Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       21  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.

இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: "விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.

இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா." பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 33: 2-3. 11-12. 20-21
=================================================================================
பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்;
திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். - பல்லவி

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது;
அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். - பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;
ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். - பல்லவி

================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
Limage contient peut-tre : une personne ou plusஎன் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45


அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
=================================================================================
 இன்றைய நற்செய்தி வாசகத்தின் நல்மனிதர் எலிசபெத்து. இவர் சக்கரியாவின் மனைவி. திருமுழுக்கு யோவானின் தாய். மரியாளின் உறவினள்.

"எலிசபெத்து" என்றால் எபிரேயத்தில் "கடவுளின் வாக்குறுதி," "கடவுள் நிறைவாய் இருக்கிறார்," அல்லது "கடவுளின் திருப்தி" என்பது பொருள்.

எலிசபெத்து இரண்டு முறை பேசுவதாக நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கின்றார்.

முதல் முறை, தனக்குத்தானே பேசிக்கொள்கிறார் எலிசபெத்து: "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்."

எலிசபெத்தின் இவ்வார்த்தைகளில் நிறைய சோகம் அப்பியிருக்கிறது. தான் இதுவரை தமது சமகாலத்தில் குழந்தைப் பேறு இல்லாததால் அனுபவித்த துன்பங்களையும், பிறரால் தனக்கு வந்த இகழ்ச்சியையும் இது படம்பிடித்துக் காட்டுகிறது.

மேலும், தான் துன்பங்கள் அனுபவித்தாலும், பிறரால் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவற்றையும் தாண்டிய ஒன்று இருக்கிறது - அதுதான் கடவுளின் அருள் என்பதையும் இது காட்டுகிறது.

"யோவான் - யோஹனான்" என்றால் "கடவுளின் அருள்" என்பது பொருள். ஆக, எலிசபெத்தின் இந்த வார்த்தையிலேயே பிறக்கப் போகும் குழந்தை என்ன பெயர் பெறப்போகிறது என்பது வாசகருக்குத் தெரிந்துவிடுகிறது.

ஆக, ஒவ்வொரு துன்பத்தையும் மிஞ்சி நிற்கும் ஒன்று இருக்கிறது என்றும், அதுவே கடவுளின் அருள் என்றும் நமக்குச் சொல்கிறது எலிசபெத்தின் முதல் பேச்சு.

இரண்டாம் முறை, மரியாளிடம் பேசுகின்றார் எலிசபெத்து. எலிசபெத்தின் வீட்டில் அவரைச் சந்திக்கின்ற மரியாள், "ஷலோம்" ("அமைதி!) என்று வாழ்த்துகின்றார். வாழ்த்தைக் கேட்டவுடன் எலிசபெத்தின் வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கின்றன. அப்படியே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவராய் வாய்நிறைய வாழ்த்துக்களை அள்ளி வீசுகின்றார்.

எலிசபெத்தின் வார்த்தைகளில் இரண்டு சொல்லாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன:
"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"
மரியாளை தன் உறவனளாக, தன்னைவிட வயதில் சிறிய சின்னப் பொண்ணாக, தனக்குப் போட்டியாக ஒரு மகனை அற்புதமான முறையில் கருத்தாங்குகிறாள் என்று பொறாமைப்படாமல், மரியாளை "ஆண்டவரின் தாய்" என்றும், மரியாள் வயிற்றில் வளரும் குழந்தையை "ஆண்டவர்" என்றும் அறிக்கையிடுகின்றார். எலிசபெத்துக்கு இதை யார் வெளிப்படுத்தினார்? கபிரியேலா? இல்லை. பின் எப்படி தெரிந்தது இவருக்கு? இதுதான் இவரது உள்ளொளிப் பார்வை.

"ஆண்டவர் உமக்குச் சொன்னவை என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்"
"என் வீட்டுக்காரர் நம்பாம இப்போ ஊமையா திரியுறாரு. நீயாவது நம்பினாயே!" என்ற புலம்பலாக இல்லாமல், மரியாளின் ஆழமான நம்பிக்கையைப் பாராட்டுகிறார் எலிசபெத்து.

எலிசபெத்து - தன் வாழ்வின் அஸ்தமனத்திலும் ஆண்டவரின் அருளைக் கண்டுகொள்கின்றார்.
ஆண்டவரின் அருளுக்கு அவசரப்படத் தேவையில்லை.
அவசரப்படுவோருக்கு ஆண்டவரின் அருள் இல்லை.

இது எலிசபெத்து தரும் பாடம்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஒருவர் மற்றவருக்கு ஒத்தாசையாய் இருப்போம்!

அடர்ந்த காட்டிற்குள் வாழ்ந்து வந்த ஒரு கண்பார்வையற்ற மனிதனும், கால் நடக்க இயலாத மனிதனும் அக்காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கிக் கொண்டார்கள். இருவரும் அந்தத் தீ விபத்திலிருந்து எப்படியாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள். அப்போது கண்பார்வையற்ற மனிதர் தீ விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒருதிசையை நோக்கி ஓடினார். ஆனால் அவர் ஓடிய திசையில் தீயானது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருபதைப் பார்த்த கால் நடக்க இயலாத மனிதன், "நண்பா! அந்தப் பக்கம் வழியாக ஓடாதே, ஏனென்றால், அந்தப் பக்கம் தீயானது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கின்றது" என்றார். "அப்படியானால் நான் எந்தப் பக்கம் நோக்கி ஓடவேண்டும்?" என்று கேட்டான் பார்வையற்ற மனிதன்.

"நீ இந்தத் தீ விபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், நடக்க இயலாத என்னை உன்னுடைய தோளில் சுமந்துகொள்ளவேண்டும். அப்படி என்னை நீ உன்னுடைய தோளில் சுமப்பாயானால், நான் உனக்கு எந்தப் பக்கம் போகவேண்டும் என்ற வழியைச் சொல்லித் தருவேன். அப்போது நாம் இருவரும் இந்தத் தீ விபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்" என்றான். கால் நடக்க இயலாத மனிதன் சொன்னதைக் கேட்ட கண் பார்வையற்ற மனிதன், அவனைத் தன்னுடைய தோள்மேல் சுமந்துகொண்டு, அவன் தனக்கு சுட்டிக்காட்டிய வழியில் நடந்து, இரண்டு பேரும் தீவிபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

உலகில் இருக்கும் மனிதர்கள் யாவரும் இப்படி ஒருவர் மற்றவருக்கு உதவிக்கரம் நீட்டி, ஒருவர் மற்றவருக்கு ஒத்தாசையாக இருந்தார்கள் என்றால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்!.

நற்செய்தி வாசகத்த்தில் அன்னை மரியா எலிசபெத்தை சந்திக்கின்ற நிகழ்வினைக் குறித்து படிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் செய்தி என்ன, இதன்வழியாக நாம் என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மரியா எலிசபெத்தைச் சந்திக்கின்ற இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் முதலாவது உண்மை ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய விரைந்து செல்லவேண்டும் என்பதாகும். வானதூதர் கபிரியேல் வழியாக எலிசபெத் கருவுற்றிருக்கும் செய்தியைக் கேள்விப்படும் மரியா அவருக்கு உதவி செய்வதற்கு விரைந்து செல்கின்றார். இத்தனைக்கும் எலிசெபத், தனக்கு உதவி செய்ய வரவேண்டும் என்று கேளாமலே மரியா எலிசபெத்துக்கு உதவி செய்வதை நாம் படிக்கின்றோம். மரியாவிடம் விளங்கிய இத்தகைய குறிப்பறிந்து உதவி செய்யும் பண்பை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டும். நிறைய நேரங்களில் நாம் நம்மிடம் உதவி என்று வந்தால் கூட, உதவி செய்வதில்லை. அப்படிப்பட்ட தருணத்தில் மரியா தாமாகவே முன்சென்று எலிசபெத்துக்கு உதவி செய்கின்றார்.

எலிசபெத்தும் மரியாவுக்கு தன்னுடைய அன்பான, ஆறுதலளிக்கும் வார்த்தைகளால் உதவி செய்திருக்க வேண்டும். ஏனென்றால் மரியாவோ திருமணத்திற்கு முன்னதாகவே கருவுற்றிருக்கின்றார். அப்படிப்பட்ட தருணத்தில் மரியாவுக்கு ஆதரவும், சக மனிதர்களின் உடனிருப்பும் தேவைப்பட்டிருக்கும். எலிசபெத்து மரியாவுக்கு அத்தகைய உடனிருப்பையும் ஆதரவையும் தந்திருப்பார் என்பதை நம்மால் உறுதியாக நம்ப முடிகின்றது.

மரியாவும் எலிசபெத்தும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு உணர்த்தும் இரண்டாவது பாடம் ஒருவர் மற்றவரை வாழ்த்தவேண்டும் என்பதாகும். மரியா, எலிசபெத்தை அவர் முதிர்ந்த வயதில் கருவுற்றிப்பதை எண்ணிப் பாராட்டுகின்றார். எலிசபெத்தும் மரியாவை என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்று பாராட்டுகின்றார், வாழ்த்துகின்றார். இத்தகைய வாழ்த்துகளால் அந்த இடமே மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது. குறிப்பாக எலிசபெத்தின் வயிற்றின் உள்ளே இருக்கும் குழந்தை அக்களிப்பால் துள்ளுகின்றது. நாம் ஒருவர் மற்றவரை வாழ்த்துகின்றபோது அந்த இடமே மகிழ்ச்சியால் நிரம்பி வழியும் என்பதை இதன்வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

மரியாவிடமும் எலிசபெத்திடமும் இருந்த இந்த உதவி செய்யும் நல்ல மனமும், ஒருவரிடம் இருக்கின்ற நல்ல பண்பை, குணத்தை பாராட்டக்கூடிய நல்ல மனப்பான்மையும் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் அடுத்தவர்களிடம் இருக்கின்ற குறைகளைப் பெரிதுபடுத்தும் நாம், அவர்களிடம் இருக்கும் நல்ல பண்புகளைப் பாராட்டுவதில்லை. மாறாக ஒருவர் மற்றவர்மீது பொறாமையோடும் காழ்புணர்ச்சியோடும் இருக்கின்றோம். நாம் அவ்வாறு இல்லாமல், மரியா மற்றும் எலிசபெத்தைப் போன்று ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம், அடுத்தவரிடம் இருக்கும் நல்ல பண்பைப் பாராட்டுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எலிசபெத்தம்மாளின் தாழ்ச்சி

"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்று எலிசபெத்தம்மாள் அன்னை கன்னிமரியாளைப் பற்றி சொல்கிறார். இதே தொணியில் நாம் இயேசுவின் வாழ்வில் செய்த ஒரு புதுமையிலும் பார்க்கிறோம். நூற்றுவர் தலைவன் தன்னுடைய பிள்ளைக்காக மன்றாடுகிறபோது, "நீர் என் இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்" என்று சொல்கிறார். இந்த இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே தொணியில் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் நமக்கு ஒரே செய்தியைத்தான் தருகின்றன.
எலிசபெத்தம்மாள் அன்னை மரியாளை விட வயதில் மூத்தவர். குழந்தை இல்லாமல் இருந்து, இப்போது குழந்தை பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார். இதுநாள் வரை இந்த சமூகம் அவரை, "மலடி" என்ற பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்திருக்கிறது. தாங்க முடியாத வேதனையை நிச்சயம் எலிசபெத்தம்மாள் அனுபவித்திருப்பார். இவ்வளவு கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தான் மகிழ்வதற்கு எவ்வளவோ காரியங்கள். காரணங்கள் இருந்தாலும், தாழ்ச்சியோட தன்னை விட வயதில் சிறியவராக இருக்கக்கூடிய அன்னை கன்னிமரியாளை, உள்ளத்தில் கபடு இல்லாமல் போற்றகிறார். இது அவரது தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அந்த தாழ்ச்சி தான், எலிசபெத்தம்மாளின் அடையாளமாகவும் இருக்கிறது.
நமது வாழ்விலும் நாம் எப்போதும், குறிப்பாக வாழ்விலும், தாழ்விலும் நம்பிக்கை உள்ளவர்களாக, கடவுளைப்போற்றக்கூடியவர்களாக, எலிசபெத்தம்மாளைப் போல சிறப்பான வாழ்க்கை வாழககூடியவர்களாக, தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ அருள் வேண்டுவோம்.

1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
----------------------------------------

இறைவனின் அருள்

இறைவனுடைய அருளைப்பெறுவது என்பது மிகப்பெரிய பேறு. அதற்கு ஈடுஇணை இந்த உலகத்திலே எதுவும் கிடையாது. அதற்கு மேல் பெறக்கூடிய சிறப்பு இந்த உலகத்திலே இல்லை. மரியாளுக்கு கடவுளுடைய வார்த்தை அறிவிக்கப்பட்டபோது, இத்தகைய மகிழ்ச்சி அவளுள் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், வானதூதர் அவளைப்பார்த்து, "அருள்மிகப்பெற்றவரே!வாழ்க!" என்று வாழ்த்துகிறார். கடவுளுடைய அருளை அன்னை மரியாள் பெற்றிருக்கிறாள் என்பதுதான் இதனுடைய பொருள். ஆக, அந்த வார்த்தைகள் அன்னை மரியாளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். அதே வேளையில், கடவுளின் அருள் மற்றொரு அனுபவத்தையும் தாங்கியதாக இருக்கும். அதுதான் மரியாளின் இதயத்தை வாளாக ஊடுருவ இருப்பதாகும்.
கடவுளின் அருள் கொடுக்கப்படுவது பெற்றுக்கொண்டு வைத்திருப்பதற்கு மட்டும் அல்ல. அது வாரி வழங்கப்படுவதற்காக கொடுக்கப்படுகிறது. அதில், நாம் நமது வாழ்வை, தியாகம் செய்ய வேண்டியது வரலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், கடவுளின் அருளைப்பெறுவதற்கு, எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான், அன்னை மரியாளின் வாழ்வாக இருந்தது. இன்றைக்கு நற்செய்தியிலே, எலிசபெத்தம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை, மரியாளின் வருகையை கண்டுணர்ந்தது. வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தை உணர்கிறது என்றால், எந்த அளவுக்கு அன்னை மரியாள் அருளால் நிரப்பப்பட்டிருந்தாள் என்பதை, நாம் புரிந்து கொள்ளலாம்.
நாமும் பல வேளைகளில் கடவுளின் அருளால் நிரப்பப்படுகிறோம். பெற்றுக்கொள்கிற அருளை, மற்றவர்களுக்கும் கொடுப்பதுதான், கொடுக்கப்படுவதின் நோக்கம். மரியாள் அதைச்செய்து முடிக்கிறாள். அதனால் வரக்கூடிய இழப்பையும் தாங்க முன்வருகிறாள். நமக்குக் கொடுக்கப்படுகிற அருளை நாம் எப்படி பாதுகாக்கிறோம்? பகிர்ந்து கொள்கிறோம்? சிந்திப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
----------------------------------------------------------

 லூக்கா 1: 39 45
தூய்மையான உள்ளம்

மரியாளைக் கண்டதும் எலிசபெத்தம்மாள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாகப் பார்க்கிறோம். யார் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட முடியும்? யாரிடத்தில் தூய ஆவி தங்குவார்? பழைய ஏற்பாட்டில் எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்தபோது, குறிப்பிட்ட மனிதர்களை மட்டும், தூய ஆவியானவர் ஏன் ஆட்கொள்கிறார்? கடவுளின் வார்த்தையை அறிவிக்க அவர்களை மட்டும் ஏன் பயன்படுத்துகிறார்? அவர்களுக்குரிய சிறப்பு குணங்கள் என்ன? இவற்றைப்பார்ப்போம்.
எலிசபெத்தம்மாளைப் பற்றி அதிகமான செய்திகள் நற்செய்தி நூலிலே இடம்பெறவில்லை. அவர் செக்கரியா என்கிற குருவின் மனைவி. மரியாளின் உறவினர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்தாள். ஆனால், எழுதப்படாத ஒன்று, அவளது உள்ளம் தூய்மையான உள்ளம். இறைவனுக்கு பிரமாணிக்கமுள்ள உள்ளம். பெண் என்கிறவள் யூத சமுதாயத்தில் பொருளாகப் பார்க்கப்பட்டவள். குழந்தை இல்லாத மலடிகள் கடவுளின் சாபத்தைப்பெற்றவர்களாகப் பார்க்கப்பட்டனர். அவள் கடவுள் மீது கோபம் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மரியாள் மீது பொறாமை கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இருந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தூய்மையான எண்ணத்தோடு அவள் வாழ்ந்து வந்தாள்.
தூய ஆவியானவர் குடிகொள்ளும் இதயம் தூய்மையான உள்ளம். நமது உள்ளம் தூய்மையாக இருக்கிறபோது, அது கடவுள் தங்கும் இடமாக மாறுகிறது. அதிலிருந்து தூய்மையான வார்த்தைகளும், செயல்களும் பிறப்பெடுக்கின்றன. எண்ணங்களும் தூய்மைனதாக மாறுகின்றன. நமது உள்ளத்தைத் தூய்மையாக வைத்து, தூய ஆவியின் இல்லிடமாக மாற்றுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
----------------------------------------------------------

உறவின் நேரம் !

அன்னை மரியாவும், அவர் உறவினர் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட காட்சியை நற்செய்தியாளர் வர்ணிக்கும் விதமே அலாதிதான். அந்த உறவின் வேளையில் அங்கே நிகழ்ந்த நேர்நிலை நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் நாம் வியப்படையத்தான் செய்வோம்: (1) விரைவு (2) வாழ்த்து. (3) மகிழ்ச்சியின் துள்ளல் (4) தூய ஆவியின் ஆட்கொள்தல் (5) ஆசி வழங்கல். ஆம், அன்னை மரி நமக்கெல்லாம் உறவின் மாதிரியாகத் திகழ்கிறார். உண்மையான, ஆழமான உறவில் விரைவான அன்பின் செயல்பாடு நிகழவேண்டும். உறவில் வாழ்த்தும், ஆசியும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். உண்மையான மகிழ்ச்சி நிலவ வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கே தூய ஆவியின் துணை வேண்டும். நம்முடைய உறவுகளில் இந்த ஐந்து அம்சங்களும் இருக்கின்றனவா என்று நம்மை ஆய்வு செய்வோம். அத்துடன், இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, இந்த ஐந்து அம்சத் திட்டத்தைக் கடைப்பிடித்து, நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனுப்பும்போது,வாழ்த்தும், ஆசியும், மகிழ்ச்சியும், தூய ஆவியின் செபமும் இணைத்து அனுப்புவோம். அந்த வாழ்த்து நம் உறவை ஆழப்படுத்தும்.

மன்றாடுவோம்: உறவுகளின் நாயகனே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில், எங்களுடைய உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும், ஆழப்படுத்திக்கொள்ளவும் உமது அருளைத் தந்தருளும். நாங்கள் அன்பு செய்வோரை வாழ்த்தி, ஆசி கூற, உமது ஆவியின் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
வாழ்த்துங்கள், வாழவையுங்கள்; பாராட்டுங்கள், பரிசுத்த அன்பினைப் பெற்றிடுங்கள்

ஒருமுறை டால் கார்னெகி (Dale Carnegie) என்ற எழுத்தாளர் தன்னுடைய படைப்புக்களை பதிப்பகம் ஒன்றிற்கு அனுப்புவதற்காக அஞ்சல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். ஆனால் அங்கே இருந்த அஞ்சல்நிலையப் பணியாளர் மிகவும் கடுகடுவென இருந்தார்; அதோடு மட்டுமல்லாம் அவர் அங்கே வந்தவர்மீதெல்லாம் எரிந்து எரிந்து விழுந்தார்.

அவரைப் பார்த்த கார்னெகிக்கு சற்று பயமாகவும், அதே நேரத்தில் வருத்தமாகவும் இருந்தது. இப்படிக் கடுகடுவென இருப்பவரிடம் நம்முடைய படைப்புகளைக் கொடுக்க, அவர் அதைச் சரியாக அனுப்பாமல் தூக்கி எறிந்துவிட்டால், இத்தனை ஆண்டுகள் நாம் உழைத்த உழைப்பெல்லாம் வீணாகிப் போய்விடுமே எனத் தீவிரமாக யோசித்தார். பின்னர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் அந்த அஞ்சலகப் பணியாளரிடம் பேச்சுக் கொடுத்தார்.

"ஐயா உங்களுடைய சிகை அலங்காரம் மிகவும் அருமையாக இருக்கின்றது. நீங்கள் செய்திருக்கின்ற சிகையலங்காரத்தைப் போன்று நானும் வைத்துக்கொள்ள விரும்புகின்றேன்" என்றார். இதைக் கேட்ட அந்த அஞ்சலகப் பணியாளருக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. ஏனென்றால் இத்தனை ஆண்டுகள் எவருமே அவருடைய சிகையலங்காரத்தைப் பாராவிட்டவில்லை. கார்னெகிதான் முதல்முறையாக அவரைப் பாராட்டினார்.

கார்னெகியின் பாராட்டு மொழியைக் கேட்ட அந்த அஞ்சலகப் பணியாளர் அவரிடம், "ஐயா! இப்போது உங்களுக்கு நான் என்ன செய்து தரவேண்டும்? சொல்லுங்கள்" என்று கேட்டார். அதற்கு கார்னெகி, "ஐயா! என்னுடைய இந்த படைப்பை பதிப்பகத்திற்கு அனுப்பி வைத்தால் போதும்" என்றார். அவரும் அதனை உடனே செய்து தந்தார். விரைவிலே தான் வந்த காரியம் நடந்ததை நினைத்து கார்னெகி சந்தோசப்பட்டுக் கொண்டே சென்றார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியைக் குறித்து கார்னெகி தன்னுடைய நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, அவருடைய நண்பர்களில் ஒருவர், "எதற்காக நீங்கள் அவரைத் தேவையில்லாமல் பாராட்டவேண்டும்?" என்று கேட்டார். அதற்கு கார்னெகி, "நான் அந்த மனிதரைப் பாராட்டியதால் இரண்டு நன்மைகள் நடைபெற்றன. ஒன்று அவருக்கு ஒருவிதமான சந்தோசம். இன்னொன்று என்னுடைய வேலை மிக விரைவாக நடைபெற்றது" என்றார்.
ஒருவரை, அவரிடம் இருக்கும் திறமையை, நல்ல பண்புகளைப் பாராட்டுவதால் எத்தகைய நன்மைகள் விளைகின்றன என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தியில் வாசகத்தில் எலிசபெத்தும், மரியாவும் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் இருவரும் சந்திக்கும்போது ஒருவர் மற்றவரை வாழ்த்துகிறார்கள்/ பாராட்டுகிறார்கள். மரியாவோ எலிசபெத்தை முதிர்ந்த வயதில் கருத்தரித்ததற்காக வாழ்த்துகிறார். எலிசபெத்தோ மரியாவை, "பெண்களுக்குள் ஆசிபெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே" என வாழ்த்துகிறார். மரியாவும், எலிசபெத்தும் ஒருவர் மற்றவரை வாழ்த்தியது ஏதோ காரியம் நடைபெற வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் உள்ளார்ந்த விதத்தில் பாராட்டுகிறார்கள். அதனால் அங்கே பெருமகிழ்ச்சி உண்டாகின்றது.

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளத்திற்கு அனுப்புகிறபோது, "நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும் அந்த வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்" என்கிறார் (மத் 10:13). அதேபோன்று தன்னுடைய உயிர்ப்புக்குப் பின் சீடர்களிடம் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று வாழ்த்துகிறார் (யோவான் 20:20). இப்படியாக ஆண்டவர் இயேசு மக்களைச் சந்திக்கின்றபோது அவர்களை வாழ்த்தவும், பாராட்டவும் செய்கிறார். பவுலடியாரும் கூட, தன்னுடைய ஒவ்வொரு திருமுகத்தை எழுதும்போதும், முடிக்கும்போதும்  "நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும், அமைதியும் உரித்தாகுக" என்று வாழ்த்துகிறார்/ பாராட்டுகின்றார் ( 1 கொரி 1:3).

ஆகவே நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது வாழ்த்துக் கூறவேண்டும், அவர்களிடம் இருக்கும் நல்ல பண்புகளைப் பாராட்டவேண்டும்.

பல நேரங்களில் நம்முடைய சந்திப்புகளில் அடுத்தவரைப் பற்றிய புறணியும், குறைசொல்லும்தான் அதிகமாக இருக்கின்றது. இவை நம்மை பாதாளம் வரை தாழ்த்துமே ஒழிய, உயர்த்தவே செய்யாது. "உண்மையான பாராட்டும், வாழ்த்தும் அற்புதங்களைச் செய்யவல்லது; அது ஒருவரிடம் இருக்கும் திறமைகளை வெளிகொணர வல்லது; நம்முடைய நட்பையும், அன்பையும் வளர்த்தெடுக்கக்கூடியது" என்பார் உளவியலாளரான சிக்மென்ட் பிராய்டு.

ஆகவே நாம் மரியாவையும், எலிசபெத்தையும் போன்று ஒருவர் மற்றவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைப் பாராட்டுவோம், நம்முடைய வாழ்வில் உண்மையான அன்பும், நட்பும் வெளிப்பட துணையாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!