Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     09 டிசம்பர்  2018  
                                                           திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் உன் பேரொளியைக் காட்டுவார்.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 5: 1-9

எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்துகொள்; என்றும் உள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். கடவுள் வானத்தின் கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார்.

'நீதியில் ஊன்றிய அமைதி', 'இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி' என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார்.

எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவுகூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார்.

பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னை விட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள்.

கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்து வரும்பொருட்டு, உயர்மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார்.

மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன. கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம். 2யb அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி

2உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்"என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4 ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வாருங்கள்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 4-6, 8-11

சகோதரர் சகோதரிகளே, உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.

உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி. மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன்.

கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 3: 4-6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர்.

அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்"என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.

இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்."


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அனைவருக்கும் மீட்பை அருள வரும் இயேசு


12.01.1907 தேதியிட்ட -இந்தியா என்ற பத்திரிகையில் வாசகர் ஒருவர் மகாகவி பாரதியாரிடம் -ஜனத் தலைவர் மக்கள் தலைவர் - யார்?" என்று கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் தருகின்றார்.

"யார் ஒருவர் (இந்திய) நாட்டின் வறுமை நிலையைப் பற்றி இராப் பகலாக வருந்துகின்றாரோ, யார் ஒருவர் மக்கள் அனைவரும் வயிறார உண்பதற்கு உணவும் உடுக்க உடையின்றி தவிக்கும் நிலை குறித்து மனமிரங்கி கண்ணீர் சொரிகின்றாராரோ, யார் ஒருவர் மக்களுக்குக் வந்த சுக துக்கங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் தனக்கே வந்ததாக எண்ணி அனுதாபிக்கின்றாரோ, யார் ஒருவர் இந்த துன்பங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு தனது இன்னுயிரையும் இழக்கத் தயாராக இருக்கின்றாரோ அவரே ஜனத் தலைவர் மக்கள் தலைவர்".

மகாகவி பாரதியார் மக்கள் தலைவர் யார் என்பதற்கு தருகின்ற பதில் இந்தியச் சூழலில் இருந்தாலும், கடைசியில் வருகின்ற வார்த்தைகள் ஒரு தலைவர் அல்லது மீட்பர் யார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆம், மக்களின் துன்பத்தை தன்னுடைய துன்பமாக நினைத்து, அதனைப் போக்க தன்னுடைய உயிரையும் தருபவன்தான் மக்கள் தலைவன் ஆவன்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்தும் மக்களின் துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்தார், அதனைப் போக்க தன்னுடைய உயிரைத் தருவதற்கும் முன்வந்தார். அதனால் நாம் அவரை மக்கள் தலைவராகிய மீட்பராக மெசியாவாக அழைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுகிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் -அனைவருக்கும் மீட்பை அருள வரும் இயேசு என்னும் சிந்தனையைத் தருகின்றன. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்து பார்த்து நிறைவு செய்வோம்.

பாரூக் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டு அடிமைகளைப் போன்று வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதலின் செய்தியை அளிப்பதாய் இருக்கின்றது. அங்கு நாம் படிக்கின்றோம். "எருசலமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் கலைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள்" என்று. இஸ்ரயேல் மக்களுடைய கண்ணீர் கவலைககள் எல்லாம் மறைந்து, மகிழ்ச்சி பிறக்கும் என்பத்தைத் தான் பாரூக் அப்படிச் சொல்கின்றார். இதையே நாம் இயேசுவோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். பாவத்தின் பிடியில் சிக்குண்டு இருந்த மக்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னுடைய இன்னுயிரைத் தந்து அவர்களுக்குப் புதுவாழ்வு தருகின்றார் (யோவான் 10:10). அது மட்டுமல்லாமல், மக்களின் துன்பமெல்லாம் இன்பமாக மாறும் என்னும் வாக்குறுதி தருகின்றார், (யோவா 16:20) அதனை அவர் நிறைவேற்றவும் செய்கின்றார். ஆம், இயேசு என்னும் மெசியாவின் வருகையினால் மக்களுடைய துன்பங்கள் எல்லாம் இன்பமாக மாறும், அவர்களுடைய அழுகையெல்லாம் ஆறுதலாக மாறும் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

அடுத்ததாக இயேசு என்னும் மெசியாவின் வருகையினால் அனைத்தும் சமமாகும், அனைவரும் ஒன்றாகும் நிலை ஏற்படும். அது எப்படி அனைத்தும் சமமாகும் அனைவரும் ஒன்றாகும் நிலை வரும் என்று பார்க்கும்போது இன்றைய நற்செய்தியில் பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், மலை குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்" என்று வாசிக்கின்றோம். இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவை.

இயேசுவுக்கு முன்பாக ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருந்தன. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன் ஏழை, யூதன், புறவினத்தான் இப்படி பல்வேறு வேறுபாடுகள் இருந்தன. மீட்புகூட சிலருக்கு மட்டும்தான் உண்டு என்ற நிலை இருந்தது. ஆனால், ஆண்டவர் இயேசுவின் வருகையினால் அனைவரும் கடவுள் அருளுகின்ற மீட்பினைப் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது; பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, ஏழைகளும் நற்செய்தியைப் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது; யூதர்கள்தான் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர என்றிருந்த நிலை எல்லாரும் கடவுளால் தேர்ந்துகொள்ளபட்டவர்கள் என்று ஆனது.

இப்படி அனைவருக்கும் கடவுளின் மீட்பு, அனைவரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்று என்பதை விவிலியத்தின் பல்வேறு பகுதிகளில் பார்க்கலாம். குறிப்பாக இயேசு பிறந்தபோது அவரைப் பார்க்க புறவினத்தாராகிய மூன்று ஞானிகள் வந்தது, இயேசு சிலுவையில் உயிர் விட்டபோது எருசலேம் திருக்கோவிலின் திரைச்சிலை இரண்டாகக் கிழிந்தது, இன்னும் பல நிகழ்வுகள் ஆண்டவரின் மீட்பு அனைவருக்கும் உண்டு, அவருக்கு முன்பாக அனைவரும் சமம் என்னும் உண்மையை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைகின்றது.

பலவுலடியார் இந்த உண்மையை உணர்ந்ததினால்தான், "இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்" (கலா 3:28) என்கின்றார். ஆகவே, இயேசு என்னும் மெசியா கடவுள் தருகின்ற மீட்பினை எல்லாருக்கும் வழங்க இருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழ முற்படுவோம்.

இதுவரையிலும் இயேசு என்னும் மெசியாவின் வருகையினால் எப்படி நம்முடைய துன்பமெல்லாம் இன்பமாக மாறுகின்றது, எப்படி அவர் அனைவருக்கும் கடவுள் அருளும் மீட்பினை வழங்குகின்றார் என்று சிந்தித்துப் பார்த்தோம். இப்போது இப்படிப்பட்ட மெசியாவின் வருகைக்கு நாம் எப்படி நம்மையே தயார் செய்யப் போகின்றோம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மெசியாவின் வருகைக்கு இயேசுவின் பிறப்பு விழாவிற்கு - நாம் பல்வேறு வழிகளில் நம்மைத் தயாரித்தாலும், நம்மைத் தயாரிப்பதற்கான மிகச் சிறப்பான வழி மனம்மாற்றம் அடைவதுதான். நற்செய்தி வாசகத்தில் செக்கரியாவின் மகனும் கடவுளின் வாக்கைப் பெற்றவருமான திருமுழுக்கு யோவான், யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குக் கொடுக்கின்றபொது தன்னிடம் திருமுழுக்குப் பெற வருபவர்களிடம், "பாவ மன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்கின்றார். அப்படியானால் நாம் மெசியாவின் வருகைக்கு நம்மையே நாம் தயாரிப்பதற்கு மிகச் சிறந்த வழி மனமாற்றம் அடைவதுதான். மனமாற்றம் என்று சொல்கின்றபோது மேலார்ந்த மனமாற்றமோ, காலம் சென்றபிறகு கடைசி நேர மனமற்றமோ கிடையாது. மாறாக உள்ளார்ந்த மனமாற்றம், உடனடியான மனமாற்றம். இத்தகைய மனமாற்றம்தான் நம்மை மெசியாவின் வருகைக்கு தயார் செய்வதற்கு உதவும் போலியான மனமாற்றமோ அல்லது கடைசி நேர மனமாற்றமோ நம்மை ஒருபோதும் மெசியாவின் மீட்பினை பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றாது என்பதுதான் உண்மை.

கிறிஸ்துவின் விழுமியங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்ததனால் தன்னுடைய இன்னுயிரையே தாரை வார்த்தவர் புனித தாமஸ் மோர் என்பவர். தாமஸ் மோருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் மிகப் பெரிய சூதாட்டைக்காரர். அவர் சூதாட்டத்தில் மூழ்கியதால் பல்வேறு தீமைகளுக்கு அடிமையானார். அதனால் அவர் தன்னுடைய வாழ்வில் பலவற்றை இழந்து மிகப் பரிதாபமாக நின்றார்.

ஒரு சமயம் அந்த சூதாட்ட நண்பரை சந்தித்த தாமஸ் மோர் அவரிடம், "பாவத்திலிருந்து விலகி பாவமன்னிப்புப் பெற்றுக்கொள்" என்றார். அவரோ, "எல்லாம் கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம், இளமை இருக்கின்ற வரைக்கும் வாழ்க்கையை அனுபவிக்கவேண்டியதுதான்" என்றார். அதற்கு தாமஸ் மோரோ, "கடைசி நேரத்தில் பாவமன்னிப்புப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கின்றாயே, ஒருவேளை திடிரென்று உனக்கு மரணம் வந்தால் அப்போது நீ என்ன செய்வாய்?" என்று கேட்டார். நண்பரோ மிகவும் சாதாரணமாக, "இதுவரைக்கும் எனக்கு அதிஸ்டம் கைகொடுத்திருக்கின்றது ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் எனக்குத் திடிரென்று மரணம் வந்தால், நல்ல கள்வனைப் போன்று நான் -இறைவா, என்னை மன்னியும் (Lord forgive me) என்ற மூன்றே மூன்று வார்த்தைகளைச் சொல்வேன். அவரும் என்னுடைய பாவங்களை மன்னித்து, என்னைப் பேரின்ப வீட்டிலே ஏற்றுக்கொள்வார்" என்றார். தாமஸ் மோர் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றார்.

பிரிதொரு நாள் தாமஸ் மோரின் சூதாட்டக்காரர் நண்பர் குதிரையில் பக்கத்து ஊருக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் போன வழியின் இடையில் ஒரு பாலம் ஒன்று வந்தது. அந்தப் பாலத்தில் குதிரை வேகமாகப் போனபோது அதன் கால் இடறி கீழே விழுந்தது. அதன்மீது பயணப்பட்ட அந்த சூதாட்டக்காரர் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் தூக்கி அடிக்கப்பட்டார். அப்போது அவர், "என்ன கொடுமைடா சாமி" என்ற மூன்று வார்த்தைகளைச் சொன்னாரே ஒழிய, -கடவுளே என்னை மன்னியும் என்ற வார்த்தைகளைச் சொல்லவில்லை. சுவற்றில் அவர் தூக்கி அடிக்கப்பட்டதால் தலையில் பலத்த காயம் ஏற்பட அந்த இடத்திலே அவர் இறந்து போனார்.

கடைசி நேரத்தில் மனம்மாறிக் கொள்ளலாம் என்பது முடியாத காரியம் என்பதற்காகச் சொல்லப்படும் நிகழ்வு இது. ஆம், காலம் உள்ளபோது எப்படியும் வாழ்ந்து விட்டு, கடைசி நேரத்தில் மனம்மாறலாம் என்பது முடியாத காரியம்.

ஆகவே, மெசியா என்னும் இயேசுவின் வருகைக்கு நம்மையே நாம் தயார் செய்யும் விதமாக இதுவே தகுந்த நேரம் என்று உணர்ந்து மனமாறுவோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். கடவுள் தரும் மகிழ்ச்சியையும், மீட்பையும் பெற்று மகிழ்வோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
புதிய பார்வை... புதிய பாதை...

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு கவிதை
(பாரூ 5: 1-9
பிலி 1: 4-6, 8-11
லூக் 3: 1-6)

சாதாரணமானவற்றை
அணுகுவதிலும்
அரவணைப்பத்திலும்
நமக்கு ஆவல்
அதிகம் இருப்பதில்லை
சாதாரணமான செயல்களைவிட
அசாதாரணமான
சொற்களையும்
செயல்களையும்தான்
நாம் பெரிதும் விரும்புகின்றோம்
அழகான உடையணிந்து
வருபவரை
வியந்து பார்ப்போம்
அழுக்கு உடையணிந்து
வருபவரைப்
பார்க்க கூட யோசிப்போம்
பெரிய உணவுவிடுதிக்குச் சென்று
உணவு உட்கொள்பவர்களை
ஆச்சரியமாய் பார்ப்போம்
உணவின்றி
சாலையில் படுத்திருப்போரைக்
கவனிக்காமல் செல்வோம்
பணம் படைத்தவரை
வாயாரப் புகழ்வோம்
சிறந்த படைப்பாளிகளை
ஏளெடுத்துகூட பார்க்கமாட்டோம்
முதலாளிகளை
மூச்சுக்கு முந்நூறுதடவை
ஐயா என்று அழைப்போம்
நம்மை
ஐயாஎன்று அழைப்பவர்களைக்கூட
உதாசீனப்படுத்துவோம்
இதுதான்
இன்றைய உலகின் எதார்த்தம்
எதிர்பார்ப்புகள் ஒருபுறம்
எதிர்ப்புகள் மறுபுறம்
இப்படியாகத்தான்
நம்முடைய வாழ்க்கை
நாள்தோறும்
நகர்ந்துகொண்டிருக்கின்றது
இதில் சிலர்
சிக்குண்டு சிதைகிறார்கள்
சிலர் என்னச் செய்வதென்று
தெரியாமல்
புலம்புகிறார்கள்
இத்தகைய எண்ணங்களுக்கு
விடையாக வருகிறது
திருவருகைக்காலத்தின்
இரண்டாம் ஞாயிறு!
வழிகளைச் செம்மையாக்குங்கள்
மனம்மாறுங்கள் என்று
பாலைவனக் குரல் ஒன்று
நம்மைப் பக்குவப்படுத்த
இன்றைய நாளில் ஒலிக்கிறது
நிதானமாய் கேட்கவும்
நம்மை அழைக்கின்றது...
ஆனால் அவசர உலகில்
இதற்கான வாய்ப்பு
மிக மிக குறைவு...
அலைபேசியில்
மற்றவர்கள் பேசுவதைக்
கேட்பதற்கும்
முகநூலில்
மற்றவர்கள் அனுப்பும்
புகைப்படத்திற்கோ
செயல்பாட்டிற்கோ
லைக் போடுவதும்தான்
நம்முடைய முதன்மையானவைகளாக
இன்று காணப்படுகின்றது...
கிறித்துவின் பிறப்பை
எதிர்பார்த்திருக்கும் நாம்
நம்முடைய பார்வையையும்
நம்முடைய பாதையையும்
மாற்றிட
நேரிய வழியில் அமைத்திட
இன்றைய இறைவாக்குவழிபாடு
நம்மை
வாஞ்சையோடு வரவேற்கிறது!
முதல் வாசகம்
உங்களின் துயர ஆடையைக்
களைந்துவிட்டு
கடவுளின் அருளையும்
மாட்சியையும்
பேரழகாய் பாவிக்க
மகிமையின் ஆடையை
அணிந்திட
கடவுளின் வார்த்தைக்குச்
செவிக்கொடுத்து
இறைவனின் பிள்ளைகளாக
இரக்கத்தோடும்
நீதியோடும் வாழ
அழைப்பதாகவும்
இரண்டாம் வாசகம்
நற்செயல் புரிவதில்
அக்கறையும்
கிறித்துவில் இணைந்து வாழ
விருப்பமும் கொண்டவர்களாக
மாறிடவும்
நற்செய்தி வாசகம்
ஆண்டவருக்காக வழியைத்
தயாராக்க வேண்டிய
கடமையையும்
அவரின் வருகைக்கான தேடலைச்
சுட்டிக்காட்டுவதாக அமைகிறது!
இதனடிப்படையில் சிந்திக்கையில்
திருமுழுக்கு யோவானின் பாதை
மற்றவர்களின் பாதைவிட
வித்தியாசமானது
அவரின் பார்வை மற்றவர்களைவிட
வேறுபட்டது
எனவேதான்
வழியை ஆயத்தமாக்கவும்
பாதையைச் செம்மையாக்கவும்
பள்ளதாக்குகள் நிரப்பப்படவும்
மலைகள் குன்றுகள்
தாழ்த்தப்படவும்
கோணலானவை நேராக்கப்படவும்
கரடுமுரடானவை சமதளமாக்கப்படவும்
கடவுளின் அருளை மனிதர்
காணவும்
குரல் எழுகிறார்...
எப்படிப் புரிந்து கொள்வது?
நம்முடைய பார்வை
இன்று
பொறாமையால் சூழப்பட்டு
மனக்குழப்பதால் வதைக்கப்பட்டு
தீமையால் உருவாக்கப்பட்டு
அநீதியால் ஒருங்கிணைக்கப்பட்டு
அவமதிப்பால் மேம்படுத்தப்பட்டு
அவஸ்தையை
அள்ளிதரும் நியாயமற்ற
வாழ்க்கையாய் மாறிற்று...
நம்முடைய பாதையும்கூட
அரசியல்வாதிகளின்
அடிமைத்தனத்திற்கும்
பன்னாட்டு நிறுவனங்களில்
பணியாற்றுவதிலும்
அந்நியப் பொருள்களை
அவ்வப்போது வாங்குவதிலும்
அடைக்கப்பட்ட உணவுகள்
அறுபடாத உயிர்களின் கலவை
அரைநிர்வாணத்தோடும்
உலவும் மனித உயிர்கள்
அரைவேக்காடோடும் சமைக்கப்பட்ட
வயிற்றுக்கான உணவுகள்
இப்படியாக உருவாயிற்று
இதில்
கோணல் இருக்கிறது
ஆயத்தம் இல்லை
சிரமங்கள் இருக்கின்றன
செம்மைத்தன்மை இல்லை
கரடு முரடுகள் உள்ளன
சமதளமில்லை
பள்ளத்தாக்குங்கள் உள்ளன
பக்குவ நிலையில்லை
இத்தனையும் இருக்கையில்
கடவுளின் அருள் அங்கே
எப்படி இருக்கும்?
கிறித்துவை உள்ளத்தில்
தாங்க தயாராகும்
நாம் அவர் வருவதற்கான
பாதையும்
அவரைப் பார்ப்பதற்கான
நம்முடைய பார்வையும்
சரிவர அமைக்கவில்லையென்றால்
இயேசு பாலன்
எவ்வாறு நம்மிடத்தில் பிறப்பார்
சிந்திப்போம்
திருமுழுக்கு யோவானின் வாக்கு
நம் வாழ்விற்கானது
நாம் எதிர்பார்க்கும்
இயேசுவின் பிறப்புக்கான தயாரிப்பானது
தொடர்ந்து செபிப்போம்
நம் செவிகளில்
கேட்கும் குரலுக்குச் செவிக்கொடுப்போம்
அப்போது
பழைய பாதைகள் மறைந்து
புதிய பாதையும்
பழைய பார்வை நகர்ந்து
புதிய பார்வைக்கும்
வழிப்பிறக்கும்
இயேசுவின் பிறப்பை
நல்முறையில் வரவேற்பதற்கான
வாய்ப்பு கிடைக்கும்
இல்லையென்றால்
வருடந்தோறும் வரும் பிறப்புகளில்
இதுவும் ஒன்றாகும்
நம்மைவிட்டு மீண்டும்
கடந்துவிட்ட நாள்களில் ஒன்றாகும்!



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
புதிய பாதை

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு
(டிசம்பர் 9, 2018)

பாரூக்கு 5:1-9
பிலிப்பியர் 1:4-6,8-11
லூக்கா 3:1-6

மதுவுக்கு அடிமையாகிக் கிடந்து, பின் ஒருநாள், 'இனி நான் குடிப்பதே இல்லை' என்ற முடிவெடுத்து, மதுவிலிருந்து விலகி நிற்கும் ஒரு இனியவரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. 'ஃபாதர் நான் இன்னைக்கு ஒரு டிரைவரா இருக்கேன். கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் இப்படி இல்லை. ஒருமுறை இரவு ஊருக்குத் திரும்புமுன் பேருந்தில் ஏறுவதற்கு முன் நன்றாகக் குடித்தேன். கடையிலிருந்து பேருந்து நிலையம் தூரத்தில் தெரிந்தது. சீக்கிரம் போய் பேருந்து ஏற வேண்டும் என்று என் மனம் சொன்னாலும், கொஞ்ச நேரத்தில் என் கால்கள் தடுமாறுவதுபோல உணர்ந்தேன். ஒரே மயக்கமாக இருந்தது. அப்படியே விழுந்துவிட்டேன். நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன். காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது மருத்துவமனையில் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். நான் எப்படி இங்கே வந்தேன் என்று விசாரித்தேன். இரவில் ஒருவர் இங்கே கொண்டுவந்து சேர்த்ததாகச் சொன்னார்கள். கடவுளே எனக்கு இன்றைய இரண்டாம் வாழ்வைக் கொடுத்தார் என எண்ணினேன். அன்று குடியை நிறுத்தினேன்.' எல்லாம் முடிந்தது என்று நினைத்த அந்த நொடியில் ஒரு கனவுபோல எல்லாமே அவர் வாழ்வில் மாறிவிட்டது. போதையின் பாதை புதிய பாதையாக மாறியது.

நம் வாழ்வின் பாதை ஒன்றாக இருக்க, அங்கே புதிய பாதை ஒன்றை உருவாக்க இறைவன் வருவதாக இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்கிறது. நம் எல்லாருடைய வாழ்விலும் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒரு பாதை நாம் அவரையும், அவரின் செயல்களையும் அறிய முற்படுவதற்குமுன் உள்ள பாதை. மற்றொரு பாதை அவரைக் கண்டவுடன் நாம் மேற்கொள்ளும் பாதை.

இன்றைய பதிலுரைப்பாடலிலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்' (திபா 126) என்று அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர். 'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றியபோது நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என எழுதுகிறார். பாபிலோனிய நாடுகடத்தலின் பின்புலத்தில் பாடப்பட்ட இத்திருப்பாடலில் ஆசிரியர் தன் குழு அனுபவித்த ஒட்டுமொத்த வலியைப் பதிவு செய்கின்றார். தங்களுடைய நகரம், ஆலயம் என எல்லாம் அழிந்து தாங்கள் வேற்றுநாட்டுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றதை ஒரு இறப்பு அனுபவமாக, உறக்க அனுபவமாக நினைக்கின்ற ஆசிரியர், ஆண்டவர் தங்களை மீண்டும் தங்களின் நாட்டிற்கு அழைத்து வந்ததை ஒரு கனவு போல நினைத்துப்பார்க்கிறார். 'எல்லாம் முடிந்தது' என்ற அவர்களின் முந்தைய பாதை இருக்க, இறைவன் புதிய பாதையை அவர்களுக்கு வடிவமைத்துக்கொடுக்கின்றார்.

இந்த நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். பாரூக் 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலர். பாரூக்கு நூல் கத்தோலிக்க விவிலியத்தின் இணைத்திருமுறை பகுதியில் இருக்கிறது. இதன் கிரேக்க மூலம் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முதல் ஏற்பாட்டு நூல்களை யூதர்களும், பிரிந்த சகோதரர்களும் 'வெளிப்படுத்தப்பட்ட நூலாக' ஏற்றுக்கொள்வதில்லை.

பாபிலோனியாவுக்கு இஸ்ராயேல் மக்கள் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். அதாவது, எருசலேமில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரையும் நெபுகத்னேசர் தன் அரண்மனைக்கு எடுத்துச்சென்றுவிட்டான். ஆக, பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர். அரண்மனையில் இருந்ததால் அவர் அனுபவித்திருக்கும் வாய்ப்பில்லை.

'புரட்டிப்போடுதல்' - இதுதான் பாரூக்கின் இறைவாக்கின் மையம். இன்று இருக்கும் நிலையை நாளை ஆண்டவர் புரட்டிப்போடுவார் என்ற நம்பிக்கையைத் தருகிறார் பாரூக்கு.

பாரூக்கு ஐந்து வகை புரட்டிப்போடுதல்களை முன்வைக்கின்றார்:

1. துன்ப துயர ஆடை களையப்பட்டு, மாட்சியின் பேரழகு அணிவிக்கப்படும்.
2. ஒன்றுமில்லாத வெறுந்தலையில், ஆண்டவரின் மாட்சி மணிமுடியாகச் சூட்டப்படும்.
3. பெயரில்லாதவர்களுக்கு, தங்கள் பெயர்களை இழந்தவர்களுக்கு, 'ஐரின் டிகாயுசனேஸ்' ('நீதியில் ஊன்றிய அமைதி') என்றும் 'டோக்ஸா தெயோசேபெயாஸ்' (இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி') என்றும் பெயர்கள் சூட்டப்படும்.
4. நடந்து சென்றவர்கள் பல்லக்கில் மன்னர்போல் தூக்கிவரப்படுவார்கள்.
5. மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகளில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சமமும், நறுமணமும் மிகுந்த சாலைகளில் நடத்திவரப்படுவர்.

இந்தப் புரட்டிப்போடுதலையே நாம் 'பழைய பாதை,' 'புதிய பாதை' என்னும் சொல்லாடல்கள் வழியாகப் புரிந்தால், அடிமைத்தனத்தின் முந்தையை பாதைக்கு எதிர்மறையாக இருக்கிறது இறைவன் அமைத்துத் தரும் புதிய பாதை.

பழைய பாதை அவர்களை நிர்வாணமாக நடத்திச் சென்றது. 'ஷின்லர்ஸ் லிஸ்ட்' அல்லது 'லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்' திரைப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஜெர்மானிய நாசிப்படைகள் யூதர்களைக் கைது செய்து வதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும்போது முதலில் செய்யப்படுவது 'ஆடைகள் களையப்படுதல்'. அதாவது, இதுவரை இருந்த அடையாளம் அழிக்கப்பட்டு, புதிய அடையாளம் தரப்படுகின்றது. இன்றும் நம் சிறைச்சாலைகளிலும் கைதிகளுக்கு அவர்களின் ஆடைகள் களையப்பட்டு, சிறையின் சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு ஆடைகள் மறுக்கப்பட்டன. உரோமின் கிளாடியேட்டர்கள் என்று சொல்லப்படும் போரிடும் அடிமைகள்கூட நிர்வாணமாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். நிர்வாணமாகவே போரிட்டனர். பண்டைக்கால ரோம் மற்றும் கிரேக்க நாடுகளில் வீடுகளில் பணிபுரிந்த ஆண்-பெண் அடிமைகள் ஆடைகள் மறுக்கப்பட்டனர். நம்ம ஊர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரி பெண்கள் தவிர மற்ற பெண்கள் மேலாடை மறுக்கப்பட்டனர் என்பதும் நாம் அறிந்த ஒன்று. இப்படி பாபிலோனியாவில் நிர்வாணமாக நின்றவர்களை தன் மாட்சி என்னும் பேரழகால் உடுத்துகின்றார் இறைவன். புதிய பாதை அவர்களுக்கு ஆடை அணிவிக்கிறது. கடவுள் அருளும் மாட்சியின் பேரழகே அவர்களின் ஆடையாக இருக்கிறது.

பழைய பாதையில் அவர்கள் தலைமுடி மழிக்கப்பட்டது. அடிமைகளின் தலைமுடி மழிக்கப்படும். எதற்காக? சுகாதாரத்திற்காக. குளிப்பதற்கும், தலை முடியைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், எண்ணெய் தேய்ப்பதற்கும் நேரம் அளிக்கப்படாது. மேலும், நம் தலைமுடிதான் நமக்கு மணிமுடி. கடவுளுக்கு நாம் மொட்டை எடுப்பதும் இதற்காகவே. நாம் மணிமுடி எனக் கருதும் ஒன்றைக் கழற்றி இறைவனின் திருவடியில் வைக்கிறோம். போரில் தோற்ற அரசன், வெற்றி பெற்ற அரசனின் காலடிகளில் தன் தலைமகுடத்தை கழற்றி வைக்க வேண்டும். இந்தப் பிண்ணனியில் அடிமைகளுக்குத் தலைமுடியும் மறுக்கப்படுகின்றது. இப்படி மொட்டைத் தலையாய் இருந்தவர்களுக்கு மணிமகுடம் அணிவிக்கிறார் இறைவன். புதிய பாதையில் அவர்கள் மாட்சியை மணிமுடியாகச் சூடியிருக்கின்றனர்.

பழைய பாதையில் இஸ்ரயேல் மக்களுக்குப் பெயரில்லை. அடிமைகளும், சிறைக்கைதிகளும் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை. அவர்கள் வெறும் எண்கள்தாம். பெயர் என்னும் அடையாளம் இழந்தவர்கள் 'ஐரின்' (அமைதி), 'டோக்ஸா' (மாட்சி) என்ற அழகான பெயர்களைப் பெறுகிறார்கள். இந்த இரண்டு பெயர்களும் அவர்கள் இவ்வளவு நாள் இழந்தவைகளைத் திருப்பி தருவனவாக இருக்கின்றன.

பழைய பாதை இருளாக இருந்தது. புதிய பாதை பேரொளியால் ஒளிர்கிறது.

பழைய பாதை அவர்களை மண்டிபோட வைத்திருந்தது. புதிய பாதை அவர்களை எழுந்து நிற்கச் செய்கிறது.

பழைய பாதை கண்ணீராய் நிறைந்தது. புதிய பாதை மகிழ்வால் நிறைகிறது.

பழைய பாதையில் சங்கிலி கட்டப்பட்டு கால்நடையாக நடத்திச் செல்லப்பட்டனர் மக்கள். 'கால் மண்ணில் படாமல் இருப்பது' மாட்சியின் அடையாளம். நிலம் அழுக்கானது. ஆகையால்தான் கடவுளின் கால்கள் நிலத்தில் படக்கூடாது என நினைக்கிறோம். விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுவது நம் காலணிகள். நாம் அணியும் காலணிகள் நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் பல்லக்குகள். இறைவன்தாமே இனி இவர்களை பல்லக்கில் தூக்கி வருவார். புதிய பாதையில் அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல உயர்மிகு மாட்சியுடன் அவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.

பழைய பாதையில் யாருடைய உயிரையும் பற்றி யாரும் கவலைப்படவில்லை. புதிய பாதையில் இறைவன் அவர்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்.

பழைய பாதை இரத்தம் மற்றும் வியர்வையால் துர்நாற்றம் அடித்தது. எருசலேமிலிருந்து பாபிலோனியாவுக்குச் செல்லும் பாதை கரடு முரடானது. பள்ளத்தாக்குகள், குன்றுகள் நிறைந்தது. இவற்றையெல்லாம் சமன்படுத்துவதோடு இறைவன் இன்னும் ஒருபடி போய், பாதைகளில் சாம்பிராணியும் போடுகின்றார். அடிமைகள் இழுத்துச் செல்லப்பட்ட பாதை இரத்தம், உடலின் அழுகல் என நாற்றம் எடுக்கும். நறுமணம் இந்த நெடியை மாற்றுவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும். புதிய பாதையில் நறுமணம் வீசும் மரங்கள் நிழல் தருகின்றன.

இவ்வாறாக, புதிய பாதையின் கூறுகளின் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் செய்த மாபெரும் செயல்களை நாம் கண்டுணர முடிகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (பிலி 1:4-6,8-11) பவுலின் சிறைமடல்களில் ஒன்றான பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பு நகரத் திருஅவைக்கு பவுல் எழுதும் திருமடலின் நடை மற்ற திருமடல்களின் நடையைவிட ஆத்மார்த்தமாக இருக்கின்றது. 'நீங்கள் என் இதயத்தில் இடம்பெற்றுவிட்டீர்கள்' (1:7), 'என் அன்பார்ந்தவர்களே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றிவாகை' (4:1) என அன்பில் நீராட்டுகின்றார். தன் திருமடலின் தொடக்கத்தில் அவர்கள் இதுவரை நம்பிக்கையில் நிலைத்து நிற்பதற்காக அவர்களை வாழ்த்திப் பாராட்டுகின்றார். 'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று அவர்கள்மேல் தான் வைத்துள்ள நம்பிக்கையைப் பதிவுசெய்கின்றார். மேலும், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன்' என ஏங்குகின்றார்.

இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும் வரை பிலிப்பி நகர மக்கள் தங்களின் பழைய பாதையில் இருக்கின்றனர். இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை அவர்களைப் புதிய பாதைக்கு அழைத்துவருகின்றது. இந்தப் புதிய பாதையில் அவர்கள், 'அறிவிலிலும் அன்பிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுவதாக' முன்மொழிகின்றார். மேலும், அவர்களின் செயல்கள் நீதியின் செயல்களாக வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார்.

புதிய பாதைக்கு இறைவனின் அருளால் அழைத்துவரப்படுகின்ற பிலிப்பி நகர மக்கள், தங்கள் சொந்த நற்செயல்களால் அந்தப் பாதையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 3:1-6) திருமுழுக்கு யோவானி;ன் பணித்தொடக்கத்தை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள் போல அல்லாமல், லூக்கா யோவானின் பணியை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்கிறார். உரோமைப் பேரரசர் திபேரிய சீசர், யூதேய ஆளுநர் பிலாத்து, மாநில அரசர்கள் ஏரோது, பிலிப்பு, குறுநில மன்னர்கள் இத்துரேயா, லிசானியா, தலைமைக் குருக்கள் அன்னா, கயபா என்று ஒரு சாதாரண, சாமானிய யூதரின்மேல் ஆட்சி செய்த அனைவர் பெயர்களையும் பதிவு செய்கின்றார் லூக்கா. ஒரு சாமானிய யூதர் தனது சமூக, சமய, பொருளாதார வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இத்தனை பேரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரும் இந்த சாமானிய யூதரின் அன்றாட வாழ்வைத் தீர்மானித்தனர்.

ஆனால், இப்படிப்பட்ட சமூக, சமய, பொருளாதாரப் பாதை ஒரு யூதரை வழிநடத்திக்கொண்டிருக்க, கடவுளின் வார்த்தை விந்தையாக பாலைநிலத்தில் வாழ்ந்து வந்த செக்கரியாவின் மகன் யோவானுக்கு அருளப்படுகின்றது. ஆக, இறைவன் தேர்ந்தெடுக்கும் பாதை சாமானிய பாதையிலிருந்து முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. இதுதான் இறைவனின் விந்தை.

புதிய பாதையை முன்னுரைக்கின்ற திருமுழுக்கு யோவான், 'ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மலை குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்' எனப் புதிய பாதைக்கான தயாரிப்பு வேலைகளை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கின்றார். மேலும், 'இந்தப் புதிய பாதையில் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்' என்ற ஆறுதல் செய்தியையும் தருகின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு ஆண்டவர் காட்டும் புதிய பாதையை சுட்டிக் காட்டுகிறது. ஒரு சாமானிய யூதர் பெற்றிருந்த சமய, சமூக, பொருளாதார கட்டுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது.

இங்கு குறிக்கப்படுகின்ற சொல்லாடல்களை உருவகங்களாக எடுத்துக் கொள்வோம்:

பாலைநிலம்: நம் மனம் இறைவன் இல்லாமல், ஒளி இல்லாமல், மகிழ்ச்சி இல்லாமல், நிறைவு இல்லாமல் காய்ந்திருக்கும் நிலை. தமிழ் மரபில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களை வகைப்படுத்தி, இந்நிலங்கள் தங்களின் இயல்பை இழக்கின்ற போது அவை பாலையாக மாறுகின்றன. ஆக, பாலை என்பது ஒரு குறைவு. பேரரசர், ஆளுநர், குறுநிலமன்னர்கள், தலைமைக்குருக்கள் என பளிங்குத் தரைகளில் வலம் வந்தவர்களுக்கு எட்டாத ஆண்டவரின் குரல், பாலைநிலத்தில் வாழ்ந்த திருமுழுக்கு யோவானை எட்டுகிறது. நம் வாழ்விலும் குறை மேலோங்கி நிற்கும் போது இறைவன் குரல் நம்மை எட்டுகிறது.

வழி: இது ஆண்டவர் அமைத்துத் தரும் புதிய பாதையைக் குறிக்கிறது. வழி நம் முன்பாக இருந்தாலும் அந்த வழிக்கான பயணத்தை மேற்கொள்ளும்போது தான் அந்த வழி அர்த்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக நாம் பயணிக்கும் நான்கு வழிச் சாலைகள், வாகனங்கள் இல்லாத போது வெறும் காட்டுப்பகுதியே. பயன்பாட்டில் தான் வழியானது வழியாக மாறுகிறது.

ஆயத்தமாக்குதலும் செம்மையாக்குதலும்: ஆயத்தமாக்குதல் புதிய முயற்சியையும், செம்மையாக்குதல் புதுப்பிக்கும் முயற்சியையும் குறிக்கிறது. நாம் நம் வாழ்வில் சில நேரங்களில் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம். சில வேளைகளில் ஏற்கனவே உள்ள பாதையைப் புதுப்பிக்கின்றோம். புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க துணிவு தேவை. பழைய பாதையைப் புதுப்பிக்க உள்ளுணர்வு தேவை.

பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தகர்க்கப்படும்: பள்ளத்தாக்குகள் என்பவை என் வாழ்வில் உள்ள குறைவு மனநிலைகள். மலை என்பது என் வாழ்வில் உள்ள மேட்டிமை எண்ணங்கள். பள்ளத்தாக்குகள் நமக்குப் பயம் தருகின்றன. மலை நம் பார்வையை மறைக்கின்றது.

கோணலானவை நேராக்கப்படும். கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். கோணலானவை என்பவை நமக்கு நாமே நாம் சொல்லும் பொய்கள். இவை, நம் மனவுறுதியைக் குலைக்கின்றன. கரடுமுரடானவை என்பவை நம்மைத் தொற்றிக் கொண்டிருக்கும் பிறழ்வுகள்.

இவற்றை எல்லாம் சரி செய்யும்போது, 'நாம் கடவுள் அருளும் மீட்பைக் காண்கிறோம்.' ஆக, லூக்காவைப் பொறுத்தவரையில், 'மீட்பு' என்பது இறப்புக்குப் பின் அல்லது மறுவுலக வாழ்வில் நடக்கும் நிகழ்வு அன்று. மாறாக, இன்றே, இங்கேயே நடக்கக் கூடியது.

இறுதியாக, 'கதிரவன் உதிக்கும் என்ற நம்பிக்கை மாலைப் பொழுதின் இருள் தரம் பயத்தை நாம் எதிர்கொள்ளத் துணை செய்கிறது.' புதிய பாதை பிறக்கும் என்ற நம்பிக்கை நம் பழைய பாதையின் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளவும், அவற்றைச் சரி செய்யவும் நம்மை அழைக்கிறது.

இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி குறித்துக் காட்டுவது அமைதி. அமைதிக்கான சிறந்த வழி பாதை மாற்றம். அணு ஆயுதங்கள் செய்து கொண்டே உலக அமைதி பற்றிப் பேசுவது எப்படிப் பயனற்றதோ, அப்படியே, எந்த ஒரு அகப் பாதை மாற்றமும் செய்யாமல் புறப்பாதை இனிமையாக இருக்கும் என்று யோசிப்பதும் பயனற்றது. அகம் மாற முகம் மாறும். அந்த முகத்தில் மீட்பு ஒளிரும். அந்த முகம் புதிய பாதையை வெற்றியுடன் பார்க்கும். அந்த வெற்றியே அமைதி.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!