|
|
29 ஆகஸ்ட் 2019 |
|
|
பொதுக்காலம்
21ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம் -
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்
=================================================================================
நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன்
கலக்கமுறாதே.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19
அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. "நீயோ உன்
இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும்
அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள்
முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.
இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின்
அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும்
நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத்
தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு
எதிராகப் போராடுவார்கள்.
எனினும் உன் மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை
விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" என்கிறார் ஆண்டவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
71: 1-2. 3-4a. 5-6. 15ab,17 (பல்லவி:
15a)
=================================================================================
பல்லவி: என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்.
1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும்
நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்;
எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். பல்லவி
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து
என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும்
இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக்
காத்தருளும். பல்லவி
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே
என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச்
சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப்
பிரித்தெடுத்தீர். பல்லவி
15ab என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும்
மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க
இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;
இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்
பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு
தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்.
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
6: 17-29
அக்காலத்தில் ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை
மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி
யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில்
யோவான் ஏரோதிடம், "உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது
முறை அல்ல" எனச் சொல்லி வந்தார்.
அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை
செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான்
நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப்
பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற
போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு
நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும்
கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது
ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும்
அகமகிழச் செய்தாள்.
அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்"
என்றான். "நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில்
பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும் ஆணையிட்டுக்
கூறினான்.
அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று தன் தாயை
வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள்.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின்
தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று
கேட்டாள்.
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன்
தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே
அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான்.
அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில்
கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம்
கொடுத்தாள்.
இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச்
சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பாடுகள்
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது அப்படியேதான்
இருக்கும். மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலைக் கொடுக்கும்.
(யோவான் 12)
இன்று திருச்சபையானது தூய திருமுழுக்கு யோவானுடைய பாடுகளை
நினைவுகூர்ந்து பார்க்கிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்தவர்,
பாலைவனத்தில் ஒலித்த குரல், இயேசுவுக்கு திருமுழுக்குக் கொடுத்தவர்,
இயேசுவை மக்களுக்கு சுட்டிக்காட்டியவர், இறுதி இறைவாக்கினர்
போன்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான இவரது பாடுகளை
நினைவுகூர்ந்து பார்ப்பது நாம் நமது விசுவாசகத்தில் வளர்வதற்குப்
பேருதவியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
திருமுழுக்கு யோவான் ஆண்டவருடைய கைவன்மையையும், எலியா இறைவாக்கினரின்
உளப்பாங்கையும் பெற்றிருந்தவர் (லூக் 1:17) அதன்மூலம் மக்களை
மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றவர். குறிப்பாக உண்மையை உரக்கச்
சொன்னவர். அதற்காக தன்னுடைய உயிரையும் விலையாகத் தந்தவர்.
ஏரோது தன்னுடைய சகோதரனான பிலிப்பின் மனைவியோடு வாழ்வதைப்
பார்த்த திருமுழுக்கு யோவான் அவனிடம்,
'நீ உன்னுடைய சகோதரனின்
மனைவியோடு வாழ்வது முறையல்ல' என்று அவனுடைய தவறைச்
சுட்டிக்காட்டுகிறார். அதற்கு விலையாக தன்னுடைய உயிரையே தருகிறார்.
இவ்வாறு அவர் எப்படிப்பட்டட் துன்பம் வந்தாலும் உண்மையைத்
துணிச்சலாக அறிவிக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்குகின்றார்.
இயேசுவின் வழியின் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் உண்மையின்
வழியில் நடந்து உண்மைக்குச் சான்று பகரவேண்டும்.
இந்நேரத்தில் அமெரிக்காவில் இருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காகப்
போராடிய மாட்டின் லூதர் கிங் என்பவரை நினைத்துப் பார்ப்பது மிகவும்
பொருத்தமானதாக இருக்கும். மார்டின் லூதர் கிங் வெள்ளை இனத்தவரால்
கறுப்பினத்தவருக்கு நேர்ந்த கொடுமைகளையும், அடக்குமுறைகளையும்
துணிச்சலோடு எடுத்துரைத்தார். இதனால் அவர் பல்வேறு எதிர்ப்புகளைச்
சந்தித்தார். ஆனாலும் அவர் சாவைக் கண்டு கலங்காமல் தான்
மேற்கொண்ட பணியில் மிகவும் உறுதியாக இருந்தார்.
1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, அதாவது அவர் துப்பாக்கியால்
சுடப்பட்டு கொல்லப்படுவதற்கு முந்தின நாள் திரண்டிருந்த மக்களைப்
பார்த்துப் பேசினார், "அன்பார்ந்த மக்களே! என்னுடைய சாவு
நெருங்கி வருவதை நான் நன்றாகவே உணர்கிறேன். ஆனாலும் நான்
சாவைக் குறித்துக் கவலைப்படவில்லை. எனக்கு முன்பாக வாக்களிக்கப்பட்ட
நாடு (கறுப்பினத்தவர் எல்லா உரிமையையும் பெற்று அமைதியாக
வாழும் நாடு) மிகத் தெளிவாகத் தெரிகிறது. அந்நாட்டில் நான்
நுழைவேனோ இல்லையோ, என்னுடைய மக்கள் நுழைவார்கள். அந்த நம்பிக்கை
எனக்கிருக்கிறது" என்று.
அவர் சொன்னது போன்று 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள்
மார்டின் லூதர் கிங் பகைவரால் துப்பாக்கியில் சுடப்பட்டு, கொல்லப்பட்டார்.
அவர் எதிர்பார்த்த கருப்பினத்தவரும் சம உரிமை பெற்று வாழும்
நாட்டில் அவர் வாழ முடியாவிட்டாலும்கூட, அவர் கண்ட கனவு சில ஆண்டுகளுக்குப்
பிறகு நிறைவேறியது. இவ்வாறு அவர் உண்மையை உரக்கச் சொன்னதற்கு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
திருமுழுக்கு யோவானும் தான் அரசனின் தவற்றைச்
சுட்டிக்காட்டுகிறோம் என்றெல்லாம் நினைத்துக் கவலைப்படவில்லை.
குற்றம் என்றால் குற்றம்தான். அது யார் செய்தால் என்ன? என்பதில்
மிகத் தெளிவாக இருந்து, உண்மையை எடுத்துரைத்து இயேசுவுக்கு
சான்று பகர்ந்தார்.
அடுத்ததாக திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய
பாடம் அவரிடம் விளங்கிய நேர்மையும், தூய்மையுமே ஆகும். நற்செய்தியில்
திருமுழுக்கு யோவான் நேர்மையும், தூய்மையும் உள்ளவராக விளங்கியதால்
ஏரோது அவரைக் கண்டு அஞ்சுகிறார். நாம் நம்முடைய வாழ்வில்
நேர்மையோடும், தூய்மையோடு விளங்கினோம் என்றால் நமது வாழ்வு மிகச்சிறந்த
சாட்சிய வாழ்வாக இருக்கும் என்பதில் எந்தவித சங்கமும் இல்லை.
விவிலியத்தில் கடவுள்தான் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
தூய்மை என்பது அவருடைய தனிப்பட்ட குணம். அதனால்தான் லேவியர்
புத்தகம் 19:2ல் வாசிக்கின்றோம், "உங்கள் கடவுளும் ஆண்டவருமான
நான் தூயவராக இருப்பது போல நீங்களும் தூயவராக இருங்கள்" என்று.
எனவே கடவுளின் பிள்ளைகளாகிய நாம் தூயவர்களாக இருக்க முயற்சிப்போம்.
பல நேரங்கில் நாம் நமது சிந்தனையால், சொல்லால், செயலால் பாவம்
செய்து, கடவுளை விட்டு வெகுதொலைவில் போய்விடுகிறோம். எனவே நாம்
நம்மிடம் இருக்கும் பாவத்தை விட்டுவிட்டு திருமுழுக்கு
யோவானைப் போன்று தூயவர்களாக வாழ முயற்சிப்போம்.
இயேசு கூறுவார், "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில்
அவர்கள் கடவுளைக் காண்பார்கள்" என்று. நாம் திருமுழுக்கு
யோவானைப் போன்று தூயவர்களாகவும், உண்மைக்குக் சான்று பகர்பவர்களாகவும்
இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பாடுகள்
இயேசுவின் முன்னோடி, இறுதி இறைவாக்கினர், ஆண்டவருக்காக வழியை
ஆயத்தம் செய்தவர் போன்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான
தூய திருமுழுக்கு யோவானின் பாடுகளை இன்றைய நாளிலே திருச்சபையானது
நினைவுகூறுகிறது.
இவருடைய நினைவுநாளைக் கொண்டாடுகின்ற இந்த வேளையிலே இவ்விழா நமக்கு
என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
முதலாவதாக நாம் ஓவ்வொருவருமே நேர்மையோடும், உண்மைக்குச் சான்று
பகரக்கூடியவர்களாகவும் வாழ அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி
வாசகத்திலே திருமுழுக்கு யோவான் நேர்மையும், தூய்மையும் கொண்டவராக
விளங்கினார் என்று படிக்கின்றோம். திருமுழுக்கு யோவான்
நேர்மையோடும், துணிவோடும் இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கக்கூடியவராக
இருந்தார் (மாற் 6:20). மேலும் ஒரு இறைவாக்கினர் எப்படி எல்லாம்
இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார்.
இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் எரேமியா இறைவாக்கினரைப்
பார்த்து, "நான் உனக்குச் சொல்லக்கூடியவற்றை அம்மக்களிடம் போய்
சொல்" என்ற இறைவார்த்தையை திருமுழுக்கு யோவான் தனது
வாழ்வாக்கினார். எப்படி என்றால் அவர், தன்னுடைய சகோதரனின் மனைவியோடு
வாழ்ந்துகொண்டிருந்த ஏரோதின் தவறைச் சுட்டிக்காட்டுகிறார். அதற்காக
தன்னுடைய உயிரையும் தருகிறார். இப்படியாக நேர்மையும்,
தூய்மையும் கொண்ட திருமுழுக்கு யோவான் இறைவாக்குப் பணிக்காக எதையும்
இழக்கக்கூடியவராக இருக்கிறார்.
பலவேளைகளில் நேர்மையோடு நாம் வாழ்கின்றபோது அதற்காக தரக்கூடிய
விலை அதிகம். சில மாதங்களுக்கு முன்பாக (அக்டோபர் 12, 2014)
நேர்மையோடு செயல்பட்டு, 260 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான
நிலத்தை மீ்ட்ட சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் அதிரடியாக
இடமாற்றம் செய்யப்பட்டார் என்று செய்தித்தாளிலே படித்திருப்போம்.
அரசு நிர்வாகத்தில் நேர்மையை தங்கள் பணியில் கடைப்பிடித்து வந்தால்,
அவர்களால் ஒரே இடத்தில் பணி செய்ய முடியாது என்பதை சகாயம், அன்சுல்
மிஸ்ரா, இறையன்பு போன்ற மாவட்ட ஆட்சியர்களின் மாற்றத்திலிருந்து
நாம் தெரிந்து கொண்டதுதான். ஆனால் இப்போது மாவட்ட ஆட்சியர் மட்டுமில்லை,
நேர்மையாகச் செயல்படும் அதிகாரி யாராக இருந்தாலும் அவர் இடமாற்றம்
செய்யப்படுவார் என்பதற்கு உதாரணமாக சோழிங்கநல்லூர் தாசில்தார்
ரவிச்சந்திரன் இருக்கிறார்.
மத் 5:10 ல் படிக்கின்றோம், "நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்
பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது" என்று.
நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று நேரியவழியில் நடப்போம். இறைவனின்
அரசை உரித்தாக்கிகொள்வோம்.
இவ்விழா நமக்குச் சுட்டிக்காட்டும் இரண்டாவது பாடம். கடவுளின்
உடனிருப்பு மற்றும் பராமரிப்புதான். முதல் வாசகத்திலே கடவுள்,
"உன்னை விடுக்க நான் உன்னோடு இருக்கிறேன்" என்கிறார். இறைவனின்
வழியில் நடக்கின்றபோது, அவருக்கு பணிசெய்கின்றபோது கடவுள் நம்மோடு
இருக்கிறார் என்பதுதான் அசைக்கமுடியாத உண்மை.
ஓர் ஊரிலே விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளுக்குப்
பயந்து வாழக்கூடியவர். ஒருமுறை அவருக்கு சிறிய வயிற்றுவலி ஏற்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைச் சோதித்துப்
பார்த்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் பெரிய கட்டி இருப்பதைக்
கண்டுபிடித்துச் சொன்னார்கள். இதனால் அவர் மிகவும் மன வருத்தமடைந்தார்.
"எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு நிலை?" என்று கண்கலங்கினார். ஆனால்
மருத்துவர்களோ, "அறுவைச் சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும்"
என்று சொல்லி மருத்துவமனையிலே அனுமதித்தனர்.
அன்று இரவு அவர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அதிலே அவர்
ஓர் ஏரிக்கரையிலே இருந்த படகை ஒன்றை எடுத்துக்கொண்டு, உள்ளே
பயணம் செய்தார். அந்தப் படகானது தண்ணீரில் மிகவும் தத்தளித்தது.
அப்போது அவருக்கு எதிரே ஒரு வானவில் தோன்றி, அதிலிருந்து ஒரு
குரல், "மகனே நீ எதைக்குறித்தும் கவலைப்படாதே!, நீ தனி ஆள்
கிடையாது. நான் உன்னோடு இருக்கிறேன்" என்று சொல்லி மறைந்தது.
உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்.
அடுத்த நாள் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அது வெற்றிகரமாக
முடிந்தது. அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சையை
முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, ஒரு சிறுமி கையிலே காகிதத்தை
வைத்திருந்தாள். அந்தக் காகிதத்தில் ஏரிக்கரை, அதிலே ஒரு படகு,
அதற்கு நேர் எதிரே வானவில் என்றிருந்தது. அப்போதுதான் அவர்
முந்தின நாள் தான் கண்ட கனவு அது என்பதை அறிந்து, கடவுள் தன்னைக்
குணப்படுத்த இருக்கிறார் என்பதைக் கனவின் வழியாகச் சொல்லி இருக்கிறார்
என்பதை உணர்ந்துகொண்டார்.
இறைவழியில் நடப்போருக்கு இறைவனின் துணை எப்போதும் உண்டு என்பத்தை
தான் இக்கதை நமக்கு உணர்த்துகிறது. எனவே தூய திருமுழுக்கு
யோவானின் பாடுகளை நினைவுகூறுகிற வேளையில் அவரைப் போன்று நேரிய
வழியில் நடந்து உண்மைக்கு இயேசுவுக்கு சான்று பகர்வோம். இறையருளை
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பாடுகள் (ஆகஸ்ட் 29)
"மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர்
எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும்
அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"
(மத் 11:11)
வாழ்க்கை வரலாறு
"சாவுக்குப் பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு
ஒருதடவைதான் சாவு" என்று சொல்வார்கள். ஆண்டவரைத் தவிர வேறு எதற்கும்
எவருக்கும் பயப்படாது, அஞ்சா நெஞ்சத்தோடு வாழ்ந்து, அநியாயமாகக்
கொல்லப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாடுகளைத் தான் இன்றைக்கு
நாம் நினைவுகூருகின்றோம்.
யோவான், அபியா வகுப்பைச் சார்ந்த செக்கரியா என்பவருக்கும் ஆரோனின்
வழிவந்த எலிசபெத் என்பவருக்கும் அவர்களுடைய வயதான காலத்தில்
மகனாகப் பிறந்தார். இயேசுவின் பிறப்பு எப்படி முன்னறிவிக்கப்பட்டதோ,
அதுபோன்று யோவானின் பிறப்பும் முதன்மைத் தூதர் கபிரேயலால் முன்னறிவிக்கப்பட்டது.
ஆனால் இயேசுவைப் போன்று திருமுழுக்கு யோவான் குடும்பப் பாங்கான
சூழலில் வளரவில்லை. காட்டிற்குச் சென்று தனிமையாக பாலைநிலத்தில்
வளர்ந்து வந்தார். அங்கு கிடைத்த வெட்டுக்கிளியையும் காட்டுத்
தேனையும்தான் உண்டுவந்தார். ஒட்டக மயிராடையை ஆடையாக அணிந்துவந்தார்.
இப்படி யோவான் காட்டிலே வளர்ந்து வந்ததால் அவருடைய பேச்சுகூட
சற்று கடினமாகவே இருந்தது.
இத்தகைய பின்னணியிலிருந்து வந்த யோவான், ஆண்டவருடைய வாக்கு
கிடைக்கப்பட்டதும் அதனைத் திறந்த மனதோடு ஏற்று, அதன்படி நடக்கத்
தொடங்குகின்றார் (லூக் 3: 2-3). ஆம், ஆண்டவர் அவரை தன் திரு
மைந்தனாம் மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரிக்கச்
சொல்கின்றார். யோவானும் ஆண்டவர் சொன்னதைப் போன்று மக்கள் மனமாறவேண்டும்
என்று அறிக்கையிட்டு, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுக்கத்
தொடங்குகின்றார். அவர் இவ்வாறு திருமுழுக்குக் கொடுக்கத் தொடங்கியதும்
பணக்காரர்களிலிருந்து ஏழைகள் வரை எல்லாரும் அவரிடமிருந்து
திருமுழுக்குப் பெறுகின்றார்கள். யோவானின் காலத்திற்கு முன்பாக
ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் ஆண்டவர் தன்னை மக்களுக்கு
வெளிப்படுத்தவே இல்லை. இத்தகைய சூழ்நிலையில் யோவான் இறைவாக்கைப்
போதிப்பதையும் திருமுழுக்குக் கொடுப்பதையும் பார்த்துவிட்டு
அவரை இறைவாக்கினராகவும் ஆண்டவர் அவர் வழியாகப் பேசுகின்றார் என்றும்
நம்பத் தொடங்குகின்றார்கள்.
திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்கு பெற வந்தவர்களிடம்,
பகிர்ந்து வாழச் சொல்கின்றார், பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காமல்
கனிதரும் வாழ்க்கை வாழச் சொல்கின்றார். மக்களும் அவர் சொன்னதைக்
கேட்டு, அதன்படி நடக்கின்றார்கள்.
ஆண்டவருக்காக மக்களை ஆயத்தம் செய்தது ஒரு பணி என்றால், வந்த
மெசியாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது, அவரைத் தம் சீடர்களுக்குச்
சுட்டிக்காட்டியது திருமுழுக்கு யோவான் செய்த இன்னொரு பணியாகும்.
ஒருசமயம் திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களோடு நின்று
பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாய் வருகின்றார். அவர்
வருவதைக் கண்ட யோவான் தன் சீடர்களிடம், "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி"
என்று தன்னுடைய சீடர்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார். உடனே
யோவானின் சீடர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்
(யோவா 1: 35-37) இவ்வாறு திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்குச்
சுட்டிக்காட்டியபின், எருசலேம் திருக்கோவிலில் இருந்த
சீமியோனைப் போன்று, "ஆண்டவரே உம் அடியானை இப்போது அமைதியோடு போகச்
செய்யும்" என்பதுபோல நிம்மதி அடைகின்றார்.
திருமுழுக்கு யோவான் ஆண்டவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டிய அதே
நேரத்தில், அநீதியையும் சுட்டிக்காட்டினார். ஏரோது மன்னன் தன்
சகோதரரின் மனைவியோடு வாழ்ந்து வந்ததைப் பார்த்த யோவான், அவர்
செய்துவந்த தவற்றை நேருக்கு நேராக சுட்டிக்காட்டுகின்றார். அதனால்
அவர் கொல்லப்படுகின்றார். அதற்குப் பிறகு யோவானின் சீடர்கள் வந்து
அவருடைய உடலை எடுத்துக்கொண்டு போய், சமாரியாவில் உள்ள செபாஸ்டி
என்ற இடத்தில் அடக்கம் செய்கிறார்கள். நான்காம்
நூற்றாண்டிலிருந்து திருச்சபை திருமுழுக்கு யோவானை
நினைவுகூர்ந்து கொண்டாடத் தொடங்கியது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவுகூருகின்ற நாம், அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு நிறைவு செய்வோம்.
1. இயேசுவை சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரல்களாக மாறுவோம்
திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகின்ற மிக
முக்கியமான பாடம் நாம் ஒவ்வொருவரும் நம்மை மையப்படுத்துகிறவர்களாக
அல்லாமல், இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரல்களாக மாறவேண்டும்
என்பதுதான். அவர் எப்போதும் மக்களிடம் தன்னை மையப்படுத்தியோ அல்லது
தன்னைச் சுட்டிக்காட்டியோ பேசவில்லை, மாறாக மெசியாவாகிய இயேசுவைச்
சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரலாக, அறிவிப்புப் பலகையாக விளங்கினார்.
நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவைச்
சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரலாக, அறிவிப்புப் பலகையாக மாறவேண்டும்
என்பதுதான் இந்த நாள் நமக்கு எடுத்துரைக்கும் செய்தியாக இருக்கின்றது.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மானிய நாசிப் படை இங்கிலாந்து
நாட்டிற்குள் புகுந்து அங்குள்ள நகரங்களையும் அதிலுள்ள மக்களையும்
அழித்தொழிக்க திட்டம் தீட்டியது. அப்போது இங்கிலாந்து நாட்டுப்
பிரதமர் மக்களுக்கு ஓர் அறிவிப்பு விடுத்தார். "அன்பார்ந்த மக்களே,
நம்முடைய நாட்டை நோக்கி எதிரிகளின் படை வீறுகொண்டு வருகின்றது.
இதை நினைத்து நீங்கள் பதற்றமடைய வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள்
செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய
ஊர் பெயரோ அல்லது நகரத்தின் பெயரோ பொறிக்கப்பட்ட பலகைகளை அப்புறப்படுத்துங்கள்.
அதுபோதும்" என்றார். அவர் சொன்னதுபோன்றே மக்களும் செய்தார்கள்.
இதற்குப் பின் இங்கிலாந்தை அழித்தொழிக்க வேண்டும் என்று
வீறுகொண்டு வந்த ஜெர்மானியப் படை, எந்த நகர் எங்கிருக்கின்றது,
அந்த நகருக்கு எப்படிச் செல்வது என்று தெரியாமல் குழம்பிப்
போய் கடைசியில் தங்களுடைய நாடு திரும்பினார்கள். இந்த நகருக்கு
இப்படிச் செல்லவேண்டும், அந்த ஊருக்கு அப்படிச் செல்லவேண்டும்
என்று பொறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டதினால்,
இங்கிலாந்து நாட்டவர் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டனர்.
ஒன்றை அல்லது ஒருவரை சுட்டிக்காட்டுகின்ற அறிவிப்புப் பலகைகளுக்கு,
சுட்டுவிரலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றது என்பதை
இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். திருமுழுக்கு
யோவான் அப்படித்தான் ஒரு சுட்டுவிரலைப் போன்று ஆண்டவர் இயேசுவை
மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். நாமும் அவர் காட்டிய அந்த
வழியில் நடப்பதே சிறப்பானதாகும்.
ஆகவே, திருமுழுக்கு யோவானைப் போன்று ஆண்டவரை மக்களுக்குச்
சுட்டிக்காட்டுவோம், உண்மைக்குச் சான்றுபகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
நற்செய்தி (மாற்கு 6:17-29) - ஏரோதுவின் பிறந்தநாள்
தூய திருமுழுக்கு யோவானின் பாடுகள் விழாவைக்
கொண்டாடுகின்றோம்.
'அதிக வருத்தமாக இருக்கும்போது முடிவு எடுக்கக் கூடாது. அதிக
மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்குறுதி கொடுக்கக் கூடாது' என்பது
சொலவடை.
தன் பிறந்தநாளில் ஏரோது கொடுத்த வாக்குறதியால், அவரின் பிறந்தநாள்
திருமுழுக்கு யோவானின் இறந்த நாள் ஆகிறது.
மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்யும் இந்நிகழ்வில் வரும் ஏரோது
என்னும் கதைமாந்தரைப் பற்றி நாம் சிந்திப்போம்.
மொத்தம் இந்த நிகழ்வில் 4 கதைமாந்தர்கள்: (அ) ஏரோது, (ஆ)
பிலிப்பின் முன்னாள் மனைவியும் ஏரோதின் இன்னாள் துணைவியுமான ஏரோதியா,
(இ) ஏரோதியாவின் மகள் (பிலிப்புக்குப் பிறந்தவள்) சலோமி, மற்றும்
(ஈ) திருமுழுக்கு யோவான். இந்த நான்கு கதைமாந்தர்களில் 'ஏரோது'
தவிர மற்ற எல்லாரும் தொடக்கத்தில் எப்படி இருந்தார்களோ, அப்படியே
இருக்கின்றார்கள். ஏரோதியா காழ்ப்புணர்வோடு இருக்கிறாள். சலோமி
கீழ்ப்படிதல் உணர்வோடு இருக்கிறாள். திருமுழுக்கு யோவான் நீதி
உணர்வோடு இருக்கிறார்.
ஆனால், ஏரோது ஒரே நேரத்தில் நல்லவராகவும், கெட்டவராகவும்
முன்வைக்கப்படுகின்றார். எப்படி?
'யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து,
அஞ்சி, அவருக்கு பாதுகாப்பு அளித்தார்'
'அவர் சொல்லைக் கேட்டு குழப்பமுற்ற போதிலும் அவருக்கு மனமுவந்து
செவிசாய்த்தார்'
'ஏரோது தன்னைவிட பெரியவர்களுக்கு விருந்து கொடுத்தார்'
'ஏரோது ஆணையிட்டுக் கூறினார்'
'ஏரோது விருந்தினார்'
'ஏரோது யோவானின் தலையைக் கொண்டுவருமாறு பணித்தார்'
ஏரோது இந்த நிகழ்வில் எல்லாரோடும் உறவாடுபவராக இருக்கிறார். ஒரே
நேரத்தில் யோவான், ஏரோதியா, சலோமி, பெரியவர்கள், குடிமக்கள் என
எல்லாரோடும் பேசுகிறார். அரசனாக இருப்பதன் நன்மை இதுதான்.
ஏரோது யோவானின் கொலையை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?
அவன் செய்த தவறு என்ன? அவரைச் சிறையில் அடைத்ததா? அல்லது அதீதமாக
ஆணையிட்டதா? அல்லது வாக்குறுதியை நிறைவேற்ற நினைத்ததா?
என்னைப் பொறுத்தவரையில் அவரின் பிரச்சினை என்னவென்றால், 'அவர்
எல்லாரையும் திருப்திப்படுத்த விரும்பினார்.' எல்லாரையும்
திருப்திப்படுத்துவது எப்போதும் ஆபத்தே.
யோவானை திருப்திப்படுத்த அவரின் வார்த்தைக்குச் செவிமடுக்கிறார்.
ஏரோதியாவை திருப்திப்படுத்த யோவானைச் சிறையில் அடைக்கிறார்.
சலோமியை திருப்திப்படுத்த ஆணையிடுகிறார்.
விருந்தினரைத் திருப்திப்படுத்த யோவானைக் கொல்கின்றார்.
ஆனால், பாவம்...கடைசி வரை அவன் தன்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை.
சில நேரங்களில் வாழ்க்கை இப்படித்தான் சோகமாக முடிந்துவிடும்.
நாம் காலையிலிருந்து மாலைவரை எல்லாரையும் திருப்திப்படுத்த ஓடிக்கொண்டே
இருப்போம். சோர்ந்து கட்டிலில் விழும்போது, 'இன்று நான் மகிழ்ச்சியாக
இருந்தேனா?' என்று நம்மையே கேட்டால், பதில், பெரும்பாலும், 'இல்லை'
என்றே இருக்கும்.
அடுத்தவரைத் திருப்திப்படுத்த ஏன் இந்த ஓட்டம்?
யாவரையும் திருப்திப்படுத்த தேவையில்லை என்றும், உன் மனதுக்கு
சரி என்பதை துணிந்து செய் என்றும் சொல்கிறார் யோவான்.
யாரையும் திருப்திப்படுத்த தேவையில்லாத யோவான் கொல்லப்படுகின்றார்.
எல்லாரையும் திருப்திப்படுத்த நினைத்த ஏரோதும் அத்தோடு இறந்துவிடுகின்றார்.
Rev. Fr. YESU KARUNANIDHI
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
முயற்சி திருவினையாக்கும்
'வாழ்க்கை மிக குறுகியது. காதல் கொள்ளுங்கள்!' (Life is short.
Have an affair) என்ற கவர்ந்திழுக்கும் முதற்பக்கத்துடன் இயங்கிவந்த
'ஆஷ்லி மேடிசன்' (Ashley Madison) என்ற 'காதல்' வலைதளம் கடந்த
வாரம் சில தொழில்நுட்ப கில்லாடிகளால் ஊடுருவப்பட்டது. 'திருமணத்திற்கு
வெளியே உறவு கொள்ள' ஒருவர் மற்றவரை நெருக்கமாக்கும் இந்த வலைதளத்தில்
தங்கள் விவரங்கள் மற்றும் நிழற்படங்களைப் பதிவு செய்திருந்த
பலரையும் இந்த கில்லாடிகள் இப்போது பயமுறுத்தி காசுபார்க்கத்
தொடங்கியிருக்கின்றனர். 'திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி'
இதில் பதிவு செய்தவர்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க முடியாமல்
தவிக்கின்றனர். மேலும் இந்திய நகரங்களில் இந்த இணையதளத்தில் பதிவு
செய்தவர்களின் பட்டியிலில் நம்ம சென்னைக்கு மூன்றாம் இடம்
வேறு.
சரி! இப்போ எதுக்கு இந்த டீடெய்ல்ஸ் எல்லாம்!
நேற்று மதியம் என் நண்பர் ஒருவருடன் வங்கிக்குச் சென்றபோது, உரையாடலில்
போகிற போக்கில் அவர், 'இப்ப எல்லாம் யாரு ப்ராமிஸ் எல்லாம்
கீப்-அப் பண்ணுறா? நாங்களும் இறுதி வார்த்தைப்பாடு
கொடுக்கும்போது எல்லார் முன்னிலையிலும் ப்ராமிஸ் கொடுத்தோம்.
ஆனால், திருப்பலி, விருந்து, அன்பளிப்பு என கொண்டாடி மகிழ்ந்த
அந்த நாளை மறந்தது போல கொடுத்த ப்ராமிஸையும் மறந்துவிட்டோம்!'
என்றார்.
இதற்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அப்படியே உரையாடல்
வேறு தலைப்பிற்கு மாறியது.
இன்று காலை அருட்செல்வியரின் இல்லத்தில் திருப்பலியில் மறையுரை
வைத்துக்கொண்டிருந்தபோது ஒரு புதிய ஐடியா வந்தது.
இன்று திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்தைக் கொண்டாடினோம்.
இன்றைய நற்செய்திப் பகுதியில் மாற்கு நற்செய்தியாளர் யோவானின்
மறைசாட்சியத்தைப் பற்றிப் பதிவு செய்ததை நாம் வாசித்தோம்.
திருப்பலி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதும் என்னுள்
அந்த வசனம் ஓடிக்கொண்டே இருந்தது.
அது என்ன வசனம்?
'இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன்
தான் ஆணையிட்டதால் (வாக்கு கொடுத்ததால்) அவளுக்கு அதை மறுக்க
விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக்
கொண்டுவருமாறு பணித்தான்.' (மாற்கு 6:26-27)
துரியோதனன் என்றவுடன் நமக்கு அவன் தீயவன் என எப்படித் தோன்றுகிறதோ,
அப்படித்தான் ஏரோது என்றவுடன் நான் அவனை தீயவன் என
நினைக்கின்றோம். ஆனால் தீயவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள்
இருக்கின்றன. ஏரோதிடம் நான் மூன்று நற்குணங்களைக்
காண்கின்றேன்:
அவன் ஏரோதியாவைக் கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்திருக்கவில்லை.
'ஏரோது அவனது சகோதரனின் மனைவியை வைத்திருப்பது தவறு' என யோவான்
சுட்டிக்காட்டுகின்றார். ஒரு அரசனுக்கு யாருடைய மனைவியையும்
வைத்துக்கொள்ள உரிமை இருந்ததை நாம் அறிவோம். அவன் கட்டாயப்படுத்தி
ஒருத்தியை மனைவியாக்கினால் அது தவறு. ஆனால், இங்கே ஏரோதியா கட்டாயத்தின்
பேரில் ஏரோதிடம் இணையவில்லை (தாவீது செய்ததுபோல!). அவளுக்கும்
ஏரோதுவை பிடித்திருக்கிறது.
'ஏரோது யோவானின் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும்,
அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்' (6:21) எனப் பதிவு
செய்கிறார் மாற்கு. அதாவது, அவன் ஒரு சந்தர்ப்பக் கைதி. 'நல்லது
செய்யக் கூடாது என்பதல்ல. நான் நல்லது செய்யத்தான்
நினைக்கிறேன். ஆனால் அதை செய்யத்தான் முடியவில்லை' என்ற பவுலின்
போராட்டத்தைத்தான், ஏரோதும் போராடுகிறான். இதுதான் நம் போராட்டமும்கூட.
'இது தவறு! இதை செய்யக்கூடாது!' எனத் தோன்றினாலும், நம்முள் இருக்கும்
ஏவாளின் கைவிரல்கள், அந்தத் தவற்றைத் தழுவிக்கொள்ளவே ஆசைப்படுகின்றன.
சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது! அவன் வாக்கு தவறுவானா? இல்லையா?
என்ற கேள்வியை வாசகர் உள்ளத்தில் விதைப்பதற்கு மாற்கு அவனின்
வாக்குறுதியை இரண்டுமுறை பதிவு செய்கின்றார்: அ. 'உனக்கு என்ன
வேண்டுமானாலும் கேள், தருகிறேன்!' ஆ. 'நீ என்னிடம் எது
கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்!'
ஏரோதின் இந்த மூன்றாவது குணத்தை மட்டும் கொஞ்சம் நெருக்கமாகப்
பார்ப்போம்.
யார் வாக்கு கொடுக்கிறார்? ஏரோது.
யாருக்கு? ஏரோதியாவின் மகளுக்கு ('சலோமி' என்பது வரலாறு). இவள்
ஏரோதின் சகோதரன் பிலிப்பு வழியாகப் பிறந்தவள். ஆக, ஏரோதுக்கும்
இவளுக்கும் நேரடியான இரத்த உறவு கிடையாது.
யார் முன்னிலையில்? விருந்தினர்கள் முன்னிலையில் (அரசவையினர்,
ஆயிரத்தலைவர், முதன்மைக் குடிமக்கள் - ஆக, எல்லாரும் மனிதர்கள்!)
இந்த விருந்தினர்கள் முன்னிலையில் தான்
வாக்குக்கொடுத்துவிட்டோமே என்பதற்காக - அதாவது, அவர்கள் முன்
தன் தலை குனிந்துவிடக்கூடாது என்பதற்காக கொடுத்த வாக்கைக்
காப்பாற்றுகிறான்.
நாம் நம் படுக்கையருகில் வைக்கும் அலார்ம்கூட நாம் நமக்கு
கொடுக்கும் வாக்குறுதியே. இப்படித் தொடங்கி அன்றாடம் நாம் நமக்கும்,
நாம் பிறருக்கும் கொடுக்கும் வாக்குறுதிகள் ஆயிரமாயிரம். மற்றொரு
பக்கம், அரசியலில் ப்ராமிஸ், மதங்களில் ப்ராமிஸ், விளையாட்டில்
ப்ராமிஸ் என எல்லா இடத்திலும் 'ப்ராமிஸ்' நிறைந்து கிடக்கிறது.
நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டில்கூட 'I promise to pay the
bearer the sum of rupees' என அச்சிடப்பட்டு அதன்கீழ் ரிசர்வ்
வங்கி ஆளுநரின் கையொப்பமும் இருக்கிறது.
'ஆஷ்லி மேடிசன்' வழியாக ஒருவர் மற்றவர் தங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு
தவறு இழைத்தது, அல்லது பிரமாணிக்கத்தை உடைத்தது, 'நல்லதா',
'கெட்டதா' என்ற கலந்தாய்வு இப்போது வேண்டாம். அல்லது அருள்நிலை
வாழ்வில் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் எந்த அளவிற்கு
தங்கள் வாக்குறுதிகளில் நிலைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வும்
வேண்டாம்.
நமக்கு ஏரோது வைக்கும் சின்ன கேள்வி இதுதான்:
'கொஞ்ச நேரம் தன்னுடன் இருந்த சில வருடங்களில் அழிந்து போகும்
மனிதர்களுக்குத் தன் குடிபோதையில் கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்ற சமரசத்திற்கே இடமில்லாமல் நான் முயற்சி செய்தேன் என்றால்,
என்றும் உங்களுடன் இருக்கும் உங்கள் கடவுளுக்கு அல்லது கடவுள்
முன் நீங்கள் தரும் வாக்குறுதியைக் காப்பாற்ற நீங்கள் எவ்வளவு
முயற்சி செய்ய வேண்டும்?'
'முயற்சி திருவினையாக்கும்!'
Fr. YESU KARUNANIDHI ROME |
|