Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      29  நவெம்பர் 2017  
                                                   பொதுக்காலம் 34ம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14

இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன. அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று மேலெழும்பின.

அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப் போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டு மனிதனைப் போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.

அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது; தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டிருந்தது. `எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது.

இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறொரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன; அந்த விலங்குக்கு நான்கு தலைகள் இருந்தன; அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது.

இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது; எஞ்சியதைக் கால்களால் மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன; அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை பேசும் வாயும் இருந்தன.

நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரிநெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. அந்தக் கொம்பு பேசின பெருமைமிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது; அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது. மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது; ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது.

இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபடவேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 52. 53-54. 55-56. 57-58 (பல்லவி: 52b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

52 மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

53 நிலத்தில் தளிர்ப்பவையே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 54 கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

55 நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 56 திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

57 வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 58 காட்டு விலங்குகளே, கால் நடைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில் இயேசு ஓர் உவமை சொன்னார்: "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா

மூன்றாம் நூற்றாண்டில் தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் துறந்து எகிப்திய பாலைவனத்தில் ஒரு முனிவரைப் போன்று வாழ்ந்தவர் தூய வனத்து அந்தோனியார்.

வனத்து அந்தோனியார் முனிவரைப் போன்று வாழ்ந்தாலும், அந்நாட்களில் பல்வேறு நாடுகளில் இருந்த பெரிய பெரிய தலைவர்கள் மற்றும் அரசர்களோடு அவர் நல்லுறவோடு இருந்தார். நிறைய நேரங்களில் உரோமையை ஆண்டுவந்த கான்ஸ்டான்டிநோபிள் என்ற மன்னன் வனத்து அந்தோனியாரிடம் ஆலோசனை கேட்டு கடிதம் அனுப்பி வந்தான். கான்ஸ்டான்டிநோபிளைப் போன்று பிற நாடுகளில் இருந்த அரசர்களும் அவரிடத்தில் கடிதம் எழுதி ஆலோசனை கேட்டு வந்தார்கள். இதனால் வனத்து அந்தோனியாரை ஏனைய துறவிகள், மக்கள் யாவரும் மிகப்பெரிய மனிதராக நினைத்து வந்தார்கள்.

ஒருநாள் துறவிகள் சிலர் வனத்து அந்தோனியாரிடம் வந்து, "நீங்கள் பல நாட்டு அரசர்களோடும் கடிதத் தொடர்பில் இருக்கின்றீர்கள். உண்மையில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆள்?" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு வனத்து அந்தோனியார், "என்னைப் பொறுத்தளவில், நான் நம்பி ஏற்றுக்கொள்ளும் கடிதத்திற்கு முன்பாக அரசர்கள் எழுதி அனுப்பி அனுப்பும் கடிதங்கள் எல்லாம் ஒன்றுமில்லை; அவையெல்லாம் தூசுக்குச் சமமானவை" என்றார். "அரசர்கள் உங்களுக்கு அனுப்பும் கடிதங்களை விடவும் மேலான கடிதம் ஒன்று இருக்கின்றதா, அது என்ன? எங்களிடத்தில் அதைப் பற்றிச் சொல்லுங்கள்" என்றார்கள். வனத்து அந்தோனியாரோ மிகப் பொறுமையாகச் சொன்னார், "அரசர்கள் எனக்கு எழுதி அனுப்பும் கடிதங்களை விடவும் மேலான கடிதம் ஒன்று இருக்கின்றதென்றால் அது கடவுள் மனிதருக்கு எழுதிய கடிதமான விவிலியத்தைத் தவிர வேறொன்றும் இல்லை".

ஆம், இந்த உலகத்த்தில் விவிலியத்தை விட சிறந்த கடிதம், சிறந்த புத்தகம் வேறு என்ன இருக்க முடியும்?.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மானிடமகனுடைய வருகையின் போது என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றிச் சொல்லிவிட்டு, "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா" என்கின்றார்கள். இயேசுவின் இவ்வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை; அதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தமென்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தும் அழிந்து போகக்கூடியவை. மனிதர்களில்கூட பலர் இன்றைக்கு இருப்பவர்கள் நாளைக்கு இருப்பதில்லை. அதைத் தான் திருப்பாடல் ஆசிரியர், "மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது. அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது" என்று கூறுகின்றார் (திபா 103: 15, 16). ஆம், மனிதர்களும் சரி, ஏனைய உயிரினங்களும் சரி பிறந்த அவர்கள் ஒரு நாள் இறந்துபோய்விடுகின்றார்கள். ஆனால் ஆண்டவரின் வார்த்தையோ அப்படியில்லை. அதற்கு அழிவு என்பது கிடையவே கிடையாது, அது மட்டுமல்லாமல் அதனைக் கேட்டு, நடக்கக்கூடியவர்களும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா?" என்று கேட்கும்போது, பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடத்தானே உள்ளன" (யோவா 6: 68) என்று கூறுவார். இவ்வாறு இயேசுவின் வார்த்தைகள் நிலையானவை, அதனைக் கேட்டு நடப்போர் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர் என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

இப்படிப்பட்ட அமரத்தன்மைகொண்ட, அழியவே அழியாத இறைவார்த்தைக்கு நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு முக்கியத்துவம் தந்து வாழ்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு சமயம் வீடு சந்திக்கத் சென்றிருந்த  பங்குக் குருவானவர் ஒரு வீட்டில் இருந்த குழந்தையிடம் மெல்ல பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார். "ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்கு போவதுண்டா?" இது பங்குக்குரு குழந்தையிடம் கேட்ட கேள்வி. அதற்குச் சிறுமி அவரிடம், "நான் ஞாயிறு மறைக்கல்வி வகுப்புக்கு எல்லாம் தவறாமல் சென்றுவிடுவேன்" என்றது. "விவிலியத்தைப் பற்றி எல்லாம் சொல்லித் தருவார்களா?" என்றார் குருவானவர். "ஆம் சொல்லித்தருவதுண்டு" என்றது குழந்தை. குருவானவர் தொடர்ந்து அந்தக் குழந்தையிடம், "சரி விவிலியத்தைப் பற்றி சொல்லித் தருகின்றார்கள் அல்லவா, அந்த விவிலியத்தில் என்ன இருக்கின்றது? என்று கேட்டார். அதற்கு அந்தக் குழந்தை, "ரேசன் கார்டு இருக்கின்றது; அம்மா பயன்படுத்தும் சீப்பு அங்கே இருக்கின்றது; அப்பா புதிதாக வாங்கியிருக்கும் கடிகாரத்திற்கான ரசிதும், உத்திரவாத அட்டையும் இருக்கின்றது" என்றது. இதைக் கேட்ட குருவானவருக்கு மயக்கம் வராத குறைதான்.

விவிலியத்தில் என்ன இருக்கின்றது என்று கேட்ட குருவானவருக்கு வேடிக்கையாகப் பதில் சொன்ன அந்தக் குழந்தையைப் போன்றுதான் நாமும் விவிலியத்தில் என்ன இருக்கின்றது, அது எத்துணை வலிமையானதாக இருக்கின்றது என்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.

ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம், விவிலியத்தின் வலிமையையும், மகிமையையும் நம்முடைய வாழ்க்கையில் உணர்வோம். அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!