Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      
                           திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு - 2ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!

என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: "இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, 'நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ 'அவன் பேய் பிடித்தவன்' என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார்.

இவர்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்.

எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

கட்டளைகளுக்கு செவி சாய்ப்பது அவசியமானது.

அது எத்தகைய ஆசீர்வாதங்களை கொணரும் என்பதனை முதலாவது வாசகம் நமக்கு உணர்த்துகின்றது.

ஞானத்தோடு இதனைஅறிந்து கட்டளைகளை கடைபிடிப்பவன், இவ்வுலகில் சாட்சியாகின்றான். நாமும் சாட்சியாவோம். கட்டளைகளை ஞானத்தேர்டு கற்று, அறிந்து, கடைபிடித்து வாழ்ந்து, ஆசீர்வாதங்களை நமதாக்குவோம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் பெர்சியாவில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு நம்பிக்கைக்குரிய ஒரு செயலர் தேவைப்பட்டார். அதனால் அவர் பல்வேறுவிதமான போட்டிகள் நடத்தி, இரண்டு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார். அந்த இருவரில் யாரைத் தன்னுடைய செயலராகத் தேர்ந்தெடுப்பது என்று அவருக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. அதனால் அவர் அவர்கள் இன்னொரு போட்டி வைத்தார்.

"இளைஞர்களே! இதுதான் நான் உங்களுக்கு வைக்கும் கடைசிப் போட்டி. இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுகின்றாரோ, அவரே என்னுடைய செயலராக இருக்கும் தகுதி பெறுவார்" என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து அவர் அவரிடம், "இதோ இருக்கின்றதே கிணறு... இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துப் பக்கத்திலிருக்கின்ற தொட்டியில் ஊற்றவேண்டும். இதுதான் நீங்கள் செய்யவேண்டிய பணி. இதை நீங்கள் இருவரும் தொடர்ந்து செய்யுங்கள். நான் மாலை வேளையில் உங்களைப் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இதற்குப் பின்பு அந்த இரண்டு இளைஞர்களும் அருகிலிருந்து கிணற்றிலிருந்து ஒரு வாளியைக்கொண்டு தண்ணீர் எடுத்து, அதைப் பக்கத்திலிருந்த தொட்டியில் ஊற்றத் தொடங்கினார்கள். தண்ணீரை அவர்கள் தொடர்ந்து ஊற்றியபோதும், தொட்டி மட்டும் நிரம்பவே இல்லை. பின்னர்தான் அந்தத் தொட்டியில் பெரிய ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து முதல் இளைஞன், "இது என்ன சுத்தப் பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றது. ஓட்டையுள்ள தொட்டியை தண்ணீரால் எப்படி நிரப்புவது? என்னால் முடியாது" என்று சொல்லிக்கொண்டு, வாளியை ஓர் ஓரமாய்த் தூக்கி எறிந்துவிட்டு, அங்கிருந்து சென்றான். இரண்டாவது இளைஞனோ, "அரசர் மாலையில் வந்து பார்ப்பதாகச் சொல்லியிருக்கின்றார்... அதுவரைக்கும் நாம் தொட்டியில் தண்ணீரை இறைத்து ஊற்றுவோம்" என்று நினைத்துக்கொண்டு, தொடர்ந்து கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்துத் தொட்டியில் ஊற்றிக்கொண்டே இருந்தான்.

ஒருகட்டத்தில் கிணற்றிலிருந்த தண்ணீரெல்லாம் காலியானது. அப்பொழுது உள்ளே இருந்து ஏதோவொன்று "பளிச் பளிச்" என மின்னியது. அது என்னதென்று வாளியை விட்டு எடுத்துப் பார்த்தபோதுதான் அவனுக்குத் தெரிந்தது, அது வைரமோதிரம். அப்பொழுது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "அரசர்தான் இந்த மோதிரத்தை கிணற்றுக்குள் போட்டிருக்கவேண்டும்" என்று நினைத்துக்கொண்டான்.

அவன் இவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்போதே அரசர் அங்கு வந்தார். வந்தவர், "மற்றவன் எங்கே?" என்று அவனிடம் கேட்க, அவன் நடந்தது அனைத்தையும் அவரிடம் எடுத்துக் கூறினான். அப்பொழுது அரசர் அவனிடம், "கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து, தொட்டியில் ஊற்றுக்கின்றபொழுது, தண்ணீர் தொட்டியில் தங்காது என்று தெரிந்தபின்பும் நான் சொன்னதற்காக நீ தொட்டியில் தண்ணீரைத் தொடர்ந்து இறைத்து ஊற்றினாய் அல்லவா, அதற்காக உன்னை என்னுடைய செயலராக நியமிக்கின்றேன்" என்று என்றார். அதைக் கேட்டு அந்த இளைஞன் இன்னும் மகிழ்ச்சியடைந்தான்.

இந்த நிகழ்வில் வருகின்ற இரண்டாம் இளைஞன் அரசர் சொன்னதற்கு அப்படியே கீழ்ப்படித்து நடந்தான். அதனால் அவன் அதற்கான வெகுமதியைப் பெற்றான். இன்றைய முதல் வாசகமும் ஆண்டவருக்குச் செவிசாய்ந்து வாழ்ந்தால் அல்லது கீழ்ப்படிந்து நடந்தால், அவர் தன்னுடைய ஆசியால் நிரப்புவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பயனுள்ளவற்றைக் கற்பித்து, செல்லவேண்டிய வழியில் வழிநடத்தும் இறைவன்

இறைவாக்கினர் எசாயா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், "பயனுள்ளவற்றைக் கற்பித்தவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்தியவரும் நானே" என்று கூறுகின்றார். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் கூறுகின்ற இவ்வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, பயனுள்ளவற்றைக் கற்பித்தல், இரண்டு, நல்வழியில் வழிநடத்துதல்.

கடவுள் ஒரு தந்தையைப் போன்று, இஸ்ரயேல் மக்களுக்கு நல்லவற்றைக் கற்பித்து, நல்ல ஆயனைப் போன்று நல்ல வழியில் வழிநடத்தினார். அவர்கள் ஆண்டவருக்குச் செவிசாய்த்து, கீழ்ப்படிந்து நடந்திருந்தால், கடவுள் ஆபிரகாமிடம் கூறியதுபோன்று (தொநூ 22:17), அவர்களுக்கு நிறைவாழ்வு ஆற்றைப் போலவும், வெற்றி கடலலை போலவும் பாய்ந்தோடி, அவர்களுடைய வழிமரபினர் மணல் அளவாயும் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர். ஆனால், அவர்கள் ஆண்டவருடைய குரலுக்குச் செவிசாய்க்காமல், அவருக்கு கீழ்ப்படியாமல் நடந்துகொண்டார்கள். அதனாலேயே அவர்கள் அழிவுக்கு மேல் அழிவினைச் சந்தித்தார்கள்.

இன்றைய இறைவார்த்தை நமக்கு முன்பு வைக்கும் சிந்தனை ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அப்படி நடந்தால் அவருடைய ஆசி கிடைக்கும் என்பதாகும். ஆகையால், நாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவருடைய ஆசியைப் பெறுவோம்.

சிந்தனை

"இஸ்ரயலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்" (திபா 81: 8) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 11: 16-19

காரணமின்றி விமர்சிப்பவர்கள்

நிகழ்வு

பிரபல சொற்பொழிவாளர் ஒருவர் இருந்தார். அவருடைய சொற்பொழிவைக் கேட்டு பலரும் அவரை வியந்து பாராட்டினார்கள். ஒருவர் மட்டும், "அவருக்குச் சரியாகச் சொற்பொழிவாற்றத் தெரியவில்லை" என்று விமர்சித்துக்கொண்டே இருந்தார். இது அந்தப் பிரபல சொற்பொழிவாளருக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்தது. இப்படியிருக்கையில் ஒருநாள் அவரைப் பார்ப்பதற்கு அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தார். அவர் அந்த நண்பரிடம் நடந்ததை எடுத்துச் சொன்னார்.

அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட அவருடைய நண்பர் அவரிடம், "நண்பா! நான் சொல்வதைப் பொறுமையாக கேள்! ஒருவேளை உன்னை விமர்சிக்கின்றவரின் விமர்சனத்தில் உண்மை இருப்பின், நீ சொற்பொழிவாற்றுவதைச் சரிசெய்; இல்லையென்றால், அதைக் கண்டுகொள்ளாதே" என்றார். நண்பர் சொன்ன இந்த ஆலோசனையை ஆழமான சிந்தித்துப் பார்த்த அந்தப் பிரபல சொற்பொழிவாளர், தன்னுடைய சொற்பொழிவில் குறையொன்றுமில்லை... பொறாமையால்தான் அவர் இப்படி விமர்சித்துக் கொண்டிருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தார். இதற்குப் பின்பு அவர் அந்த விமர்சகருடைய விமர்சனத்தைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து நல்லமுறையில் சொற்பொழிவாற்றி வந்தார்.

இந்த நிகழ்வில் வருகின்ற விமர்சகரைப் போன்றுதான் இன்றைக்குப் பலர் காரணமில்லாமல் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். இப்படித் தேவையில்லாமல் விமர்சிப்பவர்கள் மட்டில் நாம் எப்படி நடந்துகொள்வது? இயேசு தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

யோவானும் இயேசுவும் சொன்னதைக் காதுகொடுத்துக் கேட்காமல், அவர்களைக் கண்மூடித்தனமாக விமர்சித்தவர்கள்

நற்செய்தியில் இயேசு, தன்னுடைய காலத்தில் வாழ்ந்த மக்கள், சந்தை வெளியில் விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள் என்று பேசுகின்றார். அதற்கு முக்கியமான காரணம், எளிமையான அதே நேரத்தில் தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த திருமுழுக்கு யோவான் மக்கள் நடுவில் வந்தபோது, அவர்கள் அவரைப் பேய்பிடித்தவன் என்று விமர்சனம் செய்தார்கள். அவருக்கு முற்றிலும் மாறாக, மக்களோடு உண்டும் குடித்தும் அவர்களோடு பழகியும் வந்த இயேசுவைப் பெருந்தீனிக்காரன், பாவிகளின் நண்பன் என்று விமர்சித்தார்கள். இதனாலேயே இயேசு அவர்களை, சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள் என்று சாடுகின்றார்.

இதில் நாம் கவனிக்கவேண்டியது, மக்கள் திருமுழுக்கு யோவான் போதித்த மன்மாற்றச் செய்தியையும் இயேசு போதித்த விண்ணரசு பற்றிய நற்செய்தியையும் சிறிதளவுகூட செவிமடுக்கவில்லை என்பதுதான். இறைவாக்கினர் எசாயா உரைப்பாரே, "கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருக்கும் மக்கள்" என்று (எசா 43:8). அதுபோன்றுதான் இயேசுவின் காலத்தில் இருந்த மக்கள் திருமுழுக்கு யோவான் என்ன போதித்தாரோ அதைக் கேளாமலும், இயேசு என்ன போதித்தாரோ அதைக் கேளாமலும் வெறுமென அவர்கள் இருவரையும் விமர்சித்து மட்டுமே வந்தார்கள்.

இன்றைக்கும்கூட ஒருவர் என்ன சொன்னார் அல்லது என்ன சொல்ல வருகின்றார் என்பதைச் செவிகொடுத்துக் கேளாமல், வெறுமென விமர்சித்துக்கொண்டு மட்டும் இருக்கின்றார்கள். இவர்கள் இயேசு குறிப்பிடுவது போன்று சிறுபிள்ளைகள் அல்லது முதிர்ச்சியற்றவர்கள். இத்தகையோர் தங்களுடைய வாழ்வைத் தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, நேரிய வழியில் நடப்பது மிகவும் நல்லது.

செயல்களே சான்று

திருமுழுக்கு யோவானையும் தன்னையும் காரணமின்றி விமர்சித்தவர்கள் யாவரும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள் என்று குறிப்பிடும் இயேசு, ஒருவர் முதிர்ச்சியடைந்தவராக அல்லது கடவுளுக்கு உகந்தவராக இருக்க என்ன செய்வது என்பதையும் குறித்துப் பேசுகின்றார். ஆம், ஒருவர் முதிர்ச்சியடைந்தவராக, கடவுளுக்கு உகந்தவராக இருக்க அவருடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். இது குறித்து இன்னும் தெளிவுபெற நாம், யோவான் நற்செய்தி 6: 28-29 ல் வருகின்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இப்பகுதியில் யூதர்கள் இயேசுவிடம், "எங்களுடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கின்றபோது, இயேசு அவர்களிடம், "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்புடைய செயல்" என்று குறிப்பிடுவார். ஆம், ஒருவர் முதிர்ச்சியடைந்தவராகவும் கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்க, அவர் கடவுள் அனுப்பிய இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அந்த நம்பிக்கையைச் செயலில் வெளிப்படுத்தவேண்டும்.

நம்முடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்புடையவனாக இருக்கின்றனவா? அல்லது சிறுபிள்ளைகளின் செயல்களைப் போன்று இருக்கின்றதா? சிந்திப்போம்.

சிந்தனை

நீ கடவுள் முன் ஏற்புடையோனாக இருக்க முழு முயற்சி செய் ( 2 திமொ 2: 15) என்று புனித பவுல் திமொத்தேயுவுவிடம் கூறுவார். ஆகையால், நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக இருக்க, அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!