Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     16 டிசம்பர் 2019  
                         திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு - 2ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இந்நாள் டிசம்பர் 17 அல்லது 18ஆம் நாளாக இருக்க நேர்ந்தால், கீழ்க்கண்டுள்ள வாசகங்களை விடுத்து, டிசம்பர் 17 அல்லது 18ஆம் நாளுக்குரிய வாசகங்களைப் பயன்படுத்தவும். (காண்க: பக்கம் 78 அல்லது 81)

யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7,15-17a

அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர்மேல் இறங்கியது.

அவர் திருஉரையாகக் கூறியது: "பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! யாக்கோபே! உன் கூடாரங்களும், இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை. அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்."

பிலயாம் திருஉரையாகக் கூறியது: "பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றல் உடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!"

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 25: 4-5ab. 6,7bc. 8-9 (பல்லவி: 4b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bc உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
யோவானின் திருமுழுக்கு எங்கிருந்து வந்தது?

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.

யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?" என்று அவர் கேட்டார்.

அவர்கள், " விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். மனிதரிடமிருந்து' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

எனவே அவர்கள் இயேசுவிடம், "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.

அவரும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

கிற்ஸ்துவின் அதிகாரம் தந்தையிடமிருந்து வந்தது என்றால், அந்த அதிகாரத்தில் நமக்கும் பங்குண்டு.

நாமும் அந்த அதிகாரத்தை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்.

அதிகாரத்தை நிறைவேற்றுவது என்பது, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வாழ்க்கையில்லை மாறாக, நாம் பெற்றிருக்கும் அதிகாரத்தால் பிறர் வாழ்வு பெறும் செயல்களை செய்வதற்காகவே. அதிகாரத்தை பயன்படுத்தி மனித மாண்பினை உயர செய்வதுவே ஆகும். இதை செய்யாத போது, கொடுத்தவர் அதனை பெற்றவரிடமிருந்து பறிக்கவும் தயங்கமாட்டார் என்பதனை உணர்ந்து கொள்வதுவே சிறப்பு.




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்.


எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7,15-17a

"யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்; இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்"

நிகழ்வு

பாலைவனத்தில் இறைநம்பிக்கையாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவரிடம் வந்த புதியவர் ஒருவர் அவரிடம் பேச்சுக்கொடுத்தார். பேச்சின் இடையில் புதியவர் இறைநம்பிக்கையாளரிடம், "கடவுள்மீது ஆழமான நம்பிக்கை இருக்கின்றது என்று சொல்கின்ற நீர், கடவுள் இருப்பதை எப்படி அறிந்துகொள்வீர்...?" என்று கேட்டார். இறைநம்பிக்கையாளர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டுப் பேசத் தொடங்கினார்: "இந்தப் பாலைவனத்தில் நான் தனியாக இருக்கின்றேன். இப்படி இருக்கும்பொழுது, இந்தப் பாலைவன மணலில் ஒரு விலங்கின் காலடியையோ அல்லது ஒரு மனிதரின் காலடியையோ நான் கண்டால், அதுவே கடவுள் இருக்கின்றார் என்பதற்கான அடையாளமாகப் புரிந்துகொள்வேன்."

இறைநம்பிக்கையாளர் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு, புதியவர் மிகவும் வியந்து நின்றார்.

இந்த உலகத்தில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும், ஏன், ஒவ்வொன்றும் கடவுள் இவ்வுலகில் இருக்கின்றார் என்பதை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இப்பூவுலகில் இருக்கின்றார் என்பதன் அடையாளமாக, இஸ்ரயேல் மக்களைச் சபிக்க வந்த பிலயாம் என்பவர் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூறிவிட்டுச் செல்கின்றார். இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூறிய இந்தப் பியலாம் யார்? இவர் இஸ்ரயேல் மக்களுக்கு எத்தகைய ஆசியைக் கூறினார்? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யார் இந்த பிலயாம்?

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்கள், மோசேயாலும் அவருக்குப் பின் யோசுவாலும் வழிநடத்திப்பட்டு, வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கானான் நாட்டை நெருங்கிய வருகின்ற செய்தி மோவாப் மன்னனாகிய பாலாக்கிற்குத் தெரிய வருகின்றது. ஆகையால் அவன் பிலயாமைக் கூப்பிட்டு, இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் சொல்கின்றான். இந்த பிலயாம் இஸ்ரயேல் மக்களைக் சாராத ஓர் இறைவாக்கினர். இவரைக் குறித்து எண்ணிக்கை நூல் 22,23,24 ஆகிய அதிகாரங்களில் வாசிக்கின்றோம்.

இவர் பாலாக்கிடமிருந்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கவேண்டும் என்ற வேண்டுகோளைப் பெற்றுக்கொண்டு, இஸ்ரயேல் மக்கள் இருந்த கூடாரத்திற்குச் செல்கின்றார்; ஆனால், போகிற வழியிலியே இவர் ஏறிச்சென்ற கழுதை, ஆண்டவரின் தூதரைக் கண்டு, தொடர்ந்து போகாமல் முரண்டு பிடித்ததால், இவர் காரணத்தை அறிய முற்படுகின்றார். அப்பொழுது ஆண்டவர் தன்னை இஸ்ரயேல் மக்களைச் சபிக்க அல்ல, ஆசிகூற அழைக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்துகொள்கின்றார்.

பிலயாம் இஸ்ரயேல் மக்களுக்குக் கூறிய ஆசி

பிலயாம் இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செல்கின்ற வேளையில், ஆண்டவரின் தூதர் அவருக்கு முன்பாகத் தோன்றி, ஆண்டவரின் வார்த்தையை அவருடைய வாயில் வைத்ததால், அவர் இஸ்ரயேல் மக்களைச் சபிப்பதற்குப் பதில் அவர்களுக்கு ஆசி கூறிவிட்டுச் செல்கின்றார். பிலயாம் இஸ்ரயேல் மக்களுக்கு எத்தகைய ஆசி வழங்கினார் என்பதை இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. இதில் நாம் கவனிக்க வேண்டிய வார்த்தைகள், "யாக்கோபின் கூடாரங்கள் அகில் மரங்கள் போன்றவை... அவனுடைய நீர்க்கால்களிளிருந்து தண்ணீர் ஓடும் என்பவைதான். திருவிவிலியத்தில் மரம், தண்ணீர் போன்றவை கடவுள் அளிக்கும் ஆசியாகப் பார்க்கப்படுகின்றன. மேற்சொன்ன வார்த்தைகளை பிலயாம் இஸ்ரயேல் மக்களைப் பார்த்துச் சொன்னது என்பது, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை தன்னுடைய ஆசியால் நிரப்பப்போகிறார் என்பதன் அடையாளமாக இருக்கின்றது.

ஆண்டவராகிய கடவுள் பிலயாம் வழியாக இன்னொரு முக்கியமான செய்தியையும் முன்னறிவிக்கின்றார். அது என்ன செய்தி என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

விண்மீனாம் இயேசு

"யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்; இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்" என்பதுதான் பிலயாம் வழியாக ஆண்டவர் முன்னறிவிக்கும் செய்தியாகும். பிலயாம் முன்னறிவித்த இந்தச் செய்தி இயேசுவில் நிறைவேறியது. ஆம், யாக்கோபிலிருந்து தோன்றிய விண்மீனாம் இயேசுவைப் பார்ப்பதற்குத்தான் கீழ்த்திசையிலிருந்து ஞானிகள் வந்தார்கள். அப்படி வந்தவர்கள் தங்களிடமிருந்த பொன், தூபம், வெள்ளைப்போலம் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

பிலயாம் இறைவாக்கு உரைத்தது நமக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றது, அதுதான் கடவுள் யார் வழியாகவும் செயல்படுவார் என்பதாகும். ஆகையால், எல்லார் மூலமாகவும் செயல்படுகின்ற ஆண்டவரை அறிந்துகொள்ளும் தெளிந்த பார்வை பெற்று, அவருடைய திருவுளம் நிறைவேற நம்மையே ஆண்டவரிடம் ஒப்புக்கொடுப்போம்.

சிந்தனை

"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாகப் பேசிய கடவுள்..." (எபி 1:1) என்கிறது இறைவார்த்தை. எனவே, பலவகைகளில் பலரின் மூலம் நம்மிடம் பேசும் இறைவனின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 21: 23-27

இயேசுவுக்கு எதிராக நடந்த சூழ்ச்சி

நிகழ்வு

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய நாட்டு மக்களை நேர்மையாக ஆட்சிசெய்து வந்தார். இதனால் மக்கள் நடுவில் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டாயின.

இப்படியிருக்கையில் ஒருநாள் அரசரிடம் மந்திரியாக இருந்த மேகலகா என்பவர் அவரிடம் வந்து, "அரசே! உங்களிடம் ஓர் இரகசியம் சொல்லவேண்டும்" என்றார். "சொல்லுங்கள்" என்று ஆர்வமாய் நின்ற அரசரிடம், "அரசே! நம்முடைய நாட்டு எல்லைப் பகுதியில் புதையல் ஒன்று இருப்பதாக அறிந்தேன். அதை மட்டும் நீங்கள் எடுத்தால், நாட்டு மக்களுக்கு இன்னும் நல்லமுறையில் பணிசெய்ய முடியும்" என்றார். "அப்படியா! நல்ல செய்தி! உடனே நம்முடைய படைவீரர்கள் ஒருசிலரை அங்கு அனுப்பி, புதையலை எடுத்துக்கொண்டு வரச் சொல்லுங்கள்" என்றார் அரசர்.

"அரசே! படைவீரர்களை அங்கு அனுப்பி வைப்பது அவ்வளவு நல்லதாக எனக்குத் தோன்றவில்லை... நாமிருவர் மட்டும் அங்கு சென்று, புதையலை எடுத்துக்கொண்டு வருவோம்" என்றார் மேக லகா. "நீ சொல்கின்ற யோசனையும் நன்றாகத்தான் இருக்கின்றது. அதனால் இன்று இரவு எல்லாரும் தூங்கியபின்பு, நாம் இருவரும் புதையலை எடுக்கச் செல்வோம்" என்றார் அரசர். மேக லகாவும் அதற்குச் சரியென்று சொல்ல, எல்லாரும் தூங்கியபின்பு இருவரும் புதையலை எடுக்கச் சென்றார்கள்.

புதையல் இருக்கும் இடத்தை அடைந்ததும் மேக லகா, அரசரிடம், "அரசே! இங்குதான் புதையல் இருக்கின்றது... அதனால் நீங்கள் குழியைத் தோண்டுங்கள்... நான் யாராவது வருகின்றாரா என்று பார்த்துக்கொண்டிருக்கின்றேன்" என்றார். பின்னர் அரசர் குழியைத் தோண்ட, மேக லகா யாராவது வருகின்றாரா என்று பார்த்துக்கொண்டிருந்தார். அரசர் குழியை ஆழமாகத் தோண்டியபோதும் புதையல் கிடைக்கவில்லை. இதனால் அரசர் மேக லகாவிடம், "மந்திரியாரே! இன்னும் எவ்வளவு ஆழத்திற்குக் குழியைத் தோண்டுவது?" என்றார். "அரசே! தொடர்ந்து தோண்டிக்கொண்டிருங்கள். நிச்சயம் புதையல் கிடைக்கும்" என்றார். இதைத் தொடர்ந்து அரசர் இன்னும் வேகமாகக் குழியைத் தோண்டினார்.

அன்று முழுநிலவு (பெளணர்மி) இரவு. அதனால் மண்ணுக்குள் கிடந்த ஒவ்வொன்றும் தெளிவாய்த் தெரிந்தது. அரசர் முழு மூச்சாகக் குழியைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது, மேலே இருந்த மேக லகா ஏதோ வித்தியாசமாக ஒன்றைச் செய்வது அவருக்குத் தெரிந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தபோது, அமைச்சர் மேக லகா கையில் வாளினை ஏந்திக்கொண்டு, தன்னை வெட்டிச் சாய்ப்பதற்காகக் காத்திருந்தார். அவரை அப்படிப் பார்த்த அரசருக்கு கடுஞ்சினம் வந்தது. "என்னைக் கொன்று புதைப்பதற்குத்தான் புதையல் இருப்பதாக நாடகமாடினாயா...? உன்னை எவ்வளவு நம்பினேன்!" என்று தன்னுடைய இடையில் இருந்த வாளை உருவி மேக லகாவை வெட்டிச் சாய்த்து, தான் வெட்டிய குழியிலேயே மேக லகாவைப் போட்டுப் புதைத்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.

இந்த நிகழ்வில் வருகின்ற மேக லகா, அரசனைக் கொன்றுவிட்டு தான் அரசனாகலாம் என்று நினைத்தான். இறுதியில் அவன் வகுத்த சூழ்ச்சியில் அவனே சிக்கி இறந்துபோனான். இன்றைய நற்செய்தியில் தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் இயேசுவைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்வதையும் முடியில் அந்தச் சூழ்ச்சியில் அவர்களே சிக்கிக் கொள்வதையும் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணிலிருந்து அருளப்பட்ட அதிகாரத்தால் எல்லாவற்றையும் செய்யும் இயேசு

ஆண்டவர் இயேசு திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்த பின்பு, அவரிடம் வருகின்ற தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும், "எந்த அதிகாரத்தால் நீ இவற்றைச் செய்கின்றீர்?" என்று கேட்கின்றார்கள். இயேசுவுக்கு எல்லா அதிகாரமும் உண்டு (மத் 28: 18). அப்படியிருந்தும் அவர் அதை அவர்களிடம் சொல்லாமல், "யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் வந்தது?" என்று அவர்களிடம் கேள்வியைத் திருப்பிக் கேட்கின்றார்.

இயேசு தன்னிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கின்றீர்?" என்று கேட்டவர்களிடம், விண்ணிலிருந்து அருளப்பட்ட அதிகாரத்தால்தான் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்று சொல்லியிருக்கலாம். அப்படிச் சொன்னால், அது கடவுளை இழிவுபடுத்துவதாக இருக்கின்றது (லேவி 24: 16) என்று அவர்கள் தன்னைக் கொல்வதற்கு முயல்வார்கள் என்பதால், இயேசு திருமுழுக்கு யோவானை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார். தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும், யோவானுக்குத் திருமுழுக்கு அதிகாரம் விண்ணிலிருந்து வந்தது என்று சொன்னாலும் மண்ணிலிருந்து வந்தது என்று சொன்னாலும் சிக்கல் என்பதை அறிந்தவர்களாய், தங்களுக்கு எதுவும் தெரியாது என்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் இயேசுவுக்கு எதிராக வகுத்த சூழ்ச்சி அவர்களுக்கே வினையாக அமைந்துவிடுகின்றது.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றது. அது என்னவெனில், நாம் எதை விதைக்கின்றோமா அதையே அறுவடை செய்கின்றோம் என்பதாகும். தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் இயேசுவுக்கு எதிராக வகுத்த சூழ்ச்சி அவர்களுக்கே வினையாக அமைந்தது. ஆகையால், நாம் தீமையை விதைக்காமல், நன்மையை விதிப்போம்.

சிந்தனை

"இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்" (திப 10:38) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று எங்கும் நன்மை செய்துகொண்டே செல்வோம். நம்மிடம் இருக்கின்ற தீய எண்ணங்களை அப்புறப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!