Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       10  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11

"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: "அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்."

குரலொலி ஒன்று முழங்குகின்றது: "பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்."

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! "இதோ உன் கடவுள்" என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன.

ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: 7 காண்க)
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்.

8ab ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

=================================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================================
புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்.

ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.

ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும்.

அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்.
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 3: 4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.  

+  மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-8

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: "இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.

பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்"" என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலைநிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டக முடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார்.

அவர் தொடர்ந்து, "என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்யுங்கள்

அவன் மூர்க்கமானவன்; தன்ன சுயநலத்துக்காக எவரையும் ஏமாற்றக் கூடியவன். ஆனால் அவன் தந்தையோ அந்த ஊரே போற்றும் அளவுக்கு நல்லவர்; நேர்மையானவர். அவர் எவ்வளவோமுறை சொல்லியும் அவன் ஏமாற்றுவதை நிறுத்துவதாக இல்லை. கடைசியில் ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்து, "நான் உன்னிடம் எவ்வளவோ முறை கூறிவிட்டேன், ஆனாலும் நீ திருந்துவதாகயில்லை. இருக்கட்டும். இனி நீ ஒவ்வொரு முறை ஏமாற்றும்போதும் நம் வாசல் கதவில் ஒவ்வொரு ஆணியாக அடி. அது போதும் எனக்கு" என்றவாறு கூறிச் சென்றார்.

அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை இனி கேள்வி கேட்பாரில்லை என சுதந்திரமாக சுற்றித் திரிந்தான். சில மாதங்கள் கழித்து இரவு வீட்டுக்கு வந்தவுடன் அந்தக் கதவைப் பார்த்து அதிர்ச்சியுற்றான். காரணம், சிறிது கூட இடைவெளி இல்லாமல் அதில் ஆணி அறையப்பட்டிருந்தது. அவனுக்கு மனசு வலித்தது. ஏனோ தான் செய்த ஏமாற்று வேலைகள் எல்லாம் கண்கள் முன் நிழலாடின. வீறிட்டு அழத் தொடங்கினான். பிறகு தன் தந்தையிடம் சென்று தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் தான் எவருக்கும் துன்பம் அளிக்காத வண்ணம் வாழப் போவதாகவும் சத்தியம் செய்தான்.

அதைக் கேட்ட அவன் அப்பா சிறிய புன்முறுவலுடன், "நல்லது. இனி மக்களுக்கு உன்னாலான நல்லதை செய். நீ செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் நம் கதவில் அறையப்பட்ட ஆணிகளை ஒவ்வொன்றாக நீக்கிவிடு" என்றார். மகன் சிறிது நிம்மதி அடையலானான். ஆனால் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல நன்மை செய்வது அவ்வளவு சுலபமாய் இல்லை. ஒவ்வொரு நாளும் அவன் தன் வீட்டுக் கதவின் முன் நின்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பான். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள் ஆயின. அவனது தந்தையும் மூப்பு காரணமாக படுத்த படுக்கையானார்.

அன்றொரு நாள், அவன் மிக்க மகிழ்ச்சியுடன் தன் தந்தையிடம் வந்து தான் கதவில் அறையப்பட்ட எல்லா ஆணிகளையும் எடுத்து விட்டதாகவும், இதோ தன் கையில் இருப்பது தான் கடைசி ஆணி என்றும் காண்பித்து, தான் இப்போது நல்லவனா? என தந்தையிடம் வினவினான். தந்தை புன்னகைத்துக்கொண்டே மீண்டும் கதவை சென்றுப் பார்க்குமாறு கூறினார். திரும்பி வந்த மகனிடம், "என்ன தெரிந்தது?" எனக் கேட்டார். அதற்கு மகனோ, "கதவு முழுவதும் சிறு சிறு ஓட்டைகளாக உள்ளன" என்றான். தந்தை மென்மையாக, "நீ செய்த தவறுகள் தான் அந்த கதவில் அறையப் பட்ட ஆணிகள். நீ திருந்துவதன் மூலம் அந்த ஆணிகள் பிடுங்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் நீ அறைந்ததன் விளைவுகளான ஓட்டைகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது." என்றார்.

(எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய "கேள்விக்குறி" என்ற புத்தகத்தில் இடம்பெற்ற கதை)

தவறுசெய்து திருந்தி வாழும் மனிதனை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், புறக்கணிக்கலாம் அல்லது புறக்கணிக்காமலும் போகலாம். ஆனால் இறைவன் அப்படியில்லை. அவர் நிச்சயம் அவனை ஏற்றுக்கொள்வார்; அவனுக்கு அவர் தன்னுடைய ஆசிரையும், அருளையும்தந்து காத்திடுவார். இதுதான் இன்றைய இறைவார்த்தையின் சாராம்சமாக இருக்கின்றது. திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை "ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்வோம்" என்பதாகும். நாம் எப்படி ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்தவர்களிடம், பாவ மன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்கிறார். திருமுழுக்கு என்பது மனமாற்றத்தின் அடையாளமாக இருக்கின்றது. ஆகையால் ஒருவர் இறைவன் தரக்கூடிய விடுதலையை, பாவ மன்னிப்பைப் பெறவேண்டுமென்றால் மனம்மாறவேண்டும். இதுதான் இறைவன் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கக்கூடிய இருக்கின்றது.

அடுத்ததாக எதிலிருந்து மனமாற்றம் அடையவேண்டும் என்பது நமது சிந்தனைக் கூறியதாக இருக்கின்றது. விவேகானந்தர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "பொய்மையிலிருந்து வாய்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், தீமையிலிருந்து நன்மைக்கும் நாம் திரும்பிவரவேண்டும். அதுதான் உண்மையான மனமாற்றம்" என்று. ஆகவே, நாம் தீய வழிகளிலிருந்து விலகி, நல்வழியில் நடக்கவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான மனமாற்றத்தை அடைந்திருக்கிறோம் என்று அர்த்தமாகும்.

இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளான யாவே இறைவனை மறந்துவிட்டு, பொய்தெய்வங்களை வழிபாட்டு தான்தோன்றித்தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இதனால் சினம்கொண்ட கடவுள் அவர்களைத் தண்டித்தார்; அந்நியரின் கைகளில் அவர்களை ஒப்புவித்தார். அப்போதுதான் அவர்கள் தங்களுடைய தவறுகளை உணர்ந்தார்கள்; கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்து விட்டாரே என்று மனம்வருந்தி அழுதார்கள். "பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச்செடிகள் மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டார், "சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்" என்றனர். ஆண்டவருக்கு உரித்தாகும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் இசைப்போம்?" (திருப்பாடல் 137: 1-4) என்ற வார்த்தைகள் இஸ்ரயேல் தங்களுடைய தவறை உணர்ந்து, வருந்தி அழுவதை சுட்டிக்காட்டுகிறது. அதனால்தான் கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுடைய குற்றங்களை மன்னிக்கிறார் (முதல் வாசகம்).

ஆகவே, இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தவறை உணர்ந்து, மனம்வருந்தியபோது இறைவன் மன்னித்ததுபோல, நாமும் நம்முடைய தவறை உணர்ந்து, திருந்தி வாழ்கின்றபோது இறைவன் நம்முடைய பாவங்களை மன்னிப்பார் என்பது உறுதி. எப்போது நாம் நம்முடைய பாவத்தை உணர்ந்து, மனமாறுகின்றோமோ அப்போதே நாம் ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்யத் தொடங்கிவிடுகின்றோம் என்று அர்த்தமாகும்.

நிறைவாக பாவத்திலிருந்து மனம்மாறிவிட்டால் போதுமா?, அதுவே நமக்கு மீட்பையும், இறைவன் தரக்கூடிய ஆசீரையும் பெற்றுத்தந்துவிடுமா? என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லலாம். ஏனென்றால், மத்தேயு நற்செய்தி 6:8 ல் வாசிக்கின்றோம், "நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" என்று. ஆம், நாம் மனம்மாறியவர்கள் என்பதைக் குறித்துக்காட்ட, நற்செயல்களைச் செய்யவேண்டும், இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும். மனம்மாறிவிட்டேன் என்று சொல்லி, அதே நிலையில் இருப்பதோ அல்லது எந்த ஒரு நன்மையும் செய்யாதிருத்தலோ உண்மையான மனமாற்றம் ஆகாது.

ஒருசிலர் இறைவனின் வருகை எப்போதோ வரப்போகிறது, அதற்காக நாம் எதற்கு இப்போதே கவலைப்படவேண்டும்?, இப்போதே எதற்கு நன்மை செய்யவேண்டும்? பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப் போன்று திடிரென்று வரும் என்று இன்றைய இரண்டாம் வாசகமானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, நாம் இறைவன் வரக் காலம் தாழ்த்துவார், பின்னால் நல்லதொரு வாழ்ந்துகொள்வோம், இப்போது எப்படியும் வாழ்வோம் என்று நினைக்காமல் இப்போதே, இந்த நொடியிலிருந்தே நன்மை செய்து வாழக் கற்றுக்கொள்வோம். அதுதான் ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வதற்கான இரண்டாம் மற்றும் இறுதிப் படிநிலையாக இருக்கின்றது.

ஒரு கிராமத்தில் மிகுந்த செல்வம்கொண்ட பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக அறிவித்தான். அப்படி இருந்தும் மக்கள் அவனைக் குறை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான்.

துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்காக மக்கள் எனக்கு மதிப்பளிக்காமல், இன்னும் குறைகூறிக்கொண்டே இருக்கிறார்கள்?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றிய கதை சொல்ல வேண்டும்" என்றார். அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான்.

பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும்தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன?" என்று வருத்தத்தோடு கேட்டது. அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், ஆனால் நீ இறந்து தருகிறாய், அதனால்தான் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது" என்று கதையை கூறினார். பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல்தான், உயிருடன் இருக்கும்போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.

ஆம், நாம் இறந்தபிறகு அல்ல, வாழும்போதே - இப்போதே - நன்மைகளைச் செய்யவேண்டும். அதுதான் ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்விற்கு அடிப்படியாகும்.

ஆகவே, நாம் நமக்கு மீட்பினை, வாழ்வினை, நிம்மதியைத் தரக்கூடிய இறைவனது, அந்த ஆண்டவனது வருகையை ஆயத்தம் செய்யவேண்டும் என்றால், அதற்கு நாம் நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம்மாறவேண்டும். அதோடு மட்டுமல்லாமால், நன்மையான காரியத்தை இன்றே, இப்போதே, நாம் இந்த புவியில் வாழும்போதே செய்யவேண்டும். அப்போது இறைவன் நமக்கு எல்லா ஆசிரையும் தந்து நம்மைக் காத்திடுவார். எனவே நன்மையானதைச் செய்வோம். நாயகன் இயேசுவின் அருள் பெறுவோம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!