Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   04  டிசெம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எல்லாம் வல்ல ஆண்டவர் "சோர்வுற்றவருக்கு" வலிமை அளிக்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

`யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?' என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.

"என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை" என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா?

ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்;களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.

இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்;சோர்வடையார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:   103: 1-2. 3-4. 8,10 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருவார்; அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

கட்டுப்பாடு இன்றி வாழ நினைப்போர் வாழ்வு பரிதாபத்திற்குரியது.

எந்த பெற்றோரும் தங்களது பிள்ளைகள் நோக தண்டனை கொடுப்பதில்லை. கட்டளைகள், கண்டிப்புக்கள் விதித்தால், அதுவும் கூட அவர்களை வருந்தச் செய்யும் நிலையில் கொடுப்பதில்லை. அவர்களது முன்னேற்றத்தையோ, வளர்ச்சியையோ தடுக்கும் விதத்தில் அளிப்பதில்லை.

இறைவனின் நுகம் அழுத்தாதும், நம்மை நம்முடைய வளர்ச்சியை அது தடுப்பதில்லை. மாறாக, நம்மை பாதுகாப்பதாகவும், நமக்கு துணை நிற்பதாகவும் இருக்கும்.

இதனை உணர்ந்து ஏற்றுக் கொண்டால், எதுவுமே கடினமானது இல்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்"

சிறுநகர் ஒன்றில் அன்பரசன் என்றொரு இளைஞன் இருந்தான். அவன் ஒவ்வொருநாளும் மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிவரும்போது, நேராக வீட்டுக்குள் நுழையாமல், வீட்டுக்கு முன்னால் இருக்கும் வேப்பமரத்திற்கு முன்பாகச் சென்று, தம் கையை உயர்த்தி, ஒரு பாவனை செய்துவிட்டுத்தான் உள்ளே நுழைவான். அவன் என்ன செய்கிறான் என்று தெரிந்துகொள்ள, எதிர்வீட்டிலிருந்த செல்வத்திற்கு மிகவும் ஆர்வம். ஒருநாள் தன்னுடைய ஆர்வத்தை அடக்க முடியாமல் அன்பரசனிடமே கேட்டுவிட்டான்.

"தினமும் இந்த வேப்பமரத்திற்கு முன்பாக வந்து, ஏதோ செய்கிறீர்களே, அது என்ன?". இதைக் கேள்வியைக் கேட்டதும் அன்பரசன் மெல்லச் சிரித்தான். பின்னர் அவன் செல்வத்திடம், "இது என்னுடைய சுமைதாங்கி மரம். கவலை மரம் என்றுகூடச் சொல்லலாம்" என்றான். "சுமைதாங்கி மரமா? ஒன்றும் புரியவில்லையே!" என்று இழுத்தான் செல்வம்.

"ஆமாம், காலையில் அலுவலகத்திற்குப் போனதிலிருந்து வீட்டு திரும்பும்வரை ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள் வரும், கவலைகள் வரும். அவற்றையெல்லாம் வீட்டுக்குக் கொண்டுவர எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், சாயங்காலம் வீடு திரும்பியதும் அவற்றை அந்த மரத்தில் மாட்டிவிடுவேன். இதனால், வீட்டார்க்கு என்னுடைய அலுவலகப் பிரச்சனைகளால் எந்தவொரு பாதிப்பும் கிடையாது" என்று மிகவும் அறிவார்ந்த விதமாகப் பேசினான் அன்பரசன். "நீ சொல்கின்ற இந்த யோசனை மிகவும் நன்றாக இருக்கின்றதே, நானும் இதை இனிமேல் கடைபிடிக்கிறேன்" என்று சொல்லி அவ்விடத்திலிருந்து அகன்றான் செல்வம்.

தன் கவலைகளையெல்லாம் இறக்கிவைக்க அன்பரசனுக்கு எப்படி ஒரு 'சுமைதாங்கி மரம் கிடைத்ததோ, அது போன்று நமக்கு ஒரு சுமைதாங்கி (மரம்) இருக்கிறார். அவர்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசு எப்படி ஒரு சுமைதாங்கியாக இருக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்கள் பெரிய சட்டாம்பிகள். அவர்கள் மக்களிடம், இதைக் கடைபிடிக்கவேண்டும், அவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று சுமைகளுக்கு மேல் சுமைகளை இறக்கிவைத்தார்கள். இதையெல்லாம் மக்களுக்குச் சொன்ன அவர்கள் கடைபிடிக்கவில்லை என்பது வேறு விஷயம் (மத் 23:4, திப 15:10). ஏற்கனவே உரோமையர்களிடம் அடிமைகளாக இருந்து பட்ட கஷ்டங்கள் ஒருபுறம் என்றால், சட்டத்தின்பேரில் இவர்கள் கொடுத்த சித்ரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அந்தளவுக்கு மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு கிறிஸ்து, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்" என்கின்றார்.

இயேசு கூறும் இவ்வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமை, ஒவ்வொரு கஷ்டம் இருக்கலாம். அவற்றையெல்லாம் இயேசு கிறிஸ்து இறக்கிவிடுவேன் என்றோ, முற்றிலுமாகப் போக்கிவிடுவேன் என்றோ சொல்லவில்லை. மாறாக, இளைப்பாறுதல் தருவேன் என்று சொல்கின்றார். இயேசு தருகின்ற இளைபாறுதல், இந்த உலகத்தில் யாரும் தராத ஒன்று. எப்படி என்றால், பலர் தங்களிடத்தில் கஷ்டம் என்று வந்து, தங்களுடைய கஷ்டங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால், அவற்றை அவர்கள் இன்னும் பலருக்கும் பரப்பி, பிரச்சனையைப் பெரிதாக்குவார்களே ஒழிய, அந்தப் பிரச்சனை தீர வழியோ, ஆறுதலான வார்த்தைகளோ, இளைப்பாறுதலோ தருவதில்லை. மாறாக, ஆண்டவர் இயேசு தருகிறார். அதனால்தான் அவர் என்னிடத்தில் வாருங்கள் என்கின்றார். இயேசுவிடம் வருகின்றவருக்கு உண்மையான இளைப்பாறுதல் எப்போதும் உண்டு.

அடுத்ததாக, இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மை யாதெனில், அவரிடமிருந்து கற்றுக்கொள்கின்றபோது நமக்கு உண்மையான இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதாகும். இயேசு, தான் பட்ட பாடுகளையும் அவமானங்களையும் நினைத்து வருந்திக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ஓர் இறைவாக்கினருக்கு ஏச்சும் பேச்சும் சாதாரணம் என்பதுபோல் எடுத்துக்கொண்டார், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொண்டார். ஆகவே, இயேசுவை போன்று துன்பங்களையும் அவமாங்களையும் தாங்கிக்கொள்கின்றபோது நமக்கு இயேசு தரும் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது உறுதி. ஏனென்றால் அவருடைய சுமை எளிதானது. மேலும் இயேசு தருகின்ற இந்த இளைப்பாறுதல் ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் கிடையாது (மத் 10:5-6) எல்லாருக்கும் உண்டு. எனவே, எல்லாருக்கும் அவர் தருகின்ற இளைபாற்றியை நாமும் பெற்றுக்கொள்வது நல்லது.

ஆகவே, உண்மையான இளைப்பாறுதலைப் பெற இயேசுவிடம் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 இயேசு தரும் இளைப்பாறுதல்

ஒருநாள் மகான் மலைப்பாதை வழியாகப் போய்கொண்டிருந்தார். அப்போது இளைஞன் ஒருவன் மலையிலிருந்து கீழேவிழுந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுகொண்டிருந்தான். திடுக்கிட்டுப் போன மகான் ஓடோடிச் சென்று அவனைக் காப்பாற்றினார்.

அப்போது அவன் மகானிடம், "என்னை எதற்காக காப்பாற்றினீர்கள், நான் இந்த உலகில் வாழத் தகுதியற்றவன்; அதிர்ஷ்டமில்லாதவன்" என்றுசொல்லி கண்ணீர்விட்டு அழுதான். மகான் அவனைப் பார்த்து, "ஏன்?.. உனக்கு என்ன ஆயிற்று? எதற்காக இப்படித் தற்கொலை செய்ய முடிவெடுத்தாய்?" என்று அவனைத் தன்னுடைய தோள்மேல் சாய்த்துக்கொண்டு சாந்தப்படுத்தினார்.

"நான் ஒரு பொறியாளர் (Engineer). கல்லூரியிலே முதல் மதிப்பெண் பெற்றுத் தேறியவன், ஆனால் நான் தனியாகத் தொழில் தொடங்கியபோது எனக்குத் தோல்விக்கு மேல் தோல்விகள். என்னுடைய தாய் தந்தை, ஏன் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்கூட என்னுடைய கஷ்டகாலத்தில் எனக்கு உதவவில்லை. அதனால் தோல்வியில் துவண்ட என்னை தேற்றுவதற்கு ஒரு ஆள்கூட இல்லாத இந்த உலகில் நான் வாழ்ந்து என்ன புண்ணியம் என்றுதான் தற்கொலை முடிவுக்குத் துணிந்தேன்" என்று சொல்லி முடிந்தான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுகொண்டிருந்த மகான் அவனிடம், "தம்பி! உன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் தோல்வியைத் தோல்வியாகப் பார்க்காதே. அவை வெற்றிக்கான படிக்கட்டுகளே. மேலும் தோல்விகள் உன்னிடம் இருக்கும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த உதவும் உந்துசக்தி. ஆதலால் வாழ்க்கையில் வரும் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடமால், அவைகளை வெற்றிக்கான உந்து சக்தியாகப் பார். வாழ்வில் வெற்றிபெறுவாய்" என்றார்.

இதைக் கேட்க அந்த இளைஞன் மனத்தெளிவு பெற்று தன்னுடைய தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு, உள்ளத்தில் ஒளிபெற்றவனாய் தன்வழி நடந்தான். "தோல்வி என்பது தள்ளிவைக்கப்பட்ட வெற்றி" என்பார் வில்லியம் வெர்ட். ஆம் இதுதான் உண்மை. தோல்வியும், துன்பவும் நிறைந்த வாழ்வில் ஆறுதலாக யாராவது வந்தால் அதுவே மிகப்பெரிய வரம் என்பதையே மேலே வந்த கதையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "சுமை சுமந்து சோர்ந்திருபோரே எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார். இன்றைய முதல்வாசகத்தில் கூட, "ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றோருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெறச் செய்கிறார்" என்று படிக்கின்றோம்.

ஆதலால் நம் இறைவனாகிய ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து தோல்விகளால், கடன்தொல்லையால், உறவு விரிசல்களால் வருந்துவோருக்கு ஆறுதலாக, சுமைதாங்கியாக இருக்கிறார் என்பதை இந்த இறைவார்த்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

ஆனால் பலவேளைகளில் துன்புற்றுக் கலங்கும் நாம் நமக்குள்ளே நமது சுமைகளைப் புதைத்துக்கொண்டு அழுகிறோமே ஒழிய, அவற்றை இறைவனிடம் இறக்கி வைப்பதில்லை; அவரிடமிருந்து ஆறுதல் பெற முன்வருதில்லை. இயேசு நம்முடைய துன்பங்களை, வேதனைகளை அறிந்தவர். நம்மை முழுமையாய் அன்பும் செய்யும் கடவுள்; கனிவும் இரக்கமும் உள்ள ஆண்டவர். எனவே அவரிடம் நமது சுமைகளை இறக்கிவைத்தால் நமது வாழ்வில் ஒளி ஏற்றுவார்; நமது மனக்காயங்களைத் துடைத்திடுவார்.

"தாங்கிக்கொள்ள முயன்றால்தான் அதிகமாகத் தாங்கிக்கொள்ளும் வலிமையை அளிக்கிறார் இறைவன்" என்பார் ஹான்ஸ் ஆண்டர்சன் என்ற அறிஞர். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு சுமக்கக்கூடிய துன்பங்களை நாமே சுமப்போம். அதைவிட பெரியவற்றை இறைவன் பாதத்தில் இறக்கிவைப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
- Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்!

ஒரு தாயானவள் தன்னுடைய பத்து வயது மகனிடத்தில் கேட்டாள், "அன்பு மகனே! மனித உடலில் இருக்கின்ற மிகவும் முக்கியமான பகுதி எது?". அதற்கு அவளுடைய மகன், "அம்மா! என்னைப் பொறுத்தளவில் காதுதான் மனித உடலில் இருக்கின்ற மிக முக்கியமான பகுதியாகும். ஒருவேளை காதுகள் மட்டும் மனிதனுக்கு இல்லை என்றால், ஒன்றுமே விளங்காது" என்றான். "நீ சொல்வது ஓரளவுக்கு சரியான பதிலாக இருந்தாலும், அது முழுமையான பதிலாக இல்லை" என்றாள் தாய்.

"அப்படியானால் கண்கள்தான் மனித உடலில் இருக்கின்ற மிகவும் முக்கியமான பகுதி ஆகும்" என்றான். "கண்களும்கூட ஓரளவுக்கு சரியான பதிலாக இருந்தாலும், அதுவும் முழுமையான பதிலாக இருக்க முடியாது" என்று சொன்னாள் தாய். "மனித உடலில் மிகவும் முக்கியமான பகுதி காதுகளும் இல்லை, கண்களும் இல்லையென்றால் எதுதான் முக்கியமான பகுதி?" என்று கேட்டான் மகன். "பொறுத்திரு மகனே! அதற்கான காலம். அப்போது உனக்கு சரியான பதிலைச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய பணிகளில் மும்முரமானாள் தாய்.

நாட்கள் நகர்ந்தன. சிறுவனாக இருந்த அந்தத் தாயின் மகன் வளர்ந்து இளைஞனாக மாறியிருந்தான். இப்போது அவன் உண்மையை அறிந்துகொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருந்தான். அப்படிப்பட்ட தருணத்தில்தான் அந்தத் தாயின் கணவர் திடிரென நோயில் விழுந்து, படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். அப்போது அந்தத் தாய் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அவள் தன்னுடைய மகனது தோள்மீது முகம் புதைத்து கதறி அழுதார்.

இது நடந்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு தாயானவள் தன்னுடைய மகனிடத்தில் முன்பு கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு மகன், "தோள்கள் தான் மனித உடலில் இருக்கின்ற மிக முக்கியான பகுதி" என்றான். "ஏன் அவ்வாறு சொல்கின்றாய்?" என்று தாயானவள் திரும்பக் கேட்டதற்கு மகன், "அவைகள்தான் ஒரு மனிதன் வேதனையில் வெடித்து அழுகின்றபோது, சாய்ந்துகொள்ள இடம் தருகின்றன" என்றான். "மிகச் சரியாய் சொன்னாய் அன்பு மகனே" என்று சொல்லி தாய் தன்னுடைய மகனை கட்டி அணைத்துக்கொண்டாள்.

ஆம், வேதனையில் விழுந்துகிகிடக்கின்ற ஒருவருக்கு சாயந்து கொள்வதற்கு இடம் தருகின்ற/ இளைப்பாறுதல் தருகின்ற தோள்களைத் தவிர மனித உடலில் மிக முக்கியமான பாகம் வேறு என்ன இருக்க முடியும்?.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கின்றார். வேதனையில், கவலையில் சிக்கித் தவிக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் இயேசு சாய்ந்து கொள்வதற்கு தோள்களைத் தருகின்றவராக, இளைப்பாறுதல் தருகின்றவராக இருக்கின்றார் என்பதை நாம் இதன்வழியாகப் புரிந்துகொள்ளலாம்.

இயேசு கூறும் இந்த ஆறுதலிக்கும் வார்த்தைகளின் அர்த்தம் என்ன?, இயேசு தரும் இளைப்பாறுதல் எத்தகையது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

யூத மக்களை பல்வேறு தளைகள் அடிமைப்படுத்தியிருந்தாலும், அவர்களை மிகவும் கொடுமையாக அடிமைப்படுத்திய தளை ஒன்று உண்டென்றால், அது யூத சமய சட்டங்கள்தான். அச்சட்டங்கள் சாதாரண மக்களை வாட்டி எடுத்தன. எதைச் செய்யவேண்டும் என்றிருந்த சட்டங்களைவிட, எதை செய்யக்கூடாது என்றிருந்த சட்டங்களே அதிகமாக இருந்ததால், மக்கள் அவற்றைக் கடைபிடிக்க முடியாமல் திணறினார்கள். அதனால்தான் ஆண்டவர் இயேசு பரிசேயர்களைப் பார்த்து, "சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோள்மேல் சுமத்துகின்றீர்கள். ஆனால் அவற்றை உங்கள் விரலால்கூட அசைத்துப் பார்ப்பதில்லை" (மத் 23:4) என்று கடுமையாகச் சாடுகின்றார்.

இத்தகைய பின்னணியில் நாம் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்ற வார்த்தைகளை சீர்தூக்கிப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும். சட்டங்களைக் கடைப்பிடிக்க முயன்று, தோற்றுப் போய் சோர்ந்திருக்கும் மக்களைப் பார்த்து இயேசு, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, நீங்கள் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்" என்று கூறுவதாய் இருக்கின்றது.

இயேசு நம்முடைய துன்பங்களை முற்றிலுமாக போக்குவதாகச் சொல்லவில்லை, மாறாக, அவருடைய நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம் என்றால் சுமை அழுத்தாது; எளிதாய் இருக்கும் என்றுதான் நமக்குச் சொல்கின்றார்.

ஆகவே, வாழ்வின் பல்வேறு சுமைகளால் வருந்துகின்ற நாம் நம்முடைய சுமைகளை ஆண்டவர் இயேசுவிடம் இறக்கி வைப்போம், அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்

ஒரு மதிய வேளையில் பெரியவர் ஒருவர் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு காட்டுப்பகுதியில் பாரமான சுமையை சுமந்துகொண்டு சென்றார். அப்போது அவருக்கு முன்பாகத் தோன்றிய வானதூதர், "ஐயா! இப்படி சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வருகிறீர்களே, அப்படி நீங்கள் சுமந்து செல்லும் மூட்டையில் என்னதான் இருக்கிறது? என்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

அதற்கு அந்த பெரியவர், "அது வேறொன்றும் இல்லை. என்னுடைய வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள், வருத்தங்கள், துன்பங்கள்தான். இவைதான் நான் தொடர்ந்து நடக்கமுடியாமல் என்னுடைய வாழ்வையே முடக்கிப்போடுபவை. ஒவ்வொருநாளும் இவற்றைப் பற்றி நினைக்கும்போது எனக்கு தளர்ச்சியும், உடல்சோர்வும் ஏற்படுகின்றது" என்றார்.

உடனே வானதூதர் அவரிடம், "ஐயா பெரியவரே! உங்களுடைய மூட்டையில் இருப்பவற்றை ஒருகணம் நான் பார்த்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டார். அதற்கு பெரியவர், சரி என்று சொல்லி அதைத் திறந்துகாட்டினார். மூட்டையைத் திறந்துபார்த்தபோது வானதூதருக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. ஏனென்றால் அந்த மூட்டை ஒன்றுமே இல்லாமல் வெறுமையாக இருந்தது.

"மூட்டையில் கவலைகள், கஷ்டங்கள், வருத்தங்கள் இருப்பதாகச் சொன்னீர்களே, ஆனால் உள்ளே ஒன்றுமே இல்லையே. அப்படி நீங்கள் எதைப் பற்றிதான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தீர்கள்? என்று வானதூதர் அந்த பெரியவரிடம் கேட்டார். பெரியவரோ, "நான் எப்போதுமே இதற்கு முன் நடந்தவை பற்றியும், இனி நடக்கப் போகிறவை பற்றியும் கவலைப்படுவேன்" என்றார்.

பெரியவரின் நிலை கண்டு வருந்திய வானதூதர் அவரிடம், " ஏற்கனவே நிகழ்ந்தவை பற்றியும், இனி நிகழப்போபவை பற்றியும் நினைத்து வேதனை அடைவதால் ஒரு பயனும் ஆகப்போவதில்லை. ஆதலால் உங்களிடம் இருக்கும் அந்த மூட்டையைத் தூக்கி எறியுங்கள். இந்த நொடியில் வாழத்தொடங்குங்கள், வாழ்க்கை ஒளிமயமானதாக இருக்கும்" என்று சொல்லி வானதூதர் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். அதுவரை தான் சுமையென்று கருதிய அந்த அந்த மூட்டையை பெரியவர் தூர எறிந்துவிட்டு, மகிழ்ச்சியாக நடந்துசென்றார்.

நமது வாழ்க்கையில் நாம் சுமைகளாக நினைப்பவை யாவும், சுமைகளே அல்ல என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் பல்வேறு துன்பங்களால், கவலைகளால் வருந்திக்கொண்டிருக்கும் நமக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கின்றது.

யோபு புத்தகத்தில் படிப்பதுபோன்று, "மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டம். அவர்களின் நாட்கள் கூலியாட்களின் நாட்களைப் போன்று வேதனை நிரம்பியவை" (யோபு 7:1).ஆகவே, துன்பங்கள் நிறைந்த, வேதனைகள் நிறைந்த வாழ்க்கையில் ஆறுதலை, அரவணைபைத் தேடி அலைவதுதான் மாந்தரின் இயல்பாக இருக்கின்றது. இத்தகைய ஆறுதலையும், அரவணைப்பையும் தருவதாகத்தான் இறைமகன் இயேசு நமக்கு வாக்களிக்கின்றார்.

நற்செய்தியில் இயேசு தொடர்ந்து கூறுவார், "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" என்று. ஆம், இயேசுவிடம் விளங்கிய கனிவையும் மனத்தாழ்மையும் நாம் கற்றுக்கொள்ளும்போது நமது வாழ்வில் துன்பங்களையும், சோதனைகளையும் சவால்களையும் தாங்கிக்கொள்வதற்கான வழி பிறக்கும்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 ஆம் அதிகாரத்தில், "பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது... அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும், வலுவின்மையில்தான் வல்லமை வெளிப்படும் என்று சொல்வதாக கூறுவார்.

இங்கே ஆண்டவர் பவுலடியாரிடம் இருந்த குறையை நீக்கிவிடவில்லை. மாறாக அந்தக் குறையைக் கடந்தும் பணிசெய்வதற்கான வலுவினை ஆண்டவர் அவருக்குத் தருகிறார். ஆகவே, இயேசுவிடம் நமது சுமைகளை இறக்கி வைக்கும்போது அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவார் என்பது இங்கே வெளிப்படுகிறது.

இங்கே நாம் இன்னொரு செயலையும் செய்யவேண்டும். அதுதான் அடுத்தவரின் சுமையைத் தாங்கிக்கொள்வது. கலாத்தியருக்கு எழுதிய திருமுடல் 6:2 ல் பவுலடியார் கூறுவார், "நீங்கள் ஒருவர் மற்றவரது சுமையைத் தாங்கிக்கொள்ளுங்கள்" என்று. ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் வாழ்வில் துன்பங்கள் ஏற்படும்போது ஆண்டவரிடமிருந்து இளைப்பாறுதல் பெறுவோம். அந்த இளைப்பாறுதலை நாம் அடுத்தவருக்கும் தருவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!