Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   18  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம் 3ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நீதியுள்ள 'தளிர்' தாவீதுக்குத் தோன்றுவார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 5-8

ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள 'தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்.

அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். 'யாவே சித்கேனூ' - அதாவது 'ஆண்டவரே நமது நீதி' - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, 'எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று எவரும் சொல்லார்.

மாறாக, 'இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று கூறுவர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  72: 1-2. 12-13. 18-19 (பல்லவி: 7)
=================================================================================
 பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

18 ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்! 19 மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப் பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இஸ்ரயேல் குடும்பத்தின் தலைவரே, சீனாய் மலைமீது மோசேக்குத் திருச்சட்டம் ஈந்தவரே, திருக்கரம் நீட்டி எங்களை மீட்க வந்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.

இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 "ஏனெனில், அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"

முதியவர் ஒருவர் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத ஒரு நகர சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கும் இங்கும் அவர் பராக்குப் பார்த்துக்கொண்டே சென்றதால், முன்னால் இருந்த பாதாளச் சாக்கடையை அவர் கவனிக்கவில்லை. இதனால் அவர் பாதாளச் சாக்கடைக்குள் விழுந்துவிட்டார்.

உதவி கேட்டு எவ்வளவோ அவர் கத்தியும் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அவருடைய சத்தத்தைக் கேட்டு, அங்கு வந்தவர்களில் ஒருசிலர், பாதாளச் சாக்கடைக்குள் எப்படி இறங்குவது என்று முகம் சுழித்தவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள்.

அப்போது அந்த வழியாக பேராசிரியர் ஒருவர் வந்தார். அவர் பாதாளச் சாக்கடையில் கிடந்த முதியவரிடம், "பார்த்து வரவேண்டும் பெரியவரே, ஒருவேளை நீங்கள் முன்னே என்ன இருக்கின்றது என்று பார்த்து வந்திருந்தீர்கள் என்றால், இப்படி பாதாளச் சாக்கடைக்குள் விழுந்திருக்க மாட்டார்கள். இனிமேலாவது பார்த்து வாருங்கள்" என்று புத்திமதி சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

சிறுது நேரம் கழித்து அவ்வழியாக மகான் ஒருவர் வந்தார். அவர் முதியவர்மீது இரக்கப்பட்டு, தன்னுடைய கைகளை அவருக்கு முன்பாக நீட்டி, "என்னால் முடிந்த மட்டும் உங்களைக் கீழே இருந்து, மேலே தூக்கி விடுகின்றேன். அதே நேரத்தில் நீங்களும் தம்கட்டி மேலே வர முயற்சி செய்யவேண்டும்" என்றார். பின்னர் அவர் குழியில் கிடந்த முதியவரை தன்னால் முடிந்த மட்டும் மேலே இழுக்கப் பார்த்தார். ஆனால், பெரியவரால் தம்கட்டி மேலே வரமுடியாமல் போனதால் அந்த முயற்சியில் தோற்றுப் போனார்.

கடைசியாக அந்த வழியாக இயேசு வந்தார். அவர் பாதாளச் சாக்கடைக்குள் பெரியவர் ஒருவர் கிடக்கின்றார் என்பதை அறிந்ததும், எதைக் குறித்தும் யோசிக்காமல், உள்ளே குதித்து, அவரை நன்றாகப் பிடித்துக்கொண்டு அப்படியே மேலே கொண்டுவந்து சேர்த்து அவரைக் காப்பாற்றினார்.

ஆம், இயேசு கிறிஸ்து தான் பாவத்தில் விழுந்து கிடந்த மனுக்குலத்தை மீட்டெடுத்து, மீட்பினை வழங்கினார் என்பதை இந்த கற்பனைக் கதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பாக நடக்கின்ற நிகழ்வுகளைக் குறித்துப் படிக்கின்றோம். யோசேப்புக்கும் மரியாவுக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றது. திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டாலே யூத சமூகத்தில் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகவே பார்க்கப்படுவார்கள். மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் கூடி வாழவில்லை. இப்படிப்பட்ட தருணத்தில் மரியா கருவுற்றிருப்பதை அறிந்த யோசேப்பு அவரைத் தனியாக விலக்கிவிடத் தீர்மானிக்கின்றார். ஏனையோர் என்றால் மரியாவைக் கல்லால் எரிந்து கொண்டிருப்பர். யோசேப்பு நீதிமானாக இருந்ததால், அப்படிச் செய்யாமல் தனியாக விலக்கிவிடத் திட்டமிடுகின்றார்.

இதனைக் குறித்து அவர் சிந்தித்துக்கொண்டே தூங்கச் செல்லும்போதுதான் வானதூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே! தாவீதின் மகனே! நீர் மரியாவை ஏற்றுக்கொள்ளத் தயங்கவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்கிறார்.

வானதூதர் யோசேப்புக்குக் கூறிய வார்த்தைகளிலிருந்து இரண்டு உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம். ஒன்று இயேசு தூய ஆவியினால் கருவுற்றது. படைப்பின் தொடக்கத்தில் வெறுமையாய் இருந்த உலகில் தூய ஆவியானவர்தான் வாழ்வின் தொடக்கமாக இருந்து செயல்பட்டார். ஆண்டவர் இயேசுவின் பிறப்பிலும் அவர்தான் முழுமுதற் காரணமாக இருந்து செயல்படுகின்றார். ஆகவே, தூய ஆவியானவர் வாழ்வின் ஊற்றாக இருக்கின்றார் என்பதை இதன்வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

வானதூதரின் வார்த்தைகளிலிருந்து வெளிப்படும் இரண்டாவது உண்மை இயேசு கிறிஸ்து மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பதாகும். இந்த உலகம் பாவத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தபோது, ஆண்டவர் இயேசுதான் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் வழியாக நம்மைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்தார். அதனால் அவரை உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக் குட்டி" (யோவா 1: 29) என்று திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் சுட்டிக் காட்டுகின்றார்

ஆகவே, நாம் இயேசுவை உலகின் பாவங்களைப் போக்கி, நம்மை மீட்க வந்த இறைவன் என்று உணர்வோம், பாவத்திலிருந்து விலகி, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோசேப்பு என்னும் நேர்மையாளர்

அந்த தம்பதியினருக்கு திருமணமாகி பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் குழந்தை பிறந்தது. அவர்கள் கடவுள் தங்களுக்குக் கொடுத்த குழந்தையை மிகவும் அன்பு செய்தார்கள்.

குழந்தைக்கு இரண்டு வயதாயிருக்கும். ஒருநாள் கணவன் தன்னுடைய அலுவலகத்திற்கு வேகவேகமாகக் கிளம்பிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டில், ஜன்னலோரமாக வைக்கப்பட்டிருந்த ஒரு மருந்துப் பாட்டிலின் மூடி திறந்திருப்பதைக் கண்டான். அவசர கதியில் அலுவலகத்திற்கு கிளம்பியதால் சமயலறையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய மனைவியிடம், மருந்துப் பாட்டிலின் மூடி திறந்திருப்பதையும், அதை மூடிவிடும்படியாகும் கேட்டுக்கொண்டுவிட்டுச் சென்றான்.

சமையல் வேளையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் மனைவி மருந்துப் பாட்டிலை மறந்தே போனாள். வீட்டிற்குள் அங்குமிங்குமாகத் தவழ்ந்துகொண்டிருந்த குழந்தை திறந்திருந்த மருந்துப் பாட்டிலிருந்து மருந்து எல்லாவற்றையும் குடித்தது. பெரியவர்களே குறைந்த அளவுதான் குடிக்கவேண்டிய அந்த மருந்து பாட்டிலிருந்து குழந்தை எல்லாவற்றையும் குடித்துவிட்டதால், சிறிது நேரத்திலே அது வாயில் நுரைதள்ள சரிந்து கீழே விழுந்தது.

குழந்தையின் அலறல் சத்தம்கேட்டு சமயலறையில் இருந்து ஓடிவந்த அந்தப்பெண்மணி, குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள். ஆனால் அதற்குள் குழந்தை இறந்துபோயிருந்தது. செய்தியைக் கேள்விப்பட்டு அலுவலகத்திலிருந்து கணவர் ஓடிவந்தார். குழந்தையைப் இழந்து நிற்கும் இந்த வேளையில் தன்னுடைய கணவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பதறியாவாரே இருந்தாள்.

ஆனால் அவளுடைய கணவரோ அவள் அருகே வந்து, தன்னுடைய தோளோடு தோள் சாய்த்துக்கொண்டு "நான் உன்னை நேசிக்கின்றேன்" என்றான். குழந்தையை இழந்து நிற்கும் வேளையில், கணவர் தன்மீது பழிபோட்டுவிடுவாரோ எனப் பயந்துகொண்டிருந்த அந்தப் பெண்மணிக்கு கணவரின் இந்த அன்பான வார்த்தைகள் அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. ஒரு சாதாரண குறட்டைச் சத்தத்திற்கே விவாகரத்து செய்யும் கணவருக்கு/ மனைவிக்கு மத்தியில் அந்த பெண்ணின் கணவர், இக்கட்டான நேரத்தில் அவளுக்கு ஆறுதலாக இருந்தது உண்மையில் பாராட்டுக்கு உரியது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோசேப்பு, தனக்கு மன ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியாள் திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருப்பது தெரிய வந்ததும் அவரை விலக்கிவிடத் தீர்மானிகிறார். ஆனால் வானதூதர், யோசேப்பின் கனவில் தோன்றி எல்லாவற்றையும் விளக்குகின்றபோது அவர் மரியாவை ஏற்றுக்கொள்கிறார்.

Betrayel can only happen if you are in love என்று ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. அதாவது காதலைவிட வேறு எந்த இடத்திலும் துரோகத்தின் வலிமை அவ்வளவு தீவிரமாகவும், கடுமையாகவும் இருப்பதில்லை என்பார்கள். இங்கே யோசேப்பு, தனக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியாள் தனக்குத் துரோகம் செய்துவிட்டாள் - ஏமாற்றிவிட்டாள் - என்று நிச்சயம் வருந்தியிருக்கலாம். ஆனால் அவர் மற்ற யூதர்களைப் போன்று திருமணத்திற்கு முன்பாக கருவுற்றிருக்கும் பெண்ணை கல்லால் எறிந்துகொள்ளவேண்டும் என்ற சட்டத்தைப் பின்பற்றாமல், மரியாவை தனியாக விலக்கிவிடத் தீர்மானிப்பதில்தான் அவர் தனித்து நிற்கிறார்.

யோசேப்பு மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக அவரைத் தனியே விலக்கிவிடத் தீர்மானிக்கிறார். அதனால்தான் என்னோவோ அவர் நேர்மையாளர் என்று அழைக்கப்படுக்கிறார்.

ஆனால் யோசேப்பு இவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்போது வானதூதர் யோசேப்பின் கனவில் தோன்றி எல்லாவற்றையும் விளக்குகின்றபோது அதனை அவர் திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டு, மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். இன்றைக்கு யோசேப்பிடம் விளங்கிய திறந்த மனது பல கணவர்களிடம் இல்லாததால்தான் மனைவியின்மீது சந்தேகம் கொள்வதும், அவளை விவாகரத்து செய்வதும் தொடர்கிறது.

ஆதலால் மன வாழ்க்கையில் மட்டுமல்லாது நமது அன்றாட வாழ்விலும் எதையும் யோசேப்பைப் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்வோம். ஒருவர் மற்றவரது உணர்வுகளுக்கு மதிப்புத் தந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நற்செய்தி (மத் 1:18-24)

"அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"


அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பணியாற்றி வந்த ஓர் இளங்குரு, ஒரு ஞாயிற்றுத் திருப்பலியின்போது கையில் ஒரு பழைய, துருப்பிடித்த பறவைக் கூண்டைக் கொண்டுவந்தார். மக்களெல்லாம் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

மறையுரை ஆற்றவேண்டிய நேரம் வந்தபோது, குருவானவர் அந்த பறவைக் கூண்டை கையில் பிடித்துக்கொண்டு, "அன்பார்ந்தவர்களே! இதோ என்னுடைய கையில் இருக்கிறதே பறவைக்கூண்டு, இந்தக் கூண்டை நேற்று நான் கடைத்தெருவுக்குச் சென்றுபோது, சிறுவன் ஒருவன் இதனுள் ஐந்தாறு பறவைகளை வைத்துக்கொண்டு, அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டு வந்தான். எனக்கு கூண்டினுள் இருந்த பறவைகளைப் பார்க்க பாவமாக இருந்தது.

உடனே நான் அந்த சிறுவனை நிறுத்தி, "தம்பி! இந்த பறவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டேன். அவனோ, "இவற்றை வைத்துக்கொண்டு விளையாடப் போகிறேன். இவைதான் என்னுடைய விளையாட்டுப் பொருட்களே, இவற்றை நான் குச்சியைக் கொண்டு அடி அடியென அடிப்பேன். பின்னர் இவையெல்லாம் மயங்கி விழுந்ததும், என்னுடைய வீட்டில் இருக்கின்ற பூனைக்கு இரையாகப் போட்டுவிடுவேன்" என்றான். சிறுவன் சொன்னது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான் அவனிடம், "தம்பி! இந்தப் பறவைகளையெல்லாம் எனக்கு விலைக்குத் தருவாயா?" என்று கேட்டேன். அவனோ, "ஐயோ சார்! இவையெல்லாம் சல்லிக்காசுக்குக்கூடத் தேறாது. இவற்றையெல்லாம் விலைக்குக் கேட்கிறீர்களே?" என்றான்.

நானோ அவனிடம், "பரவாயில்லை தம்பி! இந்தா இந்த ஐநூறு ரூபாயை வைத்துகொண்டு, இந்த பறவைகளையும் கூண்டையும் என்னிடத்தில் கொடுத்துவிடு" என்றேன். அவன் மறுபேச்சு பேசாமல், தன்னுடைய கையில் இருந்த கூண்டையும் அதனுள் இருந்த பறவைகளையும் என்னிடம் கொடுத்தான். நானோ கூண்டைத் திறந்து பறவைகளையெல்லாம் பறக்கவிட்டு, கூண்டை மட்டும் கொண்டுவந்திருக்கிறேன்" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு சிறுதுநேர இடைவெளிக்கு பிறகு குருவானவர் மீண்டும் பேசத் தொடங்கினார். "அன்பார்ந்தவர்களே! இந்தக் கூண்டையும் இதனுள் இருந்த பறவைகளையும் பற்றி சொல்லக் காரணம், ஒருநாள் சாத்தான் இயேசுவிடம், "நான் இந்த உலகில் உள்ள மக்களை எல்லாம் பிடித்து, என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன்" என்றான். அதற்கு இயேசு, "ஏன் என் மக்களை பிடித்து வைத்திருக்கிறாய்? சொல்" என்று கேட்டார். சாத்தானோ, "அதுவா... அவர்களுக்குள் சண்டை மூட்டிவிடப் போகிறேன். அதன்மூலம் அவர்கள் அடித்துக்கொண்டு சாவார்கள். அப்படியாக அவர்களை நான் நரகத்தில் தள்ளுவேன்" என்றான். இதைக் கேட்ட இயேசு, "அவர்களை அப்படியெல்லாம் செய்துவிடாதே, அவர்களுக்காக நான் என்னுடைய உயிரை வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால், அவர்களை ஒன்றும் செய்யாதே" என்றார். இதன்பிறகு இயேசு தன்னுடைய உயிரைத் தந்து நம்மை எல்லாம் மீட்டுக் கொண்டார். நாமே முற்றிலுமாக மீட்கப்பட்டவர்கள் ஆனோம்".

குருவானவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பங்குமக்களெல்லாம் இயேசுவின் அன்பினை உணர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

ஆம், நம் ஆண்டவர் இயேசு, பாவத்தில் விழுந்து கிடந்த நம்மை மீட்பதற்காக தன்னுடைய உயிரையே தந்தார் என்பது எவ்வளவு உயர்வான செயல்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சியைக் குறித்துப் படிக்கின்றோம். மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றது. யூதர்களைப் பொறுத்தளவில் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது என்றால் , அது அருட்சாதனம் நடைபெற்றதற்கு இணையாகக் கருதப்படும். இப்படிப்பட்ட தருணத்தில், அவர்கள் இருவரும் கூடி வாழ்வதற்கு முன்பாகவே மரியா கருவுற்றிக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட யோசேப்பு, அவரைத் மறைவாக விலக்கிவிடத் தீர்மானிக்கின்றார். அப்போதுதான் வானதூதர் அவருக்குக் கனவில் தோன்றி, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்கின்றார்.

"இயேசு" என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. "மீட்பர்", "உதவி" என்பவைதான் அந்த இரண்டு அர்த்தங்கள் ஆகும். வானதூதர் கபிரியேல் சொல்வதுபோன்று இயேசு, இந்த உலகத்தின் பாவங்களைக் போக்கக்கூடியவராகவும் அதற்காக தன்னுடைய உயிரையும் தரக்கூடியவராகவும் இருக்கின்றார். அடுத்ததாக, ஆபத்தில் இருப்பவர்கள், தன்னை நோக்கி கூக்குரலிடும் போது உதவிசெய்ய விரைபவராகவும் இருக்கின்றார். நாம், ஆபத்தான வேளையில் இருக்கும்போது வேறு எந்த ஜெபத்தையும் சொல்லத் தேவையில்லை, "இயேசு" என்ற ஒரு வார்த்தையை சொன்னால் போதும் அதுவே மிகப் பெரிய ஜெபமாக இருக்கும்.

ஆகவே, நம்மைத் தேடி மீட்க வந்திருக்கின்ற இயேசுவிடம் நம்மை முழுமையாய் ஒப்படைப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
யோசேப்பு நேர்மையாளர்

'இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகள்' என்று தொடங்கும் முதற் நிகழ்வில் கதாநாயகனாக இருப்பவர் யோசேப்பு. மற்ற நற்செய்தியாளர்களைவிட யோசேப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் மத்தேயு ஒருவரே.

'அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.'

திருமணத்திற்குப் புறம்பாக ஒரு பெண் கருவுற்றால் அவர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது மோசேயின் சட்டம். மரியா இவ்வாறு கருவுற்றிருப்பதைத் தான் வெளியே சொன்னால் மரியாவுக்கும் அதே தண்டனை கிடைக்கும். மேலும், கருவுற்ற மரியாவை ஏற்றுக்கொள்ளவும் கடினமாக இருந்தது. ஆக, மறைவாக விலக்கிவிட - அதாவது, வேறு ஏதாவது காரணம் சொல்லி - திட்டமிடுகின்றார். அப்படி அவர் திட்டமிட்டாலும் பாதிக்கப்படுபவர் மரியாளாகத்தான் இருக்க வேண்டும்.

மூளையில் கீழைத்தேய (oriental) மூளை, மேலைத்தேய (occidental) மூளை என இரண்டு இருப்பதாக நாவலாசிரியர் குஷ்வந்த் சிங் வரையறுக்கிறார். உறவு நிலை என்று வரும்போது மேலைத்தேய மூளை எதையும் கண்டுகொள்ளாமல், எல்லாருடனும் உறவு கொள்ளும். ஆனால், கீழைத்தேய மூளை, நாள், நேரம், இடம், அந்தஸ்து எனப் பார்த்து பழக ஆரம்பிக்கும். பழகிய சில நாள்களில் பழகிய நபரைத் தனக்கே சொந்தம் எனக் கொண்டாடும். அவர் தன்னைவிட்டுச் சிறிதும் விலகிவிடக்கூடாது என்பதில் மிகக் கருத்தாயிருக்கும். அப்படி அவர் விலகும் பட்சத்தில் அது அவருக்கு கோபத்தையும், பொறாமையையும் வருவிக்கும். ஏனெனில், மேலைத்தேய மூளை வியாபாரத்தையும் உறவாகப் பார்க்கும். ஆனால், கீழைத்தேய மூளை உறவையும் வியாபாராமக - உறவில் இருப்பவரைத் தன் பொருளாக - பார்க்கும் என்கிறார்.

மரியாள் திருமணத்திற்குப் புறம்பே கருவுற்றிருப்பதை மேலைத்தேய மூளை எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆனால், கீழைத்தேய மூளை அறவே ஏற்றுக்கொள்ளாது. யோசேப்பு கீழைத்தேயத்தவர் என்பதால் அவரும் இதே துன்பத்தை அனுபவித்திருப்பார். ஆத்மார்த்தமான அந்த உறவு தனக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில்தான் அவரின் எண்ண ஓட்டங்கள் இருந்திருக்கும். இந்தப் பின்புலத்தில்தான் மரியாவை விலக்கிவிடத் திட்டமிடுகின்றார். அதாவது, நான் வாங்க நினைக்கும் கார் ஒன்று புதியது அல்ல, அது ஏற்கனவே ஓடியிருக்கிறது. அதை ஓட்டியவர் தான் ஓட்டியதை மறைத்து ஸ்பீடோ மீட்டரில் மாற்றம் செய்து விற்பனை செய்து என்னை ஏமாற்றுகிறார் என நினைத்தவுடன், 'அந்தக் கார் எனக்கு வேண்டாம்' என நாம் சொல்வதுபோல!

இவரின் திட்டம் இப்படி இருக்க, இறைத்திட்டம் வேறு மாதிரி இருக்கிறது.

மேற்காணும் குழப்பத்தில் இருந்தவர் அப்படியே தூங்கிப் போகின்றார். மனம் குழப்பமாக இருக்கும்போது ஒன்று தூங்க வேண்டும். அல்லது குளிக்க வேண்டும். இது பிளேட்டோவின் பாடம். தூங்கியவருக்கு கனவில் விடை கிடைக்கிறது.

கனவை, 'கனவுதானே!' என எடுக்காமல் சீரியஸாக எடுக்கிறார்.

'யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' என நிறைவு செய்கிறார் மத்தேயு.

என்னைப் பொறுத்தவரையில், ஆண்டவராகிய கடவுள் யோசேப்புக்குக் கனவில் தோன்றவில்லை என்றாலும் அவர் மரியாவை ஏற்றிருப்பார் என்றே நினைக்கிறேன்.

ஏனெனில், மத்தேயு அவரை அறிமுகம் செய்யும்போது, 'யோசேப்பு நேர்மையாளர்' என்கிறார். யோசேப்பின் நேர்மை சட்டத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மை அல்ல. மாறாக, இரக்கம் காட்டும் நேர்மையாய் இருந்தது. சட்டத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மையாக இருந்தால் தான் மரியாவைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் சட்ட ரீதியான செயலில் ஈடுபட்டிருப்பார். ஆனால், அவர் மனத்தில் போட்டு குழம்பிக் கொண்டிருந்தார்.

நேர்மையான மனம்தான் எந்நேரமும் குழம்பிக் கொண்டே இருக்கும். 'இரக்கம் காட்டுவதால் என்னை முட்டாள் என்பார்களா?' 'நல்லவனாய் இருப்பதால் என்னை ஒதுக்கி விடுவார்களா?' என்று குழம்புவது நேர்மையான உள்ளம்தான்.

யோசேப்பு நேர்மையாளர். திருச்சட்டம் நிறைவேற்றும் நேர்மையாளர் அல்ல. மாறாக, இரக்கம் காட்டும் நேர்மையாளர். மேலும், இவர் தன் திட்டம் விடுத்து இறைத்திட்டம் நிறைவேற்றியவர். வாழ்வில் குழப்பங்களை எதிர்கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக, குழப்பத்திலும் நன்றாகத் தூங்கும் வரம் பெற்றவர்.

Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================

நற்செய்தி (மத் 1:18-24)

விலக்கிவிட திட்டமிட்டிருந்தார்!

இயேசு பிறப்பதற்கு முன், அல்லது இயேசு பிறந்த சில நாள்களில் தங்கள் வீட்டின் முற்றத்தருகில் கட்டில் போட்டமர்ந்து, வானத்தின் நிலாவையும் நட்சத்திரங்களையும் மரியாளும், யோசேப்பும் இரசித்துக் கொண்டிருந்த அந்த ரம்மியமான முன்னிரவு நேரத்தில் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மரியாள் இந்தக் கேள்வியை யோசேப்பிடம் கேட்டிருப்பார்:

'என்னங்க. உங்கள ஒன்னு கேட்கலாமா? நான் கருவுற்றிருப்பது உங்களுக்குத் தெரிய வந்து நீங்க என்னய மறைவா விலக்கிவிட திட்டம் போட்டிங்கதானே?'

தனக்கு விருப்பமில்லாத கேள்வியைக் கேட்கும் பெண்ணிடமிருந்து விலகும் எந்த ஆணையும் போல,
'அதெல்லாம் ஒன்னுமில்ல! எனக்கு தூக்கம் வருது! குட்நைட்!' என்று evasive-வாக பேசிவிட்டு தன் வீட்டிற்குள் சென்றிருப்பார் யோசேப்பு.

'யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிருந்தார்' என்று நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.
'Failing to Plan is Planning to Fail' என்ற ஒரு மேற்கோளை இன்று வாசிக்க நேரிட்டது. இன்று மேலாண்மையியல் மற்றும் மனித வளத்தில் அதிகமாக பேசப்படும் வார்த்தை திட்டமிடுதல் அல்லது planning.

நாம் கட்டும் வீடு, சேர்க்கும் சேமிப்பு, படிக்கும் படிப்பு, பார்க்கும் வேலை, பார்க்கும் மருத்துவம் என எல்லாவற்றிற்கும் திட்டமிடல் தேவை என்று நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால், கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளின் செய்தி கொஞ்சம் எதிர்மாறானதாக இருக்கிறது.

மனித திட்டங்களையும், திட்டமிடுதலையும் உடைக்கிறது மீட்பின் நிகழ்வு.

மரியாளை விலக்கிவிட திட்டமிடுகின்றார் யோசேப்பு - அவரின் திட்டம் கலைகிறது - மரியாளை ஏற்றுக்கொள்ளப் பணிக்கப்படுகின்றார்.

தங்கள் இடையைக் காவல் காக்க திட்டமிடுகின்றனர் இடையர்கள் - அவர்களின் திட்டம் கலைகிறது - பெத்லகேம் செல்ல அழைப்பு வருகின்றது.

வானவியல் ஆராய்ச்சியில் காலம் கழிக்கலாம் என திட்டமிடுகின்றனர் ஞானிகள் - அவர்களின் திட்டம் கலைகிறது - தாங்கள் முன்பின் தெரியாத நாட்டில் முன்பின் தெரியாத அரசனைத் தேடி அலைகின்றனர்.

இறந்து போய்விடலாம் என திட்டமிடுகின்றார் சிமியோன் - அவரின் திட்டம் கலைகிறது - குழந்தையைக் கையில் ஏந்துகின்றார்.

ஓய்வு பெற்று வீட்டில் இருந்துவிடலாம் என நினைக்கிறார் அன்னா - அவரின் திட்டம் கலைகிறது - தூய ஆவியால் உந்தப்பட்டு எருசலேம் ஆலயம் வருகின்றார்.

ஆனால்,

அதே நேரத்தில் இயேசுவோடு தொடர்பில்லாதவர்களின் வாழ்வு திட்டமிட்டதுபோல நடக்கின்றது:

அகஸ்து சீசர் திட்டமிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது.
சத்திரக்காரன் திட்டமிட்டபடி சத்திரம் நிரம்பி வழிகின்றது.
ஏரோது திட்டமிட்டபடி குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.

ஆக, மீட்பின் திட்டத்தில்(!) தொடர்புடையோர் தங்கள் திட்டங்களை மாற்றிக்கொள்கின்றனர். அல்லது மாற்றிக்கொள்ளுமாறு பணிக்கப்படுகிறார்கள்.

யோசேப்பும் அப்படியே.

திட்டமிடுதல் எப்போதும் சரியல்ல என்பது நாளைய நற்செய்தி தரும் பாடம். ஏனெனில் திட்டமிடும்போது வாழ்க்கையின் spontaneityயை நாம் தடுக்கின்றோம்.

அப்படியெனில் நாம் செய்ய வேண்டியது என்ன?

'தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த யோசேப்பு போல நாமும் விழித்தெழுந்து நமக்கு இறைவன் பணித்திருப்பதை ஏற்றுக்கொள்வது!'

நிற்க.

நாளைக்கு விடிஞ்சவுடன் Monthly Planner வாங்கப் போகலாம் என நினைத்தேன்


- Fr. Yesu Karunanidhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!