Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   11  டிசெம்பர் 2018  
                                                          திருவருகைக்காலம்  2ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11

"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். "உரக்கக் கூறு" என்றது ஒரு குரல்; "எதை நான் உரக்கக் கூற வேண்டும்?" என்றேன்.

மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார்.

அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  96: 1-2. 3, 10. 11-12. 13 (பல்லவி: எசா 40: 10a)
=================================================================================
 பல்லவி: இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பல்லவி

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: 'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.' பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?

அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 "அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்"

கவிஞர் கண்ணதாசனிடம் வித்தியாசமான ஒரு வழக்கம் இருந்தது. அவர் தன்னுடைய பதினான்கு பிள்ளைகளுக்கு தேர்வு முடிவுகள் வெளிவரும் நேரத்தில் பரிசுகள் கொடுப்பது வழக்கம்.

இப்படி ஒருமுறை அவர் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நூறு ரூபாய் வீதம் பரிசுகொடுத்துக் கொண்டிருந்தார். தேர்வில் வெற்றிபெற்ற எல்லாரும் வரிசையில் வந்து, அவரிடம் பரிசு வாங்கிக்கொண்டு போனார்கள். ஒருவனைத் தவிர.

"பதிமூன்று பேர் பரிசு வாங்கிவாங்கிவிட்டீர்கள், இன்னும் ஒருவனை எங்கே?" என்று அவர் அவர்களிடம் கேட்டபோது, அவர்களில் ஒருவன், "அவன் தேர்வில் தோற்றுவிட்டான். அதனால்தான் இங்கு வரவில்லை" என்று கேலியாகச் சொன்னான். இதைக் கேட்டதும் கண்ணதாசனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. உடனே அவர் தேர்வில் தோற்றுப்போனவனைத் தேடித்போனார். அவன் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான். அவனை அள்ளியெடுத்த கண்ணாதாசன் அவனைத் தேற்றி அவனுக்கு இருநூறு ரூபாய் பரிசு கொடுத்தார்.

தந்தையானவர் தேர்வில் தோற்றவனுக்கு இருநூறு ரூபாய் பரிசு கொடுத்திருக்கின்றார் என்ற செய்தி மற்ற பிள்ளைகளுக்குத் தெரியவர, அவர்கள் கொதித்தெழுந்தார்கள். "தேர்வில் வெற்றிபெற்ற எங்களுக்கு 100 ரூபாயைக் கொடுத்துவிட்டு, தேர்வில் தோற்றுப்போன இவனுக்கு எப்படி 200 ரூபாய் கொடுக்கலாம்?" என்று கண்ணதாசனிடம் சண்டை பிடித்தார்கள். அப்போது கண்ணதாசன் ஒரு தந்தைக்குரிய பாசத்துடன், "என் அன்பு மக்களே! தேர்வில் வெற்றிபெற்ற நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு நூறுருபாய் பரிசு கொடுத்தால், இன்னும் கொஞ்சம் சந்தோசமாக இருப்பீர்கள். ஆனால், தேர்வில் தோற்ற இவன் அப்படியில்லை. அவன் தேர்வில் தோற்றதால் மனமுடைந்து இருந்திருக்கிறான். அப்படிப்பட்டவன் உங்கள் அளவுக்கு சந்தோசமாக இருக்கவேண்டுமெனில், அவனுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால்தான் ஈடாகும்... இப்போதைக்கு தேர்வில் தேறிய உங்களைவிடவும், தேர்வில் தோற்ற இவனுக்குத்தான் என்னுடைய அன்பும் அரவணைப்பும் தேவை" என்றார்.

எப்படி தேர்வில் தோற்ற மகன்மீது கண்ணதாசனுக்கு அதிக அன்பு இருந்ததோ, அதுபோன்று ஆண்டவராகிய இயேசுவுக்கு பாவம் செய்து, வழிதவறி அலைகின்ற பாவிகள்மீது அதிக அன்பு உண்டு. அந்த அன்பை/ உண்மையை எடுத்துச் சொல்வதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வருகின்ற காணாமல் போன ஆடு உவமை.

காணாமல் போன ஆடு உவமையில், ஆயன் தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் விட்டு, வழிதவறிப் போன ஆட்டினைத் தேடிச் செல்கின்றார். அதைத் தேடிக் கண்டுகொண்டதும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றார். இந்த உவமையின் வழியாக, இயேசு தன்னை ஒரு நல்ல ஆயனாக மக்களிடத்தில் எடுத்துச் சொல்கின்றார். ஆயர்களில் ஒருசிலர் கூலிக்கு மேய்ப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர் ஆடுகளின் மீது அவ்வளவாக அக்கறை காட்டுவது கிடையாது. அவற்றுக்கு ஏதாவது ஓர் ஆபத்து வந்துவிட்டது என்றால், தங்களுடைய உயிரைத்தான் பெரிதாக நினைப்பார்களே ஒழிய, ஆடுகளை நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆனால், இயேசு அப்படி கிடையாது. அவர் ஆடுகளாகிய நமக்கு எதையும் செய்வார். தன்னுடைய உயிரைத் தந்துகூட நம்மைக் காப்பாற்றுவார்/ காப்பாற்றினார். அப்படி ஆடுகளுக்காக தன்னுடைய உயிரையும் தருவதால், அவர் நல்ல ஆயராக விளங்குகின்றார்.

இயேசு ஒரு நல்ல ஆயராக விளங்க இன்னொரு காரணம், அவர் காணாமல் போனதை தேடிக் கண்டடையும் போது மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்ற ஒருவராக இருக்கின்றார். சில ஆயர்கள் காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால், அதை அடி அடியென அடித்து, அதை கவனிக்கிற விதமே வேறு. ஆனால், இயேசுவோ காணாமல் போனதைக் கண்டுபிடிக்கின்றபோது மகிழ்கின்ற ஒருவராக இருக்கின்றார். ஆம், அவர் பாவத்தால் வழிதவறிப் போன மக்கள், தங்களுடைய பாவத்தை உணர்ந்து, அவரிடத்தில் திரும்பி வருகின்றபோது மிகவும் மகிழ்கின்ற ஒருவராக இருக்கின்றார்.

நிறைவாக நல்லாயனாகிய இயேசு, இழந்து போனதை தேடிச் செல்கின்ற ஒருவராக இருக்கின்றார். நற்செய்தி நூல்களை நாம் படித்துப் பார்க்கின்றபோது, பாவிகள் தன்னைத் தேடிவரவேண்டும் என்று அவர் இருக்கவில்லை. மாறாக, அவராகவே பாவிகளைத் தேடிச் செல்கின்றார். நற்செய்தியாளரான மத்தேயுவின் அழைப்பை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, நம்மைத் தேடிவருகின்ற, நமது மனமாற்றத்தில் பெரிதும் மகிழ்கின்ற இயேசு கிறிஸ்துவின் உண்மையான அன்பினை உணர்ந்து, அவரிடம் சரணடைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 விளிம்பு நிலையில் உள்ளவர்களைத் தேடிசெல்வோம்.

அந்த பள்ளிக்கூடத்தில் பாபு என்ற சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் நன்றாகப் படிப்பான். விளையாட்டிலும் படுசுட்டியாக இருப்பான். ஆனால் அவனிடம் ஒரு குறை இருந்தது. தனக்குப் பிடித்த பொருளைப் பிறர் அனுமதியின்றி கையோடு எடுத்து வந்து விடுவான். இது அவனது பெற்றோர்களுக்குத் தெரியாது. அவன் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றதால் ஆசிரியருக்கும் அவன் மீது சந்தேகம் எழவில்லை.

இப்படி இருக்கையில் அவன் வசித்த ஊரில் பொருட்காட்சி நடைபெற்றது. அங்கு நிறைய கடைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருந்தன. தன் பெற்றோருடன் அங்கு சென்ற அவன் மகிழ்ச்சியோடு எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தான். அங்கிருந்த கடை ஒன்றில் அழகிய கார் பொம்மை ஒன்றைப் பார்த்து வாங்க எண்ணினான். ஆனால் அது விலை அதிகமாக இருந்தது. மேலும் அவன் தந்தையிடம் போதிய அளவு பணமும் இல்லை. எனவே தன் கைவரிசையைக் காட்டத்துணிந்தான்.

யாருக்கும் தெரியாமல் அந்த பொம்மையை அவன் எடுக்கும்பொழுது கடைக்காரரின் கண்ணில் மாட்டிக்கொண்டான். அவர் எல்லோர் முன்னிலையிலும் அவனைப் "பளார்' என்று அறைந்து அந்த பொம்மையைப் பிடுங்கிக் கொண்டார். இதற்கிடையில் வேடிக்கை பார்க்க அங்கு பெருங்கூட்டம் கூடியது. அவனது பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர்.

அங்கு கூடியிருந்த கூட்டத்தில் அவனுடைய ஆசிரியரும் இருந்தார்.

பாபுவுக்கு கடைக்காரர் அடித்ததைவிட தன் பெற்றோர் முன்னிலையிலும், தன் ஆசிரியர் முன்னிலையிலும் தான் திருடிவிட்டு மாட்டிக்கொண்டது அவமானமாக இருந்தது. "பாபு நீயா இப்படி?" என்று கண்ணீர் விட்டபடியே கேட்டாள் அம்மா. அப்பாவோ அவன் முகத்தையே பார்க்க விரும்பாமல் வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

அவன் கையைப் பிடித்து இழுத்து வெளியில் வந்த ஆசிரியர், "பாபு அங்கே பார்!" என்று சுட்டிக்காட்டினார். அங்கே ஒரு கால் இல்லாத சிறுவன் கண்காட்சியைப் பார்க்க வருபவர்களின் காலணிகளுக்குப் பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தான். "இந்த மாற்றுத் திறனாளியே இப்படி உழைக்கும் பொழுது உடலில் ஒரு குறையும் இல்லாத நீ இப்படித் திருடலாமா? அப்படியென்றால் வகுப்பில் ஒவ்வொரு முறை பொருட்கள் காணாமல் போகும்பொழுதும் திருடியது நீதானா? உன்னைப்பற்றி மிக உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தேன். ஆக, வகுப்பில் நீ எடுக்கும் மதிப்பெண்களும் காப்பி அடித்து வாங்கியவைதானா?" என்று கேட்டார். இதைக் கேட்ட தான் செய்தது எவ்வளவு ஈனமான செயல் என்று உணர்ந்து அதற்காக வருந்தினான்.

கடைக்காரரிடம் அடி வாங்கியதைவிட ஆசிரியரின் சொற்கள் ஈட்டிபோல் நெஞ்சில் பாய்ந்தன. பின்னர் சுவரில் இருந்த காந்திபடத்திற்கு அருகே அவன் கையைப் பிடித்து "தர தர'வென்று இழுத்துச் சென்ற ஆசிரியர், "சத்திய சோதனை எழுதிய இந்த சத்திய சீலர் முன் இனிமேல் திருடமாட்டேன் என்று எனக்கு உறுதி கொடு" என்றார். அவனும் இனி திருடமாட்டேன் என்று ஆசிரியருக்கு சத்தியம் செய்துகொடுத்தான்.

அன்றோடு திருட்டை விட்டவன்தான் பாபு. அதன்பிறகு அவன் இன்னும் நன்றாகப் படித்தான். தன் ஆசிரியரை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு தானும் ஆசிரியப் பணியில் சேர்ந்து சிறந்த ஓர் ஆசிரியராகவே மாறினான்.

வழிதவறி அலைந்த ஆடாகிய பாபு, தன்னுடைய தவற்றைத் திருத்திக்கொண்டு, சிறந்த ஓர் ஆசிரியராக மாறியதால் அவனுடைய பெற்றோரும், அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரும் பெரிதும் மகிழ்ந்தனர்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, வழிதவறிப்போன ஓர் ஆட்டிற்காக, மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் விட்டுவிட்டுப் போன ஓர் ஆயனின் உவமையைப் பற்றி பேசுகிறார். உவமையில் வரும் ஆயன் வேறுயாரும் கிடையாது, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. அவர்தான் பாவிகளும், வறியவரும் வாழ்வுபெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிரையே தியாகம் செய்தார்.

பொதுவாக மனிதர்களாகிய நாம்தான், எவரும் எப்படிப் போனாலும் பரவாயில்லை. என்னுடைய குடும்பம் நல்லாயிருக்கவேண்டும், என்னுடைய இனம் நல்லா இருக்கவேண்டும், நான் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் கடவுள் அப்படிக் கிடையாது. அவர் அனைவரும் வாழ்வுபெற விரும்புகிறார் (யோவா 10:10). அதனால் இயேசு நேர்மையாளர்கள் மட்டுமல்ல, பாவிகளும் வாழ்வுபெற வேண்டும் என்று அவர்களைத் தேடிச் சென்று, அவர்களை தன்வழிக்கு/ நல்வழிக்குக் கொண்டுவருகிறார்.

ஆதலால் நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மைத் தேடி வரும் இறைவன் அன்பை உணர்ந்துகொண்டு அவரிடம் திரும்பிவருவோம். சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களைத் தேடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
காணாமற்போவதும் கண்டுபிடிப்பதும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளில் ஒன்று வழி தவிறிச் செல்வதையும், அவர் அந்த ஆட்டைக் கண்டுபிடித்ததால் அடையும் மகிழ்ச்சியையும்' பதிவு செய்கிறார் மத்தேயு நற்செய்தியாளர்.

நீங்கள் எதையாவது என்றாவது தொலைத்த அனுபவம் இருக்கிறதா?

கண்டிப்பாக நம் அனைவருக்கும் இருக்கும்.

ஓட்டலுக்குச் செல்கிறோம். வீட்டிலிருந்து புறப்படும்போது பர்ஸ் எடுத்து வைத்தோம். சாப்பிட்டு விட்டு பில் வந்தவுடன் பர்ஸைக் காணோம். உடனே, ஒருவித பயம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

காரில் செல்கிறோம். எல்லாம் எடுத்து வைக்கின்றோம். டோல் கேட் வருகிறது. பணம் செலுத்த பர்ஸ் தேடுகிறோம். பர்ஸ் தொலைந்துவிட்டது.

பேருந்தில், மருத்துவமனையில், வீட்டில் என நாம் தொலைக்கும் பொருள்கள் ஏராளம் ஏராளம். தொலைந்துபோனதைக் கண்டுபிடிக்க நாம் அந்தோனியார் போன்ற புனிதர்களின் உதவியையும் நாடுகிறோம்.

ஆக, 'ஐயோ, அதைக் காணோமே!' என்று ஒன்றைப் பற்றி நினைப்பதுதான் தொலைத்தல் உணர்வு. இந்த உணர்வில் பயம், ஏமாற்றம், ஏக்கம், கலக்கம், குற்றவுணர்வு எல்லாம் ஒரசேரக் கலந்திருக்கிறது.

தேடிய பொருள் கிடைத்தவுடன், மேற்காணும் உணர்வுகள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சி வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது.

இன்றைய நாளில் நான் எனக்குள் தொலைத்த ஒன்று என்ற நிலையில் சிந்திப்போம்.

புனித அகுஸ்தினார். அவரிடம் எல்லாம் இருந்தது. நிறைய படிப்பு இருந்தது. பேச்சாற்றல் இருந்தது. அந்தப் பேச்சாற்றலை பாடமாக எடுக்கும் பள்ளி ஒன்றை அவர் நடத்தினார். நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நல்ல குடும்பப் பின்புலம் இருந்தது. உழைப்பு இருந்தது. பணம் இருந்தது. இப்படி எல்லாம் இருந்தும், தனக்குள் ஏதோ ஒன்று தொலைந்துவிட்டதாக அவர் எண்ணிக்கொண்டே இருந்தார். இப்படி எண்ணியவாறே, ஒருமுறை சாலையில் செல்லும்போது குடிகாரர் ஒருவர் கையில் ரொட்டித் துண்டையும், ஒயின் பாட்டிலையும் வைத்துக்கொண்டு, பாடிக்கொண்டே செல்வதைக் காண்கிறார். 'இந்தக் குடிகாரனிடம் இருக்கும் இந்த மகிழ்ச்சி கூட என்னில் இல்லையே! இவனுடைய போதை விடிந்தால் தீர்ந்துவிடும். ஆனால், படிப்பு, மோகம், வாழ்க்கை முன்னேற்றம் என நான் கொண்டிருக்கும் போதை எத்தனை நாள் விடிந்தாலும் தீர்வதில்லையே. நான் இன்று எந்த துன்பத்தோடு போராடுகிறேனோ, அந்தப் போராட்டத்தில் அயர்ந்து தூங்குகிறேனோ, அதே போரட்டத்தைத்தான் அடுத்த நாளும் போரார வேண்டியிருக்கிறது!' என புலம்பும் அகுஸ்தினார் தன் இறைவனைக் கண்டவுடன், அவருடைய அனுபவம் பெற்றவுடன், தேடியது கிடைத்த மகிழ்ச்சி அடைகிறார். அவர் இதுவரை வைத்திருந்த அனைத்தையும் தூக்கி எறிகிறார்.

ஆக, நாம் ஒவ்வொருவருமே நமக்குள் எதையோ தொலைத்திருக்கிறோம். அந்தப் பொருள் கைகூடும் போது நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கிறது.

இதை நாம் எப்படி அடைவது?

1. முதலில், 'எது தொலைந்திருக்கிறது' என்பதை நான் உணர வேண்டும். இந்த உணர்தல்தான் தேடுதலின் முதற்படி. எது தொலைந்திருக்கிறது என்று தெரியாமல் தேடினால் நம் தேடலுக்கு முடிவே இருக்காது.

2. இரண்டாவதாக, 'எங்கே தேடுவது' என்பதை அறிய வேண்டும். 'சாவியை எங்கோ தொலைத்துவிட்டு தெருவிளக்கின் கீழ் தேடிய முல்லா, 'இங்குதான் வெளிச்சம் இருக்கிறது. ஆக, நான் இங்கே தேடுகிறேன்" என்று சொல்லாமல், தொலைந்ததை தொலைந்த இடத்தில், நபரில் தேட வேண்டும்.

3. மூன்றாவதாக, 'தேடலுக்காக இழப்பது.' தவறிய ஒரு ஆட்டைக் கண்டுபிடிக்க தன் கையில் இருக்கும் 99 ஆடுகளை இழக்க வேண்டும். இவற்றையும் கூட்டிக்கொண்டு தேடும்போது நேரமும், ஆற்றலும் விரயமாகும். மேலும், மற்ற ஆடுகளும் தொலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. ஆக, 99 ஆடுகளை இழக்கத் துணியும் ஒருவரால்தான் தவறிய ஆட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

திருவருகைக்காலம் தேடலின் காலம்.

நமக்கு வெளியே தொலைந்தவற்றைத் தேடுவதைவிட நமக்கு உள்ளே தொலைந்திருப்பவற்றைத் தேடுவதும், அந்தத் தேடல் தரும் மகிழ்வை அனுபவிப்பதுமே கிறிஸ்து பிறப்பு.

சில நேரங்களில் நாம் தேட வேண்டியதை இறைவனே காட்டுகின்றார் - இன்றைய முதல் வாசகத்தில் போல.


Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
மிகவும் மகிழ்ச்சியடைவார்

'ஒன்றின் பெருமையை அல்லது முக்கியத்துவத்தை நீ உணர வேண்டுமென்றால் அதை நீ தொலைக்க வேண்டும்' என்பதுதான் நாளைய (12 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 18:12-14) நமக்கு வழங்கும் செய்தி.

காணாமற்போன நூறாவது ஆடு எடுத்துக்காட்டில் இயேசு இரண்டு வகையான மகிழ்ச்சி நிலைகளைப் பற்றிப் பேசுகின்றார்: ஒன்று, இருப்பதன் மகிழ்ச்சி. இரண்டு, தொலைந்து போனது கிடைப்பதன் மகிழ்ச்சி. இந்த இரண்டு நிலைகளில் இரண்டாவது மகிழ்ச்சி முதல் மகிழ்ச்சி நிலையைவிட மேலானது என்கிறார்.

இதை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ள முடியும்:

முதலில், இயேசுவின் இந்த வேறுபடுத்தும் நிலை கணிதம் மற்றும் கோர்வைக்கு எதிராகச் செல்கின்றது. '99' பெரியதா? '1' பெரியதா? '99' தான் பெரியது. ஆனால் '1' '99'ஐ விட எப்படி பெரியது ஆகின்றது என்றால் அதன் 'தொலைதலில்' அல்லது அதன் 'இல்லாமையில்.'

இரண்டாவதாக, தொலைந்துபோன அந்த 'ஒன்று' நம்மை அலைக்கழிக்கிறது. நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது. நம் மனதைக் கவலையால் நிரப்பிவிடுகிறது. நாம் எழும்போது, அமரும்போது, சாப்பிடும்போது, தூங்கச் செல்லும்போது அந்த 'ஒன்றே' நம் எண்ணத்தில் நிற்கிறது.

மூன்றாவதாக, தொலைந்துபோன அந்த 'ஒன்று' நம்மிடம் இருக்கும் '99'ஐ நிறைவு செய்கிறது. ரேவன்ஸ்பர்கர் ஆட்டம் போல. 1000 படத் துண்டுகளைச் சேர்த்து பெரிய படம் உருவாக்கும் அந்த விளையாட்டில் 999 துண்டுகள் இருந்தாலும் அவற்றை நாம் சரியே அடுக்கினாலும் தொலைந்துபோன அந்த '1' துண்டு படத்தை குறைவுள்ளதாக்கிவிடுகிறது.

இன்று,

நான் என் வாழ்வில் தொலைத்துவிட்டு அந்த 'ஒன்று' எது?

சில நேரங்களில் தொலைந்துபோன அந்த 'ஒன்றை' விட்டு நான் என்னிடம் இருக்கும் '99'ஐ திரும்ப திரும்ப எண்ணிக்கொண்டிருப்பதிலும், அவற்றை அழகுபடுத்துவதிலும், அவற்றோடு நேரம் செலவழிப்பதிலும் மும்முரமாய் இருக்கிறேன்.

இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட தயாரிப்பு காலத்தில் நம்மிடம் '99' - கேக், கார்ட், ஸ்டார், குடில், கிப்ட், சான்ட்டா கிளாஸ், சாக்ஸ், கைத்தடி - இருந்தாலும், 'கிறிஸ்து' என்ற அந்த '1' இல்லை என்றால் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதில்லை.

முந்தைய அனைத்தும் நமக்கு மகிழ்ச்சி தரலாம். ஆனால் பிந்தையதே மிகுதியான மகிழ்ச்சியைத் தர முடியும்.

Fr. Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
*தேடிவரும் அன்பு தெய்வம்!

பெண் ஒருவர் தனது நான்கு சக்கர வாகனத்தில் ஒரு மலைப்பாங்கன பாதையில் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னர் ஒரு லாரியானது பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. தொடக்கத்தில் வேறு எங்கோதான் அந்த வாகனம் போகிறது என்று நினைத்த பெண்மணி, அது தன்னுடைய வாகனத்திற்கு மிக அருகில் வந்துகொண்டே இருப்பதை அறிந்த அவர், வண்டியை வேகமாக ஓட்டினார். அவர் எவ்வளவு வேகமாக வண்டியை ஒட்டினாரோ அவ்வளவு வேகமாக அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த வாகனம் அவரைப் பின்தொடர்ந்தது.

தன்னை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்த அந்தப் பெண்மணி, பிரதான சாலையிலிருந்து இறங்கி, மிகக் குறுகலான பாதையில் வண்டியை ஓட்டினார். அப்போதும் லாரி அவருடைய வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தது. ஒருகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அவர், சாலையின் அருகே ஒரு பெட்ரோல் நிலையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வேகவேக நடக்கத் தொடங்கினார். பின்னால் வந்துகொண்டிருந்த லாரி ஓட்டுனரும் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்தப் பெண்ணின் வாகனத்தை நோக்கி விரைந்தார். ஏற்கனவே பயத்தில் இருந்த அந்தப் பெண்மணி லாரி ஓட்டுநர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு, தன்னை நோக்கி வருகின்றார் என்பதை அறிந்து ஒருவிதமான பயத்தோடு அங்கிருந்து விரைந்தார்.

அப்போது லாரி ஓட்டிநர் அந்த பெண்ணின் வாகனத்திற்குப் பின்னால் சென்று, அங்கு ஒழிந்துகொண்டிருந்த மனிதனைப் பிடித்து, வெளியே கொண்டு வந்து நிறுத்தினார். தன்னுடைய வாகனத்திலிருந்து புதிய ஆள் ஒருவர் வருவதைப் பார்த்த பெண்மணி வெலவெலத்துப் போய் நின்றார். "அம்மா! இதோ நிற்கின்றானே, இவன் ஒரு பயங்கரமான கொலைக்காரன். நீங்கள் உங்கள் வாகனத்தை ஓட்டத் தொடங்குவதற்கு முன்பாக, இவன் தன்னுடைய கையில் கத்தியோடு உங்களைக் கொல்வதற்காக வாகனத்தின் பின்பக்கமாக ஏறுவதைப் பார்த்தேன். அதைச் சொல்வதற்காகவும், உங்களை இந்தக் கொலைகாரனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவுமே உங்களுடைய வாகனத்தைத் துரத்தி வந்தேன். நீங்கள்தான் அதைப் புரிந்துகொள்ளாமல் வாகனத்தை வேகவேகமாக ஓட்டினீர்கள்" என்றார்.

அந்நேரத்தில்தான் அவருக்கு புரிந்தது லாரி ஓட்டுநர் தன்னைக் கடத்துவதற்காக அல்ல, காப்பாற்றுவதற்காகவே பின் தொடர்ந்து வந்தார் என்று.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் லாரி ஓட்டுநர் போன்று ஆண்டவராகிய கடவுளும் தன்னைத் தேடி (பின்தொடர்ந்து) வருகின்றார். நாம்தான் அவருடைய அன்பைப் புரிந்துகொள்ள நிகழ்வில் வரும் பெண்மணியைப் போன்று விலகி விலகிச் செல்கின்றோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு காணமல் போன ஆடு உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இயேசு சொல்லும் இவ்வுவமை அளவில் சிறியதாக இருந்தாலும், ஆழமான உண்மைகளை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இந்த உவமையில் கடவுள் எப்படிப்பட்டவர், அவருடைய அன்பு எத்துணை உயர்ந்தது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

உவமை நமக்கு உணர்த்தும் முதலாவது உண்மை, கடவுள் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கின்றார் என்பதாகும். உவமையில் வரும் ஆயன் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் தன்னோடு இருந்தபோதும், தொலைந்து போன ஓர் ஆட்டைத் தேடி அலைகின்றார். அதைக் கண்டுபிடித்த பின்பு மிகவும் மகிழ்கின்றார்.

இரண்டாவது உண்மை கடவுள் நம்முடைய மனந்திரும்புதலுக்காக மிகவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கின்றார் என்பதாகும். ஆடு வழிதவறிச் சென்றுவிட்டது என்பதற்காக ஆயன் அந்த ஆட்டினைத் தண்டிக்கவில்லை, மாறாக அவர் ஆடு தன்னை அடையவேண்டும் என்பதற்காக மிகவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கின்றார். இது மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவத்திலிருந்து விலகி, அவரைச் சென்றடையவேண்டும் என்பதற்காக அவர் மிகப் பொறுமையோடு காத்துக் கொண்டிருக்கின்றார்.

மூன்றாவது உண்மை. கடவுள் எப்போதும் நம்மைத் தேடி வருகின்றார் என்பதாகும். மனிதர்களாகிய நாம் கடவுளைத் தேடிச் செல்கின்றோமோ இல்லையோ அவர் நம்மைத் தேடி வருகின்றார். மீட்பின் வரலாறே கடவுள் நம்மைத் தேடி வந்ததுதானே. எனவே தேடி வருகின்ற கடவுளைப் புறக்கணியாமல், அவரை ஏற்றுக்கொள்ளும்போது வாழ்வடைவோம் என்பது உறுதி.

நான்காவது உண்மை கடவுள் நம்முடைய மனந்திரும்புதலில் மகிழ்ச்சி அடைகின்றார் என்பதாகும். எப்படி ஆயன் தொலைந்து போன ஆட்டைக் கண்டுபிடித்த உடன் மகிழ்ச்சியடைகின்றானோ அது போன்று ஆண்டவரும் நம்முடைய மனந்திரும்புதலில் மகிழ்ச்சி அடைகின்றார். நிறைவாக, கடவுள் நம்மைப் பாதுகாக்கின்றவராகும் இருக்கின்றார் என்கிற உண்மையும் இந்த உவமை வெளிப்படுகின்றது. நமக்கு எந்தவொரு ஆபத்தும் துன்பமும் வராமல் இறைவன் ந நம்மைக் காக்கின்றார் என்பதே இந்த உவமை உணர்த்தும் உண்மைகளில் ஒன்றாக இருக்கின்றது.

எனவே, நம்மைத் தேடிவருகின்ற கடவுளின் அன்பை உணர்ந்து, அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!