|
|
23 டிசம்பர் 2019 |
|
|
திருவருகைக்காலம்
4ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம்
அனுப்புகிறேன்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4; 4: 5-6
படைகளின் ஆண்டவர் கூறியது: "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன்.
அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள்
தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள்
ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்"
என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக்கூடியவர்
யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின்
நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும்
இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்
போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப்
பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு
ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள்.
அப்பொழுது பண்டைக்காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல்
யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு
உகந்தனவாய் இருக்கும். இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான
ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம்
அனுப்புகிறேன்.
நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின்
உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப்
பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: லூக் 21: 28)
=================================================================================
பல்லவி: தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை
எனக்குக் கற்பித்தருளும். 5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி
எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்.
பல்லவி
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு
நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி
10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,
அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;
அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே,
திருச்சபையின் மூலைக் கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை
மீட்க வாரும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பிறப்பு.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1: 57-66
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப்
பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம்
காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும்
அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்;
செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.
ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான்
எனப் பெயரிட வேண்டும்" என்றார்.
அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே"
என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?"
என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.
அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக் குழந்தையின்
பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே
அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக்
கேள்விப்பட்டு அஞ்சினர்.
இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள்
யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி,
"இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று
சொல்லிக்கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவரு டைய கைவன்மையைப்
பெற்றிருந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மலாக்கி 3: 1-14; 4:5-6
"இதோ நான் என் தூதனை அனுப்புவேன்"
நிகழ்வு
பிலிப்பைன்ஸிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் 1899 ஆம் ஆண்டு,
மார்ச் மாதம் இடம்பெற்ற நிகழ்வு இது.
இரஷ்யர்களுக்கும் ஜப்பானியர்களுக்குமிடையே கடுமையான போர் மூண்டது.
இப்படிப்பட்ட சமயத்தில் ரஷ்ய இநாட்டில் இருந்த ஒரு சில நல்ல உள்ளம்
படைத்தவர்கள் இரண்டு நாடுகளுக்குமிடையே நடைபெற்றுவந்த போருக்கு
முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார்கள். ஆதலால், அவர்கள் ஒரு
வெள்ளைக் காகிதத்தில் அமைதிக்கான செய்தியை என்று எழுதி, அதை
இரஷ்ய நாட்டின் முன்வரிசையில் இருந்த படைவீரர்களின் கைகளில்
கொடுத்தார்கள். படைவீரர்களும் அந்த வெள்ளைக் காகிதத்தைத் தங்களுடைய
கைகளில் தாங்கிக்கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள்.
இதற்கிடையில் ரஷ்யாவின்மீது போர்தொடுக்க வந்த ஜப்பானியப் படைவீரர்கள்,
இரஷ்யப் படையில், முன்வரிசையில் இருந்த படைவீரர்களின் கைகளில்
வெள்ளைக் காகிதம் ஒன்று இருப்பதையும் அதில் ஏதோ எழுதப்பட்டிருப்பதையும்
கண்டு, அது என்ன என்று பார்த்தார்கள். காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது
இரஷ்ய மொழியில் இருந்ததால், அவர்கள் இரஷ்ய மொழி தெரிந்த ஒருவரைக்
கொண்டுவந்தார்கள். அவர் அந்த வெள்ளைக் காகிதத்தில் அமைதிக்கான
செய்தி பொறிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.
மறுகணம் இரஷ்ய நாட்டின்மீது போர்தொடுக்க அந்த ஜப்பானியப் படைவீரர்கள்
தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். மட்டுமல்லாமல், அவர்கள்
இஷ்யப் படைவீரர்கள் கொண்டுவந்த அமைதிக்கான செய்தியை ஜப்பானில்
இருந்த எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொன்னார்கள். இதனால் இருநாட்டுவருக்கும்
நீண்ட நாள்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்த இரு நாட்டவரும்
அமைதியாக வாழத் தொடங்கினார்கள்.
இந்த நிகழ்வில் வரக்கூடிய இரஷ்ய நாட்டுப் படைவீரர்கள் அதிலும்
குறிப்பாக முன் வரிசையில் இருந்த படைவீரர்கள் எப்படி இரண்டு
நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்கு காரணமாக இருந்தார்களோ,
அதுபோன்று இன்றைய முதல் வாசகத்தில் அமைதியின் அரசராம்
மெசியாவின் வருகைக்கு வருகைக்கு மக்களைத் தயார் செய்ய, ஆண்டவர்
தூதர் ஒருவரை அனுப்புவதாக வாக்குறுதி தருகிறார். இந்தத் தூதரின்
யார்? இவர் எப்படிப்பட்டவர்? இவர் செய்ய இருக்கும் பணி என்ன?
ஆகியவற்றைக் குறித்து இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார்செய்யும் தூதர்
இறைவாக்கினர் மலாக்கி நூலில் எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
ஆண்டவராகிய கடவுள், என் தூதனை உமக்கு முன்பு அனுப்புகிறேன்.
அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார் என்று கூறுகிறார்.
பழங்காத்தில் அரசர் ஓர் இடத்திற்குச் செல்கின்றபொழுது, அதற்கு
முன்பாக அவர் தன்னுடைய தூதரை அனுப்பி வழியை ஆயத்தம் செய்வார்.
அதுபோன்றுதான் ஆண்டவர், மெசியாவாம் இயேசு இந்த உலகத்திற்கு வருவதற்காக
மக்களை தயார் செய்வதற்காக தூதர் ஒருவரை அனுப்புகிறார் இந்த தூதர்
யார் என்று சிந்தித்துப் பார்க்கும்பொழுது, அது திருமுழுக்கு
யோவான்தான் என்பது புரிந்துவிடும். ஏனெனில் அவரே பாலைவனத்தில்
ஒலித்த குரல்.
இறைவாக்கினர் எலியாவும் திருமுழுக்கு யோவானும்
இன்றைய முதல்வாசகத்தின் இரண்டாவது பகுதியில், ஆண்டவரின் நாள்
வருமுன் இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன் என்கிறார்
ஆண்டவர். இறைவாக்கினர் எலியா சுழற்காற்றில் விண்ணகத்திற்குச்
சென்றார். (2 அர 2:11) இதனால் அவர் மெசியாவின் வருகைக்கு முன்
மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை இஸ்ரயேல் மக்கள் நடுவில் இருந்தது.
ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்
என்று திருமுழுக்கு யோவான்தான் அவர் மறைமுகமாச்
சுட்டிக்காட்டுகிறார் (மத் 17:11-13). திருமுழுக்கு யோவான் ஒரு
தூதரைப் போன்று ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்தார். மக்கள்கள்
தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லை.
ஆண்டவருடைய தூதர் அல்லது திருமுழுக்கு யோவானைக் குறித்து
சிந்தித்துப் பார்க்கக்கூடிய இந்த வேளையில், நிலையில் நம்முடைய
கடமை அல்லது நம்முடைய பணி என்னவாக இருக்கிறது என்று சிந்தித்து
பார்க்கவேண்டும். திருமுழுக்கு யோவான் எப்படி தூதரைப்போன்று ஆண்டவருடைய
வருகைக்காக மக்களைத் தயார் செய்தாரோ அதுபோன்று நாம் ஒவ்வொருவரும்
ஆண்டவருக்காக மக்களை தயார் செய்யவேண்டும்; அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.
அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறபோதுதான் நாமும் திருமுழுக்கு
யோவானைப் போன்று நல்ல தூதரக இருக்க முடியும்.
சிந்தனை
"ஆண்டவர் தம் வழிகள் அனைத்தும் நீதியானவை (இச 32:4) என்கிறது
இணைச்சட்ட நூல். ஆகையால், நீதியான வழிகளைக் கொண்ட ஆண்டவருடைய
வழியை ஆயத்தம் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 1: 57- 66
"ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார்"
நிகழ்வு
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சொந்தமாக
ஒரு பழத்தோட்டம் இருந்தது. அதில் பல வகையான பழங்கள் காய்த்துக்
கிடந்தன. அந்தத் தோட்டத்தைக் கவனித்துக் கொள்வதற்குத் தோட்டத்
தொழிலாளர் ஒருவர் இருந்தார். அவருடைய வேலையெல்லாம் தோட்டத்தைப்
பராமரிப்பதும் அதில் விளையும் பழங்களைப் பறித்து அரசனுக்கு உண்ணக்
கொடுப்பதுதான்.
ஒருநாள் அந்தத் தோட்டத் தொழிலாளர் பழத்தோட்டத்திலிருந்து
விளைந்திருந்த செர்ரி பழங்களைப் பறித்து, ஒரு கூடையில் வைத்து,
அவற்றை அரசனிடம் கொண்டு போய்க்கொடுத்தார். அவற்றிலிருந்து ஒரு
செர்ரி பழத்தைச் சுவைத்துப் பார்த்த அரசனுடைய முகம் சிவந்தது.
காரணம் அது அவ்வளவு புளிப்பாய் இருந்தது. அதனால் அவன் கோபத்தில்
அந்த செர்ரி பழத்தை தோட்டத் தொழிலாளரின் முகத்தில் வீசினான்.
அரசன் தன் முகத்தில் செர்ரி பழத்தை வீசிவிட்டானே என்று அந்தத்
தோட்டத் தொழிலாளர் சிறிதுகூட கோபமோ, வருத்தமோ கொள்ளாமல்,
"இறைவன் மிகவும் இரக்கமுள்ளவர்" என்றார். இவ்வார்த்தைகளைக்
கேட்ட அரசனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "என்னடா இவர்!
நாமோ கோபத்தில் இவருடைய முகத்தில் பழத்தை வீசி எறிந்திருக்கின்றோம்...
இவர் சிறிதுகூட வருத்தம் இல்லாமல், "இறைவன் மிகவும் இரக்கமுள்ளவர்
என்று சொல்கின்றாரே! இவருக்கு என்னவாயிற்று? என்று ஒன்றும்
புரியாமல் விழித்தான்.
இதற்கான காரணத்தை அரசன் அந்தத் தோட்டத் தொழிலாளரிடம் கேட்டபொழுது,
அவர், "அது வேறொன்றுமில்லை. இன்று காலையில் தோட்டத்தில் பழங்களைப்
பறித்துக்கொண்டிருந்தபோது, நிறைய அண்ணாச்சிப் பழங்கள் கிடைத்தன.
அவற்றை நான் உம்மிட்ம் கொண்டுவர நினைத்தேன் அப்பொழுது என்னுடைய
உள்மனம், "அரசனுக்கு அண்ணாச்சிப் பழங்கள் வேண்டாம், செர்ரி பழங்களே
போதும்" என்று சொன்னது. உடனே நான் அண்ணாச்சி பழங்களை அங்கேயே
விட்டுவிட்டு செர்ரி பழங்களை உம்மிடம் கொண்டுவந்தேன். ஒருவேளை
நான் மட்டும் அண்ணாச்சி பழங்களைக்கொண்டு வர நேர்ந்து, அவை மிகவும்
புளிப்பாக இருக்கின்றது என்று சொல்லி , அவற்றை நீர் என்னுடைய
மூஞ்சியில் தூக்கி எறிந்திருந்தால் என் நிலைமை எவ்வாயிருக்கும்...?
அதனால்தான் நான் "இறைவன் மிகவும் இரக்கமுள்ளவர் என்று
சொன்னேன்" என்றான்.
ஆம், இறைவன் மிகவும் இரக்கமுள்ளவர்... அவருடைய இரக்கம் நம்மீது
அளவுகடந்த விதமாய்ப் பொழியப்படுகின்றது. இன்றைய நற்செய்தி நற்செய்தியில்
ஆண்டவராகிய கடவுள் எலிசபெத்தின்மீது பெரிதும் இரக்கம் கொண்டதைக்
குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
எலிசபெத்துக்கு இரக்கம் காட்டிய இறைவன்
நற்செய்தியில், எலிசபெத் தன்னுடைய முதிர்ந்த வயதில் ஒரு மகனைப்
பெற்றெடுப்பதையும் அவருக்கு யோவான் என்று பெயரிடுவதையும்
குறித்து வாசிக்கின்றோம். எலிசபெத் கருவுற இயலாதவர் என்று கருதப்பட்டவர்.
அப்படியானால் அவர், அவர் வாழ்ந்து வந்த சமூகத்தாலும் உற்றார்
உறவினர்களாலும் எவ்வளவு மனவேதனையை அடைந்திருப்பார் என்பதை நாம்
கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். ஆனாலும்கூட அவர் தனக்கு
குழந்தைப் பேறு கிடைக்கவேண்டும் என்று இறைவனிடம் தொடர்ந்து மன்றாடி
வந்தார் (லூக் 1: 13). இதனால் ஆண்டவராகிய கடவுள் அவர்மீது
பெரிதும் இரக்கம்கொண்டு, அவருடைய அவலநிலையைப் போக்கும் வண்ணம்,
அவருக்குக் குழந்தைப் பேற்றினைத் தருகின்றார்.
கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை
எலிசபெத் தன்னுடைய முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது,
நமக்கொரு முக்கியமான செய்தியை செய்தியை எடுத்துச் சொல்கின்றது.
அது என்னவெனில், "கட்வுளால் ஆகாது எதுவுமில்லை (லூக் 1:37) என்பதைத்தான்.
ஆம், கருவுற இயலாதவர் என்று கருதப்பட்ட எலிசபெத்துக்கு ஆண்டவர்
ஒரு குழந்தையைத் தந்து, ஆகாது என்றும் முடியாது என்றும் உலகம்
கருதியதை கடவுள் ஆகும், முடியும் என்று அதிசயத்தை
செய்துகாட்டினார்.
இன்னும் சொல்லப்போனால் யோவானின் பிறப்பை ஒட்டி நடந்த அனைத்தும்
அதிசயமாகத்தான் நடந்தன. அவருடைய பெற்றோர் தங்களுடைய வயது
முதிர்ந்த நிலையில் அவரைப் பெற்றெடுத்தனர்; அவருக்கு வழக்கம்போல்
அவருடைய தந்தையின் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும் (1 மக்
1:1-2); ஆனால், அவருக்கு யோவான் எனப் பெயர் சூட்டப்பட்டது.
நிறைவாக, சில மாதங்களுக்குப் பேச்சற்றவராய் இருந்த செக்கரியா
யோவான் பிறந்தவுடன் நா கவிழ்ந்து பேசத் தொடங்குகின்றார். இவ்வாறு
யோவானின் பிறப்பை ஒட்டி நடதவையெல்லாம் அதிசயமாகவே நடைபெற்றன.
இவற்றிற்கெல்லாம் முக்கியமான காரணம், ஆண்டவர் எலிசபெத்தின்மீது
பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதால்தான்.
ஆகையால், ஆண்டவராகிய கடவுள் எலிசபெத்தின் மீது எந்தளவுக்கு இரக்கம்
காட்டினாரோ, அதுபோன்று நாமும் ஒருவர் மற்றவர்மீது இரக்கம்கொண்டு
வாழ்ந்து, இறைவனின் அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் இரக்கமுள்ளவர்களாய்
இருங்கள் (லூக் 6:36). என்பார் இயேசு. ஆகையால், நாம் நமது
விண்ணகத்தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|