Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      02  டிசெம்பர்  2017  
                                                   பொதுக்காலம் 34ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆட்சியும் அரசுரிமையும் புனித மக்களுக்குத் தரப்படும்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 15-27

தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, "இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?" என்று கேட்டேன்.

அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார். இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன. ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்; அந்த அரசுரிமையை என்றும் ஊழிஊழிக்காலமும் கொண்டிருப்பர்.

அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு, அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றை விடப் பெரிதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது. தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது. அவர் தொடர்ந்து பேசினார்; அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்தூளாக நொறுக்கி விழுங்கிவிடும். அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்ற இருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன.

அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினவர்களை விட வேறுபட்டிருப்பான்; மூன்று அரசர்களை முறியடிப்பான்; அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்; உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்; வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர்.

ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்; அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும். ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு; எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 59-60. 61-62. 63-64 (பல்லவி: 59b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, போற்றுங்கள்.

59 மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 60 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

61 ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 62 ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

63 நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 64 தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.

மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுங்கள்

இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம்.

அப்போது ஜெர்மனியில் இருக்கும் ஸ்டட்கார்ட் என்னும் பகுதியிலிருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்த பால்கனியில் இம்கார்ட் வூட் (Irmgard Wood) என்ற பனிரெண்டு வயது சிறுமியும் அவருடைய தாயும் அவருடைய சகோதரியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் வானத்திலிருந்து திடிரென்று ஒரு போர் விமானமானது எரிந்து கீழே விழுந்தது. இதைப் பார்த்த அம்மூவரும் அந்தப் போர் விமானத்தில் இருந்த விமான ஓட்டிக்கு எந்தவொரு ஆபத்தும் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். அதன் பின்னர் அவர்கள் தங்களுடைய பணிகளைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

இதன்பின்பு இம்கார்ட் வுட்டின் குடும்பம் ஸ்டட்கார்ட்லிருந்து அமெரிக்காவில் இருக்கும் கலிபோனியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்து சென்றது. இம்கார்டின் தாய்க்கு கலிபோனியாவில் இருந்த ஒரு மருத்துவனையில் செவிலித் தாய் வேலை கிடைத்தது. அதனால் அங்கு அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இம்கார்ட்டின் தாயானவள் மருத்துவமனையில் நோயாளிகளிடம் பேசிய பேச்சையும், உச்சரிப்பையும் கவனித்த ஒருவர், "உங்களுக்கு சொந்த ஊர் ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட் தானே? "என்று கேட்டார். அதற்கு இம்கார்டின் தாய், "ஆமாம், எப்படிச் சரியாகச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். "உங்களுடைய உச்சரிப்பே நீங்கள ஸ்டட்கார்ட்டைச் சார்ந்தவர்கள் என்பதை மிகத் தெளிவாக வெளிபடுத்துகின்றது... சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்டட்கார்ட் பகுதியில் போர் விமானத்தில் நான் பயணித்தபோது, அது எரிந்து கீழே விழுந்தது. ஆனால், விபத்தில் எனக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை; பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டேன். அப்போது நான் நினைத்துக்கொண்டேன் ஸ்டட்கார்ட்டில் இருக்கும் யாரோ ஒருவரின் ஜெபம்தான் என்னைக் காப்பாற்றியது என்று. இந்த விபத்துக்குப் பிறகு ஸ்டட்கார்ட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். அதனால் அங்கே இருப்பவர்களின் உச்சரிப்பு எனக்குத் தெரியும்" என்றார் அந்த மனிதர்.

"போர்விமானத்திலிருந்து கீழே விழுந்தபோது எந்தவொரு காயமும் இல்லாமல், பத்திரமாகக் காக்கப்பட்டதற்கு ஒருவருடைய ஜெபம்தான் காரணம் என்று சொன்னீர்களே, அந்த ஜெபத்தை எழுப்பியவர்கள் வேறுயாருமல்ல நானும் என்னுடைய பிள்ளைகளும்தான்" என்றார் இம்கார்டின் தாய். இதைக் கேட்ட அந்த மனிதரால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. அவர் இம்கார்டின் தாய்க்கு நிறைய பழங்களும் இனிப்புகளும் வாங்கிக் கொடுத்து, அனுப்பி வைத்தார்.

ஒருவர் மற்றவருக்காக எழுப்பும் ஜெபம் எத்துனை வல்லமை நிறைந்தது, அது எந்தளவுக்கு கடவுளின் அருளைப் பெற்றுத்தரும் என்கின்ற உண்மையை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, நிகழப்போகும், "அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிட மகன் முன்னிலையில் வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுங்கள்" என்கின்றார். இறுதி நாட்களில் நிகழவிருக்கும் மானிட மகனுடைய வருகை உலகத்திற்கு தீர்ப்பினைக் கொண்டு வரும். எனவே அந்தத் தீர்ப்பின்போது நாம் இறைவனுக்கு முன்பாகத் தகுந்தவர்களாக இருக்கவேண்டும் என்றால், அதற்கு நம்முடைய உழைப்பும் முயற்சியும் மட்டும் போதாது. இறைவனுடைய உதவியும் துணையும் அதற்குத் தேவைப்படுகின்றது. இறைவனின் துணியை நாம் ஜெபத்தினால் மட்டுமே பெற முடியும். எனவேதான் இயேசு, "எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுங்கள்" என்கின்றார்.

இறுதி நாட்களில் நிகழ இருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அச்சத்தைத் தருவனவாக இருந்தாலும், அவையெல்லாம் மானிட மகனுடைய வருகைக்கு முன்னதாக நிகழவேண்டியதாகவே இருக்கின்றன. எப்படி ஆண்டவரின் நாள் வருகின்றபோது தீமைகள் அழிக்கப்பட்டு, நன்மைகள் நிலைநாட்டப்படுகின்றனவோ அது போன்று மானிட மகனுடைய வருகைக்கு முன்னதாக தீமைகள் அழிக்கப்பட்டு, நன்மைகள் நிலைநாட்டப் படவேண்டும். எனவே, இத்தகைய நிகழ்வுகள் நடந்தாக வேண்டும். அப்போதுதான் உலகமானது புத்தொளி பெறும்.

நாம் இறைவனுக்கு முன்பாக நிற்பதற்கு தகுதியானவர்களாக மாற, இவ்வுலகு சார்ந்தவற்றை நாடக்கூடாது. இவ்வுலகு சார்ந்த வாழ்க்கையை நாம் வாழ்கின்றபோது நிச்சயம் மறுவுலக வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. மறுவுலகு சார்ந்த காரியங்களான அன்பு, பொறுமை, மன்னிப்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவற்றை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வாழ்கின்றபோது மறுவுலக வாழ்வில் நுழைவோம் என்பது உறுதி.

ஆகவே, நாம் மறுவுலக வாழ்வைப் பெற, அதற்குரிய காரியங்களைத் தேடுவோம். எப்பொழுதும் விழித்திருந்து இறைவனிடம் மன்றாடுவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!