Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

   திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு - 2ம் ஆண்டு                 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எலியா மீண்டும் வருவார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார்.

எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர்.

ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3) Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 3: 4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், "எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?" என்று கேட்டார்கள்.

அவர் மறுமொழியாக, "எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார்.

திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

மத்தேயு 17: 10-13

திருமுழுக்கு யோவானைக் கண்டுணராத மக்கள்

நிகழ்வு

ஒரு சமயம் கரப்பான்பூச்சி ஒன்று மகிழ்ச்சியாகப் பறந்துசென்றுகொண்டிருந்தது. அப்பொழுது ஓரிடத்தில் வண்ணத்துப் பூச்சி ஒன்று பறக்க முடியாமல், கீழே கிடந்ததைக் கண்டது. அது கரப்பான்பூச்சியிடம், "கரப்பான் பூச்சி அண்ணா! எனக்கோர் உதவி செய்யமுடியுமா...? வண்டியில் வேகமாக வந்த ஒருவன் என்மீது மோதிவிட்டான். அதனால் என்னால் பறக்கமுடியவில்லை. நீ மட்டும் என்னை உன்னுடைய முதுகில் ஏற்றிக்கொண்டு, நான் இருக்கும் இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிட்டால், உனக்குக் கோடிப் புண்ணியமாகப் போகும்" என்றது. கரப்பான்பூச்சியும் வண்ணத்துப் பூச்சியின்மேல் இரக்கப்பட்டு, அதனைத் தன்னுடைய முதுகில் ஏற்றிக்கொண்டு, வானில் பறந்துசென்றது.

அது பறந்துசென்றுகொண்டிருக்கும்போது, புழு ஒன்று செடியில் ஊர்ந்துபோக முடியாமல் ஊர்ந்துபோனது. அது கரப்பான்பூச்சியைக் கண்டதும் அதனிடம், "கரப்பான் பூச்சி அண்ணா! என்னால் ஊர்ந்துபோக முடியவில்லை. நீங்கள் என்னை உங்களுடைய முதுகில் சுமந்துகொண்டு பக்கத்தில் உள்ள செடியில் என்ன விட்டுவிடுவீரகளா...?" என்றது. அதற்கு கரப்பான் பூச்சி அதனிடம், "ஏய் புழுவே! உன்னைப் பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கின்றது. உன்னை எப்படி நான் என்னுடைய முதுகில் சுமந்துகொண்டு செல்வது...? அதெல்லாம் முடியவே முடியாது" என்று உறுதியாய்ச் சொன்னது. இது புழுவிற்குப் பெருத்த அவமானமாய்ப் போய்விட்டது.

இது நடந்து ஒரு மாதம் கழித்து, கரப்பான்பூச்சி மகிழ்ச்சியாக மேலே பறந்து வந்தது. அது வழியில் ஓர் அழகான வண்ணத்துப் பூச்சி செடியில் அமர்ந்து தேன் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், அந்த வண்ணத்துப் பூச்சியின் அருகே சென்று, "வண்ணத்துப் பூச்சியாரே! நீங்கள் என்னுடைய முதுகில் அமர்ந்துகொள்ளுங்கள். நான் உங்களை நீங்கள் போகவேண்டிய இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுகின்றேன்" என்றது. "வண்ணத்துப் பூச்சி தன்னுடைய முதுகில் அமர்ந்து வந்தால், அது தனக்குப் பெருமை" என்ற எண்ணத்தோடுதான் அது இவ்வாறு கேட்டது. அதற்கு அந்த வண்ணத்துப் பூச்சி கரப்பான் பூச்சியிடம், "கரப்பான் பூச்சியாரே! நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா...?" என்றது. "யாரென்று தெரியவில்லை... நீங்களே சொல்லிவிடுங்கள்" என்றது கரப்பான் பூச்சி. உடனே வண்ணத்துப்பூச்சி கரப்பான் பூச்சியிடம், "நான் வேறு யாருமல்ல... ஒரு மாதத்திற்கு முன்பு பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கின்றது என்று ஒரு புழுவை உங்களுடைய முதுகில் ஏற்றிக்கொள்ளாமல் போனீர்களே!. அந்தப் புழுதான் நான்" என்றது. இதைக் கேட்ட கரப்பான் பூச்சியால் எதுவும் பேசமுடியவில்லை.

இந்தக் கதையில் வரக்கூடிய கரப்பான்பூச்சியைப் போன்றுதான் பலரும் மனிதர்களுடைய வெளித்தோற்றத்தைப் பார்த்துவிட்டு, அவர்களை புறக்கணிக்கின்ற ஒரு போக்கானது நிலவிக்கொண்டிருக்கின்றது. இன்றைய நற்செய்தியிலும் மக்கள் திருமுழுக்கு யோவானின் வெளித்தோற்றத்தைப் பார்த்துவிட்டு, அவர் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை அறியாமலும் கண்டுணராமலும் இருப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருமுழுக்கு யோவானே இறைவாக்கினர் எலியா

இயேசு தோற்றமாற்றம் அடைந்தபின்பு, மலையை விட்டுக் கீழே இறங்கி வருகின்றபோது, அவருடைய சீடர்கள் அவரிடம், "எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகின்றார்களே, அது எப்படி?" என்று கேட்கின்றார்கள்.

இறைவாக்கினர் எலியா சுழற்காற்றில் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (2 அர 2:11). இதனால் அவர் மெசியாவின் வருகைக்கு முன்பாக மீண்டும் வருவார் (மலா 5:6) என்ற நம்பிக்கையும், வந்தபின் எல்லாவற்றையும் சீர்படுத்துவார் (சீஞா 48:10) என்ற நம்பிக்கை யூதர்கள் நடுவில் பரவத் தொடங்கியது. இதனாலேயே இயேசுவின் சீடர்கள் அவரிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், "எலியா ஏற்கனவே வந்துவிட்டார். மக்கள்தான் அவரை கண்டுணரவில்லை..." என்கின்றார். ஆம், இறைவாக்கினர் எலியா திருமுழுக்கு யோவானின் வடிவில் வந்தார் (லூக் 1:17) மக்களோ அவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அவரைப் புறக்கணித்தார்கள், துன்புறுத்தவும் செய்தார்கள்.

திருமுழுக்கு யோவானுக்கு ஏற்பட்ட இந்த நிலைதான் இன்று பலருக்கும் ஏற்படுகின்றது. இப்படி ஒருவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை அறிய முற்படாமல், அவருடைய வெளித்தோற்றத்தைக் கொண்டு எடைபோடுவதால், அவருடைய சொல்ல வருகின்ற செய்தியை அறிந்துகொள்ள முடியாத நிலைதான் ஏற்படும். ஆகையால் நாம் ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாமல், அவர் சொல்ல வருகின்ற செய்தியை உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்ப நம்முடைய வாழ்வைச் சீர்படுத்தினால், அது நிறைந்த பலனைத் தரும் என்பது உறுதி.

சிந்தனை

"ஒரு புத்தகத்தை அதனுடைய அட்டைப் படத்தை மட்டும் பார்த்து எடைபோடாதே" என்பர். ஆகையால், நாம் யாரையும் அவர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாமல், அவர்கள் சொல்ல வருகின்ற செய்தியைக் கருத்தூன்றிக் கேட்டு, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எலியா மீண்டும் வருவார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்பவரும் எலியா

நிகழ்வு

பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு உரோமையில் மெய்யியல் அறிஞர் ஒருவர் இருந்தார். இவர் முழு உண்மையை அறிந்துகொள்வதற்கும் அதன்மூலம் மன அமைதியை பெற்றுக்கொள்வதற்கும் பிளேட்டோ, பித்தாகராஸ், சாக்ரடீஸ் போன்ற பல அறிஞர்களைத் தேடித் தேடித் படித்தார். அப்படியிருந்தும் இவரால் முழு உண்மையும் அறிந்துகொள்ள முடியவில்லை; மனஅமைதியையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்படியிருக்கையில் ஒருநாள் இவர் உரோமையிலிருந்து மத்தியத் தரைக்கடல் ஓரமாய் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு எதிரில் ஒரு பெரியவர் வந்தார்; அவர் ஒரு கிறிஸ்தவர். அந்தப் பெரியவரோடு இவர் பேசத்தொடங்கினார். அப்படிப் பேசும்பொழுது, தான் யார்? எதற்காகத் தான் இப்படி ஒவ்வோர் இடமாக அலைந்துகொண்டிருக்கின்றேன் என்பதை இவர் எடுத்துக்கூறினார். அதைக்கேட்ட அந்தப் பெரியவர், பழைய ஏற்பாட்டில் தோன்றிய இறைவாக்கினர்களைக் குறித்தும், அவர்கள் உண்மையும் (யோவா 14:6) அமைதியைத் தருபவருமான (யோவா 14:27) இயேசுவைக் குறித்து முன்னறிவித்ததையும், அவர்கள் முன்னறிவித்தது இயேசுவில் நிறைவேறியதையும் விளக்கிச் சொன்னார்.

அவர் கொடுத்த விளக்கத்தில் மனநிறைவு அடைந்த அந்த மெய்யியல் அறிஞர், இத்தனை நாள்களும் தான் தேடியலைந்த உண்மையும் அமைதியும் இயேசுவில் கண்டுகொண்ட மகிழ்ச்சியில், கிறிஸ்தவராகி, இறுதியில் இயேசுவிற்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்தார். அந்த மெய்யியல் அறிஞர்தான் புனித ஜஸ்டின்.

இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த பெரியவர் எப்படி இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஜஸ்டினுக்கு எடுத்துக்கூறி, அவரை கிறிஸ்து இயேசுவிடம் கொண்டுவந்தாரோ, அதுபோன்று இறைவாக்கினர் எலியா மீண்டுமாகத் தோன்றி மக்களையெல்லாம் மெசியாவின் பக்கம் இயேசுவின் பக்கம் திருப்புவார் என்று சீராக்கின் ஞானநூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நெருப்புப் போல் எழுந்த இறைவாக்கினர் எலியா

இன்றைய முதல் வாசகம் இணைத்திருமுக நூல்களுள் ஒன்றான சீராக்கின் ஞானநூலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யூதர்களாலும் பிற கிறிஸ்தவ சபையாராலும் ஏற்றுக்கொள்ளப்படாத இந்நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எலியாவைப் பற்றியும் அவர் ஆற்றிய பணிகளைப் பற்றியும், இன்னும் சொல்லப்போனால் அவர் ஆற்றப்போகும் பணிகளைக் குறித்தும் எடுத்துச் சொல்கின்றது.

இறைவாக்கினர் எலியா, வடநாட்டைச் சார்ந்தவர். இவர் ஆகாப் அரசனுக்கு எதிராக (கிமு. 869) இறைவாக்கு உரைத்தார்; பாகால் வழிபாட்டைக் கடுமையாக விமர்சித்தார். இப்படிப்பட்ட பணிகளையும் இதுபோன்றே பல பணிகளையும் துணிந்து இவர் ஆற்றிவந்தார். அதைத்தான் இன்றைய முதல் வாசகத்தின் முதற்பகுதியில் வாசிக்கின்றோம். இறைவாக்கினர் எலியாவிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது என்னவென்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திரும்பிய எலியா

இறைப்பணியை மிகச் சிறப்பாகச் செய்த இறைவாக்கினர் எலியா இறக்கவில்லை. மாறாக, நெருப்புப் பூட்டிய தேரில் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இதனால் மக்கள் நடுவில், விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இறைவாக்கினர் எலியா மெசியாவின் வருகைக்கு முன்பாக மீண்டும் வருவார்... வந்து மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார்செய்வார் (மலா 4:5) என்ற நம்பிக்கை உருவானது. இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் வாசிக்கின்றோம்.

இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு செய்தி, மெசியாவின் வருகைக்கு முன் வரவேண்டிய இறைவாக்கினர் எலியா வந்தாரா? வந்து அவர் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திரும்பினாரா? யாக்கோபின் குலங்களை மீண்டுமாக நிலைநிறுத்தினாரா? என்பதுதான். சீராக்கின் ஞானநூல் கூறுவதுபோல், இறைவாக்கினர் மலாக்கி கூறுவதுபோல், மெசியாவின் வருகைக்கு முன்பு எலியா வந்தார்; ஆனால், அவர் திருமுழுக்கு யோவானின் வடிவில் வந்தார். இது குறித்த விளக்கத்தினை நாம் மத்தேயு நற்செய்தி பதினேழாம் அதிகாரத்தில் (11-13) வாசிக்கின்றோம். ஆம், எலியா வந்தார். மக்கள்தான் அவரை அறிந்துகொள்ளவில்லை.

இன்றைய இறைவார்த்தை இன்னொரு செய்தியையும் சொல்கின்றது, அது என்னவெனில், "உம்மைக் (எலியா) கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர்" என்பதாகும். இதை எப்படிப் புரிந்துகொள்வது? எலியாவைக் கண்டவர்கள் பேறுபெற்றோராக இருக்கக் காரணம், எலியாவின் வருகைக்குப் பின் சிறிதுகாலத்தில் மெசியாவைக் காண்பார்கள். அதனால் அவர்கள் பேறுபெற்றோர் ஆவார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க எலியாவைக் குறித்தும் எலியாவின் உளப்பாங்கோடு தோன்றிய திருமுழுக்கு யோவானைக் குறித்தும் சிந்தித்துப் பார்க்கின்ற நாம், அவர் எப்படி மக்களைத் தயார்செய்து, அவர்களை ஆண்டவரிடம் கொண்டு சேர்த்தாரோ, அதுபோன்று நாமும் மக்களை ஆண்டவர் பக்கம் கொண்டுசேர்க்கவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய தலையாய பணி.

சிந்தனை

"ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்" (மத் 3:3) என்று திருமுழுக்கு யோவானைக் குறித்து முன்னறிவிக்கப்பட்டது. ஆகையால், நாம் எலியாவின் உளப்பாங்கைக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவான் எப்படி மக்களை ஆண்டவரிடம் கொண்டு வந்தாரோ, அதுபோன்று நாமும் மக்களை ஆண்டவரிடம் கொண்டுவருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!