|
|
20 டிசம்பர் 2019 |
|
|
திருவருகைக்காலம்
3ம் ஞாயிறு -
2ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14
அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச்
சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு
கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு
கேட்டுக்கொள்ளும்" என்றார்.
அதற்கு ஆகாசு, "நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்கமாட்டேன்"
என்றார்.
அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்;
மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது
போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார்.
இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு
அவர் `இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி:7c,10b காண்க)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.
1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும்
அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்களின்மீது
அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே.
பல்லவி
3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில்
நிற்கக்கூடியவர் யார்? 4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி
5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து
நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர்
இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! வானக அரசின் வாயிலைத் திறக்கும்
தாவீதின் திறவுகோல் நீரே. இருளிலே இருக்கும் கைதிகள் தளையைக்
களைந்திட எழுந்தருள்வீரே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1:26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள
நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர்
தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு
மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர்
உம்மோடு இருக்கிறார்" என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ
என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக்
கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு
இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத
கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை
ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்
மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு
முடிவே இராது" என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!"
என்றார்.
வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை
உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம்
முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற
இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில்,
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு
நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
நேற்றைக்கு சக்கரியா குழந்தை பிறக்கும் வரை பேச இயலாது போனார்
என்று லூக்கா பதிவு செய்ததை வாசித்தோம்.
இன்று மரியாவும் தூதரிடம் தன் அச்சத்தை வெளிப்படுத்துகின்றார்.
மரியாளுக்கு ஏன் தூதர் தண்டனைகொடுக்கவில்லை.
சக்கரியாவைவிட மரியாள் வயதில் குறைந்தவர்களே. சக்கரியா
குருவானவர். பழுத்த அனுபவம் கொண்டவர். கடவுளின் அற்புதங்கள்,
அதிசயங்கள், செயல்பாடுகள் நன்கு அறிந்தவர். மரியாள் வெகு
சாதாரண, எளிய, மறை அறிவு இல்லாதவர்கள், அனுபவத்திலும் மிகவே
சிறியவர்கள்.
நம்முடைய வயதுக்கு ஏற்ற விசுவாச வளர்ச்சியுண்டா? உண்மையிலேயே
விவிலிய ஞான அறிவு வளர்ச்சியுண்டா?
இன்றும் நாங்கள் தோமையார் பரம்பரைத் தானே என்ற சப்பைக்கட்டு
கட்டி, தளர்ச்சியடைந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோமா?
தோமையார், "என் ஆண்டவரே என் கடவுளே" என்று தன்னை அர்ப்பணித்து,
ஊழியம் செய்ய ஆசிய வந்தவர் என்பதனையும் நினைவிலே கொள்ள
வேண்டும்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
இதோ, கன்னிப் பெண் கருத்தாங்குவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14
"அக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று
பெயரிடுவார்"
நிகழ்வு
முன்பொரு காலத்தில் குரோசுஸ் என்றோர் அரசர் இருந்தார். அவர்
பெரிய பணக்காரர். அவர் மிகப்பெரிய மெய்யியல் அறிஞரான தேல்ஸ் என்பவரிடம்,
"கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்?" என்ற கேள்வியைக்
கேட்டார். தேல்ஸ் அவரிடம், "இதற்கான பதிலை
நான் நாளை சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
மறுநாள் வந்தது. குரோசு தேல்சை அழைத்து, "நான் கேட்ட
கேள்விக்கான பதிலைச்
சொல்லும்" என்று சொன்னபொழுது,
"நாளை சொல்கிறேன்" என்றார். இப்படி ஒவ்வொருநாளும் குரோசுஸ் தேல்ஸிடம்
கேட்டபொழுதும், தேல்ஸ்,
"நாளை சொல்கிறேன்... நாளை சொல்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே வந்தார். இதற்கிடையில் தேல்ஸ், குரோசுஸ்
கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு எவ்வளவோ முயற்சி
செய்து பார்த்தார். அவரால் முடியவில்லை.
தேல்ஸ் தனக்குப் பதில் சொல்வதற்குக் காலம் தாழ்த்துவதை அறிந்த
குரோசுஸ் ஒருநாள் பொறுமையிழந்து தேல்சைக் கூப்பிட்டு, "தேல்ஸ்!
நீ மிகப்பெரிய அறிஞர் என்று நினைத்துதான் உன்னிடம் இப்படியொரு
கேள்வியைக் கேட்டேன். இதற்கான பதில்தான் என்ன?" என்று
கேட்டார். தேல்ஸோ மிகவும் வருத்தத்தோடு, "அரசே! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
இத்தனை நாள்களும் கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்
என்பதை அறிந்துகொள்வதற்குத்தான் நான் முயன்றுகொண்டிருக்கின்றேன்;
என்னால் முடியவில்லை" என்றார்.
மிகப்பெரிய மெய்யியல் அறிஞரான தேல்சிற்கு வேண்டுமானால் கடவுள்
என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? போன்றே கேள்விகளுக்கு பதில்
தெரியாமல் இருக்கலாம்; ஆனால், கிறிஸ்தவர்களாக நமக்குத்
தெரியும். கடவுள் என்பவர் இரக்கமுள்ளவர்; அவர் நம்மோடு இருப்பவர்
என்று. இன்றைய முதல் வாசகம், கடவுளை இம்மானுவேலனாய், நம்மோடு
இருப்பவராகச் சுட்டிக்காட்டுகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
ஆண்டவரில் நம்பிக்கை வைக்காத ஆகாசு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
"இம்மானுவேலனாய்" இருக்கும் இயேசுவின் பிறப்பு குறித்த முன்னறிவிப்பைச்
செய்தியை வாசிக்கின்றோம். இது குறித்து நாம் சிந்தித்துப்
பார்ப்பதற்கு முன்னர், இந்த முன்னறிவிப்புச் செய்தி, சொல்லப்பட்ட
சூழ்நிலையைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
கிமு ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதேயாவை ஆகாசு என்ற
அரசன் ஆட்சி செய்து செய்தான். இவன் யூதேயாவின் கடைசி அரசனாகிய
எசேக்கியாவிற்குத் தந்தை. இவனுக்கு சிரியா நாட்டினரிடமிருந்து
ஆபத்து வந்தது. இத்தகைய சமயத்தில் இவன் இறை உதவியை நாடியிருக்கவேண்டும்;
ஆனால், இவனோ இறை உதவியை நாடாமல், அசிரியர்களின் உதவியை
நாடினான். மட்டுமல்லாமல், அவர்களுடைய சடங்குகளை எருசலேம்
திருக்கோவிலில் புகுத்தினான். இதனால் ஆண்டவரின் சினம் இவன்மீது
பொங்கி எழுந்தது.
இது ஒருபக்கம் இருந்தாலும், ஆண்டவரின் வாக்கு ஆகாசு அரசனுக்கு
மீண்டுமாக அருளப்பட்டது. அந்த வாக்கு, ஓர் அடையாளத்தை ஆண்டவரிடம்
கேட்குமாறு சொன்னது. இதற்கு இவன் என்ன செய்தான் என்பதைக்
குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
அடையாளத்தை அருளும் ஆண்டவர்
ஆகாசு அரசனிடம் ஆண்டவர், ஓர் அடையாளத்தைக் கேளும் என்று
கேட்கின்றபொழுது, அவனோ, நான் ஆண்டவரிடம் அடையாளமும் கேட்கமாட்டேன்;
அவரைச் சோதிக்கவும் மாட்டேன் என்கிறான். இதனால் ஆண்டவரே ஓர் அடையாளத்தைத்
தருகின்றார். ஆம், "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர்
ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் "இம்மானுவேல்"
எனப் பெயரிடுவார்" என்ற வார்த்தைகளில் ஆண்டவர் ஓர் அடையாளத்தைத்
தருகின்றார்.
ஆண்டவர் ஆகாசு மன்னருக்குத் தருகின்ற இந்த வாக்குறுதி அல்லது
அடையாளம் இயேசுவில் நிறைவேறுகின்றது. மரியின் வயிற்றில் பிறந்த
மெசியாவாம் இயேசு, இம்மானுவேலனாய்; நம்மோடு இருப்பவராய் விளங்குகின்றார்.
ஆண்டவராகிய கடவுள் ஆகாசு அரசனுக்குத் தந்த வாக்குறுதி நமக்கொரு
முக்கியமான செய்தியைச் சொல்கிறது. அது என்ன என்று இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
வாக்குறுதியை நிறைவேற்றும் இறைவன்
ஆண்டவர் ஆகாசு அரசனிடம் தருகின்ற வாக்குறுதி இயேசுவில்
நிறைவேறுகின்றது. இது ஆண்டவர் வாக்குறுதி மாறாதவர் என்ற
செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு
மட்டுமே ஊழியம் புரிவதாக வாக்குறுதி தந்தார்கள் (யோசு 24: 24);
ஆனால், அவர்களும் சரி ஆகாசு அரசனும் சரி கடவுளுக்குத் தந்த
வாக்குறுதியை மீறிச் செயல்பட்டார்கள். இதனாலேயே அவர்கள் அழிவுக்கு
மேல் அழிவைச் சந்தித்தார்கள்.
இறைவன்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு மட்டுமே ஊழியம் புரிய
அழைக்கப்பட்டிருக்கும் நாம், அவற்றின்படி நடக்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"இதோ உலகமுடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்"
(மத் 28:20) என்று சொல்லி நம்மோடு இருக்கின்ற, இருக்க வருகின்ற
மெசியாவாம் இயேசுவின்மீது நாம் நம்பிக்கைகொண்டு, அவருக்கு
உண்மையுள்ளவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 1: 26-38
அருள் நிறைந்தவரே வாழ்க!
நிகழ்வு
குருவானவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு தீவில் தங்கி, அங்கிருந்த
மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்து வந்தார். அவருடைய
வார்த்தையைக் கேட்டு, பலரும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு
பின்பு அவர்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானது. இதனால்
அந்தத் தீவில் இருந்த மக்கள் தலைவன், ஒரு குறிப்பிட்ட நாளில்
மக்கள் அனைவரையும் அழைத்து, "நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கக்
காரணமாக இருக்கும் குருவானவருக்கு ஏதாவது பரிசளிக்கவேண்டும்.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?" என்று
கேட்டான். மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில், "ஆமாம், கட்டாயம்
பரிசளிக்கவேண்டும்" என்றார்கள்.
உடனே மக்கள் தலைவன், மக்களில் இருந்த ஒருசில இளைஞர்களை அழைத்து,
"நீங்கள் காட்டுக்குச் சென்று அபூர்வக் கிளி ஒன்றைப் பிடித்து
வாருங்கள். அதனை நாம் குருவானவருக்குப் பரிசளிப்போம்" என்றான்.
இளைஞர்களும் அதற்குச் சரியென்று சொல்லி, காட்டுக்குச் சென்று
நீண்ட நெடிய தேடலுக்குப் பின் ஓர் அபூர்வக் கிளியைப்
பிடித்துக் கொண்டு வந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு குருவானவரிடம்
சென்ற மக்கள் தலைவன், "சுவாமி! நீங்கள் எங்கள் நடுவில் ஆற்றிய
அற்புதமான பணிக்கு நன்றியாக, இந்த அபூர்வக் கிளியை உங்களுக்குப்
பரிசளிக்கின்றேன். இதை அருள்கூர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் இந்த அபூர்வக் கிளிக்கு எந்த வாக்கியத்தை நீங்கள் முதலில்
கற்றுத் தருகின்றீர்களோ, அதைத்தான் கடைசி வரைக்கும் சொல்லும்"
என்றான். குருவானவரும் அதைச் சரியென்று கேட்டுக்கொண்டு அந்த அபூர்வக்
கிளியை அன்போடு பெற்றுக்கொண்டார்.
இதற்குப் பின்பு குருவானார் அந்த ஆபூர்வக் கிளியை தான் இருந்த
குடிசையின் முன்பாக வைத்துவிட்டு, "செபமாலை சொல்லிவிட்டு அதற்குபிறகு
இந்தக் கிளிக்கு நல்லதொரு வாக்கியத்தைச் சொல்லிக்கொடுப்போம்"
என்று நினைத்துக்கொண்டு, சற்றுத் தள்ளி முழந்தாள் படியிட்டு,
ஜெபமாலை சொல்லத் தொடங்கினார். சிறிதுநேரத்தில் ஜெபமாலையைச்
முடித்துக்கொண்டு, அபூர்வக் கிளியின் அருகில் சென்று, தான்
நினைத்து வைத்திருந்த ஒரு நல்ல வாக்கியத்தை அதனிடம் சொல்லத் தொடங்கினார்.
அவர் அந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு முன்பாகவே அபூர்வக் கிளி,
"அருள் நிறைந்த மரியே வாழ்க" என்ற வாக்கியத்தைச் சொல்லத் தொடங்கியது.
அவருக்கு ஆச்சரியம் தாங்கி முடியவில்லை. "செபமாலை சொல்லும்போது
திரும்பத் திரும்பச் சொன்ன வாக்கியம்தான் கிளியின் நினைவில் பதிந்துவிட்டது
போலும்..." என்று நினைத்துக்கொண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. திடீரென்று ஒருநாள் குருவானவர்
நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி, அப்படியே இறந்துபோனார்.
இவர் இறந்த அன்று, அவரோடு இருந்த அபூர்வக் கிளி, "அருள்
நிறைந்த மரியே வாழ்க" என்ற வாக்கியத்தை மீண்டும் மீண்டுமாகச்
சொல்லி வருந்தியது. அக்காட்சியைப் பார்த்துவிட்டு அந்தத்
தீவில் இருந்த மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
பின்னர் குருவானவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்;அவரோடு இருந்த
அபூர்வக் கிளி ஏலத்திற்கு விடப்பட்டது. அதை அந்தத் தீவிற்கு தற்செயலாக
வந்திருந்த, நாடு நாடாகச் சுற்றித் திரிந்துவந்த பிறமதத்தைச்
ஒரு பயணி, பெரிய தொகை கொடுத்து வாங்கினான். பின்னர் அவன் அதற்கு
ஏதாவது சொல்லித்தரலாம் என்று நினைத்தபோது, அது "அருள் நிறைந்த
மரியே வாழ்க" என்ற வாக்கியத்தைச் சொன்னதும் அவன் ஒன்றும்
புரியாமல் விழித்தான். அதற்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள எவ்வளவோ
அவன் முயற்சி செய்தான். முடிவில் அவன் அயர்லாந்திற்குச்
சென்றிருந்தபோது, அங்கிருந்த ஒரு கோயிலில், அபூர்வக் கிளி
சொல்லிவந்த அதே வார்த்தைகள் சொல்லப்படுவதைக் கேட்டு, அங்கிருந்த
குருவானவரிடம் அதற்கான அர்த்ததைக் கேட்டான். அவர் அதற்கான அர்த்தத்தை
விளக்கிச் சொன்னபோது, அதனால் தொடப்பட்டு, அவன் கிறிஸ்தவனாக
மாறினான்.
"அருள் நிறைந்த மரியே வாழ்க" என்பது சாதாரண வாக்கியம்
கிடையாது. அது வல்லமையுள்ள வாக்கியம்; ஆண்டவரே தன் தூதர்
வழியாக மரியாவிடம் சொன்ன வாக்கியம். அந்த வாக்கியத்தை வானதூதர்
கபிரியேல் மரியாவிடம் சொல்வதாக இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்திருக்கின்றது.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உமது சொற்படியே நிகழட்டும் என்று இறைத்திருவுளத்திற்கு பணிந்த
மரியா
நற்செய்தியில் வானதூதர் கபிரியேல் மரியாவிடம், "அருள் நிறைந்தவரே
வாழ்க..." என்கின்றார். எப்பொழுதும் நல்ல செய்தியோடு வருகின்ற
வானதூதர் கபிரியேல் (தானி 8: 15-17, 9:21; லூக் 1: 5-25) மரியாவிடம்
வருகின்றபோதும் நல்ல செய்தியோடே வருகின்றார். அவர் மரியாவிடம்
சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மரியா, "இந்த வாழ்த்து எத்தகையதோ"
என்று எண்ணினாலும், வானதூதர் எல்லாவற்றையும் விளக்கிய பின்பு,
"நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று
இறைவனின் திருவுளம் நிறைவேற்றத் தன்னையே கையளிக்கின்றார்.
இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான செய்தி, மரியா
மேற்சொன்ன வார்த்தைகளைச் சொல்வதற்கு அவரிடம் நிறைய துணிச்சல்
இருந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில்,
யோசேப்போடு கூடி வாழ்வதற்கு முன்பே அவர் கருவுற்றிக்கும்
செய்தி மக்களுக்குத் தெரிந்தால், மக்கள் அவரைக் கல்லால் எறிந்துகொல்வார்கள்
(இச 22: 13-21) என்பது அவருக்கு நன்றாக தெரியும். அப்படியிருந்தும்
அவர் இறைவனின் திருவுளம் நிறைவேற எப்படிப்பட்ட சவாலையும் ஏற்கத்
துணிகின்றார்.
மரியாவிடம் இருந்த இந்தத் துணிச்சல், கடவுளின் திருவுளம்
நிறைவேற எதையும் ஏற்கத் துணிதல் போன்ற பண்புகள் நம்மிடம் இருக்கின்றதா?
சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
"உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்" (எபி 10:9)
என்று சொன்ன இயேசுவைப் போன்று, அன்னை மரியாவைப் போன்று, நாமும்
இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற முன்வருவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|