Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       08  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் முதல் வாரம் - செவ்வாய்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27

தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, "இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?"என்று கேட்டேன்.

அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார். இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன. ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்; அந்த அரசுரிமையை என்றும் ஊழிஊழிக்காலமும் கொண்டிருப்பர்.

அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு, அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றை விடப் பெரிதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது. தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது. அவர் தொடர்ந்து பேசினார்; அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்தூளாக நொறுக்கி விழுங்கிவிடும். அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்ற இருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன.

அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினவர்களை விட வேறுபட்டிருப்பான்; மூன்று அரசர்களை முறியடிப்பான்; அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்; உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்; வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர்.

ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்; அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும். ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு; எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 59-60. 61-62. 63-64 (பல்லவி: 59b)
=================================================================================

பல்லவி: என்றென்றும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, போற்றுங்கள்.

59 மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 60 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

61 ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 62 ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

63 நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 64 தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.

மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு

திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தவர் மார்டின் லூதர். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார, அவரும் ஒரு துறவுமடத்தில் துறவியாக இருந்து வந்தார்.

ஒருநாள் அவர்கள் இருவரும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடிவந்தார்கள். இருவரும் நற்செய்திப் பணியை எப்படி அறிவிக்கலாம் எனத் திட்டம் தீட்டினார்கள். அப்போது மார்டின் லூதரின் நண்பர் அவரிடம்,"நீ எல்லா இடங்களுக்கும் சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எடுத்துரை. நான் வேண்டுமானாலும் துறவுமடத்தில் இருந்து, நீ நன்றாக நற்செய்திப் பணியைச் செய்ய, உனக்காகப் பிரார்த்தித்துக்கொண்டே இருக்கின்றேன்" என்றார். நண்பர் சொன்னது மார்டின் லூதருக்கு சரியெனப் படவே, அவர் அதனை ஏற்றுக்கொண்டு, கடைப்பிடித்து வந்தார்.

நாட்கள் சென்றன. ஒருநாள் மார்டின் லூதரின் நண்பர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் மிகப்பெரிய நிலப்பரப்பில் விளைந்த நெல்லை யாரோ ஒருவர் அறுவடை செய்வது போன்று இருந்தது. நண்பர் அறுவடை செய்யும் மனிதரைக் கவனித்த போது அது மார்டின் லூதர்தான் என்று நண்பருக்கு உண்மை புரிந்தது. நற்செய்தி அறிவிக்கும் பணியை மார்டின் லூதர் மட்டும் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்திற்கு மார்டின் லூதர் என்ற தனியொரு நபரால் மட்டும் நற்செய்தியை அறிவிக்க முடியாது என்பதை உணர்ந்தார்.

அடுத்தநாள் மார்டின் லூதரின் நண்பர் துறவுமடத்தை விட்டுவிட்டு, நற்செய்தியை அறிவிப்பதற்காக மார்டின் லூதர் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தது போல, அவரது நண்பரும் நற்செய்தி அறிவிப்புக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தார்.

"அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு" என்ற இயேசுவின் வார்த்தைகளை ஏற்று, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்பதைத்தான் மேலே சொல்லப்பட்ட நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளத்திற்கு அனுப்புகின்றார். அப்படி அனுப்புகின்றபோது அவர்கள் என்னென்ன செய்யவேண்டும்; எப்படி இருக்கவேண்டும் என்ற அறிவுரையைத் தருகின்றார். நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தீய ஆவிகளை ஒட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் இயேசு தம் சீடர்களுக்கு அதிகாரம் அளித்துவிட்டு,"வழிதவறிப் போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; நோயாளிகளைக் குணமாக்குங்கள்; பேய்களை ஒட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" இதுதான் தம் சீடர்களுக்கு வழங்கும் போதனையாக இருக்கின்றது.

இயேசு தம் சீடர்களை வெறுமனே நற்செய்தி அறிவிப்பதற்கு மட்டும் அனுப்பவில்லை, அவர்கள் பேய்களை ஓட்டி, நோய்களைக் குணமாக்கவும் இறந்தோரை உயிர்த்தெழச் செய்யவேண்டும் என்பதற்காகவும் அனுப்பி வைக்கின்றார். ஏனென்றால், திருச்சபை அன்றிலிருந்து இன்று வரை ஆன்மீகப் பணிகளை மட்டும் செய்துகொண்டிருக்க வில்லை, அது சமூதாயப் பணிகளையும் செய்துகொண்டிருகின்றது. எனவே , இயேசுவின் சீடர்கள் இதனை நன்கு உணர்ந்து, ஆன்மீகப் பணிகளைப் மட்டும் செய்துகொண்டிருக்காமல், சமுதாயப் பணிகளையும் செய்ய வேண்டும். அப்போதுதான் இயேசுவின் கனவு நிறைவு பெறும்.

சீடர்களுக்கு பேய்களை ஒட்டவும், நோய்களைக் குணமாக்கவும் அதிகாரம் அளித்த ஆண்டவர் இயேசு இத்தகைய பணிகளுக்கு ஆட்கள் மிக மிகக் குறைவு. எனவே இறைப்பணியாளர்கள் இப்பணிக்கு அதிகம் தேவை என்கிறார் இயேசு. நாம் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்ற பணியை செய்யத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நற்செய்தி அறிவிக்கின்ற பணி  குருக்களுக்கும் கன்னியர்களுக்கும் மட்டுமே உரித்தானது என நினைத்துக்கொண்டு பொறுப்புகளைத் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கின்றோம். உண்மையான கிறிஸ்தவன் /திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவன் ஆண்டவர் இயேசு விட்டுச்சென்ற பணியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்து, நற்செய்தியின் தூதுவர்களாக வாழவேண்டும்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய மடலில்,"நான் நற்செய்தியை அறிவிக்கின்றேன் என்றாலும், இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. நற்செய்தி அறிவிப்பது என்மேல் சுமத்தப்பட்ட கடமை. நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு (1 கொரி 9:16) எனக் கூறுவார். இது முற்றிலும் உண்மை. நாம் நற்செய்தியை அறிவிக்கின்றோம் என்றால், அதில் நாம் பெருமைப்படத் தேவையில்லை. ஏனென்றால் அதில் நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை.

எனவே, ஆண்டவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்வோம், நற்செய்திப் பணியாளர்கள் மேலும் மேலும் பெருக இறைவனிடம் ஜெபிப்போம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!