Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   07  டிசெம்பர் 2018  
                                                           திருவருகைக்காலம் 1ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.

கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.

ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித்தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, "நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், "ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.

இயேசு அவர்களை நோக்கி, "யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

திருவருகைக்காலத்தின் முதலாம் ஞாயிறு நம்பிக்கையின் விளக்கேற்றி செபிக்கின்றோம்.

உங்கள் நம்பிக்கை உங்களுக்கு நலம் தரட்டும் என்று ஆசீர்வதிப்பதைப் பார்க்கின்றோம்.

கடுளவு நம்பிக்கையே போதும் என்கிறார்.

நம்பிக்கை நமதாகட்டும்.

மாதத்தின் முதல் வெள்ளி. ஆண்டின் இறுதி மாதமிது. இயேசுவின் திருஇருதயத்தை நினைத்து பெற்ற நலன்களுக்காய் நன்றி கூறுவோம்.

நம்முடைய நம்பிக்கைக்குயேற்ப நலன்களை தந்து அந்த இதயம் நம்பால் தன் அக்கரையை காட்டி வருகின்றது.

இத்தகைய வள்ளல் தன்மையை தன்னுடைய புனிதர் நிக்கோலாஸ் மூலம் இன்றும் செய்து வரும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 நம்பியவாரே நிகழட்டும்!

ஓர் ஊரில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் தன்னுடைய இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை செய்து வந்தார்.

ஒரு நாள் வானதூதர் ஒருவர் கடவுளைப் பார்த்து, "அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார், அவருக்கு ஏதாவது செய்யக்கூடாதா?" என்றார். கடவுளும் அதற்குச் சம்மதித்துவிட்டு வானதூதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது வானதூதரைப் பார்த்து, "நீங்கள் கீழே சென்று, 'நான் கடவுளிடமிருந்து வருகிறேன், என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் 'தற்பொழுது கடவுள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?'என்று கேட்பார். அதற்கு நீங்கள் 'கடவுள் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார் என்று பதில் சொல்லுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

"அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்" என்று சொல்லி அனுப்பினார் கடவுள்.

வானதூதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், வானதூதரிடம், "நீங்கள் யார்?" என்று கேட்க, வானதூதர் தான் கடவுளிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் "தற்போது கடவுள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?" என்று கேட்க, வானதூதரும், கடவுள் ஒர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொன்னார்.. அதற்கு அந்த செல்வந்தர் "அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?" என்று கேட்டார்.

வானதூதர் அடுத்து அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, "இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?" என்று பதில் சொன்னார்.

இது வெறும் கதையாக இருந்தாலும், இதில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய தத்துவம் ஒன்று அடங்கி இருக்கின்றது. அதுதான் கேள்வி கேட்காத நம்பிக்கை. கடவுளால் எதையும் செய்ய முடியும் என்று நம்பவேண்டும். அந்த நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கு அடித்தளம்.

நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர். இதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. அவர்களுடைய நம்பிக்கைதான் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆண்டவர் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது, பார்வையற்ற இருவர், "தாவீதின் மகனே" எங்களுக்கு இரங்கும் என்கின்றார். ஆண்டவர் இயேசு பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போது நிச்சயம் தம் சீடர்களுக்கும் மக்களுக்கும் எதையாவது போதித்துக்கொண்டே சென்றிருக்கவேண்டும். ஏனென்றால், ஒரு யூத இராபி தன்னுடைய பயணத்தின்போதுதான் மக்களுக்கு நிறைய போதிப்பார். அந்த வகையில் இயேசுவும் தன்னுடைய சீடர்களுக்கும் மக்களுக்கும் எதையாவது போதித்திருப்பார். அப்படியாக ஆண்டவர் இயேசு போதித்துக்கொண்டு செல்லும்போதுதான் பார்வையற்ற இவர்கள் இருவரும் இயேசுவை நோக்கிக் கத்துகின்றார்கள்.

இயேசு அவர்களுடைய நம்பிக்கையைச் சோதிப்பதற்காகவே அவர்களுடைய குரல் கேட்காதது போன்று இருக்கின்றார். ஏனென்றால், நிறைய நேரங்கில் வீதியில் பிச்சையெடுத்துச் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களுடைய கவனத்தைப் பெறுவதற்காகவே சத்தம்போட்டுக் கத்துவார்கள். அதனாலும், அவர்களுடைய நம்பிக்கையைச் சோதிக்கும் பொருட்டும் இயேசு அவர்களைக் கண்டு கொள்ளாமலே போகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததால், அவர்களைத் தனியாகப் பார்க்கின்றார். கடவுளுடைய வல்லமையை நாமேதான் பெறவேண்டிய ஒழிய, அடுத்தவர் இதில் நமக்கு உதவி செய்ய முடியாது என்பதை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

பின்னர் இயேசு அவர்களிடம், "நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?" என்று கேட்கின்றார். அவர்களும் ஆம் என்று சொல்ல, "நீங்கள் நம்பிய வண்ணமே உங்களுக்கு நிகழட்டும்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கின்றார். அவர்களது நம்பிக்கை அவர்களுக்கு நலம் தந்தது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், பார்வையற்ற அவ்விருவரைப் போன்று நாமும் நம்பிக்கையோடு இருக்கவேண்டும். அப்படியிருந்தால், இறைவனிடமிருந்து எல்லா ஆசிர்வாதமும் பெறுவோம் என்பது உறுதி.

நாம் இறைவனிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 தாவீதின் மகனே! எங்களுக்கு இரங்கும்

ஒருமுறை நம்முடைய தேசபிதா காந்தியடிகள் புனேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே தொழுநோயாளி ஒருவர் வந்து அமர்ந்தார். இதைப்பார்த்த மக்கள்கூட்டம் அவரை அங்கே இருந்து அகன்றுபோகுமாறு கேட்டுக்கொண்டது.

ஆனால் காந்தியடிகளோ தன்தோள் மேல் போட்டிருந்த போர்வையை எடுத்து அவன் மேல் உடுத்தி, அவனுடைய உடலிலிருந்த புண்களை எல்லாம் துடைத்தார். இது மக்களுக்கு இன்னும் ஆச்சர்யத்தைத் தந்தது.

பொதுக்கூட்டம் முடிந்ததும் காந்தியடிகள் அவரை தான் தங்கி இருந்த இடத்திற்கு கூட்டிக்கொண்டு போய், அவருடைய புண்களில் மருந்திட்டு, அவருக்கு சிகிச்சை அளித்தார். அப்போது அங்கு வந்த மருத்துவர் ஒருவர், "ஏன் இப்படி வேண்டாத காரியங்களில் ஈடுபடுகிறீர்கள், அவனுக்கு பிடித்திருக்கிற தொழுநோய் உங்களையும் பாதித்துவிடும்" என்று அறிவுரை கூறினார். ஆனால் காந்தியடிகளோ, "அவன் ஏற்கனவே தன்னுடைய குடும்பத்தாரால் கைவிடப்பட்டு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான், இந்தவேளையில் நாமும் அவனை கைவிட்டுவிட்டோம் என்றால் அவன் எங்கே போவான்?" என்று சொல்லி தன்னுடைய சிகிச்சையைத் தொடர்ந்தார்.

"அன்பும், இரக்கமும்தான் இந்த உலகத்தில் வலிமையான சக்தி, அதைவிட சக்தி வாய்ந்தது வேறு எதுவும் கிடையாது" என்று நோயாளிகள், வறியவர்கள் மாட்டில் காந்தியடிகள் மிகுந்த இரக்கமும், அன்பும் கொண்டு வாழ்ந்துவந்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பார்வையற்ற இருவருக்கு நலமாளிப்பதை படிக்கக் கேட்கின்றோம். இயேசு தன்னுடைய சொந்த ஊரைவிட்டு வெளியே செல்கிறபோது பார்வையற்ற இருவர் இயேசுவைப் பார்த்து, "தாவீதின் மகனே! எங்களுக்கு இரங்கும்" என்று கத்துகிறார்கள். இயேசுவும் அவர்கள் மீது இரக்கம்கொண்டு, அவர்களுக்கு பார்வை தருகிறார்.

பொதுக்காலத்தை நிறைவு செய்து, திருவருகைக்காலத்தைத் தொடங்கி இருக்கிறோம். இந்த திருவருகைக் காலத்தில் மெசியாவின் வருகையைக் குறித்தும், அவருடைய வருகையின்போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதையும் குறித்து வாசிக்கின்றோம். இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் 'காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பார்; பார்வையற்றோரின் கண்கள் விடுதலைப் பார்வை பெரும்; ஒடுக்கப்பட்டோர் ஆண்டவரில் மகிழ்ச்சி அடைவர்; வறியோர் தூயவரில் அகமகிழ்வர்" என்று படிக்கின்றோம். ஆக, மெசியாவாகிய இயேசுவின் வருகையின்போது இவையெல்லாம் நிகழும் என்று இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகிறது. இவ்வார்த்தைகள் நற்செய்தியில் இயேசுவில் - நிறைவு பெறுவதை நாம் படிக்கின்றோம்.

எனவே ஆண்டவராகிய மெசியா இரக்கமும், அன்பும் கொண்டவராய் எல்லா மக்களுக்கும் நலமாளிப்பார் என்பதை இவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அதே வேளையில் இயேசுவின் பிறப்புவிழாவைக் கொண்டாட நம்மையே நாம் தயார் செய்துகொண்டிருக்கும் இந்த சூழலில், நம்மோடு வாழும் நோயாளிகள், வறியவர்கள் ஆகியோர் மீது அன்பும் அக்கறையையும்கொண்டு வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

"மனிதநேயம் மிகுந்து வெளிப்படும் மனமே சமூகத்தை மாற்றியமைக்கும் சக்தி பெற்றது" என்பார் கார்ல் மாக்ஸ். ஆம் மனித நேயம்தான் இந்த சமூகத்தை என்றும் உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது. இன்று நம்மோடு வாழும் நோயாளிகள், வறியோர்மீது உண்மையான அன்பும், பாசமும் கொண்டு வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தேவைப்படும் வரை ஒரு மனிதரை நம்மோடு வைத்துக்கொண்டு, தேவை முடிந்தபிறகு அவர்களைத் தூக்கி எறியும் மனிதர்களாகத் தான் இருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

இயேசு கூறுவார், "உன் மீது நீ அன்புகூருவதுபோல உன் அயலான்மீதும் அன்பு கூர்வாயாக" என்று. நாம் நம்மோடு வாழும் ஏழைகள், நோயாளிகள், வறியோர்மீது உண்மையான அன்புகொண்டுவாழ்வோம்; அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம். இறையருள் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
நம்பிக்கையை மட்டும் இழக்காதே

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வெனிசுலா என்ற நகரில் வைரம் அதிகமாகக் கிடைக்கிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, ஏராளமான பேர் நிறைய நாடுகளிலிருந்து அங்கு படையெடுத்துச் சென்றனர்.

மாதங்கள் பல உருண்டோடின. ஆனால் யாருக்குமே வைரம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களுடைய வைரம் தேடுகின்ற முயற்சியிலிருந்து பின்வாங்கினார்கள். ஏறக்குறைய எல்லாருமே தங்களுடைய நாட்டிற்குத் திரும்பினார்கள். ரபேல் சொலானோ என்ற இளைஞன் மட்டும் நம்பிக்கையை இழக்காமல் இன்னும் ஒருமுறை தேடிப் பார்ப்போம், ஒருவேளை வைரம் கிடைக்கவில்லை என்றால் சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போய்விடுவோம் என்ற முனைப்பில் வைரம் தேடும் வேட்டையில் இறங்கினான்.

ஏறக்குறைய ஒரு வாரம் போயிருக்கும். ஒரு நாள் அதிகாலை நேரம் அவன் வைரத்தைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் இருந்த கல் சற்று மின்னுவது போல் அவனுக்குக் காட்சியளித்தது. எனவே அவன் அந்தக் கல்லை தன்னுடைய கையில் எடுத்து வைத்து எடைபார்த்தான். அந்தக் கல் மற்ற கல்லின் எடையை விட சற்றுக் கூடுதலாகவே இருந்தது. உடனே அவளுக்குள் பொறி தட்டியது. இந்தக் கல் நிச்சயம் வைரமாகத் தான் இருக்கும். ஏனென்றால் இது மற்ற கல்லைவிடவும் பளபளப்பாகவும், எடை சிறுது அதிகமாகவும் இருப்பதால் எதற்கும் வைர வியாபாரியிடம் சென்று அளந்து பார்த்துவிடலாம் எனத் தீர்மானித்தான்.

எனவே அவன் நியூயார்க்கில் உள்ள ஹென்றி வின்ஸ்டன் என்பவரிடம் சென்று அந்த கல்லை சோதித்துப் பார்த்தான். அது வைரம்தான் என அவர் உறுதியளித்தார். மேலும் அந்த வைரத்தை தானே வாங்கிக்கொள்வதாகும் அவர் உறுதியளித்து அமெரிக்க பண மதிப்பின்படி 20,00,000 டாலருக்கு அதை வாங்கிக்கொண்டார்.

அப்போது ரபேல் சொலானோ என்ற அந்த இளைஞன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நம்பிக்கையோடு தேடியதால்தான் தனக்கு இவ்வளவு பெரிய மதிப்புள்ள வைரம் பரிசாகக் கிடைத்தது என்று சந்தோசப்பட்டான். சொலானோ கண்டெடுத்த வைரம்தான் இன்று வரைக்கும் உலகில் இருக்கும் வைரங்களில் பெரிய வைரமாகக் கருதப்படுகின்றது.

இந்த நிகழ்வு நாம் நம்பிக்கையோடு ஒரு செயலைத் தொடங்கினால் அது நிச்சயம் கைகூடும் என்ற உண்மையை நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றபோது பார்வையற்ற இருவர் இயேசுவை நோக்கி, "தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவர் பின் செல்கின்றனர். பின்னர் இயேசு தன்னுடைய வீடு வந்து சேர்ந்ததும், அவர்கள் இருவரையும் தம்மிடம் வரவழைத்து, "நான் - இதைச் செய்ய முடியும் - உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்க, அவர்கள், "ஆம் ஐயா" என்று சொல்கிறார்கள். உடனே இயேசு அவர்களைப் பார்த்து, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்கிறார். உடனே அவர்கள் கண்பார்வை பெறுகிறார்கள்.

இங்கே பார்வையற்ற அந்த இரண்டு மனிதர்களும் ஆண்டவர் இயேசு தங்களுக்கு நலம் தருவார் என்று நம்பிக்கையோடு, விடாமுயற்சியோடு அவர் பின்னால் கத்திக்கொண்டே வருகிறார்கள். அதனால் அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அவர்களுக்கு நலமளிக்கிறார். நம்பிக்கையோடு இருந்தால் இறைவனிடமிருந்து எப்படிப்பட்ட ஆசிரையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை விவிலியம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் அதிகாரம் 11, இறைவார்த்தை 6 ல் வாசிக்கின்றோம், "நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராய் இருக்க முடியாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிசெல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்" என்று. நற்செய்தியில் வரும் அந்த இரண்டு பார்வையற்றவர்களும் 'இயேசுவை தேடிச்சென்றால் அவர் பார்வையளிப்பர் - தக்க கைம்மாறு தருவார் என்று நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கையே அவர்களை மீட்டுக்கொண்டது. நாம் இறைவனிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்கில், எங்கே கடவுள் நாம் கேட்கும் வரங்களைத் தரப்போகிறார் என்ற அவ நம்பிக்கையோடு கேட்கின்றோம். அதனாலேயே இறைவனிடமிருந்து வரங்களைப் பெறாமல் போய்விடுகின்றோம்.

"நம்பிக்கை என்ற சக்தியால்தான் மனிதர் வாழ்கின்றனர். அது இல்லாத போது மனிதர் வீழ்ச்சியடைகின்றனர் என்பார் வில்லியம் ஜேம்ஸ் என்ற அறிஞர். ஆகையால் நாம் இறைவனிடத்தில் பார்வையற்ற அந்த இரண்டு மனிதர்களைப் போன்று நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் நமக்கு அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
"யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்"

ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்பவன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இரவு அவன் நகரத்தில் படம் பார்த்துவிட்டு, கிராமத்து ஒற்றையடிப் பாதையில் நடந்துவரும்போது, வயல்வெளியில் ஒருபுறம் தீப்பிடித்து எரிய ஆரம்பிப்பதைப் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிராமத்துக்குள் சென்று ஆட்களைக் கூப்பிட்டு வருவதற்குள் நேரமாகிவிடும். வயல்கள் எரிந்து சாம்பலாகிவிடும். நாமாகவே இதை அனைப்பதுதான் நல்லது என்று அருகிலிருந்த கிணற்றிலிருந்து வேகவேகமாய் தண்ணீர் இறைத்து, பரவிக்கொண்டிருந்த தீயை அணைத்துவிட்டான்.

அதற்குள் விசயம் ஊருக்குள் தெரிந்து, ஊரில் இருந்த அனைவரும் வந்துவிட்டனர். அவனுக்கு ஒரே பாராட்டு மழை. அத்தனை வயல்களையும் காப்பாற்றியதால், எல்லார் வீட்டிலும் உபசாரம். திடிரென்று வந்த புகழில் அவனுக்குத் தலைகால் புரியவில்லை. இதனால் வேலைக்குப் போவதை நிறுத்தினான். ஊருக்குள்ளே ஜம்பமடித்துக் கொண்டு திரிந்தான். ஊர் மக்களும் 'நம் வயல்களைக் காப்பாற்றியன் என்று அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

இரண்டு மூன்று மாதங்கள் கடந்தன. ஊர் மக்களின் உதவி குறைந்துகொண்டே வந்தது. அவன் பழைய கதையை ஞாபகப்படுத்தியும் யாரும் அவனைக் கேட்பாரில்லை. அந்தக் கூலித் தொழிலாளியின் நிலை மிகவும் பரிதாபமாகிவிட்டது. ஒருநாள் ஊர்காரன் ஒருவனிடம், "உங்கள் வயல்களை எல்லாம் காப்பாற்றினேனே, அதற்குள் மறந்துவிட்டீர்களா?" என்றான். அதற்கு ஊர்க்காரன், "நீ காப்பாற்றிய வயல்களெல்லாம் அறுவடை முடிஞ்சு போயே போச்சு. இன்னும் அதே பழைய கதையைப் பேசிக்கொண்டிருக்கலாமா?" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டான். அந்த கூலித் தொழிலாளிக்கோ பெருத்த அவமானமாப் போய்விட்டது.

நாம் செய்யும் நற்காரியங்கள் வழியாக விளம்பரம் தேடக்கூடாது. அப்படி விளம்பரம் தேடினால், அது நீண்ட நாளைக்கு நீடிக்காது என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பார்வையற்ற இருவரைக் குணப்படுத்துகின்றார். அவர் அவர்களைக் குணப்படுத்திவிட்டு சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், "யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்பதாகும். இயேசு கூறிய இந்த வார்த்தைகளுக்கு முற்றிலும் எதிராக அந்தப் பார்வையற்றவர்கள் செயல்பட்டது வேறு கதையாக இருந்தாலும், இயேசுவின் அவ்வார்த்தைகள் சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

நற்செய்தியில் இயேசு சொன்ன, "யாரும் இதை அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்" என்ற வார்த்தைகளை, நாம் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, இயேசு பேர், புகழுக்கு ஆசைப்படாதவர் என்ற விதத்திலும் இரண்டு, ஒருவேளை பார்வையற்றவர்கள் தன்னைக் குறித்து மக்களிடம் சொல்ல, அது மக்களுக்கு மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிடும் என்ற விதத்திலும் நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த இரண்டு கருத்துகளையும் நாம் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம். இன்றைக்கு ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு உதவிகள் செய்துவிட்டு, அதைப் ஐந்து லட்சத்துக்கும் மேல் விளம்பரம் செய்து, அதன்வழியாக ஆதாயம் தேடிக்கொள்வார். இயேசு அப்படி ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக அவர் செய்த ஒவ்வொரு அருமடையாளத்தின்போதும், 'இதை யாரிடத்திலும் சொல்லவேண்டாம் என்று சொல்வதாக நற்செய்தி நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஓரிடத்தில் மட்டும் விதிவிலக்காக, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உன்மீது இரக்கங்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்பார் (மாற் 5:19). காரணம் அது புறவினத்துப் பகுதி, குணம் பெற்ற அவர், மெசியாவைக் குறித்து அறிவிக்கவேண்டும் என்றே அப்படிச் சொல்வார். மற்ற எந்த இடங்களில் இயேசு, அருமடையாளத்தைச் செய்துவிட்டு, அதன்வழியாக விளம்பரம் தேடவில்லை. ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் ஒவ்வொருவருமே எந்தவொரு விளம்பரம் இல்லாமல் நற்காரியங்கள் செய்வதே சிறந்தது.

அடுத்ததாக, இயேசு அந்த பார்வையற்ற/ பார்வைபெற்ற இருவரிடமும் அவ்வாறு சொல்லக் காரணம், ஒருவேளை அவர்கள் இயேசுவைப் பற்றி மக்களிடம் சொல்ல, அவர்கள் அவரைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கக்கூடிய நிலைகூட வரும் (யோவா 6:15). அதானாலேயே இயேசு அவர்களிடம் அவ்வாறு சொல்கின்றார். இயேசு இந்த உலகத்திற்கு ஓர் அரசியல் மெசியாவாக வரவில்லை, மாறாக ஒரு துன்புறும் ஊழியனாகவே வந்தார். இதைக் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும், உரிய காலம் வரும் அப்போது தன்னை வெளிப்படுத்த வேண்டி வரும் என்பதால் அவர் அவர்களிடத்தில் அவ்வாறு சொல்கின்றார். ஆகையால், இயேசுவை யாரென்று அறிந்துகொள்வதும் அவரைப் போன்று விளம்பரம் இல்லாமல் நற்காரியங்கள் செய்வதும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கின்றன.

எனவே, நாம் இயேசுவைப் போன்று எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் நற்காரியங்கள் செய்வோம். இயேசுவின் அன்பு வழியில் எப்போதும் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================

நற்செய்தி (மத் 9:27-31) - நான் இதைச் செய்ய முடியும்


'முடியும் என்று சொன்னதாலதான் அமெரிக்காக்காரன் நிலவுக்கு ராக்கெட் விட்டான்.

முடியாது என்று சொன்னதாலதான் நாம இன்னும் நிலாச்சோறு ஊட்டிக்கிட்டு இருக்கும்.

முடியாது என்று சொன்னால் மனுசன் இன்னும் குரங்காவே இருந்திருப்பான்'

- அமைதிப்படை திரைப்படத்தில் வரிகள் இப்படித்தான் இருக்கும்.

'முடியும்' - இது வரலாற்றில் முக்கியமான வார்த்தை.

மீட்பு வரலாற்றில் இது இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்றோர் இருவர் இயேசுவிடம் வந்து பார்வைபெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்:

'தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும்'

'நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'

'ஆம் ஐயா!'

'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'

பார்வையற்றவர்கள் பார்வை பெறுகின்றனர்.

கபிரியேல் வானதூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன நிகழ்வில், மரியா தூதரிடம், 'இது எப்படி முடியும்? நான் கன்னி ஆயிற்றே' எனத் தயக்கம் காட்டுகிறார். 'கடவுளால் முடியாதது எதுவும் இல்லை' என்று தூதர் சொன்னவுடன், சரணாகதி அடைகின்றார் மரியா.

'இவரால் முடியும்' என்று பார்வையற்றவர் நினைத்ததால் அவர்கள் பார்வை பெற்றனர்.

'இவரால் முடியும்' என்று மரியா சொன்னதால் மீட்பர் இவ்வுலகில் பிறந்தார்.

இவர்கள் இருவரும் அடுத்தவரை நம்பினர். இந்த நம்பிக்கையின் ஊற்று அவர்கள்தாம். அதாவது, 'என்னால் முடியும்' என்று நினைக்கும் ஒன்றைத்தான், 'இவரால் முடியும்' என அடுத்தவரில் என்னை நம்ப முடியும்.

இன்றைய பதிலுரைப்பாடல் ஆசிரியரும், 'ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு' என நம்புகிறார். அவர் அந்த ஒளியின் துணையைக் கண்டுகொள்கிறார்.



- Rev. Fr. Yesu Karunanidhi

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!