|
14
ஏப்ரல் 2018 |
|
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு- 3ம் ஆண்டு |
|
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
குருத்தோலைப் பவனி
ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 28-40
அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம்
என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை
அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்;
அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி
வைக்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்
கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம்,
'ஏன் அவிழ்க்கிறீர்கள்?'
என்று கேட்டால், `இது ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள்"
என்றார்.
அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக்
கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின்
உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?"என்று அவர்களிடம்
கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை"என்றார்கள்.
பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள்
மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர்
போய்க்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில்
விரித்துக்கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச்சரிவை
நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட
எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப்
புகழத் தொடங்கினர்: "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!
விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!"என்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி,
"போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும்"என்றனர்.
அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும்
என நான் உங்களுக்குச் சொல்கிறேன்"என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
திருப்பலி இந்த ஞாயிற்றுக்கிழமையில் தரப்பட்ட மூன்று வாசகங்களையும்
வாசிப்பது நலம். ஆனால் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு
முக்கியமானதால், அதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. திருக்கூட்டத்தின்
நிலைக்கு ஏற்றபடி, நற்செய்திக்கு முன் வரும் வாசகங்களில், ஒரு
வாசகத்தை மட்டும் வாசிக்கலாம். அல்லது, தேவையானால் இரு வாசகங்களையும்
விட்டுவிடலாம்.
மேலும் தேவையானால், திருப்பாடுகளின் குறுகிய வாசகத்தைப் பயன்படுத்தலாம்.
மேற்கூறியவை மக்களோடு சேர்ந்து நிறைவேற்றப்படும் திருப்பலிக்கே
பொருந்தும்.
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை
நான் அடைவதில்லை என்று அறிவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7
நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய
என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும்
அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல்
நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என்
செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை.
அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என்
தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும்
என் முகத்தை மறைக்கவில்லை.
ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்;
என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை
என்று அறிவேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 22: 7-8. 16-17a. 18-19. 22-23 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப்
பிதுக்கித் தலையசைத்து,
8 'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே!
அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்'
என்கின்றனர். பல்லவி
16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள்
என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும்
துளைத்தார்கள். 17ய என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்.
பல்லவி
18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல்
சீட்டுப் போடுகின்றனர். 19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத்
தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய
விரைந்து வாரும். பல்லவி
22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப்
புகழ்ந்து பாடுவேன். 23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்;
யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல்
மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கிறிஸ்து தம்மையே
தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11
கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும்
நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு
ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும்
சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே
தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும்
மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு
விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம்
கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா
நாவுமே அறிக்கையிடும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
பிலி 2: 8-9
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை
மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
-மூன்றாம் ஆண்டு
=================================================================================ஆண்டவருடைய
திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி,
வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும்
வாசிக்கப்படும். (காண்க: திருப்பலிப் புத்தகம், பக்கம் 103, எண்
22)
லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
திருப்பாடுகள் 22: 14 - 23: 56
இயேசுவின் சீடர்கள் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தபின் நேரம்
ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.
அப்போது அவர் அவர்களை நோக்கி, "நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு
இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.
ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன்
என்று உங்களுக்குச் சொல்கிறேன்"என்றார்.
பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம்,
"இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில்
இதுமுதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை
என நான் உங்களுக்குச் சொல்கிறேன்"என்றார்.
பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்
பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும்
எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்"என்றார்.
அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக்
கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும்
புதிய உடன்படிக்கை. என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு
பந்தியில் அமர்ந்திருக்கிறான். மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே
போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக்
கேடு"என்றார்.
அப்பொழுது அவர்கள், "நம்மில் இச்செயலைச் செய்யப்போகிறவர்
யார்"என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள். மேலும்
தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம்
அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், "பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்;
அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.
ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும்
ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்?
பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில்
அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக
இருக்கிறேன். நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள்
நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பதுபோல
நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது
நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின்
பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
"சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச்
சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை
தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை
உறுதிப்படுத்து"என்றார்.
அதற்குப் பேதுரு, "ஆண்டவரே, உம்மோடு சிறையிலிடப்படுவதற்கும்
ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்"என்றார்.
இயேசு அவரிடம், "பேதுருவே, இன்றிரவு, `என்னைத் தெரியாது' என
மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச்
சொல்கிறேன்"என்றார்.
இயேசு சீடர்களிடம், "நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ மிதியடியோ
எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?"
என்று கேட்டார்.
அவர்கள், "ஒரு குறையும் இருந்ததில்லை" என்றார்கள். அவர் அவர்களிடம்,
"ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்;
வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம்
மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும். ஏனெனில் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்:
'கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்று மறைநூலில்
எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை
எல்லாம் நிறைவேறி வருகின்றன"என்றார்.
அவர்கள், "ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன"என்றார்கள்.
இயேசு அவர்களிடம், "போதும்"என்றார்.
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச்
சென்றார். சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அந்த இடத்தை
அடைந்ததும் அவர் அவர்களிடம், "சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம்
வேண்டுங்கள்,"என்றார்.
பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு,
இறைவனிடம் வேண்டினார்: "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக்
கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி
அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"என்று கூறினார்.
அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை
வலுப்படுத்தினார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய்
இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத்
துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.
அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது
அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களிடம், "என்ன, உறங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு
உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்"என்றார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய்
வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன்
வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.
இயேசு அவனிடம், "யூதாசே, முத்தமிட்டா மானிடமகனைக்
காட்டிக்கொடுக்கப் போகிறாய்?"என்றார்.
அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, "ஆண்டவரே,
வாளால் வெட்டலாமா?"என்று கேட்டார்கள்.
அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத்
தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.
இயேசு அவர்களைப் பார்த்து, "விடுங்கள், போதும்"என்று கூறி
அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.
அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும்
மூப்பர்களையும் பார்த்து, "ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல
நீங்கள் வாள்களோடும் தடிகளோடும் வந்தது ஏன்? நான் நாள்தோறும்
கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது"
என்றார்.
பின்னர் அவர்கள் இயேசுவைக் கைது செய்து இழுத்துச் சென்று தலைமைக்
குருவின் வீட்டுக்குக் கொண்டுபோனார்கள்.
பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். வீட்டு உள்முற்றத்தின்
நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
பேதுருவும் அவர்களோடு இருந்தார்.
அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக்
கண்டு, அவரை உற்றுப்பார்த்து, "இவனும் அவனோடு இருந்தவன்"என்றார்.
அவரோ, "அம்மா, அவரை எனக்குத் தெரியாது"என்று மறுதலித்தார்.
சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், "நீயும்
அவர்களைச் சேர்ந்தவன்தான்"என்றார்.
பேதுரு, "இல்லையப்பா"என்றார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர், "உண்மையாகவே
இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்"என்று வலியுறுத்திக்
கூறினார். பேதுருவோ, "நீர் குறிப்பிடுபவரை எனக்குத்
தெரியாது"என்றார்.
உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதே, சேவல்
கூவிற்று.
ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: "இன்று சேவல்
கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்"என்று ஆண்டவர் தமக்குக்
கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து
அழுதார்.
இயேசுவைப் பிடித்து வைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.
அவரது முகத்தை மூடி, "உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே,
சொல்"என்று கேட்டார்கள். இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.
பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞர்களும் கூடி வந்தார்கள்; இயேசுவை இழுத்துச்
சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள். அவர்கள்,
"நீ மெசியாதானா? எங்களிடம் சொல்"என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், "நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;
நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்லமாட்டீர்கள். இதுமுதல்
மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்"
என்றார்.
அதற்கு அவர்கள் அனைவரும், "அப்படியானால் நீ இறைமகனா?"என்று
கேட்டனர்.
அவரோ, "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்"என்று அவர்களுக்குச்
சொன்னார்.
அதற்கு அவர்கள், "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன்
வாயிலிருந்து நாமே கேட்டோமே"என்றார்கள். திரண்டிருந்த மக்கள்
அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.
"இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக்
கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று
சொல்லிக்கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்"என்று
அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?"என்று கேட்க, அவர்,
"அவ்வாறு நீர் சொல்கிறீர்"என்று பதில் கூறினார்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும்
பார்த்து, "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை"என்று
கூறினான்.
ஆனால் அவர்கள், "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம்
முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத்
தூண்டிவிடுகிறான்"என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிலாத்து, "இவன் கலிலேயனா?"என்று கேட்டான்; அவர்
ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது
எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில்,
அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய்
விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக்
காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன்
அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில்
எதுவும் கூறவில்லை. அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல்
அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.
ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான
ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.
அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும்
அன்று நண்பர்களாயினர்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும்
ஒன்றாக வரவழைத்தான்.
அவர்களை நோக்கி, "மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று
இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள்
முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும்
இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை;
ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய
யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து
விடுதலை செய்வேன்"என்றான்.
விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம்
அவனுக்கு இருந்தது.
திரண்டிருந்த மக்கள் அனைவரும், "இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென
விடுதலை செய்யும்"என்று கத்தினர். பரபா நகரில் நடந்த ஒரு
கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.
பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக்
கூப்பிட்டுப் பேசினான்.
ஆனால் அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்"
என்று கத்தினார்கள்.
மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, "இவன் செய்த குற்றம்
என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை.
எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்"என்றான்.
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக்
கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது. அவர்கள் கேட்டபடியே
பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச்
சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவன்
விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய
விட்டுவிட்டான்.
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்
சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து
கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின்
சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச்
செய்தார்கள். பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி
ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.
இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள்
எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும்
அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது `மலடிகள்
பேறுபெற்றோர்' என்றும் `பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும்
பேறுபெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப்
பார்த்து, `எங்கள் மேல் விழுங்கள்' எனவும் குன்றுகளைப்
பார்த்து, `எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை
மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான்
செய்யமாட்டார்கள்!"என்றார்.
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரண தண்டனைக்காக அவர்கள் அவரோடு
கொண்டு சென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும்
அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும்
அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள்
செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"என்று
சொன்னார்.
அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில்
பங்கிட்டுக்கொண்டார்கள். மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டு
நின்றார்கள்.
ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின்
மெசியாவும், தேர்ந் தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே
விடுவித்துக்கொள்ளட்டும்"என்று கேலி செய்தார்கள். படைவீரர்
அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ
யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்"என்று எள்ளி
நகையாடினர்.
"இவன் யூதரின் அரசன்"என்று அவரது சிலுவையின் மேல் எழுதி
வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த
குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும்
காப்பாற்று"என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீ
அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி
இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம்
செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும்
செய்யவில்லையே!"என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது
என்னை நினைவிற்கொள்ளும்"என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில்
இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"என்றார்.
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை
நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை.
திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. "தந்தையே, உம் கையில்
என் உயிரை ஒப்படைக்கிறேன்"என்று இயேசு உரத்த குரலில் கூறி
உயிர் துறந்தார்.
( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )
இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்"
என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக்
காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு,
மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றனர். அவருக்கு
அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி
வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப்
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச்
சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின்
திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள
அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக்
காத்திருந்தவர்.
அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது
உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றி, பாறையில் குடைந்திருந்த
கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம்
செய்ததில்லை.
அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம். கலிலேயாவிலிருந்து
அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக்
கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்துவிட்டு,
திரும்பிப்போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும்
ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில்
ஓய்ந்திருந்தார்கள்.
அல்லது குறுகிய வாசகம்
லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
திருப்பாடுகள் 23: 1-49
மூப்பர் சங்கத்தின் முன் திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து
இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர். "இவன் நம் மக்கள்
சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம்
கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று
சொல்லிக்கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்"என்று
அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?"என்று கேட்க,
அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்"என்று பதில் கூறினார்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும்
பார்த்து, "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை"என்று
கூறினான்.
ஆனால் அவர்கள், "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம்
முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத்
தூண்டிவிடுகிறான்"என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிலாத்து, "இவன் கலிலேயனா?"என்று கேட்டான்;
அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து,
அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில்,
அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய்
விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக்
காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன்
அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில்
எதுவும் கூறவில்லை.
அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல்
மிகுதியான குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.
ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான
ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி
அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த
ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர். பிலாத்து தலைமைக்
குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக
வரவழைத்தான்.
அவர்களை நோக்கி, "மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று
இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள்
முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக்
குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும்
காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி
அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன்
செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை
செய்வேன்"என்றான்.
விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய
கட்டாயம் அவனுக்கு இருந்தது.
திரண்டிருந்த மக்கள் அனைவரும், "இவன் ஒழிக! பரபாவை
எங்களுக்கென விடுதலை செய்யும்"என்று கத்தினர். பரபா நகரில்
நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச்
சிறையிலிடப்பட்டவன்.
பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக்
கூப்பிட்டுப் பேசினான்.
ஆனால் அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில்
அறையும்"என்று கத்தினார்கள்.
மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, "இவன் செய்த குற்றம்
என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான்
காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்"என்றான்.
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில்
வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது. அவர்கள்
கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.
கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச்
சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவன்
விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய
விட்டுவிட்டான்.
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்
சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து
கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின்
சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச்
செய்தார்கள்.
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி
வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.
இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள்
எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள்
மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும்.
அப்போது `மலடிகள் பேறுபெற்றோர்' என்றும் `பிள்ளை பெறாதோரும்
பால் கொடாதோரும் பேறுபெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது
அவர்கள் மலைகளைப் பார்த்து, `எங்கள் மேல் விழுங்கள்' எனவும்
குன்றுகளைப் பார்த்து, `எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும்
சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால்
பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!"என்றார்.
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரண தண்டனைக்காக அவர்கள் அவரோடு
கொண்டுசென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும்
அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக
அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள்
செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"என்று
சொன்னார்.
அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக்
கொண்டார்கள். மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின்
மெசியாவும், தேர்ந் தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே
விடுவித்துக்கொள்ளட்டும்"என்று கேலி செய்தார்கள்.
படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,
"நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்"என்று
எள்ளி நகையாடினர். "இவன் யூதரின் அரசன்"என்று அவரது
சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ
மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று"என்று அவரைப்
பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீ
அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி
இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம்
செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும்
செய்யவில்லையே!"என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது
என்னை நினைவில் கொள்ளும்"என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில்
இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"என்றார்.
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை
நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை.
திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"என்று இயேசு
உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )
இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்"
என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக்
காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு,
மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றனர். அவருக்கு
அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி
வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நமக்காகத் துன்புறம் இயேசு
பாரதநாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் தாய்
ஸ்வரூப்ராணி. இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீராங்கனை. ஒருமுறை
அவர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டபோது காவல்துறையினர்
அவரது தலையில் கடுமையாகத் தாக்க, அப்படியே அவர் சரிந்து கீழே
விழுந்தார். இதனால் தலையில் பெரிய கட்டுப்போடப்பட்டு, வீட்டில்
ஓய்வு எடுத்து வந்தார்.
இது நடந்து சிலநாட்களுக்குப் பிறகு, மீண்டுமாக ரேபரேல் என்னும்
இடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. அதில்
ஸ்வரூப்ராணியின் மகனாகிய பண்டித ஜவகர்லால் நேருவும் போராட்டத்தில்
கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது
அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தாய் ஸ்வரூப்ராணி அங்கே
சென்றிருந்தார்.
தலையில் அதே பெரிய கட்டுடன் தன்னுடைய தாய் அங்கே வந்திருப்பதைக்
கண்டு அதிர்ச்சியடைந்த நேரு, "எதற்குமா இப்படி தலையில் காயத்தை
வைத்துக்கொண்டு இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்தத்
தாய், "அன்பு மகனே! இது காயம் கிடையாது, விடுதலைப் போராட்டத்தில்
கலந்துகொண்டதற்காக பாரதத்தாய் எனக்குக் கொடுத்த பதக்கம். ஓவ்வொரு
முறையும் இந்தக் காயத்தைப் பார்க்கும்போது அதை நான் பாரதத்தாய்
எனக்குத் தந்த பரிசாகவே பார்க்கிறேன்" என்றார். தாயின் இப்படிப்பட்ட
உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்டதும் நேரு நாட்டிற்காக இன்னும் உத்வேகத்துடன்
போராட துணிவு பெற்றார்.
நாட்டிற்காக, உண்மைக்காக போராடுவதனால் கிடைக்கும் காயங்கள் எல்லாம்
பதக்கங்களே என்பதை இந்நிகழ்வானது நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று, நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள்
வழியாக ஆண்டவர் பட்ட பாடுகளை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்க
அழைக்கப்படுகின்றோம். இயேசு பட்ட பாடுகள், காயங்கள் எல்லாம்
அவர் நம்மீது அவர்கொண்ட அன்பின் வெளிப்பாடு; தன்னையே பலியாகத்
தந்த தியாகத்தின் வெளிப்பாடு.
நற்செய்தியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எருசலேம் நகரிலே
வெற்றிவீரராய் பவனி வருகின்றார். அவரை சூழ்ந்துநிற்கின்ற மக்கள்
ஒலிவக் கிளைகள் பிடித்து, ஓசான்னா கீதம்பாடி வரவேற்கிறார்கள்.
செக்கரியாப் புத்தகம் 9:9-10 ஆகிய வாசனங்களில் படிக்கின்றோம்.
"மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ!
உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்;
எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல்
ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்;
எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான
வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்;
அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின்
எல்லைகள்வரை செல்லும்" என்று. அந்த இறைவார்த்தையை நிறைவு
செய்துவது போன்று இருக்கின்றது இயேசுவின் இந்த எருசலேம் பவனி.
ஆம், இயேசு இந்த உலகத்திற்கு அமைதியை, மீட்பைத் தரவந்தார். அதைத்
தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாக நிறைவேற்றித் தந்தார்
என்பது ஆழமான நம்பிக்கை, விசுவாசம் எல்லாம்.
இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியனைக்
குறித்துப் பேசுவார். அந்த துன்புறும் ஊழியன் 'இயேசுவே' என்பது
விவிலிய அறிஞர்கள் கூறக்கூடிய செய்தி. "மெசியாவாகிய அவர் அடிப்போருக்கு
முதுகையும், தாடையைப் பிடுங்குவோருக்கு தாடையையும் கொடுத்தார்;
நிந்தனை செய்வோருக்கும், காரி உமிழ்வோருக்கும் அவர் தனது முகத்தை
மறைக்கவில்லை". இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார்,
"கடவுள் வடியில் இருந்த அவர் (இயேசு) தம்மையே வெறுமையாக்கி,
அடிமையின் கோலம் பூண்டு, சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்கிறார்"
என்று. இப்படியாக இயேசு காயங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும்
துணிவோடு ஏற்றுக்கொள்கிறார்.
இவை எல்லாம் யாருக்காக? அவருடைய பிள்ளைகளாகிய நமக்காகத் தான்.
எனவே அவரது பிள்ளைகளாக சீடர்களாக இருக்கக்கூடிய நாம்,
இயேசுவைப் போன்று துன்பங்களைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டு பிறர்
விழா நம்மையே தரும் மக்களாக வேண்டும்.
புத்தரின் சீடர்களில் ஒருவரான பூர்ணா என்பவர் ஒருமுறை தியானம்
செய்துகொண்டிருந்த 'சுரோணப் பிரந்தா என்னும் இடத்திற்குச்
சென்று போதிக்கவேண்டும்' என்று உள்ளுணவர்வால்
உணர்த்தப்பட்டார். இச்செய்தியை அவர் மற்ற சீடர்களிடம் போய்
சொன்னபோது அவர்கள் அவரிடம் "அந்த இடத்திற்குப் போகவேண்டும்"
என்று எச்சரித்தார்கள். ஏனென்றால் அங்கே வாழக்கூடிய மக்கள்
கரடு முரடானவர்கள். கடின உள்ளத்தினர்.
பூர்ணா மனந்தளராமல் அச்செய்தியை புத்தரிடம் எடுத்துச்
சொன்னார். புத்தர் அதைக் கேட்டுவிட்டு, "அன்பு மகனே! சரோணாப்
பிரந்தா பகுதியில் உள்ளவர்கள் மிகவும் கடின உள்ளத்தினர் என்பதை
நீ அறிவாய். அப்படிப்பட்ட மக்களுக்கு நீ போதிக்கின்றபோது உன்னை
அவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசைபாடினால் நீ என்னசெய்வாய்?"
என்று கேட்டார். அதற்கு பூர்ணா, "சுரோணாப் பிரந்தா பகுதி
மக்கள் மிகவும் அன்பானவர்கள், நட்பு பாராட்டுபவர்கள்.
ஏனென்றால் அவர்கள் என்னை அடிக்கவில்லையே என்று
சந்தோசப்படுவேன்" என்றார்.
புத்தர் தொடர்ந்து அவரிடம், ஒருவேளை அப்பகுதி மக்கள் உன்னை
அடித்தார்கள் என்றால் நீ என்ன செய்வாய்" என்றார். அதற்கு அவர்,
"சுரோணாப் பிரந்தா மக்கள் அன்பானவர்கள். ஏனென்றால் அவர்கள்
என்னை கொடிய ஆயுதங்களால் தாக்கவில்லையே என்று சந்தோசப்படுவேன்"
என்றார். மீண்டும் புத்தர், "ஒருவேளை அவர்கள் உன்னை கொடிய
ஆயுதங்களால் தாக்கினால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டார்.
அதற்கு அவர், சுரோணாப் பிரந்தா மக்கள் அன்பானவர். ஏனென்றால்
அவர்கள் என்னுடைய உயிரைப் பறிக்கவில்லையே என்று
சந்தோசப்படுவேன்" என்றார்.
மறுபடியும் புத்தர் அவரிடம், "ஒருவேளை அவர்கள் உன்னுடைய உயிரை
எடுத்துவிட்டால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டார். அதற்கு
அவர், "சுரோணாப் பிரந்தா மக்கள் அன்பானவர்கள். ஏனென்றால்
அவர்கள் என்னுடைய உயிரை இந்த உடலிலிருந்து
விடுவித்துவிட்டார்கள் என்று சந்தோசப்படுவேன்" என்றார். இதைக்
கேட்ட புத்தர் அவரிடம், "அன்பு மகனே பூர்ணா! உண்மையில் நீ
மிகப்பெரியவன் என்னுடைய போதனையைப் பரப்புவதற்காக சாவையும்
ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டாய். ஆதலால் நீ எதற்கும் பயப்படத்
தேவையில்லை, என்னுடைய ஆசிர் என்றும் உன்னோடு" என்று சொல்லி
அவரை ஆசிர்வதித்து, வழியனுப்பினார்.
இயேசுவின் சீடர்களாக, அவருடைய பணியைத் தொடரும் ஒவ்வொருவரும்
துன்பங்களைத் துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் மனத்துணிவைப்
பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் உறுதியான
மனநிலையில் இயேசுவுக்காக பணிசெய்ய முடியும். இயேசு கிறிஸ்துகூட
நிந்தை அவமானங்களை, துன்பங்களை திறந்த மனதுடன்
ஏற்றுக்கொண்டார். ஆகையால் நாமும் இறைபணி ஆற்றும்போது வரக்கூடிய
துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எழுத்தாளர் வெ.இறையன்பு ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்,
"நம்மைப் பயமுறுத்துகின்ற நிகழ்வுகளிலிருந்து விடுதலை
பெறுவதற்கான ஒரே வழி, அவற்றைத் துணிச்சலாக ஏற்றுக்கொள்வதுதான்"
என்று. ஓர் ஆன்மீக எழுத்தாளரும் இவ்வாறு கூறுவார், "கடவுளிடம்,
என்னுடைய பிரச்சனைகள் பெரிது என்று கூறாதே. மாறாக
பிரச்சனைகளிடம், என்னுடைய கடவுள் மிகப்பெரியவர் என்று கூறு"
என்று. ஆகவே இயேசுவின் பணியைச் செய்யக்கொடிய நமக்கு வரக்கூடிய
துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொள்வோம், இறைவனின் பாதுகாப்பை
உணர்வோம்.
அடுத்ததாக நாம் இறைவனின் பணியைச் செய்கின்றபோது அவரின்
பாதுகாப்பும், அவர் தரும் கைமாறும் நமக்கு என்றும் உண்டு
என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். முதல் வாசகத்தில் எசாயா
இறைவாக்கினர் கூறுவார், "ஆண்டவராகிய என் தலைவர் துணை
நிற்கின்றார்; நான் அசைவுறேன்" என்று. ஆம், இறைவன் நம்மோடு
இருக்கிறார் என்று உணர்ந்து வாழ்கின்றபோது நம்மால்
எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் துணிவுடன் ஏற்றுக்கொள்ள
முடியும். பவுலடியாரும் இதே கருத்தைதான் இன்னும் உறுதிபடச்
சொல்வார், "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும்
செய்ய ஆற்றல் உண்டு" என்று (பிலி 4:13). எனவே இறைவனின்
பாதுகாப்பை உணர்ந்த மக்களாக வாழ்வோம்.
ஒருமுறை மறைப்பணியாளர் ஒருவரும், அவருடைய நண்பரும் ஓர் ஊரில்
போதித்துக்கொண்டிருந்தபோது அவர்களுடைய போதனையைப் பிடிக்காத
ஒருசிலர் அவர்களை கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள். இதனால்
அவர்கள் இருவரும் அந்த கொலைகாரர்களிடமிருந்து தப்பித்து வேறொரு
இடத்திற்கு ஓடுகிறார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அந்த
கொலைகாரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தே வந்தார்கள்.
போகிற வழியில் மறைப்பணியாரின் நண்பர் அவரிடம், "ஒருவேளை
கொலைகாரார்களின் கையில் நாம் அகப்பட்டால் நாம் அவ்வளவுதான்.
இந்த தனிக்காட்டில் நாம் இருவரும் என்ன செய்ய?" என்று
வினவினார். அதற்கு அவர், "நாம் இருவர் என்று சொல்லாதே, மூவர்
என்று சொல். ஏனென்றால் நம்மோடு கடவுள் இருக்கிறார். ஆகையால் நீ
எதைக் குறித்தும் கவலைப்படாதே" என்றார்.
அப்போது அங்கே ஒரு குகை இருந்தது. உடனே அவர்கள் இருவரும்
அந்தக் குகைக்குள் ஓடிப் பதுங்கிக்கொண்டார்கள். அவர்களைப்
பின்தொடர்ந்து வந்த கொலைகாரர்கள் அவர்கள் இருவரையும் காணாது
சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அருகே இருக்கும் குகைக்குள்போய்
அவர்கள் பதுங்கிக்கொண்டார்களா? என்ற சந்தேகப்பட்ட ஒருவன்
குகையின் வாசலுக்கு அருகே வந்தான். ஆனால் குகையின் வாசலில்
அப்போதுதான் ஒரு சிலந்தி தன்னுடைய வலையைப் பிண்ணியிருந்தது.
இதைக் கவனித்த அவன் குகைக்குள் அவர்கள் போயிருக்க வாய்ப்பில்லை
என்று சொல்லி அங்கிருந்த நகர்ந்தான்.
உள்ள இருந்த மறைப்பணியாளரும், அவருடைய நண்பரும் கடவுள் நம்
அருகில் இருந்து நம்மைக் காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்லி
கடவுளைப் புகழ்ந்து போற்றினார்கள்.
கடவுளை நம்பி வாழும் இறையடியார் ஒவ்வொருவருக்கும் கடவுளின்
பாதுகாப்பும், அருளும் என்றும் உண்டு என்பதை இந்த நிகழ்வானது
நமக்கு எடுத்துரைக்கிறது.
ஆகவே பாடுகளின் குருத்து ஞாயிறை சிறப்பாகக் கொண்டாடும் நாம்
இந்த நல்ல நாளில் நமக்காக இயேசு நமக்காகப் பட்ட பாடுகளை
நினைவுகூர்ந்து பார்ப்போம். அதோடு மட்டுமல்லாமல், நாமும்
இயேசுவைப் போன்று பிறர் வாழ நம்மையே தருவோம். இறைவனின்
பாதுகாப்பை உணர்ந்து வாழ்வோம். இறையருள் பெறுவோம்.
Fr. Maria Antony, Palayamkottai.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
(எசாயா 50: 4-7; பிலிப்பியர் 2: 6-11; லூக்கா 22: 14-23: 56)
தன்னையே தந்த தலைவன்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மக்களை
நீதியோடும் நேர்மையோடும் ஆண்டுவந்தான். மக்களும் அவனுடைய
ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். எல்லாமும்
நன்றாய் இருக்கும்பொழுது, அந்த அரசாங்கத்திற்குத் திருஷ்டிப்
பொட்டு வைத்தார்ப்போல் இருந்தான் இளவரசன். அவன் பொல்லாத
நண்பர்களோடு சேர்ந்துகொண்டு தாறுமாறாக வாழ்ந்து வந்தான்.
ஒருமுறை இளவரசனைச் சந்தித்த ஒரு பெரியவர், அவனுடைய தவறைச்
சுட்டிகாட்டி, "இளவரசராக இருந்துகொண்டு இப்படியெல்லாம்
வாழலாமா?" என்று கேட்டார். அந்தப் பெரியவர் இவ்வாறு சொன்னதும்
இளவரசனுக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே அவன் அந்தப் பெரியவரை
ஓங்கி ஓர் அடி அடித்தான். அவன் அடித்த மறுகணம் பெரியவர் அந்த
இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
இளவரசன் பெரியவரை அடித்துக்கொன்ற சம்பவம் காட்டுத்தீயைப் போல்
எங்கும் பரவியது. அது அரசனுடைய காதுகளையும் எட்டியது. எனவே
அவன் இளவரசனை விசாரணைக்கு உட்படுத்தினான். விசாரணையின்போது
இளவரசன் பெரியவரை அடித்துக்கொன்றது உண்மை என நிரூபணமானது.
அப்பொழுது அவையில் கூடியிருந்தோர் யாவரும், 'நீதி வழுவாத அரசன்
என்ன முடிவெடுக்கப் போகிறானோ?' என்று அவனையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அவையோரைப்
பார்த்து, "தவறு செய்தது யாராக இருந்தாலும், அது என் மகனாக
இருந்தாலும் தண்டனை ஒன்றுதான். ஆகவே, நாளைக் காலை இளவரசனுக்கு
தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும்" என்றான்.
மறுநாள் காலை, மக்கள் அனைவரும் என்ன நடக்கப்போகிறதோ என்று
அரண்மனைக்கு முன்பாக மிகவும் பரபரப்போடு இருந்தார்கள். நேரம்
சென்றுகொண்டிருந்தது. அரசனையும் இளவரசனையும் அங்கு காணவில்லை.
சிறிதுநேரத்திற்குப் பின்பு இரண்டு கைகளும் கட்டப்பட்டு, தலை
நன்றாக மூடப்பட்ட நிலையில் இளவரசன், தூக்குத்தண்டனை
நிறைவேற்றப்படும் மேடைக்குக் கொண்டுவரப்பட்டான்.
சிறிதுநேரத்திற்குப் பின்பு அவனுக்குத் தூக்குத்தண்டனை
நிறைவேற்றப்பட்டது. எல்லாம் நிறைவேறியபின்பு மக்கள் மத்தியில்
ஒருவிதமான சலசலப்பு ஏற்பட்டது. 'இளவரசன் இங்கு
தூக்கிலிடப்பட்டிருக்கின்றான்... இந்த சமயத்தில் அரசன் எங்கு
போனான்?' என்று எல்லாரும் பரபரப்பாகப் பேசத் தொடங்கினர்.
சிலமணி நேரத்திற்குப் பின்புதான் தெரியவந்தது.
தூக்கிலிடப்பட்டது, இளவரசன் இல்லை, அரசன்தான் என்று. உடனே
மக்கள் அனவைரும் 'தன் தனையனுக்காக மகனுக்காக - தன்னையே தந்த
அரசன் எங்கேயும் உண்டோ' என்று அரசனை நினைத்துக் கண்ணீர் சிந்தி
அழுதார்கள்.
இன்று நாம் பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடுகின்றோம்.
இன்றைய நாளில் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அரசன்
எப்படித் தன்னுடைய மகனுக்காகத் தன்னையே தந்தாரோ, அதுபோன்று நம்
அனைவருடைய மீட்பக்காகக் தன்னையே தந்த/ தரவிருக்கின்ற இயேசுவின்
தியாக அன்பைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்
இயேசு வாக்களிக்கப்பட்ட மெசியா
நற்செய்தியில், இயேசு எருசலேம் நகரில் வெற்றிவீரராய் பவனி
வருகின்றார். இயேசுவின் இந்த எருசலேம் பவனி அவர்
வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை உரக்கச் சொல்கின்றது.
எவ்வாறெனில், இறைவாக்கினர்களான செக்கரியாவும் (செக் 9:9)
செப்பனியாவும் (3: 16-19) மெசியா என்பவர் நீதியுள்ளவர்,
எளிமையானவர் என்று எடுத்துச் சொன்னதும் அவர் வருகையின்போது,
மக்களுடைய துன்பமெல்லாம் நீங்கி, மகிழ்ச்சி பிறக்கும் என்றும்
மீட்பும் புத்துயிரும் இன்னும் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்
என்றும் சொன்னதும் இயேசுவில் அப்படியே நிறைவேறுகின்றன. அந்த
அடிப்படையில் இயேசுவை வாக்களிக்கப்பட்ட மெசியா என்று
சொல்லலாம். மேலும் எருசலேம் பவனியின்போது மக்கள் உரைத்த ஓசன்னா
என்ற வார்த்தையும் (ஓசன்னா என்ற கிரக்கச் சொல்லுக்கு
'காப்பாற்றும்' என்று பொருள் (2 சாமுவேல் 14:4) இயேசுவை மக்கள்
வாக்களிக்கப்பட்ட மெசியா என ஏற்றுக்கொண்டதை உறுதிபடச்
சொல்கின்றது.
இயேசு அமைதியின் அரசர்
இயேசு, எருசலேம் நகருக்குள் பவனி வரும்போது கழுதைக்
குட்டியாகிய மறியின்மேல் அமர்ந்து பவனியாக வருகின்றார்.
வழக்கமாக ஓர் அரசர் இன்னொரு நாட்டின்மீது படையெடுத்துச்
செல்லும்பொழுது குதிரையின்மீது அமர்ந்து செல்வார். ஆனால்
இயேசு, தான் இந்த உலக அரசர்களைப் போன்று நாடுகளைக் கைப்பற்றி
ஆட்சிசெலுத்துகின்ற அரசர் இல்லை மாறாக, அமைதியைக் கொண்டு வந்த
அரசர் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் மறியின்மீது அமர்ந்து
பவனி வருகின்றார். இவ்வாறு இயேசு தான் இந்த உலகத்திற்கு
அமைதியைக் கொண்டு வந்த அமைதியின் அரசர் என்பதை
நிரூபிக்கின்றார். ஏற்கனவே அவருடைய பிறப்பின்போது
வானத்தூதர்கள், "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக"
(லூக் 2:14) என்று பாடியதையும் இங்கு இணைத்துச் சிந்தித்துப்
பார்ப்பது பொருத்தமாயிருக்கும்.
வழக்கமாக யூதர்களின் பாஸ்கா விழாவின்போது உலகெங்கிலும் இருந்து
இருபதிலிருந்து இருபத்தைந்து இலட்சம் யூதர்கள் எருசலேமில்
ஒன்றுகூடுவார்கள். அவ்வளவு பெரிய மக்கள் தொகையைத் தனக்குத்
துணையாகக்கொண்டு இயேசு நினைத்திருந்தால் உரோமையர்களின்
ஆட்சியைக் கவிழ்த்துப் போட்டுவிட்டு, தன்னுடைய ஆட்சியை
நிறுவியிருக்கலாம். ஆனால், இயேசுவின் ஆட்சி இவ்வுலக ஆட்சி
போன்றது இல்லை என்பதாலும் அவர் இந்த உலகிற்கு அமைதியைத்தான்
கொண்டுவந்தார் என்பதாலும் அப்படிச் செய்யவில்லை.
இயேசு உலகின் பாவத்தைப் போக்க வந்த கடவுளின் ஆட்டுக்குட்டி
யூதர்களின் பாஸ்கா விழாவின்பொழுது இருபதாயிரத்தும் மேற்பட்ட
ஆடுகள் எருசலேம் திருக்கோவிலில் பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.
ஆனால், பாஸ்கா ஆடு மட்டும் பாஸ்காப் பெருவிழாவிற்கு நான்கு
நாட்களுக்கு முன்பாக தலைமைக் குருவால், எருசலேமில் பவனியாகக்
கொண்டுவரப்பட்டு பலியாக ஒப்புக் கொடுக்கப்படும். இயேசு தன்னைப்
பாஸ்கா ஆடு என்றும் உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின்
செம்மறி (யோவா 1:29) என்றும் நிரூபிக்கும் வகையில் தன்னையே
பலியாகத் தருகின்றார்.
எனவே, வாக்களிக்கப்பட்ட மெசியாவாகவும் அமைதியின் அரசராகவும்
விளங்கிய இயேசு நம்மை மீட்பதற்காகத் தன்னுடைய உயிரையே
தருகிறார் எனில், அதற்கு கைமாறாக நாம் ஏதாவது செய்வது நம்முடைய
கடமையாகும். இயேசு எருசலேமிற்குள் நுழையும் முன்பு கண்ணீர்
வடித்தார் (லூக் 19: 41-42), நுழைந்த பின்பு திருக்கோவிலில்
வாணிபம் நடப்பதைக் கண்டும் அத்திமரத்தில் கனி இல்லாததையும்
வேதனையடைந்தார் (லூக் 19: 44-46). நாம் எருசலேம் நகர் வாழ்
மக்களைப் போன்று இயேசுவுக்கு வருத்தத்தையும் வேதனையும்
தரப்போகின்றோமா? அல்லது அவரது கட்டளைக் கடைப்பிடித்து, மிகுந்த
கனிதந்து (யோவா 15:8) அவரது அன்பில் நிலைத்திருக்கப் போகிறோமா?
(யோவா 15:9) என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்
சிந்தனை
'தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு
யாரிடமும் இல்லை' (யோவா 15: 13) என்று சொல்லி, நமக்காகத்
தன்னுயிர் தந்த இயேசுவின் வழியில் நாமும் நடந்து, தேவைப்படின்
உயிரையும் தந்து இயேசு கண்ட இறையாட்சிக் கனவை நனவாக்குவோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை
ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
(ஏப்ரல் 14, 2019)
எசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
லூக்கா 22:14 - 23:56
செல்டிக் மரபில் ஒரு பறவையைப் பற்றிய புனைகதை ஒன்று உண்டு.
அந்தப் பறவை தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பாடும். அது அந்த
ஒற்றைப் பாடலைப் பாடும்போது அப்பாடல் உலகில் மற்ற எந்த
உயிர்கள் பாடும் பறவையைவிட மிக இனிமையாக இருக்கும். தன்னுடைய
கூட்டை விட்டுப் புறப்படும் நாளிலிருந்து இது முள் மரத்தைத்
தேடும். தேடிக் கண்டுபிடிக்கும் வரை அது ஓயாது. அப்படிக்
கண்டுபிடித்த அந்த மரத்தின் முட்கள் நிறைந்த கிளைகளுக்குள்
தன்னையே நுழைத்துக்கொண்டு, அம்முட்களிலேயே மிகக் கூர்மையான
முள்ளின்மேல் மிகவும் வேகமாக மோதும். இரத்தம் பீறிட்டு அதன்
துன்பம் எல்லை மீறிப் போகும் போது கத்தி ஓலமிடும். அந்த ஓலம்
வானம்பாடியின் குரலைவிட இனிமையாக இருக்கும். ஒரு நொடி உலகமே
அந்தப் பாடல் முன் உறைந்து நிற்கும். கடவுள் வானத்திலிருந்து
புன்னகை பூப்பார். மிகச் சிறந்ததைப் பெற வேண்டுமென்றால் மிகப்
பெரிய வலியை அனுபவிக்க வேண்டும் - இப்படி முடிகிறது அந்தப்
புனைகதை.
நாசரேத்து என்ற கூட்டிலிருந்து வெளியேறிய இயேசு என்னும் பறவை
தன் சிலுவை மரத்தையும், ஆணிகளையும், முள்முடியையும் தேடி
எருசலேமுக்குள் நுழைகிறது. எவ்வளவோ முறை எருசலேமுக்குள்
நுழைந்தவர் மீண்டும் நாசரேத்து திரும்பினார். ஆனால், இந்த முறை
அப்படி அல்ல. இதுவே இறுதி முறை. அவர் சிலுவையில் மோதிக்
கொண்டு, ஆணிகளில் தொங்கியபோது அவர் எழுப்பிய ஓலத்தால்,
சிலுவையில் அவர் விட்ட இன்னுயிரால் நாம் மிகப் பெரிய மீட்பைப்
பெற்றோம்.
மிகச் சிறந்ததைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய வலியை
அனுபவிக்க வேண்டும்.
மிகவும் அழகானதைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய விலையைக்
கொடுக்க வேண்டும்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை - இதுதான் ஆண்டவரின் திருப்பாடுகளின்
குருத்து ஞாயிறு நமக்குத் தரும் செய்தியாக இருக்கிறது.
எப்படி?
இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எசா 50:4-7)
தொடங்குவோம். எசாயா நூலில் உள்ள ஊழியன் பாடல்களில் இது
மூன்றாவது. நான்காவது பாடல்தான் துன்புறும் ஊழியன் பாடல் என
அழைக்கப்படுகிறது. அதை நாம் பெரிய வெள்ளியன்று வாசிப்போம்.
மூன்றாவது பாடல் இறைவனின் ஊழியனை நிராகரிக்கப்பட்ட
இறைவாக்கினராகச் சித்தரிக்கிறது. இவர் தினமும் ஆண்டவருடைய
குரலுக்குச் செவிசாய்க்கிறார். ஆகையால்தான் இவர் 'கற்றோனின்
நாக்கை' அல்லது 'பண்பட்ட நாக்கைப்' பெற்றிருக்கின்றார். இவர்
தினமும் 'நலிந்தோனை நல்வாக்கால் ஊக்குவிக்க வேண்டும்.'
இதனால்தான் எசாயா அடிக்கடி நலிந்த இஸ்ரயேல் மக்களுக்கு
ஆறுதலின் செய்தியைத் தருபவராக இருக்கின்றார் (காண். எசா 40:1).
இறுதியாக, மற்ற இறைவாக்கினர்களைப் போல இவர் ஆண்டவருக்குத் தன்
காதுகளைத் திறந்து வைத்திருக்கின்றார். அவரின் குரலைக் கேட்டு
அதை மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
இருந்தாலும், இந்தப் பணியாளர்-இறைவாக்கினர் நிரகாரிப்பையும்
வன்முறையையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. யாருக்குக் கடவுளின்
செய்தியை இவர் சொன்னாரோ அவர்களால் இவர் அடிக்கப்பட்டு
அவமானத்துக்குள்ளாகின்றார். இதே மாதிரியான நிராகரிப்பை,
வன்முறையை, அவமானத்தையே இஸ்ரயேலின் மற்ற இறைவாக்கினர்களும்
எதிர்கொண்டார்கள்: எரேமியா (காண். எரே 11:18-22, 15:10-18,
20:1-10), எலியா (காண். 1 அர 19:1-2), ஆமோஸ் (காண். ஆமோ
7:10-13), மற்றும் மீக்கா (காண். மீக் 2:6-11). எசாயாவும் மற்ற
இறைவாக்கினர்களும் தங்களுக்குத் துன்பம் நேர்ந்தாலும் தாங்கள்
மேற்கொண்ட இறைவாக்கினர் பணியைத் திறம்படச் செய்தனர். தங்கள்
பணிக்கான விலை தாங்கள் அனுபவித்த நிந்தையும் அவமானமும்
இறப்புமாக இருந்தாலும் அவற்றுக்கான விலையைக் கொடுக்கத் தயாராக
இருந்தனர். இவர்கள் இப்படித் தயாராக இருந்ததால்தான் கடவுளின்
செய்தியை மக்கள் கேட்க முடிந்தது. இவர்களின் இந்த வலியிலும்
இவர்களைத் தாங்கியது இவர்கள் கடவுளின் மேல் வைத்திருந்த
நம்பிக்கையே. ஆகையால்தான், 'ஆண்டவராகிய என் தலைவர் துணை
நிற்கின்றார். நான் அவமானம் அடையேன். என் முகத்தைக்
கற்பாறையாக்கிக் கொண்டேன். இழிநிலையை நான் அடைவதில்லை'
என்கிறார் எசாயா.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:6-11) தொடக்ககாலத்
திருஅவையின் மிக அழகான கிறிஸ்தியல் பாடல் ஒன்றை
வாசிக்கின்றோம். கிறிஸ்துவின் மனுவுருவாதல் நிகழ்வு தொடங்கி,
பிறப்பு, பணி, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம்,
மாட்சி வரையிலான அனைத்து மறைபொருள்களையும் மிக அழகாக ஏறக்குறைய
பன்னிரெண்டு வரிகளில் பாடலாக வடிக்கின்றார் பவுல். மேலும்,
இந்தப் பாடல் வெறும் கிறிஸ்தியல் பாடலாக இல்லாமல், இதன் வழியாக
'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும்
இருக்கட்டும்' என்று பிலிப்பி நகரத் திருச்சபைக்கு
அறிவுறுத்துகின்றார். இந்தப் பாடலைப் பொறுத்த வரையில் இயேசு
அவரின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விலை கொடுக்க
வேண்டியிருக்கிறது. அவருடைய மனுவுருவாதலின்போது அவர்
'கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை' இழக்கின்றார். மனித உரு
ஏற்றபோது அவர் 'இறைத்தன்மையை' வெறுமையாக்குகின்றார். சிலுவைச்
சாவுக்குத் தன்னையே கையளிக்க கீழ்ப்படிதில் என்ற பெரிய
விலையைக் கொடுக்கின்றார். அதற்கு அடுத்த நிகழ்பவை எல்லாம் -
விண்ணேற்றம், மாட்சி, பெயர், மற்றவர்கள் மண்டியிடதல் - இவர்
தான் கொடுத்த விலையினால் பெற்றுக்கொண்டவை. இறப்பை அழிப்பதற்கு
இறப்பு என்ற நுகத்திற்குக் கீழ் தன் தலையைக் கொடுக்கின்றார்
இயேசு.
இப்பாடல் இயேசுவைக் கடவுளின் உண்மையான ஊழியராகவும், இறுதிவரை
இறைத்திருவுளத்திற்கு கீழ்ப்படிந்திருந்தவராகவும், தான்
கொடுத்த இறப்பு என்ற விலையின் வழியாக இறப்பைத் தோற்கடித்தார்
எனவும் நமக்குச் சொல்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் லூக்காவின் பதிவின்படி உள்ள
இயேசுவின் பாடுகளின் வரலாற்றைக் கேட்டோம் (காண். லூக் 22:14 -
23:56). இங்கே நாம் வாசித்த கதை மாந்தர்களை நான்கு
குழுக்களாகப் பிரித்துக்கொள்வோம்: (அ) இயேசுவின் சீடர்கள், (ஆ)
இயேசுவின் எதிரிகள், (இ) இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு
வழங்கியவர்கள், (ஈ) இயேசுவுக்கு உதவியவர்கள், (உ)
பார்வையாளர்கள், மற்றும் (ஊ) இயேசு.
(அ) இயேசுவின் சீடர்கள் கொடுத்த விலை மிகக் குறைவு. ஏனெனில்
யூதாசு பணம் பெற்றுக்கொண்டு இயேசுவைக் காட்டிக்கொடுக்கின்றார்.
பேதுரு மறுதலிக்கின்றார். சீடர்கள் இயேசுவைவிட்டு ஓடுகின்றனர்.
சீடத்துவம் என்னும் விலை கொடுக்க முடிந்தவர்களால் இறுதியில்
இயேசுவுக்காக எந்த விலையும் கொடுக்க முடியவில்லை. ஆக,
நிகழ்விலிருந்து தப்பி ஓடுகிறார்கள். (ஆ) இயேசுவின் எதிரிகளைப்
பொறுத்தவரையில் இயேசு அவர்களின் கண்களில் விழுந்த தூசி,
அவர்களின் செருப்புக்குள் நுழைந்த ஒரு கூழாங்கல். தூசியையும்
கூழாங்கல்லும் அகற்றும் முயற்சியில் கண்களையும், காலையும்
இழக்கத் தயாராகிறார்கள். இவர்கள் கொடுக்கின்ற விலை பொய். (இ)
இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பளிப்பவர் நேரிடையாக பிலாத்தும்
மறைமுகமாக ஏரோதும். பிலாத்து உரோமை ஆளுநர். இவர் நினைத்தால்
இயேசுவை விடுவிக்கவும், தீர்ப்பிடவும் முடியும். சட்டத்தின்
படி இயேசு குற்றமற்றவர் (காண். 23:15-16). ஆனால்,
சட்டத்திற்குக் கீழ்ப்படிவதைவிட யூதத் தலைவர்களுக்குக்
கீழ்ப்படிவதைத் தெரிந்துகொள்கிறார். ஏனெனில், இயேசுவால்
பிலாத்துக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால், தலைவர்களால் இவருக்குப்
பயன் உண்டு. ஏனெனில், அவர்களை வைத்து இன்னும் பதவியில்
உயர்ந்துகொள்ளலாம். பிலாத்தும் கீழ்ப்படிதலை விலையாகக்
கொடுத்தார். ஆனால், அது சட்டத்திற்கான கீழ்ப்படிதல் அல்ல.
மாறாக, யூதத் தலைவர்களுக்கான கீழ்ப்படிதல். (ஈ) சிலுவைப்
பயணத்தில் இயேசுவுக்கு உதவிய சிரேன் ஊரானாகிய சீமோன், ஒப்பாரி
வைத்த பெண்கள், நல்ல கள்வன், அரிமத்தியா நகர் யோசேப்பு,
கலிலேயப் பெண்கள் ஆகியோர் இயேசுவுக்காக வீதிக்கு வருகின்றனர்,
மற்றவரைக் கடிந்துகொள்கின்றனர், தங்கள் பொருளையும்,
ஆற்றலையும், நற்பெயரையும் இழக்க முன் வருகின்றனர். (உ)
பார்வையாளர்கள். 'நமக்கு நடக்கும்வரை நடப்பதெல்லாம் வேடிக்கை'
என்ற நிலையில் நடக்கின்ற எல்லாவற்றையும் இவர்கள் வேடிக்கை
பார்க்கிறார்கள். அதிகபட்சம் இவர்களின் இழப்பு நேர இழப்பு
மட்டுமே. மற்றும் (ஊ) இயேசு - இவர் தன்னுடைய சீடர்கள், தன்
எதிரிகள், தனக்குத் தீர்ப்பிட்டோர் என்ற மூன்று குழுவிற்கு
எதிர்மாறாக இருக்கிறார். மற்றவர்கள் தங்கள் கீழ்ப்படிதல்
வழியாகத் தர முடியாத விலையை இயேசு தருகின்றார். இவருடைய இந்த
விலை, 'இன்றே பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்துவிடுகிறது.'
இயேசுவின் சீடர்களும், எதிரிகளும், அவருக்குத் தண்டனைத்
தீர்ப்பளித்தவர்களும், பார்வையாளர்களும் அளித்த விலை குறைவு.
மனம் மாறிய பேதுரு, இயேசுவுக்கு உதவியவர்கள் கொஞ்சம் கூடுதலாக
விலை கொடுத்தனர். ஆனால், இயேசு ஒருவரே மிகப் பெரிய விலையைக்
கொடுக்க வேண்டியிருக்கிறது - அவருடைய உயிரை இழக்கின்றார். அந்த
உயிரை இழக்க அவர் கொடுக்கும் விலை தந்தையின் திருவுளத்திற்குக்
கீழ்ப்படிதல். இவர் இந்த விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தார்:
'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை
என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், உன் விருப்பப்படி அல்ல. உம்
விருப்பப்படியே நிகழட்டும்' (காண். லூக் 22:42).
ஆக, இயேசுவின் பாடுகள் நிகழ்வில் மிக உயர்ந்த விலையைக் கொடுத்த
இயேசுவே மிக உயர்ந்ததைப் பெறுகின்றார். இயேசுவின் இறப்பைக்
காண்கின்ற நூற்றுவர் தலைவர், 'இவர் உண்மையாகவே நேர்மையாளர்'
(காண். 23:47) என்று சான்று பகர்கிறார்.
இறுதியாக,
தவக்காலத்தின் இறுதி நாள்களில் இருக்கிறோம். இயேசு எருசலேம்
நுழைந்த இந்நிகழ்வோடு இணைந்து நாமும் புனித வாரத்திற்குள்
நுழைகின்றோம். ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்க, நான்
மலிவானவற்றிற்கு என்னையே விற்கிறேனா? அல்லது மிகச்
சிறந்தவற்றுக்காக இழக்கிறேனா? என்ற கேள்வியைக் கேட்போம்.
நம் ஒறுத்தல் முயற்சிகள் வழியாக, இறைவேண்டல் வழியாக,
பிறரன்புச் செயல்கள் வழியாக நாம் நம் வாழ்வின்
பக்குவத்திற்கான, பண்படுத்துதலுக்கான விலையைக்
கொடுத்துவந்திருக்கிறோம். இவற்றையும் தாண்டி நாம் பெற
வேண்டியது எது? அதற்கு நான் தரும் விலை என்ன?
இயேசுவின் எருசலேம் பயணத்திற்குக் கழுதை கொடுத்தவர்கள் சிறிய
நிலையில் தங்களையே இழக்க முன்வருகிறார்கள்.
அவரை வெற்றி ஆர்ப்பரிப்புடன் வரவேற்று 'ஓசன்னா' பாடியவர்கள்,
வாடகைக் கழுதையில் வந்த தங்கள் இறுதி நம்பிக்கையை
வரவேற்கின்றனர். தங்கள் ஆற்றலை, நேரத்தை இழக்க
முன்வருகிறார்கள்.
நாம் வாழ்கின்ற எந்த அழைப்பு என்றாலும் சரி - திருமணம்,
குருத்துவம், துறவறம் - எல்லா இடத்திலும் சிலுவை உண்டு. இந்தச்
சிலுவையை கொல்கொதா வரை சுமக்க வேண்டும். நாம் வழியில்
விழுவோம். பின் எழுவோம். வலியின் வழியாக வாழ்வு பெறுவோம்.
மிகச் சிறந்ததைப் பெற மிகப் பெரிய வலியை அனுபவிக்க வேண்டும் -
எசாயா அவமானத்தையும், இயேசு இறப்பையும்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. மிகச் சிறந்தவற்றின் விலை
மிகப் பெரியதே.
இதை எசாயாவும், இயேசுவும் உணர்ந்தனர் - நீங்களும் நானும்?
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Faculty Member
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001
Limage contient peut-tre : plante et texte
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு C
திருப்பலி முன்னுரை
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவும், பாவ உலகில் பரிதவித்த மக்களை
மீட்கவும், கொடூரமான சிலுவைச் சாவுக்குத் தன்னையே கையளித்த இறைமகன்
இயேசுவின் அன்பைச் சுவைக்க அழைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களை
ஆண்டவரின் குருத்து ஞாயிறு திருப்பலிக்கு அன்புடனே வரவேற்கிறோம்.
பரந்து விரிந்திருக்கும் இந்த உலகைப் படைத்த பரலோக தந்தையின்
மகன், தன்னையே தாழ்த்தி, மனித உருவிலே இம்மண்ணிலே வலம் வந்த
மேன்மைமிக்க விழா தான் இந்தக் குருத்து ஞாயிறு. ஒலிவக் கிளைகளை
கையில் ஏந்திக் கொண்டு ஓசன்னா, ஓசன்னா என்று முழங்கிய மக்களிடையே
இயேசு மன்னனாக பவனி வந்தார். இன்று துதி பாடும் கூட்டம் நாளை
வசைபாடி வதைக்கும் என்பதை அறிந்திருந்தும், இம்முதல் துதியை
புன்முறுவலோடு ஏற்றார். இறைவனோடு பயணிக்க விரும்பினால்,
தாழ்ச்சியோடு துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வறுமையில் நேர்மையும் வளமையில் தாழ்மையும் மனிதனை இறைவனோடு இணைக்கும்.
இன்றைய முதல் வாசகத்தில் அடிப்போர்க்கு என் முதுகையும்,
தாடியைப் பிடுங்குவோருக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன் என்று
துன்புறும் ஊழியனின் வார்த்தைகளை எசாயா இறைவாக்கினர்
மொழிகிறார். ஆண்டவரின் துணை இருப்பதால் இழி நிலையை அடைவேன் என்று
சான்று பகர்கிறார். துன்ப நேரத்தில் துணை தேடி தவிக்கிறோம். ஆறுதலுக்காக
அலைகின்றோம்.
தோல்வியில் தோழன் தோள் கொடுக்கலாம்;
துன்பத்தில் நண்பன் இறைவன் துணை நிற்கலாம்.
ஆனால் இறைவனோ துன்பத்திலும் தோல்வியிலும் நம்மைத் தாங்கிக்
கொள்வார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இன்று துதித்து விட்டு நாளை
தூஷிக்கும் மக்களுக்காக, பாஸ்கா விழாவில் தன்னையே பலியாகக்
கொடுக்க முன்வருகிறார். உன்னதங்களிலே ஓசன்னா எனப் பாடிய கூட்டம்,
தன்னை மறுதலிக்கும் சீடன், உடனிருந்தும் காட்டிக் கொடுப்பான்
என்பதை அறிந்திருந்தும் அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார்.
தேன் தடவிய வார்த்தைகள் முகத்தின் கண் பேசிவிட்டு தேளின்
கொடுக்காய் முதுகின் பின் வசை கொட்டுகிறோம். அப்போதெல்லாம் ஓசன்னா
பாடி சிலுவையில் அறையும் மனிதர்களாகவே வாழ்கிறோம்.
எனவே தூய்மையான உள்ளத்தைப் பெற்று தூயவரின் துணையோடு துன்பத்தை
ஏற்று, இறை துணையோடு இன்பத்தைப் பெருக்கிக் கொள்ள வரம் வேண்டி
இப்பலியில் இணைவோம்.
மன்றாட்டுகள்
1. தாவீதின் அரசரே!
உமது இறையாட்சியை இம்மண்ணில் உருவாக்க நீ அழைத்த எம் திரு அவைத்
தலைவர்கள், துறவற குழுமங்கள், செய்து வரும் பணிகளை ஆசீர்வதியும்.
உமது பாதையில் எங்களை வழிநடத்த தேவையான உடல் நலம், ஆன்மீக பலம்
தந்து வழிநடத்த வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. தம்மையே தாழ்த்தி மேன்மையடைந்தவரே எம் இறைவா!
நாங்களும் உம்மைப் போல எங்களைத் தாழ்த்தி உம்மால் ஆசீர்வதிக்கப்படவும்
தாழ்நிலையில் உள்ளவர்களோடு இணைந்து அன்புறவை வளர்க்கவும் வரம்
வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. நேரிய பாதையில் நடை போட அழைப்பவரே எம் இறைவா!
இப்புனித வாரத்தில் உமது பாடுகளையும், மீட்பையும் தியானித்து,
முழுமையாக செப, தவ செயல்களில் ஈடுபட்டு புனிதமாக அனுசரிக்க
வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. நற்செயல்களின் நாயகனே எம் இறைவா!
எமது நாட்டினை வழிநடத்தும் தலைவர்கள், மக்களை பிரித்தாளும்
போக்கைக் கைவிட்டு, மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு எல்லாருக்கும்
பயன்படும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என ஆண்டவரைக்
கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா!
கோடை கொந்தளிக்கும் இவ்வேளையில் எங்களுக்கு போதிய மழையை நீ தரவும்,
குடும்ப அமைதி, சந்தோஷம் நிறைந்திருக்கவும், மக்களின் உள்ளத்தின்
வேண்டுதல்கள் இறைவனால் நிறைவேற்றப்படவும் வேண்டும் என ஆண்டவரைக்
கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
சீரமைத்து புதுப்பிப்பவராம் இறைவா,
உமது திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக சிலுவை மரணம் வரை கீழ்ப்படிந்த
உம் திருமகனைப் பின்பற்றி வாழும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
மாற்றத்தை தருபவராம் இறைவா,
வரவிருக்கும் இப்புனித வார நாட்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும்,
பலவீனத்தையும், குற்றங்குறைகளைக் களைந்து வழக்கமாக
மேற்கொள்ளும் நிகழ்வாக உம் பாஸ்கா விழாவைக் கொண்டாடாமல், உள்ளத்தில்
மாற்றம் நிறைந்தவர்களாகத் தூய மனதுடன் உம்மை அணுகி வர இறைவா உமை
மன்றாடுகிறோம்.
இரக்கமும் மன்னிப்பும் வழங்கும் இறைவா,
உமது பேரன்பால் எங்களைத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்றுக்கொள்வதற்காக
நன்றி கூறுகிறோம். உமது மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட நாங்கள் இனி
பாவம் செய்யாமல் வாழ அருள் புதிய உள்ளத்தை வழங்க வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம்.
மன்னிப்பு அருள்பவராம் இறைவா,
சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமை தவறியதாலும் செய்த
பாவங்களால் உமது அன்புறவை இழந்து தவிக்கும் மக்களுக்கு, உமது
இரக்கத்தால் மன்னிப்பு வழங்கி புதுவாழ்வு அளிக்க வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம்.
மன்னிப்பின் நாயகனே இறைவா,
உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம்.
இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள்,
தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற
இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம், பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு
மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
ஏழைகளின் திருவுருவே எம் இறைவா!
இந்த அருளிரக்க நாட்களில் தவமுயற்சிகளில் மட்டும் நாங்கள் கவனம்
செலுத்தாமல் உள்ளத்தில் மனமாற்றமும், அதன் வெளிப்பாடாக, ஏழைகள்
மட்டில் கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்வு சிறந்து விளங்கிட,
அந்த மீட்புச் செயலின் வழியாக உம் சீடத்துவ வாழ்வில் அவர்களும்
பங்கேற்கத் தேவையான மீட்பின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் மனமாற்றத்தை வாஞ்சையுடன் எதிர்பார்க்கும் இறைவா!
அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் பரந்த மனப்பான்மையும்,
உமது அன்பு, கருணை, மன்னிப்பு, அரவணைக்கும் பண்பு, மனமாற்றத்தில்
மகிழ்ச்சி, பிறர் சுதந்திரத்தை மதித்தல் ஆகிய பண்புகளை எமதாக்கிக்
கொள்ள அருள் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல். |
|