Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   19  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம் 3ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
  சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25

அந்நாள்களில் சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை.

ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், "நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.

இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென 'நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்" என்றார்.

அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: "கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை.

அவர் என்னிடம். 'இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்' என்றார்."

அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  71: 3-4a. 5-6ab. 16-17 (பல்லவி: 8ab காண்க)
=================================================================================
 பல்லவி: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6ab பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன். 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஈசாயின் குலக்கொழுந்தே, மக்களுக்கு ஓர் அருஞ் சின்னமே, எமை மீட்க எழுந்தருளும். தாமதம் செய்யாதேயும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.

அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார்.

மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள். தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.

அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.

வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார்.

செக்கரியா வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார்.

அதற்கு வானதூதர் அவரிடம், "நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது" என்றார்.

மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.

அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.

"மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 "அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது"

தென் அமெரிக்காவில் உள்ளது சிலி என்ற குட்டி நாடு. இங்கே சான் ஜோஸ் என்ற தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது.

2010 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் நாள், இந்த தங்கச் சுரங்கத்தில் திடிரென்று நிலச்சரிவு ஏற்பட, இதனுள் வேலை பார்த்துக்கொண்டிருந்த 39 பேரும் பூமிக்குள் அமிழ்ந்துபோனார்கள். செய்தியறிந்து நாடே கவலையில் ஆழ்ந்தது. சுரங்கத்துக்குள் அமிழ்ந்துபோனவர்களை மீட்டெடுப்பதற்கான மீட்புபணி உடனே முடிக்கிவிடப்பட்டது. அமெரிக்காவைச் சார்ந்த கிரேக் ஹால் என்பவருடைய தலைமையில் மீட்புப் பணி நடைபெற்றது. இதற்கிடையில் மக்கள் யாவரும் சிலி நாட்டின் பாதுகாவலியான மரியாவிடத்திலும் நற்கருணை ஆண்டவரிடத்திலும் தொடர்ந்து மன்றாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். சுரங்கத்திற்குள் போனவர்களுடைய குடும்ப உறுப்பினர்களோ முழந்தாள் படியிட்டு வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஒருவாரம் போனது, இரண்டு வாரம் போனது. சுரங்கத்திற்குள் சென்ற யாரைப்பற்றியும் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தங்களுடைய பணிகளைச் செய்துகொண்டே இருந்தனர். இப்படிப்பட்ட சமயத்தில் ஒருநாள், சுரங்கத்திற்கு உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டதும் மீட்புக் குழுவினருக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. சுரங்கத்திற்குள் இருப்பவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்று எண்ணத்தில், குரல் கேட்ட திசையை நோக்கி உணவையும் தண்ணீரையும் அனுப்பி வைத்தனர். கூடவே புதிய ஏற்பாடு அடங்கிய Mp3 player ஐயும் அனுப்பி வைத்து, தொடர்ந்து மீட்புப் பணியில் மிகத் தீவிரமாக இறங்கினார்கள்.

அக்டோபர் 13 ஆம் நாள், அதாவது சுரங்கத்தினுள் நிலச் சரிவு ஏற்பட்ட 69 ஆம் நாளில், அதற்குள் அமிழ்ந்துபோன 39 பேரும் காப்பாற்றப்பட்டு பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் காப்பாற்றச் செய்தியை அறிந்து நாடே மகிழ்ந்தது. இதைத் தொடர்ந்து நாட்டு மக்கள் யாவரும், சுரங்கத் தொழிலாளர்களை மீட்புக்கொண்டு வருவதற்கு அருள்பாலித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் அன்னை மரியாவுக்கும் நன்றி செலுத்தத் தொடங்கினார்கள்.

சிலியில் நடந்த நிகழ்வு நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான், நம்பிக்கையோடு நாம் இறைவனிடத்தில் மன்றாடினால், அவர் நம்முடைய மன்றாட்டை நிச்சயம் கேட்டருள்வார் என்பதாகும்.

நற்செய்தி வாசகத்தில். வானதூதர் கபிரியேல் செக்கரியாவிற்குக் காட்சியளிப்பதையும் அதைத் தொடர்ந்து நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளையும் குறித்துப் படிக்கின்றோம். அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்ற குரு, ஆண்டவரின் திருமுன் ஊழியம் செய்துவந்தார். இவருடைய மனைவியான எலிசபெத்துக்கு நீண்ட நாட்களாகவே குழந்தையில்லை. இவரும் இவருடைய மனைவியும் தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஜெபித்திருக்கக் கூடும். இப்படிப்பட்ட சூழலில்தான், செக்கரியா ஆண்டவருக்குத் தூபம் காட்டுகிறபோது, வானதூதர் கபிரியேல் அவருக்கு முன்பாகத் தோன்றி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது" என்கின்றார்.

வானதூதர் சொன்னதைக் கேட்டு செக்கரியா, இத்தனை நாளும் நாம் வேண்டிவந்த மன்றாட்டு கேட்கப்பட்டுவிட்டது என்று சந்தோசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் சந்தோசப்படாமல், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்று சந்தேகம் கொள்கின்றார். வயதானவர்கள் குழந்தை பெற்றெடுத்த நிகழ்வு விவிலியத்தில் இருந்தபோதும் (தொநூ 18:9-5) செக்கரியா ஆண்டவருடைய வார்த்தைகளை நம்பாமல், அவர்மீது சந்தேகம் கொள்வது நமக்கு வியப்பாக இருக்கின்றது. செக்கரியா இப்படி சந்தேகம் கொள்வதால் ஆண்டவரின் தூதர், அவருடைய நாவை சில காலத்திற்குக் கட்டிப் போடுகின்றார்.

லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று. இறைவனிடத்தில் நாம் நம்பிக்கையோடு எடுத்து வைக்கின்ற ஜெபம், மன்றாட்டு ஒருபோதும் வீண்போகாது என்பதாகும். இறைவன் நம்முடைய மன்றாட்டுக்குப் பதிலளிக்க சற்று காலம் தாழ்த்தலாம். ஆனால், கட்டாயம் நம்முடைய மன்றாட்டிற்கு செவிசாய்ப்பார். எப்படி செக்கரியா, எலிசபெத் தம்பியரின் மன்றாட்டைக் கேட்டாரோ, அதுபோன்று நம்முடைய மன்றாட்டையும் கேட்பார்.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்கின்ற இரண்டாவது செய்தி, இறைவனுடைய வார்த்தைகளை நாம் உறுதியாக நம்பவேண்டும் என்பதாகும். இன்றைக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்களைப் போன்றோ, மற்ற தலைவர்களைப் போன்றோ இறைவன் வாக்கு மாறுகிறவர் கிடையாது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அப்படிப்பட்டவருடைய வார்த்தைகளை முழுமையாக நம்புவதுதான் நம்முடைய வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடியதாக இருக்கும்.

ஆகவே, இறைவனிடத்தில் நம்பிக்கையோடு நம்முடைய மன்றாட்டுகளை எடுத்துவைப்போம், இறுதிவரைக்கும் அவரிடத்தில் நம்பிக்கையோடு இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிப்பு

மிகச் சிறந்த தடகள வீரர் ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெற்ற பரிசுக் கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகள் அனைத்தையும் தன்னுடைய வீட்டு அலமாரியில் அடுக்கி வைத்தார். பின்னர் அவர் தன்னுடைய மனைவியை அருகே அழைத்து, "நன்றாகப் பார், இதுவரைக்கும் நான் எவ்வளவு பரிசுக் கோப்பைகளையும், கேடயங்களையும், விருதுகளையும் வாங்கியிருக்கிறேன் என்று. உன்னுடைய வாழ்நாளில் இதுபோன்று நீ ஏதாவது ஒரு பரிசுக் கோப்பையோ, சான்றிதழோ அல்லது விருதையோ வாங்கி இருக்கின்றாயா?" என்று கேட்டார்.

அப்போது அவருடைய மனைவி அவரிடத்தில் ஒன்றும் பேசவில்லை. அடுத்த நாள் காலையில் அவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழை ஒரு கேடயம் போன்று நன்றாக வடிவமைத்து, அதனை தன்னுடைய கணவரிடம் கொடுத்து, "என்னுடைய வாழ்நாளில் நான் இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கின்றேன். அந்த இரண்டு விருதுகளும் இதோ" என்று தன்னுடைய இரண்டு பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களை அவரிடத்தில் ஒப்படைத்தார்.

கணவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. வியப்பில் அப்படியே தன்னுடைய மனைவியை அள்ளி அணைத்துக்கொண்டார்.

தாய்மைப் பேறுதான் ஒரு பெண்ணிற்குக் கிடைக்கின்ற மிகப்பெரிய விருதாகும். அந்த விருது செக்கரியாவின் மனைவியும் திருமுழுக்கு யோவானின் தாயுமான எலிசபெத்து அவருடைய முதிர்ந்த வயதில் கிடைக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகமானது திருமுழுக்கு யோவானின் பிறப்புக்கு முன்பாக என்னென்ன நடந்தது என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாம் அதனுள்ளே இருக்கும் உண்மைகளைச் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

திருமுழுக்கு யோவானின் தந்தையான செக்கரியா அபியா வகுப்பைச் சார்ந்த ஒரு குரு. அவருடைய மனைவி எலிசபெத் ஆரோனின் குலத்தைச் சார்ந்தவர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி அதிகமான ஆண்டுகள் ஆனபோனதும் குழந்தை இல்லாமல் இருக்கின்றார்கள். இத்தனைக்கும் இருவரும் கடவுளின் பார்வையில் நேர்மையாளர்களாய் வாழ்ந்து வந்தார்கள். இப்படிப்பட்ட தருணத்தில்தான் செக்கரியாவிற்கு ஆண்டவரின் திருக்கோவிலுள் தூபம் காட்ட சீட்டு விழுகின்றது.

அக்காலத்தில் எருசலேம் திருக்கோவிலில் ஆலயத் திருப்பணி செய்ய இருபதாயிரத்தும் மேற்ப்பட்ட குருக்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் யூதர்கள் கொண்டாடும் மூன்று முக்கிய விழாக்களாகிய பாஸ்கா விழா, கூடாரப் பெருவிழா, அறுவடைப் பெருவிழா ஆகிய பெருவிழா நாட்களில்தான் வேலை இருக்கும். மற்ற நாட்களில் அனைவருக்கும் வேலை இருக்காது. எனவே, மற்ற நாட்களில் சிறுசிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுடைய முறை வருகின்றபோது அவர்கள் ஆலயத் திருப்பணியை ஒரு வார காலத்திற்குச் செய்யச் செல்வார்கள். ஆனால், திருக்கோவிலுள் தூபம் காட்டுக்கின்ற பேறு ஒரு குருவிற்கு வாழ்நாளில் ஒருமுறைதான் வரும். அத்தகைய பாக்கியம் செக்கரியாவிற்குக் கிடைக்கின்றது.

செக்கரியா கடவுளின் திருமுன் தூபம் காட்டுகின்றபோது நிச்சயமாக தனக்குக் குழந்தை இல்லாத நிலையை எண்ணிப் பார்த்திருக்கவேண்டும். அவர் கடவுளுக்குத் தூபம் காட்டுகின்றபோதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்கு முன்பாகத் தோன்றி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு யோவான் எனப் பெயரிடுவாய்" என்கின்றார். வானதூதரின் வருகையையோ, அவர் திருவாய் மலர்ந்து பேசிய வார்த்தைகளையோ சிறுதும் எதிர்பார்த்திராத செக்கரியா, "இது நடக்கும் என எனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்கின்றார். அதற்கு வானதூதரோ, "நான் கடவுளின் திருமுன் நின்று திருப்பணி செய்யும் வானதூதர் கபிரியேல். என் வார்த்தைகளை நீ நம்பவில்லை. அதனால் அனைத்தும் நிகழும் வரை நீ பேசாது இருப்பாய்" என்று சொல்லிவிட்டு மறைந்து போய்விடுகின்றார்.

செக்கரியா வானதூதர் கபிரியேலின் வார்த்தைகளை நம்பாமல் போனது மிகவும் துரதிஸ்டவசமானதாக இருந்தாலும் அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது என்று நினைத்துப் பார்க்கும் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. "தம் மக்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி மன்றாடுவதைக் கேட்கும் இறைவன் அவர்களுடைய குரலுக்கு செவிகொடுக்காமல் போவாரோ" (லூக் 18: 7-8) என்ற இயேசுவின் வார்த்தைகளைத் தான் இந்த நிகழ்வு நமக்கு நினைவுபடுத்துகின்றது.

ஆகவே, நாம் இறைவனிடத்தில் மனம்தளராது ஜெபிக்க வேண்டும். அப்போதுதான் முதிர்ந்த வயந்திலும் செக்கரியா எலிசபெத்துக்கு குழந்தைப் பேறு தந்த இறைவன், நமக்கு நாம் கேட்டதைத் தருவார். எனவே நாம் இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவரிடம் மனந்தளராது ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்குத் திரும்பி வருவோம்.

ஓர் ஊரில் இராணுவ வீரரும் அவருடைய மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். திடிரென்று ஒருநாள் அந்நாட்டில் போர்நிலை தோன்றப்போவதாக எச்சரித்து, அவசரமாக களத்துக்கு திரும்பும்படி அரசாங்கம் இராணுவ வீரருக்கு அழைப்புவிடுத்தது. அவர் கிளம்பும்போது மனைவி கர்ப்பிணியாக இருந்தாள். அதனால் அழுகையுடனும் சோகத்துடனும் இராணுவவீரர் விடைபெற்றார். கணவன் நிச்சயமாக வீடு திரும்பவேண்டும் என மனைவி ஒவ்வொருநாளும் பிரார்த்தித்துக் கொண்டு காலம் கழித்து வந்தாள்.

இப்படியாக மூன்று ஆண்டுகள் ஓடி மறைந்தன. போர் முடிவடைந்து இராணுவ வீரர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் கணவருக்குப் பிடித்தமான உணவுவகைகளை சமைத்து களிப்போடு பரிமாறினாள் மனைவி. சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அவள், குழந்தையைப் பார்த்து "தந்தையுடன் பேசாமல் ஏன் அமைதியாக இருக்கிறாய்?" எனக் கேட்டாள். அதற்கு குழந்தையோ "இவர் என் அப்பா இல்லை" என்றது.

இதைக் கேட்டு கோபம் அடைந்த ராணுவ வீர்ர் குழந்தை அப்படி சொன்னதற்காக காரணத்தை வினவினார். அதற்கு "என் அப்பா எப்போதும் அம்மாவின் அருகில் இருப்பார்; அம்மாவுடன் கடைக்கு வருவார்" எனக் கூறியது குழந்தை.

சந்தேகப்பட்ட கணவர், மனைவி ஆசையுடன் சமைத்து வைத்திருந்த உணவை தூக்கியெறிந்துவிட்டு கோபத்தில் கண்டபடி திட்டினார். அவருடைய சந்தேகம் கற்பனையையும் தாண்டி பயணித்துக்கொண்டிருக்க பல நாட்களாக மனைவியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. இப்படியிருக்கையில் சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி தற்கொலை செய்துகொண்டாள்.

சில நாட்கள் கழிந்த பின்னர் தன் குழந்தையுடன் அவர் கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது தந்தையின் நிழலைப் பார்த்து அந்த குழந்தை "அதோ அவர்தான் என் அப்பா" என்று கூறியது. அதிர்ச்சியடைந்த இராணுவ வீரர் குழந்தையை நிதானமாக விசாரித்தார். ஆம்! குழந்தையின் தந்தை போருக்குப் போயிருக்கிறார் என்பதை கூறவிரும்பாத தாய் தன்னுடைய நிழலையே தந்தை என குழந்தைக்கு விளையாட்டுத்தனாக சொல்லிக் கொடுத்திருந்தாள். அதை உணர்ந்துகொண்ட ராணுவ வீரர், அவநம்பிக்கையோடும், சந்தேகத்தோடும் இருந்து நிதானம் தவறியதால் தன்மீது பேரன்பு வைத்திருந்த மனைவியை இழந்துவிட்டோமே என்று கதறி அழுதார்.

அன்றாட வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் நம்பிக்கைக் குறைவால், அவ நம்பிக்கையால், சந்தேகப் புத்தியினால் நாம் எப்படிப்பட்ட அழிவினைச் சந்திக்கிறோம் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா எருசலேம் திருக்கோவிலில் தூபம் காட்டுவதற்காக உள்ளே செல்கிறார். அப்போது ஆண்டவரின் தூதர் அவருக்கு முன்பாகத் தோன்றி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகழ்ந்து பேருவகை கொள்வீர்... அவர் ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்கிறார். அதற்கு செக்கரியாவோ, "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்?, நான் வயதான்வன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்று சொல்கிறார்.

உடவே வானதூதர் கபிரியேல், "நீர் என்னுடைய வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் நான் சொன்னவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்" என்று அவரைத் தண்டிக்கிறார்.

செக்கரியாவும் எலிசபெத்தும் வயது முதிர்ந்தவர்கள். அப்படியிருக்கும்போது தங்களுக்கு எப்படிக் குழந்தை பிறக்கும் என செக்கரியா வானதூதர் கபிரியேலிடம் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது என்று நாம் கேட்கலாம். ஆனால் பழைய ஏற்பாட்டில் வயது முதிர்ந்த தம்பதியினர் ஆண்டவரின் அருளால் குழந்தை பெற்றெடுத்த நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. எடுத்துக்காட்டு ஆபிரகாம், சாரா தம்பதியினர். இவர்களுக்கு ஆண்டவர் அவர்களுடைய முதிர்ந்த வயதில்தான் குழந்தைப் பாக்கியத்தைத் தந்தார்.

ஆகவே கடவுள், வயது முதிர்ந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் தந்ததைத் தெரிந்தபின்பும் செக்கரியா கடவுளின் ஆற்றலில் அவ நம்பிக்கையும், சந்தேகம் கொண்டதால்தான் கடவுள் அவரைப் பேச்சற்றவராக மாற்றுகிறார்.

நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய நேரங்களில் நாம் கடவுளின் வல்லமையையும், ஆற்றலையும் உணர்ந்துகொள்ளாமல் அவர்மீது சந்தேகம் கொள்கிறோம்; அவரது வல்லமையைக் கேள்விக்குள்ளாகுகிறோம். எனவே, நம்மைத் தேடி வந்து, நமக்கு மீட்பினை வழங்கவரும் இறைவனின்மீது ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.

"நம்பினோர்க்கு எல்லாம் கூடும், நம்பிக்கையற்றவருக்கு எதுவும் கைகூடாது".

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள்வோம்

இளைஞர்கள் இருவர் ஒரு படகில் அமர்ந்து ஆற்றில் பயணம் செய்துகொண்டிருந்தனர். நன்றாகப் போய்க்கொண்டிருந்தது அவர்களின் படகுப் பயணம். ஆற்றின் இருபுறம் இருந்த மலையையும், இயற்கை அழகையும் ரசித்துக்கொண்டே சென்றார்.

அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் அவர்கள் பயணம் செய்த படகு நிலைகுலைய ஆரம்பித்தது. அதனால் அவர்கள் இருவரும் ஆற்றில் தூக்கி எறியப்பட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு கடவுளாய் பார்த்து ஒரு பெரிய படகை அனுப்பி வைத்தார்.

படகைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். படகை ஒட்டிக்கொண்டு வந்த மனிதரிடம் முதலாவது இளைஞன், "இந்தப் படகில் ஏறிக்கொள்ளலாமா?" என்று கேட்டான். அதற்கு அவரும் சரி என்று சொல்ல, அவன் படகில் ஏறினான். ஆனால் இரண்டாவது இளைஞனோ திடிரென்று என்ன நினைத்தானோ தெரியவில்லை. படகோட்டியிடம், "இந்த படகில் சென்றால் கரையை அடைந்து விடலாமா?; இதில் ஓட்டை ஏதாவது இருக்கிறதா?; அப்படியே தண்ணீர் உள்ளே வந்தாலும் எங்களுக்கு ஒன்றும் ஆகாது அல்லவா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கினான்.

ஆபத்தில் உதவ வந்த தன்னிடம் இப்படியெல்லாம் இவன் கேள்வி கேட்கிறானே என்று எரிச்சலடைந்த படகோட்டி, முதலாவது இளைஞனை மட்டும் தன்னுடைய படகில் வைத்துக்கொண்டு, வேகமாகப் படகை ஒட்டித் தொடங்கினான்.

அளவுக்கு அதிகமான சந்தேகம் ஆபத்தில் விடும் என்பதை இக்கதையானது தெளிவாக நமக்கு விளக்குகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்ச்சியைக் குறித்து வாசிக்கின்றோம்.

எருசலேம் திருக்கோவிலிலே திருப்பணி செய்துகொண்டிருந்த செக்கரியாவிற்கு வானதூதர் தோன்றி, "உன் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்" எனச் சொல்கிறார். ஆனால் அவரோ, "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்?, நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்று இறைவனின் வார்த்தையின் மீது சந்தேகம் கொள்கிறார். அதனால் வானதூதர் அவர்மீது சினம் கொண்டு, "உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்" என்று தண்டிக்கிறார்.

இங்கே மரியாள், தன்னிடம் இயேசுவின் பிறப்பைப் பற்றிச் சொன்ன வானதூதர் கபிரியேலிடம் "இது எங்கனம் ஆகும், நானோ கன்னியாயிற்றே" என்று சொன்னபோது அவரை ஒன்றும் செய்யாது போனாரே, அப்படி இருக்கும்போது முதிர்ந்த வயதில் தனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும் என்று கேள்விகேட்ட செக்கரியாவை மட்டும் ஏன் தண்டிக்கவேண்டும் என்று கேள்வி கேட்கலாம். அதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லக்கூடிய விளக்கம்:

பழைய ஏற்பாட்டில் வயது முதிர்ந்தவர்கள் குழந்தை பெற்ற நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஆபிரகாமின் மனைவி சாரா தன்னுடைய முதிர்ந்த வயதில்தான் ஈசாக்கைப் பெற்றெடுத்தாள். ஆனால் கன்னி கருத்தரித்து குழந்தை பெற்ற நிகழ்வு பழைய ஏற்பாட்டில் இல்லை. அதனால்தான் வயது முதிர்ந்தவர்கள் குழந்தை பெற்ற நிகழ்வுகளைக் குறித்து அறிந்திருந்த செக்கரியாவை கடவுள் தண்டிக்கிறார்; மரியாளை ஒன்றும் செய்யாது விட்டுவிடுகிறார்.

நம்முடைய வாழ்விலும் இறைவன் நமக்கு எவ்வளவோ அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்ய முன்வந்தாலும், நாம் நமது சந்தேகத்தினால் அவற்றை இழந்துவிடுகிறோம். நற்செய்தியில் இயேசு தோமாவைப் பார்த்துக் கூறுவார், "ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்" (யோவான் 20:27) என்று. அதே செய்தியைத்தான் இயேசு இன்று நம்மிடமும் சொல்கிறார். அதனால் இறைவனின் பாதுக்காப்பில் முழுமையான நம்பிக்கை வைத்து வாழ்வோம். அவர் தரும் இரக்கத்தை, அருளை நிறைவாய் பெறுவோம்.

அவநம்பிக்கை நம்மை வாழ்வில் சறுக்கிவிழச் செய்து சிராய்ப்புகளை ஏற்படுத்துவிடும் வெ. இறையன்பு.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
சீட்டுக் குலுக்கிப் போட்டபோது

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வை வாசிக்கின்றோம்.

சக்கரியா, கபிரியேல், எலிசபெத்து என்ற மூன்று கதைமாந்தர்களை நாம் சந்திக்கின்றோம்.

நான் பல நேரங்களில் யோசித்ததுண்டு. வானதூதர் கபிரியேல் கடவுளின் செய்தியை சக்கரியாவுக்கும், மரியாளுக்கும் கொண்டு வருகிறார். இருவருமே தயக்கத்துடன் நிற்கின்றனர். சக்கரியாவின் தயக்கத்திற்காக அவரை ஊமையாக்குகின்ற கபிரியேல் நம்ம மரியாளை ஒன்றும் சொல்லாமல் விடுகின்றார். ஆண்பாவம் பொல்லாதது மிஸ்டர் கபிரியேல்!

சக்கரியா தண்டிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று யோசித்தால் அதற்கான விடை 'சீட்டுக் குலுக்கிப் போட்ட போது' என்ற வார்த்தையில் இருக்கிறது. எருசலேம் திருக்கோவிலுக்குள் உள்ள தூயகத்தில் 'தூப பீடம்' என்று ஒன்று உண்டு. ஓடோனில், ஆம்ப்பிப்யூர், கோத்ரேஜ் ஏர் போன்ற பிராண்டுகளில் அறை நறுமணப்பான்கள் இல்லாத காலகட்டத்தில் தூபமும், ஊதுபத்தியும்தான் நறுமணப்பான்களாக பயன்படுத்தப்பட்டன. ஆடுகளும், மாடுகளும், புறாக்களும் வெட்டப்பட்டு, அடுப்பு, நெருப்பு என்று எரிந்து கொண்டிருக்கும் இடம் சுத்தமாகவா இருக்கும்? இப்படிப்பட்ட இடத்தில் சத்தமும், சந்தடியுமாகத்தான் இருக்கும். சக்கரியாவைப் போல நிறையப் பேர் தூபம் போட்டுக்கொண்டிருப்பர். மேலும் சக்கரியாவைப் போல நிறைய குருக்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பர்.

சக்கரியாவின் பெயருக்கு சீட்டு விழுகிறது என்றால் அவர் கொடுத்து வைத்தவர்.

ஏனெனில் இறைவன் தூயகத்தில் உண்மையாகவே இருப்பதாக யூதர்கள் நம்பினர். இன்னைக்கு நாம கடவுள் வானத்தில் இருக்கிறார் என்றுதானே நினைக்கிறோம். ஆக, கடவுளின் பிரசன்னத்தில், அவருக்கு வெகு சில அடி தூரத்தில் நிற்பதை இன்னும் பெரிய பாக்கியமாகக் கருதினர். தங்களின் பெயருக்கு சீட்டு விழாதா என்று தவங்கிடந்தனர். இப்படி இருந்தவர்களில் ஒருவர் சக்கரியா. ஆனால், சீட்டு விழுந்தவுடன் கடவுளை மறந்துவிடுகின்றார் சக்கரியா.

சக்கரியா மறக்கின்றார். ஆனால் கடவுள் அவரை நினைவுகூறுகின்றார். ஏனெனில் 'சக்கார் - யாவே' என்றால் 'ஆண்டவர் நினைவுகூர்கிறார்' என்பது பொருள்.

கடவுளை மறந்த அவரால் கடவுளின் செய்தியை ஏற்றுக்கொள்வதும் கடினமாக இருக்கிறது. ஆக, சீட்டில் பெயர் வந்தது என்பது அவருக்கு நிகழ்ந்த முதல் அற்புதம். அந்த அற்புதத்தை ஏற்றுக்கொள்ள மறந்தார். ஆகையால் இரண்டாம் அற்புதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்.

ஆனால் மரியாளுக்கு அற்புதம் ஒரே முறைதான் நடக்கிறது. அவர் அதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்.

கிறிஸ்து பிறப்பு தயாரிப்பு காலம் நாளைய நற்செய்தி வழியாக தரும் செய்தி, 'நமக்கு விழுந்த சீட்டுக்களை கணக்கில் எடுப்பது,' 'எண்ணிப் பார்ப்பது,' 'நன்றி கூறுவது.'

நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நாம் பேசும் மொழி, வணங்கும் கடவுள், வாழும் ஊர் எல்லாமே நமக்கு விழுந்த சீட்டுக்கள்தாம். அடுத்தவருக்கு விழுந்த சீட்டைப் பார்த்து பொறாமையோ, கோபமோ, வருத்தமோ படாமல் நம் சீட்டை நினைவுகூர்ந்தால் இரண்டாம் அற்புதம் நிச்சயம் நிகழும்.

Fr. Yesu Karunanidhi, Madurai.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!