Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       20  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு (புதன்கிழமை)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14

அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்'' என்றார்.

அதற்கு ஆகாசு, "நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்கமாட்டேன்'' என்றார். அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் "இம்மானுவேல்" என்று பெயரிடுவார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி:7c,10b )
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! வானக அரசின் வாயிலைத் திறக்கும் தாவீதின் திறவுகோல் நீரே. இருளிலே இருக்கும் கைதிகள் தளையைக் களைந்திட எழுந்தருள்வீரே. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார்.

இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார்.

வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார்.

பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார்.

அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அன்பின் வெளிப்பாடு தன்னை அர்ப்பணிப்பது. உண்மை அன்பு எங்குள்ளதோ அங்கு அர்ப்பணிப்பு இருக்கும். இந்த அர்ப்பணிப்பிலே தான் தியாகம், விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான குணநலன்கள் அடங்கியுள்ளன.

மரியாள் தன்னை அர்ப்பணித்து தரணிக்கு மீட்பை தேடித் தந்தார்கள். இதற்காய் அவர்கள் வியாகுலங்களை சந்திக்க நேர்ந்தது. அர்ப்பணிப்பு அதனையெல்லாம் ஏற்றுக் கொள்ள துணிவு தந்தது.

திருச்சபையிலும், நாட்டினிலும் இதே போல அர்ப்பணித்து, அந்த அர்ப்பணிப்பின் குணநலன்களை வாழ்வாக்கி, நடைமுறைப்படுத்தியவர்கள் ஏராளம் உண்டு. அந்தமான் சிறைச்சாலைகள் இன்றைக்கும் அடையாளங்களாக உள்ளன.

இத்தகைய அர்ப்பணிப்போடு கூடிய அன்பு நமதாகும் போது தரணி சிறக்கும். இத்தகையோரின் எண்ணிக்கை இன்றைக்கு உயர்ந்திட வேண்டும்.

அன்னை மரியாவின் ஆன்மீக வாழ்வு

"உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று அன்னை மரியாள் கபிரியேல் தூதர் வழியாக, ஆண்டவருக்குச் சொன்ன அந்த வார்த்தைகள் சிந்திக்கக்கூடியவை. இந்த உலகத்திலே, வாழ்க்கை நடைமுறையிலே மக்கள் ஒவ்வொருவரும் செபிக்கிறார்கள். அவர்களின் செபம் எப்படி இருக்கிறது என்றால், "எனது சொற்படி நிகழட்டும்" என்ற வகையில் அமைந்திருக்கிறது. ஆனால், அன்னை மரியா இறைவனுடைய திருவுளத்தை நிகழ்த்துவதற்கு தன்னையே அர்ப்பணிக்கிறாள்.

நமது செபிக்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கடவுளிடத்தில் ஏராளமான விண்ணப்பங்களை எழுப்புகிறோம். நிச்சயம் இது மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்று. ஏனென்றால், ஒவ்வொரு விண்ணப்பங்களையும் ஆண்டவரிடத்தில் எழுப்புவது, நமது விசுவாசத்தின் வெளிப்பாடு. அந்த வகையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதே வேளையில் கவலை தரும் செய்தி என்னவென்றால், நாம் கேட்டது போல கடவுள் நடக்க வேண்டும் என்று நினைப்பது. இது அவிசுவாசத்தின் வெளிப்பாடு. நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதை அன்னை மரியாள் கற்றுத்தருகிறாள்.

அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவளது வார்த்தைகளும், வாழ்வும் நமது ஆன்மீக வாழ்வின் ஊற்று. அன்னையைப் பற்றிக்கொண்டு நமது ஆன்மீக வாழ்வில் நடைபயின்றால், உண்மையில் நம்மால் மிகச்சிறந்த ஆன்மீக வாழ்வு வாழ முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்

இறைத்திருவுளம் எது என்பதை அறிந்துகொள்வதற்கு பிரபல ஆன்மீக எழுத்தாளரான எப்.பி.மேயர் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து சுட்டிக்காட்டுகின்ற ஒரு நிகழ்ச்சி.

ஓரிரவு கப்பலில் அவர் ஐரிஸ் கால்வாயைக் கடந்து ஹோலிஹெட் என்ற துறைமுகத்தை நோக்கிப பயணம் சென்றுகொண்டிருந்தபோது, அவர் அந்தக் கப்பலில் இருந்த தளபதியைச் சந்தித்தார். அவர் அந்த கப்பல் தளபதியிடம், "இந்த கும்மிருட்டில் துறைமுகம் இருப்பதை நீங்கள் எப்படிக் கண்டு கொள்வீர்கள்?" என்று கேட்டார். அதற்கு கப்பல் தளபதி, "அதோ தூரத்தில் தெரிகின்றதே மூன்று விளக்குகள், அந்த மூன்று விளக்குகளும் ஒரே புள்ளியில் இணைந்திருந்ததென்றால், அதுதான் துறைமுகம் என அறிந்து, அதை நோக்கி கப்பலைச் செலுத்துவோம். இவ்வாறு நாங்கள் துறைமுகத்தை அடைவோம்" என்றார். அந்தக் கப்பல் தளபதி சொன்ன பதிலைக் கேட்டு எப்.பி. மேயர் ஒரு கணம் ஆச்சரியபப்பட்டு நின்றார்.

இரவு நேரத்தில் துறைமுகம் எங்கு இருக்கின்றது என்பதைக் கண்டுகொள்வதற்கு கப்பல் தளபதி மூன்று விளக்குகள் ஒரே புள்ளியில் இணைவதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது போன்று, இறைத்திருவுளம் எது என்பதை அறிந்துகொள்வதற்கு உள்ளுணர்வு, இறைவார்த்தை, காலச் சூழல் ஆகிய மூன்றும் ஒத்திருப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படவேண்டும். எப்போது இந்த மூன்றும் ஒரு காரியத்தில் / எடுக்கும் முடிவில் ஒத்திருக்கின்றதோ அதை இறைத்திருவுளமாக நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் இறைத்திருவுளத்தை ஏற்று நடந்த அன்னை மரியாவைக் குறித்துப் படிக்கின்றோம். மரியா தாவிதின் குடும்பத்தைச் சார்ந்த யோசேப்புக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நேரம். அப்படிப்பட்ட தருணத்தில்தான் ஆண்டவரின் தூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்" என்று வாழ்த்துகின்றார். இவ்வாழ்த்தொலியைக் கேட்டு இந்த வாழ்த்து எத்தகையதோ என்று மரியா கலங்குகின்றார். மறைவல்லுநராகிய பெர்னார்டின் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இவ்வாறு சொல்வார், "ஒருவேளை வானதூதர் கபிரியேல் மரியாவிடம் நீதான் உலகத்தில் இருக்கின்ற மிகப்பெரிய பாவி" என்று சொல்லியிருந்தால்கூட மரியா அதனை ஏற்றிருப்பார். மாறாக, வானதூதர் அவரிடம் அருள்மிகப் பெற்றவரே, ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்" என்று சொல்லி வாழ்த்தியதால் அவர் கலங்குகின்றார் என்று கூறுவார். ஆகையால், வானதூதரின் வாழ்த்து, மரியாவிற்கு ஒருவித கலக்கத்தை, அச்சத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.

வானதூதர் தொடர்ந்து மரியாவிடம், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்கிறார். வானதூதர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட மரியா, "இது எங்கணம் ஆகும். நானோ கன்னியாயிற்றே" என்று தன்னுடைய ஐயப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்.

மரியா வானதூதரிடம் எழுப்பிய சந்தேகம் மிகச் சரியானது என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர் ஒரு கன்னி. கன்னி ஒருவர் கருத்தரித்து, குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம். திருமறை நூலில்கூட அதனை ஒட்டிய செய்திகளே கிடையாது. அதனால்தான் வானதூதரிடம் மரியா இப்படியோர் கேள்வியை எழுப்புகின்றார். ஆனால் செக்கரியாவின் நிகழ்வில் இது முற்றிலும் மாறாக இருக்கின்றது. வானதூதர் கபிரியேல் செக்கரியாவிற்குத் தோன்றி எலிசபெத் தனனுடைய முதிர்ந்த வயதில் ஒரு குழந்தையை பெற்றுத் தருவார் என்று சொல்கின்றபோது மரியாவைப் போன்று செக்காரியாவும் இது எப்படி என்று கேள்வியை எழுப்புகின்றார். ஆனால் மரியாவைத் தண்டியாமல் செக்கரியாவைத் தண்டிக்கின்றார். அவருடைய நாவை திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரை கட்டிப் போட்டுவிடுகின்றார்.

இதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லும் செய்தி "திருமறையில் வயது முதிர்ந்தவர்கள் குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வுகள் இருக்கின்றன. சாரா தன்னுடைய முதிர்ந்த வயதில்தான் ஈசாகைப் பெற்றெடுத்தார். ஆனால் கன்னியானவர் குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வு திருமறையில் இல்லவே இல்லை. அதனால்தான் வானதூதர் அவருக்கு ஒன்றும் செய்யவில்லை.

வானதூதர் கபிரியேல் மரியா எழுப்பிய கேள்விக்கு தகுந்த பதிலைத் தந்ததும், "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே என்னக்கு நிகழட்டும்" என்கின்றார். மரியாவின் வாழ்வில் அவருடைய உள்ளுணர்வும், இறைவார்த்தையும் காலச் சூழலும் ஒருசேர இருந்தது. அதனால் அவர் இது இறைத்திருவுளம்தான் என்று ஏற்று நடக்கின்றார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் இறைத்திருவுளம் எது என்பதை அறிந்து, அதனை ஏற்று நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். எப்போது நாம் இறைத்திருவுளத்தை ஏற்று நடக்கின்றோமா அப்போது நாம் கடவுளால் மரியாவைப் போன்று மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

எனவே, இறைத்திருவுளம் எது என உணர்ந்து, அதன்படி நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!