Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     18 டிசம்பர் 2019  
                         திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு - 2ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
நீதியுள்ள 'தளிர்' தாவீதுக்குத் தோன்றுவார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 5-8

ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள 'தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்.

அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். 'யாவே சித்கேனூ' - அதாவது 'ஆண்டவரே நமது நீதி' - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, 'எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று எவரும் சொல்லார்.

மாறாக, 'இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று கூறுவர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 72: 1-2. 12-13. 18-19 (பல்லவி: 7) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

18 ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்! 19 மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப் பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இஸ்ரயேல் குடும்பத்தின் தலைவரே, சீனாய் மலைமீது மோசேக்குத் திருச்சட்டம் ஈந்தவரே, திருக்கரம் நீட்டி எங்களை மீட்க வந்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார்.

"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.

இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எரேமியா 23: 5-8

"தாவீதுக்கு நீதியுள்ள தளிர் தோன்றச் செய்வேன்"

நிகழ்வு


          ஸ்காட்லாந்து நாட்டை ஆட்சிசெய்த அரசர்களில் மிகவும் முக்கியமானவர் ராபர்ட் ப்ரூஸ். ஒருசமயம் ஆங்கிலேயர்கள் இவருடைய நாட்டின்மீது எதிர்பாராத விதமாகத் தாக்குதல் நடத்தியபொழுது, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இவர் நாட்டுப்புறங்களுக்கு ஓடி, அங்கு ஊருக்கு வெளியே இருந்த ஒரு குடிசையில் அடைக்கலம் புகுந்தார்.



அந்தக் குடிசையில் மூதாட்டி மட்டும் இருந்தார். அவரிடம் ராபர்ட் ப்ரூஸ், "இன்றிரவு மட்டும் நான் உங்களுடைய குடிசையில் தங்கிக்கொள்ளட்டுமா...? விடிந்ததும் நான் இங்கிருந்து கிளம்பிவிடுகிறேன்" என்றார். அதற்கு மூதாட்டி, "முதலில் நீ யாரென்று சொல்?" என்றார். "நான் ஓர் அன்னியன், பயணி. நெடுந்தொலைவிலிருந்து வருகிறேன்" என்று ராபர்ட் ப்ரூஸ் சொந்ததும், "அரசர் ராபர்ட் ப்ரூஸின் பொருட்டு அன்னியரும் பயணிகளும் என்னுடைய குடிசையில் வரவேற்கப்படுகின்றார்கள்" என்றார் மூதாட்டி.


"பாட்டி! நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை; சற்று விளக்கிச் சொல்லுங்கள்" என்று ராபர்ட் ப்ரூஸ் சொன்னதும், அவர், "எங்களுடைய நாட்டை ஆளக்கூடிய ராபர்ட் ப்ரூஸ்  என்ற அரசர், மக்களை நேர்மையோடும் நீதியோடும் ஆட்சி செய்பவர். அவரை இப்பொழுது எதிரிகள் கொல்வதற்காகத் தேடுகின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் நான் எந்தவொரு பயணியும் அன்னியரும் தங்குவதற்கு இடம் கேட்டால், உடனே இடம்கொடுத்துவிடுவேன். ஏனெனில், கேட்பவர் அரசர் ராபர்ட் ப்ரூஸாகக் கூட இருக்கலாம் அல்லவா?" என்றார்.

 
மூதாட்டி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மிகவும் உற்சாகம் அடைந்த அரசர் ராபர்ட் ப்ரூஸ், "நான்தான் அரசர் ராபர்ட் ப்ரூஸ்" என்றார். அப்பொழுது அந்த மூதாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதற்குப் பின்பு அந்த மூதாட்டி, எதிரிகள் அங்கிருந்து போகிற வரைக்கும் ராபர்ட் ப்ரூஸிற்குத் தன்னுடைய குடிசையில் தங்குவதற்கு இடம் கொடுத்து, அவரை நல்லமுறையில் கவனித்துக்கொண்டார்.

 
ராபர்ட் ப்ரூசைப் பற்றிச் சொல்லப்படுகின்ற மிகவும் முக்கியமான செய்தி, ஸ்காட்லாந்து நாட்டில் தோன்றிய அரசர்களில் ராபர்ட் ப்ரூசைப் போன்று ஒரு நேர்மையான, நீதியான அரசர் தோன்றியதில்லை என்பதாகும். ராபர்ட் ப்ரூஸ் எப்படி நேர்மையான, நீதியுள்ள அரசராக விளங்கினாரோ, அது போன்று இன்றைய இறைவார்த்தை, தாவீதுக்கு நீதியுள்ள அரசர்/ தளிர் தோன்றப்போவதாக வாக்குறுதி தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


ஆண்டவர்மீது நம்பிக்கைகொள்ளாமல் வாழ்ந்த எசேக்கியா

 
          இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து இன்றைய முதல் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நூல், யூதேயாவில் இருந்தவர்கள் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட பின்பு எழுதப்பட்டது என்று நம்பப்பட்டது.


பாபிலோனியர்கள் யூதேயாவின்மீது படையெடுத்து வருவதற்கு முன்பு மக்களை ஆட்சி செய்து வந்தவர் எசேக்கியா என்ற அரசர் (கிமு 597-587). இவர் பாபிலோனியர்களிடமிருந்து ஆபத்து வருகின்றது என்ற தெரிந்தபொழுது, ஆண்டவருடைய உதவியை நாடி, அவர்மீது நம்பிக்கைகொண்டிருக்கவேண்டும்; ஆனால், இவர் ஆண்டவருடைய உதவியை நாடாமல், அவர்மீது நம்பிக்கை வைக்காமல், எகிப்தின் உதவியை நாடினார். எகிப்தால் எசேக்கியாவிற்கு ஒன்று செய்யமுடியவில்லை. இதனால் மக்கள் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டார்கள்.

 
இதில் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, எசேக்கியா அரசர், "ஆண்டவரே என் நீதி" என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்றாற்போல் மக்களை நீதியுடன் ஆட்சி செய்திருக்கவேண்டும். ஆனால், அவர் மக்களை நீதியுடன் ஆட்சி செலுத்தாததால், ஆண்டவரே தாவீதின் குலத்திலிருந்து நீதியுள்ள அரசர் தோன்றச் செய்வதாக இறைவாக்கினர் எரேமியா வழியாக வாக்குறுதி தருகின்றார். அது குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

 
நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டும் அரசர்


          எசேக்கியா, மக்களை நேர்மையோடும் நீதியோடும் ஆட்சி செய்யத் தவறியதால், ஆண்டவரே தாவீதின் குலத்திலிருந்து நீதியுள்ள அரசரைத் தோன்ற செய்கின்றார். அவர் ஞானத்தோடு செயல்பட்டு, நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுபவராக இருக்கின்றார். அவர்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இறைவாக்கினர் எரேமியா இறைவாக்காக உரைக்கின்ற வார்த்தைகள், வானதூதர் கபிரியேல் மரியாவிடம் சொல்கின்ற, "அவர் என்றென்றும் ஆட்சி செலுத்துவார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்ற வார்த்தைகளை ஒத்துபோவனவாக இருக்கின்றன (லூக் 1:33).

 
ஆம், தாவீதின் குலத்தில் தோன்றிய தளிராகிய இயேசு, மக்களை நீதியோடும் நேர்மையோடும் என்றென்றும் ஆட்சி செய்யப்போகின்றார். எனவே, நாம் அவருடைய ஆட்சியில் பங்குபெற அவர்மீது நம்பிக்கைகொண்டு அவருடைய வழியில் நடக்கும் மக்களாவோம்.


சிந்தனை


            "அவரே, நீதியும் நேர்மையும் உள்ளவர்" (இச 32:4) என்கின்றது இணைச்சட்ட நூல். ஆகவே, மக்களை நீதியோடும் நேர்மையோடும் ஆட்சி செய்ய வருகின்ற மெசியாவாம் இயேசுவைப் போன்று நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நீதியோடும் நேர்மையோடும் இருக்கக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 01: 18-24

"அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"

நிகழ்வு

மூன்று கிறிஸ்தவ இளைஞர்கள் ஒரு பனிபடர்ந்த மலைமீது ஏறிச் சென்றார்கள். மலையில் ஏறிச் செல்வது அவர்களுக்குச் சவாலாக இருந்தாலும், மிகவும் உற்சாகமாக ஏறிச் சென்றார்கள். இப்படி இருக்கையில் பனிப்புயல் திடீரென்று வீசத் தொடங்கியது. இதனால் அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்பொழுது அவர்களுடைய கண்ணில் ஒரு குகை தென்பட, அதற்குள் சென்று ஒளிந்துகொண்டார்கள்.

பனிப்புயல் இப்பொழுது ஓயும்... பிறகு ஓயும் என்று அவர்கள் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்; ஆனால், பனிப்புயல் ஓயவே இல்லை. இதனால் அவர்கள் அந்தக் குகையிலேயே தங்கத் தொடங்கினார்கள். ஒருநாள், இரண்டு நாள் என்று நாள்கள் செல்லச் செல்ல, அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட தருணத்தில் அவர்கள் தங்களிடம் இருந்த திருவிவிலியத்தை எடுத்து, ஒருவர் மாற்றி ஒருவர் உரக்க வாசித்து தங்களுக்குள் தைரியம் ஊட்டிக்கொண்டார்கள். தொடர்ந்து அவர்கள் "ஏதாவது அதிசயம் நடக்கும்... அப்பொழுது நாம் இங்கிருந்து போய்விடலாம்" என்று நம்பிக்கையோடு இருந்தார்கள்.

இதற்கு நடுவில் அவர்களிடம் இருந்த உணவு தீர்ந்துபோனது. இதனால் அவர்கள் உடல் தளர்ந்து போனார்கள். பதினாறாம் நாளில் பனிப்புயல் மெல்ல ஓய்ந்திருந்தது. அதனால் அந்த மூவரில் ஒருவர் தள்ளாடித் தள்ளாடி குகையை விட்டு வெளியே வந்து பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியப்பட வைத்தது. ஆம், அவருக்கு எதிரில் மீட்பு குழுவினர் வந்துகொண்டிருந்தனர். அவர்களை நோக்கி, அவர் சத்தம் கொடுக்க, அவர்கள் வந்து அந்த மூன்று இளைஞர்களையும் மீட்டுக்கொண்டு, அவர்களுடைய இடத்தில் போய்ச் சேர்த்தார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற மூன்று இளைஞர்களும் பனிப்புயலின் காரணமாக குகையில் மாட்டிகொண்டு சிரமப்பட்டபோது, மீட்புக் குழுவினர் வந்து அவர்களை மீட்டார்களே, அதுபோன்று இந்த உலகம் பாவத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது இயேசு கிறிஸ்து மீட்பராய் வந்து, பாவத்திலிருந்து விடுதலை தந்தார். இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு இத்தகைய செய்தியைத்தான் தருகின்றது. ஆகவே, நாம் அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

கனவின் வழியாகப் பேசும் கடவுளின் தூதர்

நற்செய்தியில், யோசேப்பு தனக்குத் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா, தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்பே கருவுற்றிருக்கின்றார் என்பதை அறிந்து அவரை மறைவாய் விளக்கிவிடத் திட்டமிடுகின்றார். ஒருவேளை யோசேப்பின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால், மரியா தனக்குத் துரோகம் செய்துவிட்டார் என்று அவரைக் கல்லால் எறிந்து கொன்றிருக்ககூடும். காரணம் மோசேயின் சட்டம் அப்படிச் சொல்கின்றது (இச 22: 23,24); ஆனால், யோசேப்பு நீதிமானாக இருந்ததால், மரியாவை மறைவாக விலக்கிவிடத் திட்டமிடுகின்றார். யோசேப்பு நீதிமானாக இருந்தார் என்றால், அவர் மரியாவின் மட்டில் இரக்கமிக்கவராக இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அதனால்தான் அவர் மரியாவிடம் இரக்கத்தோடு நடந்துகொள்கின்றார்.

இப்படிப்பட்ட நேரத்தில் யோசேப்பின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றி, மரியாவை ஏற்றுக்கொள்ளுமாறு அவரிடம் கூறுகின்றார். யோசேப்பின் கனவில் ஆண்டவரின் தூதர் நான்குமுறை தோன்றி, அவரிடம் பேசியதாக திருவிவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது (மத் 1:20, 2:13. 2:19,20, 2:22) இந்த நான்குமுறையும் யோசேப்பு ஆண்டவரின் குரலுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார் என்பதுதான் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது.

மீட்பராய் வந்த இயேசு

யோசேப்பின் கனவில் தோன்றிப் பேசும் ஆண்டவரின் தூதர், மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ளச் சொல்வதுடன் இயேசு எப்படிப்பட்டவர் என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். ஆம், ஆண்டவரின் தூதர் இயேசுவைக் குறித்து யோசேப்பிடம் சொல்கின்றபோது, அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிருந்து மீட்பார் என்று கூறுகின்றார். இது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

இயேசு கிறிஸ்து, ஆதாமினால் வந்த பாவத்தைப் போக்க (1 கொரி 15: 21), இம்மண்ணுலகிற்கு மீட்பராக வந்தார். அப்படி வந்தவர் கல்வாரி மலையில் நம் பாவம் அனைத்தையும் போக்கிய செம்மறியானார் (யோவா 1: 29). இவ்வாறு இறைவனின் மீட்புத் திட்டம் நிறைவேறக் காரணமானவர். ஆகையால், இந்த மீட்பரின் திட்டம் இப்பூவுலகில் தொடர்ந்து நடைபெற யோசேப்பை போன்று, நாமும் கடவுளோடு ஒத்துழைக்க வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய பணியாக இருக்கின்றது.

சிந்தனை

"இயேசு வழியாகவே உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டு" என்கிறது (திப 13: 38). இறைவார்த்தை. ஆகையால் நமக்குப் பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும் தரும், இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளம் நிறைவேற உழைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!