Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     17 டிசம்பர் 2019  
                         திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு - 2ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.

யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்?

அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 72: 1-2. 3-4ab. 7-8. 17 (பல்லவி: 7b)  Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4ab எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும். அல்லேலூயா.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்பட்டிருக்கும் அல்லேலூயா வசனத்திற்குப் பதிலாக, 98ஆம் பக்கத்தில் உள்ளவற்றிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.

தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தொடக்கநூல் 49: 1-2, 8-10

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகின்றார்

நிகழ்வு


இரஷ்யாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேதகலாபனை நடந்தபோது, ஒருசிலர் உயிருக்குப் பயந்து கிறிஸ்துவை மறுதலித்தபோதும், பலர் கிறிஸ்துவின்மீதுகொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்கள். இதனால் அவர்கள் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள்; கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள். அப்படி இருந்தபொழுதும் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையிலிருந்து சிறிதளவுகூட பிறழவில்லை.


இதற்கு நடுவில் எழுபது இளைஞர்கள் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதற்காக அவர்கள் சிறையில் அடைத்துவைத்துச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அப்படியிருந்தபொழுதும் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையிலிருந்து பிறழாமல் இருந்ததால், உறைந்திருந்த ஆற்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அதில் உடம்பில் துணியில்லாமல் நிற்க உத்தரவிடப்பட்டார்கள். இதற்குப் பொறுப்பாக ஓர் அதிகாரியையும் அந்த எழுபது இளைஞர்களோடு அனுப்பி வைக்கப்பட்டார்.


உறைந்திருந்த ஆறு வந்ததும், அந்த எழுபது இளைஞர்களும் அதில் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். நேரம் சென்றுகொண்டிருந்தது. குளிர் அவர்களை வாட்டி வைத்தபொழுதும், அவர்கள் கிறிஸ்தவை மறுதலிக்காமல், அவர்மீதுகொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள். இவையெல்லாவற்றையும் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் அவர்களை கூட்டிக்கொண்டு வந்த அதிகாரி. ஒருகட்டத்தில் குளிர் தாங்கமுடியாமல் இளைஞர்கள் ஒருவர்பின் ஒருவராகச் செத்துக் கீழே விழுந்தார்கள். எப்பொழுதெல்லாம் ஓர் இளைஞர் செத்துக் கீழே விழுந்தாரோ, அப்பொழுதெல்லாம் விண்ணகத்தில் வானதூதர் ஒருவர் கிரீடத்தோடு தோன்றினார். இந்தக் கண்கொள்ளாக் காட்சியை சற்றுதொலைவில் நின்றுகொண்டிருந்த அதிகாரி வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். அறுபத்து ஒன்பது இளைஞர்கள் கடுங்குளிரையும் தாங்கிக்கொண்டு, இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்கள்.


ஒரே ஓர் இளைஞருக்குத் திடீரென்று உயிர்மீது என்ற ஆசை வர அவர் அங்கிருந்த அதிகாரியைக் கூப்பிட்டு, "நான் கிறிஸ்துவை மறுதலிக்கின்றேன். என்னை உயிரோடு விட்டுவிடுங்கள்" என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு சற்று வியப்படைந்த அந்த அதிகாரி, "என்னுடைய ஆடையை எடுத்துப் போட்டுக்கொள். உன்னுடைய இடத்தில் நான் உயிர் துறக்கின்றேன்" என்றார். இதற்குப் பின்பு அந்த அதிகாரி தான் அணிந்திருந்த ஆடையை கிறிஸ்துவை மறுதலித்த இளைஞரிடம் கழற்றிக்கொடுத்துவிட்டு, வெற்றுடம்போடு உறைந்திருந்த ஆற்றில் நின்றார். சிறிது நேரத்தில் குடுங்குளிரின் கொடுமை தாங்க முடியாமல் மடிந்து கீழேவிழுந்தார். அப்பொழுதும் விண்ணகத்தில் ஒரு வானதூதர் கையில் கிரிடத்தோடு தோன்றி மறைந்தார்.


ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்காக உயிர்துறந்த அந்த அறுபத்து ஒன்பது இளைஞர்களும் ஓர் அதிகாரியும் வானதூதரால் கிரீடம் சூட்டப்பட்டு, கடவுளின் ஆசி பெற்றார்கள். இன்றைய முதல் வாசகமும், ஆண்டவருக்கு அஞ்சி நடந்த ஒருவருடைய தலைமுறை எப்படிக் கடவுளால் ஆசி பெறுகின்றது என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


கடவுளுக்கு அஞ்சி நடந்த யூதா


தொடக்கநூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், சாகும் தருவாயில் இருக்கும் யாக்கோபு தன் பிள்ளைகள் அனைவரையும் வரவழைத்து, அவர்களோடு இறுதிவார்த்தைகளைப் பேசுகின்றார். இதனை இறுதிவார்த்தைகள் என்று சொல்வதைவிடவும், எதிர்காலத்தில் நடக்க இருப்பதன் முன்னறிவிப்பு என்று சொல்லலாம்.


யாக்கோபின் இறுதி வார்த்தைகள், யூதாவும் அவருடைய வழிமரபும் எந்தளவுக்கு உயர்த்தப்படுவார்கள் என்பதைப் பற்றியதாக இருக்கின்றன. கீழ்க்காணும் வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. "யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர்... உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா நீ ஒரு சிங்கக்குட்டி... யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது." யூதாவிற்கு எதற்கு இத்தகைய ஆசி கிடைக்கின்றது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.


யாக்கோபின் புதல்வர்கள் யோசேப்பைக் கொல்ல நினைத்தபொழுது, யூதாதான் அவர்களிடம், "நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை நமக்கு என்ன பயன்? அவனை இஸ்மயலேருக்கு விற்றுவிடுவோம்" (தொநூ 37: 26-27) என்று சொல்லி யோசேப்பின் உயிரைக் காப்பாற்றுகின்றார். இச்செயல் மீட்பின் வரலாற்றில் ஒரு முக்கியமான செயல். ஏனென்றால், யூதா, யோசேப்பை இஸ்மயலேரிடம் விற்றுவிடுவோம் என்று சொல்லாமல் இருந்திருந்தால், பஞ்சகாலத்தில் யாக்கோபின் குடும்பத்திற்கு யாரும் அடைக்கலம் தந்திருக்கமுடியாது. இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது. எனவேதான் யூதா செய்த ஓர் இரக்கச் செயல் முக்கியத்துவம் பெறுகின்றது.


யூதா இச்செயலைச் செய்ததற்கு அவருடைய உள்ளத்தில் இறையச்சம் இருந்திருக்கவேண்டும். அதனாலேயே அவரும் அவருடைய வழிமரபும் ஆண்டவரால் உயர்த்தப்படுகின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் யூதாவின் வழிமரபில்தான் மெசியாவாம் இயேசு பிறக்கின்றார். அவர் யூதா குலத்தின் சிங்கமென அழைக்கப்படுகின்றார்.


யூதா ஆண்டவருக்கு அஞ்சி நடந்ததனாலேயே இத்தகைய ஆசியைப் பெற முடிந்தது. நாமும் ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய வழியில் நடந்தால் அவருடைய ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி. நாம் ஆண்டவருக்கு நடக்கின்றோமா? சிந்திப்போம்.


சிந்தனை


"ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்" (திபா 112:1) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 1: 1-17

தமக்கு அஞ்சி நடப்போரை உயர்த்தும் இறைவன்

நிகழ்வு

ஸ்டீபன் ஜிரார்ட் என்றொரு தொழிலதிபர் இருந்தார். அவருடைய நிறுவனத்தில் நிறைய வேலைகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன; எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்கவேண்டிய கட்டாயம் இருந்ததால், அவர் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த பணியாளர்களிடம், "ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வாருங்கள்... உங்களுக்குச் சம்பளத்தை இரண்டு மடங்கு தருகின்றேன்" என்றார். எல்லாரும் இதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள்; ஒரே ஓர் இளைஞனைத் தவிர.

ஸ்டீபன் ஜிரார்ட் அந்த இளைஞனிடம், "உன்னால் ஏன் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வரமுடியாது?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், "ஞாயிற்றுக்கிழமை என்பது ஆண்டவரின் நாள். அந்த நாளில் நான் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதனால் என்னால் வேலைக்கு வரமுடியாது" என்றான். "ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வந்தால், உனக்கு இரண்டு மடங்கு சம்பளம் தருகிறேன்" என்றார் ஸ்டீபன் ஜிரார்ட். "இரண்டு மடங்கு சம்பளம் கிடைக்கின்றது என்பதற்காக என்னால் கோயிலுக்குப் போகாமலெல்லாம் இருக்க முடியாது. நான் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன். அதனால் நான் கட்டாயம் கோயிலுக்குச் சென்றாக வேண்டும்" என்றான்.

அந்த இளைஞன் இவ்வாறு பேசியது ஸ்டீபன் ஜிரார்டிற்குக் கடுஞ்சினத்தை வரவழைத்தது. அதனால் அவர் அந்த இளைஞனிடம், "நீ என்னுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்காததால், உன்னை வேலையிலிருந்து தூக்குகின்றேன். நீ வேறு எங்காவது வேலையைப் பார்த்துக்கொள்" என்றான். அந்த இளைஞனும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

இது நடந்து ஒரு வாரம் கழித்து, ஸ்டீபன் ஜிரார்ட்டைப் பார்க்க அவருக்கு மிகவும் அறிமுகமான வங்கி மேலாளர் ஒருவர் வந்தார். வந்தவர் அவரிடம், "வங்கியில் கணக்கர் வேலை காலியாக இருக்கின்றது... உனக்குத் தெரிந்த, அதே நேரத்தில் நம்பிக்கைக்குரிய யாராவது ஒருவர் இருந்தால், என்னிடத்தில் சொல்" என்றார். ஸ்டீபன் ஜிரார்ட்டிற்கு சட்டென, தான் வேலையிலிருந்து நீக்கிய அந்த இளைஞன்தான் மனக்கண் முன்பாக வந்துபோனான். அவனையே கணக்கர் வேலைக்குத் தன் நண்பரிடம் பரிந்துரைத்தார் ஸ்டீபன் ஜிரார்ட்.

அதற்கு அந்த வங்கி மேலாளர், "உன்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்ட அந்த இளைஞன் எப்படி வேலையில் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருப்பான்" என்றார். ஸ்டீபன் ஜிரார்ட் அவரிடம் தீர்க்கமான குரலில், "அந்த இளைஞன் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக்கூடியவன். அதனால் மனசாட்சிக்கு விரோதமாக ஒருபோதும் செயல்படமாட்டேன். மாறாக, தன்னுடைய பணியில் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருப்பான்" என்றார். முடிவில் அந்த வங்கி மேலாளர் அந்த இளைஞனை கணக்கர் பணியில் அமர்த்தினார்.

ஒருவர் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கின்றபோது, அவர் எந்தளவுக்கு ஆண்டவரால் உயர்த்தப்படுகின்றார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம், ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் அல்லது அவருக்குப் பணிந்து நடந்தவர்கள் எப்படி கடவுளால் உயர்த்தப்பட்டார்கள் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவருக்கு அஞ்சிநடந்தோர் இயேசுவின் மூதாததையர் பட்டியலில் இடம்பெறல்

நற்செய்தியில் இயேசுவின் மூதாதையர் பட்டியல் இடம்பெறுகின்றது. இதில் நாம் கவனிக்கவேண்டியது, யாரெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிந்து நடந்தார்களோ, அவர்களெல்லாம் மூதாதையர் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றார்கள் என்பதுதான். இயேசுவின் தலைமுறை அட்டவணையில் அவருடைய தாய் மரியா உட்பட தாமார், இராகாபு, ரூத், உரியாவின் மனைவியான பெத்சபா என்ற ஐந்து பெண்கள் உண்டு; பாவிகள் உண்டு (இராகாபு ஒரு விலைமகள்; யோசு 2:1). ரூத்து போன்று புறவினத்தாரும் உண்டு; ஆனால், ஆண்டவருக்கு அஞ்சி நடக்காத எவரும் கிடையாது. அப்படியானால், நாம் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால், திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போன்று, பேறுபெற்றவர்கள் ஆவோம் (திபா 128:1) என்பது உறுதி.


ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியைக் கற்பிக்கும் இறைவன்

இயேசுவின் மூதாதையர் பட்டியல் நமக்கு உணர்த்தும் இரண்டாவது முக்கியமான செய்தி, யாரெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கின்றார்களோ, அவர்கள் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை ஆண்டவர் கற்பிக்கின்றார் என்பதாகும். திருப்பாடல் ஆசிரியர் இதே செய்தியைத்தான் திருப்பாடல் 25: 12 ல் கூறுகின்றார்.

இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் மூதாதையர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் யாவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள். இவர்கள் அனைவரும் எந்த வழியைத் தேர்ந்துகொள்ளவேண்டும் என்பதை ஆண்டவர் கற்பித்தார். ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் அவருடைய வழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்பது எழுதப்படாத சட்டம். இவ்வாறு ஆண்டவருக்கு நடந்தவர்கள் அவருடைய வழியில் நடந்து, அவர் பெயர் விளங்கச் செய்தார்கள். கடவுளும் தனக்கு அஞ்சி நடந்தோருடைய பெயர் விளங்கச் செய்தார், செய்வார்.

ஆகையால், நாம் ஆண்டவருக்கு அஞ்சி, அவர் வழியில் நடக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தாம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்" (திபா 34: 7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய திருவுளம் இம்மண்ணுலகில் நிறைவேற உழைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
வரலாற்றில் இயேசு

ஒருமுறை பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திய நாட்டின் முதல் பிரதமராக ஆனபிறகு, பள்ளியில் தனக்கு வரலாற்றுப் பாடம் சொல்லிக்கொடுத்த வலாற்று ஆசிரியரைப் பார்த்து, அவருக்கு நன்றி சொல்லச் சென்றார்.

ஆசிரியரைப் பார்த்ததும், நேரு அவருடைய காலில் விழுந்து, வணங்கினார். பின்னர் அவர் தன்னுடைய ஆசிரியரைப் பார்த்து, "நீங்கள் மட்டும் எனக்கு அறிவு புகட்டவில்லை என்றால், இன்றைக்கு நான் நமது நாட்டின் பிரதமராக வந்திருக்கமாட்டேன்" என்றார்.

அதற்கு அவருடைய ஆசிரியர், "யார் வேண்டுமானால் வரலாற்றுப் பாடத்தை உனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நான் வரலாற்றுப் பாடத்தைப் போதிக்கத்தான் செய்தேன். ஆனால் நீயோ வரலாற்றில் இடம்பிடித்து விட்டாய். உண்மையில் நீ மிகப் பெரியவன்" என்று சொல்லி அவர் நேருவை வாழ்த்தினார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரலாற்றில் இடம்பிடித்த ஆண்டவர் இயேசுவின் தலைமுறை அட்டவணை வாசிக்கின்றோம். யூதரல்லாத நமக்கு வேண்டுமானால் தலைமுறை அட்டவணை பெயர்களின் தொகுப்பாக இருக்கலாம். ஆனால் யூதர்களைப் பொருத்தமாட்டில் இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் யூதர்கள் தங்களை இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினம் என்றும், ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்றும் நினைத்தார்கள். இதனை மனதில் கொண்டுதான் மத்தேயு நற்செய்தியாளர் இயேசு ஆபிரகாமின் வழிவந்தவர், யூதர் என்பதை உறுதி செய்வதற்காக இயேசுவின் தலைமுறை அட்டவணையைத் தருகிறார்.

இயேசுவின் தலைமுறை அட்டவணைப் படித்துப் பார்க்கும்போது ஒரு சில உணமைகளை நாம் உணர்ந்து கொள்ளலாம். அதில் முதலாவது இயேசு என்னும் மெசியா யூதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, மாறாக அவர் எல்லா மக்களுக்கும் சொந்தமானவர் என்பதாகும். தலைமுறை அட்டவணையில் இடம்பெறும் தாமார், ரூத்து, பர்சபா, இராக்காபு யாவரும் புறவினத்தவரே. இறைவன் எல்லார் வழியாகவும் செயலாற்றுவார், எல்லாருக்கும் தனது மீட்பைத் தருவார் என்பதை இங்க நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக இயேசு என்னும் மெசியா பாவத்திலிருந்து மக்களை மீட்டு, மீட்பை தரக்கூடியவர் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. தலைமுறை அட்டவணையானது பதினான்கு பதினான்கு தலைமுறை வீதம் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் பதினான்கு தலைமுறையானது அதாவது ஆபிரகாமிற்கும், தாவீதிற்கும் இடைப்பட்ட தலைமுறையில் வாழ்ந்தவர்கள் கடவுளுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள். ஆனால் அதற்கு அடுத்த தலைமுறையினரோ கடவுளது கட்டளையைக் கடைப்பிடிக்காமல் வேற்று தெய்வத்தை வழிபட்டு, கடவுளை விட்டு வெகுதொலைவில் போனார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள், பாபிலோனியருக்கும், அசிரியர்களுக்கும் அடிமையாய் வாழ்ந்தார்கள்.

எனவே தங்களுடைய தவறான வாழ்வால் தாங்கள் நாடு கடத்தப்பட்டதையும், அடிமைப்படுத்தப்பட்டதையும் உணர்ந்த இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய தவற்றை உணர்கிறார்கள்; தங்களை மீட்குமாறு இறைவனை நோக்கி மன்றாடுகிறார்கள். ஆதலால் பாவத்தாலும், தவறான வாழ்வாலும் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை மீட்க இறைவன் தன்னுடைய ஒரே மகனை அனுப்பி மீட்கிறார்.

ஆக மெசியா என்னும் இயேசு எல்லாம் மக்களுக்கும் பொதுவானவர் என்பதோடு மட்டுமல்லாமல், அவர் மக்களைப் பாவங்களிலிருந்து மீட்பார் (மத் 1:20) என்பதும் உறுதியாகிறது.

எனவே இயேசுவின் வருகைக்காக தயாரித்துக் கொண்டிருக்கும் நாம் நமக்கு மீட்பை, விடுதலையைத் தர வரும் இயேசுவை திறந்த மனதோடு ஏற்போம். அவர் வழங்கும் அருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
இயேசு எல்லாருக்கும் பொதுவானவர்

கடந்த நூற்றாண்டில் ஆப்ரிக்காவில் உள்ள கிழக்கு கடற்கரைப் பகுதியில் மறைபோதகப் பணியாற்றிய ஒரு குருவானவர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது.

ஒருநாள் அந்த குருவானவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அங்கே இருந்த மக்களுக்குப் போதித்துவிட்டு, தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது ஓர் இளைஞன் அவரைச் சந்தித்தான். அவன் அவரிடம், "தந்தையே! இயேசு கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் மிகத் தெளிவாகப் போதித்தீர்கள், ஆனால் அவர் கருப்பா? வெள்ளையா? என்று எங்களுக்குச் சொல்லவில்லையே?" என்றான்.

இதைக் கேட்ட அந்த குருவானவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று பலவாறாக யோசித்தார். ஏனென்றால் இயேசுவை அவர் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னால், அவன் சோகமாகச் செல்லக்கூடும். மேலும் நல்லது எல்லாமே வெள்ளையினத்தவரிடமிருந்துதான் வரும்போல என்று அவன் வருத்தப்படக் கூடும். ஆதலால் அவனுக்கு எப்படி பதில் சொல்வது என்று தீவிரமாக யோசித்தார்.

பின்னர் உள்ளத்தில் தெளிவு பெற்றவராய், இயேசு வாழ்ந்த பூமி வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு பூமியாகும். ஆதலால் அங்கு இருப்பவர்கள் யாவருமே இயேசு உட்பட வெள்ளை நிறமும் இல்லாமல், கருநிறமும் இல்லாமல் மாநிறமாக இருப்பார்கள்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியோடு, "இயேசு வெள்ளையாகவோ, கருப்பாகவோ இல்லாமல் மாநிறமாக இருப்பாரா? அப்படியென்றால் அவர் எல்லாருக்கும் பொதுவானவரா?" என்று சொன்னான்.

ஆண்டவர் இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவருக்கோ சொந்தமானவர் அல்ல, அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் தலைமுறை அட்டவனையை நாம் வாசிக்கின்றோம். இந்த தலைமுறை அட்டவணையை நாம் கூர்ந்து நோக்கும்போது நிறைய உண்மைகளை உணர்ந்துகொள்ளலாம். குறிப்பாக இயேசு கிறிஸ்து யூதர்களுக்கோ, நேர்மையாளர்களுகோ மட்டுமல்ல, மாறாக அவர் எல்லா இனத்தாருக்கும், எல்லா மக்களுக்கும் பொதுவானவர் என்பதை உணர்ந்துகொள்ளலாம். இயேசு எப்படி எல்லாருக்கும், எல்லா இனத்தாரும் பொதுவானவர் என்பதை இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

பொதுவாக யூதர்களின் தலைமுறை அட்டவணையில் ஆண்களின் பெயர்களே இடம்பெற்றிருக்கும். பெண்களுக்கு அங்கு இடம்கிடையாது. ஆனால் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் தாமார், ராகாப், உரியாவின் மனைவி பெத்சபா, ரூத்து, மரியா போன்றோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதை வைத்துப் பார்க்கும் இயேசு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஓர் இணைப்பாளராக இருந்து செயல்படுகிறார் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

அடுத்ததாக யூதர்கள் தங்களை "தூய இனமாக" நினைத்துக்கொள்ளக்கூடியவர்கள். அவர்களது தலைமுறையில் அட்டவணையில் பிற இனக்கலப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள். ஆனால் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் இராகாப், ரூத்து போன்ற புறவினத்தாரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதன்வழியாக இயேசு யூதருக்கும், புறவினத்தாருக்கும் இடையே ஓர் இணைப்பாளராக இருந்து செயல்பட்டார் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:16 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவராகிய இயேசு சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஒருடலாக்கினார்" என்று. ஆம், இயேசு கிறிஸ்து யூதர்களையும் பிற இனத்தாரையும் தன்னுடைய சிலுவையின் வழியாக ஒன்று சேர்த்தார். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

நிறைவாக இயேசு கிறிஸ்து நேர்மையாளர்களின் மீட்புக்காக மட்டுமல்லாமல் பாவிகளின் மீட்புக்காகவும் இந்த மண்ணுலகிற்கு வந்தார் என்பதையும் இந்த தலைமுறை அட்டவணை வழியாக நாம் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் தலைமுறை அட்டவணையில் தாமார், இராகாப் போன்று பாவிப்பெண்களும் இடம்பெறுவதைப் பார்க்கும்போது அத்தகைய சிந்தனைதான் மேலோங்கி இருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

மத்தேயு நற்செய்தி 9:13ல் இயேசு கூறுவார், "நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்கவந்தேன்" என்று. ஆகவே, இயேசுவின் வருகை எல்லாருக்கும், எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதை உணர்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். எவரையும் இழிவானவராக, தரம் குறைந்தவராகப் பார்க்கும் பார்வையை விடுவோம். அனைவரும் கடவுளின் மக்கள் என்பதை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!