|
|
10 டிசம்பர் 2019 |
|
|
திருவருகைக்காலம்
2ம் ஞாயிறு - 2ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11
"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார்
உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில்
அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள்
குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும்
ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.
குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக
நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்;
மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்;
கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்;
மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை
மொழிந்தார். "உரக்கக் கூறு'' என்றது ஒரு குரல்; "எதை நான் உரக்கக்
கூற வேண்டும்?'' என்றேன்.
மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப்
பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி
விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்;
பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும்
நிலைத்திருக்கும். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல்
நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு,
அஞ்சாதே! `இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ
என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு
ஆட்சிபுரிய இருக்கிறார்.
அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர்
வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர்
மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்;
அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன்
நடத்திச் செல்வார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 96: 1-2. 3,10. 11-12. 13 (பல்லவி: எசா 40: 10a)
Mp3
=================================================================================
பல்லவி: இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும்
வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப்
பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை
நாள்தோறும் அறிவியுங்கள். பல்லவி
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து
மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர்
மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.' பல்லவி
11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில்
நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும்
களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர்
திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி
13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு
வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும்
அவர் தீர்ப்பிடுவார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ
அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள்
விண்ணகத் தந்தையின் திருவுளம்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இந்த நிகழ்ச்சியைப்பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள்
ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில்
விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?
அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும்
பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே
மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே
உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசாயா 40: 1-11
"அவ(ன்)ள் போராட்டம்
நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது"
நிகழ்வு
திருஅவையில் சீர்திருத்தத்தைக்
கொண்டுவந்தவரும் புரடெஸ்டன்ட் சபை நிறுவனருமான மார்டின் லூதர்
ஒருநாள் தன்னுடைய அறையில் இருந்துகொண்டு, மிகவும் மனம்நொந்து,
"என் பாவமே, என் பாவே, என் பெரும் பாவமே" என்று கண்ணீர் வடித்து
அழுதுகொண்டிருந்தார்
அப்பொழுது அவருடைய அறைக்குத் தற்செயலாக வந்த துறவி ஒருவர்,
மார்டினை அந்நிலையில் கண்டு மிகவும் வேதனையடைந்தார். பின்னர்
அவர் மார்டினிடம், "மார்டின்! நானும் உன்னைப் போன்றுதான் என்
குற்றங்களை நினைத்து மிகவும் வேதனையடைந்தேன். பின்னர்தான்,
"பாவ மன்னிப்பை நம்புகிறேன்" என்ற நம்பிக்கை அறிக்கையின் மூலம்
ஆறுதலடைந்தான். நீயும் பாவ மன்னிப்பில் நம்பிக்கை கொள். அப்பொழுது
உன்னுடைய உள்ளத்திற்கு ஆறுதலும் நிம்மதியும் கிடைக்கும்" என்றார்.
இதற்குப் பின்பு மார்டின் பாவ மன்னிப்பில் நம்பிக்கை கொண்டு,
பாவத்தை அறிக்கையிட்டு, மனநிம்மதியோடு வாழ்ந்தார்.
இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னித்து, நமக்குப் பாவமன்னிப்பு
அளிக்கத் தயாராக இருக்கும்பொழுது, எதற்காக நாம் நம்முடைய குற்றங்களை
நம்முடைய மனதில் அடக்கி வைத்து, அமைதியில்லாமல் இருக்கவேண்டும்
என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் குற்றங்களிலிருந்து
மன்னிப்பும் இன்ன பிற ஆசியையும் தருவதாக வாக்குறுதி தருகின்றார்.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆறுதல் கூறும் இறைவன்
இறைவாக்கினர் எசாயா
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், பல்வேறு
போராட்டங்கள், இடர்கள் ஆகியவற்றுக்கு நடுவில் நிம்மதியின்று
வாழ்ந்துகொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு (நமக்கும்) ஆறுதலின்
செய்தியாக அமைந்திருக்கின்றது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய கட்டளையை
மீறி வேற்று தெய்வங்களை வழிபட்டார்கள். அதனாலேயே அவர்கள் நாடு
கடத்தப்பட்டார்கள். அப்படியிருந்தபோதும் குற்றங்களுக்கு ஏற்பத்
தண்டிக்காத இறைவன் (எஸ் 9:13) அவர்களை மீட்டுக்கொண்டு வந்து,
அவர்களுடைய சொந்த நாட்டில் குடியமர்த்தினார்.
இப்படிப்பட்ட சமயத்தில் இஸ்ரயேல் மக்கள், "இறைவன் நாம் செய்த
குற்றங்களை இறைவன் மன்னிப்பாரோ, மன்னியாதிருப்பாரோ?" என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான்,
ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, "அவள்
போராட்டும் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது" என்று
ஆறுதல் வார்த்தைகளைக் கூறுகின்றார். ஆம், இறைவன் நம்முடைய குற்றங்களை
மன்னித்தத் தயாராக இருக்கின்றார். ஆதலால், அவருடைய பேரன்பை உணர்ந்து,
அவரை அண்டிச் செல்வது சாலச் சிறந்தது.
பாதுகாப்புத் தரும் இறைவன்
மக்கள் செய்த குற்றங்களெல்லாம்
ஆண்டவர் மன்னிப்பார் என்று கூறிய எசாயா இறைவாக்கினர், மக்களுக்குப்
பாதுகாப்பையும் வழங்குவார் என்று எடுத்துக்கூறுகின்றார். எப்படிப்பட்ட
பாதுகாப்பு என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய முதல் வாசகத்தில் "பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக
நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்" என்ற வார்த்தைகள் இடம்பெறுகின்றன
அல்லவா... நெடுஞ்சாலையைச் சீராக்குங்கள் என்றால், அது அசிரியர்களால்
பாழாக்கப்பட்டு (எசா 33:8) மக்கள் நடந்துசெல்ல முடியாத வண்ணம்
பாதுகாப்பாற்றதாக இருந்தது. இயேசு சொல்லும் நல்ல சமாரியன் உவமையில்கூட,
எருசலேமிலிருந்து எரிக்கோ செல்லும் சாலை பாதுகாப்பற்றதாக இருப்பதாகக்
கூறுகின்றார் (லூக் 10:30). இப்படிப் பாதுகாப்பாற்ற சாலையை,
சீர்படுத்தி, கோணலானவற்றை நேராக்கி, கரடு முரடானவற்றைச் சமதளமாக்கி,
அதன்மூலம் பாதுகாப்பு வழங்குவதாக ஆண்டவர் கூறுகின்றார்.
மக்களை அன்பிலும் அமைதியிலும் ஆளவரும் இறைவன்
ஆண்டவராகிய கடவுள் மக்களுடைய குற்றங்களை மன்னிப்பவராக, அவர்களுக்குப்
பாதுகாப்பு வழங்குபவராக மட்டுமல்லாமல், நல்லாயனைப் போன்று மக்களை
ஆள்பவராக வருகின்றார் என்கின்றார் எசாயா இறைவாக்கினர்.
இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள் நல்ல ஆயனாக இருந்து
மக்களை வழிநடத்தவும் இல்லை; அவர்களைப் பராமரிக்கவும் இல்லை.
மாறாக, அவர்கள் மந்தையைச் சூறையாடும் ஓநாயாக இருந்தார்கள். (எசே
34: 1-10). இதனால் ஆண்டவரே நல்ல ஆயராக இருந்து, அவர்களை நல்லமுறையில்
மேய்ப்பதாக, ஒன்றுசேர்ப்பதாக, வழிநடத்திச் செல்வதாகக்
கூறுகின்றார். ஆம், ஆண்டவர் நல்ல ஆயனாகிய இருந்து, மக்களை வழிநடத்திச்
செல்லும்போது, மக்களுக்கு என்ன குறை இருக்கப்போகின்றது!
ஆகையால், நமக்கு பாவ மன்னிப்பையும் பாதுகாப்பையும் தந்து, நல்ல
முறையில் நம்மை வழி நடத்தும் நல்ல ஆயனிடம் நம்மையே நாம்
முழுமையாய் ஒப்புக்கொடுத்து, அவர்க்குகந்த வழியில் நடக்க முற்படுவோம்.
சிந்தனை
"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை" (திபா 23:1) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நல்ல ஆயானாம் இயேசுவின் கைகளில்
நம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து, அவருக்கு ஏற்ற வழியில் நடப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
மத்தேயு 18: 12-14
வழிதவறியவர்களைத் தேடிச் செல்லும் இயேசு!
நிகழ்வு
இளைஞர் ஒருவர் இருந்தார். அவருக்குத் "தான் சாகுமுன் மானிட சமூகத்திற்கு
நல்லது ஏதாவது செய்யவேண்டும்" என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அவர்
எல்லாவற்றையும் துறந்து, பாலைவனத்திற்குச் சென்றார். அங்கு ஒரு
நீரூற்று இருந்தது. அதற்கு ஒரு மைல் தள்ளி ஒரு குடிசை அமைத்து,
அதில் இருந்துகொண்டு இறைவேண்டலிலும் ஒறுத்தல் முயற்சிகளிலும்
தன்னுடைய நாள்களைச் செலவழித்து வந்தார்.
அவர் ஒவ்வொருநாளும் தண்ணீர் எடுப்பதற்காக குடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு,
நீரூற்றிக்குச் செல்வது வழக்கம். அப்படி அவர் குடத்தைக் கையில்
எடுத்துக்கொண்டு நீரூற்றுக்குச் சென்று வருகின்றபோது மணலில்
நடந்துவருவது மிகவும் சிரமாக இருக்கும். இருந்தாலும் அவர் அந்தச்
சிரமத்தையெல்லாம் பாவிகள் மனம்திரும்புவதற்காக ஒப்புக்கொடுத்து,
மன்றாடிவந்தார். நாள்கள் வேகமாகச் சென்றன; ஆனால், அவர்
நீரூற்றிலிருந்து தண்ணீர் மொண்டு வருகின்றபோது பாவிகள் மனம்மாறுவதற்காக
மன்றாடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.
இப்பொழுது அவருக்கு வயது எழுபதைத் தாண்டியிருந்தது. அதனால் அவரால்
முன்புபோல் ஒரு மைல் தொலைவிலிருக்கும் நீரூற்றிலிருந்து தண்ணீர்
மொண்டுவர முடியவில்லை. எனவே, அவர் நீரூற்றுக்குப் பக்கத்தில்
குடிசையை அமைத்தால், தண்ணீர் மொண்டுவருவதற்கு மிகவும் வசதியாக
இருக்கும் என்று சிந்திக்கத் தொடங்கினார். இப்படி அவர்
சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, "நாளைக்கே நீரூற்றருகில்
குடிசையை அமைத்துவிடுவதற்கு இன்னும் நல்லது" என்ற இன்னொரு சிந்தனையும்
வந்தது. அதை எப்படிச் செயல்படுத்தலாம் என்று யோசித்துக்கொண்டு
தண்ணீர் மொண்டுகொண்டு, குடிசைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்பொழுது பின்னாலிருந்து யாரோ ஒருவர், "ஒன்று, இரண்டு,
மூன்று, நான்கு, ஐந்து" என்று எண்ணுகின்ற சத்தம் அவருக்குக்
கேட்டது. அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன அவர், பின்னால் இருப்பது
யாரென்று திரும்பிப் பார்த்தார். அங்கு வானதூதர் ஒருவர்
நின்றுகொண்டிருந்தார். அவரிடம் அந்த இளைஞர் (இப்பொழுது பெரியவர்),
"என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு
வானதூதர் அவரிடம், "நாளைய நாளில் உன்னுடைய குடிசையை
நீரூற்றுக்கு அருகில் அமைக்கப்போகிறாய். இதனால் இனிமேல் நீ தண்ணீர்
மொண்டுகொண்டு ஒரு மைல் தூரம் நடப்பதற்கு வாய்ப்பிருக்காது...
பாவிகள் மனம்திரும்புவதற்காக மன்றாடுவதற்கும்
வாய்ப்பிருக்காது... இன்றுதான் நீ பாவிகள் மனம்மாறுவதற்காக மன்றாடுகின்ற
கடைசி நாள். அதனால்தான் நான் இப்படி ஒன்று, இரண்டு... என்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன்"
என்றார்.
இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்த பெரியவர், "என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
குடிசையை நீரூற்றுக்கு அருகில் அமைக்க்கும் என்னுடைய எண்ணத்தை
இப்பொழுதே கைவிடுகின்றேன்... முன்புபோல் நான் நீரூற்றிலிருந்து
ஒரு மைல் தூரம் இருக்கும் என் குடிசைக்குச் தண்ணீர்
மொண்டுசெல்லும்போது பாவிகள் மனம்மாறுவதற்காக இறைவனிடம் மன்றாடுவேன்"
என்று உறுதிகூறினார்.
பாவிகள் மனம்மாறி, ஆண்டவரிடம் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகத்
தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த அந்தப் பெரியவர் நம்முடைய கவனத்திற்கு
உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, பாவிகள்
மனம்மாறவேண்டும் என்பதற்காக அவர்களைத் தேடிச் செல்பவராக தன்னை
அடையாளப்படுத்துகின்றார். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவுக்கு ஒவ்வொருவரும் முக்கியமானவரே
நற்செய்தியில் இயேசு காணாமல் போன ஆடு உவமையைக் குறித்துப்
பேசுகின்றார். இயேசு சொல்லும் இந்த உவமையில் வருகின்ற ஆயர்,
வழிதவறிப் போன ஆட்டினைக் கண்டுபிடிப்பதற்காகத் தொண்ணூற்றொன்பது
ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டுச் செல்கின்றார். இந்த
உவமையின் வழியாக இயேசு சொல்ல வருகின்ற செய்தி, இறைவனுக்கு ஒவ்வொருவரும்
முக்கியமானவர் என்பதாகும்.
ஒருவர் பாவி என்பதற்காக அவர் வேண்டாம் என்று இறைவன் விட்டுவிடுவதில்லை.
அவரும் முக்கியம், அவரும் தெரிதவறிப் போய்விடக்கூடாது என்பதற்காக
இறைவன் அவரைத் தேடிச் செல்கின்றார். இயேசு தன்னுடைய பணிவாழ்வு
முழுவதும் பாவிகளைத் தேடிச் செல்பவராகவும் அவர்களை மீட்பவராகவும்
இருந்தார் (லூக் 19:10). அப்படியிருக்கும்பொழுது, பாவிகளாகிய
நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவரைத் தஞ்சமடைவதுதான் சாலச்
சிறந்தது. இப்படி நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, ஆண்டவரிடம்
திரும்பி வருகின்ற, ஆண்டவருக்கு அதைவிட மகிழ்ச்சி வேறெதுவும்
இல்லை (லூக் 15: 7)
ஆகையால், பாவிகளைத் தேடி, அரவணைக்கும் நல்லாயனாம் இயேசுவிடம்
திரும்பி வந்து, அவர் தருகின்ற ஆறுதலையும் அரவணைப்பையும்
பெற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும்
வேண்டுமென அவர் விரும்புகிறார்" (1 திமொ 2:4) என்பார் புனித பவுல்.
ஆகையால், வழிதவறிப் போன ஆடுகளான அனைவரும் மீட்புப் பெற
விரும்பும் இறைவனிடம் தஞ்சம் அடைந்து, அவர் வழியில் நடப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|