|
|
29 ஆகஸ்ட் 2019 |
|
|
பொதுக்காலம்
21ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பில்
வளர்வீர்களாக.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 7-13
அன்பர்களே! எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக்
கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம். நீங்கள் ஆண்டவரோடு
உள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும் எங்களுக்கு
உயிர் வந்தது. நம் கடவுள் முன்னிலையில் உங்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி
அடைகிறோம். அதற்காக உங்கள் பொருட்டு எத்தகைய நன்றியை அவருக்குக்
கைம்மாறாகக் காட்ட இயலும்?
நாங்கள் உங்கள் முகத்தைக் காணவும், உங்கள் நம்பிக்கையில்
குறைவாக உள்ளவற்றை நிறைவாக்கவும், அல்லும் பகலும் மிகுந்த ஆர்வமுடன்
மன்றாடுகிறோம். இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும், நம் ஆண்டவராம்
இயேசுவும் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக!
உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள்
ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும்
ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!
இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது,
நம் தந்தையாம் கடவுள் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு
அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
90: 3-4. 12-13. 14,17 (பல்லவி: 14)
=================================================================================
பல்லவி: உமது பேரன்பால் நிறைவளியும்; நாங்கள் களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்.
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
'மானிடரே!
மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,
உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம்
போலவும் உள்ளன. பல்லவி
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது
ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி
வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம்
காட்டும். பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது
வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம்
தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு
வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 24: 42a,44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள்.
ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆயத்தமாய் இருங்கள். நீங்கள்
நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51
அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம் கூறியது:
"விழிப்பாய் இருங்கள்;
ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத்
தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று
வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து
தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே
நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்
மானிட மகன் வருவார்.
தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய
நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர்
வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர்.
அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக
அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந்
தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை
அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.
அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர்
வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு
உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும்
இருக்கும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 தெசலோனிக்கர் 3: 7-13
பவுலின் மன்றாட்டு
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டில் உள்ள லயன்ஸ்
நகரில் பெர்த்தியேர் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர்
இருந்தார். அவர் கிறிஸ்தவராக இருந்தாலும், ஞாயிறுத் திருப்பலிக்குக்கூடச்
செல்லாமல் வேலைசெய்து வந்தார். அவருடைய வீட்டிற்கு முன்னம் வணிகர்
ஒருவர் இருந்தார். அவரும் கிறிஸ்தவர்தான். ஆனால், அவர்
பெர்த்தியேரைப் போன்று இல்லாது, வாரம் தவறாது திருப்பலிக்குச்
சென்றார். மட்டுமல்லாமல், இறைவன்மீது அவர் ஆழமான நம்பிக்கை
கொண்டிருந்தார்.
அவர்க்குத் தன் வீட்டிற்கு முன்னம் இருக்கும் பெர்த்தியேர்
ஞாயிறுத் திருப்பலிக்குக் கூடச் செல்லாமல் வேலைசெய்து வருவது
மிகவும் வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் அவர் பெர்த்தியேரிடம்
சென்று, "நீ ஒரு கிறிஸ்தவன்தானே! எதற்காக நீ ஞாயிறு திருப்பலிக்குக்கூட
செல்லாமல், இப்படி வேலை வேலையென்று இருக்கின்றாய்?" என்று
கேட்டார். "நீங்கள் வசதி படைத்தவர்... ஒருநாள் நீங்கள் வேலை
செய்யாவிட்டாலும்கூட அது உங்கட்குப் பெரிய இழப்பாக இருக்காது.
எனக்கு அப்படியில்லை. நான் ஒருநாள் வேலை செய்யாவிட்டால்
சாப்பாட்டிற்குப் பெரிய திண்டாட்டமாகிவிடும்" என்றார்
பெர்த்தியேர். உடனே வணிகர் அவரிடம், "நீ சொல்வதுபோல் ஒருநாள்
இறைவனுக்காக ஒதுக்கி வேலை செய்யாமல் இருப்பதால், உனக்கு பெரிய
இழப்பு ஏற்படும் என்றால், அந்த இழப்பீட்டுத் தொகையை நான் தருகிறேன்"
என்றார். "பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு பெர்த்தியேர் தன்னுடைய
செருப்புத் தைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினார்.
இதற்குப் பிறகு வணிகர், பெர்த்தியேரின் உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்
என்று அவர்க்காக இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார். சரியாக ஒரு
மாதம் கழித்து, பெர்த்தியேர் ஞாயிற்றுக்கிழமையில் தன்னுடைய கடையை
அடைத்துவிட்டு குடும்பத்துடன் ஆலயத்திற்குச் செல்லத் தொடங்கினார்.
அவரைப் இவ்வாறு பார்த்ததும் வணிகர்க்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
அவர் பெர்த்தியேர் இறைநம்பிக்கையிலும் இறைவேண்டலிலும் இன்னும்
உறுதியாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் தொடர்ந்து மன்றாட வந்தார்.
இப்படியே ஆறு ஓடின. இந்த ஆறு மாதங்களில் பெர்த்தியேர் ஒரு
ஞாயிற்றுக்கிழமைகூடத் தவறாமல் ஞாயிறுத் திருப்பலிக்குச் சென்றுவந்தார்.
ஆறு மாதங்கள் கழித்து வணிகர் பெர்த்தியேரிடம் சென்று, "நண்பா!
நான் உன்னிடம் சொன்னதுபோன்று நீ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
ஆலயத்திற்குச் சென்று வந்திருக்கிறாய். அதனால் இந்த ஆறு மாதங்களில்
உனக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்தா அந்த இழப்பீட்டுத்
தொகை" என்றார். "ஐயா! நீங்கள் எதற்கு எனக்கு இழப்பீட்டுத் தொகை
தருகின்றீர்கள்... நான்தான் உங்கட்குக் கைம்மாறு செய்யவேண்டும்"
என்று சொல்லிவிட்டு பெர்த்தியேர் தொடர்ந்து பேசினார்:
"ஞாயிற்றுக்கிழமையில் திருப்பலிக்கு செல்வதால், சனிக்கிழமையே
எல்லா வேலைகளையும் செய்துமுடிப்பது தொடக்கத்தில் சற்று கடினமாகத்தான்
இருந்தது. போகப் போக அது எளிதாகிவிட்டது. மேலும் நான் என்னுடைய
குடும்பத்தோடு திருப்பலிக்குச் சென்றுவந்த பிறகு, இனம்புரிய மகிழ்ச்சியும்
குடும்பத்தில் அமைதியும் பிறந்தது. அதுபோக முன்பைவிட என்னுடைய
வேலை நன்றாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இவற்றிற்காக நான்தான்
உங்கட்கு கைம்மாறு செய்யவேண்டும்."
பெர்த்தியேர் ஒவ்வொன்றாக சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த வணிகர்,
'இத்தனை நாள்களும் நான் இறைவனிடம் வேண்டிவந்தது வீண்போகவில்லை...
இறைவன் என்னுடைய மன்றாட்டைக் கேட்டு, இந்தப் பெர்த்தியேரை இறைநம்பிக்கையில்
வளர்த்திருக்கின்றார்' என்று உள்ளத்தில் இறைவனுக்கு நன்றி
கூறிக்கொண்டு, அவரிடம், "இந்தப் பணத்தைப் பெற்றுகொள். நாம்
பேசிக்கொண்டது போன்று, இந்தப் பணத்தை உம்மிடம் தருவதுதான்
முறை" என்று சொல்லிவிட்டு பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, இல்லம்
திருப்பினார்.
வணிகர், செருப்பு தைக்கும் தொழிலாளியான பெர்த்தியேர்க்காக இறைவனிடம்
மன்றாடியதால், அவர் இறைநம்பிக்கையிலும் இறைவேண்டலிலும் வளர்ந்தார்.
அதுபோன்று இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்கத் திருஅவைக்காக
மன்றாடுகின்றார். அவர் எதற்காக மன்றாடுகின்றார் என்பதைக்
குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
தெசலோனிக்கத் திருஅவைக்காக மன்றாடிய பவுல்
பவுல், திமொத்தேயு வழியாக தெசலோனிக்க மக்களைக் குறித்துக் கேட்டறிந்த
பின் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். பின் அவர்கட்காக அவர் இறைவனிடம்
மன்றாடத் தொடங்கினார். பவுல் தெசலோனிக்க மக்கள் முன்னிட்டு இறைவனிடம்
மூன்று அம்சங்கட்காக மன்றாடுகின்றார். ஒன்று, நம்பிக்கையில்
அவர்கள் நிறைவுள்ளவர்களாகவும் இரண்டு, அன்பு அவர்களிடம் பெருகவும்
மூன்று, தூய்மையாக அவர்கல் இருக்கவும் மன்றாடுகின்றார். இவ்வாறு
பவுல் தெசலோனிக்க மக்கள்ட்காக மன்றாடியதன் மூலம் அவர்களும் நம்பிக்கையில்,
அன்பில், தூய்மையில் மிளிர்கிறார்கள்.
நாமும் நம்மோடு இருக்கக்கூடியவர்கள், நம்மிடம் ஒப்படைக்க மக்கள்
எல்லாருக்காகவும் மன்றாடவேண்டும். அப்படி நாம் பிறர்க்காக மன்றாடினோம்
என்றால், இறைவன் அந்த மன்றாட்டுகட்குச் செவிசாய்ப்பார் என்பது
உறுதி.
சிந்தனை
'நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச்
சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ளவேண்டும்' (பிலி 2: 3) என்பார்
பவுல். எனவே, நாம் பிறர்மீது அக்கறை கொண்டவர்களாக வாழ்ந்து,
அவர்கட்காக இறைவனிடம் மன்றாடுவோம்; அவர்களுடைய தேவையை நிவர்த்தி
செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
மத்தேயு 24: 42-51
நம்பிக்கைக்குரிய பணியாளராய் இருப்போம்
நிகழ்வு
மார்க் ஹாட்ஃபீல்ட் (Mark Hatfield) என்ற வெளிநாட்டுக்காரார்
அன்னைத் தெரசா செய்துவந்த பணிகளைக் குறித்துக் கேள்விப்பட்டு,
அவரைப் பார்ப்பதற்காக கல்கத்தாவில் இருந்த அவருடைய இல்லத்திற்குச்
சென்றார். அவர் அங்கு சென்றநேரம், அன்னைத் தெரசா தன்னுடைய சபை
அருள்சகோதரிகளோடு சேர்ந்து, சாகும் தருவாயிலிருந்த குழந்தைகளைக்
கவனித்துக் கொள்வதும், அநாதைகட்கும் வயது முதிர்ந்தோர்க்கும்
மருத்துவ உதவியும் உணவளித்துக் கொண்டும் இருந்தார். இவற்றையெல்லாம்
பார்த்துவிட்டு அவர் ஒருநிமிடம் மெய்ம்மறந்து நின்றார்.
பின்னர் அவர் அன்னைத் தெரசாவிடம், "அன்னையே! எப்படி உங்களால்
முகம் சுழிக்கக்கூடிய, யாராலும் செய்ய முடியாத மிகவும் கடினமான
பணிகளை எந்தவொரு தயக்கமுமில்லாமல் செய்ய முடிகின்றது?" என்று
கேட்டார். அன்னைத் தெரசா ஒருகணம் அவரை உற்றுப்
பார்த்துவிட்டுச் சொன்னார்: "கடவுள், நான் வெற்றிபெற வேண்டும்
என்றல்ல, நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்பதற்காக அழைத்தார்.
அதனால்தான் நான் கடவுட்கு நம்பிக்கைக்குரியவராய் இருந்து, இப்பணிகளைச்
செய்து செய்துகொண்டிருக்கின்றேன்."
அன்னைத் தெரசா அந்த வெளிநாட்டுக்காரரிடம் சொன்னது போன்று, நாம்
ஒவ்வொருவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய்
இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகமும்
நமக்கு அத்தகைய செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. எனவே,
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழக்கூடிய ஆண்டவரின் வருகை
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில்,
ஆண்டவர் இயேசு இரண்டு விடயங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஒன்று,
மானிட மகனுடைய வருகை. இன்னொன்று நம்பிக்கைக்குரியவராய் இருப்பது.
இதில் சிறப்பு என்னவென்றால், இந்த விடயங்களும் ஒன்றுக்கொன்று
தொடர்புடையதாக இருக்கின்றன என்பதுதான்.. இப்பொழுது, முதலில் வருகின்ற
ஆண்டவருடைய வருகையைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவருடைய வருகை அல்லது மானிடமகனுடைய வருகையைக் குறித்து இயேசு,
அவருடைய வருகை ஒரு திருடனின் வருகைப் போன்று இருக்கும் என்று
குறிப்பிடுக்கின்றார். திருடனின் வருகை எந்த நேரத்தில் இருக்கும்
என்று யார்க்கும் தெரியாது. ஆதலால், திருடன் வீட்டிலிருக்கின்ற
உடைமையையும் பொருள்களையும் திருடிக்கொண்டு போகாதவாறு
வீட்டிலுள்ளவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். மானிட மகனுடைய வருகையும்
இப்படி எதிர்பாராத விதமாய் இருக்கும் என்பதால் நாம் ஒவ்வொருவரும்
விழிப்பாக இருக்கவேண்டும். எப்படி நாம் விழிப்பாய் இருக்கவேண்டும்
என்பதற்காக பதிலை இயேசு தொடர்ந்து சொல்கின்றார்.
கடமைகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்து விழிப்பாய் இருக்கவேண்டும்
மானிட மகனுடைய வருகை எப்போது வேண்டுமானாலும் இருக்கும் என்பதால்,
அதற்கு நாம் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்கவேண்டும் என்று
சொன்ன இயேசு, விழிப்பாய் இருப்பது வேறொன்றும் இல்லை, நம்பிக்கைக்குரியவராய்
இருப்பது என்று மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார். அதற்காக அவர்
பயன்படுத்தும் உவமைதான் வீட்டு உரிமையாளர் பணியாளர் உவமையாகும்.
இந்த உவமையின் வழியாக இயேசு ஒருசில முக்கியமான உண்மைகளை எடுத்துச்
சொல்கின்றார். அவற்றில் முதன்மையானது, நாம் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளர்கள்.
இதையே வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நம்மிடம் சில
பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் ஏனோ தானோ
என்று விட்டுவிடாமல் ஒரு கண்காணிப்பாளராக இருந்து செய்துமுடிக்கவேண்டும்
(கலா 6:10) என்று சொல்லலாம்.
உதாரணத்திற்கு காயினைச் எடுத்துக்கொள்ளலாம். காயின் தன் சகோதரன்
ஆபேலைக் கவனித்திருக்கவேண்டும் அல்லது கண்காணித்திருக்கவேண்டும்.
ஆனால், அவன் ஆபேல் மீது பொறாமை கொண்டு அவனைக்
கொன்றுபோடுகின்றான். அப்பொழுது ஆண்டவர் அவனிடம், "உன் சகோதரன்
ஆபேல் எங்கே?" என்று கேட்கிறபோது, அவன் "எனக்குத் தெரியாது.
நான் என்ன, அவனுக்குக் காவலாளியா?" என்று கேட்கின்றான் (தொநூ
4:9). எத்தகைய பொறுப்பற்ற பேச்சு இது!. ஆகையால், நாம் காயினை
போன்று இல்லாது, நல்ல கண்காணிப்பாளர்களாக இருக்கவேண்டும்.
உவமையின் வழியாக இயேசு சொல்லும் இரண்டாவது முக்கியமான செய்தி,
நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நாம் நல்ல கண்காணிப்பாளர்களாக
இருப்பது மட்டுமல்லாமல் அதில் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவேண்டும்.
அப்படியிருந்தால் நாம் நம்பிகைக்குரியவர்களாய் இருந்தால், தலைவர்
அதற்கேற்ற கைம்மாறு தருவார்.
இங்கு ந்மபிக்கைக்குரியவராய் இருப்பது என்பது தலைவரும் ஆண்டவருமான
இயேசுவின் கட்டளைகட்குக் கீழ்ப்படிந்து, அவற்றைக் கடைப்பிடித்து
வாழ்வதாகும் (எபி 13:17) இப்படி யார் யாரெல்லாம் ஆண்டவrர்க்கு
நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றார்களோ, அவர்கட்கு ஆண்டவர்
தரும் கைம்மாறு அளப்பெரியது. அன்னைத் தெரசா அப்படித்தான் தன்னிடம்
ஒப்படைக்க மக்களை நல்ல முறையில் கண்காணித்து, கவனித்து ஆண்டவருக்கு
நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். நாமும் அவ்வாறு இருந்தால்,
இறைவன் அளிக்கும் ஆசியைப் பெறுவது உறுதி.
சிந்தனை
'உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர்' (1 தெச 5: 24) என்பார்
பவுல். ஆகையால், நம்பிக்கைக்குரியவரான ஆண்டவர்க்கு நாமும் நமக்குக்
கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்து,
அவர்க்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|