Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         28 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 21ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-13

அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம். நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி! ஒரு தந்தை தம் பிள்ளைகளை நடத்துவதுபோல உங்களை நடத்தினோம். தம்முடைய ஆட்சியிலும் மாட்சியிலும் பங்குபெற உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்ப நடக்குமாறு உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கினோம்; உங்களை ஊக்குவித்தோம்; வற்புறுத்தினோம்.

இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவையே. கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 139: 7-8. 9-10. 11-12யb (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!

7 உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! பல்லவி

9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். பல்லவி

11 'உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?' என்று நான் சொன்னாலும், 12யb இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப் போல ஒளியாய் இருக்கின்றது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 யோவா 2: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32

அக்காலத்தில் இயேசு கூறியது: "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள்.

ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; 'எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்' என்கிறீர்கள்.

இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
1 தெசலோனிக்கர் 2: 9-13

ஒரு தந்தையைப் போன்று எல்லாரையும் அன்போடு நடத்திய பவுல்

நிகழ்வு

ஸ்பெயின் நாட்டில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர்க்குப் ப்கோ (Paco) என்றொரு மகன் இருந்தான். ப்கோவின்மீது அந்தச் செல்வந்தர் உயிரையே வைத்திருந்தார். ஒருநாள் அந்தச் செல்வந்தர்க்கும் அவருடைய மகன் ப்கோவிற்கும் இடையே ஒரு சிறிய மனந்தாங்கல் ஏற்பட்டது. இதனால் ப்கோ தன்னுடைய தந்தையிடம் கோபித்துக்கொண்டு, அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டே கிளம்பினான்.

செல்வந்தர், வீட்டைவிட்டு வெளியேறிய தன்னுடைய மகனை ஆள்களை அனுப்பி வைத்து எங்கெல்லாமோ தேடினார். எங்கும் கிடைக்காத காரணத்தினால் ஸ்பெயின் நாட்டில் உள்ள பிரபல நாளேடான மாட்ரிட்டில் இப்படியோர் அறிவிப்புக் கொடுத்தார்:

"என் அன்பு மகனே ப்கோ! உன்னைப் பிரிந்து நான் வேதனையில் தவிக்கின்றேன்... உன்னை எங்கெல்லாமோ தேடியும் நீ கிடைக்கும் கிடைக்கில்லை என்பதாலும் எப்படியும் நீ இந்த செய்தித்தாளையும் இதிலுள்ள இந்த அறிவிப்பையும் படிப்பாய் என்பதாலும் இந்த நாளேட்டில் அறிவிப்பை வெளியிடுகிறேன். நீ இந்த அறிவிப்பைக் கண்டதும், வருகின்ற சனிக்கிழமை மாலை வேளையில், இந்தப் நாளேட்டின் அலுவலகத்திக்கு முன்பாக ஓடிவந்துவிடு. நான் அங்குதான் நின்றுகொண்டிருப்பேன். இப்படிக்கு உன் அன்புள்ள அப்பா."

சனிக்கிழமை மாலைநேரம் வந்தது. ப்கோ என்று சொல்லிக்கொண்டு ஒருவரல்ல, இருவரல்ல, ஏழுநூறு இளைஞர்கள் மாட்ரிட் என்ற அந்த நாளேட்டின் அலுவலக வாசலில் வந்து கூடினார்கள். அந்த எழுநூறு பேரில் அவருடைய சொந்த மகனும் அடங்கும். அத்தனை பேரையும் கண்டு பிரமித்துப்போன செல்வந்தர், "தந்தையை விட்டுப் பிரிந்து, அவருடைய அன்பிற்காக இத்தனைபேர் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்களா... இவர்கள் அனைவரையும் அவர்களுடைய சொந்தத் தந்தையிடம் ஒப்படைப்பதுதான் சரியானது. அதற்கு இதுதான் சரியான தருணம்' என முடிவுசெய்துகொண்டு, ஒவ்வொரு ப்கோவையும் அவருடைய தந்தையைத் தொடர்புகொண்டு ஒப்படைத்துவிட்டு, இறுதியில் தன் சொந்த மகனைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். (Courtesy: Bits & Pieces, October 15, 1992, p.13)

இந்த உலகத்தில் இருக்கின்ற பலர் தந்தையின் உண்மையான அன்பிற்கு ஏங்கித் தவிப்பவர்களாக இருக்கின்றார்கள். இதைத்தான் ஸ்பெயின் நாட்டில் நடந்த இந்த உண்மை நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், 'ஒரு தந்தை தன் பிள்ளையை நடத்துவது போல உங்களை நடத்தினோம்/ நடத்தினேன்" என்கின்றார். பவுல் தன்னுடைய பணிவாழ்வில் ஒரு தந்தையைப் போன்று எப்படி நடந்துகொண்டார் என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தன்னுடைய உழைப்பினால் ஒரு தந்தையைப் போன்று செயல்பட்ட பவுல்

பவுல், தெசலோனிக்க மக்களிடம், ஒரு தந்தை தன் பிள்ளையை நடத்துவது போல, உங்களை நடத்தினேன் என்று சொல்வதற்கு முதன்மையான காரணம், அவர் ஒரு தந்தை எப்படி குடும்பத்தைப் பராமரிப்பதற்குக் கடினமாக உழைப்பாரோ, அது போன்று பவுலும் கடினமாக உழைத்தார் (திப 20: 31); உழைக்காதவர்களைக் கடினமாகச் சாடினார் (2 தெச 3:6) இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னுடைய உணவிற்காக யாரையும் கையேந்தி நிற்கவில்லை. நற்செய்தி அறிவித்த நேரம்போக மற்ற நேரங்களில் கூடாரத் தொழில் செய்து, தனக்குத் தேவையான உணவையும் இன்ன பிறவற்றையும் தானே பார்த்துக்கொண்டார். அதனால்தான் அவரால், ஒரு தந்தையைப் போன்று, நான் உங்களை நடத்தினேன் என்று சொல்ல முடிந்தது.

தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்க்கையினால் தந்தையைப் போன்று செயல்பட்ட பவுல்

புனித பவுல் தன்னுடைய உழைப்பினால் மட்டுமல்லாது, கிறிஸ்துவே எல்லாம் (பிலி 3: 8) என்ற எடுத்துக்காட்டான வாழ்வினாலும் ஒரு தந்தைக்குரிய கடமையைச் செய்துவந்தார். இன்றைக்கு ஒருசிலர் போதிப்பார்கள். ஆனால் அதை அவர்கள் வாழ்ந்து காட்டமாட்டார்கள். பவுல் அப்படியில்லாமல், எல்லார்க்கும் முன்னும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். அதனால் அவர் ஒரு நல்ல தந்தையைப் போன்று விளங்கினார்..

தன்னுடைய வார்த்தையினால் தந்தையைப் போன்று செயல்பட்ட பவுல்

புனித பவுல் தன்னுடைய உழைப்பு மற்றும் எடுத்துக்காட்டான வாழ்வினாலும் மட்டுமல்லாது, தன்னுடைய வார்த்தினாலும் தந்தையைப் போன்று நடந்து கொண்டார். மக்கள் சோர்வுற்றிருந்தபோது அவர்களைத் திடப்படுத்தக்கூடியவராகவும் அவர்கள் தவறான வழியில் சென்றபோது அவர்களைத் தன் வார்த்தையினால் நல்வழிப்படுத்தக்கூடியவராகவும் இருந்து, ஒரு தந்தையைப் போன்று நடந்துகொண்டார்.

நம்முடைய வாழ்வைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் இவ்வேளையில் நாம் இறைமக்களைக் கட்டி எழுப்புபவராக இருக்கலாம் அல்லது ஒரு குடும்பத்தினராக இருக்கலாம். யாராக இருந்தாலும் நம்முடைய உழைப்பினாலும் முன்மாதிரியான வாழ்வினாலும் வார்த்தையினாலும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மக்களை நல்லமுறையில் வழிநடத்த வேண்டியதே சிறந்தது. அதைத்தான் பவுல் நமக்கு கற்றுத் தருகின்றார்.

சிந்தனை

'நான் யார்க்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டு வர என்னை எல்லார்க்கும் அடிமையாக்கிக் கொண்டேன்' (1 கொரி 9:19) என்பார் பவுல். ஆகையால், நாம் எல்லாரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டு, பவுலடியாரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி , ஒரு தந்தைக்குரிய பாசத்தோடு எல்லாரிடமும் அன்புகூர்வோம்; வழிநடத்துவோம்; வாழ்ந்துகாட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 23: 27-32

நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளா?


நிகழ்வு

முன்பொரு காலத்தில், உரோமை நகரில் தீத்தூஸ் என்றொரு சிற்பி இருந்தான். அவன் ஒருவருடைய உருவத்தை அப்படியே சிற்பமாக வடிக்கக்கூடிய திறமையைப் பெற்றிருந்தான். உரோமை அரசன் அவனைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன்னுடைய உருவத்தை மெழுகால் வடிக்கச் சொன்னான். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு ஆறு மாதங்கள் அவகாசம் வாங்கிக்கொண்டு, அரசரைச் சிற்பமாக வடிக்கத் தொடங்கினான்.

ஆறு மாதங்கள் கழித்து அரசனிடம் சென்ற தீத்தூஸ், "அரசே! நீங்கள் கேட்டுக்கொண்டது போன்று, உங்களுடைய உருவத்தைச் சிற்பமாக வடித்திருக்கின்றேன். வந்து பாருங்கள்" என்றான். அரசனும் அவன் சொன்னதற்கிணங்க தன்னுடைய உருவம் தாங்கிய சிற்பத்தைக் காணச் சென்றான். இதற்கிடையில் அரசனுடைய உருவம் தாங்கிய சிற்பத்தைத் திறக்கப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மக்கள் திரண்டு வந்தார்கள்.

எல்லாரும் வந்தபிறகு சிற்பி, சிற்பத்தை மூடியிருந்த திரையை விலக்கினான். தன்னுடைய கையில் வாளேந்திய நிலையில் மிகவும் கம்பீரமாக இருந்த அரசனின் மெழுகாலான சிற்பத்தைக் கண்டு அரசன் உட்பட எல்லாரும் வியந்தனர். பின்னர் அரசன் தீத்தூஸ் என்ற அந்த சிற்பியைப் பார்த்து, "மிகவும் தத்ரூபமாக என்னுடைய உருவத்தைச் சிற்பமாக வடித்திருக்கின்றாய்... வாழ்த்துகள்" என்று சொல்லி, அவனுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கினான்.

இது நடந்து ஆறு ஏழு மாதங்கள் இருக்கும். வெயில் காலம் வந்தது. வெயிலில் அரசனுடைய சிற்பத்திலிருந்த மூக்குப் பகுதி உடைந்து கீழே விழுந்தது. இதைப் பார்த்து அரசன் அதிர்ந்து போனான். 'இந்தச் சிற்பத்தை வடித்து வெறும் ஆறேழு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் சிற்பத்திலிருந்து மூக்குப் பகுதி இப்படி உடைந்து கீழே விழுகின்றதே... ஒருவேளை இது போலியான சிற்பமாக இருக்குமோ?' என்று ஐயம் கொள்ளத் தொடங்கினான். உடனே அவன் தன்னுடைய படைவீரர்களைக் கூப்பிட்டு, சிற்பத்தைச் பரிசோதித்துப் பார்க்கச் சொன்னான். அவர்களும் சிற்பத்தைப் பரிசோதித்துப் பார்க்கத் தொடங்கினார்கள். முடிவில் அந்தச் சிற்பத்தில் இருந்த மூக்குப் பகுதி மட்டும் மெழுகால் செய்யப்பட்டதும் என்றும் பிற பகுதிகளெல்லாம் சலவைக் கற்களால் செய்யப்பட்டது என்றும் தெரியவந்தது.

'சிற்பி தன்னை ஏமாற்றிவிட்டான்' என்பதை அறிந்த அரசன் வெகுண்டெழுந்தான். உடனே அவன் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி, சிற்பியைப் பிடித்து வந்து சிறையில் அடைக்கச் சொன்னான்.

இந்த நிகழ்வில் வரும் அரசனின் சிற்பம் எப்படி வெளிப்புறம் மெழுகால் செய்யப்பட்டு, உட்புறம் வெறும் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டு இருந்ததோ, அதுபோன்றுதான் மனிதர்களில் சிலர் வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகவும் உள்ளே மிகவும் மோசமானவர்களாகவும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் ஆண்டவர் இயேசு 'வெள்ளையடித்த கல்லறைகள்' என்று குறிப்பிடுக்கின்றார். ஆண்டவர் இயேசு அப்படிப்பட்டவர்களை ஏன் அவ்வாறு அழைக்கின்றார்? அதற்கான காரணமென்ன என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

வெளியே கடவுள் உள்ளே மிருகம்

நற்செய்தியில் இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களின் வெளிவேடத்தைச் சாடுகின்றார்; அவர்களை 'வெள்ளையடித்த கல்லறைகள் என்று விமர்சிக்கின்றார். இயேசு அவர்களை அவ்வாறு சாடுவதற்கு, தனிப்பட்ட பகை எதுவும் காரணமில்லை. அவர்களின் வெளிவேடம்தான் காரணமாக இருந்தது. பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் வெளிப்பார்வைக்கு நேர்மையாளர்கள் போன்றும் நல்லவர்கள் போன்றும் காட்டிக்கொண்டார்கள். உள்ளேயோ அடுத்தவரை வஞ்சித்துப் பறிக்கும் ஓநாய்களாக இருந்தார்கள் அதனால்தான் இயேசு அவர்களை 'வெளியடித்த கல்லறைகள்' என்று சாடுகின்றார்.

யூதர்கள் 'பிணத்தைத் தொடுகிறவன் ஏழு நாள்கட்குத் தீட்டாகின்றான்' (எண் 19: 11) என்கின்ற (மூட)நம்பிக்கை இருந்து வந்தது. அதனால் அவர்கள், பாஸ்காப் பெருவிழாவிற்கு உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகின்றபோது, கல்லறைகளை வெள்ளையடித்துக் காட்சிக்கு மிக இனிதாய் வைத்துவிடுவார்கள். உள்ளேயோ நாற்றமடிக்கும் பிணம். வெளிப்பார்வைக்கு அழகான கல்லறை. இந்த நடைமுறை உண்மையை இயேசு, பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களோடு தொடர்புபடுத்தி, அவர்களை வெள்ளையடித்த கல்லறைகள் என்று சாடுகின்றார்.

பரிசேயக் கூட்டம் செய்த இன்னொரு மிகப்பெரிய தவறு, இறைவாக்கினர்களின் போதனையைக் கேட்காமல், அவர்களைக் கொன்றுபோட்டுவிட்டு, அவர்கட்கு சிலை வடித்தது. ஆபேல் முதல் (தொநூ 4) செக்கரியா வரை (2 குறி 24: 20-24) ஏராளமான பேரைக் கொன்றுவிட்டு, அவர்கட்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பினார்கள். இதனாலும் இயேசு அவர்களை அவ்வாறு விமர்சிக்கின்றார்.

நாமும் இப்படி மக்கள் பார்வைக்கு ஒரு மாதிரியும் உள்ளுக்குள் வேறுமாதிரியும் இருந்தால், வெள்ளையடித்த கல்லறைகள்தான் என்பது மறந்துவிடக் கூடாது.

சிந்தனை

'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (4: 23) என்கின்றது நீதிமொழிகள் நூல். ஆகையால், சிந்தனையின் பிறப்பிடமாக இருக்கும் இதயத்தை தூய்மையாக வைத்து, உண்மையான, நேர்மையான வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!