Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                           25 டிசம்பர்   
                                    கிறிஸ்து பிறப்புக் காலம் - திருவிழிப்புத் திருப்பலி
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
டிசம்பர் 24ஆம் நாள் மாலையில் நடைபெறும் திருவிழிப்புத் திருப்பலியில் கீழ்க்கண்ட வாசகங்களைப் பயன்படுத்தவும்.


ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப் படுவாய்.

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர் பெறமாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'என் மகிழ்ச்சி' என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு 'மணம் முடித்தவள்' என்று பெயர் பெறும்.

ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 89: 3-4. 15-16. 26, 28 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

3 நீர் உரைத்தது: 'நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி

26 'நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
தாவீதின் மகனான கிறிஸ்து பற்றிப் பவுலின் சான்று.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 16-17,21-25

தொழுகைக் கூடத்தில் பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: "இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார்.

பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டை விட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்; பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார்.

பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.

பின்பு கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து 'ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

அவருடைய வருகைக்கு முன்பே யோவான், 'மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் `நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார்."


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! நாளை அவனியின் அநீதி அழிவுறும்; உலகின் மீட்பர் நம்மீது அரசாள்வார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தாவீதின் மகனான இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-25

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"என்றார்.

"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்"என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.

இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அல்லது - குறுகிய வாசகம்

மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-25

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"என்றார்.

'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!