Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       12  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு (திங்கள்)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11

"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். "உரக்கக் கூறு'' என்றது ஒரு குரல்; "எதை நான் உரக்கக் கூற வேண்டும்?'' என்றேன்.

மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! "இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார்.

அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 96: 1-2. 3,10. 11-12. 13 (பல்லவி: எசா 40: 10a)
=================================================================================

பல்லவி: இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பல்லவி

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.' பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி


================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?

அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்."




இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தேடிவரும் அன்பு தெய்வம்!

பெண் ஒருவர் தனது நான்கு சக்கர வாகனத்தில் ஒரு மலைப்பாங்கன பாதையில் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னர் ஒரு லாரியானது பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. தொடக்கத்தில் வேறு எங்கோதான் அந்த வாகனம் போகிறது என்று நினைத்த பெண்மணி, அது தன்னுடைய வாகனத்திற்கு மிக அருகில் வந்துகொண்டே இருப்பதை அறிந்த அவர், வண்டியை வேகமாக ஓட்டினார். அவர் எவ்வளவு வேகமாக வண்டியை ஒட்டினாரோ அவ்வளவு வேகமாக அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த வாகனம் அவரைப் பின்தொடர்ந்தது.

தன்னை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்த அந்தப் பெண்மணி, பிரதான சாலையிலிருந்து இறங்கி, மிகக் குறுகலான பாதையில் வண்டியை ஓட்டினார். அப்போதும் லாரி அவருடைய வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தது. ஒருகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அவர், சாலையின் அருகே ஒரு பெட்ரோல் நிலையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வேகவேக நடக்கத் தொடங்கினார். பின்னால் வந்துகொண்டிருந்த லாரி ஓட்டுனரும் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்தப் பெண்ணின் வாகனத்தை நோக்கி விரைந்தார். ஏற்கனவே பயத்தில் இருந்த அந்தப் பெண்மணி லாரி ஓட்டுநர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு, தன்னை நோக்கி வருகின்றார் என்பதை அறிந்து ஒருவிதமான பயத்தோடு அங்கிருந்து விரைந்தார்.

அப்போது லாரி ஓட்டிநர் அந்த பெண்ணின் வாகனத்திற்குப் பின்னால் சென்று, அங்கு ஒழிந்துகொண்டிருந்த மனிதனைப் பிடித்து, வெளியே கொண்டு வந்து நிறுத்தினார். தன்னுடைய வாகனத்திலிருந்து புதிய ஆள் ஒருவர் வருவதைப் பார்த்த பெண்மணி வெலவெலத்துப் போய் நின்றார். "அம்மா! இதோ நிற்கின்றானே, இவன் ஒரு பயங்கரமான கொலைக்காரன். நீங்கள் உங்கள் வாகனத்தை ஓட்டத் தொடங்குவதற்கு முன்பாக, இவன் தன்னுடைய கையில் கத்தியோடு உங்களைக் கொல்வதற்காக வாகனத்தின் பின்பக்கமாக ஏறுவதைப் பார்த்தேன். அதைச் சொல்வதற்காகவும், உங்களை இந்தக் கொலைகாரனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவுமே உங்களுடைய வாகனத்தைத் துரத்தி வந்தேன். நீங்கள்தான் அதைப் புரிந்துகொள்ளாமல் வாகனத்தை வேகவேகமாக ஓட்டினீர்கள்" என்றார்.

அந்நேரத்தில்தான் அவருக்கு புரிந்தது லாரி ஓட்டுநர் தன்னைக் கடத்துவதற்காக அல்ல, காப்பாற்றுவதற்காகவே பின் தொடர்ந்து வந்தார் என்று.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் லாரி ஓட்டுநர் போன்று ஆண்டவராகிய கடவுளும் தன்னைத் தேடி (பின்தொடர்ந்து) வருகின்றார். நாம்தான் அவருடைய அன்பைப் புரிந்துகொள்ள நிகழ்வில் வரும் பெண்மணியைப் போன்று விலகி விலகிச் செல்கின்றோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு காணமல் போன ஆடு உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இயேசு சொல்லும் இவ்வுவமை அளவில் சிறியதாக இருந்தாலும், ஆழமான உண்மைகளை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இந்த உவமையில் கடவுள் எப்படிப்பட்டவர், அவருடைய அன்பு எத்துணை உயர்ந்தது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

உவமை நமக்கு உணர்த்தும் முதலாவது உண்மை, கடவுள் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கின்றார் என்பதாகும். உவமையில் வரும் ஆயன் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் தன்னோடு இருந்தபோதும், தொலைந்து போன ஓர் ஆட்டைத் தேடி அலைகின்றார். அதைக் கண்டுபிடித்த பின்பு மிகவும் மகிழ்கின்றார்.

இரண்டாவது உண்மை கடவுள் நம்முடைய மனந்திரும்புதலுக்காக மிகவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கின்றார் என்பதாகும். ஆடு வழிதவறிச் சென்றுவிட்டது என்பதற்காக ஆயன் அந்த ஆட்டினைத் தண்டிக்கவில்லை, மாறாக அவர் ஆடு தன்னை அடையவேண்டும் என்பதற்காக மிகவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கின்றார். இது மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவத்திலிருந்து விலகி, அவரைச் சென்றடையவேண்டும் என்பதற்காக அவர் மிகப் பொறுமையோடு காத்துக் கொண்டிருக்கின்றார்.

மூன்றாவது உண்மை. கடவுள் எப்போதும் நம்மைத் தேடி வருகின்றார் என்பதாகும். மனிதர்களாகிய நாம் கடவுளைத் தேடிச் செல்கின்றோமோ இல்லையோ அவர் நம்மைத் தேடி வருகின்றார். மீட்பின் வரலாறே கடவுள் நம்மைத் தேடி வந்ததுதானே. எனவே தேடி வருகின்ற கடவுளைப் புறக்கணியாமல், அவரை ஏற்றுக்கொள்ளும்போது வாழ்வடைவோம் என்பது உறுதி.

நான்காவது உண்மை கடவுள் நம்முடைய மனந்திரும்புதலில் மகிழ்ச்சி அடைகின்றார் என்பதாகும். எப்படி ஆயன் தொலைந்து போன ஆட்டைக் கண்டுபிடித்த உடன் மகிழ்ச்சியடைகின்றானோ அது போன்று ஆண்டவரும் நம்முடைய மனந்திரும்புதலில் மகிழ்ச்சி அடைகின்றார். நிறைவாக, கடவுள் நம்மைப் பாதுகாக்கின்றவராகும் இருக்கின்றார் என்கிற உண்மையும் இந்த உவமை வெளிப்படுகின்றது. நமக்கு எந்தவொரு ஆபத்தும் துன்பமும் வராமல் இறைவன் ந நம்மைக் காக்கின்றார் என்பதே இந்த உவமை உணர்த்தும் உண்மைகளில் ஒன்றாக இருக்கின்றது.

எனவே, நம்மைத் தேடிவருகின்ற கடவுளின் அன்பை உணர்ந்து, அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இவர்களும் குழந்தைகளே

இவர்களுக்கு இழப்புக்கள், ஆபத்துக்கள், துன்பங்கள் கொடுக்காதீர்கள். ஏனென்றால் இவர்கள் விண்ணரசில் பெரியவர்கள். இத்தகையோர் அனைவரும் கடவுளைச் சார்ந்து வாழ்பவர்கள். இவர்கள் சிறு பிள்ளைகளும், சிறியோர்களுமே. உடலால், உள்ளத்தால், அறிவால், ஆற்றலால் சிறியவர்கள், சிறு குழந்தைகள். எதற்கும் கடவுளையே முற்றிலும் நம்பி வாழ்பவர்கள். இவர்கள் விண்ணரசில் பெரியவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் அத்தனைபேரும் சிறு குழந்தைகளே. நீதி கிடைக்காதவர்கள், வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், கொத்தடிமைகள், பல்வேறு பழி பாவச்செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவோர், அனைவரும் குழந்தைகளே. விண்ணரசில் பெரியவர்களே. காணாமல்போன ஆடுகளாய் அலைவோரும் ஆண்டவன் முன்னிலையில் சிறியோர்களே. தங்கள் பலவீனத்தால், பாவங்களால், சந்தர்ப்ப சூழல்களால் திசை மாறியவர்களும், சமுதாயத்தின் அழுத்தத்தில் நசுங்கியவர்களும் சிறியோர்களே. இவர்கள் கடவுளின் பார்வையில் பெரியவர்கள். இம்மூவகைச் சிறுவர்களுக்கும் இடையூறு செய்பவர்கள் கடுந்தண்டனை பெறுவர், பெறவேண்டும் என்றும் இயேசு குறிப்பிடுவது, இவர்கள் மேல் அவருக்குள்ள அக்கறை, அன்பு, ஆதங்கம் இவற்றை உறதிப்படுத்துகின்றன. இத்தகையோர மட்டில் நமக்குள்ள ஈடுபாடு என்ன?

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!