Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   14  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம்  2ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
  என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!

என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: "இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, 'நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ 'அவன் பேய் பிடித்தவன்' என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார்.

இவர்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்.

எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

கட்டளைகளுக்கு செவி சாய்ப்பது அவசியமானது.

அது எத்தகைய ஆசீர்வாதங்களை கொணரும் என்பதனை முதலாவது வாசகம் நமக்கு உணர்த்துகின்றது.

ஞானத்தோடு இதனைஅறிந்து கட்டளைகளை கடைபிடிப்பவன், இவ்வுலகில் சாட்சியாகின்றான். நாமும் சாட்சியாவோம். கட்டளைகளை ஞானத்தேர்டு கற்று, அறிந்து, கடைபிடித்து வாழ்ந்து, ஆசீர்வாதங்களை நமதாக்குவோம்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 "வெறுப்போடு விமர்சிப்பவர்களை விட்டுத் தள்ளுவோம்"

விவசாயி ஒருவர் வேலை விசயமாக தன்னுடைய கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்றார்.

அவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு, உயர்ரக உணவகம் ஒன்றில் மதிய உணவு உட்கொள்வதற்காக உள்ளே நுழைந்தார். உணவகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு மூலையில் இருக்கை ஒன்று காலியாக இருந்ததால், அதில் போய் அமர்ந்துகொண்டு உணவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்தில் உணவும் வந்தது.

உணவு உட்கொள்வதற்கு முன்பாக உணவைக் கொடுத்த இறைவனுக்கும், உழைத்த விவசாயிக்கும் நன்றி ஜெபம் சொல்லிவிட்டு சாப்பிடுவதை அவர் வழமையாகக் கொண்டிருந்தார். அன்றைக்கும் அவர் உணவைச் சாப்பிடுவதற்கு முன்னதாக நன்றி ஜெபம் சொல்லிவிட்டு சாப்பிடத் தொடங்கினார்.

அப்போது அவருக்கு நேர் எதிர்திசையில் அமர்ந்திருந்த இளைஞர்களுள் ஒருவன், "என்ன பெரியவரே! இப்படித் தான் உங்கள் ஊரில் இருக்கின்றவர்கள் எல்லாம் மந்திரம் சொல்லிவிட்டுச் சாப்பிடுவார்களா?" என்று நக்கலாகப் கேட்டான். அதற்கு அந்த விவசாயி மிகவும் சாதாரணமாக, "எங்கள் ஊரில் இருக்கின்ற பன்றிகளைத் தவிர ஏனையோர் யாவரும் சாப்பிடுவதற்கு முன்பாக இப்படித்தான் ஜெபம் சொல்லிவிட்டுச் சாப்பிடுவார்கள்" என்றார்.

அந்த இளைஞனால் வாய் பேச முடியவில்லை.

தன்னைக் கேலி செய்த - விமர்சித்த - இளைஞனுக்கு அந்த கிராமத்து விவசாயி தகுந்த பதிலடி கொடுத்தது மிகவும் மகிழ்சிக்குரிய காரியமாகும்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இளைஞனைப் போன்று, நாம் வாழும் இந்த பூமியில் நம்மைத் தேவையில்லாமல் விமர்சிப்பதற்கு ஏராளமான பேர் இருக்கின்றார்கள். அவர்களை எப்படி எதிர்கொள்வது? அவர்களுக்கு என்ன பதிலடி கொடுப்பது என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர்களின் இரண்டும் கெட்டான் வாழ்க்கையை வெட்ட வெளிச்சமாக்குகின்றார். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று எடுத்துக்கூறுகின்றார். இயேசுவின் கடுஞ்சொல்லுக்கு ஆளாகின்ற அளவுக்கு மக்கள் கூட்டம் என தவறு செய்தது என்று ஆராய்ந்து பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

திருமுழுக்கு யோவான் வந்தார். அவர் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராய் விளங்கினார்; காட்டுக்குச் சென்று கடுந்தவம் புரிந்து, எளிமைக் கோலம் பூண்டு, மிகவும் தாழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஆனால் மக்களோ அவரை "பேய்பிடித்தவன்" என்று விமர்சனம் செய்யத் தொடங்கினார். திருமுழுக்கு யோவானுக்கு முற்றிலும் மாறாக மானிட மகன் இருந்தார். அவர் மக்களோடு உண்டார்; குடித்தார்; அவர்களோடு நன்றாகப் பழகினர். மக்களோ அவரைப் பெருந்தீனிகாரன்; பாவிகளின் நண்பன் என்று விமர்சனம் செய்தார்கள். இவ்வாறு ஒருவர் எப்படி வாழ்ந்தாலும் மக்கள் விமர்சனம் செய்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களுடைய செயல்பாடு சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சிக்கின்றார்.

மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வின் வழியாக நாம் ஒருசில உண்மைகளை அறிந்துகொள்ளலாம். அதில் முதலாவது, ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் மக்கள் சொல்வார்கள் என்பதாகும். பரிசேயர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே எப்போதும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் இயேசு எப்போதும் வெற்றிபெற்றுக் கொண்டே இருந்தார். இது பிடிக்காத பரிசேயர்கள் அவரை விமர்சனம் செய்து கொண்டே இருந்தார்கள்.

இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் இரண்டாவது உண்மை எல்லா விமர்சனங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதில்லை ஆகும். இயேசுவின் மீது மக்கள் குறிப்பாக பரிசேயர்கள் ஏராளமான விமர்சங்களை வைத்தார்கள். பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான், பெருந்தீனிக்காரன் என்றெல்லாம் அவர்கள் இயேசுவை விமர்சனம் செய்தார்கள். அவற்றையெல்லாம் ஆண்டவர் இயேசு கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், அவற்றில் உண்மையில்லĭ-;, நம்பகத் தன்மையில்லை. அதனாலேயே இயேசு அவற்றைப் புறந்தள்ளுகின்றார்.

நம்முடைய வாழ்க்கையிலும் இது போன்று ஏராளமான விமர்சனங்கள் நம்மீது வரும். அவையெல்லாம் உண்மைதானா? நம்பகத் தன்மை உடையதா? என்று அறிந்துகொண்டு அதன்பிறகு அதனை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். எல்லா விமர்சனங்களையும் நம்முடைய மூளைக்கு எடுத்துக்கொண்டு போய், அதையே மணிக்கணக்கில் சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், அதனால் பாதிக்கப்படப் போவது என்னமோ நாம்தான். ஆகவே, நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை நாம் விவேகத்தோடு கையாளவேண்டும்.

நிறைவாக இந்த நிகழ்வு உணர்த்தும் உண்மை, ஒருவருடைய செயல்தான் ஒருவரைப் பற்றி சான்று பகர்கின்றது என்பதாகும். நம்முடைய வாழ்க்கை கடவுளுக்கு உகந்தாக மாற, நாம் நற்காரியங்களைச் செய்து, நல்வழியில் நடக்கவேண்டும்.

எனவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று நம்மீது விழும் விமர்சனங்களை முன்மதியோடும் விவேகத்தோடும் கையாளுவோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 " விமர்சனமும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும்

வரலாறு இன்றைக்கும் பெருமையோடு நினைவுகூர்ந்து கொண்டிருக்கிற ஒரு மிகச் சிறந்த சிற்பி மைக்கேல் ஆஞ்சலோ என்பவர்.

ஒருமுறை இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த கொன்பலோனியர் சொடரினி என்பவர் மைக்கேல் ஆஞ்சலோவிடம், தாவீது அரசரின் சிலையை ஒருமாத காலத்திற்குள் வடித்துத்தருமாறு கேட்டுக்கொண்டுவிட்டுப் போய்விட்டார். மைக்கேல் ஆஞ்சலோவும் ஒரு மாத கால அவகாசம் எடுத்து தாவீது அரசரின் சிலையை தத்ரூபமாக வடித்து வைத்தார்.

ஒரு மாத காலத்திற்குப் பின்னர் சிலையை பார்க்க வந்த சொடரினி மைக்கேல் ஆஞ்சலோ வடித்து வைத்திருந்த தாவீது அரசரின் சிலையைப் பார்த்துவிட்டுப் பிரமித்துப் போனார். ஆனாலும் அந்த சிலையில் தாவீது அரசரின் மூக்கு மட்டும் பெரிதாக இருப்பதாகவும், அந்த மூக்கினைச் சரி சரிசெய்துவிட்டால் சிலை இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

உண்மையில் தாவீது அரசரின் மூக்கு சரியாகத்தான் இருந்தது. இருந்தாலும் ஏதாவது குறைசொல்லவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்த மனிதர் அவ்வாறு சொல்லியிருந்தார். இதைப் புரிந்துகொண்ட மைக்கேல் ஆஞ்சலோ இருபது அடியுள்ள அந்த உயரமான தாவீது சிலையின்மீது ஏறி, மூக்குப் பகுதியில் உளியை வைத்து, அதைச் சரி செய்வதுபோல் செய்தார். தான் சரிசெய்வது அவருக்குத் தெரியவேண்டும் என்பதற்காக தரையிலிருந்து அவர் கொண்டுவந்திருந்த மணலை தாவீது அரசரின் சிலையிலிருந்த மூக்குப் பகுதியில் இருந்து கீழே தூவினார்.

பின்னர் மைக்கேல் ஆஞ்சலோ அந்த மனிதரிடம், "இப்போது சிலை நன்றாக இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு அவர், "எல்லாம் பிரமாதமாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டு, அதை வாங்கிக்கொண்டு போனார்.

இந்த உலகத்தில் நாம் என்ன செய்தாலும் அதை விமர்சிப்பதற்கு ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களது விமர்சனத்தை நாம் எப்படி விவேகத்தோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு யூதர்களின் முரண்பாடான வாழ்க்கை நிலையைக் குறித்து அதிருப்தி கொள்கிறார். அவர்கள் செய்வது யாவும் சிறுபிள்ளைத்தனம் எனக் கடிந்துகொள்கிறார். ஏனென்றால் திருமுழுக்கு யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. ஆனால் அவரை மக்கள் "பேய் பிடித்தவன்" என்று விமர்சனம் செய்தார்கள். இதற்கு முற்றிலும் மாறாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோ உண்டார், குடித்தார், மக்களோடு உறவாடினார். ஆனால் அவர்களோ இயேசுவை "இவன் பெருந்தீனிக்காரன், குடிக்காரன், வரிதண்டுவோருக்கும், பாவிகளுக்கும் நண்பன்" என்று விமர்சனம் செய்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களது செயலை சிறுபிள்ளைத்தனம் என கடிந்துகொள்கிறார்.

பல நேரங்களில் இயேசுவுக்கு ஏற்பட்ட நிலை நமக்கும் ஏற்படலாம். நாம் ஒரு காரியத்தைத் திறம்பட செய்திருப்போம். ஆனால் மக்களோ "இவன் என்ன பெரிதாகச் செய்துவிட்டான், நாம் பார்க்காததையா இவன் செய்துவிட்டான்" என்று விமர்சிக்கக்கூடும். அத்தகைய தருணங்களில் நாம் மனம் உடைந்து போகாமல், பொறாமையினால், நம்மை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் செலுத்தப்படும் விமர்சனத்தை புறந்தள்ளிவிட்டு, தொடர்ந்து நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

நம்மை விமர்சிக்கின்றவர்களைப் பற்றிச் சொல்லும்போது சார்மிங் போலக் என்ற அறிஞர் கூறுவார், "விமர்சகர் என்பவர் ஓடக் கற்பிக்கும், காலில்லாத மனிதர்" என்று. அதே போன்று கென்னத் டைநம் என்ற அறிஞர் கூறுவார், "விமர்சகர்களுக்கு வழி தெரியும். ஆனால் வாகனம் ஓட்டத் தெரியாது" என்று. இதுதான் உண்மை. ஆதலால் நம்மை விமர்சிக்கிற ஒருவரால் நாம் செய்யும் செயலைச் செய்யமுடியுமா? என்றால் முடியாது என்பதுதான் வருத்தமான ஒரு காரியமாக இருக்கின்றது. எனவே நம்மீது சுமத்தப்படும் விமர்சங்களை நாம் எப்படி அணுகவேண்டும் என்பதுதான் நமது சிந்தனைக் கூறியதாக இருக்கின்றது.

ஆண்டவர் இயேசு தன்மீது சுமத்தப்பட்ட விமர்சங்களை எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக இருக்கிறது. அவர் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் விமர்சனங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால் அதில் உண்மையில்லை. பொய்யும், பொறாமையும்தான் அதில் அதிகமாகத் தென்பட்டது.

ஆகவே, நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்கள் எத்தகையது என்பதை ஆழமாக அலசிப்பார்ப்போம். ஒருவேளை அதில் பொய்யும் பொறாமையும் அதிகமாகத் தலைதூக்கினால் அவற்றை அப்படியே புறந்தள்ளுவோம். ஒருவேளை அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு நம்மைத் திருத்திக்கொள்வோம். தொடர்ந்து இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
விமர்சனங்களைக் கடந்து சாதித்துக் காட்டுவோம்!

கல்லூரியில் படித்து வந்த டோனிக்கு கால்பந்து விளையாடுவது என்றால் அவ்வளவு இஷ்டம். அவனுக்கு எப்படியாவது கல்லூரியில் உள்ள கால்பந்து அணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று விருப்பம். அதனால் அவன் கல்லூரியில் இருந்த கால்பந்து பயிற்சியாளரிடம் சென்று, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினான். அவரும் டோனிக்கு கால்பந்து விளையாட்டில் இருந்த ஆர்வத்தைக் கண்டு, அவனை ஜூனியர் கால்பந்து அணியில் சேர்த்தார்.

அன்று மாலை வீட்டிற்கு வந்த டோனி, தான் கால்பந்து அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதைக் குறித்து, தன்னுடைய பெற்றோரிடமும் தாத்தாவிடமும் நண்பர்களிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தான்.

ஒருவாரம் கழித்து டோனியை சந்தித்த அவனுடைய தாத்தா, "என்ன தம்பி, கால்பந்தாட்டப் பயிற்சிகள் எல்லாம் ஒழுகாகப் போகின்றனவா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அப்படியொன்றும் சொல்லிக்கொள்வது மாதிரி இல்லை. பந்தை தட்டித் தட்டி ஆடச் சொல்கிறார்கள். அப்படி ஆடும்போது சத்தமாக ஏதாவது பாட்டை - மியூசிக்கைப் - போட்டுவிடுகிறார்கள். இதனால் பயிற்சியாளர் என்ன சொல்கிறார் என்றே கேட்பதில்லை. அதனால் என்னால் ஒழுங்காக ஆடமுடியவில்லை" என்றான்.

தாத்தாவிற்குக் கோபம் கோபமாக வந்தது. "என்ன இவர்கள், பயிற்சி கொடுக்கிறார்களா? இல்லை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துகிறார்களா?" என்று டோனியை இழுத்துக்கொண்டு, கல்லூரியில் இருந்த கால்பந்து பயிற்சியாளரிடம் சென்றார். "என்ன நீங்கள்! இவனுக்கு சரியாகப் பயிற்சி கொடுப்பதில்லையா?" என்று சற்று கோபமாகக் கேட்டார். அதற்கு பயிற்சியாளர், "ஐயா பெரியவரே! மைதான உளவியல் (Groundu Psychology) என்ற ஒன்று இருக்கின்றது... இன்னும் தெளிவாகச் சொல்கிறேன் கேளுங்கள். கால்பந்து போட்டியில் விளையாடுகின்றபோது, மைதானத்தில் பார்வையாளராக இருக்கின்ற பலரும் பலவாறு கத்துவார்கள். சிலர் பாராட்டுவார்கள். சிலர் கடுமையாகத் திட்டுவார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வதற்காகத்தான் மியூசிக்கை சத்தமாகப் போட்டு பயிற்சி கொடுக்கிறேன்" என்றார். பயிற்சியாளர் இந்த உண்மையை விளக்கிச் சொன்னதும் தாத்தா அமைதியானார்.

கால்பந்தாட்டப் போட்டியில் மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கையிலும் பலர் நம்மை ஏசுவர், பேசுவர். அவற்றை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு இலக்கில் மட்டுமே கவனத்தை வைத்து, அதை நோக்கி விரைந்தோம் என்றால், நமக்கு வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, யூதர்களின் முரண்பட்ட வாழ்க்கையைக் கடிந்துகொள்கின்றார். இயேசு கிறிஸ்து, யூதர்களை ஏன் கடிந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

திருமுழுக்கு யோவான் காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிந்து, மிகச் சாதாரண உடை உடுத்திக்கொண்டு, மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்து வந்தார். மக்களோ அவரைப் பேய்பிடித்தவன் என்று விமர்சித்தார்கள். இயேசுவோ இதற்கு முற்றிலுமாக மாறாக, ஒரு குடும்பச் சூழலில் வளர்ந்து, எல்லா மக்களோடும் பேசிப் பழகி, அவர்களோடு உண்டும் குடித்தும் வந்தார். ஆனால் மக்களோ அவரை பாவிகளின் நண்பன், பெருந்தீனிகாரன் என்று விமர்சித்தார்கள். இவ்வாறு எப்படி வாழ்ந்தாலும் விமர்சித்துக் கொண்டே யூதர்கள் இருந்ததால்தான், இயேசு அவர்களைச் சாடுகின்றார்.

யூதர்கள் தங்களை விமர்சிக்கின்றார்களே என்பதற்காக திருமுழுக்கு யோவானும் சரி, இயேசுவும் சரி, தாங்கள் எடுத்த காரியத்திலிருந்து, இலட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை என்பதுதான் நாம் இங்கே கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக இருக்கின்றது. பலநேரங்களில் நாம் யாராவது நம்மை விமர்சித்துவிட்டால் அல்லது தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டிவிட்டால், நம்முடைய அத்தனை முயற்சியையும் மூட்டை கட்டிவிட்டு, மூலையில் ஒடுங்கிப் போய்விடுகின்றோம். வாழ்க்கை என்றால் மேடு, பள்ளம், ஏற்றம், இறக்கம், ஏச்சு, பேச்சு இருக்கத்தான் செய்யும். அதற்காக நாம் நம்முடைய முயற்சிகளை மூட்டை கட்டி வைப்பது எந்தவிதத்தில் நியாயம்?.

ஒருமுறை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஒரு மேடையில் இவ்வாறு சொன்னார், "உசுப்பேத்துறங்கள உம்முன்னு... கடுப்பேத்துறவங்கள கம்முன்னு கடந்து போனா... வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்" என்று. ஆம். நம்முடைய வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் உதவாத விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கடந்துபோவதுதான் வெற்றிக்கான தலைசிறந்த வழியாகும். திருமுழுக்குக் யோவானும் இயேசுவும் நமக்கு அத்தகைய பாடத்தைக் கற்றுத் தருகின்றார்கள்.

ஆகவே, நம்முடைய வாழ்வில் நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்களாய், ஏச்சு, பேச்சுகளை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டு, இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சிடாதது வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
நற்செய்தி (மத் 11:16-19): ஞானம் மெய்யானது!


நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சமகாலத்தில் வழங்கப்பட்ட சொலவடை அல்லது பழமொழி ஒன்றை வாசிக்கின்றோம்: 'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம். நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை'

இந்தச் சொலவடை சிறுபிள்ளைகளின் விளையாட்டுச் சொல்லாடல் என்றும் சொல்கிறார் இயேசு.

மேற்காணும் சொலவடை சிறுபிள்ளைகளின் விளையாட்டுகளில் ஒன்று. சிறுபிள்ளைகளின் விளையாட்டுகள் பெரும்பாலும் பெரியவர்கள் செய்பவற்றின் இமிடேஷன்தான். வீடு கட்டுவது, சோறு சமைப்பது, வாகனம் ஓட்டுவது என பெரியவர்களின் செயல்களை சிறுபிள்ளைகள் விளையாட்டாகச் செய்து பார்ப்பர். இயேசு குறிப்பிடும் பழமொழியில் வரும் சிறுபிள்ளைகள் பாலஸ்தீன நாட்டில் நிலவிய திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளை இமிடேஷன் செய்கின்றனர். திருமண நிகழ்வில் குழல் ஊதுவதும், கூத்தாடுவதும் இருக்கும். அதாவது, இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்த நிகழ்வுகள். ஒன்று இருக்கும்போது மற்றதும் இருக்க வேண்டும். அதே போல இறப்பு அல்லது அடக்கச் சடங்கில் வீட்டார் ஒப்பாரி வைக்க, வெளியிலிருந்து அழைக்கப்பட்டோர் அதற்கேற்ப மாரடிப்பர்.

இதன் கருத்து ஒன்றுதான்: 'ஒருவரின் எதிர்பார்பிற்கு ஏற்ப அடுத்தவர் செயல்பட வேண்டும்'

திருமுழுக்கு யோவான் வருகிறார். மக்கள் அந்நேரம் உண்டு, களித்து, குடிவெறியில் இருக்கிறார்கள். ஆனால், திருமுழுக்கு யோவானோ உண்ணவுமில்லை. குடிக்கவுமில்லை. அவர் தங்களைப் போல இல்லாததால் அவருக்கு உடனடியாக 'பேய்பிடித்தவன்' என்ற முத்திரையைக் குத்திவிடுகின்றனர்.

இயேசு வருகிறார். ஆனால் அந்நேரம் மக்கள் வெளிவேடத்தனமான ஒறுத்தலில் இருக்கின்றனர். இயேசுவோ உண்டு குடிக்கின்றார். அவர் தங்களைப் போல இல்லாததால் உடனடியாக அவரை 'பெருந்தீனிக்காரன்' என அழைக்கின்றனர்.

இவ்வாறாக, மக்கள் தங்கள் எதிர்பார்ப்புக்களுக்கேற்ப கடவுள்-மனிதர்களும், இறைவாக்கினார்களும், ஏன் கடவுளுமே செயல்பட வேண்டும் என நினைக்கின்றனர்.

இப்படி இருப்பதை சிறுபிள்ளைத்தனம் என்கிறார் இயேசு.

ஆனால், இறுதியில் 'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களை சான்று' என்கிறார்.

எதிர்பார்ப்புக்களின் படி நடக்கிறவர்கள் மனிதர்கள் என்றாலும், அதையும் மீறி சிலர் இருப்பதை இருப்பதுபோல ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்வர். இவர்களின் செயல்கள் இவர்களின் ஞானம் மெய்யானது என்பதைக் காட்டும்.

ஆக, எதிர்பார்ப்புகளை விடுத்து இறைவனை அல்லது இறைவாக்கினரை அல்லது மற்றவரை இருப்பதுபோல ஏற்றுக்கொள்வதும், அதற்கேற்ப நம் செயல்களை வடிவமைத்துக்கொள்வதும் மெய்யான ஞானம்.

- Fr. Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!