Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   15  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம் 2ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எலியா மீண்டும் வருவார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார்.

எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)
=================================================================================
 பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 3: 4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், "எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?" என்று கேட்டார்கள்.

அவர் மறுமொழியாக, "எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார்.

திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எலியா ஏற்கனவே வந்துவிட்டார், மக்கள்தான் அவரைக் கண்டுணரவில்லை

ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த பாதையில் ஏதோ ஒன்று பளபளப்பாக தெரிய, அவர் அதை எடுத்துப் பார்த்தார். அவருக்கு அது என்ன என்று தெரியவில்லை. ஆனால், அவர் அருகில் இருந்தவர், அதை வைரம் என்று உடனே கண்டுபிடித்துவிட்டார். அதனால், அதை வைரம் என்று சொல்லாமல், வியாபாரம் பேச ஆரம்பித்தார்.

"நான் உனக்கு 100 ரூபாய் தருகிறேன், எனக்கு இந்த கல்லைக் கொடுத்துவிடு" என்றார். முதலாமவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு கல். அதற்கு ஏன் இவர் காசு தருகிறார் என்று யோசித்து விட்டு, சரி விலையை ஏற்றி பார்ப்போம் என்று கருதி, "எனக்கு 200 ரூபாய் கொடு" என்றார். இரண்டாமவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. "100 ரூபாயே இதற்கு அதிகம்" என்று பேரம் பேசினார்.

இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ஒரு பொற்கொல்லர், "எனக்கு அந்த கல்லைக்கொடு. நான் உனக்கு 2000 ரூபாய் தருகிறேன்" என்றார். முதல் ஆளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அந்த பணம் அப்போது அதிகமாக தெரிந்ததால், அவர் ஒத்துக் கொண்டார், வைரமும் கை மாறியது.

இப்போது அந்த இரண்டாமவர் முதலாமவரைப் பார்த்து, "முட்டாள், உன் கையில் இருந்தது சாதாரண கல் இல்லை. அது ஒரு வைரக்கல். அதன் மதிப்பு தெரியாமல், வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டாயே, முட்டாள், முட்டாள்" என்று கடிந்து கொண்டார். அதற்கு சிரித்தபடி முதலாமவ‌ர் சொன்னார், "எனக்கு அது வைரம் என்றோ, அதன் மதிப்போ, எதுவுமே தெரியாது. ஆனால், அது அத்தனையும் தெரிந்தும் ஒரு நூறு ரூபாய்க்கு கஞ்சத்தனம்பட்டு இழந்து விட்டாயே, உண்மையில் நீதான் மிகப் பெரிய முட்டாள்"

வைரத்தின் மதிப்பை அறியா முதல் மற்றும் இரண்டாம் மனிதர்களைப் போன்றுதான் நாமும் கடவுள் மற்றும் அவருடைய அடியார்கள் நம்மத்தியிலே இருக்கின்றார்கள் என்பதை அறியா பேதைகளாக இருக்கின்றோம் என்பது மிகவும் வேதனையான ஒரு விசயமாகும்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய முதன்மைச் சீடர்களான பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரும் உருமாற்ற நிகழ்விற்குப் பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி வருகின்றார்கள். அப்போது சீடர்கள் இயேசுவிடம், "எலியாதான் முதல் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி? என்று கேட்க, இயேசு அவர்களிடம் மறுமொழியாக, "எலியா வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவார் என்று கூறுவது உண்மையே. ஆனால் எலியா ஏற்கனவே வந்துவிட்டார். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள்" என்கிறார்.

இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் எலியாவைக் குறித்த யூதர்களின் புரிதலையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். இறைவாக்கினர் எலியா நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். எனவே, அவர் மீண்டுமாக வருவார் என்று யூதர்கள் நம்பினார்கள். காலங்கள் செல்லச் செல்ல எலியாவைக் குறித்த பார்வை யூதர்களிடம் இன்னும் விசாலமடைந்தது. இறைவாக்கினர் மலாக்கி புத்தகம் 4:5 ல் வாசிப்பது போன்று, "பெரிதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியா வருவார் என்றும் அவர் ஆண்டவருக்கான வழியை ஆயத்தமாக்குவார் என்றும் மக்கள் நம்பினார்கள். அதனால்தான் ஒவ்வொரு பாஸ்கா விழாவின்போது எலியாவிற்கென்று ஒரு இருக்கையானது தனியாக வைக்கப்பட்டிருக்கும்.

எலியாவைக் குறித்து யூதர்கள் என்ன புரிதலை வைத்திருந்தார்கள் என்று அறிந்த நாம், இயேசு எலியாவைக் குறித்து என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம். இறைவாக்கினர் எலியா திருமுழுக்கு யோவானின் உருவில் வந்துவிட்டார். மக்கள்தான் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள் என்பதுதான் எலியாவைக் குறித்த இயேசுவின் வார்த்தைகளாக இருக்கின்றது.

பல நேரங்களில் நாம் மாமனிதர்களும் ஏன் அவர்களை விட மேலானவர்களும் நம்மத்தியில் இருந்து பணிசெய்த போதும் அவர்களை ஏற்றுகொள்ளாமல், அவர்களுக்கு நாம் விரும்பியவாறு செய்வதுதான் மிகவும் வேதனையான ஒரு காரியமாக இருக்கின்றது. அதனால் நாம் மீட்படைய கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் இழந்து நிற்கின்றோம்.

எனவே, இயேசுவின் சீடர்களாகிய நாம், நம்மோடு வாழக்கூடிய இறையடியார்களை அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து ஏற்றுகொள்வோம், ஆண்டவரைக் குறித்து அவர்கள் போதிக்கின்ற போதனைக்கு செவிசாய்த்து, அதன்படி வாழ முயற்சிப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 திருமுழுக்கு யோவான்தான் வரவிருந்த எலியா

ஒரு காட்டில் வயதான துறவி ஒருவர் வசித்து வந்தார். அவர் மக்களுடைய நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றிருந்தார். ஏனென்றால் அவர் மக்களுடைய பிரச்னைகளுக்கு சரியான தீர்வுசொல்லி வந்தார். இதனால் மக்கள் அவருடைய போதனையைக் கேட்பதற்காக பல இடங்களிலிருந்தும் வந்தார்கள்.

ஒருநாள் அவரைச் சந்திக்க பக்கத்து ஊரிலிருந்த ஒரு மளிகைக் கடைக்காரர் வந்திருந்தார். அவர் அவ்வூரில் பெரிய பணக்காரர். அவர் துறவியிடம் நீண்ட நேரம் பேசிவிட்டு, போகும் தருவாயில் "குறிப்பிட்ட நாளில் நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து, நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்தினை சாப்பிட்டுவிட்டுச் சென்றால், அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்" என்றார். அதற்கு துறவி, "வழக்காக நான் யாருடைய வீட்டிற்கும் வருவது கிடையாது" என்று மறுத்தார். ஆனால் அந்த பணக்காரர் அதிகமாக வற்புறுத்தவே, அவருடைய வீட்டிற்கு வருவதாக வாக்களித்தார்.

அவர் போனபின்பு துறவி யோசித்துப் பார்த்தார். "இந்த மனிதர் நம்மை உண்மையான அன்பினால் அழைக்கிறாரா? அல்லது நான் பெரிய துறவி என்பதற்காக அழைக்கிறாரா? என்பதை சோதித்துப் பார்க்க விரும்பினார். எனவே அந்த பணக்காரர் சொன்ன நாளுக்கு முந்தின நாள் துறவி ஒரு பிச்சைக்காரரைப் போன்று உடை தரித்து, அந்த பணக்காரர் நடத்தி வந்த மளிகைக் கடைக்குச் சென்று, அங்கிருந்த ரொட்டித் துண்டுகளை எடுத்துத் திண்ணத் தொடங்கினார்.

இதைப் பார்த்ததும் அந்தப் பணக்காரருக்கு சரியான கோபம் வந்தது. எனவே அவர் ஒரு கம்பினை எடுத்து, பிச்சைக்காரர் வடிவில் இருந்த துறவியை அடி அடியென அடித்து விரட்டினார். துறவி பலத்த காயங்களோடு அங்கிருந்து ஓடிச் சென்றார்.

அடுத்த நாள், அதாவது அந்த பணக்காரர் தன்னுடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்த அந்த நாளில் துறவி நல்ல உடை உடுத்தி, உடலில் சந்தனமும், குங்குமமும் மணக்க அந்த பணக்காரரின் வீட்டிற்க்குச் சென்றார். துறவியைப் பார்த்ததும் அவர் பெருமகிழ்ச்சி அடைந்து, இன்முகத்தோடு அவரை வரவேற்றார். தன் வீட்டில் ஏற்பாடு செய்துவைத்திருந்த அறுசுவை உணவால் அவருக்கு விருந்து படைக்கத் தொடங்கினார்.

அப்போது துறவி அந்த பணக்காரரை நோக்கி, "நீ ஒரு சரியான பொய்யன். வெளிதோற்றத்தை வைத்து, மக்களை மதிப்பிடக்கூடிய ஒரு மனிதன்" என்றார். பணக்காரன் ஒன்றுமே புரியாமல், "சுவாமி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்" என்றான்.

அதற்கு துறவி மிகவும் சாதாரணமாக, "நேற்று உன்னுடைய கடைக்கு வந்து, ரொட்டியை எடுத்துத் தின்றதற்காக அடிவாங்கினேனே, அது வேறுயாருமல்ல நானேதான். சாதாரண ஒரு பிச்சைக்காரரின் உடையில் வந்த என்னை அடி அடியென அடித்து உதைத்தாய். ஆனால் இன்றைக்கோ நான் நல்ல உடையில் வந்ததால் என்னை அறுசுவை விருந்துகொடுத்து உபசரிக்கிறாய். அதனால்தான் சொல்கிறேன் நீ ஒரு பொய்யனென்று" என்று சொல்லிவிட்டு எதையும் சாப்பிடாமல் அங்கிருந்து நகர்ந்தார். பணக்காரன் எதுவும் பேசாமல் சிலையாய் நின்றான்.

உண்மையான அன்பினால் அல்ல, வெளித்தோற்றத்தை வைத்தே மக்கள் ஒருவர் மற்றவரை எடைபோடுகின்றனர் என்ற உண்மையை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கிறது.

நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் இயேசுவிடம், "எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?" என்று கேட்கிறபோது இயேசு அவர்களிடம், "எலியா வந்து எல்லாவற்றையும் சீர்படுத்தப்போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியா (திருமுழுக்கு யோவான் வடிவில்) ஏற்கனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுகொள்ளவில்லை, மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள்" என்று கூறுகிறார்.

யூதர்கள் நெருப்புக் குதிரையில் மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட எலியா மீண்டும் வருவார். அவர் வாக்களிக்கப்பட்ட மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வார் என்று நம்பினார்கள். இதனை நாம் இறைவாக்கினர் மலாக்கி புத்தகம் 3:1 ல் இவ்வாறு வாசிக்கின்றோம்: இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடிரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்".

ஆனால் எலியா இறைவாக்கினர் திருமுழுக்கு யோவானின் வடிவில் (லூக் 1:17) வந்தபோது மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தார்கள், அவரைத் துன்புறுத்தினார்கள். அதைத்தான் இயேசு எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்கிறார்.

ஆகவே நாம் ஒருவரை, அவருடைய வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடாமல் உள்ளார்ந்த விதத்தில் அன்பு செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் பேரின்ப வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
திருமுழுக்கு யோவானே எலியா

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வு. அண்ணாவைப் பார்ப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் வந்தார். "ஒரு சில மாதங்கள் லண்டன் சென்றுவர வேண்டும்?" என்றார். அதற்கு அண்ணா, "எதற்கு?" என்று கேட்டார்.

வந்தவர், "கலை நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துகொள்வதற்கு" என்று பதிலளித்தார். அது வரைக்கும் அமைதியாக பேசிய அண்ணா, கொஞ்சம் கடினமான குரலிலே பேசத் தொடங்கினார். "நீங்கள் எப்போதாவது தஞ்சை பெரிய கோவிலைப் போய் பார்த்திருக்கிறீர்களா?" என்று வந்தவரைப் பார்த்துக் கேட்க அவர், "இல்லை" என்று பதில் சொன்னார்.

உடனே அண்ணா, "தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது வெளிநாட்டவர் அல்ல, இங்கே உள்ள கட்டடக் கலைஞர்கள்தான். வெளிநாட்டிக்குச் சென்று கட்டடக் கலை நுணுக்கங்களை தெரிந்துகொள்வதற்கு முன்பாக, முதலில் நம் நாட்டில் உள்ள கலைச் செல்வங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்" என்று ஒரு போடு போட்டார். வந்தவர் எதுவுமே பேசாது அமைதியாக நின்றார்.

நம்மோடு இருக்கின்ற பலரின் பலவற்றின் மதிப்புத் தெரியாமல் வாழும் மக்களுக்கு இந்நிகழ்வு ஒரு சாட்டையடி.

நற்செய்தியிலே இயேசுவின் சீடர்கள் அவரிடம், "மெசியா வருவதற்கு முன்பாக எலியா வருவார் என்று சொல்கிறார்களே இது எப்படி?" என்று கேட்கிறார்கள். இயேசு அதற்கு, "எலியா ஏற்கனவே வந்துவிட்டார்; மக்கள்தான் அவரைக் கண்டுகொள்ளவில்லை" என்று பதிலளிக்கிறார்.

எலியா இறைவாக்கினர் பழைய ஏற்பாட்டில் சிறப்பான ஓர் இடத்தை வகித்தவர்; கடவுளின் வல்லமையை அதிகமாகப் பெற்றவர்; அவர் சொன்னதும் மழைபெய்வது நின்றது, வானத்திலிருந்து நெருப்பு பொழிந்தது. அந்தளவுக்கு அவர் கடவுளின் அருளைப் பெற்றிருந்தார். அவர் இறக்கவில்லை, மாறாக நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரிலே விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனவே விண்ணகத்திற்கு ஏறிச்சென்றவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை யூதர்களிடையே வலுப்பெற்றது.

"இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவர் எனக்கு முன்பாக வழியை ஆயத்தம் செய்வார்" (மலாக்கி 3:1), "ஆண்டவரின் நாள் வருமுன் இறைவாக்கினர் எலியாவை அனுப்புவேன்" (மலாக்கி 4:5) என்ற இறைவாக்கினர் மலாக்கியின் நூலில் இடம்பெற்ற இறைவார்த்தைகள் இதை உறுதி செய்வதாக இருந்தன. இவ்வாறு மெசியாவை வருகைக்கு முன்பாக இறவாமல் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இறைவாக்கினர் எலியா தோன்றுவார் என்ற நம்பிக்கை வளர்ந்தது.

ஆனால் இயேசுவோ திருமுழுக்கு யோவான்தான் அந்த எலியா என்பதை மிக அழுத்தமாக எடுத்துரைக்கிறார். சீராக் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் எலியாவின் வார்த்தைகள் தீவட்டி போல் இருக்கும் என்று படிக்கின்றோம். திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் அப்படித்தான் இருந்தன. அதனால்தான் மக்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு உள்ளம் குத்துண்டவர்கள் ஆனார்கள். லூக் 1:17 ல் படிக்கின்றோம், "திருமுழுக்கு யோவான் எலியாவின் உளப்பாங்கையும், வல்லமையையும் உடையவராய் ஆண்டவருக்கு முன்பாகச் செல்வார்" என்று. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது திருமுழுக்கு யோவான்தான் எலியா என்பதை நாம் திட்டவட்டமாகக் கூறலாம்.

இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அன்று யூதர்கள் எப்படி திருமுழுக்கு யோவானை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்களோ, அதுபோன்று இன்றைக்கு நாமும் நம்முள் செயலாற்றும் கடவுளை, கடவுளின் பிரசன்னத்தை உணராது வாழ்கிறோம்.

கடவுளே குழந்தையாக பிறக்க இருக்கும் இக்காலத்திலேயே இயேசுவை முழுமையாக உணர்ந்து, அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்வோம். அதன்மூலம் அவர்வழியில் நடந்து இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
நற்செய்தி (மத் 17:10-13): தாங்கள் விரும்பியவாறெல்லாம்

திருமுழுக்கு யோவானை மையப்படுத்தியே நாள்கள் நகர்கின்றன. 'எலியா' ஏற்கனவே வந்துவிட்டார் என்று, திருமுழுக்கு யோவானை எலியாவிற்கு ஒப்பிடும் இயேசு, 'தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள்' என்று சொல்கின்றார். இங்கே இயேசுவின் மனத்தில் இருப்பது திருமுழுக்கு யோவானின் படுகொலையாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

தங்கள் விருப்பம்போல செய்வது - இதன் பொருள் என்ன?

நீதித்தலைவர்கள் நூலில் அடிக்கடி இடம் பெறும் ஒரு வசனம் இது: 'அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் இல்லை. ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு செயல்பட்டனர்.'

மனுக்குலத்தின் முதற்பெற்றோர் செய்த முதற் பாவமே அவர்கள் தாங்கள் விரும்பியவாறு செயல்பட்டதுதான்.

நம் ஒவ்வொருவருக்கும் 'விருப்பம்' என்பது உண்டு. இதை நாம் உள்ளத்து விருப்பம் என்ற சொன்னாலும் இது என்னவோ தூண்டப்பெறுவது மூளையில் இருந்ததான்.

திருமுழுக்கு யோவான் ஏரோதைத் தட்டிக் கேட்க, கடிந்துகொள்ள, ஏரோது அவரைக் கொலைசெய்யச் சொல்கின்றான். தன் விருப்பம்போல நடக்க முயற்சிக்கின்றான். தன்விருப்பம் கொண்ட அவனை பகைத்துக்கொள்ள மற்றவர்கள் விரும்பவில்லை. ஆக, தன்விருப்பமே தரணியர் விருப்பம் என்று துணிகின்றான் ஏரோது.

இன்று, என்னுடைய விருப்பங்கள் எல்லாம் எவை?
எனக்கு அருகில் இருப்பவரின் விருப்பம் தவறு என்று தெரியும்போது என்னால் சுட்டிக்காட்ட அல்லது தட்டிக்கேட்க முடிகிறதா?

எனக்கு விருப்பம் என்பதற்காக நான் செய்வது அனைத்தும் நல்லதல்ல என்பதைச் சொல்கிறது நாளைய வாசகம்.

- Fr. Yesu Karunanidhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!