Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     07 டிசம்பர் 2019  
                         திருவருகைக்காலம் 1ம் ஞாயிறு - 2ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உங்கள் கூக்குரலுக்குச் செவிசாய்த்து அருள்கூர்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,23-26

இஸ்ரயேலின் தூயவராம் ஆண்டவராகிய இறைவன் கூறுவது: சீயோன்வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.

என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ளமாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் "இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்'' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.

நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும். முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும். கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவு நாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும். ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்றுதிரண்டாற் போல ஏழு மடங்காகும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 147: 1-2. 3-4. 5-6 (பல்லவி: எசா 30: 18) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.

1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. 2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். பல்லவி

3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். 4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். பல்லவி

5 நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. 6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசா 33: 22

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35 - 10: 1, 6-8


அக்காலத்தில் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்'' என்றார்.

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: "வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நம்பிக்கை கொண்டவர்கள் அவரையும் விட மேலான காரியங்களை செய்வார்கள்.

இதற்காக தன் மக்களுக்கு கொடையாக பல வரங்களை, ஆவியின் கனிகளை கொடுத்திருக்கின்றார்.

நாம் இன்றைக்கு அவற்றையெல்லாம் பெற்று, பெருகச் செய்து இருக்கின்றோமா? சபைகளை பெருகச் செய்து இருக்கின்றோம். தெருவுக்கு ஒரு ஆங்கில வழிக் கல்வி போதனா சாலை இருப்பது போல, இன்றைக்கு மூலை மூடுக்கெல்லாம் சபைகள் தோன்றியிருக்கின்றது. ஆங்கில வழி போதானா நிலையம் என்ன பணி செய்கின்றதோ? அதைத் தான் இந்த சபைகளும் செய்கின்தோ என கேட்கத் தோன்றுகின்றது. கல்வி இன்றைக்கு வியாபாரம் ஆகி விட்டது என பலர் சொல்ல கேள்விப்படுகின்றோம்.

ஆவியின் கனிகளை பயன்படுத்தி, பெற்ற வரங்களை கொண்டு தாயாம் திருச்சபையை பெருகச் செய்திட வேண்டும். உறுதியேற்போம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

உங்கள் கூக்குரலுக்குச் செவிசாய்த்து அருள்கூர்வார்.


இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,23-26

"நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்"

நிகழ்வு

மறைப்பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் பழங்குடி மக்கள் நடுவில் பணிசெய்து வந்தார். அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையின்போதும், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, ஞாயிறு வழிபாட்டிற்காகப் பத்து மைல்களுக்கு மேல் நடந்துசெல்லவேண்டும். ஏனென்றால், அவர் தங்கியிருந்த இடத்திற்கும் மக்கள் இருந்த இடத்திற்கும் பத்து மைல்கள் தூரம் இருந்தது. அது ஆபத்துகள் அதிகம் இருந்த காட்டுப்பகுதியாக இருந்தது. அப்படியிருந்தும் அவர் அவற்றையெல்லாம் பொருள்படுத்தாமல், அந்த மக்களுக்கு நடுவில் பணியாற்றி வந்தார்.

ஒருநாள் அவர் ஞாயிறு வழிபாட்டிற்காக வழக்கம்போல் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, காட்டுப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, கடுமையாக மழைபெய்யத் தொடங்கியது. அப்பொழுது அவர் முழந்தாள்படியிட்டு வேண்டத் தொடங்கினார். "இறைவா! நான் வழிபாட்டு தலத்திற்கு செல்கின்ற வரைக்குமாவது மழையை நிறுத்தி வைய்யும்... இல்லையென்றால், நான் அணிந்திருக்கின்ற அங்கியானது நனைந்துவிடும்; நான் வைத்திருக்கின்ற திருவிவிலியமும் நனைந்துவிடும்." அவர் இவ்வாறு இறைவனிடம் வேண்டியபோதும் மழையானது நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் அவர், "இனிமேலும் நாம் இங்கு நின்றுகொண்டிருந்தால் மொத்தமாக நனையவேண்டியதுதான்" என்று நினைத்துக்கொண்டு வழிபாட்டுத் தலம் இருக்கின்ற இடத்திற்கு ஒரே ஓட்டமாய் ஓடினார்.

அவர் வழிபாட்டுத் தலத்தை அடைந்திருந்தபோது, நிறையவே நனைந்திருந்தார். இதனால் அவருக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. "கடவுளிடம் இவ்வளவு உருக்கமாக மன்றாடியபோதும், அவர் எனக்காக சிறிதுநேரம் மழையை நிறுத்தி வைக்கவில்லையே! என்ன கடவுள் இவர்...? இவருக்காகவா நாம் உயிரைக் கொடுத்துப் பணிசெய்துகொண்டிருக்கின்றோம்?" என்று மிகவும் வருத்தம் கொள்ளத் தொடங்கினார். அதன்பிறகு அவரால் வழிபாட்டைச் சரியாக நடத்த முடியவில்லை; ஏனோதானோவென்று முடித்துக்கொண்டு தான் இருந்த இடத்திற்குத் திரும்பினார். தான் இருந்த இடத்திற்கு வந்ததும் அவர், "நம்முடைய மன்றாட்டைக் கேளாத கடவுளுக்குப் பணிசெய்யலாமா? வேண்டாமா? என்று யோசிக்கத் தொடங்கினார்.

அவர் இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது, மூன்று இளைஞர்கள் அவரைப் பார்ப்பதற்கு வந்தார்கள். வந்த அந்த மூன்று இளைஞர்களும், "சுவாமி! நீங்கள் செய்யக்கூடிய இறைப்பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்" என்றார்கள். "ஏன் இவர்கள் இவ்வாறு சொல்கின்றார்கள்?" என்று அவர் யோசித்துக்கொண்டிரும்பொழுதே, அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் பேசத் தொடங்கினார்:

"சுவாமி! உங்களைக் கொல்வதற்காக ஒருசிலர் எங்களிடம் பணம்கொடுத்தார்கள். இதோ அந்தப் பணம்... நாங்கள் மூவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு உங்களைக் கொல்வதற்காக நீங்கள் வழக்கமாக வரும் வழியில் இன்று அதிகாலையில் கையில் துப்பாக்கியுடன் காத்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்றைக்குமே இல்லாத அளவுக்கு இன்றைக்கு மழை பெய்தது. அதனால் எங்களிடம் இருந்த துப்பாக்கி பழுதானது. நாங்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்த்தோம்... துப்பாக்கி வேலை செய்யவே இல்லை. அப்பொழுதுதான் நாங்கள், "நீர் சாதாரண மனிதரல்ல, இறை மனிதர்... உங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது" என்று நினைத்துக்கொண்டோம்."

அந்த இளைஞர் சொன்ன எல்லாவற்றையும் மிகவும் வியப்போடு கேட்டுக்கொண்டிருந்த அந்த மறைப்பணியாளர், "இறைவன் நம்முடைய வேண்டுதலைக் கேட்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அவரோ நாம் வேண்டாததையும் செய்து தந்திருக்கின்றார். உண்மையில் அவர் மிகப்பெரியவர் என்று அவர் இன்னும் உறுதியாக ஆண்டவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார்.

கடவுள் நம்முடைய வேண்டுதலுக்கு ஏன், வேண்டாததற்கும் செவிசாய்ப்பார் என்ற உண்மையை உயர்ந்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம், இறைவன் நாம் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து, நமக்குப் பதில் தருகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

செவிசாய்க்கும் இறைவன்

இறைவாக்கினார் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், மெசியாவின் வருகையின்பொழுது என்னென்ன நடக்கும் என்பதைக் குறித்து எடுத்துக் கூறுகின்றது. இதில் இடம்பெறும் ஓர் இறைச்சொற்றொடர்தான், "நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்ந்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்" என்பதாகும்.

இறைவாக்கினார் எசாயா கூறுகின்ற இவ்வார்த்தைகள் இயேசுவோடு அப்படியே பொருந்திப்போகின்றன. ஆம், மக்கள் இயேசுவை நோக்கி, "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" (மத் 9:27) என்று கத்தியபொழுது, அவர் அவர்களுடைய குரலுக்குச் செவிசாய்த்து, அவர்களுக்கு மறுமொழி தந்தார். ஆகையால், நாம் செய்யவேண்டியதெல்லாம், இறைவனை நோக்கி, நம்முடைய வேண்டுதல்களை எழுப்புவதுதான்.

எனவே, நமது கூக்குரலுக்குச் செவிசாய்க்கின்ற இறைவனிடம் நம்முடைய வேண்டுதல்களை எடுத்து வைத்து, அவருடைய அருளைப் பெறுவோம்.

சிந்தனை

"மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே உதவி வரும்" (திபா 121: 1-2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்முடைய குரலைக் கேட்கின்ற, நமக்கு உதவ வருகின்ற இறைவனிடம் வேண்டுதலை எடுத்து வைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 9: 35-10; 1,5,6-8

"அவர் அவர்கள்மேல் பரிவுகொண்டார்"

நிகழ்வு

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த சமயம், பெரியவர் ஒருவர் அவரைப் பார்க்க ஒரு கடிதத்தோடு வந்தார். வந்தவர் கடிதத்தை ஆபிரகாம் லிங்கனிடம் கொடுத்துவிட்டு அவரையே பார்த்தார். ஆபிரகாம் லிங்கன் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தபோது, அதில், "இராணுவத்தில் பணிபுரிந்து வரும் என் மகன் தேசத் துரோகக் குற்றத்தைச் செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிகின்றான். நீங்கள்தான் பெரிய மனது வைத்து அவனுடைய தூக்குத் தண்டனையை இரத்துசெய்து, அவனுடைய தண்டனைக் காலத்தைக் குறைக்கவேண்டும்" என்று எழுதி இருந்தது. கடிதத்தை வாசித்துவிட்டு ஆபிரகாம் லிங்கன் அந்தப் பெரியவருடைய முகத்தைப் பார்த்தார். அவருடைய முகமோ வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு வேதனையோடு இருந்தது.

இதற்கிடையில் ஆபிரகாம் லிங்கனின் செயலர் ஒரு தந்தியை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்தத் தந்தியானது அமெரிக்க இராணுவ அதிகாரி பட்லரிடமிருந்து வந்திருந்தது. அதில் அவர், "அதிபர் அவர்களே! தேசத் துரோகக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஜோப் ஸ்மித்தின் வழக்கில் எந்தவிதத்திலும் நீங்கள் தலையிடாதீர்கள். அவனை என்றைக்குத் தூக்கலிடவேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்" என்று எழுதி இருந்தது. இதை ஆபிரகாம் லிங்கன் அந்தப் பெரியவரிடம் படித்துக் காட்டியபோது, அவருடைய முகம் இன்னும் வருத்தத்திற்கு உள்ளானது. பெரியவர், ஆபிரகாம் லிங்கன் என்ன செய்யப்போகிறாரோ என்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆபிரகாம் லிங்கன் ஒரு காகிதத்தில் கீழ்க்கண்டவாறு எழுதிவிட்டு, அதை அந்தப் பெரியவரிடம் வாசிக்கக் கொடுத்தார். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: "மதிப்பிற்குரிய பட்லர் அவர்களே! நீங்கள் அனுப்பிய தந்தியைப் பெற்றுக்கொண்டேன்... ஜோப் ஸ்மித்தை எப்பொழுது தூக்கிலிடவேண்டும் என்று நான் உத்தரவிடுகின்றேனோ... அப்பொழுது நீங்கள் தூக்கிலிட்டால் போதும்."

இதைப் படித்துப் பார்த்த பெரியவர் ஆபிரகாம் லிங்கனிடம் சற்றுக் குழப்பமான மனநிலையோடு, "" ஜோப் ஸ்மித்தை எப்பொழுது தூக்கலிடவேண்டும் என்று நான் உத்தரவிடுகின்றேனோ... அப்பொழுது நீங்கள் தூக்கிலிட்டால் போதும்" என்று எழுதியிருக்கின்றீர்கள்... ஒருவேளை நீங்கள் அவரிடம் அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த மாதம் தூக்கிலிடுங்கள் என்று உத்தரவிட்டால், என் மகன் ஜோப் ஸ்மித்தின் வாழ்க்கை அவ்வளவுதானா...? அவன் எனக்கு ஒரே மகன்" என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

அந்தப் பெரியவரின் பேச்சில் இருந்த தாங்க முடியாத துயரத்தை உணர்ந்தவராய் ஆபிரகாம் லிங்கன் அவரிடம், "ஐயா பெரியவரே! இராணுவ அதிகாரி பட்லருக்கு நான் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில், "எப்பொழுது என்னிடமிருந்து உத்தரவு வருகின்றதோ, அப்பொழுது நீங்கள் அவனைத் தூக்கிலிடுங்கள் என்றுதானே எழுதி இருக்கின்றேன்... அவனைத் தூக்கிலிடுமாறு ஒருபோதும் நான் உத்தரவிடமாட்டேன்... அவன் திருவிவிலியத்தில் வருகின்ற மெத்துசெலாவைப் (தொநூ 5:27) போன்று நீண்ட நாள்கள் உயிரோடு இருப்பான்... போதுமா" என்றார். ஆபிரகாம் லிங்கனிடமிருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்தப் பெரியவர் நன்றிப் பெருக்கோடு தன் இரு கைகளையும் கூப்பி அவரை வணங்கினார்.

இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவரின் துயரத்தைத் தன்னுடைய துயரமாகப் பார்த்து ஆபிரகாம் லிங்கன் அவர்மீது பரிவுகொண்டார். இன்றைய நற்செய்தியிலும் ஆண்டவர் இயேசு மக்கள்மீது பரிவு கொண்டதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆயனில்லா ஆடுகள்போல் இருந்த மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு

ஆண்டவர் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்து, அங்குள்ள மக்களுக்கு கற்பித்தும் விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவித்தும் நோயாளிகளைக் குணப்படுத்தியும் வந்தார். அப்படியிருக்கும்பொழுது, மக்களெல்லாம் ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருப்பதைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார. ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருப்பது மிகவும் கொடிய நிலை (எசே 34: 5-6; எண் 22: 17; 1 அர 22:17). அப்படியிருக்கும்போது தீயவர்களால் மிக எளிதாகத் தாக்கப்படலாம். இதனை நன்கு உணர்ந்த இயேசு, அந்நிலையைப் போக்குவதற்கு ஆவன செய்கின்றார்.

மக்கள் ஆயனில்லாத ஆடுகளைப் போன்று இருப்பதைப் பார்த்து அவர்கள்மீது பரிவுகொண்ட இயேசு, அவர்களுக்கு ஆயனாகவும் தலைவனாகவும் பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்துகின்றார். இதில் நாம் கவனிக்கவேண்டியது இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்ததுதான். பன்னிரண்டு என்றால் முழுமை. நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் நல்ல ஆயன் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு இயேசு மக்களுடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகப் பார்த்து, அவர்களுடைய துன்பத்தைப் போக்க, அவர்களுக்கு நடுவில் பணிபுரிய நல்லாயன்களை ஏற்படுத்துகின்றார்.

இயேசு மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்கள் நடுவில் பணிசெய்ய திருத்தூதர்களை ஏற்படுத்தினார் என்றால், நம்மையும் மக்கள் நடுவில் பணிசெய்ய அவர் அழைக்கின்றார் என்பதை உணர்ந்து, ஆயனில்லா ஆடுகள் போன்று இருக்கும் மக்கள் நடுவில் நாமும் பணிசெய்ய முன்வரவேண்டும்... மக்கள் நடுவில் பணிசெய்ய நாம் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்" (சீஞா 2:11) என்கிறது சீராக்கின் ஞானநூல். ஆகையால், நாம் ஆண்டவரைப் போன்று பரிவும் இரக்கமும் உடையவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!