழ்கின்றோம். கிறிஸ்தவன் என்பவன் துன்பத்தை, பாடுகளை, மிகத் துணிவோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் இறைப்பணியை சிறப்பாகச் செய்ய முடியும்.

எனவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், சீடத்துவ வாழ்வில் எதிர்வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்வோம், தூய ஆவியார் நம்மோடு என்றும் இருக்கின்றார் என்பதை உணர்வோம். இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!