Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      04  டிசம்பர் 2017  
                                                திருவருகைக்காலம் முதல் வாரம் - திங்கள்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து "புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள்.

ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


(முதல் ஆண்டு வாசகத் தொகுப்பின்படி, மேற்கண்டுள்ள வாசகம் திருவருகைக் கால முதல் ஞாயிற்றுக் கிழமையில் வாசிக்கப்பட்டால், பின்வரும் வாசகத்தைப் பயன்படுத்தலாம்.)

நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6

ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும் "புனிதர்" எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் "புனிதர்" எனப்படுவர்.

என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத் தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார்.

சீயோன் மலையின் முழுப் பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; "உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" பல்லவி

8 "உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 80: 3

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்" என்றார்.

இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் "வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து "இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" என்றார்.

இதைக் கேட்டு, இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நோய்வாய்பட்டுக் கிடந்த பணியாளரிடம் பரிவும் ஆண்டவரிடம் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்த நூற்றுவத் தலைவர்!

இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி, ஒரு கால் முறிந்துபோய் நகரில் இருந்த பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இருந்த லில்லி ஒரு செவிலித்தாய் நோயாளிகளைத் தன்னுடைய பிள்ளைகளைப் போன்று கவனித்துக் கொள்வதில் பேர் போனவர். அவர்தான் கால் முறிந்துபோய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞரையும் கவனித்துக்கொண்டார்.

கால் முறிந்துபோனதால் மிகுந்த வேதனையோடும் கவலை தோய்ந்த முகத்தோடும் படுத்திருந்த அந்த இளைஞரின் அருகே சென்ற லில்லி மிக அன்பாக, "இந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடு. அப்போதுதான் வேதனை குறையும்" என்றார். அந்த இளைஞர் லில்லி சொன்னதைக் கவனியாதவர் போல், திரும்பிப் படுத்துக்கொண்டார். இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த லில்லி அந்த இளைஞருக்கு வேறொரு விதமாய் சிகிச்சை அளிக்க நினைத்தார். எனவே, மருத்துவமனையின் கீழே இருந்த சமையறைக்குச் சென்று, அங்கே இரண்டு கப் சூப் தாயாரித்து, அதனை அந்த இளைஞரிடம் கொண்டு வந்து, "தம்பி உனக்காக சூப் தயாரித்து வந்திருக்கிறேன். இதில் ஒரு கப்பாவது எடுத்துப் பருகு. அப்போதுதான் உடலில் இருக்கின்ற களைப்பானது குறையும்" என்றார். அதற்கு அந்த இளைஞர் "வேண்டாம் என்னை தனியாக விட்டுவிடுங்கள்" என்றார்.

இளைஞர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட லில்லிக்கு இன்னும் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல், "தம்பி, இந்த அறையில் இருக்கின்ற தொலைக்காட்சியாவது நான் பார்ப்பதற்கு என்னை அனுமதிப்பாயா?" என்றார். இளைஞரோ சரி என்பதுபோல் தலையை ஆட்டினார்.

அவர் ஓரமாக உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்த இளைஞரும் சாய்ந்து படுத்துக்கொண்டு தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கினார். உடனே லில்லி அந்த இளைஞரிடம் மெதுவாகப் பேசத் தொடங்கினார். அவருடைய பேச்சு இளைஞருக்குப் பிடித்துப் போகவே, அவரும் பேசத் தொடங்கினார். பேச்சின் ஊடே லில்லி அந்த இளைஞரிடம், "தம்பி ஒரு கப் சூப் சாப்பிட வேண்டாம். அரை கப்பாவது சாப்பிடு" என்றார். அவர் திரும்பத் திரும்பத் கேட்டுக் கேட்டுகொண்டதால் இளைஞரும் அரை கப் சூப் வாங்கிக் குடித்தார். பின்னர் லில்லி அவருக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்க, அவர் அதை வாங்கி உட்கொண்ட பின்பு தூகச் சென்றார்.

அடுத்த நாளும் லில்லி இளைஞருக்கு சிகிச்சை அளிக்க சென்றபோது இரண்டு கப் சூப்போடு சென்றார். அன்றைக்கு அவர் லில்லியிடமிருந்து ஒரு கப் சூப் வாங்கிப் பருகினார் அது மட்டுமல்லாமல், தன்னுடைய குடும்பத்தைப் பற்றியும், படிப்பைப் பற்றியும் லில்லியிடம் பேசத் தொடங்கினார். லில்லியும் அந்த இளைஞரை சொல்வதையெல்லாம் மிகுந்த அன்போடு கேட்டுக்கொண்டார்.

நாட்கள் செல்லச் செல்ல லில்லி கொண்டு சென்ற இரண்டு கப் சூப்பையும் வாங்கிக் குடித்தார். இப்போது அவரால் எழுந்து நடக்க முடிந்தது. முழுமையாக அவர் குணமடைந்த பிறகு மருத்துவ மனையிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.

இது நடந்து ஓரிரு ஆண்டுகள் இருக்கும். ஒருநாள் லில்லி பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் தன்னை அழைப்பது போன்று கேட்க, அவர் திரும்பிப் பார்ப்பார். அங்கே முன்னொரு நாளில் கால் முறிந்து சிகிச்சை பெற்ற இளைஞர் நின்றிருந்தார். அவருக்கு அருகிலே அவருடைய மனைவி நின்றுகொண்டிருந்தார். அந்த இளைஞர் தன்னுடைய மனைவியிடம், "இவர்தான் முன்பு நான் மருத்துவமனையில் இருந்தபோது என்னை அன்பாக கவனித்துக்கொண்டார். உள்ளன்போடு சூப் எல்லாம் போட்டுத்தந்து என்னை நன்றாகப் பராமரித்துக் கொண்டார். இன்று நான் உயிர்வாழ்வது இவரால்தான்" என்றார். பின்னர் அந்த இளைஞரும் அவருடைய மனைவியும் அவரைக் கையெடுத்துக் குப்பிட்டுவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றனர்.

எத்தனையோ மருத்துவர்கள், செவிலித் தாய்கள் தங்களிடம் வருகின்ற நோயாளிகளை மிகவும் கடுமையாக நடத்தும்போது, லில்லி அவர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டு, நோயாளிகளை தன்னுடைய பிள்ளைகளைப் போன்று நினைத்து, அவர்களுக்குச் சேவை செய்வதது மிகவும் சிறப்பாக ஒரு காரியமாகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நூற்றுவத் தலைவர் முடக்குவாதமுற்ற தன்னுடைய பணியாளர்மீது (மத்தேயு நற்செய்தியைத் தவிர்த்து லூக்கா மற்றும் யோவான் நற்செய்தியில் பையன் என்று இல்லாமல் பணியாளர் என்றே இருக்கின்றது) பரிவு கொண்டு அவரைக் குணப்படவேண்டுமென்று இயேசுவிடம் வருகின்றார். பணியாளர் என்றால் விலங்கைவிட கீழாக நடத்தும் மனிதர்கள் மத்தியில், நூற்றுவத் தலைவர் தன்னுடைய பணியாளர்மீது இரக்கம்கொண்டு, அவருடைய நோய் நீங்க இயேசுவிடம் வந்தது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று. அது மட்டுமல்லாமல் இயேசுவிடம் அவர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையும் அவருடைய பணியாளரின் நோய் நீங்கக் காரணமாக இருக்கின்றது.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நற்செய்தியில் வரும் நூற்றுவத் தலைவரைப் போன்று நமக்கு கீழே உள்ள மனிதர்களிடம் பரிவும், நமக்கு மேலே உள்ளே இறைவனிடம் நம்பிக்கையும் கொண்டு வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நம்பிக்கைதான் நமக்கு நலம் தரும் ஊற்று. ஆகவே, நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், சக மனிதர்களிடம் உண்மையான பரிவினைக் கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!