Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     11 டிசம்பர் 2019  
                         திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு - 2ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எல்லாம் வல்ல ஆண்டவர் "சோர்வுற்றவருக்கு" வலிமை அளிக்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

`யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?' என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.

"என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை" என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா?

ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.

இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 103: 1-2. 3-4. 8,10 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

கட்டுப்பாடு இன்றி வாழ நினைப்போர் வாழ்வு பரிதாபத்திற்குரியது.

எந்த பெற்றோரும் தங்களது பிள்ளைகள் நோக தண்டனை கொடுப்பதில்லை. கட்டளைகள், கண்டிப்புக்கள் விதித்தால், அதுவும் கூட அவர்களை வருந்தச் செய்யும் நிலையில் கொடுப்பதில்லை. அவர்களது முன்னேற்றத்தையோ, வளர்ச்சியையோ தடுக்கும் விதத்தில் அளிப்பதில்லை.

இறைவனின் நுகம் அழுத்தாதும், நம்மை நம்முடைய வளர்ச்சியை அது தடுப்பதில்லை. மாறாக, நம்மை பாதுகாப்பதாகவும், நமக்கு துணை நிற்பதாகவும் இருக்கும்.

இதனை உணர்ந்து ஏற்றுக் கொண்டால், எதுவுமே கடினமானது இல்லை.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எசாயா 40: 25-31

ஆண்டவருக்கு நிகரானவர் யார்?


நிகழ்வு


மாவீரன் நெப்போலியன் எதிரிநாட்டோடு போர்த்தொடுக்க சென்றபோது தோற்றுப்போனான். இதனால் அவன் ஹெலனா தீவில் காவலில் வைக்கப்பட்டான்.


அப்பொழுது அவனுக்குத் தனியாக இருக்க நிறைய நேரம் கிடைத்தது. அதனால் அவன் ஒவ்வொன்றாக யோசிக்கத் தொடங்கினான்: "இந்த உலகத்தில் எத்தனையோ அரசர்கள் தோன்றியிருக்கின்றார்கள். இவர்களில் ஜூலியஸ் சீசர், மாவீரர் அலெக்ஸாண்டர், மாவீரன் நெப்போலியன் சாதாரணமானவர்கள் அல்லர்; பேரரசர்கள். இவர்கள்கூட இன்றைக்கு மக்களுடைய மனதில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டு விட்டார்கள். ஆனால், ஒரே ஒருவர் மட்டும் இன்றைக்கும் மக்களுடைய மனங்களில் குடிகொண்டிருக்கின்றார்; அவரிடம் படைவீரர்களோ, கோட்டைக் கொத்தளங்களோ எதுவுமில்லை. அப்படியிருந்தும் அவர் மக்களுடைய மனதில் நீங்கா இடம் வகிக்கின்றார். அவர்தான் இயேசு கிறிஸ்து; அவருக்கு நிகராக இந்த உலகத்தில் யாருமே கிடையாது."


ஆம், மாவீரன் நெப்போலியன் நினைத்ததுபோன்று இந்த உலகத்தில் இயேசுவுக்கு/கடவுளுக்கு நிகர் யாருமே கிடையாது. இன்றைய முதல் வாசகமும் கடவுளுக்கு நிகர் யாருமே கிடையாது என்ற செய்தியைத்தான் எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


வல்லவரான ஆண்டவர்மீது நம்பிக்கைகொள்ள மறந்த இஸ்ரயேல் மக்கள்


இறைவாக்கினர் எசாயா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆபத்துக் காலத்தில் இஸ்ரேல் மக்கள், மண்ணிலும் (எசா 40: 12-20) விண்ணிலும் (எசா 40: 21-26) மிகப் பெரியவரான தன்மீது நம்பிக்கை வைக்காமல், மனிதர்கள்மீது நம்பிக்கை வைத்ததை எண்ணி, ஆண்டவராகிய கடவுள் மிகவும் வேதனைப்படுகின்றார்.


இஸ்ரயேல் மக்களுக்கு அசிரியர்களிடமிருந்தும் பின்னர் பாபிலோனியர்களிடம் தொடர்ந்து அச்சுறுத்தல் வந்தது. இத்தகைய சமயங்களில் அவர்கள், அதிலும் குறிப்பாக இஸ்ரயேல் மக்களை ஆண்டுவந்த தலைவர்கள், "ஆண்டவருடைய வழி தங்களுக்கு மறைவாய் உள்ளது" என்று சொல்லிக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை வைக்காமல், மனிதர்கள்மீது, குறிப்பாக பிற நாடுகளின்மீது நம்பிக்கை வைத்தார்கள். இதனால் அவர்களுக்கு பேரழிவு நேர்ந்தது. ஒருவேளை இஸ்ரயேல் மக்கள் மட்டும் இறைவன்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் நடந்திருந்தால் அவர்களுக்கு அவ்வளவு பெரிய அழிவு நேர்ந்திருக்காது.


ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவார்கள்


எல்லாம் வல்லவரும் விண்ணிலும் மண்ணிலும் பெரியவருமான இறைவன்மீது நம்பிக்கை வைக்காமல் இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் குறித்துச் சொன்ன இறைவாக்கினர் எசாயா, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் எத்தகைய ஆசி கிடைக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார்.


இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் வருகின்ற, "ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்" என்ற வார்த்தைகள், ஒருவர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் எத்தகைய ஆசியைப் பெறுவர் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆம், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்ற ஒருவர் ஒடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார். இத்தகைய ஆசியையும் வல்லமையையும் தருகின்ற ஆண்டவரிடம் இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கை வைக்காமல் வாழ்ந்தது நமக்கு வியப்பாக இருக்கின்றது.


இந்த இடத்தில் ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டு வாழ்ந்த புனித பவுலைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது. புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில், "எனக்கு வலுவூட்டுகின்றவரின் துணைகொண்டு என்னால் எதையும் செய்ய முடியும்" (பிலி 4:13) என்று கூறுகின்றார். அவர் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், ஆண்டவர்மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைதான் என்று சொன்னால் அது மிகையில்லை. புனித பவுல் தன்னுடைய பணிவாழ்வில் சந்தித்த சவால்களும் துன்பங்களும் இடர்களும் ஏராளம் (2 கொரி 11: 23-27). அவற்றையெல்லாம் வார்த்தையால் விளக்கிச் சொல்ல முடியாது. அந்தளவுக்கு அவர் துன்பங்களைச் சந்தித்தார். அப்படியிருந்தும் அவர் ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். அதனால்தான் யாராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவரால் இறைப்பணியைச் சிறப்பாக செய்ய முடிந்தது.


ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், அவருடைய ஆசி நமக்குக் கிடைக்கும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் நாம், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அவரிடம் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்கின்றோமா? அல்லது அவநம்பிக்கையோடு இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.


சிந்தனை


"இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? (1யோவா 5:5) என்பார் புனித யோவான். ஆகையால், எல்லாம் வல்லவரான இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 11: 28-30
 
"என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது"

நிகழ்வு

           ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர், தனக்கு முன்பாக இருந்த கரும்பலகையில், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்ற சொற்களை எழுதிவிட்டு, "நுகம் என்றால் என்ன?" என்று கேட்டார். உடனே ஒரு மாணவி எழுந்து, "வண்டியை இழுத்துச் செல்லும் காளை மாட்டின் கழுத்தில் வைப்பார்களே ஒரு மரக்கட்டை. அதுதான் நுகம்" என்றாள்.

"மிகவும் அருமை" என்று அந்த மாணவியைப் பாராட்டிய ஆசிரியர் மாணவர்களிடம் மீண்டுமாக, "கடவுளின் நுகம் என்றால் என்ன?" என்று கேட்டார். மாணவர்கள் நடுவில் நீண்ட அமைதி நிலவியது. அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து, "கடவுளின் நுகம் என்பது, அவர் தன்னுடைய கையை நம்முடைய கழுத்தில் போட்டுக்கொள்வது" என்றான். அந்த மாணவனிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத அந்த ஆசிரியர், "கடவுளின் நுகம் என்பதற்கு இதைவிட சிறப்பானதொரு பதிலை யாரும் தரமுடியாது" என்று அவனை வெகுவாகப் பாராட்டினார்.

 
ஆம், கடவுள் தன்னுடைய கையை நம்முடைய கழுத்தில் அல்லது தோள்மேல் போடும்போது சுமையாக இருக்குமா என்ன? அது சுகம்தரும் சுமையாக அல்லவா இருக்கும். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு தரும் இளைப்பாறுதலைக் குறித்துப் பேசுகின்றது. அவர் தருகின்ற இளைபாறுதல் எத்துணை சிறப்பானது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


சட்டம் என்ற பெருஞ்சுமை


நற்செய்தியில் இயேசு, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும்  என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்..." என்று கூறுகின்றார். இயேசு இங்கு குறிப்பிடுகின்ற "சுமை" என்பது எதைச் சுட்டிக்காட்டுகின்றது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

 
இயேசுவின் காலத்தில் யூதர்கள், உரோமையர்களின் அதிகாரத்தின்கீழ் இருந்தார்கள். அவர்கள் யூதமக்களைப் பலவிதங்களில் சுரண்டினார்கள், வஞ்சித்தார்கள். அவை மக்களுக்குச் சுமையாக இருந்தன. அவை ஒருபுறமிருக்க இருந்தாலும்,  யூத சமயத் தலைவர்களாக இருந்த பரிசேயர்கள், "அதைச் செய்", "இதைச் செய்யாதே"  என்று சட்டங்களின் பெயரில் மக்கள்மீது அதிகமான சுமைகளை இறக்கி வைத்தார்கள் (மத் 23: 4). இதனால் சாதாரண மக்கள் சொல்லொண்ணா வேதனையை அன்றாடம் அனுபவித்து வந்தார்.

 
இயேசுவின் நுகம் எளிய, சுகமான சுமை


சாதாரண மக்கள் பரிசேயர்கள் விதித்த சட்டங்களால் சொல்லொண்ணாத் துயரத்தை அடைந்துகொண்டிருந்த தருணத்தில்தான் ஆண்டவர் இயேசு, "எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று கூறுகின்றார். இங்கு இயேசு தருகின்ற இளைபாறுதல் எத்தகையது? அதைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும்? என்பதன பற்றித் தெரிந்துகொள்வத் நல்லது.


இயேசு தருகின்ற இளைப்பாறுதால் துன்பமே இல்லாத வாழ்வு என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. இன்றைக்குப் பலர் இயேசுவைப் பின்பற்றி, அவர் வழியில் நடந்தால் துன்பமே இருக்காது என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இயேசுவைப் பின்பற்றுகின்றவர்களுக்குத்தான் துன்பங்களும் இடர்களும் (மத் 10: 17-42) அதிகம் வரும். ஆனால், அந்தத் துன்பங்கள், இடர்பாடுகளுக்கு நடுவில் இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொண்டு நாம் வாழ்ந்தோமெனில் அவையெல்லாம் துன்பமாகத் தெரியாது என்பது உறுதி.


இயேசு "என் நுகம்" என்று குறிப்பிடுகின்றாரே, அதுவும் என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்வது நல்லது. என் நுகம் என்று இயேசு குறிப்பிடுவது, அவரிடம் விளங்குகின்ற கனிவும் மனத்தாழ்மையும்தான். ஆம், நாம் நம்முடைய வாழ்க்கையில் இயேசுவிடம் விளங்கிய கனிவையும் மனத்தாழ்மையையும் கொண்டு வாழ்கின்றபோது, நமக்கு உண்மையான இளைப்பாறுதல் கிடைக்கும். புனித பவுல் இயேசுவின் உள்ளக்கிடக்கையை அல்லது அவரது மனநிலையை அறிந்தததால்தான் எபேசு நகரச் திருஅவையாரிடம், "முழு மனத்தாழ்மையுடனும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்" (எபே 4:2).

 
ஆதலால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் அவர் தருகின்ற உண்மையான இளைப்பாற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு அவரிடம் விளங்கிய கனிவோடும் மனத்தாழ்மையோடும் வாழ்வது இன்றியமையாதது. பலருடைய உள்ளத்தில் கனிவும் மனத்தாழ்மையும் இருப்பதில்லை. அதனாலேயே அவர்கள் மனநிம்மதியின்றி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் நாம் இயேசு தருகின்ற இளைப்பாற்றியைப் பெற அவரிடம் விளங்கும் கனிவையும் மனத்தாழ்மையையும் நமதாக்குவோம்.


சிந்தனை

          "
நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்" (செப் 2:3)" என்பார் இறைவாக்கினர் செப்பனியா. ஆகையால், இயேசு தருகின்ற இளைப்பாற்றியைப் பெற கனிவும் மனத்தாழ்மையோடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!