Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   22  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம் 3ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28

அந்நாள்களில் சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.

பின் அவர் கூறியது: "என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார்.

ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்."

அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - 1 சாமு 2: 1. 4-5. 6-7. 8ab (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.

1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! பல்லவி

8யb புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.''

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 என் ஆன்மா இறைவனையே ஏற்றிப்போற்றி மகிழ்கின்றது.

மொகலாய மன்னர் ஒளரங்கசிப், மராட்டிய மன்னர் வீர சிவாஜிவை சிறைபிடித்து வைத்திருந்தான். ஆனால் சிவாஜியோ அவர்களிடமிருந்து ஒரு காட்டுப்பாதை வழியாகத் தப்பி ஓடினார். அந்நேரத்தில் ஒரு சிங்கம் அவரைத் தாக்க, அவருடைய உடலிலே பெருங்காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அந்த சிங்கத்தோடு போராடி, இறுதியில் அதனிடமிருந்து தப்பி ஓர் ஊருக்குள் ஓடினார்.

ஏற்கனவே சிவாஜிக்கு அடைக்கலம் தருவோருக்கு மரண தண்டனையும், அவரை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 1000 பொற்காசுகளும் தரப்படும் என்று மொகலாய மன்னன் அறிவிப்பு விடுத்திருந்ததால் யாருமே அவரை வீட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. விநாயகதேவ் என்ற ஒரு ஏழை அந்தணர்தான் சிவாஜியின்மீது இரக்கப்பட்டு, அவருக்குத் தங்குவதற்கு இடமும், உணவும் அளித்து வந்தார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் மன்னர் சிவாஜிக்குத் தெரிந்தது அந்த அந்தணர் வெளியே சென்று யாசித்து (பிச்சை எடுத்து) அதிலிருந்து கிடைக்ககூடிய உணவை தன்னோடு பகிர்ந்து கொள்கிறார் என்று.

ஆபத்தான நேரத்தில் தனக்கு இப்படியெல்லாம் உதவி செய்கிறாரே, இவருக்கு நன்றிக்கடனாக ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று எண்ணிய சிவாஜி, ஒரு தாளை எடுத்து, "மன்னர் சிவாஜியை நான் என்னுடைய வீட்டில்தான் பிடித்து வைத்திருக்கிறேன். படைவீரர்கள் வந்து அவரைப் பிடித்துச் செல்லலாம். இப்படிக்கு விநாயகதேவ்" என்று எழுதினார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த அந்தணர் "எதற்காக இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, மன்னர், "நான் எப்படியாவது என்னுடைய எதிரிகளிடமிருந்து தப்பித்து விடுவேன், ஆனால் எனக்கு இவ்வளவு உதவிகளைச் செய்திருக்கும் உங்களுக்கு நன்றிக்கடனாக ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விடும். ஆதலால்தான் இப்படி எழுதினேன். சிறுது நேரத்தில் எதிரி நாட்டுப்படைவீர்கள் இங்கே வருவார்கள். அவர்கள் வந்து உங்களிடம் 1000 பொற்காசுகளைத் தந்து, என்னை சிறைபிடித்துச் செல்வார்கள். நான் அவர்களிடமிருந்து நிச்சயம் தப்பித்துவிடுவேன்" என்றார்.

மன்னர் சொன்னதுபோலவே சிறிது நேரத்தில் எதிரி நாட்டுப் படைவீரர்கள் விநாயகதேவ் என்ற அந்த அந்தணரின் வீட்டுக்கு வந்தார்கள். வந்தவர்கள் அந்தணரிடம் 1000 பொற்காசுகளைக் கொடுத்துவிட்டு, சிவாஜியை கைது செய்து சென்றனர். ஆனால் அவரோ போகிற வழியில் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றார்.

நமக்கு உதவி செய்தவர்களுக்கு எப்படியாது நன்றிகடன் தீர்க்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாள் ஆண்டவர் தனக்குச் செய்த எல்லா நன்மைகளையும் நினைத்து நன்றி செலுத்துகிறாள். நாசரேத்து என்ற ஒரு சாதாரண ஊரிலே பிறந்த தன்னை கடவுளின் தாயாக மாறுமளவிற்கு அவர் உயர்த்தி இருக்கிறாரே, அதை நினைத்து மரியாள் நன்றி செலுத்துகிறாள்.

"Magnificat" என்ற மரியாவின் இந்தப் பாடலிலே அவர் கடவுள் தனக்குச் செய்த நன்மைகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களுக்கும் இறைவன் செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்துகிறார்; இறைவனை வாயாரப் போற்றிப் பாடுகிறார். மரியாவின் பாடலிலே கடவுள் இரக்கமிக்கவர்; தாழ்ந்தோரை, ஏழைகளை உயிர்த்துகிறவர்; வாக்குறுதி மாறாதவர் போன்ற கருத்துகள் வருவதையும் நாம் படிக்கின்றோம்.

ஆதலால், மரியாள் எப்படி நன்றி நிறைந்த உள்ளத்தினராக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தாரோ அதுபோன்று நாமும் இறைவனைப் போற்றிப் புகழவேண்டும். பல நேரங்களில் இறைவன் எனக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டார், நான் அவருக்கு நன்றி செலுத்த என்று நினைக்கலாம். ஆனால் அவர் இத்தனை ஆண்டுகள் நம்மைக் காத்து வருவதே மிகப்பெரிய ஆசிர்வாதம்தான். கவிஞர் பாரதியார் தன்னுடைய வாழ்வில் சந்திக்காத துன்பங்கள் இல்லை. ஆனால் அவர் "எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!" என்று இறைவனைப் போற்றுகிறார்.

எனவே நாம் இறைவன் நமக்குச் செய்து வரும் எல்லா நன்மைகளை நினைத்து மரியாளைப் போன்று நன்றி செலுத்துவோம். அவருக்கு உகந்த மக்களாக வாழ்வோம். இறையருள் பெறுவோம்.- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
மரியாவின் நன்றி கீதம்!

முன்பொரு காலத்தில் மருதன் என்றொரு ஏழை இருந்தான். அவன் பார்ப்பதற்கு மிகவும் அவலட்சணமாக இருந்தான். அவனுக்கென்று கொஞ்சம் மாடுகள் இருந்தன. அவற்றை மேய்த்து அவன் வாழ்க்கை நடத்தி வந்தான். ஒவ்வொருநாளும் அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் சென்று, அங்கே அவற்றை மேய விடுவான். அவை நன்றாக மேய்ந்துகொண்டிருக்கும்போது மரநிழலில் அமர்ந்துகொண்டு புல்லாங்குழல் இசைப்பான். இப்படியே அவனுடைய நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

ஒருநாள் அவன் இசைத்த புல்லாங்குழல் இசையில் மயங்கி, தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. அது அவனிடம், "இப்படி ஓர் இனிமையான இசையை நான் கேட்டதே இல்லை. நீ என்னை மணந்து கொள். உன் ஆசை எதுவானாலும் நான் நிறைவேற்றி வைக்கிறேன்" என்றது. உடனே அவன், "நான் அவலட்சணமாக இருக்கிறேன் என்று எல்லாரும் என்னைக் கேலி செய்கிறார்கள். அதனால் நான் பேரழகனாக மாறவேண்டும்" என்றான். அதற்கு தேவதை, "உன் விருப்பம் போலவே ஆகட்டும்" என்றது. மறுகணம் அவன் பேரழகனாக மாறி நின்றான்.

அவனுடைய தோற்றத்தைக் கண்டு அவனாலே நம்ப முடியவில்லை. பின்னர் அவன் தேவதையிடம், "என்னை அவலட்சணம் என்று இகழ்ந்தவர்கள் முன்பாகச் சென்று, இப்போது நான் யார் என்பதைக் காட்டவேண்டும். அதற்கு அனுமதி வேண்டும்" என்றான். அடுத்த நொடியில் அவனுக்கு முன்பாக அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட பொன் தேர் ஒன்று இருந்தது. "இந்தா.. இந்தத் தேரில் ஏறிச் செல். உனக்காக நான் இங்கே காத்திருக்கிறேன்" என்றது. பின்னர் ஓர் அரசனைப் போல அவன் பொன்தேரில் ஏறி அமர்ந்து, நகரத்திற்குள் நுழைந்தான்.

அங்கே இருந்தவர்கள் அவனைப் பார்த்து வியப்பு அடைந்தார்கள். அரண்மனை மாடத்தில் நின்றிருந்த அரசி தேரில் வரும் அவனைப் பார்த்தான். அவன் அழகில் மயங்கினாள். வாயிலுக்கு வந்த அவள் அவனை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள். அரசி தன்னை மணக்க விரும்புகிறாள் என்பதை அறிந்த அவள், தேவதையை மணப்பதைவிடவும் அரசியை மணப்பதே சிறந்தது என்று நினைத்தான். உடனே அவன் அரசியிடம், "அரசியே! என்னை மணந்துகொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்குத் துணையாக இருப்பேன்" என்றான். அவன் இப்படிச் சொன்ன அடுத்த நொடியே அவனுடைய தோற்றம் மாறியது. அவன் முன்பு போல் அவலட்சணம் ஆனான்.

அவனைப் பார்த்து எரிச்சல் அடைந்த அரசி, "இந்த அவலட்சணத்தை யார் அரண்மனைக்குள் விட்டது? அடித்து விரட்டுங்கள்" என்று படைவீரர்களுக்கு ஆணையிட்டாள். இதனால் ஏமாற்றத்துடன் காட்டிற்கு வந்தான் அவன். மீண்டுமாக புல்லாங்குழலை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். நீண்ட நேரம் புல்லாங்குழலை வாசித்த போதும், தேவதை அவன்முன்னால் தோன்றவே இல்லை. இதனால் அவன், நன்றி கெட்ட எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது சரிதான் என்று கதறி அழத் தொடங்கினான்.

மேலே சொல்லப்பட்ட கதையில் வரும் மருதனைப் போன்றுதான், நாமும் பலநேரங்களில் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளை எல்லாம் மறந்துவிடுபவர்களாக, நன்றி கெட்டவர்களாக இருக்கின்றோம். இத்தகைய சூழலில் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளை மறவாமல், அவரைப் போற்றிப் புகழ்கின்ற மரியாவைக் குறித்து சிந்திக்க இருக்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில் மரியா, ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார். மரியாவின் இந்த புகழ்ச்சி அல்லது நன்றிப் பாடலில், அவர் தனக்கும் தாழ்நிலையில் இருந்தோருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இறைவன் செய்த நன்மைகளை நினைத்து அவரைப் புகழ்ந்து போற்றுகின்றார்.

இறைவன், நாசரேத்து என்ற குக்கிராமத்தில் இருந்த தன்னை இந்த உலகத்தை மீட்க வந்த இயேசுவுக்குத் தாயாக உயர்த்தியதற்காக மரியா அவருக்கு நன்றி செலுத்துகின்றார். மெசியா தன்னுடைய வயிற்றில் பிறக்கவேண்டும் என்று பலர் நினைத்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்கோ இருந்த மரியாவை இறைவன் தேர்ந்தெடுத்தால், அவர் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றார், அவரை ஏற்றிப் போற்றுகின்றார்.

அடுத்ததாக இறைவன் அவருக்கு அஞ்சி நடப்போர் மீதும் தாழ்நிலையில் இருப்போர் மீதும் பட்டினியால் வாடுவோர் மீதும் இரக்கம் காட்டியதற்காக மரியா அவரைப் போற்றிப் புகழ்கின்றார். இறைவனின் இரக்கம் எல்லாருக்கும் உண்டென்டாலும் எளியவருக்கு அது சிறப்பாகக் கிடைத்திருக்கின்றது என்பதற்காக மரியா இறைவனை ஏற்றிப் போற்றுகின்றார். நிறைவாக, இஸ்ரயேல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவில் கொண்டதற்காகவும் அவர்களுக்குத் துணையாக இருந்து வருவதற்காகவும் மரியா இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார்.

இவ்வாறு மரியா தன்னுடைய உள்ளத்தில் இருந்த நன்றிப் பெருக்கை ஆண்டவரிடத்தில் எடுத்துச் சொல்கின்றார். மரியாவைப் போன்று நாம், இறைவன் நமக்குச் செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்து, அவரைப் போற்றிப் புகழ்கின்றோமா?. சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு கேள்வி. நன்றி நிறைந்த உள்ளம் ஒருபோதும் குற்றம்காணாது" என்பார் ஏபிள்யூ டோசர் (A.w.Tozer) என்ற எழுத்தாளர்.

ஆகவே, நாம் மரியாவைப் போன்று நன்றி நிறைந்த உள்ளத்தினராய், இறைவனை எந்நாளும் போற்றிப் புகழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்ற கடவுள் நம் கடவுள்

இடைக்காலத்தில் இத்தாலியில் வாழ்ந்து வந்த மிகச் சிறந்த சிந்தனையாளர் முரேடஸ் (Muretus) என்பவர். தனது மருத்துவச் செலவுகளைக்கூட எதிர்கொள்ள இயலாத ஏழை.

ஒருநாள் அவர் மயக்கமுற்று கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த ஒரு மருத்துவக் குழு அவரைத் தங்களுடைய மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, அவருடைய உடலில் மருத்துவ சோதனை முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டியது அதனாலே அக்குழு அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றது.

அந்தக் குழுவினர் முரேடசை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போகும் வழியில், அவருக்கு ஒன்றும் புரியக்கூடாது என்பதற்காக இலத்தின் மொழியிலே பேசிக்கொண்டு போனார்கள். "ஒன்றுக்கும் ஆகாத இந்த மனிதனுடைய உடலை மருத்துவ ஆய்வுகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர, வேறு ஒரு பயனும் இல்லை" என்று சொல்லி சிரித்துக்கொண்ட போனார்கள். இதைக் கேட்டு மயக்கமுற்ற நிலையில் இருந்த முரேட்ஸ் எழுந்து அமர்ந்து, "எல்லாருக்குமாக இயேசு தன்னுடைய உடலைத் தந்திருக்கும்போது யாரையும் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று சொல்லி இழிவாகப் பேசாதீர்கள்" என்று இலத்தின் மொழியிலே பேசிவிட்டு மீண்டுமாகப் படுத்துகொண்டார்.

இலத்தின் மொழி தெரியாது என்று எல்லாவற்றையும் இலத்தின் மொழியிலே பேசிக்கொண்ட மருத்துவக் குருவிற்கு முரேடசின் இத்தகைய செயல் பேரிடியாய் அமைந்தது.

தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றிருந்த அந்த மருத்துவக் குழுவிற்கு முரேட்டசின் செயல் உண்மையிலே பேரிடிதான்.

நற்செய்தி வாசகத்தில் மரியா கடவுளை நோக்கி எழுப்பிய புகழ்ச்சிப் பாடலை, நன்றிப் பாடலைக் குறித்து வாசிக்கின்றோம். மரியாவின் பாடல் எந்தளவுக்கு முக்கியமானது. அதனுள்ளே பொதிந்திருக்கும் அர்த்தங்கள் என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

மரியா பாடிய புகழ்ச்சிப் பாடல் 1 சாமுவேல் புத்தகம் 1 முதல் 10 வரை வரும் வசனங்களோடு ஒத்துப் போவதை நம்மால் உணர முடிகின்றது. இருந்தாலும் மரியாவின் பாடலில் நிறைய புரட்சிகார சிந்தனைகள், கருத்துகள் இருப்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.

விவிலிய அறிஞர்கள் மரியாவின் பாடல் மூன்றுவிதமான புரட்சிகரமான சிந்தனைகள் உள்ளடக்கி இருப்பதாகச் சொல்வார்கள். அவை என்னென்ன, அவற்றின் வழியாக நாம் அறிந்துகொள்வது என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

அறப்புரட்சி (Moral Revolution). மரியாவின் பாடலில் வரும் முதல் புரட்சிகாரமான சிந்தனை அறம் சார்ந்ததாக இருக்கின்றது. "உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை அவர் சிதறடித்து வருகின்றார்" என்ற மரியாவின் வார்த்தைகள் அதைத் தான் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இறைவனுக்கு உகந்த உள்ளம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம். தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தில் இறைவன் என்றுமே குடிகொண்டிருப்பார். தாழ்ச்சியில்லாமல், ஆணவத்தோடு இருப்போரின் உள்ளத்தில் இறைவன் ஒருபோதும் இருப்பதில்லை. அவர்கள் எப்போதும் கடவுளை விட்டு வெகுதொலைவில் இருப்பார்கள். இப்படிப்பட்ட சிந்தனைகளை உள்ளடக்கி, அறப் போராட்டத்தை, புரட்சியை முன்னெடுப்பதாக இருக்கின்றது மரியாவின் பாடல்.

சமூகப் புரட்சி (Socila Revolution). மரியாவின் பாடலில் வெளிப்படும் இரண்டாவது புரட்சிகரமாக சிந்தனை சமூகப் புரட்சி தொடர்பானதாகும். வலியோரை அரியணையிலிருந்து தூக்கி விடுகின்றார், தாழ்ந்தோரை அவர் உயர்த்துகின்றார் என்ற வார்த்தைகள் அதனை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. இந்த உலகம் வலியோரை அரியணையில் அமர்த்துகின்றது. ஆனால் ஆண்டவரோ எளியோரை, தாழ்ந்தோரை அரியணையில் அமர்த்தி, அழகு பார்க்கின்றவராக இருக்கின்றார். ஆண்டவராகிய கடவுள் கொண்டுவரும் இத்தகைய மாற்றம் இன்றைக்கு நாம் வாழும் இந்த சமூகத்திற்கு மிகவும் தேவையாக இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகின்றபோது எல்லாரும் எல்லா நலன்களையும் பெறுவது உறுதி.

பொருளாதாரப் புரட்சி (Economical Revolution). மரியாவின் பாடலில் வெளிப்படும் மூன்றாவது புரட்சிகர சிந்தனை பொருளாதாரம் தொடர்பானது. பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார், செல்வந்தரை வெறுங்கையராய் அனுப்பி விடுவார் என்ற வார்த்தைகள் ஆண்டவராகிய கடவுள் இந்த உலகத்தில் நிலவி வருகின்ற ஏழை பணக்காரன் என்ற நிலையை மாற்றிக் காட்டுவார் என்று நாம் புரிந்துகொள்ளலாம். இந்த உலகில் செல்வர் மேலும் செல்வர் ஆகின்றார்கள். ஏழைகள் மிகவும் ஏழைகளாக மாறுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலை இறைவனுக்கு ஒருபோதும் ஏற்றது இல்லை. எனவே அவர் இந்நிலை மாற்றிக் காட்டுவார் என்கிறார் மரியா.

ஆகவே, உலகில் அற, சமூக மற்றும் பொருளாதாரப் புரட்சிகளைக் கொண்டு வரும் இறைவனை நாம் மரியாவைப் போன்று போற்றிப் புகழ்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
ஆண்டவரை நான் போற்றிடுவேன்

ஒருமுறை முல்லா நசுருதீன் ஒரு பெரிய கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். திடீரென்று கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை. உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்துவிட்டன. கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால் பயணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு, வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்துவிடுவதாக ஒருவர் சொன்னார். மற்றொரு பயணி தாம் உயிர்பிழைத்தால் ஆயிரம் ஏழை மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இவ்வாறு ஒவ்வொரு பயணியும் தம்மிடமிருக்கும் விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்து விடுவதாக வாக்குறுதிகள் தந்தனர். இந்தக் காட்சிகளையெல்லாம் ஒருபக்கமாக நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா.

திடீரென்று அவர், "அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம்" என்று கூவினார். அப்போது பயணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் சேர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்கள். முல்லா உடனே உரத்த குரலில், "அன்பர்களே! நமக்கு உயிர்ப்பிச்சை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தம் விதத்தில் நாம் அனைவரும் சேர்ந்து கடவுளுக்கு நன்றிசெலுத்துவோம்" என்றார்.


அவர் பேச்சுக்கு யாரும் செவிசாய்க்கவே இல்லை. உயிர்பிழைப்பது உறுதியாகி விட்டதால் இனி கடவுளின் தயவு தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதினார்கள். சற்றுமுன் அவர்கள் செய்த வாக்குறுதிகளையெல்லாம் மறந்து விட்டார்கள். "அந்த நேரத்தில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டோம். ஓரேயடியாக சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிட முடியுமா?" என்றெல்லாம் பேசத் தலைப்பட்டார்கள்.

அப்போது முல்லா அட்டகாசமாக் கலகலவென நகைத்தார். "ஏன் சிரிக்கிறீர்?" என்று பயணிகள் வினவினார்கள். அதற்கு அவர், "கரை கண்களுக்குத் தெரிவதாக நான் சொன்னது உண்மையல்ல, ஒரு விளையாட்டுக்காக அவ்வாறு சொன்னேன்" என்றார். பயணிகள் அனைவரும் நாலாபுறமம் கடலில் கண்களை ஒட்டினர். முல்லா சொன்னது உண்மைதான். கரை எந்தப் பக்கமும் கண்களுக்கத் தெரியவே இல்லை. உடனே பிரயாணிகள் அனைவரும் அழுகுரல் எழுப்பியவாறு கடவுளைப் பிரார்த்தனை செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்தனர்.

கடவுளிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றிசெலுத்த மனமில்லாத மக்களாகவே இருக்கின்றோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்பதமாக மரியா, தான் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக நன்றிசெலுத்துவளாக; கடவுளைப் போற்றி புகழ்பவளாக விளங்குகின்றாள்.

மரியா பேறுகால வேளையில் இருக்கும் தன்னுடைய உறவினரான எலிசபெத்தைச் சந்திக்கச் செல்கிறாள். அங்கே எலிசபெத் மரியாவை, "பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" என்று வாழ்த்தியவுடன்தான் மரியா "Magnificat" எனப்படும் இப்பாடலைப் பாடுக்கின்றார். மரியாவின் பாடலில் மூலமாக கடவுள் எப்படிப்பட்டவராக இருக்கின்றார் என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

முதலாவதாக கடவுள் எளியோரின் கடவுளாக விளங்குகின்றார். மீட்பின் வரலாற்றை நாம் உற்றுநோக்கும்போது கடவுள் ஆணவக்காரரையும், அதிகாரம் கொண்டோரையும் முறியடித்து, வறியவரையும், எளியவரையும் உயர்த்துகின்றார் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். யோபு புத்தகம் 22:29 ல் வாசிக்கின்றோம், "அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்; தாழ்வாகக் கருதப்படுவோரை மீட்கின்றார்" என்று. ஆம், நம்முடைய கடவுள் வலியோரின் கடவுள் அல்ல, அவர் வறியோரின் கடவுள்.

அடுத்ததாக மரியாளின் பாடலில் நாம் காணும் செய்தி கடவுள் தனக்கு அஞ்சி நடப்போருக்கு இரக்கம்காட்டி வருகிறார் என்பதாகும். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தபோதெல்லாம் அவர்கள் கடவுளின் ஆசியைப் பெற்று மகிழ்வு வாழ்ந்தார்கள். என்றைக்கு அவர்கள் உண்மையான கடவுளை மறந்துவிட்டு, பொய்தெய்வங்களுக்குப் பின்னால் சென்றார்களோ அன்றைக்கே அவர்கள் அழிவினைச் சந்தித்தார்கள். ஆகவே நாம் கடவுளுக்கு அஞ்சி நடக்கும்போது கடவுள்தரும் ஆசியை பெற்றுக்கொள்வோம் என்பது திண்ணம்.

நீதிமொழிகள் புத்தகம் 10:30 ல் வாசிக்கின்றோம், "கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்கமுடியாது" என்று.

நிறைவாக கடவுள் தன்னுடைய மக்களுக்கு என்றும் துணையாய் இருந்து வருகிறார் என்ற செய்தியையும் நாம் வாசிக்கின்றோம். விவிலியம் முழுமைக்கும் நாம் படித்துப்பார்க்கும்போது கடவுளின் மேலான உடனிருப்பும், பாதுகாப்பும்தான் மேலோங்கி நிற்கின்றன. எரேமியா புத்தகம் 1:8 ல் வாசிக்கின்றோம், " அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்" என்று.

ஆகவே, மரியாவைப் போன்று நாமும் எளிய உள்ளத்தோடு கடவுளுக்கு அஞ்சிவாழ்வோம். அதன்வழியாக கடவுள் தரும் அருளை ஆசியைப் பெற்று மகிழ்வோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!