Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   31  டிசெம்பர் 2018  
                                            கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7ஆம் நாள்
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
 நீங்கள் அனைவரும் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-21

குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவே என அறிகிறோம்.

இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.

நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 96: 1-2. 11-12. 13 (பல்லவி: 11a)
=================================================================================
 பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 14,12b

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 வாக்கு மனிதர் ஆனார்.

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.

அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

யோவான் அவரைக் குறித்து, "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்" என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 வார்த்தை மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார்

சாது வாஸ்வானி நமது பாராத நாட்டிலே தோன்றிய மிகப்பெரிய சாதுக்களில் ஒருவர். அவர் தன்னுடைய ஆன்மிகச் சொற்பொழிவுக்குப் பேர் போனவர்.

ஒருமுறை அவருடைய ஆசிரமத்தில் வைத்து, இளையோருக்கான ஆன்மீக வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வகுப்பு விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், கூட்டத்திலிருந்து திடிரென ஓர் இளைஞன் எழுந்து நின்றான். அவன் சாது வாஸ்வானியிடம், கடவுள் இங்கு இருக்கிறார், அங்கு இருக்கிறார் என்று சொல்கிறீர்களே, என்னைப் பொறுத்தளவில் கடவுள் எங்கும் இல்லை"என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த எழுதுபலகையில் "GOD IS NO WHERE"என்று எழுதினான்.

இதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த சாது, இளைஞன் எழுதியதிலே ஒரே ஒரு திருத்தம் மட்டும் செய்தார். அதாவது 'GOD IS NO WHERE' என்று இருந்ததை 'GOD IS NOW HERE' என எழுதிவைத்தார். பின்னர் அவர் அந்த இளைஞனைப் பார்த்துச் சொன்னார், "வாழ்கையில் துன்பங்களும், சோதனைகளும் வரும்போது கடவுள் எங்கேயும் இல்லை என்றுதான் சொல்லத்தான் தோன்றும். ஆனால் உண்மையில் கடவுள் நம்மோடுதான் இருக்கிறார். நாம்தான் அவருடைய பிரசன்னத்தைப் புரிந்துகொள்வதில்லை"என்று அவனுக்கு விளக்கம் அளித்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் நற்செய்தியில் வரும் தொடக்கப்பாடலைப் படிக்கக் கேட்கின்றோம். இப்பாடலின் மையப்பகுதியாக இருப்பது 'வார்த்தை மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார்' என்ற இறைவார்த்தைதான். ஆம் கடவுளாக, கடவுளோடு இருந்த வார்த்தையாகிய இயேசு மனிதராகப் பிறக்கிறார். நம்முடன் குடிகொள்கிறார். ஆனால் கடவுள் மனிதரைத் தேடிவரும்போது நாம் அவரை கண்டுகொள்ளாமல், புறக்கணிப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய ஒரு காரியம்.

ஆதலால் கடவுளே மனிதராகப் பிறந்திருக்கும் இந்த கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நம்மைத் தேடிவரும் கடவுளை - இறைமகனை - உணர்ந்துகொள்வதுதான் நமக்கு தரப்படும் முதலாவது அழைப்பாக இருக்கிறது.

அடுத்ததாக தேடிவரும் கடவுளை கண்டு உணர்வதோடு மட்டுமல்லாமல், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழவேண்டும். நற்செய்தியிலே படிக்கின்றோம், "அவரிடம் நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் கடவுள் தம் பிள்ளைகள் ஆகும் பேற்றினைத் தருகிறார்"என்று. ஆக, நாம் இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதே இக்கிறிஸ்து பிறப்புக் காலத்தின் நாம் செய்யக்கூடிய இரண்டாவது காரியமாக இருக்கிறது.

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் 10:9ல் கூறுவார், "இயேசுவே ஆண்டவர் என்று வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" என்று. நாம் இறைவனிடத்திலே ஆழமான நம்பிக்கை வைத்து வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆனால் பல நேரங்களில் நமது வாழ்க்கை முன்னுக்குப் பின் முரணாக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இறைவனை வழிபடக்கூடிய நாம்தான் பணமும், பொருளும், புகழும் நமக்கு இன்பம் தரக்கூடியது என்று அவற்றுக்குப் பின்னால் ஓடுகிறோம். நீதித்தலைவர்கள் புத்தகம் 2:7 ல் வாசிக்கின்றோம், "யோசுவாவின் காலத்திலும் யோசுவாவுக்குப் பின்னரும் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தனர். அதனால் கடவுள் அளித்த அருளைக் கண்டனர்"என்று. ஆம், கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவர் காட்டும் பாதையில் நடக்கும்போது நமக்கு என்றும் ஆசிர்வாதம்தான். இதற்கு இஸ்ரயேல் மக்கள் மிகப்பெரிய சாட்சி.

ஆதலால் இந்த கிறிஸ்து பிறப்புக் காலத்தில் நம்மைத் தேடி வரும் கடவுளை உணர்வோம். அதோடு மட்டுமல்லாமல், அவரையே இறைவன் என முழுமையாக நம்பி, அவர் காட்டும் வழியில் நடப்போம். இறையருள் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 கடவுளை உணராத மக்களினம் நாம்

இறையூர் என்றதொரு கிறிஸ்தவக் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் அமுதா என்ற பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவள் அனுதினமும் கோவிலுக்கு வருவாள். அனுதினமும் அதிகநேரம் கோவிலில் இருப்பாள். ஒரு நாள் அவள் கடவுளிடம் "கடவுளே! எங்கள் வீட்டுக்கு உங்களால் வரமுடியுமா?"என்று கேட்க, கடவுள் அதற்கு, "எப்போது வரட்டும்" என்று கேட்டார். அவள், 'கிறிஸ்மஸ் அன்று வாருங்கள்" என்று சொல்ல, கடவுளும் அதற்கு ஒத்துக்கொண்டார்.

அமுதா வீட்டுக்குச்சென்று அக்கம் பக்கத்தாரிடம் எல்லாம் "கடவுள் என் வீட்டுக்கு வரப்போகிறார், வரப்போகிறார்" என்று பெருமையடித்து, பல ஆயத்தங்களை செய்தாள். வீட்டை ஒழுங்குசெய்து வர்ணம் பூசி அலங்கரித்தாள், புதிய நற்காலிகளை வாங்கி போட்டாள், வண்ண விளக்குகளை தொங்கவிட்டாள். கிறிஸ்மஸ் தினமும் வந்தது. காலையிலே எழுந்து சமயலைக் கவனித்தாள். ஆடம்பரமாக பலவகை உணவுகளையும் சமைத்தாள். நேரம் நண்பகல் நெருங்கி வரவே சமைத்தவற்றை அழகாக மேசைக்கு முன் படைத்தாள். வானொலியில் பாட்டை இசைக்க விட்டு, வீட்டு வாசலில் வந்து அமர்ந்தாள். கடவுளை வரவேற்க ஆயத்தமாக இருந்தாள்.

நண்பகல் 12.00 மணி. "கடவுளை இன்னும் காணவில்லையே. சரி இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்" என்று இருந்தாள். அப்போது கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு 'கடவுள் வந்து விட்டார்" என்று மகிழ்வோடு கதவைத் திறந்தாள். ஆனால் அங்கே ஒரு வயோதிகர் கையில் தட்டுடன் நின்றுகொண்டிருந்தார். "இன்று என்னிடம் ஒன்றுமில்லை. கடவுள் என் வீட்டுக்கு வருகிறார். நீ போய் நாளை வா" என்றுசொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பவும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இப்போது வந்தது கடவுளாகத்தான் இருக்கும்? என்று அவள் கதவைத் திறந்து பார்த்தபோது அங்கே வயதான பெண்மணி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் அமுதாவிடம், "சமைப்பதற்கு ஒன்றுமில்லை. ஏதாவது கொடும்மா" என்று கேட்க அமுதாவுக்கு எரிச்சல் வந்தது. "உனக்கு தெரியாதா? இன்று என் வீட்டுக்கு கடவுள் வருகிறார்" என்று சத்தமாய் கதவை அடைத்தாள்.

நேரம் செல்லச் செல்ல கவலை ஏற்பட்டது. 'மணி இரண்டாகிவிட்டது. அவரச அவசரமாக செய்த சமையலும் ஆறிப் போய்விட்டது" என்று முனங்கினாள். அப்போது திரும்பவும், கதவு தட்டும் சத்தம் 'நேரம் போனாலும் கடவுள் சொன்னபடி வந்து விட்டாரே" என்று புன்முறுவலுடன் 'வாங்க கடவுளே" என்று கதவைத் திறந்தாள். ஏமாற்றம், அங்கு நின்றது குப்பை அள்ளிக்கொண்டுபோகும் வயதானவர். 'பசிக்குதம்மா எதாவது கொடும்மா" என்றார் அவர். அமுதாவுக்கு கோபம் வந்தது 'உனக்கு நேரம் காலம் தெரியாதா?, கடவுள் வரப்போகிறார் சீக்கிரம் போய்விடு நீ இருக்கிற இலட்சனத்தில் உனக்கு சோறுவேறு போடணுமா? போ.. போ.." என்று அவரை விரட்டினாள் .திரும்பவும் கதவு மூடப்பட்டது.

நேரம் 3.00, 4.00 மணி, ஏன் இரவு கூட ஆகிவிட்டது. சமைத்த உணவுகள் அப்படியே மேசை மேல் காட்சி தந்தன. கடவுள் வருவார் என்று காத்திருந்த அமுதா அப்படியே தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் அதிகாலை செபம் செய்ய ஆயத்தமானாள். முதலில் கடவுளிடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் அதுக்குப் பிறகுதான் செபம் என்று "ஏன் கடவுளே! நீங்க வருவீங்க என்று ஆவலோடு காத்திருத்தேன். 'ஏன் வரவில்லை? சமைத்தது எல்லாம் வீணாகிப் போனதே"என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள். அதற்குக் கடவுள் அவளிடம், 'நான்தான் உன் வீட்டிற்கு 3 தடவை வந்தேனே?, நான் பசியோடு வந்தேன். நீ எனக்கு உணவு தரவில்லை. என்னை அவமதித்து துரத்தினாய்" என்றார். அதற்கு அமுதா, "எப்ப வந்தீங்க கடவுளே நானா துரத்தினேன் என்று கேட்டாள்.

கடவுள் அவளிடம், 'நான் வயதான மனிதனாக, அடுத்த வீட்டு அம்மாவாக, குப்பையெடுக்கும் மனிதனாக பசியோடு வந்தேன்!, நீதான் என்னை கண்டுக் கொள்ளவில்லை" என்றார். அமுதா வார்த்தையின்றி மௌனமானாள்.

இந்தக் கதையைப் படிக்கும்போது, "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். ஆனால் அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற இறைவார்த்தைதான் கண்முன்னால் வந்துபோகிறது. ஆம், நாம் கடவுளைக் கண்டுகொள்ளாதவர்களாக, புறக்கணிப்பவர்களாகவே இருக்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில் வார்த்தையான கடவுள் - இந்த உலகத்திற்கு வாழ்வளிக்கும் கடவுள் - மனுவுருவெடுத்து நம் மத்தியில் குடிகொண்டார் என்று படிக்கின்றோம். ஆனால் நாம் அவரை ஏற்றுக்கொள்ளாதது வேதனையான காரியம். நற்செய்தியில் யோவான் தொடர்ந்து கூறுவார், "அவரிடம் நம்பிக்கைகொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமை அளித்தார்"என்று. எனவே நாம் ஆண்டவர் இயேசுவின் மீது முழுமையான நம்பிக்கை கொள்வோம். அவரையே இறைவன் எனவும், மெசியா எனவும் ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================

"அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது

கிறிஸ்டினா தெய்ஸ். அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த இந்த பெண்மணிக்கு ட்ரிஸ்டின் (2), பிராண்டன் (4) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு.

2016 ஆம் ஆண்டில் ஒருநாள், இவர் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் தோழியுடன் அட்லாண்டிக் பெருகடலில் உள்ள, சிங்கர் தீவில் தன்னுடைய நேரத்தைச் செலவழிக்கப் போனார். அந்தத் தீவின் கடற்கரைப் பகுதியானது தடுப்புச் சுவர் இல்லாத, பாதுகாப்புக் குறைவான பகுதி. எனவே அவரும் அவருடைய பிள்ளைகளும் அவரோடு வந்திருந்த அவருடைய தோழியும் கடற்கரைக்குக் கொஞ்சம் தள்ளியே அமர்ந்து பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர்.

அந்நேரத்தில், கடலில் இரண்டு சிறுவர்கள் மிதந்து கொண்டிருப்பதையும் அவர்களுடைய தலைகள் மட்டுமே தெரிவதையும் கண்டு கிறிஸ்டினா தெம்ஸ் அதிர்ந்துபோனார். ஒருநிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அவர், வந்தது வரட்டும் என்று தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தோழியையும் கடற்கரையிலே விட்டுவிட்டு, கடலுள்ளுள் ஓடி, மிதந்துகொண்டு இருந்த அந்த இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றி கடற்கரைக்குக் கொண்டுவந்தார்.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கிறிஸ்டினாவுக்கு நீச்சலே தெரியாது. அப்படி இருந்தாலும் தன்னுடைய வாழ்வை/ உயிரை ஒரு பொருட்டாகக் கூடக் கருதாமல், உயிரைப் பணயம் வைத்து, அந்த இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றினார். கிறிஸ்டினா செய்த இந்த அரும் செயலைப் பாராட்ட அமெரிக்காவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கமானது அவருக்கு விருது வழங்கி கெளரவித்தது.

எல்லாரிடத்திலும் இருப்பது போன்றே கிறிஸ்டினா தெம்ஸிடமும் வாழ்வு இருந்தது. ஆனால், அந்த வாழ்வை அவர் தனக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவில்லை, மற்றவர் வாழ்வுபெறவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தினார். அதனால்தான் அவர் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகமானது, யோவான் நற்செய்தியினுடைய முதல் அதிகாரம், முதல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் வருகின்ற ஒரு சொற்றொடர்தான், "அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது"என்பதாகும். இதைக் குறித்து நாம் இன்றைய நாளில் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

வாக்கு என்னும் இயேசு தொடக்கத்திலே இருந்தார், அவர் கடவுளோடு கடவுளாகவும் இருந்தார். அப்படிப்பட்டவர் வானத்திலே உறைந்துகொண்டிருக்கவில்லை. மாறாக மறுவுரு எடுத்து நம்மைப் போன்று ஆனார். அது மட்டுமல்லாமல் வாழ்வை, அதுவும் நிறைவாழ்வை நமக்குக் கொடையாகத் தந்தார். இப்படி நமக்கு வாழ்வைத் தந்த இயேசுவைப் போன்று, நாம் மற்றவர்களுக்கு வாழ்வைத் தருகின்றோமா? என்பதுதான் நாம் இங்கே சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஆண்டின் நிறைவுநாளான இன்று, நம்முடைய வாழ்வு, இயேசுவின் வாழ்வைப் போன்று பலருக்கு ஒளி தந்திருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஏனென்று சொன்னால், நம்மில் பலர், தானுண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று சுயநலத்தோடு ஒவ்வொரு நாளையும், ஏன் ஒவ்வொரு ஆண்டையும் வீணாய்க் கழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. இத்தகைய சூழலில் நம்முடைய வாழ்வை ஆய்வுக்குட்படுத்தி, அதை சீர்தூக்கிப் பார்ப்பது மிகவும் நல்லது.

அன்னை தெரசா ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "இந்த உலகம் ஒருவாடகை வீடு. நம்முடைய நற்செயல்கள்தான், நாம் இந்த உலகத்திற்குச் செலுத்தும் வாடகையாகும்"என்று. ஆமாம், வாடகை வீட்டில் வசித்தோம் என்றால், வீட்டின் உரிமையாளருக்கு ஒவ்வொரு மாதமும் வாடகைப் பணம் கொடுக்கவேண்டும். அப்படியில்லை என்றால், வீட்டின் உரிமையாளர் நம்மை வீட்டைவிட்டே துரத்திவிடுவார். அதுபோன்றுதான், இந்த உலகத்தில் நாம் வாழ்கின்றோம் என்றால், இங்கே வாழ்வதற்கான வாடகையாக நற்செயல்களைச் செய்யவேண்டும். அப்படியில்லை என்றால், நாம் ஆண்டவரிடம் நிச்சயம் கணக்குக் கொடுத்தாகவேண்டும். ஆகையால், நம்முடைய நம்முடைய வாழ்வு, இயேசுவின் வாழ்வைப் போன்று மனிதருக்கு ஒளிதரக்கூடியதாய் இருக்கவேண்டும் என்றால், நற்செயல் செய்து வாழவேண்டும்.

வாழ்வின் ஊற்றாகிய, வாழ்வளிக்கும் வாக்காகிய இயேசு கடவுளோடே இருந்துவிட வில்லை. அவர் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து மக்களுக்கு வாழ்வினைத் தந்தார். நாமும், கவுரவம், அந்தஸ்து பார்க்காமல், நம்முடைய நிலையிலிருந்து இறங்கி வந்து, இந்த உலகிற்கு நம்முடைய நற்செயல்களால், நற்சிந்தனைகளால் வாழ்வு கொடுப்போம். புதிதாக பிறக்கக்கூடிய ஆண்டினை அர்த்தமுள்ள ஆண்டாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
(யோவா 1:1-18)

நிறைவிலிருந்து

இன்று 2018ஆம் ஆண்டின் இறுதிநாள்.

'இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்' - என்று இன்றைய வாசகத்தில் மொழிகிறார் நற்செய்தியாளர் யோவான்.

2018ல் ஆண்டவரின் நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.

இந்த ஆண்டின் இறுதியில் நாம் உயிரோடு இருப்பதே அவருடைய முதல் அருள். நாம் இந்த ஆண்டில் தடம் மாறிய, தடுமாறிய பொழுதுகளிலும் அவருடைய அருள் நம்மிடம் இருந்திருக்கின்றது. இந்த ஆண்டு நமக்கு புதிய உறவுகளைக் கொடுத்திருக்கலாம். அல்லது நம் உறவுகளை நம்மிடமிருந்து எடுத்திருக்கலாம். எல்லாம் அவருடைய அருள்தான்.

இந்த ஆண்டு நம் உடல்நலம், வேலை, நண்பர்கள் என நம் வாழ்க்கை பல மேடு பள்ளங்களைத் தாண்டியிருக்கலாம். அல்லது தாண்ட முடியாமல் மோதி நிற்கலாம்.

வாழ்வின் நிகழ்வுகள் நம் கைகளில் இல்லை என்பதே நான் அதிகமாக நம்பும் ஒன்று.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் என் வாக்குறுதியாக, 'உம் சொற்படியே ஆகட்டும்' என்ற மரியாளின் வார்த்தைகளை எடுத்திருந்தேன். ஆனால், இதை வாழ்வது மிகவும் கடினமாக இருந்தது. 'என் சொற்படித்தான் நடக்க வேண்டும்' என்று நானே திட்டமிட்டு ஏக்கமுற்றேன். ஏமாந்து போனேன். 'என் சொல்லுக்கும்' 'உன் சொல்லுக்கும்' என்ற இரண்டு க்ரீஸ்களுக்குள் ஓடி கிரிக்கெட் ரன் எடுப்பதுபோல வாழ்க்கை நகர்ந்தது.

இன்று நன்றியோடு இறைவன் திருமுன் நிற்போம்.

'இதோ, அனைத்தையும் புதியனவாக்குகிறேன்' (திவெ 21:5) என்ற இறைவன் நம் முன் கைகளை விரித்து நிற்கிறார். அவரிடம் நம் கைகளை விரித்துக் கொடுப்போம்.

ஏனெனில்,

'காலங்கள் அவருடையன. யுகங்களும் அவருடையன.'

'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்கமுதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது. எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும்போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிட சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை.' (சபை உரையாளர் 3:11)


Rev. Fr. Yesu Karunanidhi

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!