|
|
12 டிசம்பர் 2019 |
|
|
திருவருகைக்காலம்
2ம் ஞாயிறு - 2ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப்பிடித்து,
"அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" என்று உன்னிடம் சொல்பவரும்
நானே. "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும்
பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,"
என்கிறார் ஆண்டவர்.
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய
கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து
நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.
அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோகும்; புயல்
அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின்
தூயவரில் மேன்மை அடைவாய். ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்;
அது கிடைக்கவில்லை.
அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப்
பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.
பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில்
நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும்
வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.
பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம்,
மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில்
தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும்
வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச் செய்தார் என்றும்,
இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்துகொள்வர்;
ஒருங்கே சிந்தித்துப் புரிந்துகொள்வர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-திபா 145: 1,9. 10-11. 12-13p (பல்லவி: 8) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை
என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை
செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.
பல்லவி
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது
அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப்
பேசுவார்கள். பல்லவி
12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13ய உமது அரசு
எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக
உள்ளது. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
எசா 45: 8
அல்லேலூயா, அல்லேலூயா! வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்;
மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து
விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும்
தோன்றியதில்லை.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 11: 11-15
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது:
"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர்
எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும்
அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத்
தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக்
கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும்
யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால்
வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச்
செவியுள்ளோர் கேட்கட்டும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசாயா 41: 13-20
"அஞ்சாதே, உனக்குத் துணையாக
இருப்பேன்"
நிகழ்வு
மறைப்பணியாளர் ஒருவர் இருந்தார்.
ஒருநாள் அவரிடத்தில் வந்த ஒரு பிற சமயத்தைச் சார்ந்த பெண்மணி,
"சுவாமி! எனக்குத் தீய ஆவியிடமிருந்து அடிக்கடி தொல்லைகள் வருகின்றன.
அந்தத் தொல்லைகளிலிருந்து என்னைக் காத்துக்கொள்ள நீங்கள்தான்
எனக்கொரு வழி சொல்லவேண்டும்" என்றார்.
மறைப்பணியாளர் ஒருநிமிடம் யோசித்தார். பின்னர் அவருக்கு ஆண்டவர்
இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த,
"விண்ணுலகிலிருக்கின்ற எங்கள் தந்தையே" என்ற இறைவேண்டலைக் கற்றுக்
கொடுத்து, அதை எப்பொழுதெல்லாம் தீய ஆவியிடமிருந்து தொல்லைகள்
வருகின்றனவோ, அப்பொழுதெல்லாம் சொல்லச் சொன்னார். அந்தப் பெண்மணியோ,
"ஆண்டவர் எனக்குத் தந்தையா...? அப்படியானால் நான் எதற்குத் தீய
ஆவியைக் கண்டு அஞ்சவேண்டும்...? இனிமேல் நான் தீய ஆவியைக் கண்டு
அஞ்சமாட்டேன்" என்று உறுதியாகச் சொன்னார்.
ஆண்டவர் நமக்குத் தந்தையாக, துணையாக இருக்கும்பொழுது நாம் எதற்கு
அஞ்சவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு
சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகமும், ஆண்டவர் நமக்குத்
துணையாக இருப்பதால் எதற்கும் அஞ்சவேண்டாம் என்ற செய்தியை எடுத்துச்
சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
அஞ்சவேண்டாம்
இறைவாக்கினர் எசாயா
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய
கடவுள் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, "அஞ்சாதே, உனக்குத்
துணையாக இருப்பேன்" என்ற ஆறுதலின் செய்தியைக் கூறுகின்றார்.
"அஞ்சாதே, உனக்குத் துணையாக இருப்பேன்" என்ற வார்த்தைகள் இன்றைய
முதல் வாசகத்த்தில் இரண்டு முறை வருவதை வைத்துப் பார்க்கின்றபொழுது,
கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு எந்தளவுக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றார்
என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்..
பாபிலோனியர்களின் படையெடுப்புக்குப் பின்னர் தென்னாட்டில் இருந்த
யூதர்கள் மிகவும் வேதனையில் மூழ்கி இருந்தார்கள். இப்படிப்பட்ட
சமயத்தில்தான் ஆண்டவராகிய கடவுள் அவர்களிடம், "அஞ்சாதே நான்
உனக்குத் துணையாக இருப்பேன்" என்று கூறுகின்றார். இவ்வார்த்தைகளை
இன்னும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, இதற்கு முந்தயை பகுதியையும்
இணைந்துச் சிந்தித்துப் பார்ப்பது.
இதற்கு முந்தைய பகுதியில் (எசா 41:8) ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல்
மக்களைப் பார்த்து, "இஸ்ரயேலே! என் அடியவனே!" என்று கூறுவார்.
அடியவர் என்ற பெயர் திருவிவிலியத்தில் மோசேக்கும் (எண் 12: 7)
தாவீது அரசருக்கும் (2சாமு 13:8) மெசியாவாகிய இயேசுவுக்கும் (எசா
42:1) இன்னும் ஒருசிலருக்கும் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட
பெயரால் கடவுள், இஸ்ரயேல் மக்களை அழைக்கின்றார் என்றால், அவர்கள்
எந்தளவுக்குப் பேறுபெற்றவர்களாக இருந்திருப்பார்கள் என்பதை
நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். அப்படியிருந்தபோதும்
அவர்கள் கடவுளுக்கு நம்பிக்கை இல்லாமல் போய், புழுவாய்,
பொடிப்பூச்சியாய் மாறிப்போனார்கள். ஆனாலும்கூட வாக்குறுதி
மாறாத இறைவன் அவர்களை ஆசியால் நிரப்புவதாகக் கூறுகின்றார். கடவுள்
அவர்களை எப்படிப்பட்ட ஆசியால் நிரப்பப் போகிறார் என்பதைக்
குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆசியால் நிரப்பக் காத்திருக்கும் இறைவன்
திருவிவிலியத்தில்
"தண்ணீர், மரம்" போன்றவை கடவுள் அளிக்கும் ஆசியாக இருக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் வருகின்ற "ஏழைகளும் வறியோரும்
நீரைத் தேடுகின்றனர்... நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்" என்ற
வார்த்தைகளும் "பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும் புன்னை
மரங்களையும் ஊசியிலை மரங்களையும் வைப்பேன்" (எசா 41: 17-20)
என்ற வார்த்தைகள், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை ஆசியால்
நிரப்பப்போகிறார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன.
கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னது போன்றே அவர் அவர்களை
ஆசியால் நிரப்பினார்.
ஆசியால் நிரப்பும் ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாக
இருப்போம்
என்னதான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உண்மையில்லாதவர்களாக
இருந்தபோதும், ஆண்டவர் உண்மையுள்ளவராக, தன்னுடைய வார்த்தைகளில்
நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அதனால்தான் அவர் அவர்களைத்
தன்னுடைய அருளாலும் ஆசியாலும் நிரப்பிக்கொண்டிருந்தார்.
இவ்வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்ற நாம்,
இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக
இருக்கின்றாமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பலநேரங்களில் இஸ்ரயேல் மக்களைப் போன்று நாம் ஆண்டவர்மீது
நம்பிக்கையில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய
சூழ்நிலையில் நம்பிக்கைக்குரிய இறைவனுக்கு (2 தெச 3:3) நாமும்
நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"இதோ உலக முடிவுவரை
எந்நாளும் நான் உங்களோடு இருக்கின்றேன்" (மத் 28: 20) என்பார்
இயேசு. ஆகையால், நாம் இறைவன் நம்மோடு இருக்கிறார்; நமக்குத்
துணையாக இருக்கின்றார் என்பதில் நம்பிக்கை கொண்டு, அச்சமின்றி
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
மத்தேயு 11: 11-25
திருமகன் இயேசுவின் வருகைக்கும் தயார்செய்து
திருமுழுக்கு யோவான்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எங்கெல்லாம்
பணிசெய்தாரோ அங்கெல்லாம் மலரைப்போன்று மணம் பரப்பினார். இதற்கிடையில்
அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட வானதூதர்கள் அவரை இறையாசியால்
நிரப்ப விரும்பினார்கள். அதன்பொருட்டு அவர்கள் அந்தத் துறவியிடம்
வந்தார்கள்.
"நீர் ஆற்றிவரும் பணிகளைக் குறித்துக் கேள்விப்பட்டு மிகவும்
மகிழ்கின்றோம். தொடர்ந்து நீர் உம்முடைய பணிகளை இன்னும் சிறப்பாகச்
செய்வதற்கு உம்மை ஆசியால் நிரப்ப வந்திருக்கின்றோம். இப்பொழுது
சொல்லும், உம்மை எந்த மாதிரியான ஆசியால் நிரப்புவது... இறந்தோரை
உயிர்த்தெழச் செய்யும் ஆசியால் நிரப்பட்டுமா...?" என்றார்கள்.
"வேண்டாம், வேண்டாம்... இறந்தோரை உயிர்த்தெழ செய்வது கடவுள் மட்டுமே
செய்யக்கூடியது. அத்தகைய ஆசியை எனக்குத் தந்து கடவுளை இழிவுபடுத்த
வேண்டாம்" என்றார் அந்தத் துறவி.
இதற்குப் பின்பு வானதூதர்கள் அவரிடம், "இறந்தோரை உயிர்த்தெழச்
செய்யும் ஆசி வேண்டாம் என்றால், பாவிகளை மனந்திரும்ப வைக்கும்
ஆசியை உமக்குத் தரட்டுமா...?" என்றார். "பாவிகளை மனந்திரும்ப
வைப்பது தூய ஆவியாருக்கே உரிய தனிப்பெரும் கொடை. அதனை எனக்குத்
தந்து தூய ஆவியாரை இழவுபடுத்தவேண்டாம்" என்றார் அவர்.
"அப்படியானால், உம்முடைய முன்மாதிரியான வாழ்க்கையைப்
பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் உம் பக்கம் வருவது மாதிரியான
ஆசியை உமக்குத் தரட்டுமா...?" என்றார்கள் வானதூதர்கள். அதற்கு
அவர், "மக்கள் அனைவரும் இறைவனை நோக்கிச் செல்லவேண்டுமே ஒழிய,
என்னை நோக்கி அல்ல. அதனால் எனக்கு அந்த ஆசியும் வேண்டாம்" என்றார்.
இதனால் வானதூதர்களிடம், "உமக்கு என்ன மாதிரியான ஆசி வேண்டும்
என்பதை நீரே சொல்லிவிடும்" என்றார்கள். துறவி ஒருநிமிடம் ஆழமாக
யோசித்துவிட்டுச் சொன்னார், "நான் மக்களுக்கு நல்லது செய்வது
எனக்குத் தெரியாமலேயே நடைபெறவேண்டும். அப்படியோர் ஆசியை எனக்குத்
தாருங்கள்" என்றார். வானதூதர்களும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு, அவர் கேட்ட ஆசியால் அவரை நிரப்பிவிட்டு, அங்கிருந்து
மறைந்தார்கள். இதற்குப் பின்பு, அந்தப் புனித துறவி எங்கெல்லாம்
சென்றாரோ, அங்கெல்லாம் அவர் நிழல்பட்டுப் பலரும் நலமடைந்தார்கள்.
இவ்வாறு பலரும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றலால் நலமடைந்தார்கள்.
இது அவருக்குத் தெரியாமலேயே நடந்தது.
இந்த நிகழ்வில் வருகின்ற துறவி, கடவுளுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை
என்று தாழ்ச்சியோடு வாழ்ந்தார். இதனால் கடவுள் அவரை மேலும்
மேலும் உயர்த்தினார். இன்றைய நற்செய்தி வாசகம் தாழ்ச்சியோடு இறைப்பணியைச்
செய்த திருமுழுக்கு யோவான் எவ்வாறு கடவுளால் உயர்த்தப்படுகின்றார்
என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்த திருமுழுக்கு யோவான் Top of
Form
நற்செய்தியில் இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்துப்
பேசுகின்றார். அப்படிப் பேசுகின்றபோது, "மனிதராய்ப் பிறந்தவர்களுள்
திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்று
பேசுகின்றார். இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து இவ்வாறு
பேசுவதற்கு அல்லது இவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணமென்ன எனத்
தெரிந்து கொள்வது நல்லது.
திருமுழுக்கு யோவான் ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்தவர் (மத்
3: 1-3). குறிப்பாக மக்கள் தங்களுடைய பாவத்திலிருந்து மனம்மாறவேண்டும்
என்று அழைப்பு விடுத்தவர். இத்தகைய பணியினை வேறு எந்த இறைவாக்கினரும்
செய்யவில்லை; திருமுழுக்கு யோவான் மட்டுமே செய்தார். இத்தகைய
பணியினை அவர் மிகுந்த தாழ்ச்சியோடு செய்தார். அதனால் அவர் இயேசுவால்
உயர்த்தப்படுகின்றார்.
கடவுளால் உயர்த்தத்பட்ட திருமுழுக்கு யோவான்
திருமுழுக்கு யோவான், கடவுள் தனக்குக் கொடுத்த பணியினை சிறப்பாகவும்
அதே நேரத்தில் மிகுந்த தாழ்சியோடும் செய்ததால், ஆண்டவராகிய இயேசு
அவரை, "மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப்
பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்று வாழ்த்துகின்றார். இது
திருமுழுக்கு யோவானுக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று
சொன்னால் அது மிகையில்லை. அதேநேரத்தில், விண்ணரசில் மிகச் சிறியவரும்
திருமுழுக்கு யோவானை விடப் பெரியவராகின்றார். எவ்வாறெனில்,
திருமுழுக்கு யோவான் ஆண்டவர் இயேசு பாடுகள்படுவதற்கு முன்னமே
கொல்லப்பட்டார்; அவர், கல்வாரி மலையில் ஆண்டவர் இயேசு இந்த
மானிட சமூகத்திற்குத் தந்த மீட்பினைப் பெறாமலே போனார். அதனாலேயே
அவர் விண்ணரசில் உள்ள மிகச் சிறியவரிலும் சிறியவர் ஆகின்றார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் திருமுழுக்கு யோவானின்
முன்மாதிரிகை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து
வாழவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், நாம் திருமுழுக்கு
யோவானைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.
சிந்தனை
"தாழ்நிலையில் இருப்போரை அவர் உயர்த்துகின்றார்" (லூக் 1:52)
என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் திருமுழுக்கு யோவானைப்
போன்று உள்ளத்தில் தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|