Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       13  டிசம்பர் 2017  
                                திருவருகைக்காலம் - 2ஆம் வாரம் (புதன்)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

எல்லாம் வல்ல ஆண்டவர் "சோர்வுற்றவருக்கு'' வலிமை அளிக்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

"யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்? என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.

"என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை'' என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா?

ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.

இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 103: 1-2. 3-4. 8,10 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்!

ஒரு தாயானவள் தன்னுடைய பத்து வயது மகனிடத்தில் கேட்டாள், "அன்பு மகனே! மனித உடலில் இருக்கின்ற மிகவும் முக்கியமான பகுதி எது?". அதற்கு அவளுடைய மகன், "அம்மா! என்னைப் பொறுத்தளவில் காதுதான் மனித உடலில் இருக்கின்ற மிக முக்கியமான பகுதியாகும். ஒருவேளை காதுகள் மட்டும் மனிதனுக்கு இல்லை என்றால், ஒன்றுமே விளங்காது" என்றான். "நீ சொல்வது ஓரளவுக்கு சரியான பதிலாக இருந்தாலும், அது முழுமையான பதிலாக இல்லை" என்றாள் தாய்.

"அப்படியானால் கண்கள்தான் மனித உடலில் இருக்கின்ற மிகவும் முக்கியமான பகுதி ஆகும்" என்றான். "கண்களும்கூட ஓரளவுக்கு சரியான பதிலாக இருந்தாலும், அதுவும் முழுமையான பதிலாக இருக்க முடியாது" என்று சொன்னாள் தாய். "மனித உடலில் மிகவும் முக்கியமான பகுதி காதுகளும் இல்லை, கண்களும் இல்லையென்றால் எதுதான் முக்கியமான பகுதி?" என்று கேட்டான் மகன். "பொறுத்திரு மகனே! அதற்கான காலம். அப்போது உனக்கு சரியான பதிலைச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய பணிகளில் மும்முரமானாள் தாய்.

நாட்கள் நகர்ந்தன. சிறுவனாக இருந்த அந்தத் தாயின் மகன் வளர்ந்து இளைஞனாக மாறியிருந்தான். இப்போது அவன் உண்மையை அறிந்துகொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருந்தான். அப்படிப்பட்ட தருணத்தில்தான் அந்தத் தாயின் கணவர் திடிரென நோயில் விழுந்து, படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். அப்போது அந்தத் தாய் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அவள் தன்னுடைய மகனது தோள்மீது முகம் புதைத்து கதறி அழுதார்.

இது நடந்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு தாயானவள் தன்னுடைய மகனிடத்தில் முன்பு கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு மகன், "தோள்கள் தான் மனித உடலில் இருக்கின்ற மிக முக்கியான பகுதி" என்றான். "ஏன் அவ்வாறு சொல்கின்றாய்?" என்று தாயானவள் திரும்பக் கேட்டதற்கு மகன், "அவைகள்தான் ஒரு மனிதன் வேதனையில் வெடித்து அழுகின்றபோது, சாய்ந்துகொள்ள இடம் தருகின்றன" என்றான். "மிகச் சரியாய் சொன்னாய் அன்பு மகனே" என்று சொல்லி தாய் தன்னுடைய மகனை கட்டி அணைத்துக்கொண்டாள்.

ஆம், வேதனையில் விழுந்துகிகிடக்கின்ற ஒருவருக்கு சாயந்து கொள்வதற்கு இடம் தருகின்ற/ இளைப்பாறுதல் தருகின்ற தோள்களைத் தவிர மனித உடலில் மிக முக்கியமான பாகம் வேறு என்ன இருக்க முடியும்?.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கின்றார். வேதனையில், கவலையில் சிக்கித் தவிக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் இயேசு சாய்ந்து கொள்வதற்கு தோள்களைத் தருகின்றவராக, இளைப்பாறுதல் தருகின்றவராக இருக்கின்றார் என்பதை நாம் இதன்வழியாகப் புரிந்துகொள்ளலாம்.

இயேசு கூறும் இந்த ஆறுதலிக்கும் வார்த்தைகளின் அர்த்தம் என்ன?, இயேசு தரும் இளைப்பாறுதல் எத்தகையது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

யூத மக்களை பல்வேறு தளைகள் அடிமைப்படுத்தியிருந்தாலும், அவர்களை மிகவும் கொடுமையாக அடிமைப்படுத்திய தளை ஒன்று உண்டென்றால், அது யூத சமய சட்டங்கள்தான். அச்சட்டங்கள் சாதாரண மக்களை வாட்டி எடுத்தன. எதைச் செய்யவேண்டும் என்றிருந்த சட்டங்களைவிட, எதை செய்யக்கூடாது என்றிருந்த சட்டங்களே அதிகமாக இருந்ததால், மக்கள் அவற்றைக் கடைபிடிக்க முடியாமல் திணறினார்கள். அதனால்தான் ஆண்டவர் இயேசு பரிசேயர்களைப் பார்த்து, "சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோள்மேல் சுமத்துகின்றீர்கள். ஆனால் அவற்றை உங்கள் விரலால்கூட அசைத்துப் பார்ப்பதில்லை" (மத் 23:4) என்று கடுமையாகச் சாடுகின்றார்.

இத்தகைய பின்னணியில் நாம் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்ற வார்த்தைகளை சீர்தூக்கிப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும். சட்டங்களைக் கடைப்பிடிக்க முயன்று, தோற்றுப் போய் சோர்ந்திருக்கும் மக்களைப் பார்த்து இயேசு, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, நீங்கள் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்" என்று கூறுவதாய் இருக்கின்றது.

இயேசு நம்முடைய துன்பங்களை முற்றிலுமாக போக்குவதாகச் சொல்லவில்லை, மாறாக, அவருடைய நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம் என்றால் சுமை அழுத்தாது; எளிதாய் இருக்கும் என்றுதான் நமக்குச் சொல்கின்றார்.

ஆகவே, வாழ்வின் பல்வேறு சுமைகளால் வருந்துகின்ற நாம் நம்முடைய சுமைகளை ஆண்டவர் இயேசுவிடம் இறக்கி வைப்போம், அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!