Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   13  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப்பிடித்து, "அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" என்று உன்னிடம் சொல்பவரும் நானே. "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்," என்கிறார் ஆண்டவர்.

இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோகும்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.

ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன். பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச் செய்தார் என்றும், இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்துகொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்துகொள்வர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  145: 1,9. 10-11. 12-13ய (பல்லவி: 8)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13a உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசா 45: 8
அல்லேலூயா, அல்லேலூயா! வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை

லெபனான் நாட்டுக் கவிஞனாகிய கலீல் ஜிப்ரான் எழுதிய நாடோடி (Wanderar) என்ற புத்தகத்திலே இடம்பெறுகின்ற ஒரு நிகழ்ச்சி.

கடற்கரையில் எதிர் எதிரே நடந்துகொண்டிருந்த நண்பர்கள் இருவர் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து, "இந்த கடற்கரை மணலில் ஒன்றைத் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கின்றேன். ஆனால் அதனை சிறிது நேரத்திலே அலை வந்து அழித்துவிட்டுப் போய்விடுகின்றது. அது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை" என்றார். அதற்கு மற்றவர், "நானும் இந்த கடற்கரையில் ஒன்றை எழுதி வைத்தேன். ஆனால் அது ஒருசில நாட்களாகவே அழியாமல் அப்படியே இருக்கின்றது" என்றார்.

அதற்கு முதலாமவர் இரண்டாமவரைப் பார்த்து, "அலை வந்து அழிக்காத அளவுக்கு கடற்கரை மண்ணில் அப்படி என்ன எழுதி வைத்தாய்?" என்று கேட்டார். "இந்த கடல் போன்ற உலகத்தில் நான் ஒரு சிறு துளி என்று எழுதி வைத்தேன்" என்றார் இரண்டாமவர். பின்னர் அவர் முதலாமவரைப் பார்த்து, "அலைகள் வந்து அழிக்கக்கூடிய அளவுக்கு கடற்கரை மணலில் நீ என்ன எழுதி வைத்தாய்?" என்று கேட்டார். "அரசாங்கத்தில் மிக முக்கியாமான பொறுப்பில் இருக்கும் நான்.... என்று எழுதி வைத்தேன்" என்றார். அப்போதுதான் இரண்டாமவருக்குப் புரிந்தது முதலாமவரின் எழுத்துகள் ஏன் அழிந்துபோயின. தான் எழுதியவை ஏன் அழியாமல் இருக்கின்றன என்று.

உள்ளத்தில் தாழ்ச்சி கொண்டோருக்கு ஆசிர்வாதமும், ஆணவம் கொண்டவருக்கு அழிவும்தான் கிடக்கும் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். தாழ்ச்சி கொண்டோர் வீழ்ச்சி அடையார்; ஆணவம் கொண்டோர் அழிவைத் தவிர வேறு எதனையும் அடையார் என்பது எவ்வளவு ஆழமான உண்மை.

நற்செய்தி வாசகத்த்தில் ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்துப் பேசுகின்ற போது, "மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்று கூறுகின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவிடமிருந்து இவ்வளவு பெரிய வாழ்த்தொலியைக் கேட்டதே மிகப்பெரிய பாக்கியம்தான். எது இயேசுவை திருமுழுக்கு யோவானைக் குறித்து இவ்வளவு உயர்வாகப் பேச வைத்தது என்று சிந்தித்தப் பார்ப்பது நம்முடைய கடமையாகும்.

யோவான் நற்செய்தியாளர் திருமுழுக்கு யோவான் கூறியதாக இவ்வாறு சொல்வார், "நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கின்றேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப் பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்று. திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளை ஒருமுறை படித்துப் பார்த்தாலே போதும், அவர் எந்தளவுக்கு தாழ்ச்சி நிறைந்தவராய் இருக்கின்றார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஒரு பெரிய இறைவாக்கினர்; மக்களால் அதிகமாக மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவரே மெசியாவின் மிதியடி வாரை அவிழ்க்கக் கூட நான் தகுதியற்றவன் என்று சொல்கின்றார் என்றால், உண்மையிலே அவர் எந்தளவுக்குத் தாழ்ச்சி நிறைந்தவராய் இருந்திருப்பார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த புண்ணியத்திலும் இது போன்ற புண்ணியத்திலும் திருமுழுக்கு யோவான் சிறந்து விளங்கியதால் ஆண்டவர் இயேசு அவரை, மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் யாருமில்லை என்று எடுத்துரைக்கின்றார்.

இயேசு திருமுழுக்கு யோவானை இவ்வாறு வாழ்த்திவிட்டு தொடர்ந்து கூறுகின்ற, "ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே" என்ற வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றன. இதன்வழியாக இயேசு கூற விரும்பும் செய்தி என்னவென்று பார்ப்போம்.

திருமுழுக்கு யோவான், மக்கள் தங்களுடைய பாவத்திலிருந்து விலக வேண்டும்; மனமாறவேண்டும்" என்றுதான் எடுத்துச் சொன்னார். அவர் ஒருபோதும் கடவுளின் அன்பை, குறிப்பாக சிலுவையில் ஆண்டவர் இயேசு பட்ட பாடுகளை எடுத்துச் சொல்லவில்லை. அதனால் அவர் சிலுவையில் இயேசு பட்ட பாடுகளின் வழியாக கடவுள் இந்த உலகத்தின் மீது கொண்டிருக்கும் அன்பை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், திருமுழுக்கு யோவான் பிறகு வரக்கூடிய மக்கள் இயேசுவின் பாடுகளையும் பாடுகளையும் அவருடைய அன்பையும் அறிந்திருக்கமுடியும்; அதனால் அவர்கள் இறைவனுக்கு மிக நெருக்கமாக வாழ முடியும் என்பதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார். ஆகையால், நாம் கடவுளின் மேலான அன்பை உணர்ந்து, அதன்படி வாழ்ந்தால் விண்ணகத்தில் மிகப்பெரிய பேறுபெறுவோம் என்பது உறுதி.

எனவே, திருமுழுக்கு யோவானின் விளங்கிய தாழ்ச்சியை நாம் கடைப்பிடித்து வாழ்வோம், இறைவனுடைய அன்பிற்கு உணர்ந்தவர்களாய் அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 "மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை"

அமெரிக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் ஆபிரகாம் லிங்கனுக்கு என்று ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஏன் என்பதற்காக சொல்லப்படுகின்ற ஒரு நிகழ்வு.

ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க அதிபராக இருந்தபோது உள்நாட்டுப் போர் வெடித்தது. அதை அடக்கவும் மக்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதில் கையொப்பமிட்டு செயல்படுத்தவும் ஆணையிட்டார். இதை அறிந்த அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்டாண்டன், "இது என்னவிதமான ஆணை?, இதைச் செயல்படுத்தினால் நாட்டுக்கு நல்லதல்லவே. இவ்வளவு மோசமான ஓர் ஆணையை பிறப்பித்திருக்கிறார், ஆபிராகாம் லிங்கனுக்கு என்ன புத்தி பேதலித்துவிட்டதா?" என்று சராமாரியாக விமர்சித்தார்.

இதைக் கேள்விப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பதறிப் போனார். 'உண்மையிலே நாம் பிறப்பித்த ஆணை, மக்களுடைய நலனுக்கு விரோதமான ஆணையா?, இது நாட்டிற்கு நல்லது கிடையாதா?' என்று யோசிக்கத் தொடங்கினார். உடனே பாதுகாப்புத் துறை அமைச்சரான ஸ்டாண்டனைத் தன்னுடைய அறைக்குக் கூப்பிட்டு கலந்துபேசினார். அதன்பின் வெளியே வந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, 'போர்க்கலையில் என்னைவிடை ஸ்டாண்டனே திறமைசாலி, ஆகையால், இதற்கு முன்பு நான் பிறப்பித்த ஆணையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். ஸ்டாண்டன் கூறிய ஆணையையே அரச ஆணையாகப் பிறப்பிக்கிறேன்" என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர், "இந்த நாட்டினுடைய அதிபர் இவர். இவரே, தன்னைவிட ஸ்டாண்டன்தான் போர்க்கலையில் திறமைசாலி என்று சொல்கிறாரே. உண்மையில், இப்படிச் சொல்வதற்கு எவ்வளவு தாழ்ச்சியும் மனப்பக்குவமும் இருந்திருக்கவேண்டும்?" என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டார்கள்.

ஆம், ஆபிராகம் லிங்கனிடம் விளங்கிய தாழ்ச்சிதான், அவரை எல்லார் மனதிலும் ஒய்யாரமாக அமரச் செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்கின்றார். இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து இவ்வாறு உயர்வாகப் பேசுவதற்காக காரணமென்ன என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து மிகவும் உயர்வாகப் பேசுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதில் முதன்மையான காரணம் இருப்பது, அவரிடம் இருந்த தாழ்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருசமயம் எருசலேமிலிருந்த யூதர்களால் அனுப்பப்பட்ட குருக்களும் லேவியர்களும் யோவானிடத்தில் வந்து, நீ யார்?. ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?, ஒருவேளை நீர்தான் மெசியாவா? என்று கேட்கின்றபோது, திருமுழுக்கு யோவான், நான் மெசியாவும் அல்ல, எலியாவும் அல்ல, முற்காலத்து இறைவாக்கினரில் ஒருவரும் அல்ல. மாறாக, நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவே நிற்கிறார். அவர் எனக்குப் பின் வருபவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்பார் (யோவா 1: 19-28). மக்களால் மிக உயர்வாகப் பார்க்கப்பட்ட திருமுழுக்கு யோவான், அவருடைய மிதியடி அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்று சொல்வது, அவருடைய தாழ்ச்சியினால் அன்றி, வேறு எதனாலும் சொல்ல முடியாது.

இயேசு, திருமுழுக்கு யோவானை இவ்வளவு உயர்வாகப் பேசுவதற்கு இன்னொரு காரணம், அவர் மெசியாவின் வருகைக்காக மக்களை நேரிய வழியில் தயாரித்து, உண்மையின் வழியில் நடத்தியதுதான். மற்ற இறைவாக்கினர்கள் மெசியாவின் வருகையை எடுத்துத்தான் சொன்னார்கள், ஆனால் திருமுழுக்கு யோவானோ ஒருபடி மேலே சென்று, இயேசுவைக் கண்டு, அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். இது எந்தவொரு இறைவாக்கினருக்கும் கிடைக்காது பேறு. அதனாலும் இயேசு திருமுழுக்கு யோவான் உயர்வாகப் பேசுகின்றார்.

இயேசு திருமுழுக்கு யோவானை இப்படி உயர்வாகப் பேசிவிட்டு, இன்னொரு செய்தியையும் நமக்குச் சொல்கிறார். அதுதான், 'ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என்பதாகும். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?. திருமுழுக்கு யோவானுக்கு இயேசுவைக் கண்கூடப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் நமக்கோ ஒவ்வொருநாளும் நற்கருணையின் வழியாக அவரைத் தரிசித்தும் வாய்ப்புக் கிடைக்கின்றது. இப்படி நமக்குக் கிடைத்த வாய்ப்பினைக் கொண்டு, நாம் இறைவழியில் வழியில் நடக்கின்றபோது, விண்ணரசில் பெரியவர்கள் ஆவோம் என்பது உறுதி.

ஆகவே, இயேசுவை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்த திருமுழுக்கு யோவானைப் போன்று வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
பெண்களுக்குள் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் யாருமிலர்.

ஆனந்தாழ்வார் என்ற துறவி இருந்தார். அவரிடத்திலே ஒரு பாமரன் சென்று, "இறையடியார் என்பவர் எப்படி இருக்கவேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர், "கொக்கு, கோழி, உப்பு போன்று இருக்கவேண்டும்" என்று பதிலளித்தார்.

சற்றுக் குழம்பிப்போய் நின்ற அம்மனிதனுக்கு அவர் கொஞ்சம் தெளிவாக விளக்கினார். "கொக்கு வெண்மையாக இருக்கும்; இறையடியாரும் வெண்மையான, தூய உள்ளம் கொண்டிருக்கவேண்டும். கோழி எப்போதும் குப்பையைக் கிளறிக்கொண்டே இருக்கும். உண்மையான இறையடியாரும் உண்மையைத் துருவித் துருவி ஆராயவேண்டும். உப்பு உணவிற்கு சுவையூட்டுவதாக இருக்கும். இறையடியாரும் தன்னை கரைத்து, பிறருக்கு வாழ்வுகொடுக்கவேண்டும். இப்படி வாழ்பவரே இறையடியார்" எனப் பதிலளித்தார்.

துறவியிடமிருந்து தெளிவுபெற்ற அந்த மனிதர் மகிழ்ச்சியோடு தன்னுடைய இல்லம் சென்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு, "பெண்களுக்குள் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் யாருமில்லை" என்கிறார். எதற்காக இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து அப்படிச் சொல்கிறார்? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் இறையடியார் என்பவர் வெள்ளை உள்ளம் தூய உள்ளம் கொண்டவராக; உண்மையைத் துருவித் துருவி ஆராய்பவராக; பிறர் நலனுக்காய் தன்னையே கரைத்துக்கொள்பவராக இருக்கவேண்டும் என்று வாசித்தோம்.

திருமுழுக்கு யோவான் தூய உள்ளம் கொண்டவராக இருந்தார். ஏனெனில் வானதூதர் எருசலேம் திருக்கோவிலில் பணிசெய்துகொண்டிருந்த செக்கரியாவிடம், "(திருமுழுக்கு) யோவான் தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்" என்று சொல்கிறார் (லூக் 1:15). அதே போன்று திருமுழுக்கு யோவான் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு இருந்தார்.

அடுத்ததாக திருமுழுக்கு யோவான் லூக் 1:17 ல் வாசிப்பது போல, திருமுழுக்கு யோவான் நேர்மையாளர்களின் மனநிலையை கீழ்படியாதவர்கள் பெறச் செய்தார்; உண்மைக்கு சான்று பகர்ந்தார். எவ்வாறெனில் ஏரோது மன்னன் தன்னுடைய சகோதரனான பிலிப்பின் மனைவியோடு வாழ்ந்தபோது அவனுடைய தவறைச் சுட்டிக் காட்டுகிறார்; உண்மையை எடுத்துரைக்கிறார். இவ்வாறு உண்மைக்குச் சான்று பகர்பவராக இருந்தார்.

நிறைவாக திருமுழுக்கு யோவான் உப்பைப்போன்று மெசியாவாகிய இயேசு வளர்வதற்கு தன்னையே கரைத்துக்கொண்டார். 'அவர் வளரவேண்டும், தான் குறையவேண்டும் என்று மெசியாவிற்கே முதலிடம் கொடுத்து வாழ்ந்தார். இவ்வாறு அவர் வாழ்ந்ததால்தான் ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானை 'பெண்களுக்குள் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் யாருமில்லர்" என்கிறார்.

இயேசு தொடர்ந்து சொல்கிறார், "ஆனால் விண்ணரசில் மிகச் சிறியவரும் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவரே" என்று. அதாவது விண்ணரசில் உயந்தோர், தாழ்ந்தோர், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை. அனவைரும் சமம் என்பதே இயேசு நமக்கு உணர்த்தும் உண்மையாக இருக்கிறது.

திருவருகைக் காலத்தின் கதாநாயகனாக இருக்கும் திருமுழுக்கு யோவானைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்போது நமது வாழ்வு அவரது வாழ்வைப் போன்று இருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். திருமுழுக்கு யோவான் தூயவராய், உண்மைக்குச் சான்று பகர்பவராய், தன்னையே இயேசுவுக்காக கரைத்துக்கொள்பவராக இருந்தார் என்று சொன்னால், நாமும் அப்படி வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். குறிப்பாக உப்பைப் போன்று இயேசுவுக்காக, அவரது இறையாட்சிகாக நம்மையே நாம் கரைத்துக்.கொள்ளவேண்டும்.

"தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது. பிறருக்காக வாழ்வது மலையைவிட பளுவானது. அந்தப் பளுவைச் சுமக்க தயாரான வாழ்க்கையை வாழ்பவரே மனிதர்" என்பார் மாவோ.

நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவுக்காக, அவரது இறையாட்சிக்காக நம்மையே கரைத்துக்கொள்ளும் மனிதர்கள் ஆவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
நற்செய்தி (மத்தேயு 11:11-15): மனிதராய் பிறந்தவர்களுள்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றின் கதாநாயகன் 'திருமுழுக்கு யோவான்' என்பதால் இன்றிலிருந்தே வாசகங்களின் கண்கள் திருமுழுக்கு யோவானை நோக்கித் திரும்புகின்றன.

திருமுழுக்கு யோவானைப் பற்றி இயேசு தரும் சான்றை நாம் இந்த நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்:

'மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விட பெரியவர் எவரும் தோன்றியதில்ல'
'மனிதராய் பிறந்தவர்களுள்' அல்லது 'பெண்ணிடம் பிறந்தவர்களுள்' என்பது ஒரு சொல்லாடல் - அதாவது, 'இவரைப் போல எவரும் இல்லை' என்ற மிகைப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்.

அப்படி என்ன ஒரு பண்பு திருமுழுக்கு யோவானைப் பெரியவராக்குகிறது? என்று யோசித்தால், அதற்கான விடை நற்செய்தி வாசகத்தின் இறுதியில் இருக்கிறது. அது என்ன? 'கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில், கிறிஸ்து பிறப்பதற்கு முன் வானதூதர் இருவரிடம் பேசுகின்றார்: சக்கரியா மற்றும் மரியாள் - இங்கே யோசேப்பின் கனவு நிகழ்வுகளை விட்டுவிடுவோம்.

திருமுழுக்கு யோவானின் தந்தையாகிய சக்கரியாவிடம் பேசுகின்றார் வானதூதர்.
மரியாளிடம் பேசுகின்றார் வானதூதர்.

குழந்தையைப் பற்றிய எல்லாவற்றையும் வானதூதர் மரியாளிடம் நேருக்கு நேராக சொல்கின்றார். மரியாள் வானதூதரின் வார்த்தைகளை நம்புகின்றார். 'ஆம்' என்று பதில் தருகின்றார்.

ஆனால், திருமுழுக்கு யோவானிடம் கடவுளின் தூதர் நேருக்கு நேராகப் பேசவில்லை. அவருக்குச் சொல்லப்பட்டதெல்லாம் அவரின் தந்தை சக்கரியாவின் சொற்கள்தாம். ஆக, அப்பாவின் சொற்களையே - அதாவது, இடையில் நிற்கும் ஒரு மனிதரின் சொற்களையே - வானதூதரின் அல்லது கடவுளின் சொற்களாக எடுத்து தன் வார்த்தையினால் அல்ல, தன் வாழ்வினால், 'ஆம்' என்று பதில் தருகிறார் திருமுழுக்கு யோவான். இந்த விஷயத்தில் அவர் மரியாளையும் மிஞ்சிவிடுகிறார். ஆக, 'பெண்களுக்குள் பேறுபெற்றவள்' என்று எலிசபெத்தால் அழைக்கப்பட்ட மரியாளைவிட, 'மனிதருள் பிறந்த அனைவரிலும் பேறுபெற்றவர்' திருமுழுக்கு யோவான் என்று இயேசுவால் சான்றளிக்கப்படுகின்றார்.

ஆக, காது இருப்பது முக்கியமல்ல. மாறாக, காது வழியாக வருபவற்றை ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும். ஆக, நாம் காதால் கேட்கிறோம் என்று சொல்வதைவிட மனத்தால் தான் கேட்கின்றோம். நாம் எதை விரும்புகின்றோமோ அதுதான் நமக்குக் கேட்கிறது. அதுதான் நம் உள்ளத்தில் பதிகின்றது. உள்ளத்தில் பதியும் எதுவும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

அனைவரிலும் பெரியவர் திருமுழுக்கு யோவான் என்று சொல்கின்ற இயேசு தொடர்ந்து, 'விண்ணரசிலும் சிறியவர் அவரிலும் பெரியவர்' என்கிறார்.

பெரியவர் ஆவதற்கான ஒரே வழி - கேட்கும் செவியுடையவராக இருப்பது.
கேட்பது என்றால் 'ஆம்' என்று சொல்வது.
கேட்பது என்றால் 'கீழ்ப்படிவது'.
இறைவனின் குரலுக்கு 'ஆம்' என்று சொல்லும் அனைவரும் விண்ணரசில் பெரியவர்.
விண்ணரசில் சிறியவர் / பெரியவர் திருமுழுக்கு யோவானிலும் பெரியவர்.


- Fr. Yesu Karunanidhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!