Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       22  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28


அந்நாள்களில் சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.

பின் அவர் கூறியது: "என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.'' அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்1 சாமு 2: 1. 4-5. 6-7. 8
=================================================================================

பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.

1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது!  ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். - பல்லவி
4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! - பல்லவி
6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்;
7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்;  தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! - பல்லவி
8b புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்!  உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! - பல்லவி

================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.''

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்ற கடவுள் நம் கடவுள்

இடைக்காலத்தில் இத்தாலியில் வாழ்ந்து வந்த மிகச் சிறந்த சிந்தனையாளர் முரேடஸ் (Muretus) என்பவர். தனது மருத்துவச் செலவுகளைக்கூட எதிர்கொள்ள இயலாத ஏழை.

ஒருநாள் அவர் மயக்கமுற்று கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த ஒரு மருத்துவக் குழு அவரைத் தங்களுடைய மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, அவருடைய உடலில் மருத்துவ சோதனை முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டியது அதனாலே அக்குழு அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றது.

அந்தக் குழுவினர் முரேடசை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போகும் வழியில், அவருக்கு ஒன்றும் புரியக்கூடாது என்பதற்காக இலத்தின் மொழியிலே பேசிக்கொண்டு போனார்கள். "ஒன்றுக்கும் ஆகாத இந்த மனிதனுடைய உடலை மருத்துவ ஆய்வுகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர, வேறு ஒரு பயனும் இல்லை" என்று சொல்லி சிரித்துக்கொண்ட போனார்கள். இதைக் கேட்டு மயக்கமுற்ற நிலையில் இருந்த முரேட்ஸ் எழுந்து அமர்ந்து, "எல்லாருக்குமாக இயேசு தன்னுடைய உடலைத் தந்திருக்கும்போது யாரையும் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று சொல்லி இழிவாகப் பேசாதீர்கள்" என்று இலத்தின் மொழியிலே பேசிவிட்டு மீண்டுமாகப் படுத்துகொண்டார்.

இலத்தின் மொழி தெரியாது என்று எல்லாவற்றையும் இலத்தின் மொழியிலே பேசிக்கொண்ட மருத்துவக் குருவிற்கு முரேடசின் இத்தகைய செயல் பேரிடியாய் அமைந்தது.

தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றிருந்த அந்த மருத்துவக் குழுவிற்கு முரேட்டசின் செயல் உண்மையிலே பேரிடிதான்.

நற்செய்தி வாசகத்தில் மரியா கடவுளை நோக்கி எழுப்பிய புகழ்ச்சிப் பாடலை, நன்றிப் பாடலைக் குறித்து வாசிக்கின்றோம். மரியாவின் பாடல் எந்தளவுக்கு முக்கியமானது. அதனுள்ளே பொதிந்திருக்கும் அர்த்தங்கள் என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

மரியா பாடிய புகழ்ச்சிப் பாடல் 1 சாமுவேல் புத்தகம் 1 முதல் 10 வரை வரும் வசனங்களோடு ஒத்துப் போவதை நம்மால் உணர முடிகின்றது. இருந்தாலும் மரியாவின் பாடலில் நிறைய புரட்சிகார சிந்தனைகள், கருத்துகள் இருப்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.

விவிலிய அறிஞர்கள் மரியாவின் பாடல் மூன்றுவிதமான புரட்சிகரமான சிந்தனைகள் உள்ளடக்கி இருப்பதாகச் சொல்வார்கள். அவை என்னென்ன, அவற்றின் வழியாக நாம் அறிந்துகொள்வது என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

அறப்புரட்சி (Moral Revolution). மரியாவின் பாடலில் வரும் முதல் புரட்சிகாரமான சிந்தனை அறம் சார்ந்ததாக இருக்கின்றது. "உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை அவர் சிதறடித்து வருகின்றார்" என்ற மரியாவின் வார்த்தைகள் அதைத் தான் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இறைவனுக்கு உகந்த உள்ளம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம். தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தில் இறைவன் என்றுமே குடிகொண்டிருப்பார். தாழ்ச்சியில்லாமல், ஆணவத்தோடு இருப்போரின் உள்ளத்தில் இறைவன் ஒருபோதும் இருப்பதில்லை. அவர்கள் எப்போதும் கடவுளை விட்டு வெகுதொலைவில் இருப்பார்கள். இப்படிப்பட்ட சிந்தனைகளை உள்ளடக்கி, அறப் போராட்டத்தை, புரட்சியை முன்னெடுப்பதாக இருக்கின்றது மரியாவின் பாடல்.

சமூகப் புரட்சி (Socila Revolution). மரியாவின் பாடலில் வெளிப்படும் இரண்டாவது புரட்சிகரமாக சிந்தனை சமூகப் புரட்சி தொடர்பானதாகும். வலியோரை அரியணையிலிருந்து தூக்கி விடுகின்றார், தாழ்ந்தோரை அவர் உயர்த்துகின்றார் என்ற வார்த்தைகள் அதனை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. இந்த உலகம் வலியோரை அரியணையில் அமர்த்துகின்றது. ஆனால் ஆண்டவரோ எளியோரை, தாழ்ந்தோரை அரியணையில் அமர்த்தி, அழகு பார்க்கின்றவராக இருக்கின்றார். ஆண்டவராகிய கடவுள் கொண்டுவரும் இத்தகைய மாற்றம் இன்றைக்கு நாம் வாழும் இந்த சமூகத்திற்கு மிகவும் தேவையாக இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகின்றபோது எல்லாரும் எல்லா நலன்களையும் பெறுவது உறுதி.

பொருளாதாரப் புரட்சி (Economical Revolution). மரியாவின் பாடலில் வெளிப்படும் மூன்றாவது புரட்சிகர சிந்தனை பொருளாதாரம் தொடர்பானது. பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார், செல்வந்தரை வெறுங்கையராய் அனுப்பி விடுவார் என்ற வார்த்தைகள் ஆண்டவராகிய கடவுள் இந்த உலகத்தில் நிலவி வருகின்ற ஏழை பணக்காரன் என்ற நிலையை மாற்றிக் காட்டுவார் என்று நாம் புரிந்துகொள்ளலாம். இந்த உலகில் செல்வர் மேலும் செல்வர் ஆகின்றார்கள். ஏழைகள் மிகவும் ஏழைகளாக மாறுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலை இறைவனுக்கு ஒருபோதும் ஏற்றது இல்லை. எனவே அவர் இந்நிலை மாற்றிக் காட்டுவார் என்கிறார் மரியா.

ஆகவே, உலகில் அற, சமூக மற்றும் பொருளாதாரப் புரட்சிகளைக் கொண்டு வரும் இறைவனை நாம் மரியாவைப் போன்று போற்றிப் புகழ்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அன்னை மரியாளின் வார்த்தைகள்

இந்த உலகம் விந்தையானது. இங்கு நேர்மையோடு, நீதியோடு வாழ வேண்டும், இந்த உலகத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்கிறவர்களை உலகம் பரிகாசம் செய்கிறது. அவர்களை உதாசினப்படுத்துகிறது. அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பது கிடையாது. அவர்கள் கூறக்கூடிய கருத்துக்கள், வாழ்விற்கு ஒத்துவராது என்று ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. இன்றை நற்செய்தியில் அன்னை மரியாளின் பாடல், இந்த உலகம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நல்லவர்கள் எண்ணுகிறார்களோ, அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் அல்ல. நல்லவர்களோடு தன்னைப் பொருத்திப் பார்க்கிற வார்த்தைகள். இந்த உலகம் எண்ணுவதிலிருந்து வேறுபாடான வாழ்வை, சவாலான வாழ்வை வாழ்வதற்கு முயலக்கூடிய வார்த்தைகள். இது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. தான் எப்படி வாழப்போகிறேன், தன்னுடைய குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறேன் என்பதற்கான முன்னுதாரணமான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் வரலாற்றை இரண்டாக கிழித்துப்போட இருக்கும், உன்னதரான இறைமகன் வாழ இருக்கக்கூடிய வார்த்தைகள். நமது வாழ்வு ஏனோ தானோவென்ற வாழ்வாக இருக்கக்கூடாது. அன்னை மரியாளைப் போன்ற திட்டமிட்ட வாழ்வாக இருக்க வேண்டும். அதுதான் இந்த நற்செய்தி நமக்குத்தரும் செய்தி. நமது வாழ்வை நாம் திட்டமிட்டு வாழ வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. மாறாக, நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ வேண்டும். அத்தகைய ஒரு வாழ்வை நாம் ஆண்டவரிடத்தில் கேட்டு மன்றாடுவோம்.

உண்மையான பங்கேற்பு

நாம் ஒவ்வொரு நாளும் செபிக்கிறோம். திருப்பலியில் பங்கு பெறுகிறோம். இறைவார்த்தையை வாசிக்கிறோம். ஆனால், அது உண்மையிலே நிறைவாக பங்கேற்ற உணர்வைத்தருகிறதா? பல வேளைகளில் நமது பதில் இல்லை. பல வேளைகளில் ஏதோ கடமைக்காக, வழிபாடுகளில் பங்கேற்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறோம். அதே வேளையில், நமக்கு ஒரு கஷ்டம் என்று வைத்துக்கொள்வோம். ஆலயத்திற்குச் செல்கிறபோது, மிகவும் பக்தியாக உணர்கிறோம். சொல்லப்படுகிற இறைவார்த்தை நம் உள்ளத்தைத் தொடுவதாக இருக்கிறது. நாம் சொல்லும் செபம் அர்த்தமுள்ளதாக மாறுகிறது. ஒரே வழிபாடுதான். ஆனால், நமது மனநிலைதான் அதை வேறுபடுத்திக்காட்டுகிறது. இன்றைய நற்செய்தியில் அன்னை மரியாளின் பாடல்களும், இத்தகைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரக்கூடிய செபம் தான்.

1சாமுவேல் புத்தகம் 2: 1 10 ல் நாம் அன்னாவின் பாடலை வாசிக்கிறோம். ஏறக்குறைய, மரியாளின் பாடல், இதைத்தழுவியதாகத்தான் இருக்கிறது. கடவுளின் மகனைத்தாங்கப் போகிறோம் என்கிற பேரானந்தமும், தனது உறவினர் எலிசபெத்தம்மாளும் மலடி என்ற அவப்பெயரைத் துடைப்பதற்கு, இறைவன் கருணைபுரிந்திருக்கிறார் என்கிற உணர்வும், அவளுக்கு மகிழ்ச்சி நிறைந்த உணர்வைத்தந்திருக்க வேண்டும். அந்த உணர்வோடு இந்த பாடலைப் பாடுகிறார். தான் சொல்லக்கூடிய ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து, துணிவோடு, மகிழ்ச்சியோடு, உள்ளப்பூரிப்போடு சொல்கிறார்.

நாமும் செபிப்பதற்கு ஆண்டவரின் ஆலயத்திற்குச் செல்கிறபோது, இத்தகைய உணர்வோடு செபிக்க வேண்டும். பங்கேற்க வேண்டும். அதற்கு நம்மையே நல்ல முறையில் தயாரிக்க வேண்டும். இன்றைக்கு வழிபாடுகள் நம்மைத் தொடவில்லை என்றால், அது வழிபாட்டின் குற்றமல்ல, நாம் நல்ல முறையில் தயாரிக்காமல் செல்வதுதான், அதற்கான காரணம். இன்றைக்கு திருப்பலி தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் செபங்களில் யாராவது அக்கறை கொள்கிறோமா? திருப்பலியின் தொடக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்ற மனநிலை இருக்கிறதா? விவிலியத்தை தாங்கி, அதற்கு செவிகொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமா? தகுந்த தயாரிப்போடு வழிபாடுகளில் பங்குகொள்வோம்.


செருக்கை அகற்றுவோம்

அன்னை மரியாள் தனது பாடலில் "உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்" என்று பாடுகிறார். செருக்கு மனிதனுக்கு இருக்கக்கூடாத ஒன்று. செருக்கு என்பதை ஆணவம், தலைக்கனம், நான் தான் எல்லாம் என்ற மனநிலை என்று கூட சொல்லலாம். அத்தகைய செருக்கு ஒருவனுக்கு அழிவைத்தான் தரும். இதற்கு விவிலியத்தில் பல எடுத்துக்காட்டுக்களை நாம் கொடுக்கலாம்.
தொடக்கநூலில் மனிதர்களை பாபேல் கோபுரத்தைக் கட்ட வைத்தது அவர்களின் செருக்கு. கடவுளை விட தாங்கள் மிஞ்சியவர்கள் என்ற எண்ணம். கடவுளின் வல்லமையின் அளவை புரிந்துகொள்ள முடியாத, அறிவற்ற நிலை. அவர்களின் செருக்கை ஆண்டவர் ஒரு நொடிப்பொழுதில், அடித்து நொறுக்குகிறார். பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தங்களது அறிவுச்செருக்கினால், வெகு எளிதில் இயேசுவை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தபோது, தனது ஞானத்தினால் அவர்களை வெகு எளிதாக இயேசு கீழே விழச்செய்தார். செருக்கு நிறைந்தவர்கள் யாரும் வரலாற்றில் நிலைத்ததில்லை. அது அவர்களுக்கு அழிவைத்தான் கொண்டு வந்திருக்கிறது.
செருக்கை அகற்றி தாழ்ச்சி நிறைந்தவர்களாக மாறுவோம். செருக்கு ஒருபோதும் நம்மை உயர்த்தாது, அது எப்போதும் நமக்கு அழிவையேக் கொண்டுவரும் என்பதை மனதில் இருத்தி, செருக்கை அகற்றுவோம்.

வாழ்வே ஒரு பாடல்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
மரியாவின் புகழ் பெற்ற பாடலை இன்று சிந்திக்கிறோம். இந்தப் பாடல் மரியாவின் வாழ்வின் சுருக்கமாக அமைகிறது. அவரது வாழ்வின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களையும் இப்பாடல் சுட்டுகிறது. ஒருவரது புகழ்ச்சி சொற்களால் அமைவதைவிட, செயல்களால் அமைவதையே புகழ்ச்சியைப் பெறுபவர் விரும்புவார். இறைவனும் நமது நன்றியும், புகழ்ச்சியும் உதட்டால் அமைவதைவிட, நம் வாழ்வால் அமைவதையே விரும்புவார். மரியாவின் இறைபுகழ்ச்சி அவ்வாறே அமைந்திருந்தது. தாழ்நிலையில் இருந்த தம்மை உயர்த்திப் பெருமைப்படுத்தியதை அவர் அறிக்கை இடுகிறார். இது நிகழ்காலம். எல்லாத் தலைமுறைகளும் தம்மைப் பேறுபெற்றவர் என அறிக்கையிடுவர் என்று போற்றுகிறார். இது எதிர்காலம். இறைவன் தனக்கு அரும்பெரும் செயல்கள் பலவற்றைச் செய்துள்ளதாகப் பாடுகிறார். இது கடந்த காலம். இவ்வாறு, முக்காலத்திலும் இறைவனின் இரக்கத்தை எண்ணிப் பாடுகிறார். அவரது முழு வாழ்விலும் இறைவனின் பேரன்பைப் பறைசாற்றுகிறார்.
நமது வாழ்விலும் கடந்த காலங்களில் இறைவன் செய்த வியத்தகு செயல்களையும், இந்த நாள்களில் நம்மீது பொழிந்துவரும். பேரிரக்கத்தையும், இனி வரவிருக்கின்ற காலத்திலும் இறைவன் நம்மைப் பெரியனவற்றை நோக்கி வழிநடத்தப் போவதையும் எண்ணி இறைவனுக்கு உயிருள்ள நாள்களெல்லாம் நன்றி கூறுவோமாக. நம் வாழ்வே நமது நன்றிப் பாடலாக அமையட்டும்.
மன்றாடுவோம்: எம் இறைவா, எம் அரசே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் நேற்றும், இன்றும், நாளையும் நீர் செய்த, செய்து வருகின்ற, இன்னும் செய்யவிருக்கின்ற அரும்பெரும் செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி. என் வாழ்வை உமக்கு அர்ப்பணிக்கிறேன். என் வாழ்வு உமக்கு உகந்த ஒரு பாடலாக அமைய அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!