Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       14  டிசம்பர் 2017  
                          திருவருகைக்காலம் - இரண்டாம் வாரம் - (வியாழன்)  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப்பிடித்து, அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்'' என்று உன்னிடம் சொல்பவரும் நானே. யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,'' என்கிறார் ஆண்டவர்.

இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோகும்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.

ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன். பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச் செய்தார் என்றும், இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்துகொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்துகொள்வர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 145: 1,9. 10-11. 12-13ய (பல்லவி: 8)
=================================================================================

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13ய உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

================================================================================

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசா 45: 8
அல்லேலூயா, அல்லேலூயா! வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
''மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை'' (மத்தேயு 11:11)

இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர் திருமுழுக்கு யோவான். அவரே இயேசுவுக்கு யோர்தான் நதியில் திருமுழுக்கு வழங்கினார். யோவானின் செல்வாக்கு எந்த அளவுக்கு மக்களிடையே பரவியது என்றால் சிலர் அவரை மெசியா என்றுகூடக் கருதினார்கள். ஆனால், யோவானோ இயேசுவின் முன் தலைபணிந்தார். இயேசுதான் உண்மையிலேயே வரவிருக்கின்ற மெசியா என்பதை யோவான் மக்களுக்கு எடுத்துக் கூறினார். இயேசுவோடு ஒப்பிடும்போது, தம்மை ஒரு முன்னோடியாகத்தான் அவர் கருதினார். ஆக, யோவான் இயேசுவின் வருகையை அறிவித்தாரே ஒழிய தாமே மெசியா எனப் பறைசாற்றவில்லை. இங்கு நாம் யோவானின் பணிவைப் பார்க்கின்றோம். முற்கால இறைவாக்கினரைப் போல யோவானும் மக்களுக்கு அழிவு பற்றிய செய்தியை அறிவித்தார். மக்கள் மனம் மாற வேண்டும் என்று கேட்டார். யோவான் கடவுளின் திட்டத்தில் ஒரு சிறப்பிடம் வகித்தார் என்பதை இயேசுவின் சொற்களிலிருந்து நாம் அறிகிறோம். ''மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை'' (மத் 11:11) என்று இயேசு கூறிய சொற்கள் யோவானுக்கு இயேசு வழங்கிய புகழாரம் மட்டுமல்ல, யோவான் அறிவித்த செய்தியை இயேசு முழுமையாக ஏற்றார் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

யோவான் மிகப் பெரிய மனிதர் என்பது உண்மையே. என்றாலும், கடவுளாட்சியில் நுழையும் வாய்ப்புப் பெற்றோர் யோவானைவிடவும் பேறுபெற்றவர்கள் என இயேசு கூறியது நமக்கும் பொருந்தும். இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்வோர் அவரோடு என்றென்றும் மாட்சிமை பெறுவர் என்னும் உறுதிப்பாடு நமக்குத் தரப்பட்டுள்ளது. எனவே, கடவுளாட்சியில் நாம் பங்குபெற்று, நம் வாழ்க்கைக் குறிக்கோளை அடைந்தால் அது கடவுள் நமக்குத் தருகின்ற அருளே. இத்தகைய அருள் பெற்றோர் யோவானைவிடவும் உயர்ந்த நிலையைப் பெறுகின்றனர் என்பது நமக்கு உற்சாகம் ஊட்டுகின்ற செய்தி.

மன்றாட்டு:
இறைவா, நீர் எங்கள் உள்ளத்தில் வந்து எங்களோடு வாழ்கின்றீர் என உணர்ந்திட அருள்தாரும்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 
அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!