Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       11  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு (திங்கள்)
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.""

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.

அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது "தூய வழி" என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழி வரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.

அங்கே சிங்கம் இராது; அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 35: 4)
=================================================================================



பல்லவி: இதோ நம் இறைவன் வந்து நம்மை விடுவிப்பார்.

8யb ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி


================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, மாநிலத்தின் ஆண்டவராம் அரசர் வருவார், அவரே நமது அடிமைத்தனத்தின் நுகத்தடியை அகற்றிடுவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இன்று புதுமையானவற்றைக் கண்டோம்.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-26

ஒரு நாள் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.

அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், "கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என்று எண்ணிக்கொண்டனர்.

அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? "உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன" என்பதா, அல்லது "எழுந்து நடக்கவும்" என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!"" என்றார்.

உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.

இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், "இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!" என்று பேசிக்கொண்டார்கள்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"பாவ மன்னிப்பும் குணமும்"


பெண் ஒருவர் அனமியா எனப்படும் இரத்த சோகை நோய்க்காக தன்னுடைய குடும்ப மருத்துவரிடம் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். எத்தனையோ மாதங்கள் உருண்டோடிய போதும், அவருடைய உடலில் ஒரு சிறு முன்னேற்றத்தைக்கூட காண முடியவில்லை. இதனால் அந்தப் பெண்ணின் குடும்ப மருத்துவர் பக்கத்துக்கு ஊரில் இருந்த தன்னுடைய மருத்துவ நண்பரிடம் அவரை அனுப்பி வைத்து, சிகிச்சை பெற்றுக்கொள்ளச் சொன்னார்.

அதன்படி அந்தப் பெண்மணி பக்கத்து ஊரில் இருந்த மருத்துவரைச் சென்று சந்தித்தார். அவர் அந்தப் பெண்மணியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு "இவருக்கு எந்தவொரு நோயும் கிடையாது" என்று சான்றளித்தார். குடும்ப மருத்துவருக்கு இச்செய்தி தெரிய வந்தபோது மிகவும் ஆச்சரியமடைந்து நின்றார். தன்னுடைய "மருத்துவ நண்பர் உண்மை தெரியாமல் உளறுகின்றாரா" என்று அவர் அப்பெண்ணை மீண்டும் சோதித்துப் பார்த்தபோது, அவருக்கு இரத்த சோகை இருந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை.

அப்போது அவர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டார், "நீ என்னுடைய மருத்துவ நண்பரைச் சென்று சந்திப்பதற்கு முன்னதாக வழக்கத்திற்கு மாறாக ஏதாவது ஒன்றைச் செய்தாயா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, "ஆமாம், நீண்ட நாட்களுக்கு முன்பாக எனக்கெதிராகத் துரோகம் என் நெருங்கிய தோழி ஒருத்தியை மன்னியாது, அவள்மீது வெறுப்போடும் பகைமை உணர்வோடும் இருந்தேன்... உங்கள் மருத்துவ நண்பரிடம் என்னை அனுப்பியபோது, அவரைச் சந்திக்கச் செல்லும் வழியில்தான் என் தோழியை மன்னித்தேன்" என்றார்.

"நீ உனக்கெதிராகத் துரோகம் செய்த உன் தோழியை மன்னித்ததால்தான் உன்னுடைய உடலில் இருந்த நோய் நீங்கிருக்கின்றது" என்று குடும்ப மருத்துவர் அவருக்கு உண்மையை எடுத்துச் சொன்னார்.

ஒருவர் செய்யும் பாவங்களை, குற்றங்களை மன்னிக்கின்றபோது அவர் உடலில் இருக்கின்ற நோய்கள் நீங்கி நலம் கிடைக்கும் என்கிற உண்மையை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு முடக்குவாதமுற்ற மனிதர் ஒருவரைக் குணப்படுத்துகின்றார். இயேசு அம்மனிதரை குணம்பெறு என்று சொல்லி நேரடியாகக் குணப்படுத்தாமல் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொல்லி குணப்படுத்துகின்றார். எதற்காக இயேசு இந்த ஒரு வழிமுறையைப் பின்பற்றவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும்.

யூதர்கள் ஒரு மனிதருக்கு ஏற்பட்டிருக்கும் நோய், உடல் குறைப்பாடுகள் அனைத்தும் அவர் செய்த பாவத்தின் விளைவாக வந்தது என்று நினைத்தார்கள். யோவான் நற்செய்தியில் கூட பிறவியிலே பார்வையற்று இருந்த ஒருவரைப் பார்த்து சீடர்கள், "ஆண்டவரே! இவர் பார்வையற்றுப் பிறக்கக் காரணம் இவர் செய்த குற்றமாக அல்லது இவருடைய பெற்றோர் செய்த குற்றமா?" என்று கேட்பார்கள். அதற்கு இயேசு சீடர்களிடம், "இவர் செய்த குற்றமும் இல்லை, இவர் பெற்றோர் செய்த குற்றமும் இல்லை. கடவுலின் செயல் வெளிப்படவே இவர் இப்படிப் பிறந்துள்ளார்" என்று விளக்கம் தருவார் (யோவா 9: 2,3). ஆகையால், பாவம்தான் ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோய்க்குக் காரணம் என்று யூதர்கள் நினைத்து வந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சான்றாக இருக்கின்றது.

இத்தகைய புரிதலோடு இருந்த யூதர்களிடம், ஆண்டவர் இயேசு முடக்குவாத முற்றவரைக் குணப்படுத்தும்போது, அவர்களுடைய புரிதலுக்கு ஏற்றவாறு குணப்படுத்துகின்றார். அதாவது குனமாகு என்று நேரடியாகக் குணப்படுத்தாமல், பாவங்களை மன்னித்து அவருக்கு குணம் தருகின்றார்.

இயேசு செய்த இச்செயலைப் பார்த்துவிட்டு அங்கிருந்த பரிசேயக் கூட்டம், "பாவங்களை மன்னிக்க இவர் யார்?" என்று முணுமுணுக்கிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்" என்கிறார். வாழ்வின் மீதும், சாவின்மீது அதிகாரம் கொண்டிருக்கின்ற இயேசு, பாவங்களை மன்னிப்பதற்கும் அதிகாரம் கொண்டிருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நற்செய்தி வாசகம் நமக்கு இன்னொரு உண்மையையும் எடுத்துச் சொல்கிறது. அதுதான் முடக்குவாத முற்ற மனிதர் தன்னுடைய நண்பர்களின் உதவி பெற்றார் என்பதாகும். நல்ல நண்பர்கள், நம்முடைய வளர்ச்சியில் எப்போதும் அக்கறை எடுத்துக்கொள்ளக் கூடிய மனிதர்கள் நம்மோடு இருக்கின்றபோது நம்மால் எதையும் செய்ய முடியும் என்பதை இதன்வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

எனவே, இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென்று உணர்வோம்; அடுத்துவர் வளர்ச்சியில் அக்கறையோடு செயல்படுவோம், இறைவனுக்கு உகந்த நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
புதுமையானவற்றைக் கண்டோம்!

கலிலேய மற்றும் யூதேயா என்ற இரண்டு மாகாணங்களுக்கு நடுவே இருந்த சின்ன ஊர் அது. பெயர் தெரியும் அளவிற்குப் பெரிய ஊர் அல்ல. பார்டரில் இருந்த ஊர் என்பதால் இரண்டு வகையான மக்களும் அங்கே இருந்தார்கள். சாதாரண மக்கள் என்று சொல்லப்பட்ட கலிலேயர்கள். கொஞ்சம் பெரியவர்கள் என்று சொல்லப்பட்ட யூதேயர்கள். "யார் பெரியவர்?"என்ற போட்டி இந்த இரு குழுக்களுக்குள் தொடர்ந்து வந்தது.

பல ஆண்டுகளாக முடக்குவாதமுற்ற ஒருவர் ஒரு வீட்டிற்கு வெளியே கிடத்தப்பட்டிருந்தார். அந்த வீட்டின் தலைவர் கலிலேயர், தலைவி யூதேயர். இவர் முடக்குவாதமுற்றது எதனால்? என்ற கேள்வி இவர்களுக்குள்ளும், இந்த ஊரார் மத்தியிலும் இருந்தது. "இவர் செய்த பாவத்தால்"என்றனர் சிலர். "இல்லை. இவர் பெற்றோர் செய்த பாவத்தால்"என்றனர் மற்றும் சிலர். "இல்லை. இல்லை. இது முற்றிலும் ஓர் உடலியல் குறைபாடு"என்றனர் இன்னும் சிலர். இப்படி கேள்விகள்தாம் கேட்டார்களே தவிர யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. உண்பது, உறங்குவது, கழிப்பது என எல்லாமே அந்த நபருக்குக் அந்தக் கட்டிலேயே கவிழ்ந்தது.

ஒரு நாள் காலை அந்த ஊரில் பரபரப்பு. "நாசரேத்து இயேசு" வருகிறார் என்று ஊரெல்லாம் பேச்சு. "அவர் கலிலேயர்"என்று முகம் சுளித்தனர் சிலர். "இல்லை. அவர் பிறந்தது பெத்லகேமில். எனவே அவர் யூதேயர்"என்று வாதாடினர் மற்றும் சிலர். அவர் வந்தார். ஒரு வீட்டில் போதித்துக்கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் அவரின் உதட்டில் தொங்கிக்கொண்டிருந்தது.

"உங்களுள் யாராவது நலமற்று இருந்தால் என்னிடம் வரட்டும்!" என்று போதித்துக்கொண்டிருந்தார் இயேசு. கேட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவருக்கு இதை உடனடியாக சோதனை செய்துவிட வேண்டும் என்ற பரபரப்பு. "நம்ம ஊர்லதான் ஒருத்தன கட்டிலேயே ரொம்ப நாளாக கிடத்தியிருக்காங்களே. அவனுக்கு இவரால் நலம் தர முடியுமா?"தன் நண்பர்கள் மூவரோடு கிசுகிசுக்கிறான். மெதுவாக வீட்டைவிட்டு வெளியேறி கட்டில் நபர் இருந்த இடத்திற்கு வருகிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த அந்த நபரை அப்படியே தூக்குகிறார்கள். "டேய்...யார்ரா அது?"என்று அவர் கேட்டு விழிப்பதற்குள் பாதி ஊர் கடந்துவிட்டார்கள். அந்த முடக்குவாதமுற்றவருக்கு எல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. "ஊருக்குள் இத்தனை புது வீடுகளா?""இந்த ரோட எப்ப போட்டாங்க?" "இது என்ன?""அது என்ன?"என எல்லாவற்றையும் வியந்துகொண்டே வருகிறான். இவனது வாழ்க்கை தன் வீட்டு முற்றத்தில் இவ்வளவு நாள்கள் ஓய்ந்து கிடந்தது.

வீடு வந்தது. கூட்டமாய் இருந்தது. "எப்படி உள்ளே கொண்டு செல்வது?""கூரையைப் பிரிப்போம்"- உடனடியாக முடிவு எடுக்கப்பட்டது. இறக்கப்பட்டார். நலம் பெற்றார்.

"இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!"என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
ஆம். அன்று எல்லாம் புதுமையாய் தெரிந்தது அவர்களுக்கு.
யாரும் யாரையும் கண்டுகொள்ள மாட்டாங்க இந்த ஊருல! இங்கேயும் நாலு நல்லவங்களா?
நான் ஏன் நல்லவனா இருக்கக் கூடாது.
"நானும் நல்லவராய் இருப்பேன்"என்ற சிந்தனை காய்ச்சல்போல எல்லாரையும் பிடித்துக்கொள்கிறது.
அங்கே எல்லாமே புதுமையாய் நடக்கிறது.

நாலுபேரு தொடங்கிய அந்த நல்ல காரியத்திற்குக் காரணம் இயேசு.
இயேசு வந்து சென்றால் அங்கே எல்லாம் புதுமையே.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!