Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   24  டிசெம்பர் 2018  
                                                             கிறிஸ்து பிறப்புக் காலம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5,8b-12,16

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, "பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது"என்று கூறினார்.

அதற்கு நாத்தான், "நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்"என்று அரசரிடம் சொன்னார்.

அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: "நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன்.

மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப் போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில் கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  89: 1-2. 3-4. 26, 28 (பல்லவி: 1a)
=================================================================================
  பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. பல்லவி

3 நீர் உரைத்தது: "நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.' பல்லவி

26 'நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப் படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79

அக்காலத்தில் திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 "ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்"

பஞ்சாப் மாநிலத்தில் நற்செய்திப் பணியைச் செய்துவந்த சாது சுந்தர் சிங் சொல்லகூடிய கதை இது. பண்ணையார் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்களும் நூற்றுக்கணக்கில் ஆடுகளும் இருந்தன. எல்லாவற்றையும் தன்னுடைய பணியாளர்களைக் கொண்டே மேலாண்மை செய்து வந்தார்.

இதற்கிடையில் அவருடைய ஆடுகளை மேய்த்துவந்த மேய்ப்பர்கள், ஒவ்வொருநாளும் ஓரிரு ஆடுகளை வழியில் தொலைத்துக் கொண்டே வந்தனர். இது பண்ணையாருக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. ஏனென்றால், அவர் அந்த ஆடுகளை மிகவும் அன்பு செய்தார். "தொலைந்து போன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரமுடியுமா?" என்று அவர் அவர்களைக் கேட்டுப் பார்த்தார். அதற்கு அவர்களோ, "இருட்டிய பிறகு ஆடுகளைத் தேடிப்போனால், கொடிய விலங்குகள் எங்களைத் தாக்கி, நாங்கள் உயிரிழக்கக் கூடும்" என்று அவர்கள் போக மறுத்தார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று அவர் மிகத் தீவிரமாக யோசித்தார்.

தொலைந்து போன ஆடுகளை, தேடிக் கண்டுபிடித்து வரச் சொன்னால் இவர்கள் போக மறுக்கிறார்கள். ஆடுகளுக்கும் நம்மை அடையாளம் தெரியாது. அதனால் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு ஆடுகளுக்குள் நாம் நடந்துபோனால் என்ன? என்று யோசித்தார். அது அவருக்கு சரியெனப் படவே, மறுநாளிலிருந்து கூலிக்கு மேய்க்கும் மேய்ப்பர்களுக்குப் பதிலாக, அவரே ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஓர் ஆட்டைப் போன்று அவர்களை வழிநடத்திச் சென்றார். ஆடுகளுக்கு எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. அவையோ அவரை அப்படியே பின்தொடர்ந்தன. அவர் ஆடுகளை நல்ல மேய்ச்சல் நிலங்களுக்குக் கொண்டுசென்று அவற்றை மேயவிட்டார். மாலையில் அவற்றைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தார். இதனால் எந்தவொரு ஆடும் வழிதவறியோ, தொலைந்தோ போகவில்லை.

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு சாது சுந்தர் சிங் சொல்வார் "எப்படி தொலைந்து போன ஆடுகளை மீட்பதற்காக அந்தப் பண்ணையார் ஆடுகளைப் போன்று மாறினாரோ, அது போன்று ஆண்டவர் இயேசுவும் மனிதர்களாகிய நம்மை மீட்பதர்காக மனித உரு எடுத்து நம்மைத் தேடிவந்தார்".

நற்செய்தி வாசகத்தில் செக்கரியா, ஆண்டவராகிய கடவுள் மக்களைத் தேடிவந்து மீட்டதற்காக அவரைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியாவோ ஆண்டவருடைய தூதர் அவரிடத்தில் சொன்ன செய்தியை நம்ப மறுத்ததால், பேச முடியாமல் பத்து மாதங்கள் கிடக்கின்றார். இப்படிப்பட்ட சூழலில், அவருடைய மனைவியான எலிசபெத் கருவுற்று ஓர் ஆண்மகனை/ யோவனை பெற்றெடுத்ததும் அவர் முன்புபோல் பேசுவதற்கான வல்லமையைப் பெறுகின்றார். அப்போதுதான் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்த் தொடங்குகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எல்லையற்ற விதமாக அன்பு செய்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்தவர்களை விடுவித்துக் கொண்டு வந்து, பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தில் குடியமர்த்தினார். அவர்களை வழிநடத்துவதற்காக அவர்களிடத்தில் நீதித்தலைவர்களையும் அரசர்களையும் அனுப்பிவைத்தார். இவற்றையெல்லாம் செய்தபின்பும் கூட, அவர்கள் அவரது அன்பைப் புறக்கணித்து வேற்று தெய்வத்தை வழிபட்டபோதும் அதனால் அவர்கள் நாடு கடத்தப்பட்டபோதும் அவர்களைத் தேடிமீட்பவராக இருந்தார். இவற்றுக்கெல்லாம் உச்சமாக தன்னுடைய ஒரே மகனை அனுப்பி அவர்களை தேடி மீட்பவராக இருந்தார். இதனை நினைவுகூர்ந்துதான் செக்கரியா, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்" என்று புகழ்ந்து பாடுகின்றார்.

செக்கரியாவின் புகழ்ச்சிப் பாடலில் மேலும் ஒருசில செய்திகள் உள்ளடங்கி இருக்கின்றன. அதில் ஒன்று, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார் என்பதாகும். அவர் ஆபிரகாமிடத்தில் மெசியாவைப் பற்றி ஆணையிட்டார், அவர் ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல், அதனை நிறைவேற்றவும் செய்தார்.

நிறைவாக, செக்கரியா ஆண்டவராகிய கடவுள் தன் மகனின் வருகைக்காக, மக்களைத் தயார் செய்யும் பொறுப்பினை யோவானிடம் கொடுத்ததற்காக இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியா, தன்னுடைய மகனுடைய பணியென்ன, அவன் எதற்காக தங்களுடைய வயது முதிர்ந்த காலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்டான் என்பதை நன்றாகவே அறிந்திருந்தார். அதற்காகவும் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்.

இவ்வாறு செக்கரியா, ஆண்டவரின் திட்டத்தை உணர்ந்தவராய், அவரை நெஞ்சாரப் போற்றிப் புகழ்கின்றார். நம்முடைய வாழ்வில் நாம் இறைவனின் திட்டத்தையும் அவர் நம்மைத் தேடி வருவதையும் உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அது நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான பணி.

ஆகவே, இறைவன் நம்மைத் தேடிவருவதை உணர்வோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 தேடி வரும் தெய்வம் இயேசு

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு சாலை வழியாக காலார நடந்துபோய்கொண்டிருந்தார். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் கூட. அப்போது பெரியவர் ஒருவர் புல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டு, மெய்மறந்து சாமி பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.

உடனே பேராசிரியர், பெரியவர் அருகே சென்று, "ஐயா உங்களுக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் உண்டா?" என்று கேட்டார். அதற்கு பெரியவர், "ஆம்! ஐயா. எனக்கு கடவுள் மீது அதிகமான நம்பிக்கை உண்டு, அதிலென்ன சந்தேகம்" என்று கேட்டார்.

"அப்படியானால் கடவுள் இருக்கிறார் என்பதை இப்போது உங்களால் நிரூபிக்க முடியுமா?" என்று பேராசிரியர் கேட்க, பெரியவர் அதற்கு, "ஏன் முடியாது. இதோ பாருங்கள் நான் வளர்க்கும் இந்த மாட்டின் நிறம் கருப்பு.. இது பச்சைப் புல்லை உண்கிறது. ஆனால் அது தரக்கூடிய பாலின் நிறமோ வெள்ளை. பாலை உறை ஊற்றிக் கடைந்தால், மஞ்சள் நிறத்தில் வெண்ணை கிடைக்கிறது. இதுவே போதும் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிப்பதற்கு" என்று சொன்னதும் பேராசிரியர் வாயடைத்து நின்றார்.

கடவுள் நம்மோடு இருக்கிறார், நாம் தான் உணர்வதில்லை என்பதை இக்கதையானது அருமையாக எடுத்துக் கூறுகிறது.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் கடவுள் நம்மைத் தேடி வருகிறார் என்ற உண்மையை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. நற்செய்தி வாசகத்தில் செக்கரியா இறைவன் தனக்கு முதிர்ந்த வயதில் குழந்தை தந்ததை எண்ணி கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். அவர் இறைவனைப் புகழ்ந்து பாடும் பாடலில் மூன்று முக்கியமான உண்மைகள் அடங்கியிருக்கின்றன. எனவே அவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலவதாக இறைவன் நம்மைத் தேடி வருபவராக இருக்கிறார். கடவுள் என்று சொன்னால் வானத்தில் எங்கோ இருப்பவர் என்றில்லாமல், நம்மோடு உடன் இருப்பவராக இருக்கிறார். "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்" என்று செக்கரியா அதைத் தான் பாடுகின்றார். சாமுவேல் இரண்டாம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட நாத்தான் இறைவாக்கினர், "ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்று தாவீதை உறுதிப்படுத்துகிறார்.

ஆகவே கடவுள் நம்மைத் தேடிவந்து, என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டால் நாம் எதற்கும் கலங்கத் தேவையில்லை.

இரண்டாவதாக இறைவன் வாக்குறிதியை நிறைவேற்றுபவராக இருக்கிறார். தாவீதின் மரபில் மீட்பர் பிறப்பார் என்று மூதாதையருக்குச் சொல்லப்பட்ட இறைவாக்கானது இயேசுவில் நிறைவேறுகிறது. அதை செக்கரியா தன்னுடைய பாடலிலே குறிப்பிடுகிறார். ஆம், கடவுள் வாக்குறுதி மாறாதவர். உரோமையருக்கு எழுதப்பட்ட திருமடல் 11:29 ல் வாசிக்கின்றோம், "கடவுள் தான் விடுத்த அழைப்பையும், கொடுத்த அருட்கொடைகளையும் திரும்பக் பெற்றுக்கொள்வதில்லை. மனிதர்தான் நேரத்து ஒரு பேச்சுப் பேசுவார்கள், கடவுள் அப்படியல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மூன்றாவதாக கடவுள் மக்களை மீட்பவராக இருக்கிறார். "நம் பகைவரிடமிருந்தும், நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்" என்று செக்கரியா தன்னுடைய பாடலிலே நினைவுகூர்ந்து பாடுகிறார். உண்மையிலே கடவுள் நம்மை பகைவர் அனைவரின் பிடியிலிருந்து மட்டுமல்லாமல், பாவத்திலிருந்தும் நம்மை மீட்பவராக இருக்கிறார் (மத் 1:20).

ஆதலால் நம்மைத் தேடிவந்து, நம்மை மீட்கும், வாக்குறுதி மாறாத கடவுளை முழுமையாய் நம்புவோம். அவர் வழியில் நடந்து, அவருக்கு உகந்த மக்களாவோம். இறையருள் நிரம்பப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
"ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்"

பஞ்சாப் மாநிலத்தில் நற்செய்திப் பணியைச் செய்துவந்த சாது சுந்தர் சிங் சொல்லகூடிய கதை இது. பண்ணையார் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்களும் நூற்றுக்கணக்கில் ஆடுகளும் இருந்தன. எல்லாவற்றையும் தன்னுடைய பணியாளர்களைக் கொண்டே மேலாண்மை செய்து வந்தார்.

இதற்கிடையில் அவருடைய ஆடுகளை மேய்த்துவந்த மேய்ப்பர்கள், ஒவ்வொருநாளும் ஓரிரு ஆடுகளை வழியில் தொலைத்துக் கொண்டே வந்தனர். இது பண்ணையாருக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. ஏனென்றால், அவர் அந்த ஆடுகளை மிகவும் அன்பு செய்தார். "தொலைந்து போன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரமுடியுமா?" என்று அவர் அவர்களைக் கேட்டுப் பார்த்தார். அதற்கு அவர்களோ, "இருட்டிய பிறகு ஆடுகளைத் தேடிப்போனால், கொடிய விலங்குகள் எங்களைத் தாக்கி, நாங்கள் உயிரிழக்கக் கூடும்" என்று அவர்கள் போக மறுத்தார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று அவர் மிகத் தீவிரமாக யோசித்தார்.

தொலைந்து போன ஆடுகளை, தேடிக் கண்டுபிடித்து வரச் சொன்னால் இவர்கள் போக மறுக்கிறார்கள். ஆடுகளுக்கும் நம்மை அடையாளம் தெரியாது. அதனால் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு ஆடுகளுக்குள் நாம் நடந்துபோனால் என்ன? என்று யோசித்தார். அது அவருக்கு சரியெனப் படவே, மறுநாளிலிருந்து கூலிக்கு மேய்க்கும் மேய்ப்பர்களுக்குப் பதிலாக, அவரே ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஓர் ஆட்டைப் போன்று அவர்களை வழிநடத்திச் சென்றார். ஆடுகளுக்கு எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. அவையோ அவரை அப்படியே பின்தொடர்ந்தன. அவர் ஆடுகளை நல்ல மேய்ச்சல் நிலங்களுக்குக் கொண்டுசென்று அவற்றை மேயவிட்டார். மாலையில் அவற்றைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தார். இதனால் எந்தவொரு ஆடும் வழிதவறியோ, தொலைந்தோ போகவில்லை.

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு சாது சுந்தர் சிங் சொல்வார் "எப்படி தொலைந்து போன ஆடுகளை மீட்பதற்காக அந்தப் பண்ணையார் ஆடுகளைப் போன்று மாறினாரோ, அது போன்று ஆண்டவர் இயேசுவும் மனிதர்களாகிய நம்மை மீட்பதர்காக மனித உரு எடுத்து நம்மைத் தேடிவந்தார்".

நற்செய்தி வாசகத்தில் செக்கரியா, ஆண்டவராகிய கடவுள் மக்களைத் தேடிவந்து மீட்டதற்காக அவரைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியாவோ ஆண்டவருடைய தூதர் அவரிடத்தில் சொன்ன செய்தியை நம்ப மறுத்ததால், பேச முடியாமல் பத்து மாதங்கள் கிடக்கின்றார். இப்படிப்பட்ட சூழலில், அவருடைய மனைவியான எலிசபெத் கருவுற்று ஓர் ஆண்மகனை/ யோவனை பெற்றெடுத்ததும் அவர் முன்புபோல் பேசுவதற்கான வல்லமையைப் பெறுகின்றார். அப்போதுதான் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்த் தொடங்குகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எல்லையற்ற விதமாக அன்பு செய்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்தவர்களை விடுவித்துக் கொண்டு வந்து, பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தில் குடியமர்த்தினார். அவர்களை வழிநடத்துவதற்காக அவர்களிடத்தில் நீதித்தலைவர்களையும் அரசர்களையும் அனுப்பிவைத்தார். இவற்றையெல்லாம் செய்தபின்பும் கூட, அவர்கள் அவரது அன்பைப் புறக்கணித்து வேற்று தெய்வத்தை வழிபட்டபோதும் அதனால் அவர்கள் நாடு கடத்தப்பட்டபோதும் அவர்களைத் தேடிமீட்பவராக இருந்தார். இவற்றுக்கெல்லாம் உச்சமாக தன்னுடைய ஒரே மகனை அனுப்பி அவர்களை தேடி மீட்பவராக இருந்தார். இதனை நினைவுகூர்ந்துதான் செக்கரியா, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்" என்று புகழ்ந்து பாடுகின்றார்.

செக்கரியாவின் புகழ்ச்சிப் பாடலில் மேலும் ஒருசில செய்திகள் உள்ளடங்கி இருக்கின்றன. அதில் ஒன்று, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார் என்பதாகும். அவர் ஆபிரகாமிடத்தில் மெசியாவைப் பற்றி ஆணையிட்டார், அவர் ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல், அதனை நிறைவேற்றவும் செய்தார்.

நிறைவாக, செக்கரியா ஆண்டவராகிய கடவுள் தன் மகனின் வருகைக்காக, மக்களைத் தயார் செய்யும் பொறுப்பினை யோவானிடம் கொடுத்ததற்காக இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியா, தன்னுடைய மகனுடைய பணியென்ன, அவன் எதற்காக தங்களுடைய வயது முதிர்ந்த காலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்டான் என்பதை நன்றாகவே அறிந்திருந்தார். அதற்காகவும் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்.

இவ்வாறு செக்கரியா, ஆண்டவரின் திட்டத்தை உணர்ந்தவராய், அவரை நெஞ்சாரப் போற்றிப் புகழ்கின்றார். நம்முடைய வாழ்வில் நாம் இறைவனின் திட்டத்தையும் அவர் நம்மைத் தேடி வருவதையும் உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அது நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான பணி.

ஆகவே, இறைவன் நம்மைத் தேடிவருவதை உணர்வோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது

ரஷ்ய நாட்டு மக்களிடையே வழங்கப்பட்டு வரும் கதை இது. முற்காலத்தில் ரஷ்யாவை அலெக்சிஸ் என்ற ஒரு மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய அரண்மனையோ மிகவும் பெரியது, ஆடம்பரமானது. செல்வச் செழிப்பில் நிறைந்து இருந்தது. ஆனால் அவனுடைய அரண்மனையைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்களோ சாதாரண குடிசையில் வறுமையிலும், பஞ்சத்திலும் வாழ்ந்துவந்தார்கள். அவர்களுடைய வாழ்வோ மிகவும் பின்தங்கி இருந்தது.

இதை அறிந்த அரசன், அம்மக்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்வை மாற்ற நினைத்தான். ஆனால் அங்கு நடந்ததோ வேறு ஒன்று. ஆம், மக்கள் அரசனைப் பார்த்ததும் அவனை எப்படிக் கவனித்துகொள்ளவேண்டும், எப்படி உபசரிக்கவேண்டும் என்று நினைத்தார்களே ஒழிய, அவனை ஒரு வேலையும் செய்யவிடவில்லை. இதனால் அவன் மக்களுடைய வாழ்விலிருந்து தனிமைப்படுத்தபட்டதாய் உணர்ந்தான். எனவே அவன் எப்படிப்போனால் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள், அதன்வழியாக அவர்களுடைய வாழ்வினை மாற்றமுடியும் என்று மிகத்தீவிரமாக யோசித்தான். இறுதியாக ஒரு எளிய மருத்துவராக அம்மக்களுக்கு மத்தியிலே பணிசெய்வது என முடிவுசெய்தான்.

அதன்படி அடுத்த நாள் ஒரு பழைய. கிழிந்த ஆடையை உடுத்திக்கொண்டு சாதாராண ஒரு மருத்துவராய் மக்களுக்கு மத்தியில் இலவசமாக மருத்துவச் சேவை செய்ய ஆரம்பித்தான். மக்களால் அவன்தான் அரசன் என்று இனம்கண்டுகொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் அவனைத் தங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினான். அவன் ஊர்க்கோடியில் இருந்த ஒரு பழைய ஓட்டுக் குடிசையில் வசித்து வந்தான். இலவசமாக மருத்துவச் சேவை செய்துவந்ததால் அவனிடத்தில் உணவு வாங்கி உண்பதற்குக்கூட போதுமான பணமில்லை, மக்கள் அவ்வப்போது கொடுத்த உணவினையே உண்டு வந்தான்.

சில மாதங்கள் கழித்து மக்கள்கூட்டம் அதிகமாக அவனிடத்தில் வந்தது. அவனும் அவர்களுக்குச் சிறப்பாக மருத்துவச் சேவை செய்துவந்தான்; அவர்களுடைய இன்ப துன்பங்களில் கலந்துகொண்டான். இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவர்களிடம் இருந்த சண்டைச் சச்சரவுகளைத் தீர்த்து வைத்தான். அம்மக்களுடைய குழந்தைகளின் வாழ்வு சிறக்க அவர்களுக்குக் கல்வியறிவு புகட்டினான். அவர்களிடம் இருந்த வறுமையையும், ஏழ்மையையும் போக்கி அவர்களுடைய வாழ்வு ஏற்றம் பெறச் செய்தான்.

கதையில் வரும் அரசனைப் போன்றுதான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் நம்முடைய வாழ்வு சிறக்க கடவுள் தன்மையில் இருந்து இறங்கி, நம்மைப் போன்று வாழ்ந்து நமது வாழ்வு ஏற்றம்பெறக் காரணமாக இருந்தார்.

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் தந்தையாகிய செக்கரியாக தன்னுடைய முதிர்ந்த வயதில் கடவுள் தனக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தந்ததை நினைத்து அவரைப் போற்றிப் புகழ்கின்றார். குறிப்பாக மக்களைத் தேடிவந்து மீட்கின்ற ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்.

செக்கரியாவின் பாடல் மரியாவின் பாடலை ஒருசில இடங்களில் ஒத்திருந்தாலும் செக்கரியாவின் பாடலில் மீட்பின் வரலாறு முழுவதுமே அடங்கியிருக்கிறது. பாவத்திலும், சாவின் பிடியிலும், பகைவர்களின் பிடியிலும் வீழ்ந்துகிடந்த மக்களை மீட்பதென கடவுள் பல்வேறு இறைவாக்கினர்கள் வழியாக வாக்குறுதி தந்தார். அந்த வாக்குறுதியானது நிறைவேறியதை நினைத்து செக்கரியா கடவுளைப் போற்றிப்புகழ்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய குழந்தையாகிய யோவான் கடவுளின் திருமுன் சென்று வழியை ஆயத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவிற்கு மிக அண்மையில் இருக்கும் நாம் செய்யவேண்டியதெல்லாம் இரண்டே இரண்டு காரியங்கள்தான். முதலாவதாக ஆண்டவரின் பிறப்பிற்காக நம்மையே நாம் தயாரிக்கவேண்டும். நம்மைத் தயாரிக்கவேண்டும் என்று சொல்கிறபோது நாம் வாழும் இந்த சமூதாயத்தை, மக்களை இறைவனுக்கு உகந்தவர்களாய் மாற்றவேண்டும். அதற்கு நாம்தான் நற்செய்தியின் கருவியாய் மாறவேண்டும். திருமுழுக்கு யோவான் எப்படி ஆண்டவரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்தாரோ, அதுபோன்று நாமும் மக்களைத் தயார்செய்து, இறைவனுக்கு உகந்த வழியில் நடத்திச் செல்லவேண்டும், நாமும் அவ்வாறு நடக்கவேண்டும்.

அடுத்ததாக இறைவன் நம்மைத் தேடிவருகிறார் என்றால், நாம் அவரை ஆலயத்தில் மட்டுமல்ல அயலாரிலும், குறிப்பாக ஏழை எளியவர், வறியவரிடத்தில் இனம் கண்டுகொள்ளவேண்டும். ஏனென்றால் நம் இறைவன் எளியவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் இறைவன் (மத் 25:40).

ஆகவே நம்மைத் தேடிவரும் விடியலாகிய இயேசுவை அயலாரில் இனம்கண்டு கொள்வோம். அவரது வருகைக்காக நம்மையே தகுந்த விதத்தில் தயாரிப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதவழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!