|
|
02 டிசம்பர் 2019 |
|
|
திருவருகைக்காலம் 1ம் ஞாயிறு - 2ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின்
பெருமையும் மேன்மையுமாய் அமையும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6
ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும்
மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள்,
இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய்
அமையும்.
அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி
வாழ்வோரும் "புனிதர்' எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று
எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் "புனிதர்' எனப்படுவர்.
என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்;
நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத் தணலையொத்த
அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத்
தூய்மைப்படுத்துவார்.
சீயோன் மலையின் முழுப் பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக்
கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்;
புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும்
இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு
விதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும்
நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும்
அரணாகவும் அமையும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-திபா
122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1) Mp3
=================================================================================
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது
அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து
உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி
4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு
இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி
செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி
6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்;
"உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள்
அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" பல்லவி
8 "உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர்
சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம்
பெருகும்படி நான் மன்றாடுவேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 80: 3
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக்
கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
அல்லேலூயா.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்படும் அல்லேலூயா
வசனத்திற்குப் பதிலாக 67, 68ஆம் பக்கங்களில் உள்ளவற்றுள் ஏதேனும்
ஒரு வசனத்தைப் பயன்படுத்தலாம்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின்
பந்தியில் அமர்வர்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11
அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர்
ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால்
மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்" என்றார்.
இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து
வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும்
சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன்.
என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள்
ஒருவரிடம் "செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் "வருக'
என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து "இதைச்
செய்க' என்றால் அவர் செய்கிறார்" என்றார்.
இதைக் கேட்டு, இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை
நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும்
இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
திருவருகைக்காலத்தின் முதல் வாரம் நம்பிக்கை என்ற நலனுக்காக
செபிக்க அழைப்பு பெறுகின்றோம்.
தன்னுடைய தகுதியின்மையை உணரும் மாந்தர்களே, தங்களது வரையை
தெரிந்தவர்களே தாழ்ச்சியோடு, இறை உதவியும் தங்களுக்கு தேவை என
உணர்ந்து தங்களை ஒப்புக் கொடுத்திட முடியும்.
நூற்றுவர் தலைவர் தனக்கு அதிகாரம் இருந்தாலும் தன் நிலை அறிந்து,
தன் வரையை உணர்ந்ததாலேயே இயேசுவின் பாராட்டை பெறுகின்றார்.
இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர்
ஒன்றுசேர்க்கிறார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட
காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா
மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக்
குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை
நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு
வந்து சேர்ந்து "புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;
யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக்
கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்' என்பார்கள். ஏனெனில்,
சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின்
திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத்
தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள்
தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக்
கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு
எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும்
போர்ப் பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே,
வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
முதல் ஆண்டு வாசகத் தொகுப்பின்படி, மேற்கண்டுள்ள வாசகம்
திருவருகைக் கால முதல் ஞாயிற்றுக் கிழமையில் வாசிக்கப்பட்டால்,
பின்வரும் வாசகத்தைப் பயன்படுத்தலாம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசாயா 4: 2-6
நம் நடுவில் தங்கவரும் மெசியா
நிகழ்வு
"மறு கிறிஸ்து" என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்றவர் அசிசி
நகரப் புனித பிரான்சிஸ். இவர் தன்னுடைய சபையில் இருந்த எல்லாரிடமும்,
"எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று அடிக்கடி சொல்லிவந்தார்.
இவர் சொன்னதற்கிணங்க எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரே
ஒரு சகோதரரைத் தவிர.
ஒருநாள் பிரான்சிஸ், மகிழ்ச்சியாக இல்லாமல், கவலையோடும் வருத்தத்தோடும்
இருந்த சகோதரரைப் பார்த்துவிட்டு, அவரைத் தன்னருகே அழைத்தார்.
"எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கின்றபொழுது, நீர் மட்டும் ஏன்
கவலையோடும் வருத்தத்தோடும் இருக்கின்றீர்...? சாவான பாவம் எதுவும்
செய்துவிட்டீரா...? என்று கேட்டார். அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக
இருந்தார்.
அப்பொழுது பிரான்சிஸ் அவரிடம், "ஒருவேளை நீர் சாவான பாவம்
செய்துவிட்டாலும், உம்முடைய குற்றத்தை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்புக்
கேட்டால், அவர் உம்முடைய பாவத்தையெல்லாம் கழுவி
தூய்மையாக்கிவிடுவார். மேலும் நீர் உம்முடைய உள்ளத்தில் கடவுள்
குடிகொண்டிருக்கின்றார் என்று நம்பி வாழ்ந்தால், கவலையோ, வருத்தமோ
படத் தேவை இல்லை" என்றார். பிரான்சிஸ் சொன்ன இவ்வார்த்தைகளை
கேட்டு, அந்தச் சகோதரர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கினார்.
கடவுள் நம் உள்ளத்தில், நம் நடுவில் குடிகொண்டிருக்கும்போது
நாம் எதற்குக் கவலையோடு வருத்தத்தோடும் இருக்கவேண்டும்...? மகிழ்ந்து
ஆர்ப்பரிப்போமே...! இறைவாக்கினர் எசாயா நூலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகம், மெசியா நம் நடுவில் தங்கி, நம் பாவங்கள்
அனைத்தையும் போக்கி, நமக்குப் புதுவாழ்வு தரப்போகின்றார் என்று
முன்னறிவிக்கின்றார். அவர் அளிக்கின்ற "புதுவாழ்வு" எப்படிப்பட்டது
என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அழகும் மேன்மையும் வாய்ந்தவராய் இருக்கும் மெசியா
மெசியாவின் வருகையினால் என்னென்ன நடக்கும் என்பதைக் குறித்துப்
பேசும் இறைவாக்கினர் எசாயா, முதலில் அந்த மெசியா எப்படிப்பட்டவராக
இருப்பார் என்பதை, "ஆண்டவரால் துளிர்க்கும் தளிர், அழகும்
மென்மையும் வாய்ந்ததாய் இருக்கும்" என்று கூறுகின்றார். இங்கு
"தளிர்" என்று இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுவது, மெசியாவைக்
குறிப்பதாக இருக்கின்றது. எவ்வாறெனில், தளிர் என்ற வார்த்தை
திருவிவிலியத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதோ,
அங்கெல்லாம் அது மெசியாவைக் குறிப்பதாக இருக்கின்றது (எசா
11:1, 53:2; எரே 23:5, 33:15; செக் 3:8, 6:12).
மேலும், "ஆண்டவரால் துளிர்க்கும் தளிர் அழகும் மேன்மையும்
வாய்ந்ததாய் இருக்கும்" என்ற வார்த்தைகள், மெசியா எத்துணை
மேன்மை பொருந்தியவராக, வல்லமை நிறைந்தவராக இருப்பார் என்பதை
நமக்கு எடுத்துரைபவனவாக இருக்கின்றன.
பாவக்கறைகளை போக்கும் மெசியா
மெசியா மேன்மை பொருந்தியவராக இருப்பார் என்று குறிப்பிடும் இறைவாக்கினர்
எசாயா, தொடர்ந்து சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், "....சீயோன்
மகளின் "பாவத்தைக்" கழுவித் தூய்மைப்படுத்துவார்" என்பதாகும்.
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் கொடுத்த கட்டளையை (விப 20: 1-2) மறந்து,
பிற தெய்வங்களை வழிபட்டு, பாவம் செய்தார்கள். இப்படிப்பட்ட
சமயத்தில் ஆண்டவர்தாமே அவர்கள் மீது இரக்கம்கொண்டு, அவர்கள் நடுவில்
தன் ஒரே மகனை அனுப்பிப் பாவங்களைப் போக்குகின்றார் (மத் 1: 21;
யோவா 1: 29). இவ்வாறு பாவத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை
ஆண்டவராகிய கடவுள் தம் திருமகனும் மெசியாவுமான இயேசுவால் பாவத்திலிருந்து
மீட்கின்றார்.
நம் நடுவில் தங்கும் மெசியா
இறைவாக்கினர் எசாயா, மெசியாவைக் குறித்து தொடர்ந்து சொல்லக்கூடிய
இன்னோர் உண்மை. அவர் மக்கள் நடுவில் குடிகொள்வார் என்பதாகும்.
இன்றைய முதல் வாசகத்தில் இறுதியில், "சீயோன் மலையின் முழுப்
பரப்பின் மேலும் சபைக் கூட்டங்கள் மேலும் மேகத்தை ஆண்டவர்
தோற்றுவிப்பார்" என்ற வார்த்தைகள் அதைத்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன.
திருவிவிலியத்தில் மேகம் என்பது கடவுளின் உடனிருப்பை உணர்த்துவதாக
(மத் 17:5) இருக்கின்றது. அப்படியானால், மேகத்தை ஆண்டவர்
தோற்றுவிப்பார் என்ற வார்த்தைகள், கடவுள் நடுவில் குடிகொள்வார்
என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன என்று உறுதியாகக் கூறலாம்.
யோவான் நற்செய்தியாளர் இதைத்தான், "வார்த்தை மனுவுருவானவர்; நம்மிடையே
குடிகொண்டார்" (யோவா 1:14) என்பார்.
ஆகையால், மேன்மை பொருந்தியவரும் நம்முடைய பாவங்களைப் போக்கி,
நம் நடுவில் தங்க வரும் மெசியாவாம் இயேசுவைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டு,
அவருடைய அன்பிற்கினிய மக்களாவோம்.
சிந்தனை
"இயேசுவே எல்லாருக்கும், சிறப்பாக நம்பிக்கை கொண்டோருக்கும்
மீட்பர்" (1 திமொ 4: 10). என்பார் புனித பவுல். ஆகையால், நமக்கு
மீட்பை அளிக்க, நம் நடுவில் குடிகொள்ள வரும் இயேசுவிடம் ஆழமான
நம்பிக்கை கொண்டு, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
மத்தேயு 8: 5-11
அவரில் நம் முழு எடையையும் இறக்கி
வைப்போம்
நிகழ்வு
ஸ்காட்லாந்தில் பிறந்து, தெற்குப் பசிபிக் கடலில் உள்ள தீவுகளில்
இருந்த மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்து வந்தவர்,
மறைப்பணியாளரான ஜான் கிப்சன் பாட்டன் என்பவர். இவர் அங்கிருந்த
மக்கள் பேசக்கூடிய மொழியில் திருவிவிலியத்தை மொழிபெயர்த்து வந்தார்.
இப்படிப்பட்ட சமயத்தில் இவருக்கு நம்பிக்கை என்ற வார்த்தையை எப்படி
மொழிபெயர்க்கவேண்டும் என்று தெரியவில்லை. நம்பிக்கைக்கு இணையான
வார்த்தை அந்த மக்கள் பேசக்கூடிய மொழியில் இல்லாததால் இவர் என்ன
செய்யதென்று குழம்பித் தவித்தார்.
இந்நிலையில் ஒருநாள் ஜான் கிப்சன் பாட்டனைப் பார்ப்பதற்குப்
பெரியவர் ஒருவர் வந்தார். வந்தவர் கொஞ்சம் தடிமனாக வேறு இருந்தார்.
அவர், ஜான் கிப்சனுக்கு முன்பாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.
நாற்காலியில் அமர்ந்துகொண்டபோதும் அவர் நிலைகொள்ளாமலேயே இருந்தார்.
இதனால் அவர் தனக்கு முன்பாக இருந்த இன்னொரு நாற்காலியில் தன்னுடைய
இரண்டு கால்களையும் எடுத்து வைத்து அமர்ந்தார். இப்பொழுது அவர்
மிகவும் வசதியாக அமர்ந்துகொண்டதை உணர்ந்தார். பின்னர் அவர்
ஜான் கிப்சனிடம், "இந்த நாற்காலியில் என் முழு எடையையும் இறக்கி
வைத்துவிட்டு அமரும்போது எவ்வளவு வசதியாக இருக்கின்றது" என்றார்.
இதைக் கேட்ட ஜான் கிப்சனுக்குப் பொறி தட்டியது. இத்தனை நாள்களும்
நாம் தேடிக்கொண்டிருந்த நம்பிக்கை என்ற வார்த்தைக்குச் சரியான
வார்த்தை கிடைத்துவிட்டது என்று திருவிவிலியத்தில் எங்கெல்லாம்
நம்பிக்கை என்ற சொல் வந்ததோ, அந்த இடத்திலெல்லாம் "முழு எடையையும்
இறக்கி வைத்தல்" என்ற சொற்களைப் பயன்படுத்தினார்.
ஆம், "இறைவனால் எல்லாம் கூடும்" என்று நம்முடைய முழு எடையையும்
அவர்மீது இறக்கி வைத்துச் செயல்பட்டால் அல்லது அவர்மீது ஆழமான
நம்பிக்கை கொண்டு செயல்பட்டால், நாம் வேண்டியது நிறைவேறும் என்பது
உறுதி. இன்றைய நற்செய்தி வாசகம் நம்பிக்கையினால் நாம் இறைவனிடம்
வேண்டுவது நிறைவேறும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.
அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
புறவினத்தாரான நூற்றுவத் தலைவர் இயேசுவின்மீதுகொண்ட நம்பிக்கை
நற்செய்தியில், நூற்றுவத்தலைவர் இயேசுவின்மீதுகொண்ட நம்பிக்கையினால்
தன்னுடைய பையனின் முடக்குவாதம் நீங்கி நலம்பெறுவதைக் குறித்து
வாசிக்கின்றோம். இந்த நூற்றுவத் தலைவர் யூதர் கிடையாது; புறவினத்தார்.
இப்படிப்பட்டவர் இயேசுவைக் குறித்து முழுமையாகத் தெரிந்திருப்பதற்கு
வாய்ப்புக் கிடையாது, மற்றவர்கள் சொன்னதைக் கொண்டுதான் இயேசுவைக்
குறித்து ஓரளவு தெரிந்திருக்க முடியும். அப்படியிருந்தாலும் இயேசுவின்
அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவரிடம், "நீர் ஒரு வார்த்தை
மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்" என்று சொல்கின்றார்.
இயேசுவும் இவருடைய நம்பிக்கையைக் கண்டு, இவருடைய பையனுக்கு நலமாளிக்கின்றார்.
இதில் நாம் கவனிக்கவேண்டியது, இயேசு சொல்லக்கூடிய, "இஸ்ரயேலர்
யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை" என்பதுதான்.
இயேசு எந்த மக்கள் நடுவில் அதிகமாகப் பணிசெய்தாரோ, அந்த மக்கள்
அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை (மாற் 6:6). மாறாக, அவரைக்
குறித்து அவ்வளவாகக் கேள்விப்படாத புறவினத்து மக்கள் அவர்மீது
ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இதனால்தான் இயேசு
நூற்றுவத் தலைவரின் நம்பிக்கையை வியந்து பாராட்டுகின்றார்.
எல்லாருக்கும் நலமளிக்கும் இயேசு
ஆண்டவர் இயேசு நூற்றுவத் தலைவரின் பையனுக்கு நலமளித்த இந்த நிகழ்வு,
நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில்,
இயேசு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல அல்லது யூதர்களுக்கு
மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் நலமளிக்கின்றார் என்பதாகும்.
நூற்றுவத் தலைவர் ஒரு புறவினத்தார் என்பதற்காக அவருடைய பையனுக்கு
இயேசு நலமளிக்காமல் இருந்துவிடவில்லை. மாறாக, அவர்கொண்டிருந்த
நம்பிக்கையை மட்டும் பார்த்து அவருடைய பையனுக்கு நலமளிக்கின்றார்.
அப்படியானால், ஒருவர் அவர் சார்ந்த குலத்தினால், இனத்தினால் மட்டும்
கடவுளுக்கு ஏற்புடையவராக முடியாது; கடவுள்மீது கொள்ளும் நம்பிக்கையினால்
மட்டுமே, ஏற்புடையவராக முடியும். இதைத்தான் புனித பவுல் நம்பிக்கையினால்
ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்" (உரோ 3: 28) என்று
கூறுகின்றார்.
ஆகையால், நாம் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா
என்று சிந்தித்து பார்த்து, ஒருவேளை நம்மிடம் நம்பிக்கை இல்லையென்றால்,
அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
"நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்"
(எபி 10: 38) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால்
நாம் எல்லார்மீதும் இரங்கும் கடவுளிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|