Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       07  டிசம்பர் 2017  
                                 திருவருகைக்காலம் முதல் வாரம் - வியாழன்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a)
=================================================================================

பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27a ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசா 55: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21,24-27

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவர" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாய் வாழ்வோம்"


இரஷ்யாவைச் சேர்ந்த மிகச் சிறந்த நாவலாசியரான தாஸ்தாயோஸ்கி (Dostoevsky) எழுதிய புகழ்பெற்ற நாவல்தான் The Idiot.

இதில் வரக்கூடிய மிக முக்கியமான கதாபாத்திரம் பிரின்ஸ் மிஸ்கின் என்பதாகும். பிரின்ஸ் மிஸ்கின் தன்னுடைய நண்பர்களைப் போன்று அல்லாமல், வித்தியாசமாக வாழ்ந்து வந்தார். அவருடைய நண்பர்களோ பொருள் தேடுவதும் பணம் ஈட்டுவதும்தான் புகழ் அடைவதும்தான் தங்களுடைய வாழ்க்கையின் இலட்சியம் என்றிருந்த வேளையில், பிரின்ஸ் மிஸ்கின் எதையும் எதிர்பார்க்காமல் எல்லாருக்கு சேவைகள் செய்து வந்தார்; தன்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்ந்தார்.

இதனால் அவருடைய நண்பர்கள் அவரை பிழைக்கத் தெரியாதவன்; முட்டாள் என்று கேலி செய்தார்கள்.

பிரின்ஸ் மிஸ்கினை அவருடைய நண்பர்கள் பிழைக்கத் தெரியாதவன், முட்டாள் என்று கூறினாலும், அவர் மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் உதவிகள் செய்ததால், மக்கள் அவரை மிக உயர்வாக பார்த்தார்கள். நிறைய இளைஞர்கள் பிரின்ஸ் மிஸ்கினைப் போன்று எல்லாருக்கும் தங்களால் இயன்ற நன்மைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.

ஏனோ தானோ என்ற வாழ்க்கையல்ல, எல்லாருக்கும் நன்மைகள் புரிகின்ற வாழ்க்கைதான் அனைவர்க்கும், ஏன் ஆண்டவருக்குக் கூட பிடித்தமான வாழ்க்கை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓர் உண்மையான கிறிஸ்தவன்/ கிறிஸ்தவள் எப்படி இருக்கவேண்டும் என்று போதிக்கின்றார். "என்னை நோக்கி, ஆண்டவரே! ஆண்டவரே! எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

இயேசு வாழ்ந்த காலத்தில், அவருடைய பெயரைச் சொல்லி நிறையப் பேர் பேய்களை ஒட்டினார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையோ இயேசுவின் போதனைக்கு ஏற்றமாதிரி இல்லை. அதனால்தான் ஆண்டவர் இயேசு மேற்சொன்ன வார்த்தைகளை உதிர்க்கின்றார். கிறிஸ்தவர்களாக இருக்கும் நாம், வெறுமனே கிறிஸ்துவை வழிபடுபவர்களாக மட்டும் இருந்து விடமால், அவருடைய போதனைக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் ஆண்டவர் இயேசு சொல்வது போன்று விண்ணகத்திற்குள் செல்ல முடியும்.

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது குறித்துப் பேசும் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதால், கடவுளின் கட்டளைக் கடைப்பிடித்து வாழ்வதால் என்னென்ன நன்மைகளையும், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது வாழாததால் என்னென்ன இழப்புகளையும் சந்திக்கின்றோம் என்று எடுத்துக்கூறுகின்றார்.

முதலில் நாம் கடவுளின் திருவுளத்தை அல்லது அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதனால் என்ன ஆசிர்வாதத்தைப் பெறுகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்." நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகின்ற எவரும் பாறையின்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பானவர்" என்கின்றார். ஆம், நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்கின்றபோது நம்முடைய வாழ்க்கை என்றுமே உறுதியாக இருக்கும் என்பதுதான் உண்மை.

பாறை என்று சொல்கின்றபோது விவிலியத்தில் பாறை என்ற வார்த்தை கடவுளோடு மட்டுமே தொடர்படுத்திப் பேசப்படுகின்றது (திபா 18:2). அப்படியானால், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பவர், ஆண்டவர்மீது தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றார் என்பது உறுதியாகின்றது. ஆண்டவர் மீது தன்னுடைய வாழக்கையை அமைத்துக்கொள்ளும்போது எந்தவொரு இன்னலும் இக்கட்டும் வரவே வாராது; நம்மை ஒரு தீங்கும் தீண்டாது.

இறைவார்த்தைக்கு செவிமடுத்து வாழ்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று சிந்தித்துப் பார்த்த நாம், இறைவார்த்தைக்கு செவிமடுக்காமல் இருப்பதனால் என்னென்ன இழப்புகளைச்பினைச் சந்திக்கின்றோம் என்று இப்போது பார்ப்போம். இயேசு கூறுகின்றார், "நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்" என்று. மணல் வீட்டைக் கட்டுவது முன்மதியில்லாமல் செயல்படுவதற்குச் சமமாகும். ஏனென்றால் வீட்டைக் கட்டுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. "வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் நடத்திப் பார்" என்று முன்னோர்கள் சாதாரணமாகச் சொல்லிவிடவில்லை. அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. ஆகவே, வீட்டைக் கட்டும்போது நல்ல இடம்பார்த்துக் கட்டவேண்டும். மணல்மீது வீட்டைக் கட்டுவோரின் வீடு, உறுதியில்லாமல் ஒருநாள் அழிந்தே தீரும் என்பது உண்மை. மணல்மீது வீட்டைக் கட்டுவோர் உலக காரியங்களை நம்பி வாழ்வோரைக் குறிப்பதாக இருக்கின்றது. இவர்கள் ஒருபோதும் நிலைத்து நிற்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.

ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்து, பாறைமீது வீட்டைக் கட்டியவர்களுக்கு ஒப்பாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!